அனோஜனின் புனைவு உலகம்

சமநிலை பேணும் குடும்ப அமைப்பு 
================================== 
ஆதிக்கம் செய்தல், அடங்கிப்போதல் என்ற இரட்டை நிலைகள் எப்போதும் ஒருபடித்தானவை அல்ல. இவ்விரண்டுக்குமே மாற்று வெளிப்பாடுகள் உண்டு என்பது தனிநபர் உளவியலும் சமூக உளவியலும் பேசும் சொல்லாடல்கள். போலச் செய்யும் மந்திரச்சடங்குகளில் கூட ஆதிக்கத்திற்கெதிரான மந்திரச் சடங்குகள் உண்டு எனப் பேசும் மானிடவியல், அதிகாரத்தின் குறியீட்டைக் கேலிசெய்தும், இழிவுசெய்தும் ஏவல்கள் செய்து திருப்தி அடைவதுண்டு எனப்பேசுகிறது. 

தமிழ்க் குடும்பங்கள், வெளிப்படையான இயங்கு நிலையில் பெரும்பாலும் எல்லா நிலையிலும் சமநிலை பேணாதவை என்றே புரிந்து வைத்துள்ளோம்; பேசிவருகிறோம். தமிழ்/ இந்தியக்குடும்பங்கள் எப்போதும் ஆண் தலைமைத்துவக் குடும்பங்கள். கணவன் என்னும் ஆணின் அதிகாரத்திற்குக் கட்டுப்படும் பெண்கள், அவனிடத்தில் இன்னொரு ஆடவனாக மகனை நிறுத்தி அவனின் அதிகாரத்திற்குக் கட்டுப்படவும் தயாராக இருப்பதாக மரபான கதைகள் பல எழுதப்பட்டுள்ளன. ஜெயகாந்தனின் உன்னைப்போல் ஒருவன் குறுநாவலில் இந்த அம்சம் விரிவான விவாதப்பொருளாக எழுதப்பட்டுள்ளதை வாசித்திருக்கிறேன். 

குடும்ப வெளிக்குள் பேணப்படும் சமநிலையற்ற தன்மை என்பது உண்மையில் புனைவானது. சமூக வெளியில் ஆணின் அதிகாரத்தை ஏற்பதாகப் பாவனை செய்யும் பெண், அந்தரங்க வெளியில் ஆணை ஆதிக்கம் செய்பவளாக இருக்கிறாள். மூன்றாவது நபரின் முன்னாள் தனது கணவனிடம் அடங்கிப்போகும் மனைவிகள், தனித்திருக்கும் நிலையில் காட்டும் உடல் வலிமை ஆணின் உடல் வலிமையைவிடக் கூடுதலானது என்பதைச் சோதித்துப் பார்த்துக்கொள்வார்கள். ஆனால் வெளியில் காட்டிக்கொள்ளமாட்டார்கள். கணவன் -மனைவி சண்டைக்குப் பின்னால் வீட்டு வாசலில் நின்று குய்யோ முறையோவென்று கத்திக் கூச்சல் போடும் பெண்களைப் போல, தோல்வி அடையும் ஆண்கள் அழுது புலம்புவதில்லை. தங்களின் தோல்வியை மறைத்துக்கொள்ள சாராயக்கடைக்குச் சென்று திரும்பி வந்து ஆவேசம் காட்டும் ஆண்களின் வெளிப்பாடு மனைவியிடம் தோற்றதின் வெளிப்பாடுகளே.. 

தனது அதிகாரத்தின் வெளிப்பாடுகளைக் கணவன்மார்கள், மனைவிகளின் மீது செலுத்தும் உடல் சார்ந்த வன்முறைகள் தங்களின் வாரிசுகளின் உளவியலைப் பாதிக்கும் என்ற புரிதல் கூட இல்லாமல், வளர்ந்த பிள்ளைகள் முன்னாலும் அதனைக்காட்டுவார்கள். அதனைப் பார்க்கும் பிள்ளைகளுக்கு -குறிப்பாக ஆண்பிள்ளைகளுக்குத் தந்தையர் மீது கோபமும், அம்மாக்களின் மீது பரிதாபமும் உண்டாகும். அனோஜனின் உதிரம் கதையில் வரும் இளைஞனுக்கு இதற்கு மாறாகத் தாயின் மீது கோபம் உண்டாகிறது; தந்தை மீது விலகல் ஏற்படுகிறது. 
அம்மாவின் கடைசி உதிரப்போக்கு -மாதவிலக்கை மையமிட்டு எழுதப்பட்டுள்ள இக்கதையில் ஆணின் உடல் வலிமை அதிகாரம் செல்லுபடியாகும் சமூக வெளிக்கு மாறாகப் பெண்ணின் வலிமை, ஆதிக்கம் செலுத்தும் அந்தரங்க வெளிமையைச் சமநிலைப் படுத்திக்காட்டுகிறது கதை. பேசப்படாத உள்ளடக்கங்களைப் பேசவேண்டும் என்ற தேடல் உள்ளவர்களுக்குத் தமிழ்க் குடும்பவெளியில் மறைந்து கிடக்கும் ரகசியங்கள் நிறைய இருக்கின்றன. 



கர்ப்பப்பை:ஆண் நோக்கும் அரசியல் ஒவ்வாமையும் 
===============================================
புணர்ச்சி, காமம் என்ற பெயர்ச்சொற்களின் பயன்பாட்டை மையமாக்கி விவாதிக்கும் கதைகள் எப்போதும் இரண்டுவிதமான மனநிலைகள் கொண்டவை.குற்றவுணர்வும் பாவச்செயலும் என்பதான இருநிலைகள் அவை. பெரும்பாலும் குற்றவுணர்வு கூடிய நிகழ்வாகப் புணர்ச்சியையும், அதனை நோக்கித் தூண்டிய காமத்தைப் பாவச்செயலின் வெளிப்பாடாக நினைக்கும் மனப்பாங்கும் ஏராளமான கதைகளில் வாசிக்கக் கிடைக்கின்றன. இவ்விரு சொற்களின் அர்த்தத்தை உருவாக்குவதில் மனிதர்கள் சார்ந்திருக்கும் சமய நம்பிக்கைக்கும் அதன் வழியாக உருவான வாழ்வியல் மதிப்பீடுகளுக்கும் பங்கில்லாமல் விவாதிக்கும் கதையை யாரேனும் எழுதியிருக்கிறார்களா? என்று தெரியவில்லை. 
கர்ப்பப்பை இல்லாத பொம்மையைப் புணர்ந்து கிடைக்கும் இன்பத்தை அனுபவிக்கும் ஓர் இளைஞனுக்கு, அவன் மீது அனுதாபம் கொண்டு தனதுடலைத் தரத்தயாராகும் ஒரு பெண்ணின் தயக்கமின்மையைக் கதை நிகழ்வாக ஆக்கியிருக்கிறார் அனோஜன் பாலகிருஷ்ணன். காதலித்துத் திருமணம் செய்து புணர்ச்சியில் ஈடுபடும் வழமையான காமத்தைத் தாண்டி, உடல்கள் எப்போதும் புணர்ச்சிக்குத் தயாராகவே இருக்கின்றன; அதில் பெண்ணுடல்- ஆணுடல் என்ற பேதங்கள் எல்லாம் இல்லை. கிடைக்கும் தருணங்களில் அவை செயல்பட்டுத் தீர்த்துக் கொள்கின்றன. பின்னர் அச்செயலைக் குற்றமனத்தொடும் நினைக்கின்றன; கிளர்ச்சி நிலையிலும் கடக்கின்றன என்பதான கதை நிகழ்வுகள் பல கதைகளில் எழுதப் பெற்றிருக்கின்றன; அனோஜனும் சில கதைகளில் அப்படியெழுதியிருக்கிறார். எழுதப்படவேண்டிய சங்கதிகள் தான். 
கர்ப்பப்பை என்ற தலைப்பிட்டு எழுதப்பெற்றுள்ள இந்தக் கதையின் பின்னணிக் காலமாக தனிநாட்டுக்கான ஈழப்போரின் கடைசிக் காலமும் விடுதலைப்புலிகளின் படையணிகளுக்கு ஆள்சேர்க்கப்பட்ட முறைகளும் வைக்கப் பட்டுள்ளன. அவள் நேரடியாகப் போராளியாகப் படையணியில் இருந்ததால் காயம்பட்டவள் அல்ல. போராளியாக ஆக்கப்படும் ஆபத்திலிருந்து தப்பிப்பதற்காகப் பால்யவயதில் திருமணம் முடித்துக் கொண்டு முரட்டுக் கணவனின் வன்முறையான உடலுறவால் கர்ப்பமாக்கப்பட்டுக் கர்ப்பத்தைக் கலைக்கும் மருத்துவ வசதிகள் இல்லாததால் முரட்டுத் தனமாகக் குழந்தையை உருவியபோது, கர்ப்பப்பையில் சிதைவு ஏற்படுகிறது. போருக்குப் பிந்தியஅரசின் நல்லெண்ண வேடத்தில் கிடைத்த மருத்துவ உதவியில் அவளது விருப்பத்தோடு நீக்கப்பட்டது அவளது கர்ப்பப்பை. நீக்கப்பட்ட கர்ப்பப்பை அவளது பழைய வாழ்க்கையின் நினைவுகளைத் தூர எறிவதோடு, லண்டன் பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவியாக மாற்றியிருக்கிறது. லண்டனுக்கு அவள் வந்துசேர்ந்த பின்னணி கதையில் இருக்கிறது. கதைசொல்லியாக இருக்கும் நான் - அனோஜன் லண்டன் பல்கலைக் கழகத்திற்குப் படிக்கப்போன விதம் கதையில் இல்லை. [கதையில் இருக்கும் நான் என்னும் கதைசொல்லி அனோஜன் பாலகிருஷ்ணன் தான் என்பதை மறைக்கவில்லை. வல்லினம் ஆசிரியர் கதையொன்று கேட்க, அமலா என்ற அவளது உண்மைப்பெயரிலேயே கதையை எழுதியிருப்பதாகவும் சொல்கிறார். கதை நிகழ்வுகள் உண்மை எனக்காட்டுவதற்காக அனோஜனின் கதைகளில் இந்த உத்தியைத் தொடர்ச்சியாக வாசிக்கமுடிகிறது]. 

கர்ப்பப்பை கொண்ட பெண்ணோடு கொள்ளும் உறவும் கர்ப்பப்பை இல்லாத பொம்மையோடு கொள்ளும் உறவும் சமநிலைப்படுத்தப்படும் நிலைக்குள் கதை நிகழ்த்தப்படாமல், கர்ப்பப்பை இல்லாத பெண்ணின் உடலில் இருக்கும் தழும்புகளும் அதன் வழியாக உருவாகும் பயமுமே அவனது இயலாமைக்கான காரணங்கள் என நினைக்கிறாள். எப்போதும் வன்முறையான உறவே அவளுக்குக் கிடைத்திருக்கிறது என்பதால், இவனையும் வன்முறையான உறவுக்குத் தயார் படுத்துகிறாள். முடியவில்லை எனத் தீர்மானித்து எழுந்தவனைக் கால் தடுக்கி விழச் செய்வதும், கன்னத்தில் கீறுவதும் உதைப்பதுமான செயல்களால் தூண்டப்பட்ட இளைஞன், அவளைத் திருப்திப்படுத்தி அனுப்புவதே ஒரே வழி என்ற முடிவில் மூர்க்கமாகப் புணர்கிறான். வந்த வேலை முடிந்தது என்பதுபோல ஆடைகளை அணிந்து கொண்டு வெளியேறுகிறாள். 

ஆண் நோக்கிலிருந்து எழுதப்பட்டுள்ள இந்தக் கதையின் பின்னணி வைப்புமூலம் விடுதலைப் புலிகள் மீதான விமரிசனம் தூக்கலாக வந்துள்ளது. ஆனால் கதையின் மைய விவாதம் அதுவல்ல. கர்ப்பப்பை இல்லாத பெண்ணோடு கொள்ளும் உடலுறவில் ஆண் உடலும் மனமும் கொள்ளும் நிலைப்பாடுகளே விவாதமாக வேண்டியன. ஈடுபாடான உறவும் திருப்தி ஏற்படுத்திவிடத் துடிக்கும் ஆண்மையும் சந்திக்கும் பின்னடைவுக்கான காரணங்கள் அந்த நேரத்து மனநிலையா? கடந்த காலத்தில் இருவரும் சந்தித்த போர்ச்சூழலா? என்பது கதைக்குள் இல்லை. 

போர்ச்சூழல் பின்னணி பெண்ணுக்கு மட்டுமே தரப்பட்டுள்ளது. அவளோடு உறவு கொள்ளும் ஆணின் கடந்தகாலம் கதையில் இல்லை. அதன் காரணமாக இந்தக் கதை முழுக்கவும் ஆண்நோக்கில் காமத்தைச் சொல்லும் கதையாக எழுதப் பெற்றுள்ளது எனச் சொல்லலாம். அத்தோடு விடுதலைப்போராட்டத்தின் மீதான ஒவ்வாமை கொண்ட ஒருவரின் அரசியல் மனத்தையும் கதைக்குள் வாசிக்கமுடிகிறது என்பதும் சொல்லப்படவேண்டிய ஒன்று. 
கதைக்கான இணைப்பு:


பின்குறிப்பு
--------------------
நான்காண்டுகளுக்கு முன்னால் இலங்கை போனபோது தென்னிலங்கையில் ஒரு மலையடிவாரத்தில் வைத்து ஒன்றிரண்டு வாக்கியங்கள் பேசியிருக்கிறேன். அப்போது அவர், என்னோடு வந்திருந்த எழுத்தாளர் இமையத்துடன் பேசுவதில் ஆர்வமாக இருந்தார்.மட்டக்களப்பில் கவி.ரியாஸ் குரானாவுடன் வந்திருந்தார். ஆனால் பேசிக்கொள்ளவில்லை. அப்போதே அவரது சில கதைகள் வாசித்திருந்தேன். ஒரு எழுத்தாளரின் சிறுகதைத் தொகுதியை மொத்தமாக வாசிக்க வேண்டும் என்ற விருப்பும் இப்போதெல்லாம் தோன்றுவதே இல்லை. அவ்வப்போது இதழ்களில் வரும்போது வாசிக்கத்தொடங்கி ஒரே மூச்சில் வாசித்துவிட்டால் முடிந்து விடும். பாதியில் நின்றால் நின்றதுதான். இரண்டு மூன்று ஆண்டுகளில் அனோஜனின் கதைகள் இணைய இதழ்களிலும் சில அச்சு இதழ்களிலும் வாசிக்கக் கிடைத்துள்ளன. வாசிக்கத் தொடங்கினால் முடித்துவிட வேண்டும் என்ற ஆர்வத்தை உண்டாக்கும் கதைகளாகவே அவரது கதைகள் இருக்கின்றன. பெரும்பாலும் ஆண் - பெண் உறவுகளில் காமம் சார்ந்த நம்பிக்கைகள் மாறிக்கொண்டிருப்பதைப் பேசுபொருளாக்கும் அவரது கதைகள் தமிழ்ப் புனைவு வெளியில் புதிய பரப்புக்குள் நுழைகின்றன. தயங்காமல் எழுதுவதின் மூலம் விவாதங்களை முன்வைக்கிறார். இங்கே அண்மையில் மலேசியாவிலிருந்து வரும் வல்லினம்.காமில் கர்ப்பப்பை என்றொரு கதையை எழுதியிருந்தார். அண்மையில் தமிழகத்திலிருந்து வரும் யாவரும் .காமில் உதிரம் என்றொரு கதையை எழுதியிருக்கிறார். அவ்விரு கதைகளையும் குறித்து எனது முகநூல் பதிவுகளை இங்கே தருகிறேன். கவனம் பெறும் கதைகளை எழுதும் அனோஜனின் கதைகள் வாசிக்கப்பட வேண்டியன.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்