அகண்: உள்ளோடும் தோற்றமயக்கம்
தமிழ்வெளி(ஏப்ரல், 2024 )யில் வந்துள்ள சுஜா செல்லப்பனின் இந்தக்கதையை வாசித்து முடித்தபோது ஒன்றுக்கு மேற்பட்ட காரணங்களால் வாசித்து விவாதிக்க வேண்டிய கதையாக முன்மொழியத் தோன்றியது. கதையாக்கத்திற்குத் தெரிவு செய்துள்ள உரிப்பொருள் சார்ந்து அதனைப் பெண்ணெழத்து என்று வகைப்படுத்தலாம். எழுதுபவர்கள் அப்படி வகைப்படுத்துவதை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்பதில்லை. எழுத்துக்கு வாழ்க்கை அனுபவம் சார்ந்த நிகழ்வுகள் அல்லது எண்ணங்கள் மட்டுமே காரணம் என நம்புவதின் வெளிப்பாடே இவ்வகையான வகைப்பாட்டின் பின்னால் இருக்கின்றன என நினைப்பவர்கள் தான் இப்படி வகைப்படுத்துகிறார்கள் என்ற மறுதலிப்பில் உண்மையில்லாமல் இல்லை.
கதையின் உரிப்பொருள் சார்ந்து அகண் கதை முழுமையும் பெண் அனுபவம் சார்ந்த ஒன்று. பேறுகாலம், பேறுகாலத்திற்குப் பின்னரான ரத்தப்போக்கு என்பதைப் பெண் அனுபவம் என்று சொல்லாமல் விலகிச் செல்லவும் முடியாது. பேறுகாலமும் பேறுகாலத்திற்குப் பிந்திய உதிரப்போக்கும் ஆண்களின் புனைவுகளிலும் எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த அளவு நெருக்கமான விவரிப்பாக அவ்வெழுத்து அமைந்திருக்க வாய்ப்பில்லை. அதனைத் தாண்டி, ‘பெண் எழுத்தாளர்’ என்ற வகைப்பாட்டை மறுக்கின்ற பெண்களின் கதைகளில் இவ்வுரிப்பொருள் விவாதிக்கப்பட்டுள்ளதை நீங்கள் வாசித்திருக்கலாம்; நான் வாசித்திருக்கிறேன். ஆனால் அதனைக் கதையாக மாற்றியிருக்கும் விதத்தில் சுஜா தன்னைப் பெண் எழுத்தாளர் என்ற வகைப்பாட்டிற்குள் நிறுத்திப் பேசுவதைத் தாண்டுகிறார். சொல்முறையாலும், உருவாக்கும் படிமத்தாலும் புதிய வாசிப்பு அனுபவத்தைத் தருவதை உறுதிசெய்துள்ளார்.
கண் முன்னால் சுற்றிச் சுழன்றடிக்கும் ஒரு குளவி அல்லது கரப்பான் பூச்சி அல்லது சில்வண்டு உருவாக்கும் இரைச்சல் போன்றவை உருவாக்கும் தடைகளைத் தாங்களாகவே தாண்டி விடமுடியும். அல்லது பக்கத்தில் இருப்பவர்களின் உதவியோடு அவற்றை விரட்டிவிடவோ, இல்லாமல் செய்துவிடவோ முடியும். அதே நேரம் எங்கே ஒலிக்கின்றது என்பது தெரியாமல் திரும்பத்திரும்ப ஒலித்துக்கொண்டிருக்கும் ஒரு பாடலின் வரிகளோ அல்லது காதில் விழுந்த வாக்கியமோ ஒருநாள் இரவுத் தூக்கத்தைக் கெடுத்துவிடுவதும் உண்டு. செவிப்பறையைக் கிழிக்கும் பேரிரைச்சலைவிட அழுத்தமாக ஒலித்துக் கொண்டே இருக்கும் அதனை மாற்றுவதற்காகத் தீவிரமான வேறு ஒன்றில் கவனம் செலுத்திட வேண்டும். உடலை மறக்கவும் மனதை மறக்கவுமான ஒன்று கிடைக்காவிட்டால் அதனைக் கடத்தல் எளிதான ஒன்றாக அமையாது. இவற்றையெல்லாம் தாண்டியதாக இருக்கிறது கதையில் உருவாகிச் சுற்றிச் சுழன்றடிக்கும் தோற்ற மயக்கம்.
மகப்பேறுக்குப் பின்னான ரத்தப்போக்கு நிற்காத நிலையில் ரத்தச் சிவப்பேறிய கண் ஒன்று உருவாகி சதையும் நரம்புகளும் தெரிய அவளது இரண்டு கண்களுக்கு முன்னால் மூன்றாவது கண்ணாக முன் நிற்பதுதான் அவளது பிரச்சினை. அதனை விலக்கிவிட முடியாமல் தவிக்கும் தவிப்பு நிதானமாக விவாதிக்கப்பட்டிருக்கிறது கதைக்குள். அந்தக் கண் உண்மையில் கண் தானா? என்றால் கண்ணில்லை. கண்ணாடியில் தெரியாத எதுவும் உண்மையில்லை என்ற அறிவின்படி அவள் கண்ணாடிக்கு முன்னால் நிற்கும்போது அந்தக் கண் தோன்றவில்லை. ஆனால் விலகிய அடுத்த கணம் அதே ரத்தச் சிவப்புடன் முன்னால் நிற்கிறது.
அகண் கதையின் மையப்பாத்திரமான அவளுக்குள் இருக்கும் இதனை நோய் என்று சொல்லிவிட முடியாது. அதற்குப் பதிலாக அதனைத் தோற்றமயக்கம் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும். ஒன்றின் மீது உருவாகும் பிடிமானம் அல்லது நினைவைச் சொல்லாகவோ, ஓசையாகவே மாற்றித் திரும்பத்திரும்ப நினைத்து ஓடவிடும் மனம் பலருக்கும் இருப்பதுபோல அவளுக்கு இல்லை. அதற்குப் பதிலாக அவளுக்குள் உருவாகும் சுழற்சிகள் கண் முன்னால் தோன்றிக் கொண்டே இருக்கிறது. அவள் போகும் இடத்திற்கெல்லாம் அவளது பார்வைக்கு முன்னால் சென்று கொண்டே இருக்கும் பிம்பமாக அவளைத் தொடர்கிறது. தொடர்கிறது என்று கூடச் சொல்லக் கூடாது; முன் செல்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். தனது மனதிற்குள் அலையடிப்பாகத் தோன்றி முன் நிற்கும் கண் எதன் பிரதிபிம்பம் என்பதைக் கணவனிடமோ, தனக்கு மருத்துவம் பார்த்த டாக்டர் லின்னிடமோ சொல்லித் தீர்வைத் தேடலாம் என்று தோன்றினாலும் அதனைத் தவிர்த்துவிடுகிறாள். அதன் மூலம் புதிய உளவியல் சிகிச்சைக்குப் போகவேண்டியதாக மாறிவிடும் என்ற அச்சம். அதன் காரணமாக அதன் காரணங்களை அவளாகவே கண்டுபிடித்து விடுபடுவதுதான் கதையின் முடிச்சவிழ்ப்பு.
ரத்தப்போக்கு நிற்காததின் காரணங்களுக்காக மருத்துவமனைக்குப் போனவளை முழுப்பரிசோதனை செய்யும் லின் அவளது யோனியின் இப்போதைய இருப்பைச் சோதிக்கிறார். அதன் தையல் எல்லாம் சரியாகிவிட்டது; வலியில்லை என்றாலும் ரத்தப்போக்கு இருக்கிறது என்பதால் உள்வலி இருக்க க்கூடும் என நினைத்து வலிநிவாரணையத்தர நினைக்கிறார். அதற்கு முன் முழுச் சோதனையை மேற்கொள்கிறார். அந்தச் சோதனையை அவளும் பார்க்கட்டும் என்று கண்ணாடியில் அவளது யோனியைப் பார்க்கும்படியான அமைப்பை உருவாக்கிக் காட்டுகிறார். அந்தக் கண்ணாடிக்குள் அவளது யோனி, தோற்றமயக்கமாக க்கண் முன் நிற்கும் கண்ணல்லாத கண்ணாக – அகண்- ஆக மருத்துவருக்கும் அவளுக்கும் இடையே தோன்றுகிறது. தோற்ற மயக்கமான அந்தக் கண் இனித் தோன்றித் தொடரும் வாய்ப்பில்லை என்பது வாசிப்பவர்களின் ஊகத்துக்கு விடப்பட்டுள்ளது.
*****
மையப்பாத்திரமொன்றின் உளவியல் சிக்கலை விவாதிக்கும் கதைகளை எழுத வேண்டுமென நினைக்கும் சுஜா செல்லப்பன், அதிகப்படியான நிகழ்வுகளைத் தவிர்த்துவிட்டு தன்னருகில் இருக்கும் பிறரோடும், தனக்குத் தானேயும் பேசிக்கொள்ளும் உரையாடல்களாலும், எண்ணவோட்டங்களாலும் கதைகளை நகர்த்தும் உத்தியைக் கையாள்கிறார். அவ்வுத்தியோடு பாத்திரங்களின் உரையாடலின் போது பயன்படுத்தும் மொழியிலும், அம்மொழியை வெளிப்படுத்தும்போது காட்டும் உடல்மொழியிலும் கவனம் செலுத்திப் பாத்திரங்களின் மனநிலையை முன்வைக்கிறது அவரது கதைக்கூற்றுமுறைமை. உரையாடல்களிலும் மிகையுணர்ச்சியைக் காட்டும் சொற்களைத் தவிர்த்து அவற்றின் இயல்புநிலையைத் தக்கவைப்பதைக் கவனமாகச் செய்கிறார்.
சிறுகதை வடிவத்தின் முதன்மைக் கூறாகப்பலரும் கருதுவது நிகழ்வுகளின் தொடர்ச்சியை. ஒரு நிகழ்வில் முதன்மையான பாத்திரமாகக்கருதப்படும் ஒன்றின் இருப்பின் வழியாகவோ, எண்ணங்களின் வழியாகவோ அடுத்துவரும் நிகழ்வுகளில் தொடர்ச்சிகளை உருவாக்கிக் கதைக்கான வடிவத்தை உருவாக்குகிறார்கள். அப்படி உருவாக்கப்படும் நிகழ்வுகளில் பங்கேற்கும் பாத்திரங்களின் முரண்நிலையால் கதையை நகர்த்தும் சொல்முறையைத் தவிர்ப்பவர் சுஜா செல்லப்பன். இதற்கு முன்பும் அவரது கதைகளை வாசித்ததின் அடிப்படையில் இதனைச் சொல்லமுடிகிறது.
கருத்துகள்