புறமாகவும் அகப்புறமாகவும்- கருணாகரனின் கவிதைகளுக்குள் ஒரு பயணம்


தொடர்ச்சியாகக் கவிதை வடிவத்தைத் தனது முதன்மையான வெளிப்பாட்டு வடிவமாகக் கொண்டிருக்கும் கவி. கருணாகரன். அவரது மூன்று கவிதைகளை யாவரும் வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு கவிதைக்கும் தனித்தலைப்புகளின்றி- கருணாகரன் கவிதைகள் – எனப் பதிவேற்றம் பெற்றுள்ள அம்மூன்று கவிதைகள் உருவாக்கும் உணர்வுகள் அதற்குள் இருக்கும் காலப்பின்னணியால் அர்த்தம் கொள்கின்றன . 

மூன்று கவிதைகளில் கிடைக்கும் காலக்குறிப்பு கொண்டு முதலிரண்டு கவிதைகளைக் கடந்த கால நினைவுகள் எனவும், மூன்றாவது கவிதையை நிகழ்காலச் சலனங்கள் எனவும் வகைப்படுத்திவிட முடிகிறது. கடந்தகாலத்திற்குள் அழைத்துச் செல்லும் இரண்டு கவிதைகளும் நேரடியாகப் பத்து ஆண்டுகளுக்கு முந்திய பெரும் நிகழ்வை –அந்நிகழ்வின் வெளியை வாசிப்பவர்களுக்குத் திறந்துகாட்டி கேள்விகளையும் உணர்வலைகளையும் எழுப்புகின்றன. முள்ளிவாய்க்கால் பேரழிவுகளைப் பத்தாண்டுகளுக்குப் பின்னர் நினைவுபடுத்தும் இரண்டு கவிதைகளும் ஒன்றுபோல் எழுதப்படவில்லை. முதல் கவிதையில் வெளிப்படுவது குறிப்பானதொரு துயரம். இரண்டாவதில் வெளிப்படுவது பொதுவானதொரு அழுகைப் பரம்பல். குறிப்பானதொரு நபரின் வழியாகவும், பொதுவானதொரு கூட்டத்தின் வழியாகவும் விவரிக்கப்படும் முள்ளிவாய்க்கால் பேரழிவுச் சோகத்தை அங்கேயே நிறுத்திவிடாமல், நிகழ்காலத்திற்கு இழுத்துவருவதின் மூலம் கருணாகரன் தனது தனி அடையாளத்தை உருவாக்குகிறார். 
காணாமல் ஆக்கப்பட்ட மகள்களை இழந்த ஒரு தகப்பனின் கதறலாக விரியும் முதல் கவிதையில் இரண்டு படிமங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஒன்று பருண்மையானது; இன்னொன்று அரூபமானது. சிதறிக்கிடக்கும் சோற்றுப் பருக்கைகள் என்னும் பருண்மையான படிமம் அச்சமூட்டக்கூடிய ஒன்று. சிதறிக்கிடக்கும் முற்றத்திலிருந்து நகர்ந்து நகர்ந்து பரவும் அந்தப் படிமம், காணாமல் போனவர்களை இல்லாமல் போனவர்களாகக் கணக்கெழுதும் அதிகாரத்தையும் அமைப்புகளையும் அச்சுறுத்தும் படிமம். அதன் இருப்பு எளிய வீடொன்றின் முற்றமாக இருக்கலாம்; ஆனால் ஊர்கள் தோறும் அப்படியான பருக்கைகள் சிதறிக்கிடக்கின்றன என்ற உண்மையைச் சொல்லும் ஒன்றாகவும் இருக்கின்றன. அந்நிலையில் சிதறிக்கிடக்கும் சோற்றுப் பருக்கைகள், தேசங்களைத் தாண்டி உலகத்தின் மனச்சாட்சியை உழுக்கும் ஒன்றாக மாறிவிடுகின்றன. அதே கவிதைக்குள் ‘புதைக்கப்பட்ட மாங்கனியின் வாசனை’. என இன்னொரு படிமம் தேவையா? என்றொரு கேள்வி எழுந்தாலும், அந்தப் படிமம் தான் இழப்பின் வலியையும் ஆழத்தையும் திரும்பக் கொண்டுவந்து கடைசியில் எழுப்பப்படும் கேள்விகளுக்கான நியாயத்தைச் செய்கிறது. 

ஏனிந்தக் கனத்த மௌனம் 
ஏளனமா? புறக்கணிப்பா? இயலாமையா? 


இந்தக் காலம் உனக்காகவும் இல்லை 
எனக்காகவும் இல்லாமலாயிற்றுப் பெண்ணே! 
அது நம்மை விட்டுச் சென்று விட்டதடி 
நம்மைக் கொல்லாமற் கொன்று விட்டதடி 

தான் எழுப்பும் கேள்விகளுக்கான பதிலை இந்த உலகம் தரப்போவதில்லை என்பது தெரிந்து விட்டதால், அந்தத் தகப்பன் தன்னையே அந்தத்துயரத்திற்குள் கரைத்துக் கொள்பவனாக மாறிப்போகிறான். 
இரண்டாவது கவிதையிலும் கவிதையின் வெளி முள்ளிவாய்க்கால் தான். ஆனால் கவிதைக்குள் இருப்பவர் ஒருவர் அல்ல; பெருங்கூட்டம். 
“இதோ இந்த வங்கக் கடலின் கரையில்தான் நாங்கள் அன்றிருந்தோம்” 
என உள்முக விவரிப்பாகத் தொடங்கியபின் இடையில் வெளிமுகம் நோக்கிப் பேசும் அந்தக் கவிதையின் கட்டமைப்பும் எழுப்பும் உணர்வுகளும் கூட அதே தன்மை தான். இக்கவிதைக்குள் உருவாக்கப்பட்டுள்ள மொட்டைப்பனை மரங்கள் என்னும் குறியீடு ஈழப்போராட்ட எழுத்துகளில் திரும்பத்திரும்ப வரும் ஒன்று. 

இந்தக் கரையும் கரை நீளப் பூத்துக் கிடக்கும் மணலும் தகிக்க 
மொட்டைப் பனைகள் இன்னும் அப்படியே நிற்கின்றன 
நாமும்தான். 

இப்படி விவரிப்பதோடு, தொடர்ச்சியாகத் தேச எல்லைக்குள் எந்தப் பதிலும் விடைகளும் கிடைக்காத போது உலகத்தோடு பேசிப்பார்க்கலாம் எனத் திரும்புகிறது. அந்த முயற்சிகளும் வெற்றியைத் தரப்போவதில்லை என்ற நிலையில் அதே சலிப்பும், இயலாமையும் கைவிடப்பட்ட சோகமுமாக முடித்துக்கொள்கிறது. 

உலகம் எந்தக் கொந்தளிப்புமின்றி ஆழ்துயில் கொண்டிருக்கிறது 
ஆமாம், “உறங்குவது போலும் சாக்காடு..” 


கொலைக்குக் கொலைதான் தீர்ப்பென்ற கால நியதி இதுவென 
இந்த அலைகள் சொல்கின்றனவா 
இதுவே உண்மையென இந்த மணல்வெளி உரைக்கிறதா? 

அப்படி முடிக்கும்போது இந்த உலகத்தின் மீது – அதன் புதிய நடைமுறைகளின் மீது துப்பிவிட்டே மனதை ஆற்றிக்கொள்கிறது. 
‘இன்று நகரம் காலவரையற்றுத் திடீரென மூடப்பட்டது’ 
எனத் தொடங்கி, 
“ மாபெரும் பூட்டோடு வளர்ந்து கொண்டேயிருக்கிறது இந்த நெடுங்கதவு”. 
என முடிந்துள்ள மூன்றாவது கவிதை நிகழ்காலத்தை – நாம் சந்தித்துக்கொண்டிருக்கும் கொரோனா அடங்கல் காலத்தைப் பேசுவதற்கேற்ப மெல்லிதான எள்ளலையும் அங்கதத்தையும் வெளிப்பாட்டுணர்வாக்கியிருக்கிறது. கவிதைக்குள் இருப்பது கவி மட்டுமே. அக்கவி, இப்போதைய தற்செயலாக அடங்கிக் கிடக்கும் உலக இருப்பைக் கண்டு தனக்குள் நகைத்துக் கொண்டிருக்கும் கவி. தனது மனநிலையைத் தன்னைச் சுற்றியிருப்பவர்களுக்குப் பகிர்ந்தளிக்கும் ஆசை வந்ததால் சொற்களைத் திரட்டி அடுக்கித் தன் கவிதையைத் தந்துள்ள கவி. 
வளர்ச்சி, மாற்றம், நாகரிகம் என்ற சொல்லாடல்களின் வழி இயற்கையின் போக்கைக் காணமறுத்து, நுகர்வுப்பண்பாட்டிற்குள் அலைந்துகொண்டிருந்த நிகழ்கால வாழ்க்கையின் மீது பெருந்தாக்குதல் நடத்தியிருக்கிறது கொரோனா என்பதை உள்வாங்கித் தனது கவிதையை விவரிக்கும் கவி, மனித இருப்பும் நடைமுறைகளும் இதுதான்; இப்படித்தான் எனத் தீர்மானிக்கப்பட்டதோ என்ற ஐயத்தைச் சரியாகவே எழுப்புகிறார். உருவாக்கப்பட்டுள்ள தற்காலிக அமைதி பற்றிய அந்த வருணனை இது: 
அமைதியென்றால் அப்படியொரு அமைதி 
தேனில் குழைத்து வாயில் ஊட்டுகிறது. 


வல்லரசு சிற்றரசு எல்லாம் 
இந்த அமைதியில் மயங்கியும் முயங்கியும் கிடக்கின்றன. 
இப்படியே இந்த அமைதி வளர்ந்து 
உலகப் பேரமைதியாகி விடுமோ என்றொரு எண்ணம் முளைக்கிறது 

தற்செயலாக கிடைத்துள்ள அடங்கல் அமைதியா? ஒடுக்கமா? என்ற விவாதத்திற்குள் நுழைந்து கிளம்பும் கவிதை, காணாமல் புகையிரத வண்டி என்னும் படிமத்தை உருவாக்கி அதிகாரத்தின் கோமாளித்தனத்தையும் பேசியிருப்பதன் மூலம் நீண்ட புன்சிரிப்பையும் உள்ளடங்கி நிற்கும் கோபத்தையும் தூண்டிவிடவும் செய்கிறது. 

14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்குள்ளாக்கப்பட வேண்டும் என்று 
மருத்துவ அறிவிப்புச் சொல்கிறது. 


இதற்குள் அந்தப் புகையிரதம் 
நகரத்தின் முடிவில் உள்ள ஆற்றில் நீராடுவதாக 
யாரோ உளவுப் பிரிவுக்குத் தகவல் கொடுக்கிறார்கள். 
யாருடைய கண்களிலும் சிக்காமல் நதியோடு கலந்து போகிறது புகையிரதம். 

இந்த அடங்கல் காலத்தை உள்ளடக்கி எழுதப்பெற்ற பனுவல்களில் நான் வாசித்த அளவில் மனதில் நிற்கப்போகும் ஒன்றாக இந்தக் கவிதை நிற்கப்போகிறது. 
******** 
கடந்த காலத்திற்குள் வாசிப்பவர்களை அழைத்துச் செல்லும் பனுவல்கள், சித்திரங்களைத் தீட்டிக்காட்டி, உணர்வலைகளை எழுப்புவதோடு நின்றுபோனால் அதன் தாக்கம் பெரிதானதாக இருப்பதில்லை. அதிலும் உணர்வெழுச்சியையே முதன்மையாக நினைக்கும் கவிதை வடிவத்தில் அவை, கழிவிரக்கத்தை அல்லது இயலாமையின் துயரத்தைத் தூண்டிய ஒன்று என்பதாக முடிந்துபோய்விடும். அப்படி எழுதிவிட்டுச் செல்லும் கவிகளில் ஒருவராக இல்லாமல், கடந்த காலத்தை நிகழ்காலத்திற்கு இழுத்துவரும் வேலையைச் செய்பவராக இருப்பதே கருணாகரனின் தனித்த அடையாளமாக இருக்கிறது. வெற்றி அல்லது தோல்வி என்ற முடிவுகளின் விளைவாகக் கடத்தப்படும் கடந்த காலம் அதற்கேற்ப உணர்வுகளைத் தனதாக்கிக் கொள்கின்றது. ஈழத்தமிழர்களின் தனிநாட்டுக்கான போர் தோல்வியில் முடிந்தது என்பது வரலாறு. தோல்வியைப் பற்றிய நினைவுகள் துயரத்தின் படலங்களாக விரிவதும் தவிர்க்கமுடியாதது. அப்படி விரித்துவிட்டதோடு முடிக்காமல், தனது பார்வையைப் பதிவுசெய்வதைத் தனது கவி அடையாளமாக வைத்திருக்கிறார் கவி.கருணாகரன். அந்த அடையாளத்தை உருவாக்குவதற்கான ஓர் உத்தியாக கேள்வி எழுப்பும் முறை இருக்கிறது. நீண்ட காலமாக ஈழப்போராட்டத்தின் சாட்சியாக அங்கேயே இருப்பதால் அவரிடம் ஒவ்வொரு நிகழ்வுக்கும், அவற்றின் நேர்மறை -எதிர்மறை விளைவுகளுக்கும் காரணங்கள் இருக்கின்றன. அந்தக்காரணங்களை அவரால் சொல்லமுடியும். ஆனால் அவர் அதனைச் சொல்வதில்லை. தான் சந்தித்த நிகழ்வொன்றிற்கு அவர் சொல்லும் காரணத்தை,அடுத்து நடக்கும் இன்னொரு நிகழ்வும் விளைவுகளும் அழித்துப்போட்டுவிட்டுத் தன்னைப் பார்த்துச் சிரிக்கும் என்பதையும் அறிந்து வைத்திருக்கிறார். அப்படி அறிந்து வைத்திருப்பவர்களே அவர்களின் காலத்தில் பெருங்கவிகளாக அறியப்படுகிறார்கள். 
1. 

முருங்கைப் பூக்கள் உதிர்ந்து காற்றில் பறக்கும் 
இந்தக் கோடை காலக் காலையில் 
முடிக்காத கவிதையைக் கிழித்தெறிகிறேன் 
எதற்காகக் கவிதை? 
யாருக்காகப் பாடல்? 
எதற்குத் தோத்திரமும் பிரார்த்தனையும்? 


உயிரில் மூண்டெரிகிற அக்கவிதையில் 
காணாமலாக்கப்பட்ட மகள் 
என்னை அமைதிப்படுத்த 
விம்மலை அடக்கிக் கொண்டு சிரிக்கிறாள். 
அதை மீறித் துயரத்தின் நிழல் 
நெடுமரங்களாக அசைந்தாடுகிறது எங்கும். 


அவளுக்கென ஆக்கப்பட்ட சோறு 
இதோ உலர்ந்த பருக்கைகளாகி முற்றமெங்கும் சிதறுகின்றன 
அப்படியே அது உலகம் முழுவதும் பரவுகிறது 
“சோற்றுப் பருக்கைகளால் 
உலகம் முழுவதையும் மூடிச் செல்கிறாய்“ என்று 
கைது செய்யப்படலாம் நான். 


தேடிக் கண்டடைய முடியாத மகளின் பசிக்கு வேறெப்படி நான் 
இந்தச் சோற்றை ஊட்ட முடியும்? 


முற்றத்தில் அதைக் கொத்திச் செல்லும் 
காக்கை, குருவிகளிடம் கேட்கிறேன் 
“காக்கை, குருவியெல்லாம் எங்கள் ஜாதி… என்றும்மைப் 
பாடித் திரிந்த இனிய தோழியல்லவோ அவள்! 
அவளிடம் இந்தச் சோற்றுப் பருக்கைகளைச் சேர்த்து விடுங்கள் 
அல்லது 
அவளின் நிமித்தமான பிதுர்க்கடனாக இதை ஏற்றுக் கொள்க” என்று. 


இதோ அவள் முற்றத்தில் நட்ட மாமரம் பழுத்துச் சொரிகிறது 
அந்தப் பழங்களின் வாசனை அவளைத் தேடியலைகிறது. 
தாங்க முடியாத அவளின் நினைவுகளோடு 
அந்தப் பழங்களை மரத்தின் அடியில் புதைக்கிறேன். 
என்னிதயத்திலிருந்து பீறிட்டெழும் துயரத்தைப்போல 
பழங்களின் வாசனை கிளர்ந்து கிளர்ந்து மேலெழுகிறது 
அதுதான் உன்னுடைய வாசனை மகளே 
அதை எங்கே நான் புதைப்பேன்? 
அந்த வாசனை பழங்களைப் போல இனிப்பதில்லை. 


“அம்மா” என்றொரு சொல் 
அல்லது 
“நான் இங்கிருக்கிறேன்” என்றொரு வார்த்தை சொல்! 
நீண்டெரியும் எனதிந்தத் தூக்கமற்ற நாட்களும் 
பசியும் தாகமும் 
அலைவும் முடிவுற்று விடும். 


ஏளனமா? புறக்கணிப்பா? இயலாமையா? 


இந்தக் காலம் உனக்காகவும் இல்லை 
எனக்காகவும் இல்லாமலாயிற்றுப் பெண்ணே! 
அது நம்மை விட்டுச் சென்று விட்டதடி 
நம்மைக் கொல்லாமற் கொன்று விட்டதடி… 

*** 
2. 

இதோ இந்த வங்கக் கடலின் கரையில்தான் 
நாங்கள் அன்றிருந்தோம் 
புரண்டு புரண்டு குமுறியபோதும் 
கரை மீற முடியாத அலைகள் 
மீண்டும் மீண்டும் கடலிலேயே கரைந்து அழிந்தன. 


அன்று நடத்தப்பட்ட ஆயிரமாயிரம் கொலைகளுக்கும் 
அந்தரிப்புகளுக்கும் முன்பாக 
சாட்சிகளாக நிறுத்தப்பட்டோம். 
வழியும் விதியுமற்று 
கையறுநிலைக்காளாகி 
குமுறும் அலைகளோடு நின்றோம் 
செத்தழிந்தோம் 
மிஞ்சியவரெல்லாம் கரையடங்கும் அலைகளோடு கரைந்தொடுங்கினோம். 


இன்று மீளவும் 
அந்தக் கொலைகளின் நினைவுகளோடும் துயரோடும் 
அதே கரையில் தீரா அலைகளோடு நிற்கிறோம் 


பத்தாண்டுகளாகிய பின்னும் 
கொதிப்பாறா நினைவுகளில் 


ஒரு கொலைக்கும் விசாரணையில்லை 
நியாயமில்லை 
தீர்ப்பில்லை தோழ. 


ஏதொன்றும் எந்தக் கணக்கிலும் இல்லாமல் காலமாகிற்றா? 
அந்தக் காலமும் நம் கண்ணீரும் 
காற்றோடு கரைந்து போயிற்றுப் போமோ! 


வண்ண கொடிகளில் வானுயரப் பறக்கும் 
இந்த உலகத்தின் நீதியை 
அதன் கருணை மிகுந்த கண்களை 
எப்படிப் புரிந்து கொள்வதென்று தெரியவில்லை 


ஆமாம், “உறங்குவது போலும் சாக்காடு..” 


கொலைக்குக் கொலைதான் தீர்ப்பென்ற கால நியதி இதுவென 
இந்த அலைகள் சொல்கின்றனவா 
இதுவே உண்மையென இந்த மணல்வெளி உரைக்கிறதா? 

*** 
3. 

மூடப்பட்ட நகரத்திலிருந்து திடீரென பறவைகளின் குரல் உயர்ந்தது 
திடீரென ஒளி கூடியது தெருக்களில் 
தங்கள் வீடுகளில் உள்ள பூக்களையும் செடிகளையும் கூட 
ஆச்சரியத்தோடு பார்த்தனர் எல்லோரும் 


இத்தனை நாளும் எங்கிருந்தன என்று தெரியாமல் 
ஏராளம் பறவைகள் சுவர்களிலும் கூரைகளிலும் வந்தமர்ந்தன. 


தினமும் எல்லோரும் வீடுகளில் பொழுது முழுதும் 
ஒன்றாகக் கூடியிருந்தனர் 
அமைதியாகச் சமையல் நடந்தது 
குளியல், பிரார்த்தனை, பரிமாறுதல், படுக்கை, 
தூக்கம், பேச்சு, புத்தகம் படித்தல் எல்லாமும் கூட 
மிக அமைதியாகவே நிகழ்ந்தன 


வல்லரசு சிற்றரசு எல்லாம் 
இந்த அமைதியில் மயங்கியும் முயங்கியும் கிடக்கின்றன. 
இப்படியே இந்த அமைதி வளர்ந்து 
உலகப் பேரமைதியாகி விடுமோ என்றொரு எண்ணம் முளைக்கிறது 


அமைதிக்கும் உள்ளிருத்தலுக்கும் அடையாளமாக 
ஆமைகளின் சித்திரத்தை தீட்டிக் கொண்டிருக்கிறான் மகன் 
ஆமைகளைப் பற்றி டிஸ்கவரிச் சனலில் ஏதோவொரு நிகழ்ச்சி 
போய்க் கொண்டிருக்கிறது 
Bear Grylls ஒரு ஞானியின் வாக்கினைப்போல 
ஆமைகளின் வாழ்க்கையைப் பற்றிச் சொல்லிக் கொண்டேயிருக்கிறார் 
ஆமைகள் எவ்வளவு அழகாக வாழ்கின்றன 
எவ்வளவு அழகாக உறங்குகின்றன 
ஆமைகள் மட்டுமல்ல, நண்டுகளும் எலிகளும் கூடத்தான். 
சமயங்களிலெல்லாம் வளைகளில் ஓடிச் சென்று மறைந்து விடுகின்றன. 
நாங்களும் ஆமைகளாயினோம் 
இது லொக் டவுண் யுகமல்லவா! 
செத்துக் கிடக்கும் தெருக்களைப்போலவே 
கடற்கரைகளும் உறைந்து போயின. 
கடலில் அலைகள் அசைவதை ஏனின்னும் யாரும் தடுக்கவில்லை? 
அரச கட்டளை பற்றியும் சமூகப் பொறுப்புப்பற்றியும் 
அலைகளின் சிந்தனை என்ன? 
ஊரடங்கி வீடுகளில் உறைந்திருக்கும்போது 
நிலவு எப்படி மேலேறி வருகிறது? 
ஆனால், அந்த நிலவு தங்கத்தில் அல்லவா உருக்கி வார்க்கப்பட்டிருக்கிறது 
ஒரு தேவதூதனாகி அது நம்முடைய மடியில் இறங்குகிறது 
வா வா நிலாவே அருகே வா என்று பாடுகிறோம் 
இதோ எங்களோடு வந்து விருந்துண் என்று அழைக்கிறோம் 
இதுதான் இன்றைய நம் விடுதலைப்பாடலா? 


சேர்த்து வைத்த புத்தகங்கள் எல்லாம் 
எழுந்து வருகின்றன ஒவ்வொன்றாய் 
மறந்த உறவினர்கள் தொலைபேசிகளில் கொண்டாடுகிறார்கள் 
மூடப்பட்ட நகரத்திலிருந்து தப்பிச் சென்றது புகையிரதமொன்று 
அதைக் கண்காணிக்கத் தவறினர் என்ற குற்றச்சாட்டில் 
நாற்பது காவலரும் தலைமை அதிகாரியும் பணி நீக்கம் செய்யப்பட்டனர். 
அனுமதியின்றித் தப்பிச் சென்ற புகையிரதத்தைக் கைது செய்வதற்கு 
படையணியொன்றை அனுப்பி வைத்தது அரசாங்கம். 
தப்பிச் சென்ற புகையிரதமோ தலைமறைவாகி விட்டதால் 
அதைக் கண்டு பிடிக்கவே முடியவில்லை என்று சொல்கிறார்கள். 
தலைமறைவாகிய புகையிரதத்தைக் கண்டு பிடிக்கவில்லை என்று 
அந்தப் படையணியையே நீக்கிவிட்டார் நாட்டின் அதிபர் 
தற்செயலாக அதைக் கண்டு பிடித்தால் 


இதற்குள் அந்தப் புகையிரதம் 
நகரத்தின் முடிவில் உள்ள ஆற்றில் நீராடுவதாக 
யாரோ உளவுப் பிரிவுக்குத் தகவல் கொடுக்கிறார்கள். 
யாருடைய கண்களிலும் சிக்காமல் நதியோடு கலந்து போகிறது புகையிரதம். 


அடுத்து வரவுள்ள தேர்தலில் 
வாக்களிப்பது எப்படி என்று மறந்து போய் விட்டது பலருக்கும். 
அது கூட நல்லதுதான். 
லொக் டவுண் இப்படிப் பலதையும் மறக்கடித்து விடுவதற்கு நன்றி 


மூடப்பட்ட நகரத்திற்கு யாரும் வரவும் முடியாது 
நகரத்திலிருந்து யாரும் வெளியேறிச் செல்லவும் முடியாது. 


இந்த நெடுங்கதவு. 


=======================
அண்மையில் வந்த இக்கவிதைகளின் தொனியையும் வெளிப்பாட்டுப் பார்வையையும் உள்வாங்கிக்கொண்டால் அவரது அண்மைத் தொகுதிகள் இரண்டையும் இலகுவாகவே விளங்கிக் கொள்ளவும், அக்கவிதைகள் எழுப்பும் உணர்வுகளுக்குள் பயணம் செய்யவும் முடியும் 


73 கவிதைகளோடு ஒரு தொகுதியும், 88 கவிதைகளோடு இன்னொரு தொகுதியுமாக இரண்டு தொகுப்புகளோடு இந்த ஆண்டு வெளிப்பட்டுள்ளார் கவி.கருணாகரன். இலங்கையின் கிளிநொச்சியில் வசிக்கும் கருணாகரனின் முதன்மையான அடையாளம் கவி. தனது முதன்மையான புனைவாக்க வெளிப்பாடாகக் கவிதையை மட்டுமே நினைக்கும் கருணாகரன், அளவில் அதிகமாக வெளிப்படுவது கட்டுரைகளில். எப்போதும் நிகழ்வுகளை நேரடியாக முன்வைத்து எழுதும் பத்திக் கட்டுரை வழியாக இலங்கைத் தமிழர்களின் அரசியல் மனசாட்சியாகத் தன்னை வெளிப்படுத்திக் கொண்டே இருப்பவர். தொடர்வாசிப்பும் நேர்ப்பழக்கமும் இல்லாத ஒருவர் அவருடைய மொத்த எழுத்துகளையும் இப்போது வாசித்தபின் அவரை ஓர் அரசியல் எழுத்துக்காரர் என்றே அடையாளப்படுத்த முடியும். இரண்டு கவிதைத் தொகுப்புகளின் வெளியீடும் 2020, சென்னை புத்தகச் சந்தையை ஒட்டி அமைந்திருந்தது. அவை தமிழ்நாட்டுப் பதிப்பகங்கள் வழியாகவே அச்சாகியுள்ளன. புறக்கவிதைகளின் தொகுதியாக அடையாளப்பட்டுள்ள நினைவின் இறுதிநாள் தொகுதியை புது எழுத்து. பதிப்பகம் வெளியிட்டுள்ளது. அகப்புறக் கவிதைகளின் அடையாளங்களோடு தொகுக்கப்பட்டுள்ள உலகின் முதல் ரகசியம் தொகுதியைப் புலம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. 
இனவாத இலங்கையின் அரசியலுக்குள் செயல்படும் ஒருவர் வெளிப்படையாக ஓர் இயக்கத்தை ஆதரித்து எழுதுவதின் மூலம் உருவாக்கிக்கொண்ட அரசியல் அடையாளத்தைக் கருணாகரனின் பிரதிகளுக்குள் தேடினால் கிடைக்காமல் போகலாம். அதற்குப் பதிலாக அரசியல் நிலைப்பாடுகள் இல்லாமல், வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருந்த சாதாரணமனிதர்களின் அல்லாட்டத்தைக் கவனித்து, அதனைப் போக்கும் அரசியலின் தேவையைத் தொடர்ந்து வலியுறுத்தும் அரசியலை அவரது உரைநடைப் பிரதிகள் முன்வைத்துக்கொண்டே இருந்தன; இருக்கின்றன. இக்கவிதைப் பிரதிகளுக்குள்ளும், தன்னையும் தனது சூழலையும் எழுதி வெளிப்படுத்திக் கொள்ளும் நிலைபாட்டைத் தொடர்ச்சியாக மேற்கொண்டிருப்பவர் என்பது வெளிப்பட்டுள்ளது. ஈரோஸ் அமைப்பின் பொதுமை, விடுதலைப்புலிகளின் வெளிச்சம் ஆகியவற்றின் ஆசிரியத்துவத்தில் இருந்து போராட்டங்களையும், போர்க்காலத்தையும் கவனித்தவர். போர்க்காலம் தந்த பெரும் நெருக்கடியிலும் முள்ளிவாய்க்கால் பேரழிவுக்குப் பின்னர் கிடைத்திருக்கக் கூடிய வாய்ப்புகளிலும் புலம்பெயர்ந்துவிட வேண்டும் என்ற எண்ணத்தைப் புறமொதுக்கிவிட்டு நாட்டைவிட்டுக் கிளம்பாமல் நாட்டுக்குள்ளேயே வாழ நேர்ந்துள்ளதின் அனுபவச் சேகரமாக அவரது எழுத்துகளை வாசிக்கமுடியும். கட்டுரைகளில் வெளிப்படும் இந்தத் தன்னிலையைக் கொஞ்சமும் குறையாமல் கவிதை சொல்லியின் தன்னிலையாகவும் ஆக்கியிருப்பதை இந்த இரண்டு தொகுதிகளிலும் வாசிக்க முடிகிறது. இவ்விரு கவிதைத் தொகுப்புக்கு முன்பே 1. ஒரு பொழுதுக்குக் காத்திருத்தல் 2. ஒரு பயணியின் நிகழ்காலக் குறிப்புகள் 3. பலியாடு 4. எதுவுமல்ல எதுவும் 5. ஒரு பயணியின் போர்க்காலக் குறிப்புகள் 6. நெருப்பின் உதிரம் 7.படுவான் கரைக்குறிப்புகள் 8. இரத்தமாகிய இரவும் பகலுமுடைய நாள் என எட்டுக் கவிதைத் தொகுதிகளை வெளியிட்டுள்ள கருணாகரன் வேட்டைத்தோப்பு என்ற சிறுகதைத் தொகுதியையும் இப்படி ஒரு காலம், அன்பின் திசைகள் என இரண்டு பத்தி எழுத்துகளின் தொகுதியையும் வெளியிட்டுள்ளார் என்பது கூடுதல் தகவல்கள். 
அகநிலை உருவாக்கமும் புறநிலை உருவாக்கமும் 
கவிதை வடிவம் முதன்மையாகக் கவிதைக்குள் சொல்லியின் தன்னிலையை உருவாக்குகிறது. அதற்கான மொழிக்கூறுகள் உறுதியான பின்னர் கேட்கும் முன்னிலையை அல்லது பிறநிலையை உருவாக்கும் முயற்சியில் இறங்குகிறது. இவ்விரண்டு நிலைகளையும் இணைப்பதாக இருப்பதுவே சொல்லப்படும் சங்கதிகள். இத்தொடர்பாடலில் தெளிவான முறைமையைக் கைக்கொள்ளும் கவிகளே பெருங்கவிகளாக நிலைபெறுகின்றனர். கருணாகரனின் நினைவின் இறுதி நாள் (புதுஎழுத்து, டிசம்பர்,2019) உலகின் முதல் ரகசியம் (புலம் வெளியீடு, 2019) என்ற இரண்டு தொகுதிகளையும் ஒருசேர வாசிக்கும் நிலையில் இரண்டு தொகுப்புக்கும் அடிப்படையான வேறுபாடொன்றை உணர முடிக்கின்றது. பொதுவாகக் கவிதை வடிவம் தனியொரு தன்னிலையின் உணர்வு என்பதை நாம் அறிவோம். உணர்வு வெளிப்பாடுகள், நேர்நிலையில்- அகநிலையில் ஒருவிதமாகவும், மறைநிலையில்-புறநிலையில் இன்னொருவிதமாகவும் இருப்பது தவிர்க்க முடியாதது. இவ்வேறுபாட்டை உருவாக்குவதில் சொல்பவருக்கும் கேட்பவருக்குமிடையே உள்ள தூரம் முக்கிய வினையாற்றுகின்றது. 
நேர்நிலை வெளிப்பாட்டைக் கொண்டிருக்கும் நவீனத்துவ உள்முகக்கவிதைகள் உள்பட்ட காமமும் காதலும் சார்ந்த அகக் கவிதைகளில் – கேட்பவரின் அருகிருப்பு காரணமாக நெருக்கமும் ரகசியங்களும் பரிமாறிக்கொள்ளப்படும் வாய்ப்புகளுண்டு. சொல்பவர் தனது சொற்களோடு உடல் மொழியையும் பயன்படுத்தும் நிலை இருப்பதால் எல்லாவகையான மெய்ப்பாடுகளின் மிகைத் தன்மையையும் காட்டி அருகிருப்பவரைத் தம்மோடு இணைத்துக் கொள்ளும் முயற்சிகள் அதன் முதன்மையான கூறு. அகக் கவிதைகளுக்கான நெருக்கமான உறவுகளாகச் செவ்வியல் கவிதை வரையறுத்துச் சொன்ன கதாமாந்தர்கள் பத்து. அப்பத்துக் கதாமாந்தர்கள் வழியாக உருவாகும் வாழ்க்கை குடும்ப வாழ்க்கையே. ஆக அகக்கவிதை அல்லது நேர்நிலைக் கவிதைகள் தனக்குள்ளும் தன்னைச் சுற்றியிருக்கும் குடும்ப உறுப்பினர்களோடும் கொள்ளும் உறவை முன்வைப்பன எனக் கொள்ளலாம். நிகழ்காலத்தில் இந்த நெருக்கம் நட்பு, பணியிடம் என நகர்ந்தும் உள்ளது. அதற்கு மாறாகப் புறநிலை அல்லது மறைநிலைக்கவிதைகள் கேட்பவரின் அடையாளமின்மை அல்லது தூரம் காரணமாகப் பொதுநிலைப்பட்ட பேச்சுகளையே முன்வைக்கின்றன. பொதுநிலைப்பட்ட பேச்சுகள் எப்போதும் ஒருவரை நோக்கியனவாக இல்லாமல் பலரையும் உள்ளடக்கியனவாக இருக்கின்றன. சொல்பவர் ஒருவராக இருக்க, கேட்குமிடத்தில் பலரும் இருக்கிறார்கள் என்பதால், அவர்களை நம்பச்செய்ய வேண்டும் என்னும் நோக்கத்தில் “நடந்தவை இவை, நேரில் கண்டவை, எங்கள் சந்திப்பு இது, சந்திப்பின்போது இருந்தவர்கள் இவர்கள், அது நடந்த இடத்தை மட்டுமல்ல, காலத்தைக்கூட என்னால் சொல்ல முடியும்” என்றெல்லாம் ஆதாரங்களை முன்வைத்துப் பேசும் தன்மையில் இருக்கின்றன புறநிலைக்கவிதைகள். இதன் தொடக்கத்தைப் புறநானூற்றுக் கவிதைகளிலும் தொடர்ச்சியை அறக்கவிதைகளிலும் வாசித்துள்ளோம். 
இந்த அடிப்படையிலேயே இப்போது வந்திருக்கும் கருணாகரனின் இரண்டு தொகுதிகளில்- நினைவின் இறுதிநாள் தொகுப்பைப் புறநிலைக் கவிதைகளின் தொகுதி என்றும், உலகின் முதல் ரகசியம் தொகுப்பை அகமும் புறமும் கலந்த தொகுதி என்று வகைப்படுத்திப் பேச முடியும் என்று நினைக்கிறேன். நினைவின் இறுதிநாள் தொகுப்பிற்குள் இருக்கும் நினைவுகள் பெரும்பாலும் ஈழத்தில் நடந்த போர் பற்றி நினைவுகளாகவே இருக்கின்றன. அந்த நினைவுகளுக்குள் நபர்கள் இருக்கிறார்கள்; நிகழ்வுகள் இருக்கின்றன; வலிகள் இருக்கின்றன; சாவுகள் இருக்கின்றன; கொலைகள் இருக்கின்றன; துரோகங்கள் இருக்கின்றன; தியாகங்கள் இருக்கின்றன. அழித்தொழிப்புகளும் பேரழிவுகளும் பதிவாகியிருக்கின்றன. இவற்றிற்கெல்லாம் காரணமானவர்களும் அடையாளப் படுத்தப்பட்டிருக்கிறார்கள். அத்தொகுப்பின் முதல் கவிதை, 
“அறுத்தெறிந்த பின் பார்த்தாள் 
அது துடித்துக்கொண்டிருந்த உறவொன்றின் 
மின்னற்கொடி என்பதை 
வலிக்கும் ஒளித்துண்டு 
குருதியின் மணம் பெருகி/ இதயத்தை நிரப்பியது நினைவாய் 
பிறகு, 
இதயத்தைக் கூசச்செய்யும் ஒளித்துண்டை 
மறைத்து வைக்க முடியாமல் 
காலம் முழுவதும் அலைந்து திரிந்தவள்/ 
ஒருநாள் அப்படியே மின்னலாகினாள் 
அந்த மின்னல்தான் 
உங்களுக்குள்ளும் துடித்துக் கொண்டிருக்கிறது 
அவளாய் 
அழியாத காவியமாய்”(9) 
என்று முடிக்கப்பெற்றுக் ‘காவியம்’ எனத் தலைப்பிடப்பட்டிருக்கிறது. தொகுப்பின் முடிவுக்கவிதையாக, அமைந்துள்ள கவிதையின் தலைப்பு: ஞானமுகம்- 
நாங்கள் ஒன்றாகவே உறங்கினோம் 
நீண்ட வழிகளில் ஒன்றாகவே நடந்தோம் 
பசித்த வேளை சேர்ந்தே உண்டோம் 
ஆறுகளைச்சேர்ந்தே கடந்தோம் 
நீர்மட்டும் ஞானம் பெற்றதெப்படி? என்றபோது 
புன்னகைத்தார் புத்தர் 
இது வஞ்சனையற்றி வேறென்ன என்ற போது 
புன்னகைத்தார் புத்தார் 
அந்தப்புன்னகையே ஆயுதமும் சினேகமுமாயிற்று என்றென்றும் (128) 
முதல் கவிதைக்குள் இருக்கும் சொற்களின் வழியாகக் கிடைக்கும் காட்சிப் படிமங்கள் போர்க்காலக் காட்சிகளின் நம்பிக்கைகளும் அசைவுகளுமான “துடித்துக் கொண்டிருக்கும் உறவு, மின்னற்கொடி, வலிக்கும் ஒளித்துண்டு, குருதியின் மணம், மின்னலாகுதல்” என்பதில் தொடங்கிக் கடைசிக்கவிதையில் “புத்தரின் புன்னகையை ஆயுதமாகவும் சினேகமுமாகவும்” பார்க்கும் மனநிலையில் முடித்திருக்கிறது. அது ஒருவிதத்தில் நீண்டகாலப் போர்நிகழ்வுகளும் அழிவுகளும் உருவாக்கிய ஞானம். இவ்விரு கவிதைகளும் ஏறத்தாழ போர்க்காலத்தின் தொடக்கத்தையும் முடிவையும் சுட்டுவனபோலவே அமைந்துள்ளன. இரண்டிற்குமிடையே பலப்பல போர்க்கால நிகழ்வுகளைக் காட்டும் கவிதைகள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. போர்க்காலச் செய்திகளில் அடிபட்ட வெள்ளைவான், நினைவுப்பாடல், முள்ளிவாய்க்கால் 2017, காணாமல் போனவன், மண்டேலாவின் காத்திருப்பு, மீட்பர், வித்தகன் எனத் தலைப்பிட்டு நேரடியாகவும், மறைமுகமாகப்போர்க்காலப்படிமங்களை உருவாக்கும் உக்கல், பறக்கும் கூடுகள், தோப்பின் கதை, இரண்டாவது பாவத்தின் கதை, கனவுகளைத் தின்ற இரவு, ஒளிகூடிய சொற்கள்,வேரற்றுப் போன காலம் எனத் தலைப்பிட்டும் போரையும் போர்க்காலத்தையும் நினைவுபடுத்துகின்றன கவிதைகள். 
நேரிடையாக ஈழப்போரின் பெரும் நிகழ்வுகளை -கொலைகளை நினைவூட்டும் ஒரு கவிதையை இங்கே வாசித்துப்பார்க்கலாம். அதன் தலைப்பு: ஆடுபுலியாட்டம் அல்லது அன்னுங்கையும் முள்ளி வாய்க்காலும் 
எந்த வாய்ப்புக்கும் இடமளியாமல் 
உன்னைக் கைவிட்டன எல்லா வியூகவளையங்களும் 
காத்திருந்து செய்த சதியைப்போல 
என்னையும் கைவிட்டன எல்லா அரண்களும் 
நம்பிக்கை வேர்களை வெட்டியெறிந்து 
சுற்றியிருந்த அரண்கள் அனைத்தையும் உடைத்து 
உன்னை நெருங்கினேன் 
சர்ப்ப வியூகம் சகட வியூகம் சக்கர வியூகம் 
கருட வியூகம் மகரவியூகம் பத்மவியூகம் 
பிரம்ம வியூகம் 
என்றெல்லா வியூகங்களையும் நொருக்கி 
என்னை நெருங்கினர் அவர்கள் 
புகையிலைத்தோட்டத்தில் 
தனித்துத் தவித்த நீயோ 
காடற்ற முயல் 
கண்ணாப் பற்றையோரத்தில் 
ஒற்றையாய்த் தனித்த நானோ 
நீரற்ற மீன் 
நம் பயணத்தின் இறுதிக்கணம் 
இப்படி ஒருமை கொள்ளுமென 
யார் கண்டார்? 
தோழ, தோற்றது நம்விதி 
தயவுடன் இறைஞ்சுகிறேன் 
இக்கணத்திலேனும் எனை நம்பு 
இந்தக் கண்ணாப் பற்றைகளிடம் கேள் 
இக் கணத்தில் உன்னையன்றி 
வேறெதையும் நினைத்த தில்லை தோழா! 
அன்று அந்தப் புகையிலைச் செடிகள் 
கொண்ட துயரையும் சீற்றத்தையும் 
இந்த இறுதிப் பொழுதில் 
என்னிடம் சொல்லியழுதன கண்ணாப்பற்றைகள் நம்மை நாமே தின்று முடித்தோம் 
தோற்றது நம்விதி(62.63) 

இந்தக் கவிதையின் அடியில் தரப்பட்டுள்ள குறிப்பு, அந்தக்கவிதையின் பொருண்மைக்கான நம்பகத்தன்மையை உருவாக்குகிறது. அந்தக் குறிப்பு: அன்னுங்கை – இங்கேதான் தமிழீழ விடுதலை இயக்கத்தின் -டெலோ -தலைவர் புலிகளால் தனிமைப்படுத்திக் கொல்லப்பட்டார். முள்ளிவாய்க்கால் - இங்கேதான் தமிழீழ விடுதலைப்புலிகள் -எல் டிடி இ -தலைவர் வே. பிரபாகரன் இலங்கைப் படையினரால் தனிமைப்படுத்திக் கொல்லப்பட்டார் . கருணாகரனின் போர்க்கால நினைவுகளையும் அதன் மீதான விமரிசனப் பார்வையையும் தரும் இன்னும் இரண்டு கவிதைகளை இங்கே தருகிறேன். முதல் கவிதையின் தலைப்பு. 
ஆயுதம். 

யாரோ விட்டுச்சென்ற யோனி 
தனித்துக் கிடக்கிறது கட்டிலில். 
யாரதை விட்டுச் சென்றது 
எதற்காகக் கைவிடப்பட்ட து ஒன்றுமே புரியவில்லை. 
என்னைக் கண்டதும் அது 
எதையோ சொல்லத் துடித்து 
சட்டெனத் தன் நினைவடுக்குகளில் 
பதற்றத்துடன் இறங்கிச் சென்று 
எதையோ தேடுகிறது 
பார்த்துக்கொண்டிருக்கிறேன் 
திறக்க முடியாத ஞாபகங்களை எடுத்து வந்து 
மௌனமாக என் முன்னே 
கண்ணீர் மல்க நிற்கிறது. 
தானொரு பயன்பாட்டுப் பொருளாக மாற்றப்பட்ட 
துயரமாக இருக்கலாம் 
உயிருற்பத்திச் சுடராக 
இன்பக் குழலின் இனிய கீதமாக 
உயிருறவாக 
மர்மத்தின் தீராத புதிர்களையுடைய 
அந்தரக் கண்ணாக எனப்பலவாக இருக்கும் 
தன்முகவடிவை மாற்றியதைப் போல 
கைவிட்டுச் சென்ற கணத்தை 
அதனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை 
விம்மி அழத்தொடங்குகிறது. 
எந்த ஞாபகங்களையெல்லாம் அழிக்க விரும்பியதோ 
அதெல்லாம் பெருக்கெடுத்து வந்து அதைச் சூழ்ந்தன 
இப்பொழுது அதை மறைத்து நின்றன 
அதனுடைய ஞாபக முத்திரைகள் 
நான் பார்த்துக் கொண்டேயிருக்கிறேன் 
யாரோ ஒருவர் வந்து பொருத்திக் கொள்ள அவதிப்படுகிறார் 
அது பொருந்த மறுத்துத் திணறுகிறது. 
திணறிக்கொண்டேயிருக்கும் 
அந்த யோனி யாருடையதென்று தெரியவில்லை 
அந்தக் கணம் யாரோ ஒருத்தி வந்து 
அது தன்னுடையதானென்று 
எடுத்துச் செல்ல மாட்டாளா 
எனக்காத்துக் கொண்டிருக்கிறேன் 
அவளால் தான் அதற்கு விடுதலையளிக்க முடியும் 
யாரோ விட்டுச் சென்ற அது 
தனித்தே கிடக்கிறது இன்னும் 
அது தன் நினைவுகளை இழக்கட்டுமென்று 
யாரோ ஒருத்தி காத்திருக்கிறாள். ( 84,85) 
ஆயுதங்களை பெண்ணின் ‘யோனி’யாக உருவகப்படுத்திப் பேசும் கருணாகரன், யுத்தத்தைக் வேட்டைக்காடாக உருவகப்படுத்திக் காட்டுகிறார். அவ்வேட்டைக்காட்டில் வேடனும் அரசனும் இருக்கிறார்கள். இருவரும் ஒரேவகைத் தொழிற்பாட்டை மேற்கொண்டாலும் இருவருக்கும் வேறுபாடுகளும் இருக்கிறது என்று முன்மொழிந்து தனது சார்பை -நிலைபாட்டைக் காட்டவும் செய்கிறார். இனி அந்தக் கவிதை: யுத்தம் 
அந்தக் காடுகளைக் கடந்துதான் வந்திருக்கிறான் 
அரசனுக்கும் வேடனுக்குமிடையில் 
வேறுபாடுகள் எதையும் நான் காணவில்லை 
நலிந்து, 
நகரமுடியாமல், 
மணலில் இறகிக் கரையும் துயரோடிருக்கும் 
ஆற்றின் இடுக்கிலிருந்து 
விடுபடத்துடிக்கும் 
கூழாங்கற்களின் மீதுறங்கும் மீன்வாசனையை 
அறிந்தவர்கள் ஆற்றினோரம் களைத்திருக்கிறார்கள் 
அவர்களை விலகிச் செல்கிறான் அரசன் 
பேரிருள் மூடிய மரங்களின் கீழே 
ஆழ்ந்த உறக்கத்தில் படுத்திருக்கிறது நிழல் 
மரமும் வளர நிழலும் வளர்ந்ததை 
அறிந்தவர்கள் மரங்களைச் சூழ்ந்திருக்கிறார்கள். 
அவர்களை வந்தடைகிறான் வேடன் 
குதூகலித்துப் புரண்டோடுகிறது மகிழ்ச்சி ஆறு 
மிருகத்தின் வாசனையை மறைத்து வைத்திருக்கும் 
மரங்களின் அடிவயிற்றில் 
கனிந்திருக்கிறது மரத்தின் கருணையும் 
மிருகத்தின் அன்பும். 
வேடனின் அன்பில் மலர்ந்திருக்கிறாள் வனத்தாய் 
வனத்தின் அன்பில் கனிந்திருக்கிறான் வேடன் 
இலையுதிரும் போதுணரும் வலியை வேடனும் 
மலர்கள் உதிரும்போதுணரும் 
துயர்ப்பெருக்கை மிருகங்களும் 
கனிகள் சொரியும் மகிழ்ச்சியைப் பறவைகளும் 
உணர/வனம் ஆழ்ந்து கதகதத்தது. 
குதூகலித்துப் புரண்டோடிக்கொண்டிருக்கிறது மகிழ்ச்சி ஆறு 
தன்னுறவுகளிடத்தில் மரம் நெகிழ்ந்து பெருகிக் கனியவே 
வந்தான் அரசன் அங்கே. 
இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு கவிதையும் போர்க்காலத்தை நினவுகொள்ளும் கவிதைகள் என்பதைத் தலைப்பிலேயே கொண்டிருக்கின்றன. 
காடதிர 
கூட வந்த படைகளிடம் பிறந்த கலவரத்தீயில் 
எரிந்தழிந்தன ஆறும் நிழலும் 
ஆறும் நிழலுமற்றதோரிட த்தில் 
ஏதொரு உயிருக்கும் இடமில்லையே 
வேடனும் அரசனும் ஒன்றல்ல 
ஒன்றேயல்ல என்றறிந்தேன் அப்போது. (122,123) 
இத்தொகுப்பில் உருவாக்கப்பட்டுள்ள மத்தியூ என்ற பாத்திரம் ஒன்றிற்கு மேற்பட்ட கவிதைகளின் தலைப்பாக ஆகியிருக்கிறது. அக்கவிதைக்குள் இருக்கும் மத்தியூ ஒருவராக இல்லாமல் பல்வேறு ஆளுமைகள் பற்றிய நினைவுகளாக எழுதப்பெற்றுள்ளது. மத்தியூ, மத்தியூவின் சிரிப்பு, மத்தியூவின் வருகை, மத்தியூவின் டயறி 01, மத்தியூவின் டயறி 02. மத்தியூ என்னும் கற்பனைப்பாத்திரத்தை முன்வைத்து விரிக்கும் நினைவுகள் தனியாகப் பேசப்படவேண்டியவை. ஒரேயொரு கவிதையை மட்டும் இங்கே வாசிக்கத் தருகிறேன்: 
மத்தியூ 
நாங்கள் மத்தியூவைச் சந்திக்கச் சென்றபோது 
அவன் இறந்து கிடந்தான். 
என்ன செய்வது என்று தெரியாமல் 
ஒரு கணம் தடுமாறி விட்டோம். 


அப்போது 
“கவலைப்பட வேண்டாம் நண்பர்களே. 
இது என்னுடைய பதின்னான்காவது மரணம் 
இதுவும் ஒரு தற்கொலைதான்” என்றான் மத்தியூ 


அவனுடைய இறைப்பை விட 
இது தற்கொலை என்பதும் 
பதினான்காவது மரணம் என்பதும் 
பயத்தையும் குழப்பத்தையும் உண்டாக்கியது 


“உங்களுக்குத் தெரியுமா, 
ஏற்கனவே நான் ஐந்து தடவைகள் 
இந்த மாதிரித் தற்கொலைகள் செய்திருக்கிறேன்” என்று 
சிரித்தான். 
இதற்கு என்ன சொல்வதென்று தெரியாமல் நாங்கள் 
தடுமாறிக் கொண்டிருப்பதற்கிடையில்.. 


“மற்ற ஒன்பது கொலைகள், 
ஆனால், இப்படித்திரும்பத் திரும்பக் 
கொலையாவதுதான் சலிப்பூட்டுகிறது” 
என்றான் மத்தியூ. 


கொலைகளின் நடுவில் 
கொலையாளியின் முன்னே 
கொல்லப்பட்டவனின் அருகில் 
என்ன செய்வதென்று தெரியாத தத்தளிப்பில் 
நாங்கள் நின்று கொண்டிருந்தபோது.. 


“நண்பர்களே! 
எல்லாக்கொலைகளுக்கும் சாட்சியங்களிருந்தன 
ஆனால், எந்தச் சாட்சியும் 
சாட்சியமளிக்கவில்லை” என்றான் 


எங்களையும் அப்படிச் சொல்கிறானா 
இதோ இந்தக் கணத்தில் 
அவனுடைய உடலின் முன்னே 
காட்சியாக நிற்கிறோமே…! 


அவன் எங்களைப் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை 


“சாட்சியங்களில்லாத கொலைகளுக்கு நீதியுமில்லை 
கருணையுமில்லை 
கருணையுமிருந்தால் கொலைகளே நேராது” 
எனத் தன்னிரு கைகளையும் நீட்டி வரவேற்றான். 


என்ன சொல்வது அவனுக்கு என்று தெளிவதற்கிடையில் 
“உங்களுக்கான தேநீரைத் தயாரித்து வைத்திருக்கிறேன். 
பருகிச் செல்லுங்கள். 
திரும்பிச் செல்லும்போது 
தயவுசெய்து என்னுடைய நினைவை மட்டும் 
அங்கேயே விட்டுவிட்டுச் செல்லுங்கள் 
அதுவொரு தீண்டாப் பொருளாக இருக்கட்டும்” என்றான். 


அது கட்டளையா 
அன்பிலான கோரிக்கையா என்று தெரியவில்லை 
ஆனாலந்தக் குரலில் கொண்டிருந்த குழைவில் 
நேசத்தின் பருக்கைகள் மின்னின. 
அந்தத் தேநீரில் குருதி வாசனை வீசியபோது 
நாங்கள் தலைகளைத் தாழ்த்திக் கொண்டோம் 
கண்களிலிருந்து பூக்கள் சிந்தின 


மத்தியூவை நாங்கள் பிறிதொரு 
நத்தார்ப் பண்டிகையில்தான் சந்திக்க வாய்த்தது. 
அதுவுமொரு எதிர்பாராத சந்திப்புத்தான் 
அது பாலன் பிறந்த நேரம் 


இது தன்னுடைய பத்தொன்பதாவது பிறப்பு என்று 
கண்களைச் சிமிட்டினான் 


இரண்டுவருடம் கழித்து 
ஒரு நாள் 
“இனந்தெரியாத முறையில் 
மர்மமாகாக் கொல்லப்பட்ட சடலமொன்று 
பாலத்துக் கீழே கிடக்கிறது” என்று யாரோ சொல்லவும் 
பதட்டமாய்ச் சென்று பார்த்தேன் – 
மத்தியூ 


அது கொலையா 
தற்கொலையா என்று தெரியவில்லை 
எத்தனையாவது மரணமென்றும் 
அந்த உடலைப் படம்பிடித்துக் கொண்டிருந்தார்கள் யாரோ 
அதற்கு ஏற்றவாறு 
அந்தக் கோணத்தில் தன்னை வைத்திருப்பது எனத் 
தெரிந்திருக்குமா அவனுக்கு என்று 
ஏனோ ஒரு எண்ணம் வந்த து எனக்கு 


“இது எதற்கென்றே தெரியாமல் நடந்த கொலை 
யாரால் ஆனதென்றும் தெரியவில்லை 
வழமையைப் போல இதற்கும் சாட்சியங்களில்லை 
அதனால் என்ன?” 

என்றான் மத்தியூ மிகச் சாதாரணமாக.. 
இதுபோலப் பிடித்த கற்பனைப் பாத்திரங்களை/ நினைவிலிருக்கும் பாத்திரங்களை உருவாக்கிய நகுலன் (சுசிலா) கலாப்ரியா (சசி) போன்றவர்கள் ஒரே நபரின் வெவ்வேறு சாயலைத் தந்திருக்கிறார்கள். ஆனால் கருணாகரன் மத்தியூவுக்குள் பலரை நடமாடவிட்டிருக்கிறார்கள். அதற்குக் காரணம் மத்தியூ புறநிலையில் பார்த்த மனிதர்களின் சாயல் என்பதுதான். 
அகநிலையும் அகப்புறநிலையும் 
தமிழ்க்கவிதை மரபில் காமமும் காதலும் மட்டுமே அகநிலை வெளிப்பாடுகள் அல்ல. கடவுளை அருகிருக்கும் நாயகனாகவும் நாயகியாகவும் பாவித்துப் பாடப்பெற்ற பக்திக்கவிதைகளும்கூட அகநிலையுணர்வின் வெளிப்பாடுகளே. கடவுளும் மனிதனும் ஒன்றுதான்; வேறுவேறல்ல என்ற அத்வைத நிலை தொடங்கி, இரண்டும் வேறுவேறு எனப்பேசும் துவைதா, ஜீவன் பரமாத்வை அடையும் வழிகளை விவரிக்கும் விசிஷ்டாத்வைதா வரை கடவுளை மனிதர்களின் அருகிலிருக்கும் வஸ்துவாக அல்லது பரம்பொருளாக நினைக்கின்றன. இந்நினைப்பின் நவீன வடிவமே உள்ளொளியாகவும் உள்ளுணர்வாகவும் நினைத்துக்கொண்டு அகவயமாகப் பேசும் மனநிலை. இம்மனநிலையில் எழுதப்படும் கவிதைகள் கேட்பவரை அருகிருக்கும் நபராக நினைத்துக்கொள்ளும் பாவனையைக் கைக்கொள்ள வேண்டும் என்பது முதல் நிபந்தனை. அண்மையிலிருக்கும் நபரோடு தனது அந்தரங்கத்தை – விருப்பத்தை – ரகசியத்தை – காதலை -காமத்தைப் பேசிவிடும் ஆசையின் நீட்சியாக அவை வடிவங்கொள்கின்றன. சில நேரங்களில் அந்தரங்கத்தைப் பொதுமைப்படுத்தும் தொனியைக் கைக்கொள்ளும்போது அகப்புறமாக மாறிப் பொதுநிலை வெளிப்பாடாகவும் ஆகிவிடுவதுண்டு. இத்தகைய கவிதைகளைக் கருணாகரனின் உலகின் முதல் ரகசியம் என்ற தொகுப்பில் ஏராளமாக வாசிக்க முடிகிறது. தொகுப்பின் தலைப்பாக இருக்கும் அந்தக் கவிதையே ஓர் அந்தரங்கத்தின் வெளிப்பாடுதான். 
அவர்கள் வந்துவிட்டனர் 
நானின்னும் வரவில்லை 
அவளும் வந்துவிட்டாள் 
நானின்னும் வரவில்லை. 
ஆனால், அவர்களுடனேயே நானிருந்தேன். 
அது ஒரு சிறிய முற்றம் 
பிறகு அதை வசதிக்கேற்றவாறு பெருக்கிக் கொண்டோம் 
அங்கே ஒரு மரம் முளைத்துப் பழங்களை நிறைத்தது 
பூக்களைச் சூடினாள் அவள் 
வாசனையை உண்டாக்கினேன் நான்/தோட்டமும் முற்றமுமாகிய அந்த இடத்தில் 
ஒரு படகின் வடிவத்தில் அமர்ந்திருந்தோம் 
மெல்ல அசைந்தபடி நகர்ந்தன எல்லாம் 
எல்லோரு கூடி 
ஒன்றாகவே விருந்துண்டோம் 
ஒன்றாகவே சேர்ந்து பாடினோம். 
ஒன்றாகவே ஆடி மகிழ்ந்தோம் 
இரவின் ஆழத்துள் சென்று 
ஒன்றாகவே கனவுகள் கண்டோம் 
அவள் என்னை முத்தமிட்டது மட்டும் 
தனித்து நட ந்தது 
யாருமறியாத அந்த முத்தமே 
ரகசியமாகியது இந்த உலகத்தில் 
அவள் சென்றுவிட்டாள் 
அவர்களும் சென்றுவிட்டனர்(21,22) 
மேலும் இரண்டு சிறுகவிதைகள். சுடர் என்னும் தலைப்பில்: 
நீ வருகிறாய் 
நான் போகிறேன் 
விடைபெறுதல் இல்லை 
வழியனுப்புதலும் இல்லை 
காலம் எப்படி நெருப்பாயிற்று 
நான் எரிந்துகொண்டிருக்கிறேன் 
நீயும் தான் எரிந்துகொண்டிருக்கிறாய் 
நம்மை நாமே எரித்துக்கொண்டிருக்கும் நெருப்பாகினோம்.(61) 
******* நெருப்பு என்னும் தலைப்பில், 
இன்னும் பொழுதடங்கவில்லை 
மாடுகள் பட்டியில் சேரவில்லை 
கோழிகள் கூட டையவில்லை 
மல்லிகை மலர்ந்துகொண்டிருக்கிறது 
நீ இன்னும் வரவில்லை! 
ஊற்றி வைத்த தேநீர் ஆறுகிறது 
உடலும் மனமும் கொதிக்கிறது 
முப்பதாண்டுகளாய் (67) 


அந்தரங்கமும் நெருக்கமும் குறைந்து பொதுநிலையான காட்சிகள், படிமங்கள், ஐயங்கள், களிப்பு மனநிலை போன்றனவற்றை முன்வைக்கும்போது அகப்புறக்கவிதைகளாக மாறுகின்றன. அப்படி மாறிய இரண்டு கவிதைகளை இங்கே வாசிக்கலாம்: முதல் கவிதை ஒரு பரவசநிலையை விவரிக்கும் மனப்பாங்கு கொண்ட வெண்பூனை வெண்ணிசை வெண்கிளிகள் என்று தலைப்பிட்ட கவிதை. 
இருளையும் ஒளியையும் இத்தனை அளவாக க்கலந்து 
நம்முன்னால் வைத்துச் சென்றது யார்? 
இந்தக் கணங்கள் இப்படியே இருக்க க்கடவது என்று/பிரார்த்திக்கிறது வெண்பூனை 
தியானத்தில் 
விழிமூடிச் சிரிக்கின்றன வெண்கிளிகள் 


பரவசமா துயரிழைய அவிழ்தலா? 
அமுதமாய்ப் பொங்கல் வழிகிறது 
மூண்டெரியும் நெருப்பின் நடனத்தோடு 
ஆற்றோரம் நடந்து செல்கிறாள் என்னுடைய கிளி 
கிண்கிணி மணியொலிக்கத் 
தலையசைக்கும் எருதுகளை அழைத்துக் கொண்டு 
மரங்கள் அடர்ந்த சிற்றொழுங்கையில் போகும்/ வெண்ராஜனைத் தொடர்கிறது வெண் பரிதி 
ஒற்றைச் சுடராகி ஒளிரும் வெண்விளக்கை 
நோக்கிக் குவிகிறதென் சிரசு(121) 
இரண்டாவது கவிதையின் தலைப்பு: தேவதேவனைச் சந்திக்கும்போது 
தேவதேவனைச் சந்திக்கும்போது கேட்க வேண்டும் 
தொலைவிற்கும் அண்மைக்குமிடையில் 
மேய்ந்துகொண்டிருக்கும் ஆடுகள் 
உங்களிடம் சொன்ன ரகசியங்கள் என்ன என்று 
அவர் அதைச் சொல்லாமல் 
ரகசியமாகவே வைத்திருக்கவும் கூடும் 
ஆனாலுமென்ன 
நாம் கேட்பதிலொன்றும் தவறல்லவே 
அவர் சொல்லாமல் விட்டாலும் கூடத்தான் (14) 
ஒரு கவியின் பிரியமான வாசகர்களுக்கு இப்படிக் கேட்பதற்குப் பல கேள்விகள் இருக்கும். ஐயங்களாகவும் ஆச்சரியங்களாகவும் கோபமாகவும் இருக்கக் கூடிய கேள்விகளைக் கருணாகரன், தேவ தேவனிடம் கேட்கும் கேள்விகளாக மட்டுமே சுருக்கிவிட முடியாது. அவரைப்போலத் தேவதேவனிடம் கேட்கப் பலருக்கும் வினாக்கள் இருக்கலாம். தேவதேவனை வாசித்திருக்காத ஒருவருக்கு அவருடைய அந்தரங்கக் கவியிடம் அல்லது எழுத்தாளிடம் கேட்க வினாக்கள் இருக்கலாம். அதனை எழுதும்போது அகவெளிப்பாடாகவும் பொதுமைப்பட்ட நிலையில் புறநிலையாகவும் மாறிவிடும் நிலையில் அகப்புறமாகவும் ஆகிவிடும். உலகின் முதல் ரகசியம் தொகுப்பில் இவ்வகைக்கவிதைகள் பாதிக்கும் மேல் இருக்கின்றன. 
பின்குறிப்புகள் சில: 
கருணாகரனின் இவ்விரு தொகுப்பையும் ஒருசேர வாசித்துள்ள நிலையில் நூலாக்கம் பற்றிச் சில செய்திகளைக் குறிப்பிட வேண்டும் எனத் தோன்றுகின்றது. புறநிலைக்கவிதைகளாக எழுதப்பெற்றுள்ள நினைவின் இறுதிநாள் தொகுப்பில் உள்ள கவிதைகள் எழுதப்பெற்ற காலக்குறிப்பு தரப்பட்டிருந்தால், அதன் பொருண்மையும் எழுப்பும் உணர்வும் கூடுதலாகிவிடும். கருணாகரன் நினைத்திருந்தால் அதனைச் செய்திருக்கலாம். அதேபோல் உள்ளடக்க வரிசை தரப்பட்டிருக்க வேண்டும். புதுஎழுத்துப் பதிப்பகம் அதனை ஏன் தவிர்த்தது என்று தெரியவில்லை. புலம் பதிப்பகம் உள்ளடக்க வரிசையைத் தந்திருக்கிறது. ஆனால் அக்கவிதைகளைச் சில பொருண்மை அடிப்படையில் வகைப்பாடு செய்து தந்திருக்கலாம். அப்படியான வகைப்பாடுகள் வாசிப்பவர்களுக்கு உதவும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். பொதுவாகவே நவீனத்துவக் கவிகள் வாசகர்களுக்கு உதவக்கூடாது என்ற பிடிவாதத்தோடு செயல்படுபவர்கள். ஆனால் கருணாகரன் அப்படியானவர் அல்ல என்பதை நானறிவேன். அவரது மொத்தக் கவிதைகள் தொகுக்கப்படும் நிலையில் இவையெல்லாம் கணக்கில் கொள்ளப்படவேண்டும் என நினைக்கிறேன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நாயக்கர் கால இலக்கியங்கள் சமுதாய வரலாற்றுச் சான்றுகளாகக் கொள்வதற்கான முன் தேவைகள்

நாயக்கர் காலம். இயல்.2.பொருளாதார நிலைகளும் உறவுகளும்

மேல்நோக்கியும் கீழ்நோக்கியும்