இரண்டு எதிர்வுகளும் பொதுப்புத்தியின் நகர்வுகளும்


பத்மசேஷாத்ரியின் ஆசிரியர் ராஜகோபாலன் x அப்பள்ளியின் மாணவிகள் - இது ஒரு எதிர்வு
பாடலாசிரியர் வைரமுத்து x பாடகி சின்மயி. இது இன்னொரு எதிர்வு
இவ்விருவெதிர்வுகளிலும் பாதிக்கப்பட்டவர்கள் பெண்கள் தான். பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நின்று பேசுவது கலையின் வேலை; கலைஞர்கள் வேலை. பொதுப்புத்தியும் கூடப் பாதிக்கப்பட்டோருக்காக இரங்கும்; கூக்குரல் எழுப்பும். அந்த வகையில் ராஜகோபாலனால் பாதிக்கப்பட்ட மாணவிகளுக்காக வாதாடும் நபர்கள் பாடகி சின்மயிக்காகவும் வாதாட வேண்டும்; ராஜகோபாலனைக் கண்டிப்பது போலவே வைரமுத்துவையும் கண்டிக்க வேண்டும்; தண்டிக்கும்படி கோரவேண்டும். இதுதான் நேர்மையான/ மனசாட்சியுள்ளவர்களின் வாதம்
முதல் எதிர்வில் ராஜகோபாலனும் அவர் பணியாற்றிய பள்ளியும் அமைப்பு. அதிகாரம் கொண்ட அமைப்பு. அந்த அமைப்பினாலும் அமைப்பினால் காக்கப்படுகின்ற தனிநபரான ராஜகோபாலனாலும் பாதிக்கப்பட்ட் பள்ளிப்பிள்ளைகள் அதிகாரமற்றவர்கள். இவ்விரு தரப்பாரும் சாதியடையாளத்தில் ஒருதரப்பாகக் கூட இருக்கலாம். அதனால் சாதி அடையாளம் முன் நிறுத்தப்படவில்லை.

இரண்டாவது எதிர்வில் வைரமுத்து பாடலாசிரியர்; சின்மயி பாடகி. இவ்விருவரில் பாடலாசிரியர் அதிகாரமிக்கவர்; அவரது பரிந்துரையில் வாய்ப்புகள் கிடைக்கும் என்பதால் பாடகியால் எதிர்க்கமுடியாது என்பது நடைமுறை. ஆகவே பாதிக்கப்பட்ட பாடகியான / பெண் சின்மயிக்கு ஆதரவு தரவேண்டியது தார்மீகம்; மனித அறம். ஆனால் சின்மயி தன்னைத் தொடர்ந்து பிராமணப் பெண்ணாக முன்வைப்பவர். அதன் வழி இங்கு வழிவழியாகப் பெறப்பட்ட அதிகாரத்தைக் கைக்கொண்டவர். அவர் பின்னால் பிராமணீய அதிகாரத் திரள் நிற்கிறது. இப்போது யாருடைய அதிகாரம் வலிமையானது என்ற கேள்வி முன் நிற்கிறது.
 
தமிழ்நாட்டில் / இந்தியாவில் பிராமணீய அடையாளம் ஆகக்கூடிய அதிகாரம் கொண்டதாக இருக்கிறது. அதன் கரங்கள் எங்கும் நீளக்கூடியது. அத்தோடு தன்னலம் மிக்கது. தனிநபராகத் தவறிழைக்கும் பிராமணர்களைக் காப்பதற்குப் பிராமணீயம் தயங்குவதில்லை. எல்லா அறங்களையும் தள்ளிவைத்துவிட்டுத் திரளாக நின்று தாங்கள் பாதிக்கப்படும் சிறுபான்மை எனக் கூச்சலிடுவது அதன் அண்மைக்கால வரலாறு. அதன் தந்திரங்களில் ஒன்று.
 
இரண்டாவது எதிர்வில் பாதிக்கப்பட்டவராக அறியப்படும் பாடகி சின்மயி, தனக்கான பாதிப்பைத் தொடர்ச்சியாக முன்வைக்காமல் சூழலைத் திசை திருப்புவதற்காக அவ்வப்போது முன்வைக்கிறார். தருண் விஜய் போன்ற பா.ஜ.க. பிரமுகர்களோடு நெருங்கிய உறவுகொண்டு வைரமுத்து ஒன்றிய அரசை நெருங்குகிறார் என்று தோன்றியபோது, ஆண்டாளைக் குறித்து ஆய்வுக்கட்டுரையை முன்வைத்து அவர் மீது ஆவேசம் காட்டியது பிராமணியம். அதனோடு இணைந்து தனது பாதிக்கப்பட்ட நிலையை முன்வைத்தார். பின்னர் தணிந்துவிட்டார். இப்போது பத்மசேஷாத்ரி பள்ளியில் ஒரு ஆசிரியர் தண்டிக்கப்பட வாய்ப்புள்ளது; அவரைக் கண்டிக்காத பள்ளி நிர்வாகமும் கண்டனத்துக்குள்ளாகிறது என்ற நிலையில் திரும்பவும் வைரமுத்துவின் மீதான பாலியல் அத்துமீறலை முன்வைத்து அதனையும் இதனையும் சமப்படுத்த உதவுகிறார் சின்மயி.
 
வைரமுத்துவால் பாதிக்கப்பட்ட சின்மயி எப்போதும் பிராமணிய அதிகாரத்தோடு தன்னை முன்வைக்கிறார். அதனால் அவரது குற்றச்சாட்டு சந்தேகத்துக்குரியதாக மாறுகிறது. சந்தேகத்துக்குரிய ஒன்றில், தமிழகப் பொதுப்புத்தி பிராமணீய எதிர்ப்பையே மேற்கொள்ளும். இதற்கு வரலாற்றுக் காரணங்கள் இருக்கின்றன. தமிழக வரலாற்றில் எண்ணிக்கைச் சிறுபான்மை கொண்ட கொண்ட பிராமணர்கள் எப்போதும் அதிகாரத்துவ அமைப்புகளோடு இணைந்து எதிரிகளை வென்றிருக்கிறார்கள். அதன் தொடர்ச்சி இப்போது அறுபடப்போவதில்லை. அறுக்க நினைத்தால் பிராமணீயம் தனது நிலைபாட்டை மாற்றியாகவேண்டும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவீனத்துவமும் பாரதியும்

நாயக்கர் காலம். இயல் . 6 சாதிகளும் சமூக அசைவியக்கங்கமும்

ப்ளு ஸ்டார் : கிரிக்கெட்டும் அரசியலும்