போரும் புலப்பெயர்வும்: மூன்று கதைகள்



கதை கதையாம்.. காரணமாம்..காரணத்தால தோரணமாம்.. .
தோரணம் கட்டிய பந்தலும் எதுக்கு..?பூரணகும்பம் எடுப்பதும் எதுக்கு

இப்படியொரு சிறுவர் பாடல் உண்டு. இந்தப்பாடலில் வரும் தோரணத்துக்குப் பதிலாக வெவ்வேறு சொற்களைப் போட்டு அவரவர்கள் உருவாக்கிக் கொண்ட மாற்றுப்பாடல்களும் உண்டு. எங்கள் ஊரில் தோரணத்துக்குப் பதிலாக ஊருணி என்றொரு சொல்லைப்போட்டு உருவாக்கிய

”கதைகதையாம் காரணமாம்.. காரணத்திலெ ஊருணியாம்.. ஊருணியில ஒழக்குத்தண்ணியாம்.. ஒழக்குத்தண்ணியில கெழுத்தி மீனாம்.. என்று பிள்ளைகள் பாடுவார்கள்.”

நேர்கோட்டில் சொல்லிப்போகும் கதை: ஷமீலா யூசுப் அலியின் கிணறு

ஷமீலா யூசுப் அலி எழுதிய ”கிணறு” கதையைப் படித்த முடித்தபோது ஊருணி நினைவுக்கு வந்துவிட்டது. இசுலாமியக் குடும்பங்கள் அதிகம் இருக்கும் இலங்கையின் சிறு நகரம் ஒன்றில் இருக்கும் கிணறு - பொதுக்கிணறு -கவர்மெண்டை கிணறை மையமாக்கி விரிகிறது கதை. ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு எனக் காரணங்களைச் சொல்லிச் சொல்லித்தாவும் கதைசொல் முறையும் பேச்சு வழக்கின் வேகமும் சேர்ந்து தொடங்கிய வாசிப்பை எங்கும் நிறுத்தாமல் முடிவு நோக்கி இழுத்துச் சென்றுவிடுகின்றன.

கிணறின் இருப்பிடம் சார்ந்து, ஒரு யுவதிக்குள் உருவாகும் எண்ணவோட்டங்கள் வழியாகக் கிணற்றைச் சுற்றிய சம்பவங்களே தனித்தனிக் கதைகளாகக் கிளை பிரிந்துள்ளன. எப்போதும் வெளியுலகத்தைப் பார்க்க அனுமதிக்காத குடும்பச் சூழலிலிருந்து விலகிப் புறவெளிகளைக் காணும் ஆர்வத்தால் வீட்டிற்குள் இருக்கும் இசுலாமியப் பெண்ணின் மனவோட்டங்கள் அவை. தனிக்கிணறுக்கும் கவர்மெண்ட் கிணறுக்குமான ஒப்புமைகள், விடுதலைப் புலிகளின் இசுலாமிய விரோதப்பார்வையால் தமிழர்கள் மீது இசுலாமியர் ஒருவருக்கு (மனாஸிர் நானா- தேவயாணி) உண்டான கோபம். அதனால் ஒரு தமிழ்ப்பெண்ணோடு உண்டான மோதல். அம்மோதலே பின்னர் காதலான கதை, என விரியும்போது கதையின் பரிமாணங்கள் விரிகின்றன. அக்கிணற்றின் அருகில் இருக்கும் பேக்கரி, ஆண்கள் கூடிக் கொட்டமடிக்கும் தடுப்புகொண்ட மொட்டை மாடி எனச் சிலவற்றை அடையாளப்படுத்திக் கொண்டு இசுலாமிய ஆண்களின் கட்டற்ற உலகத்தையும் பெண்களின் கட்டுப்பாடு கொண்ட இருத்தலையும் பார்க்கிற பார்வையிலிருந்து நகர்ந்து கிணற்றை மூடுவதும், பிறகு சரிசெய்வதுமான ஒரு குறிப்பான நிகழ்வை நோக்கி நகர்த்துகிறார்.நிஸாரா மாமியின் அசாத்தியமான துணிச்சலால் கிணறை மூடியது, அதன் பின்விளைவுகளால் அரசு - ஊர்ச்சபை தனது இருப்பைக் காட்டித் திரும்பவும் கிணற்றை உயிர்ப்பித்ததுமான நிகழ்வுகள் அடுக்கப்படுகின்றன.

மொத்தக்கதையையும் பேச்சு வழக்கிலேயே சொல்ல வேண்டும் என்று நினைத்ததும், சிடுக்குகள் இல்லாமல் நேர்கோட்டில் சொல்வதே கதையை வாசிப்பவர்களுக்கேற்ற வடிவம் என நினைத்ததும் கதாசிரியர் ஷமீலா யூசுப் அலியின் பார்வைக்கோணமாக இருக்கிறது. பொதுக்கிணறொன்றைக் காரணமாக்கி இலங்கையின் இசுலாமியப் பெண்ணுலகத்தை விவரித்துள்ள அந்தக் கதையை வாசித்துப் பாருங்களேன்


http://kanali.in/kinaru/?fbclid=IwAR1rTPl3pLjFjU2Edpu2og98bta3tI1f2vcQ7cmQaiGC9s8X6ytdCmondLk

விவரண நடப்பியலின் வகை மாதிரி: சர்மிலா விநோதினியின் வெண்ணிலா

ஈழத்துப் போர்க்கால அழிவுகளைக் கண்முன் கொண்டுவரும் புனைவுகள் இப்போதும் -10 ஆண்டுகளுக்குப் பின்னும் எழுதப்படுகின்றன. “அழிவுகள் நடந்தது இப்படித்தான்” எனச் சொல்லும் நடப்பியல் வகைப்பட்ட எழுத்துகளிலும் இருவகைப்பட்ட புனைவுகள் இருக்கின்றன. போரில் ஈடுபட்ட இருதரப்பையும் விவரிக்கும் விமரிசன நடப்பியல் ( Critical Realism ) கதைகள் ஒருவகை என்றால், பாதிக்கப்பட்டோரின் அவலத்தையும் பாதிப்பு உண்டாக்கப்பட்ட விதத்தையும் முன்வைக்கும் விவரண நடப்பியல் ( Documentary Realism ) இன்னொரு வகை.

நான் வாசித்த அளவில் விமரிசன நடப்பியல் தன்மையுடன் புனைவுகளை எழுதுபவர்கள் பெரும்பாலும் புலம்பெயர்ந்த எழுத்தாளர்களாக இருக்கிறார்கள். அவர்களின் விமரிசனப் பார்வை அதிகமும் புலிகளின் செயல்பாடுகள் மீதும் பிடிவாதங்களின் மீதும் இருக்கின்றன. ஆனால் விவரண நடப்பியல் கதைகளை எழுதுபவர்கள் கடைசிவரை போர்க்களத்தில் நின்று உயிர்நீத்த விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களாகவும் இருக்கிறார்கள். அத்தோடு உடலாலும் மனதாலும் ஈழப்பகுதிகளில் வாழ்பவர்களாக இருக்கிறார்கள். புலம்பெயர்ந்திருந்த போதிலும் தாய்மண்ணிற்குத் திரும்பும் ஆசை அவர்களது எழுத்துகளில் வெளிப்படுகின்றன.

வெண்ணிலா என்று தலைப்பில், சர்மிலா விநோதினி எழுதியுள்ள இந்தக் கதை ஆனையிறவு, தென்மராட்சி போர்க் காலத்தில் தன் அம்மாவைப் பார்த்துவிடும் ஆசையில் ஒற்றையடிப்பாதைகள், படகு, வேளாண் வாகனம் எனப் பயணங்கள் செய்து அவள் இருக்கும் தெருவுக்குள் நுழைந்துவிட்ட நிலையில் - பார்த்துவிடக்கூடிய கடைசித்தருணத்தில் வெடித்த குண்டுகளால் பிணமாக மட்டுமே பார்க்க முடிந்த சோகத்தை நுட்பமாக ஆவணப்படுத்தியுள்ளது.

விமரிசன நடப்பியல், விவரண நடப்பியல் என்ற இருவகை நடப்பியல்களின் நோக்கங்கள் பற்றியும் பலவிதமான கேள்விகள் இருக்கின்றன. அக் கேள்விகளை முன்வைத்து விவாதிக்கும் ஆய்வுக் கட்டுரைகளை எழுதுவதற்கு ஒன்றிரண்டு பனுவல்கள் போதாது. இருதரப்புப் பனுவல்கள் பலவற்றையும் தொகுத்துக்கொண்டு அப்படியொரு கட்டுரையை எழுதவேண்டும். இப்போது சர்மிலா விநோதினியின் விவரண நடப்பியல் கதையான வெண்ணிலாவை வாசித்துப் பாருங்கள்.

http://www.yaavarum.com/archives/5504?fbclid=IwAR1Mb9EQQs9fvrmK7dqw1UquNZprNSF_XioTfeILjwh6q8QgUuX1rWX46-4

நெற்கொழுதாசனின் பழிகரப்பு அங்கதம்:

நெற்கொழுதாசனின் சில கதைகளை இணையப் பக்கங்களில் முன்பே வாசித்திருக்கிறேன். புலம்பெயர் வாழ்விற்குள் இருக்கும் சிக்கலோடு சேர்த்து போர்க்கால வாழ்க்கையைப் பேச நினைத்த அந்தக்கதைகள், இரண்டையும் இணைப்பதற்கான வெளிப்பாட்டு வடிவத்தைக் கண்டறிய முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்தன. என்னவகையான எழுத்தைக் கைக்கொள்வது என்ற தெளிவில்லாமல் சோதனை முயற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார் என்று அவற்றைப் பற்றிக் குறிப்புகள் எழுதியிருக்கலாம். அப்படியான குறிப்பு அவரது எழுத்து முயற்சியைத் தடுத்து விடக்கூடும் என்பதால் எழுதாமல் விட்டுவிட்டேன். இப்போது கனலியில் வந்துள்ள இந்தக்கதை ஒரு தெளிவான வெளிப்பாட்டு வடிவத்தைக் கண்டடைந்திருக்கிறார் என்பதைக் காட்டுகிறது.

கனவும் லட்சியங்களும் நடப்பாக – உண்மையாக மாறிப் பக்கத்தில் வந்தால் சாதாரண மனிதர்கள் அதனை எப்படி எதிர்கொள்வார்கள் என்பதை விவாதிக்கும் பக்குவத்தின் கதையை நகைச்சுவை வடிவத்தில் சொல்ல நினைத்திருக்கிறார் என்பதின் மூலம், ஒரு பொருண்மைக்கான வெளிப்பாட்டு வடிவத்தைக் கண்டடைந்துள்ளார். கனலி இணைய இதழில் வந்துள்ள “பக்குவத்தின் கதை” யை நகைச்சுவை எழுத்து எனச் சொல்லிவிட்டு நகரமுடியவில்லை. நகை, அங்கதம், பகடி, எள்ளல் என அதுசார்ந்த பலவற்றின் கலவையாக இருக்கிறது. என்றாலும் அங்கதம் என்ற கலைச்சொல்லால் குறிப்பதோடு ‘பழிகரப்பு அங்கதம்’ என்ற அதன் உள்பிரிவால் சுட்டிக் காட்டுவது பொருத்தமானதாக இருக்கும் . அங்கதம் என்பதன் பொருள் நையாண்டித்தனம் தான். பனுவல்களுக்குள் உருவாக்கப்படும் பாத்திரம் ஒன்றையோ, கருத்துநிலையையோ, அல்லது ஒரு நிகழ்வையோ பழித்து, பகடி செய்து, கிண்டல் கேலியுடன் எழுதுவது அங்கதம். அங்கதத்தின் நோக்கம் நகைப்பை உண்டாக்குவது . நகையென்பது சிரிப்பு அது முறுவலித்து நகுதலும், அளவே சிரித்தலும்,பெருகச் சிரித்தலுமென மூன்றென்ப எனத் தொல்காப்பிய மெய்ப்பாட்டியலுக்கு உரையெழுதியவர் சொல்கிறார்.

அங்கதம் நகைப்பை உண்டாக்குவதோடு நின்றுவிடுவதில்லை. வாசிக்கும்போது எளிமையான வெளிப்பாட்டு வடிவமாகத் தோன்றினாலும், மற்ற வெளிப்பாட்டு முறைகள் செய்யாத ஒன்றைத் துணிச்சலுடன் செய்யும் எழுத்தாக அங்கதம் இருப்பதால்,, அங்கத எழுத்தாளர்கள் எப்போதும் எச்சரிக்கையோடு கவனிக்கப்படுவார்கள். சமுதாயத்தில் வேரூன்றி, நிலைபெற்று, நடைமுறையாகிவிட்ட ஒரு அதிகாரக்கட்டமைப்பை நிலைகுலையச் செய்யும் நோக்கம் அங்கதத்திற்குண்டு. அங்கதத்தில் செம்பொருள் அங்கதம், பழிகரப்பு அங்கதம் என இரண்டு வகை உண்டு என்பது தொல்காப்பியம் . ஒருவரை வசைபாடுவது போல புகழ்ந்து பேசும் முறையை ‘செம்பொருள் அங்கதம்’ என்றும்; மாறாகப் புகழ்வது போல பழித்துரைப்பதை ‘பழிகரப்பு அங்கதம்’ என்றும் தொல்காப்பியம் வரையறுக்கிறது.

சந்திரலிங்கம், பக்குவம் என்ற பட்டப்பெயர் பெற்ற முன்கதையை முதலில் சொல்லாமல், தமிழ்நாட்டை நோக்கிக் கடலுக்குள் இறங்கி நடக்கத் தொடங்கும் காட்சியை முதலில் சொல்வதில் தொடங்குகிறது கதை. கடலுக்குள் இறங்கியதற்குக் காரணம் அவரது கனவு நாயகி, ‘செல்வி ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சாவடைந்தார்’ என்ற செய்திதான் என்று சொல்லும்போது, அவரை நகைச்சுவைப் பாத்திரமாக முன்வைக்கப் போகிறது என்பதைக் காட்டிவிடுகிறது. அந்தச் செய்தியைக் கேட்டதால் எப்படியாவது சென்னைக்குப் போய்விட முயன்று, கால்நடையாகவே கடலைக் கடந்துவிடலாம் என்று இறங்கிய சந்திரலிங்கத்தின் ஜெயலலிதா மீதான காதல் முன் பின்னாக நகர்ந்து வெளிப்படுத்தப்படுகிறது.
சினிமா நாயகி ஜெயலலிதா மீது கொண்ட காதலால் அவரது திருமணம் தள்ளிப்போனதின் பின்னணியில் அவர் ஜெயலலிதாவுக்குக் காதல் கடிதம் எழுதிய கதையும், ‘இலை மலர்ந்தால் ஈழம் மலரும்’ என்று முழங்கிய அரசியல் நாயகி ஜெயலலிதா மீது கொண்ட பற்றும் சொல்லப்படுகிறது. அவரது “ஜெயலலிதா காதல்!” ஒருவிதக் கனவுநிலைப்பட்ட லட்சியப்பார்வை. அதனைக் கைவிடச் செய்ய, அந்தக் கனவு நெருங்கிவந்துவிட்ட து என்று காட்டுவதே சரியான மருந்து. அந்த யோசனையைத் தருபவர் சரசுவதி ஆச்சியின் கணவர்.

மனிதர்களுக்கு லட்சியங்களும் கனவுகளும் வெளியில் இருக்கும்போது விரும்பத்தக்கனவாக இருக்கின்றன. ரசிக்கத்தக்க கிறுக்குத்தனமாகத் தோன்றும் அந்தக் கனவுகள், நம் பக்கத்தில் வந்து நடப்பாக – உண்மையாக மாறும்போது அச்சமூட்டுவதாக மாறிவிடுவதுண்டு. பார்த்து ரசித்துவிட்டுப் போகும் நகைச்சுவைப் பாத்திரங்களைக் கலைக்குரிய ஒன்றாக ஏற்கும் நமது மனம், நமது புழங்குவெளியில் இருக்கும் மனிதர்களாக இருந்தால் ஏற்றுக்கொள்வதில்லை. எரிச்சலுடன் ஒதுக்கிவிட்டுக் கோபத்தைக் காட்டத் தொடங்கிவிடுவோம். இதனையொரு உளவியல் நிகழ்வாகச் சொல்வதைவிடச் சமூகநடப்பாக விளங்கிக்கொள்ளவேண்டும்.

திரைப்பட நாயகர்கள், நாயகிகள் மீதும், அரசியல் தலைவர்கள் மீதும் தமிழர்கள் காட்டும் ஈர்ப்பின் பின்னால் இருக்கும் சமூக உளவியலை விவாதிக்கும் நெற்கொழுதாசனின் இந்தக் கதையைத் தமிழ்நாட்டுத் தமிழர்களும் வாசிக்கவேண்டும். இந்தக் கதைக்கு ஜெயகாந்தனின் ‘சினிமாவுக்குப் போன சித்தாளு’ ஒரு முன்மாதிரி என்ற போதிலும் கச்சிதமான சிறுகதையாக எழுதியிருக்கும் நெற்கொழுதாசன் பாராட்டுக்குரியவர்.

============================================

http://kanali.in/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/?fbclid=IwAR0q2QNiyssZ5QkmdEODDpESbhql2d9g5DAsUo7ZupTz6V0ZgyyNqm2ES8w


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நாயக்கர் கால இலக்கியங்கள் சமுதாய வரலாற்றுச் சான்றுகளாகக் கொள்வதற்கான முன் தேவைகள்

நாயக்கர் காலம். இயல்.2.பொருளாதார நிலைகளும் உறவுகளும்

மேல்நோக்கியும் கீழ்நோக்கியும்