கவிதைகள் வாசிக்கும் தருணங்கள்


தொடர்ச்சியாக வேலைகள் இருக்கும்போது வாசிக்கவே முடியாமல் போய்விடும். கடந்த 10 நாட்களாகத் தினசரித்தாள்களைக் கூடப் புரட்டிவிட்டு வைத்துவிடும் அளவுக்குப் பல்கலைக்கழக வேலைகள்.தொடர்ச்சியாக நிகழ்வுகள் ஏற்பாடுசெய்து முடிக்கும்போது ஏற்படும் அலுப்பு தீரவேண்டுமென்றால் நான் காணாமல் போகவேண்டும். இருக்கும் இடத்திலேயே நான் தொலைந்து போக வேண்டுமென்றால் இன்னொரு வெளியை உருவாக்கி அதற்குள் நுழைந்துகொள்ளவேண்டும். அதைச் செய்வதில் கவிதைகள் எப்போதும் உதவியாக வந்து நிற்கின்றன- வேலைகளிலிருந்து விடுபட முடியாமல் தவிக்கும்போது வாசிப்பதற்குக் கவிதையே ஏற்ற ஒன்று. அப்படியான கவிதைகளைத் தமிழில் எல்லாரும் எழுதிவிடுவதில்லை. குறிப்பான மனிதர்களை -அவர்களின் சிடுக்குகளையும் அழுத்தப்படும் நிலைகளையும் சொல்லும் கவிதைகள் வாசிப்பவர்களை இன்னொரு மனிதர்களாக மாற்றி அவர்களின் வலியையும் நம்மீது சுமத்தித் தத்தளிக்கச் செய்துவிடும்.அதற்கு மாறான கவிதைகளும் அவற்றை எழுதும் கவிகளும் தமிழில் இருக்கிறார்கள்.
திறந்து மூடும் அபத்த ஆட்டம்
அபத்தங்களை உருவாக்குவதற்கு நமது அரசாங்க அதிகாரிகளிடம் தான் கற்றுக்கொள்ளவேண்டும். அமைதியாகப் போய்க்கொண்டிருந்த ஊரடங்கைக் குழப்பி, கடும் ஊரடங்கு என அறிவித்துக் குழப்பிவிட்டார்கள். இந்த அறிவிப்பு மே 3 - க்குப் பிறகும் நீளும் என்பதைச் சரியாகவே புரிந்து கொண்ட மக்கள் திரண்டெழுந்து திரிகிறார்கள்.
=============
அபத்தக் கணங்களைச் சொல்லும்
அகமது பைசலின் கவிதைகள் சில.
*****
ஆலமரம்
பசியோடிருப்பதைக் காட்டிக் கொள்வதற்காகவே
தன் குடலை
வெளியே தொங்கவிட்டிருக்கின்றது
****
தனக்குத் தெரிந்த
ஒரு சொல்லை வைத்துக்கொண்டு
நாய்
தெருவையே வலம் வருகிறது..
*****
அங்கும், இங்கும்
அதிலும், இதிலும் தாவி
மரத்தைப் பரப்புகிறது குரங்கு
******
கீழே விழுந்து கிடக்கும் கடலினை
எல்லோரும் பார்த்துக் கொண்டே செல்கிறார்கள்
சில பறவைகள் மட்டும்
தூக்கி நிறுத்திட முயற்சிக்கின்றன.
******
வேர்கள் துளைபோட்டு
திருட்டுத்தனமாகப் பார்க்கின்றன
நிலத்தின் நிர்வாணத்தை.
******
கணவன் உறங்கியதும்
பகலெல்லாம் சென்ற இடங்களை
கால்களிடம் கேட்கிறாள் மனைவி
அங்கே
சப்பாத்துகளில் தலைவைத்து உறங்குகிறது பூனை
வெளியே இருக்கும் சப்பாத்துகளுக்குத் தெரிந்திருக்கும்
பூனை சென்ற இடங்கள்.
******
தாவ முடியாமல்
குரங்கை வரைவது எனக்குப் பிடிக்காது
தாவ முடியாமல்
நெருப்பை வரைவது
மிகவும் பிடிக்கிறது.
******
எவ்வளவு கவலையாக இருந்தாலும்
சிரித்துக் கொண்டுதான்
பல் துலக்க வேண்டும்
******
கலண்டரில் உட்காரும் புலி/ அகமது ஃபைசல்/ புதுஎழுத்து/2019
==================
கயல்: மெய்யுணர்வாகக் கவிதை
கண்டுகேட்டு உண்டு உயிர்த்து உற்றறியும் ஐம்புலனின் வெளிப்பாடு மெய்தொட்டுப் பயில்தல். காதலைக் காமமாக்கும் மெய்தொட்டுப் பயில்தல் ஆண் - பெண் உறவுக்கப்பால் இயற்கையோடு கொள்ளும் உறவிலும் நிகழ்கிறது.
காணுயிர்களும் அவற்றின் தடங்களும் அசைவுகளும் உண்டாக்கும் உணர்வுகளை எழுதும் மனம் வாய்க்கப்பெற்றவர்கள் அதனைச் சாதிக்கிறார்கள். காடாக- காட்டின் உயிர்களான விலங்குகளாகவும் பறவைகளாகவும், செடிகொடிகளாகவும் அடர்ந்து கிடக்கிற வனத்தைக் கடந்து போகும் அனுபவம் எழுத்தில் கிடைத்தால் வேறென்ன வேண்டும்.
நீராகவும், வானத்தின் பறத்தலாகவும்கூட இயற்கை விரிந்துகிடப்பதை கவிகள் எழுதிக் காட்டும்போது வாசிப்பு மனம் அதிகம் எதிர்பார்ப்பதில்லை. இயற்கையின் எளிமையே உள்ளே இழுத்துக் கொள்ளும்.
இயற்கையை ரசிப்பது என்பதற்குத் தேவை கண்கள். கண்கள் ரசிக்கின்றன என உணர்த்துவதற்குச் சொற்கள் வேண்டும். சொற்கள் ஒலியை உரசிச் சொல்லும் ஈரத்துடன் வரும்போது மெய்தொட்டுப் பயில்தல் நிகழ்கிறது. ஆரண்யம் என்னும் தலைப்பிட்டுக் கவி கயல் எழுதியுள்ள கவிதைகளை ஒரே மூச்சில் வாசிக்கும்போது வாசிப்பவரின் இருப்பு காட்டின் உருவமாக ஆகிவிட வாய்ப்புண்டு. தனித் தலைப்பின்றி தனித்தனிக் கவிதையாகவும் ஒரே கவிதையாகவும் வாசிக்கும்படி எழுதப்பெற்றுள்ள தொகுப்பில் கவியின் உள்ளுணர்வு எழுப்பும் கேள்விகள் வழியாக அவரது சுற்றுச் சூழல் ஆர்வங்களும் சமூகப் புரிதல்களும் வெளிப்படுகின்றன. என்றாலும் மொத்தக் கவிதைகளும் இயற்கையைப் பாடும் மனத்தை வெளிப்படுத்துவனவே. இரண்டு கவிதைகள் உங்கள் வாசிப்பிற்காக: 
1.
கூழாங்கற்களிடம் தீராக் கதை பேசியபடி
நீரிலாடிக் களிக்கும் பசுமரத்து வேர்.
இலைகளின் மேல் இன்னொரு இலையாய்,
பச்சைக்கிளிகள்.
வைரச் சிதறலெனப் பாயும் அருவி.
தாழைப்பூக்களின் ஜீவ சுகந்தம்.
எல்லாமிழந்ததுதானா நம்
அடுக்குமாடிக் குடியிருப்பாக இருக்கவேண்டும்?
மிக அருகில் மிக அருகில்
என்ற கூவல் எப்போதும் கேட்கிறது.
மருத்துவமனை அருகேயுள்ள
இடுகாட்டில் இருந்து.
2.
மழைக்கால மாலை.
வானவில் மண்ணிறங்கி
பவழமல்லிக்
கிளைகளுக்கிடையே படர
காட்சிப் பிழையோ
என் அம்மாவைக் கேட்டேன்.
பரிகசித்து,
உன்னைப் போலொரு கள்ளன்
தோட்டக் கள்ளன்
பஞ்சவர்ணக்குருவி
மாம்பழக்குருவி
காசிக்கட்டிக் குருவி
கஞ்சால் குருவி
ஆறுமணிக் குருவி
பொன்னுத் தொட்டான்
பச்சைக் காடை
எனப் பல பெயர்கள் என்றாள்.
ஆயிரம் பெயர் சொல்லி
ஆண்டவனை அழைத்தாற்போல

=========================
அனார்: இடம்பெயர்த்து அழைத்துச் செல்லும் கவிதைச் சொற்கள்
சுற்றி நடக்கும் எல்லாவற்றையும் மறந்து தூரமாக அழைத்துப் போய்விட்டு, உடனே திரும்பாமல் நின்று நிதானமாக அழைத்துவரும் கவிதைகளைத் தொடர்ந்து எழுதித்தருகிறார் அனார் . அவரது தொகுப்பிலிருந்து ஒரு கவிதையை படித்தவுடன் உடனே அடுத்த கவிதையை வாசித்துவிட முடியாது. 
ஒவ்வொரு கவிதையையும் புதிதான ஒரு மலைப்பிரதேசம் அல்லது பள்ளத்தாக்கு அல்லது சமவெளி அல்லது வனம் அல்லது காடு என ஏதோவொரு நிலவெளியில் அல்லது பல நிலவெளிகளின் கலவையான ஒரு பிரதேசத்தில் நிறுத்திவிடுவனவாக இருக்கும்.
தமிழ்ச் செவ்வியல் அழகியல் கூறும் நிலங்களை விதம்விதமாக உருவாக்கி அதனோடு பொழுதுகளையும் இணைத்துவிடும்போது வாசிப்பவர்கள் தங்கிவிடுவதற்கான மாய உலகம் உருவாகிவிடுகிறது. இதுதான் எனச் சொல்லிவிட முடியாத நிலவெளியைக் குறிப்பான காலத்திற்குரியனவாக ஆக்கிக் கைப்பிடித்து அழைத்துச் சென்று நிறுத்திவிடும் அனாரின் கவிதைகள் அவ்வப்போது வாசிப்பதற்குரியனவாக இருக்கின்றன. கவிதைக்குள் இருப்பவள் ஒரு பெண் என்பதை மட்டும் சொல்லிவிட்டு ஒதுங்கிவிடும் அனார், பிரச்சினைகளை எதிர்கொள்ளும் வகைமாதிரிப்பெண்கள் யாரையும் காட்டுவதில்லை. அதனாலேயே பெண்ணிய விவாதங்களை நிராகரிக்கின்றன என்று விமரிசனச் சொல்லாடல்களை முன்வைக்கலாம். ஆனால் அழகியலையும் நேசங்களையும் எதிர்பார்க்கும் / காட்டும் பெண்மையை ரசிப்பதற்கான கணங்களைத் திரும்பத்திரும்ப எழுதிக் காட்டுகிறார். அதனை விரும்பும் மனமும் அந்தரங்க ஏக்கமும் ஒவ்வொருவருக்குள்ளும் அவ்வப்போது துளிர்த்துவிடத்தக்கன . இதனை மறுப்பவர்கள் யார் இருப்பார்.
இன்றைய நெருக்கடிக்குள் இந்தக் கவிதையைத் திரும்பவும் வாசித்தபோது அதன் முன்வைப்புக் கூடாக இன்னொரு வெளிக்குள் நுழைந்து காணாமல் போகமுடிந்தது.
கவிதைக்குள் மறையும் மழைக்காடுகள்
======================================
என் கவிதைகளுக்குள்
மழைக்காடுகள் புதைந்துள்ளன.
தீப்பிழம்புகள் கொண்ட வானம்
காட்டின் இருளில் புதைந்துள்ளது.
தகிப்பும் மழையும்
ஆர்ப்பரிக்கின்ற காடுமுழுக்க
மந்திரித்துவிடப்பட்ட விலங்குகள்
உள் அழைக்கின்ற கண்களால்
பின்வாங்குகின்றன
மழையும் சுவையும்
காற்றின் ஆழ்ந்த பசியும்
சதுப்பு நிலத்தில் உலவுகின்றன
அங்கே
மேயும் கபில நிறக்குதிரை
தொழுவம் அடையும் நேரம்
மஞ்சள் அலரிப்பூக்களை
மடியில் சேர்த்தெடுப்பவள்
எஞ்சிய உன் கண்சிமிட்டலையும்
எடுத்துப் போகிறாள்
வெதுவெதுப்பான மழைக்காடாக
உருக்கொள்கின்றன என் கவிதைகள்
மழை சிணுசிணுக்கும்
மென்மையான இரவின் கீழே
உன்னைப் புதைத்துக் கொள்
இந்தக் கவிதையைத் தன்னுள் கொண்டுள்ள ஜின்னின் இரு தோகை என்னும் தொகுதி சில மாதங்களாகவே என் பையில் இருந்துகொண்டே இருக்கிறது. இந்தக் குறிப்புக்குப் பின்னும் பையிலேயே இருக்கும் என்றுதான் சொல்லத்தோன்றுகிறது.நடப்பு வெளியை விலக்கிவிட்டு இன்னொரு வெளிக்குள் பிரியமானவர்களோடு மகிழ்ச்சியாகவும் குதூகலத்தோடும் கைகோர்த்துச் செல்ல ஆசைப்படும்போது அதனை உருவாக்கித்தரும் விதமாகப் பல கவிதைகள் இருக்கின்றன. 
============================
ரவி சுப்பிரமணியன் :சித்திரக்காரர்களின் கவிதை
நல்ல ஓவியங்கள்/ சித்திரங்கள் கோடுகளாலும் பரவலான வண்ணக் கலவையாலும் பளிச்சென்று அர்த்தங்களைச் சொல்ல முயற்சிக்கும். ஆனால் அப்படியான அர்த்தமாக்களைவிட, திசைவிலகும் கோடுகளும், குவித்துத் திணறி எழும் வண்ணங்களும் உண்டாக்கும் உணர்வுகள் நீடித்து நிற்கக்கூடியன. ஒன்று இன்னொன்றாக மாறுவதற்காக ஏற்படும் இழப்பிலும் மிகுவிப்பிலும் உண்டாக்கப்படும் அர்த்தங்களின் அடுக்குகள் ரசிப்பவர்களின் கற்பனைக்கும் வாய்ப்பளிக்கக் கூடியன.

ஒருவண்ணம் இன்னொன்றோடு சேர்ந்து உருவாகும் இரட்டை அல்லது இரண்டு மூன்றின் சாயலில் பல அர்த்தங்களை ஓவியத்தை ரசிப்பவர்கள் புரிந்துகொள்வார்கள். ஓவியம் போன்ற காட்சி ஊடகத்திலும் காட்சி நகர்வுகளால் தன்னிலையை உருவாக்கும் சினிமா ஊடகத்திலும் செயல்படுபவர்கள், எழுத்துக்கலையில் ஈடுபடும்போது அந்தத் தாக்கத்திலிருந்து தூரமாக விலகிவிட முடியாது. அப்படி விலகிவிடப் பெரும் முயற்சிகள் வேண்டும்.
மா. அரங்கநாதன் பெயரால் வழங்கப்படும் மதிப்புமிகு விருதைப் பெற உள்ள ரவி சுப்பிரமணியனின் கவிதைகளுக்குள் ஒருவிதமான சித்திரமாக்கல்கள் அதிகம் உண்டு. அவரது கவிதையாக்கத்தின் முதன்மையான போக்காகக்கூட அதனைச் சொல்லலாம். அண்மையில் வாசித்த விதானத்துச் சித்திரம் என்னும் தலைப்பும் அதிலிருக்கும் கவிதைகள் பலவும் அந்தத் தன்மையில் வாசிக்க முடிகிறது. அத்தொகுப்பிலிருக்கும் இந்தக் கவிதைகூட அப்படித்தான் இருக்கிறது.

மகாராஜா
=========
இடிபாடுகளுக்கிடையில்
சிதைந்து கிடக்கிறது
மேன்மைமிகு மகாராஜாவின் கோட்டை.
தொளதொளவென்ற ராஜ உடையை அணிந்தபடி
வளைந்த பிடியற்ற செங்கோலை ஊன்றி
அங்குமிங்கும் உலவுகிறார் மன்னர்
பல்லாக்கில்லை
துதி பாட புலவோர் இல்லை
நர்த்தகிகள் யாருமில்லை
ஆனாலும் தன்புகழைத் தானே பாடி
தனியே நகைக்கிறார் மன்னர்
தளர்ந்த குரலில்
இருமல் கரகரக்க
பழைய நினைப்பில் கத்தவும் செய்கிறார்.
அவர் பசிக்குப் பழம் தரும் முதியவள் மட்டும்
அவ்வப்போது வந்துபோகிறாள்.
வீரதீர பிரதாபங்களைச் சொல்லும்
கல்வெட்டின் அருகில் அமர்ந்து
சில வேளை ஆசுவாசம் கொள்கிறார்
இன்னும் பழைய நினைப்புதான்
புறா வழியே சேதி அனுப்ப
சதா ஏதோ
எழுதிக் கொண்டேயிருக்கிறார்.
அலுப்பாயிருக்கிறது
அந்தப் புறாவுக்கும்.
====================================
பெருந்தேவி: வாழ்தலின் ரகசியத்தைத் தேடுவது?
நகுலன் பற்றியும் நகுலன் கவிதைகள் பற்றியும் நடக்கும் பல விவாதங்களைப் பலநேரங்கள் வாசித்திருக்கிறேன். ஒவ்வொரு வாசிப்பின்போதும் அவை ‘நான்’ அல்லது ‘தன்’ னின் இருப்பு பற்றிய கேள்வியாகவும், விடை தெரியாத நிலையில் ஏற்படும் குழப்பமாகவும் புரியும். அப்புரிதல் பெரும்பாலும் பிழையானதல்ல என்ற நம்பிக்கையும் எனக்குண்டு. 
நான்’னின் இடத்தில் ‘நின்’னையும் ‘அவன்’ ‘அவள்’ அல்லது ‘அது’வையும் வைத்து விதம்விதமாகக் கேள்வியெழுப்பிக் கவிதை விளையாட்டு செய்பவர் நகுலன். ராமச்சந்திரன் அல்லது சுசிலா என்பன இம்மூவிடப் பெயர்களில் ஒன்றை மாற்றீடு செய்வன என்பதைத் தாண்டி வேறில்லை.


இந்தக் குழப்பத்தைக் கருத்து முந்தியது அல்லது பொருள் முந்தியது எனப் பேசும் இயங்கியல் தத்துவவிசாரணையாகவும் பேசிக்கொண்டிருக்கலாம். அல்லது “ஆதியிலே வார்த்தை இருந்தது; அது வார்த்தையாக இருந்தது; வார்த்தை ஆதியாக இருந்தது; ஆதி பகவானோடிருந்தது; பகவான் வார்த்தையாக இருந்தார்; பகவானின்றி வார்த்தையில்லை; பகவானே வார்த்தை” என்ற சமயவியல் விசாரணையாகவும் ஆக்கிக்கொள்ளலாம். புதைவடிவப் பொருண்மை, புறவடிவப் பொருண்மை என மொழி விளையாட்டும் விளையாடலாம். கவிதையை வைத்துக் கொண்டுவிளையாட விரும்புபவர்களுக்குத் தேவை ஒருவிளையாட்டு.

நகுலனின் பெரும்பாலான கவிதைகளின் இக்குழப்பம் அல்லது மயக்கம் அர்த்தக் குழப்பமா? தோற்றமயக்கமா? என்று தரைக்குமேல் மிதந்த கேள்விகளோடு இப்போது அவரின் சீடர்களென நம்புபவர்கள் அவரைத் தரையில் இறக்கி நடக்கச் செய்யவும் முயற்சிக்கின்றனர். குடிப்பிரியர்களிடம் வெளிப்படும் குளறலும், தத்துவவிசாரணையோடு சேர்த்தி என இணைத்துவிடும் ஆர்வமாக இது தோன்றுகிறது.

நான் -ஐ அல்லது நின் -ஐத் தேடும் கவிகளுக்குக் குடியும் போதையும் கூட நானாகவும் நின்னாகவும் தோன்றுவது ஒருவித பித்தநிலை. எல்லாப் பித்தநிலைகளையும் தத்துவமாகப் பார்க்கும் பலர் தங்களின் படைப்புகளைத் தரையில் கால்வீசி நடக்கும் படைப்புகளாக எழுதிக் கொண்டே நகுலனையும் கொண்டாடுகின்றார்கள் என்பது இன்னும் சுவாரசியமான முரண். சுவாரசியமான முரண்கள் இல்லையென்றால் வாழ்க்கையின் ரகசியத்தை எப்படித்தேடுவது?
நிஜத்தைத் தேடுவதற்கான குறுக்குவழி
திறந்து வைத்த
சாளரங்களின் வழியே
தென்றலும் வந்தது.
தென்றலோடு தென்றலாய் நீயும்....
தென்றலுக்குத்
தேன் தடவிய நினைவுகளால்
நெஞ்சம் நிறைகிறது.
சாளரங்கள் மட்டுமல்ல கண்களும்...
கண்களின் இமைகளும் கூடத்
திறந்து கிடக்கின்றன
நினைப்பு நிஜமென்றால் நீயும் நிஜமே
=========================
மேற்கோளில் அலையும் கவித்துவம் 
பெருந்தேவியின் கவிதைகளை முன்வைத்து.
============================ =========
பெயர்ச் சொற்களும் வினைச்சொற்களும் ஒரு மொழியின் அடிப்படை இலக்கணப்படியும் சிறப்புநிலை இலக்கணப்படியும் இணைந்து இலக்கியத்தை உருவாக்குகின்றன. அதன் வழியாக எழுதுபவருக்கும் வாசிப்பவருக்குமான நேரடி அர்த்தங்கள் கிடைக்கும் நிலையில் எளிமையான இலக்கியங்களாக நகர்ந்து விடுகின்றன. எழுதியவர் உருவாக்கும் அர்த்தங்கள் அவரின் சூழல் சார்ந்த ஒன்றாக இருந்து, அச்சூழலை அறியாத வாசகர் அதனோடு பொருந்த முடியாத நிலையில் தனக்கான எழுத்தில்லை என்று தள்ளிவைத்துவிட்டு நகர்வது நடக்கும்.
பொதுவான இலக்கிய வாசிப்பு வினையிலிருந்து கவிதை வாசிப்புவினை ஒற்றை வாசிப்பைவிடவும் கூடுதல் வாசிப்புகளைக் கோருவனவாக இருக்கின்றன. கூடுதல் வாசிப்பின்போது கவிதையில் இடம்பெறும் பெயர்ச் சொற்கள், பெயர்களாக இருந்துவிட்டால் அந்தப் பெயர்களைக் கடப்பது இன்னொருவிதமான அனுபவமாக மாறிவிடும். எல்லா மொழியிலும் கவிதைகள் பலவிதமான பெயர்களை உள்ளடக்குவதன் மூலம் வாசிப்பவரை வேறு தளத்திற்கு நகர்த்தப் பார்க்கின்றன. அப்படி இடம்பெறும் பெயர்களை மேற்கோள் பெயர்கள் எனச் சொல்லலாம். மேற்கோள் பெயர்கள்(Naming reference)இடப் பெயர்களாகவும் தொன்மப் பெயர்களாகவும் அமையும்போது அது சார்ந்த நிகழ்வொன்றை வாசிப்பவருக்கு முன்னால் வைக்கிறது கவிதை. அந்நிகழ்வு சார்ந்து கவியின் சார்புநிலை அல்லது பார்வைக் கோணம் வாசிப்பவருக்குக் கடத்தப்பட்டு வாசிப்பவரின் மனதிற்குள் எதிர்வினைகளை உருவாக்கும். நவீனத் தமிழ்க் கவிதைக்குள் அடிக்கடி மேற்கோளாக வந்துபோகும் அகல்யா ஒரு தொன்மப் பெயர்:வெண்மணி ஓர் இடப்பெயர். இவை உருவாக்கும் அர்த்தங்கள் நேரடியானவை.
இந்த மேற்கோள் பெயர்கள் பெருந் தத்துவங்களை முன்வைத்த சிந்தனையாளர்களாகவும் இருக்கலாம். வரலாற்றுப்பாத்திரங்களாகவும் காதல் குறியீட்டுப் பாத்திரங்களாகவும் கூட இருக்கலாம். அப்போதும்கூடக் குறிப்பான ஒரு பார்வையையே வாசிப்பவர்களுக்குக் கவிதை உருவாக்கும். இதற்கு மாறாக மேற்கோள் பெயர்கள் இன்னொரு எழுத்தாளராக இருந்துவிட்டால் வாசிப்பவரின் வேகம் தடைபடவும், தேடுதலுக்கும் புரிதலுக்கும் இட்டுச் செல்லவும் வாய்ப்புகளுண்டு.
இம்மாதக் காலச்சுவடில் கவி. பெருந்தேவியின் இரண்டு கவிதைகள் அச்சாகியுள்ளன. இரண்டு கவிகம் - தலைப்பில் இல்லை. அதற்குப் பதிலாக,

அந்நியரின் கருணைக்குப் பஞ்சமே இல்லை. 
அசோகமித்திரனின் நாவல் ஒன்றில் வருகிறது”
எனக் கவிதைக்குள்ளே அசோகமித்திரனின் பெயர் மேற்கோளாகியிருக்கிறது. மரணம் சார்ந்து தவிக்கும் தனிமனிதர்களின் இக்கட்டான கணம் பற்றிய நம்பிக்கையைக் குறித்து ஒரு கேள்வியையும், சுற்றியிருக்கும் மனிதர்களின் மீதான நம்பிக்கையின்மையைக் குறித்தொரு முன்மொழிவாகவும் மனப் படிமங்களை உருவாக்கும் இரண்டு கவிதைகளும் மேற்கோள் காட்டப்படும் அந்தப் பெயர்களின் வழியாகக் கூடுதல் அர்த்தங்களை அல்லது நேரடி அர்த்தங்களை உருவாக்க முடியும் எனக் கருதியிருக்கின்றன . கவி வெளிப்படுத்தும் விசாரணைக்குள் நுழையும் திறவுகோல்களாக அந்தப் பெயர்கள் அமையக்கூடும் என்றும் கருதியிருக்கலாம். ஆனால் வாசிப்பவர்களுக்கு பெயர்களுக்குப் பின்னால் இருக்கும் சூழலும் விசாரணைகளும் தெரியாத நிலையில் இப்பெயர்கள் வாசிப்பவர்களுக்குத் தடையாகவும் வாய்ப்புண்டு.
தமிழ்க் கவிதை மரபில் சமகால எழுத்தாளர்களைத் தனது எழுத்துக்குள் மேற்கோள் பெயராகச் சுட்டுவது புதியதல்ல. தன் காலத்திலேயே மேற்கோளாக ஆன பெண்கவி ஒருத்திச் சங்கமரபிலேயே இருந்தாள். வெள்ளிவீதி என்னும் அந்தப் பெயர் அங்கே பெயராக இல்லை. அவள் எழுதிய கவிதைக்குள் அலைந்த அவளின் மனப்பாங்காக இருந்தாள். அதுபோலவே கவி பெருந்தேவியின் கவிதைக்குள் அசோகமித்திரனும் ப்யூகோவ்ஸ்கியும் எழுத்தில் வெளிப்பட்ட மனப்பாங்கின் படிமமாக இருக்கிறார்கள். இப்பாங்கு கவிதையின் இன்னொரு தளமாக அலையும் தன்மையிலானது.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

தணிக்கைத்துறை அரசியல்

நவீனத்துவமும் பாரதியும்