தேவசீமாவின் வைன் என்பது குறியீடல்ல:
எல்லாவகை இலக்கிய வகைமையும் தொகுப்பாக வாசித்து முடிக்கும்போது ஒரேவிதமான இலக்கிய நுட்பங்களை வாசிப்பவர்களுக்குத் தருவதில்லை. கவிதை எப்போதும் உணர்வுகளையும் கவிதை சொல்வதற்கான கூற்றாளர்/ உரைப்பவரின் த்வனியையும் முன்வைக்கும். புனைவுகளோ பாத்திரங்களின் இருப்பையும் நோக்கங்களும் வளர்சிதை மாற்றங்களையும் முன்வைக்க முனையும். அதிலும் சிறுகதைகள் உருவாக்கப்படும் புனைவுப்பாத்திரங்களின் முடிவெடுக்கும் கணத்தைத் தீட்டிக்காட்டுவதை முதன்மையாக நினைக்கும். இன்னொரு புனைவு வடிவமான நாவலோ பாத்திரங்களின் பின்னணிகளை - காலத்தையும் வெளியையும் விரிவாக்கித்தருவதில் கவனம் செலுத்தும். நாடகங்களோ எப்போதும் கருத்தியல் அல்லது மனவியல் முரண்பாடுகளைக் காட்டுவதையே செய்கின்றன
உயிரேற்றி ஒரு உணவு
சமைக்கிறான் ஒருவன்
கெஞ்சிக் கொஞ்சி ஊட்ட முயல்கிறான்
தலை ஆட்டி ஆட்டி மறுக்கிறாள் சிறுமி
கோபமாய்த் திணிக்கிறான் வாயுள்
மாட்டேன் மாட்டேன் என்பதாய் தலை அசைக்கிறாள்
ஓடிப்போன அம்மாவைப் போலவே
இவள் காது ஜிமிக்கியும்
அழகற்று ஊசலாடுகிறது
உள்ளார்ந்த இரசனையில்
ஒரு கணம் பதறி
தலை உதறி தவிர்க்க முயல்கிறான்
தோல்வியுற்ற இருத்தலை. =======50
இக்கவிதைக்குள் தாங்கள் விரும்பி ஏற்றுக்கொண்ட குடும்ப வாழ்வின் நிர்ப்பந்தங்களை எப்படி எதிர்கொள்வது என்பது தெரியாமல் தவிக்கும் இந்தியத் தன்னிலையின் இந்தச் சித்திரத்தை இதற்கு முன்னொருவரும் எழுதிக்காட்டவில்லை. அதே போலச் சமையல்கட்டு ஏற்படுத்தும் அலுப்பான வாழ்க்கையின் அபத்தத்தைச் சொன்ன பல நூறு கவிதைகளில் இந்தக் கவிதை முன்வைக்கும் அபத்தத்தொனி வித்தியாசமான ஒன்று:
காத்திறமான உப்பு
முதல் தோசை ஊற்றிக்கொண்டு
இருந்தேன். ஒன்றும்
தோன்றவில்லை
இரண்டாவது தோசை ஊற்றிக்கொண்டு
இருந்தேன். ஒன்றும்
தோன்றவில்லை
மூன்றாவது தோசை ஊற்றிக்கொண்டு
இருந்தேன். ஒரு துரோகம்
லேசாக ஓர்மையில்
நான்காவது தோசை ஊற்றிக்கொண்டு
இருந்தேன். ஒரு நட்பு
கண் இளக்கத் துவங்கிற்று
அய்ந்தாவது தோசை ஊற்றிக்கொண்டு
இருந்தேன். நாம் அனாதை
என்ற உணர்வு பக்கத்தில் நின்று
கொண்டு இருந்த து
ஆறாவது தோசை ஊற்றிக்கொண்டு
இருந்தேன். சத்தமே இல்லாமல்
தோசை கரிப்பேரிக் கொண்டிருக்கிறது
ஏழாவது தோசையை ஊற்றிக்கொண்டு
இருந்தேன். அவசரத்தில்
கரித்துணியால் முகம்
துடைக்கப்பட்ட து
மகன் சாப்பிட்டுக்கொண்டு
இருக்கிறான். ========== ப.43
ஆண்களுக்கு ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாக இருக்கும் இன்னொரு காதலும் இரண்டாவது மனைவியும் பெண்களுக்கு மறுக்கப்பட்ட ஒன்றாகவும் மறைவாகச் செய்யவேண்டிய திருட்டுத்தனமாகவும் கட்டமைக்கப்பட்டதைக் கேள்வி கேட்கும் இந்தக் கவிதையில் வெளிப்படும் துணிச்சல் நவீன காலமும் வாய்ப்புகளும் ஏற்படுத்தித்தந்துள்ள ஒன்று:
அது அல்ல
அதற்கானதாய் இரண்டு இருந்தன
தொலைந்துவிட்ட து ஒன்று
அச்சு அசலாய்
மற்றொன்று செய்து வாங்கினேன்
சாவிக்காரனிடம்
போலிச்சாவி என அதற்கு
பெயர் சூட்டுகிறீர்கள்
அதுவும் திறக்கும்
அதே உண்மையை.
போலிச்சாவியல்ல
இன்னொரு சாவி என்றே
சொல்லுங்கள்
இன்னொரு காதல் என்பதைப்போல. ===/37
இலக்கியவியலின் அனைத்து வகைமைகளையும் அதனதன் நுட்பங்களோடும் நோக்கங்களோடும் வாசிக்கும் வாசிப்புக்குக் கிடைக்கும் திளைப்பும் மனவிரிவும் விரித்துப் பேசவேண்டியவை. கவிதை வடிவம் எப்போதும் அதில் முதன்மையாக இருக்கிறது. தேவசீமாவின் இந்தத்தொகுதியின் பெரும்பாலான கவிதைகள் அதனைச் சரியாகவே செய்துள்ளன. அண்மையில் வந்த தொகுதிகளில் வாசிக்க வேண்டிய தொகுதி.
கருத்துகள்