பெரியார்மண்ணும் பிராமணியத்தின் இயக்கமும்.

இந்துவாக உணர்தல்  

பிராமணிய த்தன்னிலையைக் கைவிடுதல் இங்கு பலருக்கும் முடியாத ஒன்றாக இருக்கிறது. பிறப்பின் வழியாகவே பிராமணர்கள் என நினைத்துக் கொள்பவர்களுக்கும், வேறு வர்ணத்தில் பிறந்து பிராமணியத் தன்னிலை நோக்கிப் பயணிப்பதாக நினைப்பவர்களுக்கும் நிகழ்காலப் பகையாக இருக்கும் பெயர் ஈ .வெ. ராமசாமி. நீண்டகாலப் பகையாக இருக்கும் பெயர் கௌதம புத்தர்.

பிராமணியம் என்பது நபர்கள் அல்ல. அதுவொரு கருத்துருவாக்கம். உருவாக்கப்பட்ட கருத்தின் வழியாகத் தன்னைப் பெரும்பான்மைக் கூட்டத்திலிருந்து விலக்கி வைத்துக்கொண்டு புனிதம் x தீட்டு என்ற இரட்டை எதிர்வின் வழியாக நகர்ந்துகொண்டிருக்கிறது என்று விளக்குபவர்கள் புத்தரை முதன்மையாக நினைக்கிறார்கள். சனாதனம், வர்ணப்பாகுபாடு என்பனவற்றைத் தீர்மானிப்பதில் இரட்டை எதிர்வு மனம் செயல்பட்டுக் கொண்டே இருக்கிறது. மேல்x கீழ் எதிர்வுநிலையை ஏற்றுக் கொண்ட பார்வை, நாட்யதர்மிx லோக்தர்மி , வேத்தியல் பொதுவியல் , செவ்வியல் இலக்கியம் x நாட்டாரியல் இலக்கியம், அக்கிரகாரப்பண்பாடுx சேரிப்பண்பாடு என நீண்டுகொண்டே இருக்கும் எனச் சொன்னதின் வழியாக - பரப்புரை செய்ததின் வழியாகத் தன்னைப் பிராமணியத்தின் எதிரியாகக் கட்டமைத்துக் கொண்டவர் பெரியார் ஈ.வெ.ராமசாமி

எல்லாவற்றையும் இரட்டையாகப் பார்ப்பது சிக்கலானது என்றாலும் அப்படிப்பார்க்கும்படி உண்டாகும் நெருக்கடியிலிருந்து தமிழகம்/ இந்தியா விலகி விடாமல் தவிக்கிறது. அந்தத் தவிப்பு சரியா? தவறா? என்பதை நிகழ்வுகளின் முடிவுகள்தான் சொல்கின்றன. முன்கூட்டிய கணிப்புகள் எப்போதும் தவறாகி விடுகின்றன. இதனைத் தமிழ்நாட்டின் தனித்துவம் என்றுதான் சொல்லவேண்டும். இங்கே இரட்டை எதிர்வு உருவாக்கப்படுகிறது என வாதம் செய்பவர்கள் தங்களின் கண்களுக்குப் பக்கப்பட்டை போட்டுக்கொண்டு பயணிப்பவர்களாக இருக்கலாம். இரட்டை எதிர்வு உருவாக்கப்படுகிறது என்பதைவிட இரட்டை எதிர்வாகவே தமிழ்மனம் இயங்குகிறது.

அண்மைக்கால நிகழ்வுகளான மாடுபிடிப் போட்டி தொடங்கி மாவுப் பொட்டலம் வரை எதிரெதிர் முனைகளாகப் பிரிந்துவிடும் லாவகம் இங்கே தன்னெழுச்சியாக உருவாகிவிடுகிறது. ஆண்டாள் பாடல், ராஜராஜ சோழன் எனப் பண்பாட்டுக் குறியீடுகள் மட்டுமல்லாமல் காவிரியில் தண்ணீர், முல்லைப் பெரியாரில் அணை, மருத்துவக் கல்விக்கான மையப்படுத்தப் பெற்ற பொதுத்தேர்வு, நாடு தழுவிய வரிவிதிப்புக் கொள்கை, சென்னையில் தொழிற்பெருக்கம், மதுரையில் ஆய்வுக் கூட மருத்துவமனை, திருப்பூரில் சாக்கடைப் பெருக்கம், வந்துவிட்ட கல்விக் கொள்கை, வேளாண்மையைக் கைவிட்டுவிட்டுத் தொழிற்சாலைகளைச் சார்ந்த வாழ்க்கை எனப் பொருளியல், கல்வி, உடல்நலம், சூழல் நடவடிக்கைகள் பற்றிய பேச்சு என்றாலும் இந்த இரட்டை எதிர்வு தவிர்க்க முடியாமல் உருவாகி விடுகிறது. உருவாக்கப்படும் இரட்டை எதிர்வில் எப்போதும் ஒரு தரப்பாகப் பிராமணர்கள் இருக்கிறார்கள்.
 
பிராமணர்களின் எண்ணிக்கை மிகக் குறைவுதான். ஆனால் அவர்கள் பலம் வாய்ந்த தரப்பாக - கருத்தியல் பலம் வாய்ந்த தரப்பாக இருக்கிறார்கள். அந்தத் தரப்பின் முன்மொழிவுகளை விவாதிக்கும் தரப்புகளாகவே மற்றவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எடுக்க வேண்டிய சார்பைத் தீர்மானித்த இடத்தில் பெரியார் ஈ.வெ.ரா. அவர்களின் நிலைபாடு முன்னிற்கிறது. பிராமணர்கள் எதனை ஆதரிக்கிறார்களோ, அதற்கெதிரான நிலைபாட்டை மற்றவர்கள் எடுக்கவேண்டும் என்று கற்றுத் தந்து விட்டுப் போயிருக்கிறார் அவர்.
அதுவே பெரியாரின் மண் என்ற சொல்லாடலின் பின்னிருக்கும் எடுகோள். இதனை உள்வாங்கிய நிலைபாட்டோடு பேசும் பேச்சுகள்தான் ‘பெரியார் மண்’ என்ற சொல்லாடலின் தளவிரிவு. அதல்லாமல் கடவுளை மறுத்ததையும் சமயக் குறியீடுகளைக் கேள்விக்குள்ளாக்கி பேசியனவற்றையும் பெரியாராகக் கணித்தால் திசைமாற்றமே ஏற்படும். பெரியாரைக் கடவுள் மறுப்பாளராக மட்டும் முன்வைப்பதில் இருக்கும் உள்நோக்கம் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.
60 ஆண்டுகாலத் திராவிட இயக்கங்களின் ஆட்சியில் கோயில்களும் சடங்குகளும் நம்பிக்கைகளும் கூடியுள்ளன. அதுவே பெரியாரின் தோல்வியைக் காட்டுகின்றன என்று பேசி இது பெரியாரின் மண் அல்ல என்ற கருத்தை உருவாக்கும் முயற்சிகளின் பரப்புரைகள் அவை. மாநிலக் கட்சியா? தேசிய கட்சியா? என்ற பார்வையை விடவும் இதன்வழி உண்டாகும் பலனை அடையப்போகிறவர்கள் யார்? என்ற கேள்வியை முன்வைத்தே சொல்லாடல்கள் தமிழ்நாட்டில் உருவாகிறது. நிகழ்வொன்றைக் கணிக்கும்போது எந்த வர்க்கத்தின் சார்பாக இருக்கப் போகிறது என்று கணிக்கவேண்டும். அதில் ஒடுக்கப்படும் வர்க்கத்தின் பக்கம் நிற்பது முக்கியம். பிராமணியம் ஒரு வர்க்கம்; அது பொருளியல் நடவடிக்கைகளை வெளிக்காட்டாமல் பண்பாடு, கலை, அழகியல், தத்துவம் என மேற்கட்டுமானங்களில் மட்டுமே இயங்குவதாகப் பாவனை செய்யும் வர்க்கம். பிராமணியம் என்பது ஆளும் வர்க்கத்தின் அதிகாரக்கண்ணி எனப் புரியத்தொடங்கினால் குழப்பங்களின் மீது வெளிச்சம் பரவலாம். அந்த வெளிச்சக்கதிர்களை- உருவாக்கிய -பரப்பிய- சொல்லாக இருக்கிறது பெரியார் மண் என்ற சொல்லாடல்

தமிழ்ப் பிராமணியம்

தமிழ்நாட்டில் 1967 முதல் , திராவிட இயக்கங்களின் ஆட்சிதான் இருக்கின்றது. 1967 இல் ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவர உதவிய கூட்டணியில் திரு.ராஜகோபாலாச்சாரி இருந்தார். அவர் தன்னை முதன்மையாக வலதுப் பொருளியல் ஆதரவாளராகக் காட்டிக்கொண்டு காங்கிரஸ் அரசை - நேருவின் தேசியக்காங்கிரஸ் அரசை எதிர்த்தார். இந்திய அளவில் அவரால் அரசியல் செல்வாக்குப் பெற முடியாத நிலையில் தனது அரசியல் நடவடிக்கைகளைத் தமிழகத்திற்குள் சுருக்கிக் கொண்டார்.

நேருவின் தலைமையை ஏற்ற காமராசரை எதிர்க்கும் முகமாகவே 1967 இல் திரு. சி.என். அண்ணாதுரையின் தலைமையிலான திராவிட முன்னேற்றக்கழகத்திற்கு ஆதரவளித்தார். ஆலோசனைகள் வழங்கினார். அப்போது அவரது முதன்மை வலதுசாரிப் பொருளியல் ஆதரவுதான். சாதியக் கட்டுமான ஆதரவு இரண்டாம் நிலைதான். அண்ணாதுரையின் மரணத்திற்குப் பின்னான திமுக அரசு, கலைஞர் மு.கருணாநிதி தலைமையில் செயல்பட்டபோது பிராமணர்களின் ஆலோசனையைக் கேட்காத அரசாக மாறியது. அன்றிலிருந்து தமிழகப் பிராமணர்கள் திராவிட முன்னேற்றக்கழகத்தின் எதிரிகளானார்கள். பெயரில் எப்படி வேண்டுமானாலும் இருந்துவிட்டுப்போகட்டும் எனத் திட்டமிட்டுத் தங்கள் ஆலோசனையைக் கேட்டு நடக்கும் ஒரு கட்சியை - அண்ணாதிராவிட முன்னேற்றக்கழகத்தைத் தொடங்கும் நடவடிக்கைகளின் பின்னணியில் இருந்தார்கள். அவரது ஆட்சியில் தங்களின் பொருளாதார, பண்பாட்டு நடவடிக்கைகளை மறுகட்டமைப்புச் செய்தார்கள். வெகுமக்கள் அரசியல் தாண்டி, சிற்றிதழ்கள், கலை, இலக்கியம் போன்றவற்றில் நவீனத்துவம் என்ற பெயரில் பிராமணையப் பண்பாட்டு மரபையே வேறுவேறு வார்த்தைகள் முன்வைத்தார்கள். உடல் உழைப்புசார்ந்த உற்பத்தியை எப்பொழுதும் அறிந்திராத அவர்களின் உழைப்பு மூலதனம், கலை, இலக்கியம், பொழுதுபோக்கு, ஊடகங்கள் என நகர்ந்தன. இதற்கு உதவும் அரசுகளையே ஆதரித்தனர். திரு எம்.ஜி. ராமச்சந்திரனும், ஜெ.ஜெயலலிதாவும் அப்படியான அரசுகளைத் தந்தார்கள்.

தனது அரசியல் நடவடிக்கைகளில் எப்போதும் மனம் தளராத திரு. மு.கருணாநிதி ஆட்சிக்குவரும் போதெல்லாம் அவருக்கு எதிர்நிலைப் பாடெடுப்பதைக் கவனமாகச்செய்தது தமிழ்நாட்டுப் பிராமணியம். திறமை, நேர்மை, ஊழலின்மை போன்றவற்றின் ஆதரவாளர்களாகச் சொல்லிக்கொண்டே கடந்த 10 ஆண்டுகளில் நடந்த மோசமான ஆட்சியைத் தக்கவைக்கவும் அதன் பின்னணியிலிருந்து ஆலோசனைகள் சொல்லவும் தங்கள் கூட்டத்தின்/ வர்க்கத்தின் நலனை மேம்படுத்திக் கொள்ளவும் வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் செயல்பட்டனர். அச்செயல்பாடுகளை மறைக்கத் தேசியம், தேசியப்பண்பாடு, சமயநம்பிக்கை போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தினார்கள்.

திராவிடம் - ஆரியம் என்ற எதிர்வின் தோற்றப்பின்னணியில் மொழி அடையாளமும் மொழிக்குடும்பங்களின் இணைப்புகளும் இருந்தன என்றாலும், நீதிக்கட்சியாகவும், திராவிட முன்னேற்றக்கழகமாகவும் மாறியபின் மொழிசார்ந்த ஒத்திசைவு பின்னுக்குத் தள்ளப்பட்டு, திராவிடம் எனது சமூகநீதி, உள்வாங்கும் பொருளியல் நடவடிக்கைகள், தாராளவாத முதலாளியச் செயல்பாடு என்னும் கருத்தியலாக மாறியது. அதனை ஏற்றுக் கொள்ளத் தயாரில்லாத பிராமணியம், திராவிடத்தை மொழி அடையாளமாகவும் இன அடையாளமாகவும் சுருக்கிப் பிரித்தாளும் சூழ்ச்சியைத் தொடர்ந்தது.

கருத்தியலைக் கருத்தியலாக எதிர்கொள்வதைக் கவனமாகத் தவிர்த்துவிட்டு இனம், மொழியாகச் சுருக்குவதின் மூலம் திராவிட இயக்கத்தின் மீது வெறுப்பு அரசியல் சாயத்தைப் பூச முடியும் என நம்புகிறது. அதற்கு உதவும் குழுக்களைத் தூண்டுகிறது. வன்மமும் வெறுப்பும் கொண்ட அக்குழுக்கள் மீது எந்தவித விமரிசனங்களையும் வைக்காமல் திராவிட முன்னேற்றக்கழகத்தை மட்டும் ஒற்றை எதிரியாகத் தெரிவு செய்து எதிர்க்கும் பிராமணியத்தின் வேர்கள் பலவிதமானவை. சனாதனத்தை நேரடியாகத் தூக்கிப்பிடிக்கும் அடிப்படைவாதிகள் ஒரு முகம். மனித உரிமை, பண்பாட்டுக் காப்பு, நவீனக் கலை இலக்கியம் எனப்பேசும் தாராளவாத பிராமணியம் இன்னொரு முகம். இரண்டுமே அடிப்படை நேர்மையற்றவை. ஆட்சிக்கு வரும் யாரையும் அண்டிப்பிழைக்கும் அருவெருப்பானவற்றைச் செய்யக் கூச்சமே படாத கூட்டம் அது. முந்தாநாள் வரை எதிரியெனப் பேசியதை மறைத்து உடனடியாகக் கதவைத் தட்டிக் காலில் விழுவதைச் செய்யத் தயங்காதவர்கள். அடிப்படைவாதம் பேசும் கூட்டங்கள் இப்படித்தான் இயங்கும். ஆனால் விமரிசனம், தன்னுரிமை எனப் பேசிக்கொண்டே மறைமுகமாக அதிகாரத்தை அடையும் வழியைத் தேடும் கூட்டம்தான் ஆபத்தானவை. வெளிப்படையாகப் பேசுவது எதிர்நிலை என்றால், மறைமுகமாகத் தேடுவது சமரசமும் வாய்ப்புகளைத் தேடுவதும்.

இதனைச் சரியாகவே புரிந்துகொண்டுள்ள அரசாக இப்போது பொறுப்பேற்றுள்ள அரசு இருக்கும் என்பதற்கான அடையாளங்கள் வெளிப்படுகின்றன. மேம்பட்ட பொருளியல் வாழ்வு என்ற அடிப்படையின் மேல், மொழி சார்ந்த வளர்ச்சியும் பண்பாட்டு நடவடிக்கைகளும் இந்த அரசின் முதன்மைத் தெரிவுகள் என்பதை முதல்வர் உறுதிபடுத்திச் சொல்லியுள்ளார். இந்த உறுதியைச் சொல்லும் முதல்வருக்குப் பின்னால் தங்கள் ஆலோசனைகள் இல்லை என்பதால் எதையாவது சுட்டிக்காட்டிக் கொண்டே இருக்கப்போகிறது பிராமணியம்.

இந்தியப் பிராமணியம் அறிவு என்பது தங்களுடைய அறிவு மட்டுமே; வாழ்வியலும் பண்பாடும் நாங்கள் உருவாக்கியவை தான். மற்றவர்களெல்லாம் பிராமணியம் சொல்வதைக் கேட்டு நடக்க வேண்டியவர்கள் என்பதை இன்னும் - 21 ஆம் நூற்றாண்டிலும் நம்பிக்கொண்டிருக்கிறது. ஏற்பு என்பதே அவர்களின் கருத்தியல் கிடையாது. விலகலும் ஒதுக்குதலுமே அவர்களின் கருத்தியல்; செயல்தளம். இந்திய/ தமிழ்ப் பிராமணியத்தைக் கண்டுகொள்ளாமல் தவிர்ப்பதே வெற்றிக்கான வழி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்