தமிழ் இலக்கியங்களின் வரலாறு நீண்ட மரபு கொண்டது. பல்வேறு இலக்கிய வகை களையும் பலவகையான படைப்பாக்க முறைகளையும் தமிழ் இலக்கியம் கண்டுள்ளது, ஒரு மொழியின் இலக்கிய வரலாறு என்பதே ஒவ்வொரு காலத்திலும், இலக்கியங்கள் மாறி வளர்ந்து வருகின்ற தன்மையைப் பொறுத்தது தான். தமிழக வரலாற்றில் பிற்காலச் சோழர் காலத்தில் காணப் பட்ட காப்பியங்களின் எழுச்சி, அதன் பிற்காலத்தில் வீழ்ச்சி பெறுவதைக் காணலாம். அதன் பின்னர் சோழப் பேரரசு போன்ற பெரும் வல்லமை படைத்த அரசு அமைந்திராத நிலையில் இலக்கிய வரலாற்றிலும் மாற்றம் காணப்படுகிறது. சிற்றிலக்கியங்கள் அதிகமாகத் தோன்றிய காலம் நாயக்கர்களின் காலம் என்பது பலரும் ஒப்புக்கொள்கின்ற செய்தி.. சிற்றிலக்கியங்கள் எத்தன்மையன? அவற்றின் பாடுபொருட்கள் எவை? பாடுபொருட்களுக்கும் வடிவத்திற்கும் இருந்த உறவு எத்தகையது? என்று இலக்கிய ஆராய்ச்சியில் கவனம்¢ செலுத்துவது தனி ஆராய்ச்சி. இங்கு அத்தகைய இலக்கியங்கள் வழியாக, அந்தக் காலத்து அரசியல் பொருளாதார, சமூக வாழ்க்கை ஆராயப்படுகிறது.