வாசித்த கதைகளும் காரணங்களும்

வாசிப்பின் காரணங்கள்

கண்ணில் படும் எல்லாக்கதைகளையும் வாசிப்பதுமில்லை; வாசித்த கதைகள் எல்லாவற்றையும் விவாதிப்பதும் இல்லை. சில கதைகளை வாசித்தபின் எழுதத்தோன்றும். எழுதிய குறிப்புகள் முகநூல் ஓட்டத்தில் காணாமல் போயிருக்கின்றன. சிலவற்றைத் தொகுக்கமுடிந்துள்ளது. முகநூலில் நான் எழுதிய குறிப்புகளை இந்தப் பக்கத்தில் படிக்கலாம்.சில கதைகளைச் சொல்முறைக்காகப் பேசியிருப்பேன்; சில கதைகளைப் பாத்திர முன்வைப்புக்காகப் பேசியிருக்கலாம்; சில கதைகளை அவை எழுப்பும் உணர்வுநிலைக்காகப் பேசியிருப்பேன். சில கதைகளின் விவரிப்பு நுட்பங்களுக்காகவும் பிடித்திருக்கும். 
வாசிக்கப்பட்ட கதைகள்
------------------------------------------------
ஜெயமோகனின் ஒரு கோப்பை காபி
இமையத்தின் தாலிமேல சத்தியம்
வண்ணதாசனின் அதற்குமேல்
இரா,முருகவேளின் சர்ரியலிச இரவு
வா.மு.கோமுவின் ஒரு காதல் கதை
கலாப்ரியாவின் தனுக்கோடி

புண்ணிய பூமிகளின் ஓரடையாளம் : ஜெயமோகனின் ஒரு கோப்பை காபி

மேற்கத்திய வாழ்முறைக்குள் நுழைய மறுக்கும் இந்திய மனம் என்பது அவர் தனது பல கதைகளில் கமுக்கமாக - உள்ளொடுங்கிய பொருண்மையாக விவாதித்த ஒன்று. ஜெயமோகனுக்கு முன்னாள் இதைத் தீவரமாகச் சில சிறுகதைகளிலும் நாவல்களிலும் ஜெயகாந்தன் எழுதியுள்ளார். அவரிடம் ஆரம்பித்தில் தயக்கமில்லாமல் மேற்கத்திய ஆதரவு இருந்தது. ஆனால் பின்னர் எழுதியவற்றில் இந்தியக் குடும்ப அமைப்பின்மீதான ஆதரவு மனநிலைக்கு நகர்ந்தார். ஆனால் ஜெயமோகன் எப்போதும் இந்திய ஆதரவு நிலைப்பாடுகொண்டவர். அதை வெளிப்படுத்துவதில் தயக்கம் காட்டாதவர்.

அமெரிக்க நகரமொன்றை நிகழ்வெளியாகக் கொண்ட “ ஒரு கோப்பை காபி” கதையை ஆனந்தவிகடனின் வாசகர்களுக்காக வெளிப்படையான கதையாக எழுதியுள்ளார். பெண்கள் - அதுவும் முந்திய தலைமுறைப் பெண்கள் கூடத் தங்களுக்கான புதிய வெளியில் குடும்பப் பரப்பிலிருந்து விலகிவிடத் தயாராகிவிடுகின்றனர். ஆனால் ஆண்கள்?
குற்றவுணர்வு துரத்தும் ஆண்கள்- மனம் குமைந்துகொண்டே இருக்கின்றனர். அந்த மனம்தான் ஏதாவதொரு காரணத்தைக் காட்டி இந்தியாவிற்குத் திரும்பிவிடத்துடிக்கின்றது போலும். திரும்பத் திரும்பத் தனது முன்னாள் மனைவியைப் பார்க்க விரும்பும் அவன், அவளின் அறிவைப் பாராட்டுவதற்காக அல்ல; உணர்ச்சியின் வழி செயல்படும் தனது குற்றமனத்திற்கான பாவமன்னிப்பைத் திரும்பத் திரும்பப் பெற்றுக்கொள்வதற்காகவே. அவனது உணர்வுவழிப் பட்ட முடிவுகள் ஒருதடவையில் நின்றுபோவதல்ல. ஒரு காபியில் கிடைக்காத நிதானமும் தெளிவும் இரண்டாவதாகப் பருகிய இன்னொரு கோப்பைக்காபியிலும் கிடைக்கப்போவதில்லைதான். ஆனால் தயக்கமின்றிக் கிடைக்கும் கோப்பைகளைப் பருகிக்கொண்டே காபி இந்தியப் பானமல்ல என்று பேசிக்கொண்டிருப்பவன் அவன் எனவும் சொல்லிவிடுகிறார்.

“ இது இந்திய நவீனப் பண்பாட்டின் சரியான அடையாளம். காபிப்பொடி ஐரோப்பியர் கொண்டுவந்தது. சிகிரித்தூள் நாங்கள் கண்டுபிடித்தது. பாலும் சீனியும் போட்டுக் கீர்போல அதைச் செய்வது எங்கள் தொன்மையான பாரம்பர்யம்” என்றேன். 
“ நாங்கள் அந்த மூன்று அம்சங்களின் வெற்றிகரமான கலவை. தெரியுமா?”

இந்த உரையாடலின் உள்ளுறையாக இருக்கும் கதையை நிகழ்வுகளாக ஆக்க உருவாக்கப்பெற்ற பாத்திரங்களும் அவர்களின் செயல்பாடுகளும் கிழக்கு - மேற்கின் முரண்பாடுகளை விவாதிக்கின்றன. மார்த்தாவிடம் மன்னிப்பையும் ஆலோசனைகளையும் தேடிச்செல்லும் மகாவாகிய முதல் கணவனின் குற்றவுணர்வுதான் கதை. இவன் இந்தியாவை விட்டுப்போய் அமெரிக்க நகரங்களில் இந்திய வாழ்க்கையைத் தேடும் நபர். இப்படியான நபர்களே இந்தியாவைப் புண்ணியபூமி என்று கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள். தெளிவின்மையே புண்ணியபூமிகளின் அடையாளம்போலும். ஜெயமோகன் அவர்களைச் சரியாக அடையாளம் காட்டியிருப்பதாகவே இந்தக் கதை விரிந்துள்ளது.

வண்ணதாசனின் லாவகங்கள்

இந்தக் கதையை-அதற்கு மேல்- என்ற தலைப்புடன் ஆனந்தவிகடனில் வெளியாகியுள்ள இந்தக் கதையை வண்ணதாசன் மட்டுமே எழுதமுடியும்.

குறிப்பான வெளியைச் சுட்டினாலும் பொதுநிலைப்பட்ட வெளியாகிவிடக்கூடிய் கதைவெளிகளில் குறைவான நிகழ்வுகளுக்குள் மனிதர்களை நிறுத்தி அவர்களின் மனவோட்டங்களின் வண்ணங்களைக் கோடுகளாக்கித் தரும் இந்த லாவகத்திற்காக மட்டுமாகச் சொல்லவில்லை. 
அலையடிக்காத குளத்துக்குள் ஓடிப்பிடித்து விளையாடும் மீன்களின் சுழற்சிக்கேற்ப மேற்பரப்பி அசையும் அல்லிமலர்களின் அசைவுகளைப் போலக் கதைக்குள் வரும் ஒவ்வொருவரும் முழுமையாக அசைந்துகொண்டிருப்பார்கள். சுலோசனாவை மையமிட்டு, ராமராஜன், காந்திமதி, அவர்களது குழந்தை ஆகியோரின் அசைவுகள் ஒரு வட்டப்பரப்பு என்றால், அந்த நாய்க்குட்டியைச் சுலோசனாவின் திருமணப்பரிசாகத் தந்த பூபதியின் இன்மையோடு சேர்ந்து நாய்க்குட்டியும் இல்லாமல் போய்விடுமோ எனத் தவிக்கும் சுலோசனாவின் தவிப்பு இன்னொரு வட்டப்பரப்பு.

இந்த வட்டப்பரப்புகளைக் குறுக்கும் நெடுக்குமாகச் சிதைத்துத் தாவிப் பறக்கும் நீர்ப்பூச்சிகளைப் போல சுலோவின் கணவன் பரி, ஆட்டோக்காரர் ஆறுச்சாமி, டீக்கடைப் பையன், டூவீலர் மெக்கானிக், அந்த ஒர்க்‌ஷாப்பில் எனப் பாத்திரங்கள். .ஒரு சிறுகதையின் குறைந்த நிகழ்வுகளுக்குள் வரவேண்டிய பாத்திரங்கள் ஒவ்வொருவருக்கும் சரியான விகிதத்தில் அடையாளம் உண்டாக்கும் லாவகமும் அவருக்குத் தான் கைவரப்பெற்றதாக இருக்கிறது.

தடுமாறிச் சாய்ந்த சுலோசனாவின் முதுகில் பதித்துவிட்ட கைவிரல்களின் ஸ்பரிசம் உண்டாக்கியுள்ள மனவோட்டம், சுலோசனா என்ற பெயரை, காந்திமதி என்ற பெயர்போல இன்னொரு பெயர் என்பதாக இனித் தாண்டி கடக்க முடியாது என்று சொல்லவும் வண்ணதாசனுக்குத் தான் தெரியும்.

நம்பிக்கையின் மீதான அங்கதம் : இரா.முருகவேளின் சர்ரியலிச இரவு 
================================================================ 
புனைவல்லாத புனைவு என்றொரு எழுத்துமுறையை 1990 களில் அச்சிதழாக வந்த ஊடகம் இதழ் வெளியிட்டது. பெரும்பாலும் நாலைந்துபேரின் பங்களிப்பாக அமையும் அந்தப் புனைவு அந்த நேரத்தில் பரபரப்பாகக் கவனிக்கப்பட்டது. அதிகமாக அந்தவகை எழுத்துக்கே வாசகர்களின் கடிதங்கள் வந்தன. ஊடகத்தின் வெளியீட்டு முகவரி எனது வீடு என்பதால் நான் தான் அவற்றிற்கு முதல் வாசகன். 
இல்லாத - பார்க்காத பிரெஞ்சுப் புது அலை சினிமாவுக்கு எழுதப்பெற்ற விமரிசனம், ஐரோப்பாவிலிருந்து தேசாந்திரியாகத் தமிழ்நாட்டுக்கு விசாவைத் தொலைத்துவிட்டுச் செங்கல்பட்டுக்கருகில் தொழுநோயாளிகள் விடுதியில் ங்கியிருந்த பின் நவீனத்துவ - அனார்க்கிஸ்ட்- சிந்தனையாளன் நேர்காணல், பிசாசு எழுதிய தமிழ் நவீனக் கவிதைகள் வரிசையில் எழுதப்பெற்ற இன்னொரு புனைவு காவல் துறையினரால் துரத்தப்படும் நபரின் நினைவுக்குறிப்புகள். 

இரா .முருகவேளின் ஒரு சர்ரியலிச இரவு கதையைப் படித்தபோது அந்தக் கட்டுரை நினைவுக்கு வந்தது. அந்தக் கட்டுரையை அச்சிட்ட ஊடகம் இதழைத் தேடிக் கண்டுபிடிக்க முடியவில்லை. கால்நூற்றாண்டுக்கும் மேலான பழைய இதழ்களையெல்லாம் கட்டிப் பெட்டியில் அடைத்துவிட்ட நிலையில் தூசி தட்டும் பொறுமை இல்லை. ஆனால் தலைப்பு மட்டும் மறக்கவில்லை. ..
தன்னிலை காவல் தலை. அதன் ஆங்கிலத்தலைப்பு: COP IN THE HEAD 


வா.மு.கோமுவின் ஒரு காதல் கதை

ஓடும் ரயிலில் தான் சந்தித்துக் கொண்டது. எது பிடித்திருக்கிறது என்று சொல்லக் கூடத் தோன்றியதில்லை. உடல் சார்ந்த அழகு பற்றிய பிரமைகள் எதுவும் இல்லை. பார்க்கின்ற வேலைகள் எதையும் மறைக்கின்ற ஏமாற்றும் எண்ணங்களும் இல்லை. மனம் தளர்ந்து உடல் களைப்பைப் போக்க நினைத்து விரும்பிக் கேட்டபோது தலை சாய்க்க மடி தந்தவள்.

தனித்திருந்த கணத்தில் முத்தமிட்டுக் கொள்ளும்போது புறச்சூழல் எவை குறித்தும் நினைத்துப் பார்க்காத ஆண் மனமும் பெண் மனமும் காதலாக மாறும்போது எல்லாவற்றையும் பற்றி நினைத்துப் பார்க்கத் தொடங்கி விடுகின்றன. இந்தியச் சமூகத்தில் இரு மனங்களின் இணைவு மட்டுமே காதல் செய்யவும் கல்யாணம் கட்டிக் கொள்ளப் போதுமானவை அல்லவே. "நீங்க வேற; நாங்க வேற" என்ற பேச்சின் தொடக்கம் உண்டாக்கும் அச்சமும் பயமும் ஒருவர் மீது கவிழ்ந்துவிட்டால் அக்காதல் தோல்வியில் முடிவதைத் தவிர வேறாக மாற வாய்ப்பே இல்லை.

நீயில்லாமல் நான் வாழ முடியாது என்று ஆண் -மிதுன் பிடிவாதம் செய்யும்போது ஸ்டெல்லா டீச்சரின் பதில் என்னவாக இருக்கும்? தேவாலயத்தில் பாவ மன்னிப்புக் கேட்டு வாழ்க்கையைத் தொடரலாம்தான. ஆனால் அங்கே ரட்சகர் மட்டுமே இல்லையே. ரட்சகரிடம் செல்லவிடாமல் வழி மறிக்கும் சமூகமும் மத அமைப்புகளும் உள்ளனவே. முடிவு எடுக்க முடியாத ஸ்டெல்லா தற்கொலை செய்து கொண்டாள் என்று வா.மு.கோமு எழுதவில்லை. அவள் சாத்திக்கொண்டு திறக்காமல் இருக்கும் சமையல்கட்டு பல்லி கொட்டிய 'உச்' சுக் கொட்டல் அதை உணர்த்துகிறது.

மிகை உணர்ச்சிகள் வெளிப்படாத காதல் கதை. தற்கொலைகளைத் தூண்டும் பாகுபாடுகள் கொண்ட சமூக இருப்பின் மீதான விமரிசனம். இந்த மாத உயிர்மையில் வாசித்துப் பார்க்கலாம்.

கலாப்ரியாவின் தனுக்கோடி:

கடந்த காலத்தை - கடந்த காலத்து மனிதர்களை - அவர்களின் நம்பிக்கைகளை - நிகழ்காலத்துக்கு இழுத்துவந்து இணைக்கும்போது நவீன சிறுகதை உருவாகிவிடும். அந்த இணைப்பு நிகழாமல் போகும் நிலையில் அக்கதை அமானுஷ்யத்தை முன்வைத்த தொல்கதையாக நின்றுபோகும் வாய்ப்பே அதிகம். கவி. கலாப்ரியா ஆனந்தவிகடனில் எழுதியுள்ள ”தனுக்கோடி”யை
நவீன கதையெனச் சொல்வதற்குத் தயக்கமாகவே இருக்கிறது. 

தங்கள் வாழ்க்கையில் இயல்பாக நடக்கும் தற்செயல் விநோதங்களுக்குக் காரணம் தெரியாத சாதாரண மனிதர்கள் அதன் பின்னணியில் யாரோ இருப்பதாக நம்புவது சமயநம்பிக்கைகளின் மூன்றாவது பரிமாணம். அதனைச் சொல்லும் கதைகள் மந்திரவாதிகள், பூசாரிகள், கோடாங்கிகள், குறிசொல்லிகள் போன்ற அமானுஷ்ய மனிதர்களின் பிறழ்நிலையைப் புனைவாக மாற்றுவதில் தீவிரம் காட்டுவார்கள். அத்தகைய மனிதர்கள் சாதாரணமனிதர்களிடம் ஏற்படுத்துவது அச்சம். அச்சத்தின் விளிம்புக்குப் போகிறவர்களுக்குச் சிலநேரங்களில் நல்லதும் கெட்டதும் நடப்பதாக நம்புவார்கள். 
தனுக்கோடியின் வருகையும் வாக்கும் உண்டாக்கும் அமானுஷ்யத்திற்குப் பின் அவளின் பூப்படையாத உடலின் ரகசியங்கள் இருந்தன என்பதை எழுதிக்காட்டி, ஒரு பெருமழை நாளின் வீர்யத்தில் அவளது உடல் பூப்படைந்தது; அமானுஷ்யமும் தொலைந்தது என எழுதிக்காட்டியுள்ளார் கலாப்ரியா.
கதைக்கான களமும் முன்வைக்கும் தனுக்கோடியும் மலையும் மலைசார்ந்த குறிஞ்சிநிலத்துக்காரியாக இருப்பது அவரது கவிதைகளில் காணப்படும் திணையடையாளத்தின் நீட்சி. புனைகதைகளிலும் தொடருங்கள் கவியே!


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவீனத்துவமும் பாரதியும்

நாயக்கர் காலம். இயல் . 6 சாதிகளும் சமூக அசைவியக்கங்கமும்

ப்ளு ஸ்டார் : கிரிக்கெட்டும் அரசியலும்