தில்லையின் விடாய்: உடலரசியலின் வெளிப்பாடுகள்

 


அவன்

தூங்கிக் கொண்டிருக்கும்

ஒவ்வொரு நொடிக்கும்

என் நெஞ்சில் புடைத்து எழுகின்ற

வலியைப் பொத்திக்கொண்டு

நான் உயிர்க்கின்றேன்

 

பெருமூச்சை அடக்கி

என்னைக் குடைகின்ற அவன்

என்னில் அப்பி உருமும்

ஊத்தையைப் போல்

என் மனது முழுதும்

ஒட்டிப் புடைக்கிறான்

 

என்ன செய்ய?

 

அவனை மொத்தி

தேனியாய் வானத்தை

என் அருகில் அமர்த்த

நான் பள்ளி கொண்டேன்

 

பின்

விடுபட்டுப் போன

நாட்களின் கால நீட்சியில்

புடைப்புகளிலிருந்து

தொண்ணூற்றி எட்டுச் சொச்சம்

வால்வெள்ளிகளை நான்

எண்ணிக்கொண்டிருக்கிறேன்.(- 78)

 

மூடுண்டறை எனத் தலைப்பிட்டு எழுதப்பெற்றுள்ள இக்கவிதையின் பின்பகுதி ஓர் அறைக்குள் இருக்கும் பெண்ணின் இருப்பைச் சொல்கிறது.  இருப்பின் சூழலைச் சொல்கிறது. அந்தச் சூழல் தனித்திருக்கும் சூழல் என்கிறது. தனித்திருக்கும் இந்தக் காலத்தின் தவிப்பின் வெளிப்பாடாக வால்வெள்ளிகளை எண்ணிக்கொண்டிருக்கும் வினையைச் சொல்கிறது. எண்ணிக்கொண்டிருக்கும் இந்தக் காலம் ஒருநாள் இருநாள் அல்ல என்பதைக் காட்ட பல நாட்களின் நீட்சியில் தொண்ணூற்று எட்டுச் சொச்சம் வால்வெள்ளிகள் எனக் கணக்கிட்டுக் காட்டுகிறது. தனித்திருக்கும் இந்தக் காலத்தில் அந்தப் பெண்ணின் நினைவுகளுக்குள் ஓடும் காட்சிச்சித்திரங்களைக் கவிதையின் முன் பகுதி விவரிக்கிறது. அந்த விவரிப்பு கலவியின் காட்சிகள். பெண்ணும் ஆணும் தங்கள் உடல்களைப் பரிமாறிக்கொள்ளும் வேட்கையின் அசைவுகள். வேட்கையின்போதும் கலவியின்போதும் எழும்பித் தளும்பும் உணர்வுகளையும் அதன் முடிவில் தோன்றும் இருபால் உடல்களின்  தளர்வையும்  அதன் பின் தோன்றும் மனக் கூச்சங்களையும் விவரிக்கிறது.

பெண்நிலைவாதம் அல்லது பெண்ணியம் ஒரு கருத்தியல் திரட்சியாக உருமாறிய பிறகு தன்னுணர்வு பெற்ற பெண்ணெழுத்துகள் உலக மொழிகள் பலவற்றில் வாசிக்கக் கிடைத்தன. பெண்கள் தங்களின் இருப்பை இலக்கியப்பிரதிகளில் வெளிப்படுத்துவதற்கு முன்பே வேலைத்தளங்களில் வெளிப்படுத்தினார்கள். ஆண்கள் செய்யும் வேலைகளைப் பெண்களாலும் செய்ய முடியும் எனக் காட்டினார்கள். பின்னர் குடும்ப எல்லைக்குள் இருக்கும் வேலைப்பிரிவினைகளை ஆண்களுக்குப் பகிர்ந்தளிக்கும் பணிகளைத் தொடங்கினார்கள். பொதுத்தள அதிகாரத்துவ நிறுவனங்களில் தங்களின் வருகையை உறுதிசெய்து அதிகாரிகளாகவும் அமைச்சுகளாகவும் ஆனார்கள். இந்த வளர்ச்சிப்போக்கில் -பெண்களின் மாற்றத்தின் ஊடாட்டத்தில் - இலக்கியப்பனுவல்களும் இணைந்துகொண்டன. இணைந்துகொண்ட இலக்கியப்பனுவல்களில் ஆண்களின் பனுவல்களும் இருந்தன.

பெண்களை ஆண்களுக்குக் கீழானவர்களாகப் பார்க்கும் பார்வை மாறவேண்டும்; அவர்களை இன்னொரு பாலினமாகப் பார்ப்பதோடு, அவரவர்க்கான ஆசைகளும் தனித்துவ அடையாளங்களும் படைப்பாற்றலும் கொண்ட மனித உயிரியாகவும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என முன்மொழிந்த ஆண்கள் எழுதிய பெண்சார் பனுவல்கள் எல்லா மொழிகளிலும் கிடைக்கின்றன. வேலைத்தளங்கள் தொடங்கி அரசியல் உள்ளிட்ட பொதுவெளிகளிலும் குடும்பம் என்னும் தனிநபர்சார்ந்த வெளிகளிலும் பெண்களுக்காகப் பரிந்து பேசிய ஆண் பனுவல்கள் நுழைய முடியாத இன்னொரு வெளியாக இருந்தது பெண்களின் உடல்கள். பெண்களின் உடல்மொழியையும் அதன் இருப்பையும்  தேவைகளையும் வெளிப்படும் விதத்தையும் ஆண்கள் பெண் நோக்கில் எழுத முடியாதவர்களாகத் தோற்றுக்கொண்டிருந்தார்கள்; இருக்கிறார்கள்.

அதே நேரம் பெண்களின் உடல்களை ஆண் நோக்கில் எழுதிக் குவித்த கவிதைகளும் புனைவுகளும் ஏராளமாகக் கிடைக்கின்றன. ஆற்றுப்படை நூல்கள் கிடைக்கும் கேசாதிபாதம் அல்லது பாதாதிகேசம் எல்லாம் பெண்ணுடலை ஆண் நோக்கில் எழுதிக் காட்டிய பனுவல்களே. அதன் நீட்சிகளைச் சிற்றிலக்கியங்களின் பல வகைகள் விதம் விதமாக எழுதிக்காட்டின. பெண்ணுடலின் ரகசியங்களையும் திறன்களையும் பேசாமல் புறக் கட்டுமானங்களைப் புனைவு மொழியில் வைத்துக் காட்டிய அப்பனுவல்கள் அனைத்தும் ஆண்களின் வாசிப்பானவை. பெண் உடலை இயற்கை மற்றும் செயற்கைப் பொருள்களோடு உவமானமாகவும் உருவகமாகவும் காட்டி ஆண்களின் கற்பனைக்கு விருந்து வைத்த பனுவல்கள்.  இவ்வகையான பனுவல்கள் பல நேரங்களில் பெண்களைக் குற்றவுணர்வுக்குள்ளும் சில நேரங்களில் பெருமிதங்களுக்குள்ளும் நிறுத்தின.

இந்தப் போக்கை மறுதலித்து பெண்ணுடலைப் பெண்களே பேசுதல் என்ற போக்கை முன்மொழிந்து இலக்கியப்பனுவல்களை உருவாக்கியது பெண்நிலைவாதத்தின் மூன்றாம் அலை. தீவிரவாதப் பெண்ணியம் என்னும் மிரட்டும் சொற்களால் கல்விப்புலத்தில் சொல்லப்படும் அந்தப் போக்கு ஏற்ற இறக்கங்கள் கொண்ட ஒன்று. எல்லா நிலையிலும் சமநிலையை முன்வைத்துப் பேசியது. ஆனால் இலக்கியப்பனுவல்களில் உடலரசியலை முன்வைத்த ஒன்றாக அடையாளப்பட்டது.  

 ஆண்கள் நேர்ச்சொற்களாகச் சொல்லாமல் உவமைகளாகவும் உருவகங்களாகவும் படிமங்களாகவும் சொல்லப்பட்ட பெண் உடலின் அந்தரங்க உறுப்புகளைப் பனுவல்களில் எழுதினார்கள். கலவியில் – ஆண் பெண் சேர்க்கையில் முக்கிய வினையாற்றும் யோனி, முலை போன்ற சொற்களைப் பாவிப்பதோடு, அவற்றின் இயக்கத்தையும் அதனால் உண்டாகும் திளைப்பையும் அதற்குப் பிந்திய வினைகளான கர்ப்பம் சுமத்தல், பிள்ளைப்பேறு, அதன் வலி அல்லது இன்பம் முதலானவற்றையும் பெண்கள் எழுதிய பனுவல்கள் முன்வைத்தன. அதன் வழியாக பெண்ணுடல் சார்ந்த புதிய அழகியலும் கவிதைப் போக்கும் நவீனக் கவிதைப்போக்குகளுள் ஒன்றாக மாறின. இந்தப் போக்கில் குறிப்பிடத்தக்க கவிதைகளைத் தமிழில் குட்டிரேவதி, லீனா மணிமேகலை, சுகிர்த்ராணி போன்றவர்கள் தந்திருக்கிறார்கள். முழுமையாக அவ்வகைக் கவிதைகளை எழுதிய கவிகள் என அடையாளப்படுத்த முடியவில்லை  அப்படி எழுதப்பெற்ற கவிதைகளைத் தமிழ்க் கவிதை வாசகர்களும் திறனாய்வாளர்கள் கொஞ்சம் தயக்கத்தோடுதான் அணுகினார்கள். அவர்களுக்குப் பின் பெண்ணுடலை அரசியல் பனுவலாக வைத்து எழுதப்பெற்ற கவிதைத் தொகுப்பாக இந்தத் தொகுப்பு – தில்லையின் விடாய் என்னும் கவிதைத் தொகுப்பு வாசிக்கக் கிடைத்துள்ளது.

எண்ணிக்கையில் 50 கவிதைகளுக்கும் குறைவாக இருக்கும் இத்தொகுப்பில் பாதிக்கும் மேலான கவிதைகள் பெண்களின் உடலை – அதன் இருப்பை- அதன் பாலியல் தேவையை – வலியை, குற்றவுணர்வாக நினைக்கும் ஆண்களின் மனநிலையை உரிப்பொருளாகவும் விவாதிக்கும் சொல்லாடல்களாகவும் மாற்றியுள்ளது. சில கவிதைகளை வாசிப்புக்காக இங்கே தரலாம்

 

என் உடலின்

ஒவ்வொரு அங்கங்களும்

செட்டை கட்டிப்பறக்கின்றன.

கடவுளின் சிருஷ்டிப்புக்களை

மிகச்சிறிய பொம்மைகளின்

வடிவமைப்பிலிருந்து

பிய்த்துப் பிய்த்து எறிகின்றேன்.

பிரம்மா பிச்சைப் பாத்திரத்தை

என்னிடம் நீட்டி

என் கண்களையும் மூளையையும்

இரந்து கேட்டாள்.

பொம்மைகளைப் படைக்கத்

தெரியாத சிறு ஐந்தை

என் வீணையின்

மெல்லிசையில் வருடினேன்.

இசையை முகர்ந்த அவன்

வெண் தாமரையில் புணர்தலை

பேரோசையில் கக்கினான் .

எண்ணற்ற சிலிர்ப்புக்கள்

என்னில் தோன்றி

பொம்மையை உருவாக்க முடியாத

உன்னை

சிற்பியே எனப்போற்றும்

ஓர் அற்ப ப்பிறவியின்

புலம்பலை

ஒரு மரணத்தின்

விளிம்பிலிருந்து

நான் பார்க்கின்றேன்.

படைப்பு என்பதென்ன?

சதையும் பிண்டமுமா?

விந்தும் சுக்கிலமுமா?   ===/14

 

கலட்டிக்காய்

 

புரிந்துகொள்ள

முடியாததின் மீது

உயிர் உறைவதும்

கரைவதுமாய்

ஒடுங்கி ஒடுங்கி

நீளமறுக்கிறது மனது

மிகமிக இரகசியமான

உணர்வுகளின் மீது

சுவாரசியமான நிறங்கள்

தோன்றுவதும்

மறைவதுமாய்

கழிகிறது பொழுது

 

சில வருடங்களுக்கு

முன்பான

காலங்களில் ஒரு நாள்

அவாவித் தழுவிய

இருளின்

கைகள்

முன்நகர்ந்து

முலைகளை அளைந்தும்

யோனியைப் பொருதியும்

நீ கன்னியா?

 

மீண்டும் மீண்டுமாய்

வருடங்கள் கடந்தும்

நற்பண்புள்ள உயர் கல்விகற்ற

உயர்பதவி வகிக்கும்

அழகிய சிவந்த படித்த மணமகன்

புதிய புதிய

மீண்டும் மீண்டுமாய்

எப்படியிருக்கிறாய்?

மழை பெய்து ஓய்ந்த

ஒரு நடு இரவில்

மீண்டும் புணர்ந்து

மெய்சிலிர்த்த

வாழ்வின் இருத்தலை

தெரு ஓரத்திலிருக்கும்

இலைகளற்ற மரம்

நினைவுகொள்ளச்

செய்கிறது.

==========57,58

தப்பிலிக்கவிதை

 

எனக்கு முன்னே

என்னுடைய அம்மா

அவளின் அம்மா

---------------------

------------------------

எல்லாம் தோற்றுப்போன

தீயிலிருந்து

நான் எழுந்திருக்கின்றேன்

 

சாக்கடை நீராய்

உறைந்து கரைந்துபோன

தாயின் மகள் நான்.

 

“ அடுப்படி இறவானங்களில்”

சொருகி இருந்த

வரலாறுகளும்,

சேலைத்தலைப்புகளில்

முடிந்திருந்த சரித்திரங்களும்

எனக்குச் சீருடை தந்தன

 

எனது தாயின் குரல்வளையை

அழுத்தி இறுக்கிய

கோபமும் துயரமும்

என்னிட த்திலுள்ளது

 

நான் ஒரு போராளி

 

கட்டுப்பெட்டி வாழ்வின்

கொடுங்கோலிலிருந்து

நான் விடுதலை பெறுவேன் -63

 

ஆண்களால் உருவாக்கப்பெற்ற அமைப்புகளின் விதிகள் – குறிப்பாகச் சமயச் சொல்லாடல்களும் அரசியல் சொல்லாடல்களும் பெண்களை இரண்டாம் தரக்குடிமக்களாகவும் ஆண்களுக்குச் சேவகம் செய்யவேண்டிய நிலையிலும் வைத்திருக்கிறது என்ற வாதங்களைத் தாண்டி, பெண்களின் உடலைப் பற்றிய புனைவுகளும் அவர்களைக் குற்றவுணர்வுக்குள் தள்ளி அடிமைப்படுத்துவதில் முதன்மையான வேலையச் செய்கிறது என்ற நம்பிக்கையின் வெளிப்பாட்டை இக்கவிதைகள் கொண்டிருக்கின்றன. அவற்றின் உட்பொருளாகவும் இணை நிலை நோக்கமாகவும் உடலரசியலைப் பேசும் கவிதைகளைக் கொண்டிருக்கும் விடாய் தொகுப்பில் ஈழப்போராட்டம் பின்னணிக் களமாக இருக்கிறது என்பதும் கவனிக்க வேண்டிய ஒன்று

போர்க்காலத்தின் பெண்களின் பாடுகளும் ஆண்களின் போர் ஈடுபட்டால் தனித்திருக்கும் பெண்களும் சில கவிதைகளுக்குள் உரிப்பொருள்களாக ஆகியிருக்கின்றன. அஃதல்லாமல் விடுதலையை விரும்பும் தனியொரு மனுசியின் மன த்தையும் சில கவிதைகளில் வாசிக்க முடிகிறது. தன்னிலையை முன்வைக்கும் இக்கவிதையை வாசித்துப் பார்க்கலாம்.

இடைவெளி

வெற்றிடத்தை

உலகம் விழுங்கிவிட்ட து

தொடக்கமும் இல்லை

முடிவும் இல்லை

சொர்க்கம் இல்லை

பூமி இல்லை

மற்றும் நேரமும் இல்லை

இன்று அல்லது நாளை

மன அழுத்தமும் இல்லை

ஒரு வார்த்தை கூட

பேசப்படவில்லை

அதைவிட மேலானது

எதுவும் இல்லை

என்னை நானே வீழ்த்தினேன்

முடிவில்லாத வெற்றிட த்திற்குள்

என்னுடையது கரைகிறது

எதுவும் குறையவில்லை

வெற்றிடம் குறைந்த போதும்,

என்னுடையது எதுவும் குறையவில்லை

நான் அகலத்திலும்

ஆழத்திலும் வளர்கிறேன்

என்றால்,

என்னுடையது எதுவும்

உணரப்படவில்லை.

கடவுள் வெறுமையாய்

ஒரு முகத்தை தருகிறார்

நான் அதை ஒன்றும் செய்யவில்லை.

=====================  38

ஈழப்போருக்குப் பின்னான அகதி வாழ்க்கையை – புலப்பெயர்வைக் கறுப்புச் சரித்திரம் எனச் சித்திரிக்கும்  ஒரு கவிதையில் தன்னையொத்த அகதிகளாக அலையும் பலஸ்தீனப் பெண்களின் கண்களிலும் புன்னகையிலும் என்னை அணிந்திருந்தனர் எனச் சொல்வதின் மூலம் ஒரு கவிதைக்குள் உலகத்தில் போர்களும், போர்களால் உண்டாகும் புலப்பெயர்வும் உலகந்தழுவிய ஒரு நிகழ்வாக மாறிவிட்ட தை வாசிப்பவர்களுக்குக் கடத்துகிறது பின்வரும் கவிதை

வாழ்தலின் மையம் தொலைத்த

இரு பலஸ்தீன

யுவதிகளைக் கண்டேன்

 

என் கண்களைப்போன்று

அவர்கள் கண்களும்

பூமிக்குள்ளே

தாழ்ந்திருந்தன.

ஒட்ட ஒட்ட வெட்டப்பட்ட

அவர்களுடைய

புன்னகை போன்றே

என்னுடைய

புன்னகையும் இருந்த து.

 

ஒரு தேசத்துக்காக கடலைத் தந்த

எனது கண்களைப் போன்று

அவர்கள் கண்களும்

பூமிக்கே தாழ்ந்திருந்த து.

 

என்னைப்போல்

அகதிகள் தேசத்தில்

மொழிதெரியாத இருமுகங்களும்

என்னை அணிந்திருந்தனர்.

 

வாழ்விலும் மரணத்திலும்

அவர்களைப் போலவே

நானும் இருந்தேன்

இரு தேசங்களின்

கறுப்பு சரித்திரமாக…

 

தனது கவிதையியல் என்பது பாடுகளை முன்வைப்பது என்பதைத் தெரிவுசெய்து, முதன்மையாகப் பெண் உடலைப் பேசும் கவிதைகளை அதிகமாகவும் ஈழத்துப் போர்ப்பின்னணியை இரண்டாவதாகவும் கொண்டுள்ள கவிதைகளை எழுதித்தந்துள்ள தில்லையிடமிருந்து இவ்வுரிப்பொருளில் இன்னும் பலகவிதைகள் கிடைக்க வாய்ப்புள்ளதை இத்தொகுப்பு காட்டுகிறது. 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

தணிக்கைத்துறை அரசியல்

நவீனத்துவமும் பாரதியும்