நவம்பர் கதை : நடப்பியல் நடிப்பின் வலிமை

 

”தமன்னாவின் வீட்டில் ரெய்டு” என இணையப்பக்க விளம்பரமாக வரும் இணையத்தளத் திரைத் தொடர் கதைப்பின்னல், விடுவிப்பு என்ற அடிப்படையில் துப்பறியும் கதை. எல்லாத் துப்பறியும்/குற்றவிடுவிப்புக் கதைகளின் தன்மையில் இருப்பதில் கூடுதல் கவனத்துடன் இருக்கிறது. இதனைத்தாண்டி இத்தொடரைப் பார்த்து முடிக்கும்போது அத்தொடரில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் ஏற்று நடித்துள்ள நடிகர்களும் நடிகைகளும் நடப்பியல் - Realsitic - நடிப்பில் தேர்ந்தவர்களாகத் தங்களை முன்வைத்துள்ளனர். மையப்பாத்திரம் போலத் தோற்றம் தரும் அனுவின் பாத்திரத்தை ஏற்றுள்ள தமன்னாவின் நடிப்பு மட்டுமே நடப்பியல் நடிப்பை முழுமையாக வெளிப்படுத்தாத ஒன்று. எதிர்நிலைப் பாத்திரத்தை ஏற்று நடிக்கும் பசுபதி நடப்பியல் நடிப்பில் தேர்ந்த நடிகர், வலிமையான அந்தப் பாத்திரத்தின் ஒவ்வொரு அசைவையும் தொனியையும் தனது உடல் மொழி மற்றும் குரல்மொழியின் ஏற்ற இறக்கங்கள் வழியாகக் கொண்டுவந்துள்ளார். அவருக்கிணையாகவே அனுவின் அப்பா பாத்திரத்தை ஏற்றுள்ளவரும் நடித்துள்ளார். கதைப்பின்னலில் இடம்பெறும் ஒவ்வொரு பாத்திரமும் அதனதன் அளவில் முழுமையாக இருப்பதுபோலத் தோன்றுவதற்கு அதனை ஏற்று நடித்துள்ள பெண்களும் ஆண்களும் நடித்துள்ளனர். திரைப்பட நடிப்பின் கூடுதல் சாத்தியங்களை ஒவ்வொருவரும் வெளிப்படுத்தியுள்ளனர். இந்த அளவுக்கு நடப்பியல் நடிப்பைக் கொண்ட தமிழ்ச் சினிமாவைச் சுட்டிக்காட்ட முடியவில்லை.

கதை நிகழ்வுகள் நடக்கும் சிறிய தகவல் தொழில் கணினிமையம், காவல் நிலையம், உடல்கூறுப் பரிசோதனை நடக்கும் மருத்துவப்பகுதி, அனுவின் வீடு, பசுபதியின் வீடு, நினைவோட்டத்தில் வரும் மருத்துவக்கல்லூரி, அனாதைச் சிறுவர்களின் இல்லம் என ஒவ்வொன்றும் மிகைப்படுத்தப்படாத வெளிகளாகத் தேர்வுசெய்யப்பட்டுள்ளன. அவ்வெளிகளில் நடக்கும் நிகழ்வுகளுக்கான ஒளியமைப்பும் நிழல்களும் குற்றப்பின்னணிக் கதைக்கான ஆர்வமூட்டலைக் கச்சிதமாகச் செய்கின்றன. கறுப்பு - வெள்ளைக் காலக்காட்சிகள் நிகழ்காலம் என மாறிமாறி நடக்கும் பல காட்சிகளில் மௌனங்கள் வழியாகவே பல காட்சிகள் நகர்த்தப்பட்டுள்ளன. நிகழ்வு வெளிகள் மட்டுமல்லாமல் அவற்றில் இடம்பெறும் மனிதர்களின் இயல்பான பேச்சுகளும் அவ்வெளிக்குள் தங்களின் இருப்பைக் காட்ட நினைக்கும் முயற்சிகளும் கவனிக்கத்தக்க துணுக்குகளாக அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாகக் காவல் நிலையக் காட்சிகள் இதுவரைக் காட்டப்படாத முறையில் நடப்பியலோடு பொருந்தி நிற்கின்றன.

1. அவனைக்காப்பாற்று; அவனிடமிருந்து காப்பாற்று
2. வெள்ளையடிப்பு
3.தெறிப்புகள்
4. குறுக்குச் சாலைகள்
5.இணைப்புகள்
6. நெருக்கத்தில்
7. உண்மைகள்
8.அனுப்பப்படாத கடிதங்கள்.
9 .முடித்தொகுப்புகள்
எனப் பிரித்துக் கதை பின்னப்பட்டுள்ள நவம்பர் கதை, NOVEMBER STORY - முழுமையும் குற்றங்கள் என்னும் முடிச்சுகளால் பின்னப்பட்டு திரைத்தொடராக பார்க்கக் கிடைக்கிறது. காட்சிகளைப் பரப்பிக் காட்டிவிட்டு மனித மனத்தில் குற்றமனம் உருக்கொள்வதையும் அதன் நீட்சியாக அன்பு, பாசம், நிலை நிறுத்தல் என்பதின் மேல் மேலும் மேலும் குற்றங்களை அடுக்குவதையும், மறைத்துவிட நினைத்துக் கூடுதல் குற்றங்களைச் செய்வதையும் விரிவாகக் கேள்வி எழுப்பும் தொகுப்புரையையும் கொண்டிருக்கிறது. அத்தொகுப்புரையில் எழுப்பப்படும் வினாக்களின் வழியாக எழுப்பப்படும் ஆழ்மனக் கேள்விகளுக்கு இதுதான் பதில் என்பதாக இல்லாமல் இப்படியாகத்தான் மனித வாழ்க்கையின் தேடல்களின் இருட்டும் வெளிச்சமும் நகர்கின்றன என்பதையும் சொல்கிறது.

ஒரே நாளில் பார்க்காமல் மூன்று நாட்களில் பகுத்துப் பகுத்துப் பார்த்தபோது நவம்பர் கதையின் ஆழமான காட்சி அமைப்புகளும் நடிப்பும் மேலும் மேலும் சிறப்பானவை எனத் தோன்றின. தமிழில் இணையதளத்திற்கென தயாரிக்கப்பட்ட வெளியீடுகளில் சிறப்பான தயாரிப்பு இது

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

தணிக்கைத்துறை அரசியல்

நவீனத்துவமும் பாரதியும்