தொலைந்துபோகும் பெண்கள்


எளிமையான கதைமுடிச்சு, அதனை அவிழ்த்து அவிழ்த்துக் காட்டும் திரைக்கதை அமைப்பு, காட்சிப்படுத்துதலிலும் நிகழ்வுகளை அடுக்கிச்சொல்வதிலும் நவீனத்துவ முறைமை என்பது அமீர்கானின் சினிமாக்களின் பொதுத்தன்மை. அத்தோடு குறிப்பான இடத்தில் – குறிப்பான சமூகச்சூழலில் வைத்து விவாதிக்கும் பேசுபொருள் என்பதும் இன்னொரு பொதுத்தன்மைதான். தொலைந்து போகும் பெண்கள் ( LAAPATAA LADIES) படமும் அப்படியான பொதுத்தன்மைக்குள் எடுக்கப்பட்டுள்ள நல்லதொரு சினிமா.

விடுதலைக்குப் பின்னான இந்தியாவில் நடந்திருக்க வேண்டிய மாற்றங்களை- சாதீய வேறுபாடுகள், சமய இணக்கத்திற்கான கவனம், உள்வாங்கும் அரசியல் பார்வை, பெண்களின் சமூக இருப்பு என ஒவ்வொன்றையும் கவனித்து விவாதப்படுத்தும் படங்களைத் தந்துகொண்டே இருப்பன அமீர்கானின் தயாரிப்புகள். இந்தியப் பெண்களின் அறிவைத் தடுத்து நிறுத்தும் குடும்ப அமைப்பையும், திருமணம் தான் இந்தியப் பெண்களுக்கான ஒரே விமோசனம் என்னும் கருத்தை வலியுறுத்தும் பெற்றோர்களையும் காட்டி, இந்தியப் பெண்களின் விருப்பப்படியான கல்வி, சொத்துரிமை, விரும்பிய திருமண வாழ்க்கை என்பதை நேரடியாகச் சொல்லாமல் கதையின் போக்கில் உணர்த்துகிறது படம். அமீர்கானின் படங்கள் விவாதிக்கும் ஒவ்வொன்றும் விடுதலைபெற்ற இந்தியாவில் நடந்திருக்கவேண்டிய மாற்றங்கள் என்பதை யாரும் மறுத்துவிட முடியாது.
****
புதுமணப்பெண்களின் நீண்ட தூரப் பயணத்தின்போது இடம் மாறிவிடுவதால் தொலைந்துபோனதாக நினைக்கும் இரண்டு பெண்கள் அதனை எதிர்கொள்ளும் நிகழ்வுகளே கதைப்பின்னல். ஒரே மாதிரியான வண்ண ஆடைகளால் -முகத்திரைகளால் மூடப்பட்ட நிலையில் இடம் மாறும் இரண்டு பெண்களில் ஒருத்தி விரும்பியே தொலைந்து போகிறாள்; கணவனைப் பிரிகிறாள். இன்னொருத்தி பயணக்களைப்பில் அறியாமல் கணவனைப் பிரிகிறாள். இதன் தொடர்ச்சியே மொத்தப் பட த்தின் காட்சிகள்.

கணவர்களைப் பிரிந்த இருவரும், வாழ்க்கையே முடிந்துபோனதாக நினைக்காமல் புதிய இடங்களில், அங்குள்ள சூழலுக்குள் தங்களை இருத்திக்கொண்டு எல்லாவற்றையும் தன்னம்பிக்கையோடு எதிர்கொள்ளும் காட்சிகளால் படம் விரிகிறது. தனித்துவிடப்படும் பெண்களை ஏமாற்றவும் பாலியல் ரீதியாகச் சுரண்டவுமே முயல்வார்கள் என்ற புகைமூட்டமான காட்சிகளை அமைத்து அச்சத்தில் இருக்கும் பெண்களாகக்காட்டாமல் மனிதர்கள் ஒவ்வொருவர் மீதும் நம்பிக்கை வைத்து அடுத்த கட்டத்தை நகர்த்தும் பெண்களாக இருவரையும் காட்டியுள்ளது படம். காவல் நிலையம், காவல் துறை போன்றவற்றைச் சித்திரிக்கும்போது வழக்கமான எதிர்மறைத் தன்மையுடன் காட்சிகள் உருவாக்கப்பட்டாலும் அதற்குள் இழையோடும் நகைச்சுவையும் அங்கத்தன்மையும் சேர்ந்து பட த்தின் முடிவில் தரப்பட்டுள்ள திருப்பத்தை நம்பச் செய்கின்றன. விரும்பிக் காணாமல் போகும் பெண்ணுக்கு நடந்த து விருப்பமில்லாத திருமணம். அவளது விருப்பம் செயற்கை உரங்களையும் பூச்சிக்கொல்லி மருந்துகளையும் பயன்படுத்தாத மரபான இந்திய விவசாயம். அதனைக் கல்லூரியில் சேர்ந்து கற்று ஆய்வு மேற்கொள்ள நினைப்பவள். ஆனால் திருமணம் தான் பெண்ணுக்கு முதன்மைத் தேவையென நினைக்கும் அம்மாவின் நெருக்கடியால் ஒத்துக்கொண்ட திருமணத்திலிருந்து தப்பிக்க இந்தத் தொலைந்துபோதல் உதவும் என நினைத்து விரும்பியே காணாமல் போகிறாள்.அவளது அறிவார்ந்த செயலால் நகரும் காட்சிகளில் திருப்பங்களும் அங்கதம் இழையோடிய உரையாடல்களும் படத்திற்கு வலுவூட்டுகின்றன. அவள் தான் தன்னை அழைத்து வந்த தீபக்கின் மனைவியைக் கண்டுபிடிப்பதற்கும் உதவுகிறாள்.
வட இந்தியக் கிராமங்களின் அழகும் வேளாண் வாழ்க்கையுமாக விரியும் காட்சிகளில் அழகியலைக் கூட்டும் விதமாகப் பின்னணி இசையும் சின்னச்சின்ன பாடல்களும் பார்ப்பது சினிமா என்ற எண்ணத்தைத் தாண்டி இயல்பான வாழ்க்கையின் காட்சிகள் என்ற உணர்வைத் தந்துள்ளன. சமகால இந்தியப் பெண்களுக்குக் கல்வி, சொத்துரிமை, திருமண வாழ்க்கையில் உண்டாக வேண்டிய நெகிழ்ச்சி என ஒவ்வொன்றையும்- நடந்திருக்கவேண்டிய மாற்றங்கள் என ஒவ்வொன்றையும் கவனித்து விவாதித்துள்ளது. அந்த வகையில் அவை சமகால இந்தியச் சமூகத்தை - வாழ்க்கையை நேரடியாக விவாதிக்கக்கூடியன.
நட்சத்திர மதிப்புக்கொண்ட நடிகர்களைத் தெரிவு செய்யாமல், பாத்திரங்களுக்குப் பொருத்தமான நடிகர்களையும் நடிகையர்களையும் தேர்வுசெய்து நடிக்க வைத்துள்ள இயக்குநரும் தயாரிப்பாளரும் இந்திய சினிமாவின் தரமான பட த்தைத் தந்துள்ளனர். இடம் மாறித் தொலைந்து திரும்பும் பெண்களாக நடித்துள்ள பெண்களும், அவர்களின் கணவர்களாக நடிக்கும் ஆண்களும், கிராமியச்சூழலையும் காவல் நிலையச் செயல்பாடுகளையும் ரயில் நிலையக் கடையையும் மிகுந்த நம்பிக்கையான காட்சிகளாக்குவதில் நடிகர்களின் நடிப்பு முதன்மையான பங்களிப்பைச் செய்துள்ளன.

எளிமையான மனிதர்களைப் பாத்திரங்களாக்கி இந்திய வாழ்க்கையின் மாற்றங்களையும், மாற்றங்களுக்குத் தடைகளாக இருக்கும் அமைப்புகளையும் விவாதப்படுத்திச் சினிமாக்களை எடுத்த சத்யஜித்ரே, ஷியாம் பெனகல் போன்றோரின் படங்களின் வரிசையில் இந்தப் படத்தைச் சொல்லத்தோன்றுகிறது. தொலைந்துபோகும் பெண்கள் சினிமாவைப் பார்த்துக் கொண்டிருக்கும்போது பாரதியாரின் விடுதலைக் கும்மியின் ஆலாபனைகள் ஓடிக்கொண்டே இருந்தது. படம் முடிந்தபோது இந்த வரிகள் தானாகவே வந்து நின்றன:
ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென்
றெண்ணி யிருந்தவர் மாய்ந்துவிட்டார்
வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டிவைப்போமென்ற
விந்தை மனிதர் தலைகவிழ்ந்தார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நாயக்கர் கால இலக்கியங்கள் சமுதாய வரலாற்றுச் சான்றுகளாகக் கொள்வதற்கான முன் தேவைகள்

நாயக்கர் காலம். இயல்.2.பொருளாதார நிலைகளும் உறவுகளும்

மேல்நோக்கியும் கீழ்நோக்கியும்