ஒரு கதையும் முப்பத்தியோரு நுண்கதைகளும்

 கிராமிய வாழ்வின் உள்ளடுக்குகள்

================================
தனிமனித அந்தரங்கத்திற்குள் அலையும் காதல், காமம், கடவுள், என்ற மூன்றையும் அதனதன் இருப்போடும் உளவியல் கோணங்களோடும் எழுதப்பெற்றுள்ள இந்தக் கதை நீண்ட இடைவெளிக்குப் பின் வாசித்த நல்லதொரு கதை. வாசித்து முடித்தபின் எழுந்த எண்ணங்களும் நினைவுகளும் இந்தியக் கிராமிய வாழ்விற்குள் சாமியாட்டங்களுக்கும் பூசாரிப்பொறுப்புகளுக்கும் திரள் மக்களின் நம்பிக்கைகளுக்கும் இருக்கும் பிணைப்பைத் தீவிரமாகச் சொல்லும் புனைவொன்றை வாசித்த அனுபவமாக நிறைந்தது. மனித உடல், மனித மனம் என்ற இரண்டையும் தனித்தனியாகப் பிரித்துப் பேசமுடியுமா? என்றதொரு கேள்வியை முன்வைக்கும் இந்தச் சொற்கள் தான் கதையின் நோக்கவாக்கியம்:
” ஒன் ஒடம்ப கட்டுப்படுத்தாம அது இஷ்டத்துக்கு விட்டுட்டு வேடிக்க மட்டும் பாரு.
நடக்கறதுக்கும் ஒனக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லேன்னு புரிஞ்சுக்க. மனசுல
கவலையோ குழப்பமோ எதுவும் வராது” என்றார்.
வாசிக்கவேண்டிய கதை. கன்னிச்சாமியை எழுதிய கா. சிவாவுக்கு
வாழ்த்துகள்

வினைகளும் காரணங்களும்: நடுகல்லில் நுண்கதைகள்

==========================================
அண்மையில் தொடர்ச்சியாகக் குறுங்கதைகளை வாசித்துக் கொண்டிருக்கிறேன். எஸ்.ரா., போகன்சங்கர், பெருந்தேவி என அவ்வப்போது வாசித்தவையைத் தாண்டி, இலங்கை எழுத்தாளர்- அகமது ஃபைசலின் குறுங்கதைத் தொகுப்பொன்றுக்கு முன்னுரை எழுதவேண்டி அந்தக் கதைகளை வாசித்து முடித்தேன். முகவரி மாற்றத்தால் தாமதமாகிவந்த நடுகல் -10 சில நாட்களுக்கு முன்புதான் திறக்கப்பட்டது. ஒவ்வொரு பக்கமாகத் திருப்பியபோது மொத்தமாக 30 நுண்கதைகள் .
முப்பது (31?) கதைகளையும் தனித்தனியாகவும் படிக்கலாம். ஒற்றைக் கயிற்றில் கட்டப்பட்ட வெவ்வேறு வண்ணங்கள் கொண்ட மணிகளாகவும் நினைத்து வாசிக்கலாம். அதற்கேற்ப ஒரு பின் - அமைப்பியல் தலைப்பொன்றை “ பித்தனாரும் பூங்குன்றன் விளாதிமிரும்” என்றொரு தலைப்பையும் தந்துள்ளார் அவற்றை எழுதிய சுஜித் லெனின்.ப.
ஒரு வினை அல்லது கார்யம் (ACTION); அதற்கான காரணம் (REASON) , அதற்குப்பின்னால் இருக்கும் பற்றிய புரிதல் அல்லது தெளிவை முன்வைத்தல் ( QUEST ON LIFE OR UNDERSTANDING OF THE EVENT )என அந்தக் கதைகளின் கட்டமைப்பை விளக்கிவிடலாம். நடப்பு வாழ்க்கையைப் பற்றிய நினைவுபடுத்தும் பாத்திரங்களும், கடந்தகால மனிதர்களின் நிலைப்பாடுகளும் என விரிக்கப்பட்டுள்ள அக்கதைகள், வரலாறு, அறிவியல், நினைப்புகளின் புதிர்த்தன்மை என ஒவ்வொரு கதையிலும் எழுப்பப்பட்டுள்ள கேள்விகள் நவீனத்தைக் கடந்த கேள்விகளாக இருக்கின்றன.
இதுதான் தனது நடுகல் இதழின் அடையாளம் என்பதாக ஒன்றை உருவாக்கிவிடக்கூடாது என்று திட்டமிட்டு ஒவ்வொரு இதழிலும் சோதனைகளையும் புதுமைகளையும் தருகிறார் அதன் ஆசிரியர் வா.மு.கோமு. நுண் கதைகளின் ஆசிரியர் சுஜித் லெனின்.ப.வுக்கும் நடுகல் இதழ் ஆசிரியருக்கும் பாராட்டுகள்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவீனத்துவமும் பாரதியும்

நாயக்கர் காலம். இயல் . 6 சாதிகளும் சமூக அசைவியக்கங்கமும்

ப்ளு ஸ்டார் : கிரிக்கெட்டும் அரசியலும்