தலித் பெண்ணிய நோக்கில் சிவகாமி, பாமா நாவல்கள். பொதுவும் சிறப்பும்


இலக்கியம் தன்னளவில் ஒரு பொதுப்பெயராக நிற்கும்வரை அதன் வாசகக் கூட்டமும் பொதுநிலைப்பட்டதாகவே  இருந்துவிடும். அப்பொதுப் பெயர், இந்திய இலக்கியம், லத்தீன் அமெரிக்க இலக்கியம், அமெரிக்க இலக்கியம்,  எனத் தேசஞ்சார்ந்த அடையாளத்தை, அல்லது பண்டைய இலக்கியம், இடைக்கால இலக்கியம், இக்கால இலக்கியம் எனக் காலஞ்சார்ந்த அடையாளத்தை, அல்லது நாடக இலக்கியம், காப்பிய இலக்கியம், தூது இலக்கியம் என இலக்கிய வகை சார்ந்த அடையாளத்தைப் பெறுகிற போது காரணப் பொதுப்பெயராக ஆகி விடும். அப்போது அதன் வாசக எல்லை பொதுநிலைப் பட்டதாகவே இருந்திட வாய்ப்புண்டு. அதே போல , அக இலக்கியம், பக்தி இலக்கியம், நீதி இலக்கியம் எனச் சிறப்புப் பெயரைத் தாங்கிவிடும்போது கூட அவற்றின் வாசகர்கள் ‘பொதுவானவர்களே’ என்று ஒருவர் வாதிடவும் கூடும். அந்த வாதங்களுக்குச் சாதகமான காரணங்கள் நிறையச் சொல்லி விட வாய்ப்புகளுமுண்டு. ஆனால், வர்க்க இலக்கியம், கறுப்பு இலக்கியம், பெண்ணிய இலக்கியம், விளிம்புநிலை இலக்கியம் எனக் காரணச் சிறப்புப் பெயராக ‘ இலக்கியம்’ மாறிவிடும்பொழுது அவற்றின் வாசக நிலையிலும் குறிப்பான எல்லைகள் உருவாகிடக் காரணங்கள் இருக்கின்றன. அந்த வகையில் ‘ தலித் இலக்கியம்’ என்ற சொல் ஒரு காரணச் சிறப்புப் பெயர். அதிலும் தலித் பெண்ணிய இலக்கியம் இரண்டு சிறப்புகளை இலக்கியத்தின் முன் அடையாகச் சேர்த்துக் கொண்டுள்ள ஒரு சொற்கூட்டம்.

இலக்கு வாசகர்


வர்க்க, கறுப்பு, பெண்ணிய , தலித் இலக்கியம் போன்றன, மக்கள் திரளின் ஒரு பகுதிக்கான பிரதிநிதித்துவத்தை- பங்கை- இலக்கிய வெளிக்குள் உருவாக்கிடும் நோக்கத்தில்- உறுதி செய்திடும் நோக்கத்தில் தோற்றம் கொண்டவை. அந்த நோக்கங்களின் நீட்சியாக, அம்மக்கள் திரளின் நிலவியல் சார்ந்த, மொழி சார்ந்த, பண்பாடு சார்ந்த, வாழ்தலின் இருப்பு சார்ந்த அடையாளங்களைப் பதிவு செய்கின்றன. இப்பதிவுகளின் ஊடாகவே, இதுவரை அந்தத் திரள் மக்களின் மேல் செலுத்தப் பட்ட அதிகாரம், மோசடி, ஒதுக்கப்பட்ட முறை என்பனவற்றையெல்லாம் நினைவு கூர்கின்றன. அத்துடன் நிகழ்கால வாழ்வின் போக்கில் தங்களின் அடையாளங்களை நிறுவும் யத்தனிப்புகளையும் செய்கின்றன. அந்த முயற்சிகளுக்கு ஏற்படும் தடைகள், அச்சுறுத்தல்கள், கட்டுப்பாடுகள், என எல்லாவற்றையும் அம்பலப்படுத்திவிட்டு , விடுதலையின் சாத்தியங்களைக் கனவு காண்கின்றன. சாராம்சத்தில் இவ்வகைக் காரணச் சிறப்பு இலக்கியங்கள் எல்லாவற்றின் நோக்கமும் விடுதலை தான் என்றாலும், ஒவ்வொரு விடுதலையின் பரிமாணங்களும் வேறு வேறானவை. எனவே அந்தந்த இலக்கியங்களின் இயல்புகளும் , அழகியலும் வேறானவை. அதன் தொடர்ச்சியாக அவற்றின் வாசகர் கூட்டமும் வேறானவை தான்.

 

ஒவ்வொரு காரணச் சிறப்பு இலக்கியமும் தனக்கான வாசகர் கூட்டத்தை இருநிலைகளில் உருவாக்குகின்றன. ஒன்று ஆதரவு நிலை; இன்னொன்று எதிர்ப்பு நிலை. இந்த இருநிலை வாசகர்களையும் நோக்கி உரையாடும் இவ்வகை இலக்கியங்கள் அவர்களிடம் ஆற்றும் வினைகளும் வேறுவேறானவைகளாகவே உள்ளன. ஆதரவு நிலை வாசகனிடம் உண்டாக்க விரும்புவது விழிப்புணர்வும், விழிப்புணர்வு சார்ந்த புரிதல்களும், அறிவூட்டலும். ஆனால் எதிர்ப்பு நிலை வாசகனிடம் உண்டாக்க விரும்புவதோ குற்றவுணர்வும், அதுசார்ந்த எச்சரிக்கைகளும் ஆகும். இந்த அடிப்படையின் மேல், தலித் பெண்ணிய நாவலாசிரியர்களாக விளங்குகின்ற சிவகாமி மற்றும் பாமா ஆகியோரது நாவல்களைக் காணலாம் சிவகாமி எழுதி இதுவரை பழையன கழிதலும் ( 1989) , ஆனந்தாயி (1994) ப.க.ஆ.கு. (1998) குறுக்கு வெட்டு ( 1999) என நான்கு நாவல்கள் வந்துள்ளன. பாமாவின் நாவல்களாகக் கருக்கு (1992), சங்கதி (1996),வன்மம் ( 2002) ஆகியன வந்துள்ளன.

 

சிவகாமி, பாமா என்ற இரு படைப்பாளிகளையும் தலித் மற்றும் பெண்கள் என்பதால் அவர்களது படைப்புகளை ‘ தலித் பெண்ணியப் படைப்புகள்’ என்று பேச வேண்டியுள்ளது. ஆனால்  இவ்விருவரது படைப்புக்களையும் வேறு வேறாக வைத்துப் பேச வேண்டிய அவசியமும் இருக்கிறது. ஏனெனில் இருவரது எழுத்து முறைகளும் வேறு வேறானவை. கதையின் களன்கள், அதில் உலவும் மாந்தர்கள், சந்திக்கும் பிரச்சினைகள், தரும் முடிவுகள் என  ஒவ்வொரு நாவலும் வேறுபடுதல் போன்றதல்ல இவ்வேறுபாடுகள். அத்தகைய வேறுபாடுகளை உருவாக்கா விட்டால், படைப்பாளியே காணாமல் போய்விடக்கூடும். அவற்றை வேறுபாடுகள் என்று கூடச் சொல்ல வேண்டியதில்லை. இங்கு சுட்டப்படும் வேறுபாடு ‘ சொல்முறை’ (Narrative) வேறுபாடு ஆகும். பாமாவின் நாவல்களில் அமைந்துள்ள சொல்முறை சிவகாமியின் நாவல்களில் அமைந்துள்ள சொல் முறையிலிருந்து முற்றிலும் மாறானவை. இவ்விரண்டில் எம்முறை சிறந்தது சிறந்தது என்று சான்றளிக்கும் நோக்கம் இக்கட்டுரைக்குரிய தலையாய நோக்கம் அல்ல; ஆனால் தலித் பெண்ணிய நாவல் என்ற மையத்திலிருந்து சொல்லாடல்கள் எழும்போது அப்படியொரு ஒப்புமைக் கூற்று உருவாதல் தவிர்க்க இயலாதது என்பதும் தெரிந்த ஒன்று தான்.

 

தலித் இலக்கியத்தின் நோக்கங்கள் மற்றும் அழகியலை முன்பே விவரித்துள்ள பின்னணையைத் திரும்பவும் நினைத்துக் கொண்டு [பொதுவாசகனை நோக்கிய தலித் இலக்கியம்]சிவகாமி, பாமா என்ற இரு படைப்பாளிகளின் நாவல்களுக்குள் செல்லலாம்.


சிவகாமியின் நாவல்கள்


எழுத்தாளர் சிவகாமி தன்னை ஒரு தலித் எழுத்தாளர் என்று சொல்லிக் கொள்ளவும், தலித் போராளியாக கருத்துப் போராட்டத்தில் முன்னணியில் நிற்கின்றவராகவும் நம்புகிறார்; விரும்புகிறார். இந்த நம்பிக்கை அவரது சமீபத்திய சிறுகதைகளிலும் புனைவுகளற்ற எழுத்துக்களிலும் தீவிரமாக வெளிப்படுகின்றன. ஆனால் அவரது நாவல்கள் எழுதிய மனநிலை இவ்வாறே இருந்திருக்குமா..? என்பது கேள்விக்குறியே. ஏனென்றால் எழுத்தாளர் சிவகாமியின் உருவாக்கம் தமிழ் நாட்டில் இடதுசாரி எழுத்தாளர்கள் உருவாக்கிய சமூக யதார்த்த ( Social Realism) வகை எழுத்துப் போக்கின் விளைவு. அந்தப் போக்கின் தொடர்ச்சியாகவே  அவரது முதல் இரண்டு நாவல்களும்- பழையன கழிதலும், ஆனந்தாயி என்ற இரண்டும் எழுதப்பட்டுள்ளன. வட்டார வாழ்வை தங்கள் சமூகத்தின், தங்கள் உறவினர்களின் துயர வரலாற்றைப் பதிவு செய்வதும், அவர்களின் வாழ்வு முறைகள் மாற வேண்டியதின் கட்டாயத்தையும் சொல்ல விரும்பிய சமூக யதார்த்த நாவலாசிரியர்களிடமிருந்து சிவகாமியின் பழையன கழிதலும், ஆனந்தாயியும் தடம் மாறிடவில்லை. அந்தத் தடத்தில் அவரது பயணம் இயல்பாகவே இருந்தது. என்றாலும், அவரது உறவினர்களும், அவர்களது துயர வாழ்வும் முறையே தலித்துக்களாகவும், தலித்துகளின் துயரவாழ்வாகவும் இருந்ததால், அந்த நாவல்கள் தலித் நாவல்களாகவும் அடையாளம் பெற்றுக் கொண்டன.

 

ப.க.ஆ.கு. எழுதியபோதும், குறுக்குவெட்டு எழுதிய போதும் எழுத்தாளர் சிவகாமிக்குள், ‘சமூக யதார்த்தத்தைப் பதிவு செய்தலே இலக்கியம்’ என்ற சிந்தனைப் போக்கு விலகிவிட்டது. ‘எழுத்தாளர் உருவாக்கும் பிரதி’ என்ற கருத்தமைவு நுழைந்துவிட அதற்கேற்பப் பின்னிரண்டு நாவல்களும் உருவம் கொண்டன. முதல் இரண்டு நாவல்களிலும் இடம்பெற்றுள்ள கதாபாத்திரங்களைத் தேடிச் செல்லும் படைப்பாளி, தனது படைப்புக்குக் காரணமான மனிதர்கள் மீது காலமும், காலத்தின் காரணமாகத் தனது எண்ணங்களும் உருவாக்கியுள்ள படிமங் களை நினைவு கூர்கிறார். அந்த வகையில் ப.க.ஆ.கு. எழுத்து பற்றிய எழுத்து எனச் சொல்லத்தக்கது.  அதேபோல் ‘குறுக்குவெட்டு’, புனைவாக ஒரு கதையையும் இணைப்பிரதியாகச் சில குறிப்புகளையும் கேள்வி களையும் கொண்ட புதுவகைப் பிரதியாக எழுதப்பட்டுள்ளது. அத்துடன் தமிழ்க் கருத்துலகில் புதுவீச்சாக  விவாதத்துக்குள்ளாகியிருந்த பெண்ணியச் சொல்லாடல்களை- குடும்ப உறவில் கணவன் - மனைவியரின் இடம் பற்றிய மரபுப்பார்வையையும் புதிய பார்வையையும் முன்வைத்ததாக அந்நாவல் வந்தது.

 

சிவகாமியின் நான்கு நாவல்களில், பெண்ணியச் சொல்லாடல்களுக்குள் நுழைந்தே ஆகவேண்டும் என்று வலியுறுத்தும் நாவல் குறுக்குவெட்டு . ஒரு ‘நான்’ எதற்காகப் படைக்கப்பட்டிருக்கிறது? என்ற கேள்வியை வாழ்ந்தும் சிந்திந்தும் விடை தேடிக் கொண்டிருக்கும் இந்தக் கேள்வியை மையமாக எழுப்பிக் கொள்ளும் அந்தப் பிரதி, இப்போதுள்ள குடும்ப அமைப்பின் போதாமையை விவாதத்துக் குள்ளாக்கியுள்ளது. கணவன் - மனைவி என்ற பந்தங்களில் திருப்தியடைய முடியாத ஓர் ஆணின் தன்னிலையும் ஒரு பெண்ணின் தன்னிலையும் நட்பு என்ற புதுவகைப் பந்தத்திலாவது திருப்திப்பட்டுக் கொள்ளுமா.? என்று கேட்டுவிட்டு, ‘ திருப்தியாக வாழ்தல் என்பதே ஒரு கற்பிதம்’ என்ற பதிலைத் தருகிறது. சரோவின் கணவனாக ரவியும் நண்பனாகக் குமாரும் நிறுத்தப்படுவதில் எளிய முக்கோணக் கதையாக முடிவு தரப்படும் ஆபத்து உண்டு. ஆனால் சிவகாமி அதைச் செய்யவில்லை. ஒவ்வொரு தன்னிலைக்குள்ளும், ‘உடல்’ மற்றும் ‘ மனம்’ என்ற தொல்லை தரும் இருவேறு கலவைகள் உள்ளன என்று உணர்ந்த ஒரு படைப்பாளியால் சுலபமான முடிவைத் தந்துவிட முடியாது தான். இந்த நாவல் பெண்ணிய விவாதத்தை எடுத்துக் கொண்டுள்ளதே தவிர தலித்திய அடையாளங்களுக்குள் நுழையவில்லை. நுழைந்து தான் ஆக வேண்டும் என்ற அவசியமும் இல்லை.


சிவகாமியின் முதல் இரண்டு நாவல்களான பழையன கழிதலும், ஆனந்தாயி என்பன இவ்விரு அடையாளங்களையும் கலந்தே தருகின்றன. அந்த அடையாளங்கள் அவற்றின் வாசக இலக்கிடம் என்னென்ன உணர்வுகளை எழுப்ப வேண்டுமோ அவற்றைத் திறம்படச் செய்யும் சாத்தியங்களையும் கொண்டுள்ளன. நவீன வாழ்வை எழுதுவதற்கு ஏற்ற வடிவமாகச் சொல்லப்படும் படர்க்கைநிலை (Third person Narrative) யில் சொல்லப்படும் இவ்விரு நாவல்களிலும் ஆண்களே மையப்பாத்திரங்கள் என்றாலும், அவர்கள் நாயகர்கள் ( Hero) அல்ல. பழையன கழிதலும் நாவலின் ‘ காத்தமுத்து’ கழிந்து போக வேண்டிய - ஒழிந்து போக வேண்டிய பழைய பொருள். அவனால் துயரப்படும் கனகவல்லி, நாகமணி, தங்கம் போன்ற பெண்களும் கூட அடுத்த தலைமுறையில் தேவை யில்லாதவர்கள் தான். தங்களின் அறியாமை காரணமாகவே காத்தமுத்துவின் அதிகாரத்துக்குக் கட்டுப்பட்டுத் துயரமே இயல்பானது எனக்கருதி வாழ்பவர்களின் காலம் முடிய வேண்டும் எனப் பேசுகிறது நாவல்.

 

பழையன கழிதல் நாவல், காத்தமுத்துவின் காலத்தை முடித்து வைத்துப் புதிய யுகத்தை எழுதும் கௌரியின் நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் முடிவாக்கியுள்ளது கவனிக்க வேண்டிய ஒன்று. இந்த முடிவு புதிய யுகத்தைப் படைக்கும்- போராட்டத்தை அடையாளங்காட்டும்- சோசலிச யதார்த்த வாதத்தின் முடிவோடு ஒற்றுமைப் படுத்தத் தக்கதல்ல. அவ்வகை நாவல்களில் காணப்படும் அதியற்புதக் கனவுகளோ, நிச்சயமான நம்பிக்கைக் குரல்களோ வெளிப்பட்டுள்ளன என்று யாரும் சொல்ல முடியாது. இதில் வெளிப்படுவதெல்லாம், இந்தியச் சாதியச் சமூகத்தின் புரிதலும், அதற்குள் சாத்தியப்படும் வெளிப்பாடுகளும், மாற்றத்திற்கான அறிகுறிகளும் தான். தன் கண் முன்னால் காணாத ஒன்றைக் கண்ட பரவச நிலையைக் கௌரியோ- அவளை எழுதிய சிவகாமியோ முன் மொழியவில்லை என்பது முக்கியமான ஒன்று. இதற்கு மாறான அத்தகைய பரவச நிலை  வெளிப்பாடுகள் தமிழில் ஏராளமாக வந்துள்ளன;அவை சிறந்த முற்போக்குப் படைப்புகளாகப் பாராட்டவும் பட்டுள்ளன என்பதை நினைத்துக் கொள்ளலாம்.

 

காத்தமுத்துவைப் போலவே ஆனந்தாயி நாவலின் பெரியண்ணனும் வலிய ஆணின் பிரதிநிதிதான். சமூக வெளியில் விவரம் தெரிந்தவர்களாகவும், பணம் சம்பாதிக்கும் திராணியுள்ளவர்களாகவும் காட்டப்படும் ஆண்கள் - காத்த முத்துவும், பெரியண்ணனும். இருநாவல்களிலும் கடும் விமரிசனத்துக்குள்ளாகும் ஆணாதிக்கப்பிரதிநிதிகளும் கூட. குடும்பம் என்ற எல்லைக்குள் காத்தமுத்து தனது மனைவிமார்களுக்குத் தந்த துயரங்களைப் போலவே பெரியண்ணன் அவனது மனைவி ஆனந்தாயிக்கும், அவனது வைப்பாட்டி லட்சுமிக்கும் தருவனவெல்லாம் துயரங்கள் தான்.ஓர் ஆணின் உடல் தரும் சுகம், நீண்ட வலிகளின் தொடக்கம் என்பதாகத்தான் பெண்ணுக்கு இருக்கிறது என்பதைச் சிவகாமி இவ்விரு நாவல்களிலும் விரிவாகவே பதிவு செய்துள்ளார்.


 உடலுறவு இன்பம் என்பது அதில் ஈடுபடும் ஆணுக்கு மட்டும் தான்; அவனுடன் இணையும் பெண்ணுக்கு- அதிலும் சேரியில் வாழும் பெண்ணுக்குத் தொடரப்போகும் உடல் நலக்கேட்டின்-கர்ப்பம் தாங்குதல் அல்லது கர்ப்பத்தைக் களைத்தல், பிள்ளையைச் சுமத்தல், பேறுகாலம், பிள்ளை வளர்ப்பு என்ற தாய்மை சார்ந்த வேலை களுடன் வீட்டு வேலைகளையும், பெண்ணுக்கு எவ்வாறு இன்பமாக இருக்க முடியும் என்ற கேள்வியை ஆனந்தாயி நாவல் ஆழமாகவும் ஆணித்தரமாகவும் எழுப்பியுள்ளது.‘ வேலை; வேலையே வாழ்க்கை’ என்பது  பெண்களுக்கு- அதிலும் வீட்டிலும் வெளியிலும் பணியாற்ற வேண்டிய சேரிப் பெண்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையாக இருக்க, அந்தப் பெண்களோ அதனை வரமாகக் கருதி ஏற்பது எப்படி? என்பதான வினாக் களையும்  ஐயங்களையும் நாவலாசிரியர் தனது எழுத்து முறை மூலம் - விவரிப்பின் மூலம் உருவாக்கியுள்ளார்.

 

சிவகாமியின் எழுத்து முறை சமூக யதார்த்தத்தை எழுதும் நவீனத்துவ எழுத்தின் நீட்சி என்று முன்பே சொல்லப் பட்டது. தமிழில் நவீனத்துவத்தை உள்வாங்கியதில் பலவிதப் போக்குகள் உண்டு. சிவகாமிக்கு முன்னோடியாக அமைந்த போக்கு - வட்டாரத்தை,  வட்டார வாழ்க்கையை, பதிவு செய்த இடது சாரிகளின் போக்கு எனலாம். தங்கள் குடும்ப வரலாற்றை அல்லது முன்னோர்களின் வரலாற்றை - அவர்கள் வாழ்ந்த வெளியின் பேச்சு மொழி அடையாளத்தோடு பதிவு செய்த எழுத்தாளர்களைத் தான் சிவகாமி முன் மாதிரிகளாகக் கொண்டிருக்கிறார்.

 

முன் மாதிரியாகக் கொள்ளத் தக்கவர்கள் அல்ல எனக் கருதி அவர் தவற விட்ட தமிழ் எழுத்தாளர்கள் சிலரும் உண்டு. சுந்தர ராமசாமி, அசோகமித்திரன், சா.கந்தசாமி, நகுலன் போன்றவர்களின் பெயர்கள் இந்த நேரத்தில் நினைவுக்கு வருகிறது. இவர்களால் உள்வாங்கப்பட்ட நவீனத்துவம் ஒவ்வொன்றும் தனி அடையாளங்கள் கொண்டவை. சிவகாமியும் கூட இடதுசாரிகளின் அசலான நீட்சி அல்ல. பொதுவாகத் தமிழ் நாட்டு இடதுசாரிகள் அல்லது முற்போக்கு எழுத்தாளர்கள் கிராமம் X நகரம், பழைமை X புதுமை, அப்பாவித்தனம் X புத்திசாலித்தனம் போன்ற எதிர்வுகளில் முன்னதின் ஆதரவாளர்களாகவே வெளிப் பட்டுள்ளனர். நகரம் , புதுமை, புத்திசாலித்தனம் என்பவை முதலாளித்துவ அடையாளம் எனக் கருதும் அவர்கள், அதற்கு எதிராக இருக்கும் கிராமம், பழைமை, அப்பாவித்தனம் ஆகியவற்றைக் கண்ணை மூடிக் கொண்டு ஆதரிக்கின்றனர். இவை யெல்லாம், முதலாளித்துவ அடையாளத்தைவிடப் பிற்போக்கான- நிலப் பிரபுத்துவ அடிப்படைவாதத்தைச் சாராம்சமாகக் கொண்டிருந்தாலும் இடதுசாரிகளால் ஆதரிக்கப்படுகின்றன என்பதுதான் சோக முரண்.

 

சிவகாமியின் எழுத்து முறையில் அப்படியான ஆதரவு வெளிப்படவில்லை. கிராமீய வாழ்வின் மீதும், பழைமையின் மீதும், அப்பாவித்தனத்தின் மீதும் விமரிசனங்களை முன் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்க வேறுபாடு ஆகும். படைப்பில் இடம்பெறும் அந்தக் கிராமம் தனது கிராமமாகவே இருந்த போதிலும், அவரது உறவினர் களின் பழைமையாகவும்  அப்பாவித்தனமாகவும் இருந்த போதிலும் விமரிசனங்கள் கறாராக முன் வைக்கப் பட்டுள்ளன என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. இந்த மாதிரியான எழுத்து முறை- விமரிசன யதார்த்த எழுத்து முறை (Critical Realism) எனப்படும்.

 

இலக்கு வாசகர்களை மிகச் சுலபமாகப் படைப்புக்குள் உள்ளிழுத்து, அப்படைப்பின் நோக்கங்களை நிறை வேற்றிக் கொள்ளும் இயல்புடையது இந்த விமரிசன யதார்த்தம். ஒரு படைப்புக்குள் நுழையும் ஆதரவு நிலை வாசகனும், எதிர்ப்பு நிலை வாசகனும் விமரிசன நிலைக்குத் தூண்டப்படும்போது, அவரவர் வாழ்நிலை சார்ந்த விழிப்புணர்வையும், இரக்க உணர்வையும், குற்ற உணர்வையும், அடைவார்கள் என்பது ஒருவித நம்பிக்கைதான். மொத்தத்தில் இலக்கியப்பிரதி என்பதே நம்பிக்கைகளின் தொகுதி தானே?       



 பாமாவின் நாவல்கள்

தலித் இலக்கியத்தின் விரிந்த எல்லைகளுடன் கூடிய அழகியலின் பின்னணியில் சிவகாமி,பாமா என்ற படைப்பாளிகளின் நாவல்களைப் பார்க்கிறபோது, பாமாவின் படைப்புக்கள் தலித் அல்லாத வாசகனின் நுழைவுக் குரிய தடைகள் நிரம்பியதாகப்படுகிறது. பாமாவின் கருக்கு, சங்கதி, வன்மம் ஆகிய மூன்றுமே ஒரே மாதிரியான எடுத்துரைப்பு முறையைக் கொண்டவை. தன்வரலாற்றுத் தன்மை கொண்ட அக்கூற்றுமுறை மூன்று நாவல்களுக்கும் பொதுவானது. இப்பொதுத் தன்மையைப் பாமாவின் பலமாகவும், பலவீனமாகவும் சொல்லலாம்.

தான் வாழ நேர்ந்த நிறுவனங்கள்- சேரி, ஊர், பள்ளி, அதன் விடுதி, கல்லூரி, கன்னியர் மடம், ஆசிரியர் குழாம் என எதிலும் ஈடுபாட்டுடன் வாழ முடியாமல் தவித்த ஒரு பெண்ணின் பயணத்தைச் சொல்லும் முதல் நாவலான கருக்கில், அதற்கான காரணமாகத் தான் பிறக்க நேர்ந்த சாதியே என்கிறார். பாமாவின் சொந்த வாழ்க்கையை விவரிக்கும் இந்த நாவலின் இன்னொரு வெளிப்பாடாக மூன்றாவது நாவல் வன்மம் இருக்கிறது. இந்திய சாதி அடுக்கு முறையில் முடக்கப்படு கிறவர்களாகவும் ஒதுக்கப்படுகிறவர்களாகவும் இருக்கிற பள்ளர்களுக்கும் பறையர்களுக்கும் இடையே எப்படி முரண் தோன்றியது; இவ்விரு சாதிகளுக்கும் இடையே வளர்ந்து விட்ட வன்மங்களின் விளைவுகளால் ஏற்படும் இழப்புகள் எவ்வளவு கொடூரமானவைகளாக இருக்கின்றன? இந்த வன்மத்தைத் தூண்டும் ஆதிக்க சாதிகளின் கைங்கரியத்தை இவர்கள் உணராமல் இருக்கிறார்களே.. இவையெல்லாம் எப்பொழுது உணரப்படும்; மாறும் என்று தவிக்கிற தவிப்பு அதில் வெளிப்பட்டுள்ளது.

 

இந்த இரண்டு நாவல்களிலுமே கதை சொல்லியின் இடம் கதைக்குள்ளேயே இருப்பது போலத் தோன்றினாலும், அவளது சொந்த அனுபவங்கள் எதுவும் விவரிக்கப் படாமல் - அவை தரக் கூடிய வலி, துயரம், மகிழ்ச்சி, திளைப்பு- என எதுவும் பதிவு செய்யப்படாமல் தவிர்க்கப்பட்டு - மற்றவர்களின் எல்லாம் பதிவாகியுள்ளன. இவ்விரு நாவல்களிலும் விவரிக்கப்படும் நிகழ்வுகளில் பங்கேற்ற அனுபவங்களாக இல்லாமல், பார்த்த அனுபவங்களாகவே பாமாவால் விவரிக்கப்பட்டுள்ளன. இன்னொரு நாவலான ‘ சங்கதி’ யில் விவரிக்கும் பெண்களின் கதைகளோ பார்த்த அனுபவங்கள் கூட அல்ல; கேட்ட அனுபவங்கள். அதுவும் தனது பாட்டி, உறவினர் என வேறு வேறு பெண்கள் சொன்ன அனுபவங்களாகவே பதிவாகியுள்ளன.

 

பிள்ளைப்பேறு பார்க்கிற வௌ¢ளையம்மாக் கிழவி, கோழியெ சாமியாடிகிட்ட காணிக்கையாக் குடுத்த பாக்கியம், பேய் பிடிச்சு ஆடுற வீராயி, புருசன்; பொண்டாட்டி சண்டையில சீலயத் தூக்கிக் காட்டின ராக்கம்மா, தீப்பெட்டி ஆபிசுப் பீ ரூம்ல பேலாம வெளியில் பேண்டு அடிவாங்கிய மைக்கண்ணி, விதவையாப் போனபின்பு கல்யாணம் கட்டிக் கொண்ட முத்தரசி, பேச்சிப்பிள்ளை எனப் பலவிதமான பெண்களின் வாழ்தல் சார்ந்த - இருப்பு சார்ந்த பதிவுகள் , வாசகர்களிடம் - குறிப்பாகத் தலித்தல்லாத வாசகர்களிடம் உண்டாக்குவது குற்ற உணர்வோ, அச்ச உணர்வோ ஆக இருக்க முடியாது. தான் அறிந்திராத ஒரு பிரதேசத்தில் நிகழ்ந்த சில நிகழ்வுகளை அறிந்ததால் உண்டாகும் இரக்க உணர்வாக இருக்க முடியும். அதே வேளையில் தலித் வாசகர்களுக்கு தங்கள் பழைய வரலாற்றை- அடக்கப்பட்டதை- அடிக்கப்பட்டதை- ஒதுக்கப்பட்டதை- அறியாமையில் வாழ்ந்ததை- இனிச் செய்ய வேண்டியதை நினைவு படுத்துவதாக அமையும். அந்த வகையில் பாமாவின் எழுத்துக்கள், தலித் வாசகர்களை நோக்கி விரியும் தலித் படைப்பாக நீள்கிறது.

 

பாமாவின் மூன்று நாவல்களிலுமே ஏராளமான பெண்கள் இடம் பெற்றுள்ளனர். பெயர்கள் குறிப்பிட்டு சொல்லப்படும் கதாபாத்திரஙகளை எண்ணிக் கணக்கிட்டால் ஆண்களை விடப் பெண்களே அதிகம் என்பது தெரிய வரும். என்றாலும், இம்மூன்று நாவல்களிலுமே கதை சொல்லுகிற ஒரு மையப் பாத்திரத்தைத் தாண்டி வேறு ஒரு முக்கியக் கதாபாத்திரத்தை அடையாளங்காட்ட முடியாது. கதை சொல்லுகிற அந்தப் பெண்ணின் சொந்த அனுபவங்கள்- பெண் என்பதால் அனுபவிக்க நேர்ந்த அனுபவங்கள் எதுவும் பதிவாக்கப்படவில்லை. ஆனால் தலித் பெண்களுக்குக் குடும்ப வெளிக்குள் ஏற்படும் கணவன் - மனைவி சார்ந்த பிரச்சினைகளுக்குப் பதிலாகப் பொதுவெளியில் அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளே அதிகம் பதிவு செய்யப்பட்டுள்ளன. குறிப்பாகக் கிராமங்களில் நடைபெறும் கலவரம்- சாதி மோதல்கள் காரணமாகத் தலித் பெண்கள் படும் அவதிகளும் துயரங்களும் விரிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. கலவரங்களைத் தொடர்ந்து காவல்துறையினர், சேரிப் பெண்களிடம் நடந்து கொள்ளும் விதம் வன்மம் நாவலில் விரிவாகப் பதிவாகியுள்ளது( 100-110).அத்துடன் தலித் உணர்வு பெற்ற ஆண்களும் கூடப் பொது நிகழ்வுகளில் பெண்கள் பங்கேற்பதைத் தடுக்கவே விரும்புகின்றனர் என்ற குற்றச் சாட்டையும் பாமா முன் வைத்துள்ளார்.

 

தலித் அல்லாத மேகளக்குடிப் பெண்களைவிடக் கூடுதலான உடல் உழைப்பைச் செய்யும் சேரிப் பெண்களுக்குக் கணவன்மார்கள் தரும் துயரத்தைப் பதிவு செய்வதை- ஆண்X பெண் என்ற எதிர்வுகளை மையப்படுத்திப் பேசுவதைப் பாமா பிரக்ஞை பூர்வமாகத் தவிர்த்துள்ளார். என்றாலும், பெண்களின் மீதான பரிவு- பெண்களின் பிரச்சினைப்பாடுகள்- பெண்களுக்கேயுரிய தனியான சோகங்கள் என்பதையும் எழுதியுள்ள பக்கங்கள் அவரது எழுத்துக்களில் நிறைய உள்ளன. குறிப்பாக அவரது இரண்டாவது நாவல் சங்கதி பல்வேறு சூழ்நிலைகளில் - பின்னணிகளில்- சேரிப் பெண்கள் வாழ நேர்வதின் தொகுப்புத்தான்.இந்தத் தொகுப்பே  ஒரு பெண்ணின் கதை யாக நீண்டிருக்குமாயின்- பெண்ணியத்தை- விவாதப் பொருளாக்கிக் கொண்ட நாவலாக ஆகியிருக்கக் கூடும்.


 

=============================================

 

புதியகோடாங்கி, அக்டோபர்,2003

 

 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்