கடவுளும் காமமும்- உமையாழின் மூன்று கதைகள்
எழுதப்படும் இலக்கியப் பனுவல்கள் எழுதியவருக்குச் சில அடையாளங்களை உருவாக்கித் தருகின்றன. உருவாக்கப்படும் அடையாளங்களுக்குக் காரணமாக இருப்பதில் முதல் இடம் எதை எழுதுகிறார்கள்? என்பதாகத் தான் இருக்கும். அதனைக் கொஞ்சம் விளக்கிச் சொல்ல நேர்ந்தால் யாரை எழுதுகிறார்கள் என்பதாக மாறிவிடும். இதற்குப் பின்பே எப்படி எழுதுகிறார்கள்? என்பது வருகிறது. எதை அல்லது யாரை என்ற கேள்விக்கான விடையைக் கண்டுசொல்ல நினைக்கும் திறனாய்வு, எழுத்திற்குள் அலையும் பாத்திரங்களையும், உடல் மற்றும் மன ரீதியான அலைவுகளையும் முன்வைத்துப் பேசுகிறது. இதனைச் சரியான இலக்கியத்திறனாய்வுக் கலைச்சொல்லால் குறிக்க வேண்டுமென்றால் ‘உள்ளடக்கச் சொல்லாடல் (Content Discoruse)’ எனக் குறிக்கலாம். உள்ளடக்கத்தை வெளிப்படுத்தும் நோக்கத்தை விவரிக்கும்போதுதான் ‘எப்படி எழுதுகிறார்கள்?’ என்பதைப் பேச நேரிடுகிறது. அந்தப் பேச்சு, எழுதுபவர்கள் பயன்படுத்தும் கருவிகளைப் பற்றிய பேச்சுகளாக மாறிவிடும். அதனைக் குறிக்கும் கலைச்சொல்லாக வடிவச் சொல்லாடல் (Structural Discourse) என்பது பயன்பாட்டில் இருக்கிறது. வடிவச்சொல்லாடல் தான் இலக்கிய நுட்பங்களைக் கண்டறிந்து விதந்து பாராட்டுகிறது. சொல் முறைமைகள், மொழிப்பயன்பாடுகள், இவற்றின் வழியாக உருவாக்கப்படும் புலனீர்ப்பு விளைவுகள்,நம்பகத்தன்மை போன்றனவே வடிவச் சொல்லாடல்களாக விரிக்கப்படுகின்றன.
யார்,எது, எப்படி என்ற மூன்றில் ஒன்றின் காரணமாகவேகூட ஒரு இலக்கியப் பனுவல் வாசிப்புக் கவனத்தை ஈர்த்துவிடுவதுண்டு. அப்படி ஈர்க்கப்படும் பனுவல்களை எழுதும் எழுத்தாளர்கள் கவனிக்கப்பட்டு பேசப்படுவதுண்டு. ஆனால் அவ்வகைப் பனுவல்களும் எழுத்தாளர்களும் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு மறந்து போனவர்களாக ஆகிவிடவும் வாய்ப்புண்டு. ஆனால் யாரை? எதனை? எப்படி என முப்பரிமாணக்கேள்விகளையும் எழுப்பி விவாதிக்க வாய்ப்பளிக்கும் பனுவல்கள் பெறும் கவனம் முழுமையானது. முழுமையான பனுவல்கள் காலங்கடந்தும் வெளியைக் கடந்தும் கவனிக்கப்படக்கூடியன. பல நூற்றாண்டுகளுக்குப் பிறகும் வாசிப்பனுவத்தைத் தரும் கவிதைப் பனுவல்கள் பழந்தமிழில் இருக்கின்றன. வேறுமொழியில் மொழிபெயர்த்துத் தரப்படும்போதும் வாசிப்பின்பத்தைத் தருவதோடு, மனித வாழ்வியலின் போக்கோடு வைத்து விவாதிக்கத்தக்க பனுவல்களாக ஏற்கப்படுகின்றன. செய்யுளிலிருந்து, உரைநடைக்கு நகர்ந்த பின்பு உருவான புனைகதைகளிலும், முழுமையான பனுவல்கள் எழுதப்பட்டுள்ளன. தன் காலத்தைச் சரியாக எழுதும் பொருட்டாகவே புனைகதைகள் உருவாக்கப்பட்டாலும் அதற்குள் உருவாகும் முழுமையே அத்தகைய பனுவல்களை மற்றைய பனுவல்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டுகின்றன. தமிழில் முழுமையை உறுதிசெய்யும் பனுவல்களை எழுதியவர்களின் பட்டியலை இங்கே தரலாம். பட்டியல்கள் உண்டாக்கும் மனச்சிக்கல்கள் காரணமாகத் தவிர்க்கப்படுகிறது.
சமகாலத்தில் அச்சிதழ்கள், இணைய இதழ்கள் வழியாக வாசிக்கக் கிடைக்கும் எல்லாவகைப் பனுவல்களையும் தொடர்ந்து வாசிக்கும்போது பலரது கதைகள் வாசித்தவுடன் இருவகையான நெருக்கடிகள் உண்டாகும். உடன்பாட்டு நிலையில் தரும் இந்நெருக்கடிகளே பெரிதும் எழுதத் தூண்டுகின்றன. எதிர்மறை நிலையில் நெருக்கடி தரும் பனுவல்களையும் பேசித்தான் ஆகவேண்டும். என்றாலும் அவற்றைத் தள்ளிப்போடும்படுதல் நடந்துவிடுகிறது. வாசிக்கப்பட்ட பனுவல்களின் எழுத்து முறைகளிலும் எழுதுவதற்காகத் தெரிவுசெய்யும் பாத்திரங்களும், அவர்களின் வழியாக முன்வைக்கப்படும் கருத்துநிலையும் சேர்ந்து பேசவேண்டிய கதைகள் எனத்தூண்டிக் கொண்டே இருக்கும். அத்தகைய கதைகளைப் பற்றிய கதைகளின் குறிப்புகள் என்னிடம் உண்டு. குறிப்புகள் எடுத்துக்கொள்ளத் தூண்டாமல் விலகிப்போகும் கதைகளும் வாசிக்கப்படுவதுமுண்டு. என்றாலும், அவற்றைப் பெரும்பாலும் பேசாமல் தவிர்ப்பது மனதிற்கு நல்லது. இது இவ்விடத்து நிற்க.
******
கதைகள், விமரிசனக்குறிப்புகள், இலக்கிய நிகழ்வுகள் குறித்த பதிவுகளை எழுதும் புனைபெயர் உமையாழ். இரண்டு வருட இடைவெளியில் அவர் எழுதிய மூன்று சிறுகதைகளைப் பிரான்சிலிருந்து பதிவேற்றம் பெறும் நடு இணைய இதழ் வெளியிட்டுள்ளது. முகம்மது அப்துல் ரபீக் அகமது லுத்பி என்ற பெயரையும் கொண்ட உமையாழ் இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து ஐக்கிய ராச்சியம் என்னும் பிரித்தானியாவில் வசிக்கும் நபர் என்ற தகவல் இந்தக் கதைகளை வாசிப்பதற்கு உதவக்கூடிய தகவல். வாசிக்கப்பட்ட அவரது மூன்று கதைகளின் பின்னோக்கு வரிசை இது:
2. பிறழ்வு - இதழ் 15 மாசி 2019
1. பாவமும் பலியும்- இதழ் 08 / தை மாசி பங்குனி
தமிழின் ஆகச் சிறந்த கதைசொல்லியான இளங்கோ, ‘ஊழ்வினை உருத்துவந்தூட்டும்; உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்; அரசியல் பிழைத்தோர்க்கறங்கூற்றாகும்’ என்ற மூன்று உறுதிப்பொருட்களை – கருத்துகளை - வலியுறுத்துவதற்காகச் சிலப்பதிகாரத்தை எழுதியதாகப் பாயிரம் சொல்கிறது. அப்படிச் சொல்லப்பட்டாலும் இம்மூன்று உறுதிப்பொருள் மட்டுமே அதில் வெளிப்படுகின்றன என்பதற்கில்லை. அதற்கும் மேலாகப் பல பொருண்மைகளை வாசிப்பவர்களுக்குத் தரும் பனுவலாகத் திகழ்வது சிலப்பதிகாரம். நம்காலத்துப் புனைகதைகளில் “இதுதான் எழுதப் பெற்றிருக்கிறது என்று உறுதியாக ஒருவரும் சொல்லிவிட முடியாது; அப்படிச் சொல்லும் வாசகத்தை மறுக்கும் நிலைக்குக் காரணமான ஒரு பகுதியை இன்னொருவர் அதே பனுவலில் எடுத்துக்காட்டிவிட முடியும் என்பதும் முழுமைப்பனுவல்களின் சிறப்பு. பனுவல்களை வாசித்து முடிக்கும் ஒருவர், ‘இந்த உறுதிப்பொருளை முன்வைப்பதற்காகத் தனது கதைப்பனுவலில் பாத்திரங்களையும் சொல்முறையையும் கால இடப்பின்னணிகளையும் இவ்வாறு அமைத்துள்ளார் என எடுத்துக்காட்டி விவாதித்து முன்வைக்கும்போது அதனை ஏற்பவர்கள் விமரிசனத்தோடு உடன்படுவார்கள். உடன்படாதவர்கள் வேறொரு கருத்தை முன்வைக்கலாம். நவீனப் பனுவல்கள் பல வாசிப்புகளை எதிர்பார்ப்பனவாக இருக்கின்றன.
உமையாழின் மூன்று கதைகளையும் வாசித்து முடித்த நிலையில் அம்மூன்றிலும் ஒரு பொதுத் தன்மை இருப்பதை உணரமுடிகிறது. கதை வழியாகத் உணர்த்த நினைக்கும் உறுதிப்பொருளை – வாழ்க்கை பற்றிய புரிதலை - கதையின் கடைசியில் ஒரு மாயக்குடுவைக்குள் வைத்துவிட்டு, அதை நோக்கி வாசிப்பவரைக் கைபிடித்து அழைத்து கொண்டு போகிறவராக இருக்கிறார் உமையாழ். அழைத்துப் போய் அதன் முன்னே நிறுத்திவிட்டு விலகிவிடுகிறார். இந்தத் தன்மையை நான் வாசித்த மூன்று கதைகளிலும் இருக்கும் பொதுக்கூறாகப் பார்க்கிறேன். மாயக்குடுவைக்கு முன்னால் நிற்கும் வாசகர், கதைக்கு தரப்படும் தலைப்பு என்னும் திறவுகோலைப் பயன்படுத்திக் குடுவைக்குள் நுழைந்து, அந்த ரகசியத்தை கண்ட அனுபவத்தில் திளைத்துக் கொள்ளலாம். எழுதியவரைப் பாராட்டலாம்; கொண்டாடலாம்.
மூன்று கதைகளில் கடைசியாக வந்த ஆமினாவின் வாழ்க்கை குறித்து எழுதப்பட்ட எட்டு சிறிய குறிப்புகள் என்ற கதையின் எட்டாவது குறிப்பு இது:
ஞாயிற்றுக் கிழமை. சமீமின் உம்மா அழைத்திருந்தார். அவன் உம்மாவிடம் ஆமினாவிற்கு குழந்தை உண்டாகி இருக்கிற செய்தியை மகிழ்ச்சியாகப் பகிர்ந்துகொண்டான். ஆமினா தனக்குச் சுகமில்லை எனச் சொல்லி, குழந்தை உன்டான நாளில் இருந்து படுத்துக்கிடந்தாள். செல்மாவின் குழந்தைகள் வெளியே விளையாடிக்கொண்டிருந்த சத்தம் அந்த வீட்டிற்குள் கேட்டுக்கொண்டே இருந்தது.
இந்தக் குறிப்புதான் அந்த மாயக்குடுவை. அந்தக் குடுவைக்குள் மிதக்கும் ரகசியம் ஒன்றிருக்கிறது. ஆமீனா குழந்தை உண்டாகக் காரணம் அவளது கணவனான சமீமா? பள்ளிக்காலத்துக் காதலன் அன்வீயா? என்பதே அந்த ரகசியம். இலங்கையின் மரபான இசுலாமியக் குடும்பத்திலிருந்து இருபக்கத்துப் பெற்றோரும் தேடிப்பிடித்து சமய நம்பிக்கை மற்றும் சடங்குகள் அடிப்படையில் லண்டன் மாப்பிள்ளைக்கு மனைவியாகி, லண்டனுக்கு வந்த பெண்ணான ஆமீனாவின் வயிற்றில் உருவாகும் குழந்தைக்கு யார் பொறுப்பு? இந்த ரகசியத்தை நோக்கி வாசகர்களை நகர்த்திக் கொண்டு வரும் உமையாழ், நெருடலற்ற மனத்தோடு ஒரு பெரும் மீறலைச் செய்யும் பாத்திரத்தை ஏற்கும்படி செய்கிறார். அந்த ஏற்பைச் செய்வதற்கு ஏற்ற கதைசொல்லும் உத்தியைக் கையாண்டிருக்கிறார். மனிதர்களின் மனதிற்குள் உள்ளுறையும் காமம் சார்ந்த மீறலை இயல்பாக ஏற்கிறாள் ஆமீனா. தான் வளர்த்தெடுக்கப்பட்ட சமய நம்பிக்கை சார்ந்த வாழ்க்கையில் இதுபோன்ற மீறல் தண்டனைக்குரியது; பாவகரமானது என்பதை அறிந்திருக்கும் நிலையிலும் மீறத் தயாராகும் வாய்ப்பைக் கதையின் நிகழ்வுகள் வழியாகத் தொடுத்துக் கொண்டே போகிறார் கதாசிரியர்.
இந்தக் கதையில் கதை நிகழ்வுகளை அடுக்கும் உத்தியைக் கதையின் தலைப்பிலேயே குறிப்பிடுகிறார். அந்த உத்திக்கு அவர் வைத்துள்ள பெயர் குறிப்புகள் (Notes). எட்டுக்குறிப்புகளில் முதல் குறிப்பு கொஞ்சம் நீளமாகவே உள்ளது.
வந்த முதல்நாளே ஆமினாவிற்கு இந்த வீடு பிடிக்கவில்லை. எலிப்பொந்து போல அறைகளும், சூரிய ஒளியோ, காற்றோ புகாத இடங்களும் அவளில் ஒவ்வாமையை உண்டாக்கிற்று. ஊரில் அரை ஏக்கர் காணியில் மாளிகை போல வீடும் தோட்டமும். லண்டன் மாப்பிள்ளை என காசிம் மௌலவியின் மகனை மணமுடித்துக் கொடுத்தார்கள். ஆங்கிலம் பேச எழுதத் தெரிந்த பெண்தான் வேண்டும் என மகன் சொல்ல, காசிம் மௌலவி ஊரெல்லாம் சொல்லி வைத்து சல்லடை போட்டுத் தேடிக் கண்டு பிடித்த பெண் ஆமினா.
****
வேலையால் பாதியில் வந்த கோவம், செல்மா கதவைச் சாத்திய கோவம் என எல்லாமும் புது மனைவி மீது வசையாய் இறங்கிட்டு,அன்றுதான் முதன்முதலாக ஆமினாவை கடுஞ்சொல் சொல்லித் திட்டி வைத்தான். அழுதுகொண்டே மூலையில் போய் இருந்த ஆமினாவைப் பார்த்து தன்னை நொந்துகொண்டான். என்ன இருந்தாலும் தான் அப்படி நடந்திருக்கக் கூடாது என்பதை புரிந்துகொண்டான். சமையலறையில் முழங்கால் மடித்து முகம் புதைத்து அழுதவளை வாரி அணைத்துக் கொண்டான். முத்தமிட்டான். அவள் சினுங்கினாள். அந்தப் பகல் மசங்கிய பொழுதில் அவர்கள் உறவு கொண்டார்கள். உடற்சூடு இறங்கிய களைப்பில் மாடப்புறாக்கள் அணைத்துக்கொள்வதைப் போல அணைத்துக் கிடந்தார்கள். செல்மாவின் குழந்தைகள் பக்கத்து வீட்டில் சத்தமாக ஏதோ சொல்லி விளையாடிக் கொண்டிருந்தது அப்போதும் கேட்டுக்கொண்டிருந்தது. அவன் புன்னகைத்தான். அல்லாஹ் தங்களுக்கும் ஒரு குழந்தையைத் தருவான் என ஆமினாவின் காதருகில் மெல்லமாகச் சொன்னான். அவள் வெட்கத்தாலும் காமம் உதிர்த்த களைப்பினாலும் பூரித்துப் பூத்துக்கிடந்தாள்.
ஊரில் வசதியான வீட்டிலிருந்து வந்தவளுக்கு, லண்டனில் நெருக்கடியான வீட்டையும், அண்டை வீட்டாரின்(செல்மா) தொல்லைகளையும் சேர்த்துத் தந்த கணவன் என்று, கதைக்கான வெளியையும் முரணையும் வெளிப்படுத்த வேண்டும் என்பதால் முதல் குறிப்பு நீளமாகவே இருக்கிறது எனக்கொள்ளலாம். இரண்டாவது குறிப்பு ஆமீனாவின் பள்ளிப்பருவத்திற்கும் பணியாற்றிய காலத்திற்கும் செல்கிறது. அக்குறிப்பில் பெறப்படும் தகவல் ஒன்பதாம் வகுப்புப் படித்தபோது உடன் பயின்ற அன்வரும் அவளும் சொல்லத் தயங்கிய காதல்.
வளர்ந்த பின்னர் ஆமினாவிற்கு களுத்துறை ஆங்கில ஆசிரியர் கல்லூரியில் இடங்கிடைத்தது. அங்கே அவள் இருந்த மூன்றாண்டுகளில் இரண்டுமுறை அவனைக் கண்டாள். முதல் முறை கல்லூரி வளாக உணவகத்தில் யாரோ ஒருவருடன் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தான். அவனைப் பார்த்த மாத்திரத்தில் அவளுக்கு அதே நடுக்கமும் கண்ணீரும் பீறிட்டது. ஆனால் இந்த முறை அவளது உள்ளுணர்வு வேறுவிதமாக இருந்தது. மின்வெட்டி மறைந்ததைப் போல அவளுள் எழுந்த உணர்ச்சிகளை அவள் வெகுவாக ரசித்தாள். ஒருகணம் தோன்றி மறைந்த அந்த அரூபத்தை, பொட்டலில் விழுந்த முதற் சொட்டு மாரி போல பத்திரப்படுத்திக கொண்டாள்.
மூன்றாவது குறிப்பில் லண்டன் வாழ்க்கையில் குடியிருக்கும் வீடும் சூழலும் பிடிக்கவில்லை என்ற தகவல் கிடைக்கிறது.
மனைவி லன்டன் வருவதற்கு முதலே புதுப் பெயின்ட் பூசி, வீட்டுக்குத் தேவையான பொருட்களைக் கொஞ்சங்கொஞ்சமாக வாங்கிச் சேகரித்தான். இப்போது அவளுக்கு இந்த வீடு பிடிக்கவில்லை. அவளுக்கு மூச்சு முட்டுகிறது
நான்காவது குறிப்பில் கிடைக்கும் தகவல் தொல்லைதரும் பிள்ளைகளோடு எப்போதும் சத்தம் எழுப்பும் அண்டை வீட்டுக்காரி செல்மாவைப் பிடித்துப் போனது என்ற தகவல்
இரண்டு பெண்களும் புன்னகைத்துக் கொண்டார்கள்.
‘எனக்கு உன்னை பிடித்திருக்கிறது.’ எனச் சொன்னாள் செல்மா.
“எனக்கும் உன்னைப் பிடித்திருக்கிறது. நான் லன்டன் வந்து தேடிக்கொண்ட முதலாவது நட்பு உன்னுடையதுதான்.” என்றாள் ஆமினா. இருவரும் கட்டி அணைத்து முகங்களை உரசி அன்பை வெளிப்படுத்திக்கொண்டார்கள். செல்மாவின் குழந்தைகள் இன்னமும் வெளியே விளையாடிக் கொண்டிருந்தார்கள்.
செல்மாவிற்கு ஆமீனாவைப் பிடித்துப் போகக் காரணம் அவளது அழகான ஆங்கிலம். ஆமீனாவிற்குச் செல்மாவைப் பிடித்துப் போகக் காரணம் அதுவரை கிடைக்காத பாராட்டும் உடலுரசலோடு கூடிய நட்பும்.
ஐந்தாவது குறிப்பு அவளின் கடந்த காலத்திற்குள் சென்று இலங்கைக்குப் பதிலாக இந்தியாவில் திருமணம் நடந்த தகவலைத் தருவதோடு,
அல்லாஹ் நமக்கொரு குழந்தையைத் தருவான் என அவளது காதுகளில் அவன் மெல்லமாகச் சொன்னான். அவள் பூரித்துப் போனாள்.
எனத் திருமண வாழ்க்கைக்குப் பின்னால் இருக்கும் பெரும் நம்பிக்கையின்படி வாழ நினைத்தவர்கள் என்பதையும் தருகிறது. ஆனால் ஆறாவது குறிப்பில் அந்த நம்பிக்கை குலைக்கப்பட்ட தகவல் முன்வைக்கப்படுகிறது. அதற்குக் காரணம் ஆரம்பத்தில் வெறுக்கப்பட்ட பக்கத்துவீட்டுக்காரி செல்மா.
தனது இரண்டாவது குழந்தைக்கு தகப்பன் யாரெனத் தனக்குத் தெரியாது எனச் செல்மா சொன்ன போது ஆமினா அதை நம்ப மறுத்தாள். தான் வாழ்நாளில் ஒருமுறை கூட சுயமைத்துனம் செய்ததில்லை. அது எப்படிச் செய்வது என்றுகூடத் தனக்குத் தெரியவில்லை என ஆமினா சொன்னதை செல்மா ஏற்க மறுத்தாள். நம்பிக்கையும் ஏற்பும் அவர்களுக்கிடையே விளையாடிக்கொண்டிருந்தது.
*******
பிறிதொரு சந்தர்ப்பத்தில் உடல் சுதந்திரம் குறித்து செல்மா அவளுக்கு பாடம் எடுத்தாள். வேட்கை வேட்டை நாயை விட மூர்க்கமானது எனச் செல்மா சொன்னதைப் பற்றி, பின் வந்த பல இரவுகளில் ஆமினா சிந்தித்துக் கிடந்தாள். ஆமாம், செல்மா தன்நம்பிக்கையின் திருவுருதான் என ஆமினா ஆழமாக நம்பினாள்.
ஏழாவது குறிப்பு வாழ்க்கை ஒரு பெரிய வட்டம் எனச் சொல்லப்படும் நம்பிக்கையை நிகழ்த்திக் காட்டும் குறிப்பைத் தருகிறது. ஆமீனாவின் கணவனான சமீமின் நண்பர்களில் ஒருவனாக ஆமீனாவின் பள்ளிக்காலத் தோழன் அன்வர் இருந்தான். சந்திப்பு பேச்சாக மாறியது. கணவனின் நம்பிக்கைக்குரிய நண்பனாக அன்வர் இருந்தான். அவனால் மருத்துவமனைக்கு வரமுடியாத போது அன்வரை அனுப்பி வைத்தான் கணவன். அவனோடு அவனது வசதியான காரில் போகும்போது உடல் மறைத்துக் கொண்டு போன ஆமீனா, பள்ளி நிகழ்வுகளையும் தான் பணியாற்றிய கல்லூரிக்கு அவன் வந்தபோது பார்த்ததையும் சொல்கிறாள்.
அவனை ஆங்கில ஆசிரியர் கல்லூரியில் இரண்டு முறை கண்டதையும், இரண்டாவது முறை தான் பேச எத்தனித்ததையும் அவள் சொன்ன போது, தான் அங்கே பதினாறுமுறை வந்ததாகவும், வந்த ஒவ்வொரு முறையும் அவளைப் பார்த்ததாகவும் அவன் சொன்னான். இரண்டு பேரும் அமைதியாக இருந்தார்கள். அவள் அவனது காதலி பற்றிக் கேட்டு அந்த அமைதியைக் குலைத்தாள். அவன், சமீம் எப்படி இருக்கார் எனக் கேட்டான். அமைதி மிக ஆழமானதும் மிகக் கனமானதும் என அவர்கள் உணரத்தொடங்கி இருந்தனர்.
*******
அவளது வீட்டுக்கு வந்து சேர்ந்திருந்தார்கள். அவள் முன்னிருக்கையில் இருந்து கொண்டாள். அன்வி அவளது சமையலறையில் இருவருக்கும் சேர்த்தே தேயிலை தயாரித்துக்கொண்டு வந்தான். அவள் அவனது தோளில் சாய்ந்து கொண்டே முழுத் தேநீரையும் பருகினாள்.
நிகழ்காலத்திற்கும் கடந்த காலத்திற்கும் பயணம் செய்யும் ஏழாவது குறிப்பு அவர்கள் இருவரும் எந்தவிதக் குற்றவுணர்வும் இல்லாமல் காமத்தில் கலந்துபோனார்கள் என்பதைக் குறிப்பாகச் சொல்கிறது. இந்த அடுக்குதலின் இறுதியாக இருப்பதுதான் அந்த எட்டாவது குறிப்பு.
ஞாயிற்றுக் கிழமை. சமீமின் உம்மா அழைத்திருந்தார். அவன் உம்மாவிடம் ஆமினாவிற்கு குழந்தை உண்டாகி இருக்கிற செய்தியை மகிழ்ச்சியாகப் பகிர்ந்துகொண்டான். ஆமினா தனக்குச் சுகமில்லை எனச் சொல்லி, குழந்தை உன்டான நாளில் இருந்து படுத்துக்கிடந்தாள். செல்மாவின் குழந்தைகள் வெளியே விளையாடிக்கொண்டிருந்த சத்தம் அந்த வீட்டிற்குள் கேட்டுக்கொண்டே இருந்தது.
எட்டாவது குறிப்பாக இருப்பது இது மட்டும்தான்.
தீர்மானிக்கப்பட்ட வாழ்க்கை என்ற நம்பிக்கையையும் அதிலிருந்து விலகிவிடும் மனிதச்சூழலையும் எதிரெதிராகவும் சில நேரங்களில் இணையாகவும் நிறுத்தி அடுக்கப்படும் இக்கூற்று முறையில் ஆமீனா தனது மீறலைக் குறித்து – காமம் சார்ந்த அறிதல் குறித்தும் அதனை ஏற்கும் மன நிலைக்கு மாறியது குறித்தும் - எந்தவிதக் குற்றவுணர்வும் கொள்ளாமல் நகர்கிறாள். உமையாழால் நகர்த்தப்பட்டுள்ளாள். அப்படி நகர்த்துவதற்கு உதவியாகக் குறிப்புகளை அடுக்கும் சொல்முறை இருக்கிறது.
குறிப்பு என்னும் தொடர்பாடல் முறை நெருக்கத்தை உருவாக்கும் தொடர்பாடல் தன்மை கொண்டது. அதே நேரத்தில் ஒருவித அதிகாரத்தைப் பேணும் சொல்முறையும்கூட. நவீன அலுவலக நடைமுறைகளை அறிந்தவர்களுக்குக் குறிப்பின் பயன்பாட்டைத் தனியாக விளக்கவேண்டியதில்லை. பெரும்பாலும் இருவர் மட்டுமே பங்கெடுக்கும் தொடர்பாடலில் ஒருவர் சொல்ல, இன்னொருவர் கேட்டுக் குறித்துத் தொகுத்து வைத்துக்கொள்பவராக இருப்பார். அதிகார அடுக்கில் சொல்பவரின் அதிகாரத்திற்குக் கட்டுப்படும் இட த்திலேயே இருப்பார் குறிப்பு எடுப்பவர். அவர் எடுத்த குறிப்புகள் சொல்லும் தகவல்கள் நம்பகத்தன்மை கொண்டவை. கூடுதல் குறைவுக்கு அதில் இடமில்லை.
கூட்டுதல் குறைத்தல் இல்லாத எட்டுக் குறிப்புகள் வழி, மாறிவிட்ட வாழ்க்கைச் சூழலில் மரபான இசுலாமியக் குடும்பத்திலிருந்து வந்த ஆமீனாவின் காமம் சார்ந்த மீறலில் கடவுளும் கணவனும் எந்தவிதக் குற்றவுணர்வும் இல்லாமல் விலக்கிவைப்பதைச் சொல்லிவிடுகிறார் உமையாழ். அப்படிச் சொல்லும்போது, மீறலான ஆமீனாவின் நகர்வு பற்றி ஆசிரியர் உமையாழுக்கும் சொல்வதற்கு எதுவும் இல்லாமல் இருப்பதுதான் சிறப்பு.
இந்தக் கதையில் ஆமீனாவின் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கான காரணம் யார் என்னும் ரகசியத்தைக் கொண்ட மாயக்குடுவையைக் கடைசியில் வைத்திருப்பதுபோலப் பிறழ்வு கதையிலும் மாயக்குடுவையைக் கதையின் கடைசிப் பத்தியில் தான் வைத்துள்ளார்.
நான் எப்படி இருக்கன் எண்டு நீங்க வருத்தப்படுவது போல இருக்கு. வேணாம். வருத்தப்படாதிய. நான் நல்லாத்தான் இருக்கன். எனக்கு யார் மேலேயும் கோவம் இல்ல. வாப்பாதான் மௌத்தா போய்ட்டார். அவர் இருந்திருந்தா ஆம்புள புள்ள இப்படி ஊட்டுக்குள்ள அடஞ்சி இருக்கப்டாது. வெளிய போயிட்டு வான்னு ஒரு அறைய போட்டு சரி அனுப்பி வைப்பார். இப்ப எனக்கு அப்படி போகச் சொல்லத்தான் யாருமில்ல. எனக்கு போகவும் ஏலாது. கதவ மூடி வச்சிருக்காங்க. சில நேரம் அதோ அந்த சங்கிலியால கட்டி வைப்பாங்க. உம்மாவையும் இப்படித்தான் வச்சிருந்தாங்க. எப்பவாச்சிம் தான் தொறந்து விடுவாங்க. அதுவும் டொக்டர் சொல்லி ஊசி போட்டுத்தான் அனுப்புவார். போன மொற என்னய வெளிய விட்டபோது தான் நான் பானுற கொழந்தைய பார்க்க போனன். அவதான் அஜிமிர் மூஸா சேர் ஊட்ட ஒடைச்ச கதைய சொன்னா. அடுத்த மொற வெளிய போறப்போ, அஜிமிரையும், நெடிய மூஸா சேரையும் பாக்கணும். மூஸா சேருக்கு இனி அடிக்காத, கோவப்படாத எண்டு அஜிமிர்ட சொல்லணும். எதுக்கு கோவப்படனும்!? நான் சொன்னா அஜிமிர் கேட்பான். ஆனா எப்போ வெளியே போவன் எண்டுதான் சரியா சொல்ல தெரியல. ஆனா போகணும்.
ஒரு இளைஞன் மனப்பிறழ்வு காரணமாக அடைத்து வைக்கப்பட்டிருக்கிறான். அடைத்து வைத்த தந்தை இறந்துபோனதில் தொடங்கும் கதை, அவனுக்குத் தந்தை மீது உண்டான வெறுப்புக்கான காரணங்களை அடுக்கிக் கொண்டே போகிறது. இந்தக் கதையின் அடுக்குமுறையும் வேறு யாரையும் நுழைய அனுமதிக்காத நெருக்கம் கூடிய சொல்முறையைக் கொண்டது என்பதை மட்டுமே இங்கு விவரித்துக் காட்டலாம். கதையின் தொடக்கம் முன்வைப்புக்குரிய தொடக்கமாக இருக்கிறது:
‘அந்த சம்பவம்’ நடந்து சரியா ஏழாண்டுகள் கடந்து, என்ட பதினஞ்சாவது வயசில வாப்பா மாரடைப்பால காலமானார். அது ஒரு வெள்ளிக்கிழம. கவலையை விட ஆறுதல் மிகைச்சிருந்த நாள் அது. மூச்சு முட்ட அடைச்சு வைச்சவன வெளிய உட்டது போல காற்றில ஒரு ஆசுவாசம் படர்ந்திருந்திச்சு. சுற்றி இருந்த எல்லோரும் அழுதார்கள் என்பதால எனக்கும் கண்கள் பிசுபிசுத்திருந்திச்சு. மத்தப்படி மனசு கொஞ்சமும் கவலையில அழல. நீங்களே சொல்லுங்க, வாப்பா அகாலமா மௌத்தா… போயிட்டார் என சொல்றதுல உங்களுக்கு ஆறுதல் என்று சொல்ல நேர்வது எவ்வளவு பெரிய துர்பாக்கியம்!?
என்னதான் காரணமாக இருந்தாலும் வாப்பாவ வெறுப்பத அல்லது வாப்பாட மரணத்தில ஆறுதல் அடைவத நியாயப்படுத்த முடியாது என நீங்க சொல்ல வருவதும் எனக்குப் புரியாமலில்ல. ஆனா அது நீங்க நினைப்பத போல இல்ல. அத பத்தி நான் கொஞ்சம் விரிவ தெளிவாகச் சொன்னா உங்களால என்னைய புரிஞ்சிக்க முடியும். அதுக்கு நான் அஜிமீர்ல இருந்து ஆரம்பிக்கணும். உங்களுக்கு ஆறுவிரல் அஜிமீர தெரியுமா?
கொஞ்சம் பொறுங்கோ, நான் வலது பக்கமாக கொஞ்சமா திரும்பிக்கிறேன். அப்பதான் நீங்க சொல்றத என்னால தெளிவா கேட்கமுடியும்.
ம்ம், இப்ப சொல்லுங்க.
வாப்பாவ வெறுத்ததற்கான காரணத்தையா கேட்கிறீங்க?
என்று கேள்விகேட்டுத் தொடங்கி, அவனே பதிலைச் சொல்கிறான்.
ஆரம்பத்தில் மட்டுமல்லாது ஒவ்வொரு நிகழ்வைச் சொல்லவும் அவனே ஒரு கேள்வியை கேட்டுக்கொண்டு பதிலைச் சொல்லும் விதமாக் கதை நிகழ்வுகளை அடுக்கித் தருகிறான். ஆனால் அவனிடம் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பது கதைக்குள் இடம்பெறவில்லை. கதைசொல்பவன் என்னும் தன்மை இடமும், கேட்பவர் என்ற முன்னிலை இடமும் கதைக்குள் உருவாக்கப்படுவது பொதுவான சொல்முறை. இந்தக் கதையில் சொல்பவன் யார் என்று தெரிகிறது. ஆனால் முன்னிலையில் இருந்து கேட்பவர் யார் என்பது மறைக்கப்பட்டிருக்கிறது.
கதைசொல்பவனை மேலோட்டமாக ஓரளவு தெரிந்தவராகவும், அவனது கடந்த காலத்திற்குள் இடம்பெற்ற பாத்திரங்களை - அவனது நண்பன் ஆறுவிரல் ஆஜிமீர், அவனது வகுப்புத் தோழி பானு, ஆசிரியரான நெடிய மூஸா சேர், பானுவின் உம்மாவாகிய சபீஹா டீச்சர் என வெளியில் இருக்கும் பாத்திரங்களையும் அவனது குடும்பத்து உறுப்பினர்களான உம்மா, வாப்பா ஆகியோரை அவ்வளவாகத் தெரியாதவர்களாகவும் ஆக்கிக் கொண்டு அவனுடைய கூற்று வழியாகக் கேட்டுக் கொண்டிருக்கும் தொடர்பாடல் உத்தியைப் பின்பற்றிக் கதை நிகழ்வுகளை அடுக்கிக் காட்டுகிறார். அவன் நடத்தும் உரையாடல்களில் ஒருபக்கம் மட்டுமே இருக்கிறது:
”இல்ல கோவமா சொல்லல. ஆனா நீங்க புரிஞ்சிக்கிடனும்”.
”என்னுடைய சிறு பராயம் பற்றியா கேட்கீங்க. அத பத்தி என்ன சொல்றது?”
இதெல்லாம் எப்படி எண்ட ஞாபகத்தில இருக்கு என்கிற ஒங்கட கேள்விக்கு எப்படி பதில் சொல்றது!
ஏன் அமைதியாகிட்டீய!
ஓ…… அந்த பைசா பெறாத சம்பவத்த பத்தி யோசிக்கயலா?
ஏன் பைசாபெறாத சம்பவம்னு சொன்னன்னு கேட்கீங்களா?
என்று கேள்வியை எழுப்பிக் கொண்டு அவன் சொல்லும் பதில்கள் சிலவற்றையும் பார்க்கலாம்:
“வலது காது ஏன் மந்தம் என்றா கேட்கீங்க?
மூஸா சேர் வீதியால கடக்கும் போது பார்த்த அந்த சம்பவத்திற்குப் பொறகும், இப்படித்தான் வாப்பா என்ட வலது கன்னப் பக்கமாக அறைஞ்சதில, வலது காதில ‘ங்கொய்’ என ஒரு இரைச்சல் ஒரு வாரம் பத்துநாள்”
******
“பானுவிற்கு என்ன நடந்தது என்றா கேக்கீங்க?
பெரிசா ஒன்றுமில்லை. அவளுக்கு பதினொரு வயசா இருக்கும் போது அவ வயதுக்கு வந்துடா. அதற்குப் பிறகு அவள் மரம், மதில் ஏறுவது முற்றாக நின்று போனது. வாய்க்கு வாய் பேசுவதும் படிப்படியாக குறைஞ்சி போச்சு. அவளது உம்மாவைப் போல அவளது மார்பகங்களும் பெரிதாகிப் போய் இருந்திச்சி. படிப்படியாக அவள் மீது எனக்கிருந்த ஒரு விதமான கிறுக்குத்தனமும் குறஞ்சி போச்சி. அவள மற்ற பிள்ளைகள போல பார்க்கப் பழகிவிட்டன். அவள் அதிகதிகமாக வெட்கப்பட்டதும் எனக்குப் பிடிக்கல்ல.”
******
என்ன கேட்டீங்க?
இப்ப வாப்பவ பத்திய எண்ணங்களையா கேட்டீங்க! இப்போ கூட வாப்பா பற்றி எண்ணும் போது நாவுக்கடியில வைச்ச வேப்பம்பூ போல அடிமனதில் ஏதோ ஒரு கசப்பு இருக்கத்தான் செய்யிது. இப்போ அதுபற்றி எல்லாம் நான் அதிகம் அலட்டிக் கொள்றதில்ல. அந்தக் கசப்பு பழகிவிட்டது. அதுவுமில்லாம மௌதான அந்த மனுசன பத்தி பேசி என்னாகப் போகிது!? ஆனா அந்த மனுசன பத்தி பேசாம எப்படி முடியும்!?
********
பானு என்னானாளா?
அவளுக்கு என்ன! நல்லா இருக்காள். ஒரு இன்ஜினியர் மாப்புள்ளைய கலியாணம் முடிச்சிக்கிட்டு சந்தோசமா இருக்காள். இப்பதான் ஒரு புள்ள பொறந்திருக்கு. பொம்புள புள்ள. நான் போய் பார்த்துவிட்டு வந்தன். ஆனா பானுதான் மாறி போய்டா. கொஞ்சங் குண்டாகி, சத போட்டு… நான் போனப்ப பேசுறத்துக்கே தயங்கினா. பயந்து நிண்டது போலவும் இருந்தது. சரிதானே, நான் திடீரென போய், பேயப் போல நிண்டா அவ பயப்புடுவாதானே! அதுவுமில்லாம பானு பழைய பானு இல்லயே; நானும் பழைய நானில்லையே.
இந்தக் கதைக்குள் ஆண் தலைமைத்துவக் குடும்பங்களின் சித்திரம் தீட்டப்படுவதைப் பார்க்கிறோம். ஆண் தலைமைகளின் குடும்ப வன்முறை அவர்களின் மனைவிமார்களையும் தன் போக்கில் செயல்பட நினைக்கும் அடுத்த தலைமுறையினரையும் அடக்கி ஒடுக்கிக் கட்டுக்குள் வைத்துப் பிறழ்வு நிலைக்குக் கொண்டுபோய்ச் சேர்க்கிறது. அவனது வாப்பா மட்டுமல்லாது பழைய தலைமுறை ஆட்கள் எல்லோருமே பெண்களையும் சிறுவர்களையும் பேசவிடாது அடித்து ஒடுக்கும் நபர்களாகவும், சிறுவர்கள் செய்யும் செயல்களைப் பகீரங்கப்படுத்திக் குற்றவுணர்வு கொள்ளச் செய்யும் குரூர நடவடிக்கைகள் கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள் எனவும் காட்டுகிறார்.
அவனது வாப்பாவைப் போலவே, பானுவின் அப்பாவும் கோபக்காரர்தான்; கோபம் வந்தால் அடித்துவிடுவதுதான் அவருக்குத் தெரிந்த வழிமுறை. நெடிய மூஸா ஸாரோ ஒரு மாணவன் அச்சத்தில் காற்சட்டைக்குள் ஒண்டுக்குப்போனதைத் திரும்பத் திரும்பச் சொல்லிக் குற்றவுணர்வுக்குள் தள்ளுபவராக இருக்கிறார். இப்படியான சித்திரங்களை உருவாக்கிக் காட்டும் உமையாழ், அவற்றை நகரும் சித்திரங்களாக நகர்த்துகிறார் என்பது கவனிக்க வேண்டிய ஒன்று. சித்திரங்களை நகர்த்துவதைத் தவிர உமையாழின் கதைகளில் பாத்திரங்களின் மீதான ஆசிரியக்கூட்டுப் பண்புருவாக்கச் சொற்கள் எதனையும் நாம் வாசிக்க முடிவதில்லை. கதைசொல்லிக்குள் தன்னைக் கரைத்துக் கொண்டு சித்திரக்காட்சிகளை உருவாக்கி நகர்த்தும் இவ்வுத்தி அண்மைக்காலச் சிறுகதை ஆசிரியர்களிடம் காணக்கிடைக்காத உத்தி.
இவ்விரண்டு கதைகளிலும் தேர்வுசெய்யப்பெற்ற சிறப்பான சொல்முறையைப் பின்பற்றியுள்ள உமையாழ், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய பாவமும் பலியும். கதையை நேர்கோட்டுக் கதைசொல்லலில் எழுதியுள்ளார். இக்கதையின் இயங்குவெளி சௌதி அரேபியா. கதைக்குள் பாத்திரங்களாக அலைபவர்கள் அங்கு உதிரித் தொழில்கள் செய்வதற்காக வங்காளதேசம், பாகிஸ்தான், இந்தியா, இலங்கை, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளிலிருந்து புலம் பெயர்ந்தவர்கள். அவர்களில் முறையான விசாவோடு தங்கியிருப்பவருமுண்டு; விசா இல்லாமல் பாய்ந்து பிடிபட்டுக் கிடப்பவர்களுமுண்டு. ஆண்கள் மட்டுமல்லாது, வீட்டுவேலை செய்வதற்காக கிழக்காசிய நாடுகளிலிருந்து கொண்டுவரப்பட்ட பெண்களும் உண்டு. மனைவியைப் பிரிந்த ஆண்களாகவும், கணவனைப் பிரிந்த பெண்களாகவும் இருக்கும் அவர்களின் பாலியல் தேவைகள் கட்டுப்படுத்தப்பட்டவை. இத்தகைய கட்டுப்படுத்தப்பட்ட பாலியல் விருப்பத்தை நிறைவேற்ற நினைத்துத் தவறிழைத்து மாட்டிக்கொள்ளும் ஒருவனின் கதையே பாவமும் பலியும்.
சொந்த நாட்டில் வறுமை காரணமாகப் புலம்பெயர்ந்து வந்து அரபிகளிடம் – வேலை இடத்தில் படும் துயரங்களையும், குடியிருப்புச் சிக்கல்களையும், விசா மீறல் வாழ்க்கையையும் விவரிக்கும் ஒரு துன்பியல் சித்திரத்திற்குள், பாலியல் வறுமையைத் தனியாகப் பேச நினைத்தபோது கவனிக்கத்தக்க கதையொன்றைத் தருகிறவராக மாறுகிறார். பாலியல் உணர்வும் ஈர்ப்பும் குறிப்பிட்ட வயதிற்குப் பின் ஆணுடலும் பெண்ணுடலும் அடையும் மாற்றங்கள் வழியாகத் தோன்றும் ஓர் உயிரியல் இயற்கை. அதிகமும் எதிர்பால் உடல்களின் மீதான நாட்டமாகவும் அதற்கான வாய்ப்புகள் குறைகின்ற போது தன்பால் உடலின் மீதான ஈர்ப்பாகவும் கிளர்ந்தெழும் பாலியல் விருப்பங்களைச் சமய நம்பிக்கைகள் பாவச்செயல்களாகவே கருதுகின்றன. அப்பாவச் செயல்களை ஒழுங்குபடுத்தும் ஏற்பாடாகத் தோன்றியனவே மண உறவும் குடும்ப அமைப்பும். ஒரு குறிப்பிட்ட சமூகச் சூழலில் செல்லுபடியாகத் தக்க குடும்ப அமைப்பும், திருமணத்திற்குப் பிந்திய பாலியல் உறவுகளும் எல்லாச் சூழலிலும் நடைமுறைப் படுத்தக்கூடியனவாக இல்லை என்பதை மாறிவரும் சமூகச் சூழல்கள் காட்டுகின்றன. இதை ஒத்துக்கொள்ளாத -ஏற்றுக்கொள்ள மறுக்கும் ஷரியாச் சட்டங்களையும் கலாச்சாரக் காவலர்களான முத்தவ்வாக்களின் செயல்களையும் ஏற்றுத்தண்டனை வழங்கும் நடைமுறை மீது விசாரணை செய்யும் விதமான கதைக்குள் இரங்கத் தக்க பாத்திரம் ஒன்றை உருவாக்கி நேர்கோட்டில் கதை சொல்கிறார். மனித உடல்களைத் திணறடிக்கும் காம உணர்வையும் விருப்பத்தையும் தண்டனைகள் வழியாகத் தடுத்து நிறுத்தும் சமயவழிச் சட்டங்களைக் கொண்ட நடைமுறைகள் மீது விமரிசனத்தை முன்வைக்கும் இந்தக் கதையிலும் அவரது தனித்துவமான கடைசிப் பத்தியில் அடைத்துவைக்கப்படும் ரகசியம் என்னும் முறையையே பின்பற்றியுள்ளார்.
பள்ளியில் ஏதோ அறிவிப்புச் செய்வதற்காக ஒலிவாங்கியை ‘ஆன்’ செய்தவர் செருமியது கேட்கிறது. அநேகமாக அந்த அறிவிப்பு இவனுக்கு இன்னும் சற்று நேரத்தில் பொதுமக்கள் முன்னிலையில், நிரூபிக்கப்பட்ட விபச்சாரக் குற்றச்சாட்டுக்காக நிறைவேற்றப்படப் போகிற மரண தண்டனை பற்றியதாக இருக்கலாம்.
என முடியும் அந்தக் கதையின் ஆரம்பம்,
தலையை மூடி இருந்த கனமான கறுத்த ஈரக் கம்பளித் துணியில் இருந்து மூத்திர வாடையை அவன் நுகர்ந்தான். நீரேறிய கம்பளியில் மூத்திர வாடைதான் அடிக்கும். அந்த ஜூன் மாதத்தின் பட்டப் பகலின் மரண வெயிலில், கம்பளியின் வெளிப்புறத்தே இருந்த நீரெல்லாம் நொடியில் ஆவியாகி இருக்க வேண்டும். ஆனாலும் உள்ளே இன்னமும் ஈரலிப்பு இருக்கத்தான் செய்தது. ஒவ்வொரு ஐந்து நிமிடத்துக்கும் ஒருமுறை, தலையில் கோணிப்பையை கௌட்டது போல இருந்த அந்தக் கம்பளியின் மீது தண்ணீரை யாரோ ஊற்றி ஈரப்படுத்திக்கொண்டிருந்தார்கள். இருந்தும், அது போதவில்லை. தகிக்கும் சூரியன் தலைக்கு மேல் ஒரு சாண் இடைவெளியில் வந்து நிற்பது போல இருந்தது. காற்றில் ஈரப்பதனே இல்லாத அந்த தேசத்தில் யாருக்கும் வியர்ப்பதே இல்லை. ஆனாலும், அவன் தனது முள்ளந்தண்டுக்கு சமாந்தரமாய், நெடுங்கோடென தன் முதுகில் வியர்வை கீழ் நோக்கி இறங்குவதை உணர்ந்தான். தலையில் ஊற்றிய நீர், முதுகில் வழிந்தோடி அவன் அணிந்திருந்த நீண்ட வெள்ளை ஆடையின் முதுகுப் பகுதியை அவனது உடலோடு சேர்த்து ஒட்டிற்று. வியர்வையுடன் கலந்த நீரின் பிசுபிசுப்பை போக்க எண்ணி, கைகளை உயர்த்தி ஆடையை உடலில் இருந்து பிரித்துவிட எத்தனித்தான். வெகுநேரமாய் ஆளுயர மரக் கட்டையுடன் சேர்த்து பின்னி இழுத்துக் கட்டப்பட்டிருந்த அவனது கைகளின் மணிக்கட்டுகள் மரத்துப் போயிருந்ததன. காலுக்கடியில், சூடேறி இருந்த பூமி, ஆண்டுகளாய் கனலும் எரிமலையைப் போல வெக்கையை கக்கிக்கொண்டிருந்தது. அவன் அணிந்திருந்த பெரிய றப்பர் அடியைக் கொண்ட சப்பாத்துகள் பூமியின் சூட்டில் உருகுவது போல உணர்ந்தான். நாசியை கூர்ந்து உள்ளிழுத்து றப்பர் உருகும் வாசனையை நுகர முனைந்தான். தலையை மூடி இருந்த கம்பளியால் அவன் புலன்களைச் சூழ்ந்திருந்த இருள், அவன் பார்வையை மட்டும்தான் இருளாக்கி இருந்தது. நாசியைப் போலவே செவியும் கூர்மையாகவே இருந்தது. அவன் நின்ற இடத்தில் இருந்து ‘ஜும்மா’ பிரசங்கத்தை அவனால் தெளிவாகக் கேட்க முடிந்தது. அப்படி என்றால் இன்று வெள்ளிக்கிழமை, நேரம் நண்பகல் 1:00மணி போல இருக்க வேண்டும். கொஞ்சம் முந்தியோ, பிந்தியோ இருக்கலாம். ஏதோ ஒரு பள்ளிவாசலுக்கு முன்னால் உள்ள மணற்தரையில் தான் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக அவன் ஊகித்துக்கொண்டான். ஆண்டவா, ஒரு வாரம் ஓடிப்போயிற்றா!?
ஒருவாரத்திற்கு முன் இந்தோனேசியப் பெண்ணோடு உடல் உறவுகொண்டபோது பிடிபட்டு மரண தண்டனைக்காத்திருக்கும்போது அவனது 23 ஆண்டுக்காலப் புலம்பெயர் வாழ்வின் துயரங்களில் பாலியல் தூண்டலும் இச்சையும் செலுத்திய ஆதிக்கத்தையும் வெளிப்படையாகப் பேசுகிறது.
*****************
தனது பனுவலை வாசிக்கும் ஒருவருக்கு எந்தவொரு காரணம் பற்றியும் புரியாத தன்மை ஏற்பட்டுவிடக் கூடாது என்று நினைப்பவர்கள் ஒருவிதத்தில் வாசகர்களுக்கு வாசிப்பின்பத்தை வழங்க நினைப்பவர்கள். அவர்களின் பனுவல்களில் இருக்கும் சிறப்பு உத்திகளும்கூடத் தான் முன்வைக்க நினைத்த கருத்தை - உறுதிப்பொருளைச் சரியாக அர்த்தப்படுத்த வேண்டும் என்றே நினைப்பார்கள். புதியபுதிய சொல்முறையைக் கையாளும் உமையாழின் கதைகள் வாசகர்களுக்கு வாசிப்பின்பத்தைத் தருவதை முதன்மை நோக்கமாகக் கொண்டிருக்கிறது என்பதை யாரும் மறுத்துவிட முடியாது. அதனைச் சுட்டிக்காட்டுவதோடு, பொருளியல் நெருக்கடி காரணமாகப் புலம்பெயர் வாழ்க்கை வெளிக்குள் நுழையும் இசுலாமியப் பாத்திரங்களே உமையாழின் கதைவெளி மனிதர்கள். காலத்திற்கேற்ற மாற்றங்களை முன்னெடுக்காமல், இறுக்கமான கட்டுப்பாடுகளோடு நகரும் சமயச் சட்டங்களையும் நடைமுறைகளையும் அவர்கள், தங்களின் உடல் தேவைக்கான முன்னுரிமை வழியாக மீறும் காலத்தில் இருக்கிறார்கள் என்பதாகக் காட்டுகிறார். அந்த மீறல்கள், கடவுளின் இடத்திற்குக் காமம்போட்டியிடும் ஒரு விளையாட்டுக்களத்தை விவரிப்பதாக இருக்கிறது.
கருத்துகள்