நவம்பர் 20, 2022

தமிழ்க் கல்வி: பாய்ச்சலாக மாற்றவேண்டும்.


இரண்டு மாதங்களுக்கு முன்பு“பொதுப்பல்கலைக்கழகப் பட்டப்படிப்புகள் அனைத்துக்கும் இரண்டு ஆண்டுகளிலும் எந்தவித வேறுபாடுமின்றித் தமிழ் மொழிப் பாடம் கற்பிக்கப்பட வேண்டும்” என்று அறிவிக்கப்பட்டது. இப்போது தொழிற்கல்வி படிப்புகளான “பொறியியல் பட்டங்களுக்கும் தமிழ் இரண்டு ஆண்டுகளுக்குக் கற்பிக்கப்படும்” என்று அறிவிப்பு வந்துள்ளது. உயர்கல்வியில் தமிழின் இடம் பெரிய கேள்விக்குறியாக இருந்ததை இந்த அறிவிப்பு திசைமாற்றப்போகிறது. வரவேற்றுக் கொண்டாட வேண்டிய ஓர் அறிவிப்பு
நிகழ்காலத் தேவைக்கான மொழியாகத் தமிழை மாற்றுவதற்குப் பல்கலைக்கழக அளவில் செய்யக் கூடிய மாற்றங்கள் மொழிப்பாடத்திலேயே செய்யப்படவேண்டும். ஏனென்றால் இதனைக் கற்றவர்களே பல்வேறு துறைகளிலும் பல்வேறு நிலைகளிலும் மொழியைப் பயன்படுத்துபவர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்குத் தமிழைப் பயன்பாட்டு மொழியாகக் கற்பிக்கவேண்டும். இப்போதுள்ள பாடத்திட்டங்களில் அந்த நோக்கம் இல்லை.

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் (2014) ஒரு பயிலரங்கம் நடத்தி, பயன்பாட்டு நோக்கில் பட்டப்படிப்புகளின் தாள் ஒன்றை எப்படி வடிவமைக்கலாம் என்று பரிந்துரை செய்தோம். தமிழ்நாடு உயர்கல்வி வாரியத்தின் நிதியுதவியோடு அப்பயிலரங்கம் நடத்தப்பட்டது. கணினித் தொழில்நுட்பம், மொழிபெயர்ப்பு போன்றவற்றில் தொடர் செயல்பாடுகள் கொண்டிருந்த பத்ரி சேஷாத்ரி, ஆழி செந்தில் நாதன், உள்ளூர் செய்திப் பத்திரிகை ஆசிரியர்கள் எனப் பலதரப்பினர் அழைக்கப்பட்டு விரிவான விவாதங்கள் நடத்தப்பட்டன. தயாரிக்கப்பட்ட பரிந்துரைக் கோப்பு உயர்கல்வி வாரியத்திற்கு அனுப்பப்பட்டது. அந்தக் கோப்பு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை;பஎன்ன ஆனது என்று தெரியவில்லை. மாற்றங்கள் எதுவும் நடக்கவில்லை.

இருக்கும் நிலைமைகள்

இதுவரையிலும் பட்டப்படிப்புகளுக்கான மொழிப்பாடம்- பகுதி ஒன்று (தமிழ்) இரண்டு விதமான நிலையில், இரண்டுவிதமான அளவில் கற்பிக்கப்படுகின்றது. மூன்று ஆண்டு பட்டப்படிப்பில் அறிவியல், சமூக அறிவியல்,கலையியல் பட்டப்படிப்பு படிப்பவர்களுக்கு நான்கு பருவங்களில் தமிழ் கற்பிக்கப்படுகிறது. அதே நேரம் கணினி அறிவியல், வணிகவியல், வணிக மேலாண்மை, சிறப்புக் கணிதம், தகவல் தொழில் நுட்பம் போன்ற பட்ட வகுப்புகளுக்கு இரண்டு பருவத்தில் மட்டுமே கற்பிக்கப்படுகின்றது. ஏனென்றால் அவை தொழிற்வாய்ப்புப் படிப்புகள் என வகைப்படுத்தப்பட்டு மொழிப்பாடங்கள் முக்கியமில்லாமல் ஆக்கப்பட்டுள்ளன. முக்கியமில்லாத மொழிப்பாடமாகத் தமிழ் மட்டுமே உள்ளது; ஆங்கிலம் அப்படி ஆக்கப்படவில்லை என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. அதேபோல் பொறியியல் படிப்புகளுக்கும் தமிழகக் கல்லூரிகளில் ஆங்கிலம் முதல் வருடத்தில் ஒரு பாடமாக – பொறியியல் ஆங்கிலமாகக் கற்பிக்கப்படுகிறது. தமிழ்மொழி எந்தப் பாடமாகவும் இல்லை. மருத்துவக் கல்வியில் மொழிப்பாடங்களே இல்லை.

உள்ளடக்கங்கள் மாற வேண்டும்.

தமிழ்மொழிக்கல்வியில் பாய்ச்சலை உண்டாக்கும் அறிவிப்பு இது என வரவேற்கும் அதே நேரம் செய்யவேண்டிய சில மாற்றங்களைக் குறித்தும் சொல்லவேண்டியதுள்ளது. பல்கலைக்கழகங்களில் தமிழ்பாடங்கள் இரண்டு நிலையில் உள்ளன. பட்டப் படிப்புகளுக்குப் பகுதி ஒன்றைத் தவிர, இளநிலைத் தமிழ் இலக்கியப்படிப்பிலும் தமிழ் கற்பிக்கப்படுகிறது. இவ்விரண்டு படிப்புகளுக்கும் தயாரிக்கப்படும் தாள்களின் அமைப்பும் உள்ளடக்கமும் வேறுபாடு இல்லாமல் நீண்ட காலமாகத் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. முதன்மைப்பாடமாகப் படிக்கும் தமிழுக்கும், பகுதி ஒன்று பாடமாகப் படிக்கும் தமிழுக்கும் ஒரே நோக்கம் ஏற்கமுடியாத ஒன்று. இதனை மாற்றுவது அவசியமானது.

பகுதி ஒன்றின் நோக்கம் இலக்கிய அறிமுகம் மற்றும் ரசனை உருவாக்கம் என்பதாக இப்போது இருக்கிறது. அத்தோடு தமிழக அரசு நடத்தும் போட்டித்தேர்வில் பங்கேற்கும் வாய்ப்பை அதிமாக்குதல், ஒன்றிய அரசு நடத்தும் குடிமைத்தேர்வில் தமிழைச் சிறப்புப்பாடமாக எடுப்பவர்களுக்கு உதவுதல் போன்றன காரணங்களாகச் சொல்லப்படுகின்றன. இதற்கு மாறாக இந்தத் தாள்களை மொழிவளம் உருவாக்குதல், அவர்களின் துறைசார்ந்த பயன்பாட்டில் பயன்படுத்துமாறு கற்பித்தல் என்பதாகப் அமைக்க வேண்டும். இலக்கியப்பகுதிகளைக் குறைத்துக் கொண்டு மொழிக்கூறுகளை அதிகப்படுத்தித் தமிழைப் பிழையின்றி எழுதக் கற்பிக்க வேண்டும். அத்தோடு அவர்கள் துறை சார்ந்த எடுத்துரைப்புகளைப் பேச்சு வழியாகவும் எழுத்து வழியாகவும் நிகழ்த்தவும் தூண்டும் விதமாகப் பாடத்திட்டத்தை மாற்றியாக வேண்டும். உடனடியாகச் செய்ய வேண்டிய மாற்றம் இது. அதன் வழியாகவே தமிழ்மொழியை அனைத்துத் துறைகளுக்கும் பயன்படும் மொழியாக மாற்ற முடியும்.

தமிழின் வாழ்வுக்கான தேவையாகக் கருதி இந்த மாற்றத்தைச் செய்தாக வேண்டும். எப்போதோ செய்திருக்க வேண்டிய இம்மாற்றத்தை உடனடியாகச் செய்ய வேண்டும். இப்போதும் செய்யவில்லை என்றால் தமிழ்மொழியின் இருப்பும் எதிர்காலமும் வாழ்வும் பெரும் கேள்விக்குரியாக மாறி விடும். தமிழ்ப் பாடங்கள் பயனுடையதாக மாற்றப்படவில்லை என்றால் தமிழ் மொழியின் எதிர்காலம் மட்டுமல்ல; தமிழாசிரியர்களின் எதிர்காலமும் கேள்விக்குரியதே.


மாற்றங்கள் செய்வதெப்படி:


இதுவரையிலான தமிழ்ப்பாடத்திட்டங்களைப் பெரும்பாலும் தமிழ்ப் பேராசிரியர்களே உருவாக்கி வந்துள்ளனர். அதன் காரணமாகத் தமிழ் ஆசிரியர்களின் அறிவெல்லைக்குள் இருக்கும் இலக்கியரசனை, பண்பாட்டுப் பெருமிதம் போன்றவைகளைக் கற்பிப்பதே போதும் என்ற நிலை இருக்கிறது. தமிழை முதன்மைப்பாடமாகப் படித்த தங்கள் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் ஒன்றாக நினைக்கிறார்கள். அத்தோடு அவர்களின் எல்லைக்குள் மொழிப் பயன்பாடு இருப்பதாக நம்பிக்கொண்டு மரபான கற்பித்தல் முறைகளையே பின்பற்றுகின்றனர். இந்த எண்ணங்கள் மாற்றப்படவேண்டும். மொழி கற்பித்தலின் புதிய அணுகுமுறைகள் அறிமுகப்படுத்தப்படவேண்டும்.

நவீன அறிவுத்துறைகளின் வளர்ச்சிக்குப் பின்னால் மொழிப்பயன்பாடு மொழி ஆசிரியர்களின் கையைவிட்டு நழுவி அந்தத்துறைகளின் ஆசிரியர்களிடமும், துறைசார் வல்லுநர்களிடமும் சென்று விட்டது. இதனை உணர்ந்தே பாடத்திட்டக்குழுக்கள் உருவாக்கப்பட வேண்டும். வெகுமக்கள் தளத்தில் மேலாண்மையியல், ஊடகவியல், கணினி அறிவியல், மருத்துவம் போன்றவற்றைத் தமிழில் பேசும்/ எழுதும் துறை வல்லுநர்கள் இப்போது அறியப்பட்டவர்களாக இருக்கிறார்கள். மற்ற துறைகளிலும் தேடினால் கிடைக்கக்கூடும். அவர்களைப் பெரும்பான்மையானவர்களாகவும் மொழித்துறையினரைச் சிறுபான்மை எண்ணிக்கையிலும் கொண்ட பாடத் திட்டக்குழுக்களை உருவாக்குவதின் வழியாகத் தமிழைப் பயன்பாட்டு மொழியாக ஆக்கும் நோக்கத்தை உருவாக்கவேண்டும். அந்நோக்கத்திற்கேற்ப பாடத்திட்டங்களையும் கற்பித்தல் வழிமுறைகளையும் உருவாக்க முடியும்.

ஒருசில பாடத்திட்டங்கள் என்பதற்குப் பதிலாகச் சில பத்து மொழிப்பாடத் தாள்களை உருவாக்கவேண்டும். என்னைக்கேட்டால் இப்போது இருப்பதுபோல் தாள் ஒன்று என்பது பொதுவான தாளாக இருக்கக்கூடாது என்றே சொல்வேன். சில பொதுக்கூறுகளோடு, ஒவ்வொரு துறைக்கும் தனித்தனியான பாடங்கள் உருவாக்கப்பட வேண்டும்.பொதுவான கேள்வித்தாள் என்ற முறையை மாற்றிப் பொதுவான எழுத்துத்தேர்வோடு ஒவ்வொரு துறைக்கும் சிறப்பான செய்முறை மற்றும் வாய்மொழித் தேர்வுகளைச் சோதனை செய்யவேண்டும். தீவிரமான மாற்றங்கள் வழியாகவே தமிழை அனைத்துத்துறைக்குமான மொழியாக மாற்ற முடியும். அப்படிச் செய்யாமல் எல்லாப் பட்டப்படிப்புகளிலும் தமிழ் கற்பிக்கப்படுகிறது என்பதால் மட்டும் எந்த மாற்றமும் நிகழ்ந்துவிடாது.