திருக்குறள்: மறு வாசிப்பும் பலதள வாசிப்பும்

ஒரு மொழியில் எழுதப்பெற்ற எல்லாப் பனுவல்களையும் அம்மொழியைப் பேசும்/ எழுதும் மனிதர்கள் வாசித்து விடுவதில்லை; தங்கள் வாழ்வியலுக்குத் தேவையென ஏற்றுப் பயன்படுத்திக்கொள்வதுமில்லை. அவரவர் விருப்பம், அவரவர் தேவை, அவரவர் பயன்பாடு போன்றனவே அவரவர் மொழியில் எழுதப்படும் பனுவல்களை வாசிக்கச் செய்கின்றன; பயன்படுத்தச் சொல்கின்றன; கொண்டாடவும் தூண்டுகின்றன. அனைத்து வகையான அறிவுத்துறைப் பனுவல்களுக்கும் சொல்லப்படும் இக்கருத்துநிலை இலக்கியப் பனுவல்களுக்கும் பொருந்தும் என்பதை ஒருவர் மறுத்து விடமுடியாது. அதே நேரம் ஒரு மொழியில் தோன்றிய சிலவகைப் பனுவல்கள் கூடுதல் கவனம் பெறுகின்றன; பேசப்படுகின்றன; பயன்படுத்தப்படுகின்றன. அதிலும் குறிப்பாக இலக்கியப்பனுவல்கள் பலதரப்பினரிடமும் அறிமுகம் பெறுகின்றன; பயன்படுத்தப்படுகின்றன. தமிழில் கிடைக்கும் பனுவல்களில் திருக்குறள் அப்படியானதொரு பனுவலாக இருக்கிறது. ஆகவே திருக்குறளைத் தமிழர்கள் திரும்பத்திரும்ப மறுவாசிப்புச் செய்கிறார்கள். கொண்டாடுகின்றார்கள். இக்கட்டுரை திருக்குறள் மறுவாசிப்பு செய்யப்படுவதின் காரணங்களையும் அதனைத் தொடர்ந்து,பல தளவாசிப்புகள் ஏன் தேவை என்பதையும் முன்வைக்கிறது. அத்துடன் அப்படியான வாசிப்புக் கொண்ட இரண்டு கட்டுரைகளையும் இணைத்துத் தருகிறது.
உலகப் பரப்புக்குள் ஊடாட்டம்

ஒரு மொழியில் கூடுதல் கவனம் பெறும் பனுவல்களை அம்மொழி பேசும் ஒவ்வொருவரும் அறிந்திருக்க வேண்டும் என நினைக்கிறார்கள். அதற்கான வேலைகளை ஒவ்வொருவரும் மேற்கொள்ள நினைக்கிறார்கள். தனிநபர்களாக மேற்கொள்ளப்படும் பணிகளோடு, அரசும் பொறுப்பேற்றுச் செய்யவேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். அரசு அமைப்புகளிடம் அத்தகைய கோரிக்கையை வைக்கும்போது சொந்தமொழி பேசுகின்றவர்களிடம் கொண்டுபோய்ச் சேர்க்கும் பணிகளோடு, உலக மக்களுக்கும் கொண்டுபோய்த் தரவேண்டும் என்ற விருப்பமும் வெளிப்படுகிறது. அதன் மூலம் தனது மொழி உலகத்தவர்க்குத் தந்த கொடை இது எனக் காட்ட நினைக்கிறார்கள்.

தொழிற்புரட்சிக்குப் பின் தோன்றிய நவீனக்கல்வி, வெவ்வேறு நாடுகளின் அறிவை உலக மொழிகள் பலவற்றிற்கும் கொண்டுபோய்ச் சேர்க்கும் வேலையைச் செய்து கொண்டிருக்கிறது. அறிவியல் துறைப் பனுவல்களும், சமூக அறிவியல் துறைப்பனுவல்களும் துறைசார் கல்விப்புலங்கள் வழியாக அந்தத்துறை துறைசார்ந்து கற்கும் மாணாக்கர்களிடம் போய்ச் சேர்ந்துக் கொண்டிருக்கின்றன. இந்த வினையில் அறிவுத்துறையினரின் மொழிபெயர்ப்புகளும், தழுவலாக்கங்களும் பங்காற்றுகின்றன. அறிவுத்துறைப் பனுவல்கள் பலவும் உலக மொழிகள் பலவற்றிலும் முழுமையாகப் போய்ச்சேரும்போது, அப்பனுவல் எழுதப்பெற்ற மூலமொழி உலக அறிவுப்பரப்புக்குப் பங்களிப்பு செய்த மொழியாகிறது.

வெவ்வேறு அறிவுத்துறைகளுக்குப் பங்களிப்புச் செய்ததற்காக வெவ்வேறு மொழிகள் உலகத்தவர்களால் கொண்டாடப்படுகின்றன. சமயநூல்களுக்காகச் சில மொழிகளும் அறிவியல் கண்டுபிடிப்புகளுக்காகச் சில மொழிகளும், தத்துவ நூல்களுக்காகச் சில மொழிகளும் உலகத்தவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. அந்த வரிசையில் தமிழ்மொழி, அதன் முதன்மையான இலக்கியப்பனுவல்களுக்காக உலகத்தவர்களால் கவனிக்கப்படுகின்றது. முதன்மையான பல்கலைக்கழகங்களின் செவ்வியல் துறைகளால் அப்பனுவல்கள் கற்பிக்கப்படுகின்றன. அப்படிக் கவனிக்கப்படுவதற்குக் காரணமான பனுவல்களில் ஒன்றாகத் திருவள்ளுவரின் திருக்குறள் இருக்கிறது என்பதைத் திரும்பவும் சொல்ல வேண்டியதில்லை.

தமிழ் மொழியைத் தங்கள் தாய்மொழியாகவும் முதன்மைப் புழங்கு மொழியாகவும் கொண்டவர்கள் உலகத்திற்குத் தந்த கொடைகளுள் முதன்மையானது திருக்குறள் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த நம்பிக்கை இருந்த காரணத்தினால் கவி பாரதி,‘வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ்கொண்ட தமிழ்நாடு’ எனச் சொன்னான். ஆனால் பாரதிக்கு வள்ளுவரின் திருக்குறள் மட்டுமே தமிழின் கொடை என்பதாகச் சொல்லும் மனமில்லை. வள்ளுவரைச் சொல்வதற்கு முன்னும்பின்னுமாகக் கம்பனையும் இளங்கோவையும் சேர்த்தே முன்வைக்க வேண்டும் என்ற எண்ணமும் இருந்துள்ளது. அந்த எண்ணத்தில் ‘புகழ்க்கம்பன் பிறந்த தமிழ்நாடு’ என்றும்,‘நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரமென்றோர் மணியாரம் படைத்த தமிழ்நாடு’ என்றும் சொன்னான். அதே பாரதி, இன்னோரிடத்தில் ‘எல்லா உயிர்களிலும் நானே இருக்கிறேன் என்றுரைத்தான் கண்ணபெருமான், எல்லோரும் அமரநிலை எய்தும்நன் முறையை இந்தியா உலகிற்கு அளிக்கும்’ என்றும் கூறுகிறான் என்பதையும் நினைவில் கொள்ளலாம். இப்படியான இருநிலைக் கூற்றில் பாரதி தன்னையொரு தமிழ் தன்னிலையாகவும் இந்தியத் தன்னிலையாகவும் கருதினான் என்பது நினைவில் கொள்ளத்தக்கது. நினைவில் கொள்ளுதல் என்பதில் ‘உலகிற்கு அளித்தல்’ என்ற கருத்துநிலை முதன்மையானது என்பதை மட்டும் எடுத்துக் கொள்வோம்.

பாரதி முன்மொழிந்த இம்மூன்று பனுவல்கள் மட்டுமே தமிழ் மொழி உலகிற்கு அளித்த கொடை என்பதில் கருத்து வேறுபாடுகள் உள்ளன. உலக அறிவுக்குப் பல நிலையிலும் பங்காற்றியுள்ள அரிஸ்டாடிலின் பனுவல்களுக்கு இணையாகச் சொல்ல வேண்டிய ஒரு பனுவலாகத் தொல்காப்பியம் இருப்பதைப் பலரும் ஏற்கின்றனர். அதே போல் சங்கச்செவ்வியல் கவிதைகளும் கருதப்படுகின்றன. இக்கருத்தும் நம்பிக்கைகளும் தமிழர்களுக்கு மட்டுமே இருக்கிறது என்பதாக நினைக்கவேண்டியதில்லை. நல்லறிஞர் சாத்திரங்களை அவரவர் மொழிக்குக் கொண்டுவந்து சேர்க்க வேண்டுமென நினைக்கும் அறிவுத்தேடல் கொண்ட பலருக்கும் இருக்கிறது. அதனால் ஆகச் சிறந்த இப்பனுவல்களை அவரவர் மொழியில் மொழிபெயர்த்துக் கொள்கிறார்கள்.

தமிழிலிருந்து உலகமொழிகள் பலவும் மொழி பெயர்த்துக் கொண்ட முதன்மைப் பனுவல் திருக்குறள். வீரமாமுனிவர் என்னும் ஜோசப் பெஸ்கியால் (1730) லத்தீன் மொழியில் முதன் முதலில் மொழிபெயர்க்கப்பட்டதைத் தொடர்ந்து 11 ஐரோப்பிய மொழிகளிலும் 10 ஆசிய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதாக விக்கிபீடியா தகவல்கள் சொல்கின்றன. ( லத்தீன் மொழிபெயர்ப்புக்கு முன்பே திராவிடமொழிகளில் ஒன்றான மலையாளத்தில் 1595 இல் மொழிபெயர்க்கப்பட்டதாக ஒரு குறிப்பும் உள்ளது) இவையெல்லாம் பிறமொழியினரின் விருப்பத்தினாலும், திருக்குறளின் பேசுபொருள் தந்த உந்துதலாலும் நடந்த மொழி பெயர்ப்புகள். ஒன்றுக்கும் மேற்பட்ட மொழிபெயர்ப்புகளைச் செய்துகொண்ட மொழிகளும் உண்டு.ஆங்கிலத்தில் பத்துக்கும் மேற்பட்ட மொழிபெயர்ப்புகள் கிடைக்கின்றன. தற்போது இந்திய அரசின் செம்மொழி நிறுவனம் 22 இந்தியமொழிகளில் மொழிபெயர்க்கும் திட்டத்தைச் செயல்படுத்தி வருகின்றது. மொத்தமாக 120 மொழிகளில் திருக்குறளை மொழிபெயர்க்கும் திட்டத்தோடு இருப்பதாக அறிவிப்பு செய்துள்ளது.

மொழிபெயர்ப்புகள் வழியாகத் திருக்குறளை உலகிற்கு அளித்தல் என்பதைத் தொடர்ந்து, என்ன முறையில் அதனை உலகிற்கு அளிக்கவேண்டும் என்பதைத் திட்டமிடவும் வேண்டியுள்ளது. அப்படியான திட்டமிடலைத் தொடங்குவதற்கு அடித்தளமாக இருப்பதே ஒரு பனுவலின் மீதான மறுவாசிப்பு. எந்தவொரு பனுவலின் மீதான மறுவாசிப்பும் அதன் தொடர்ச்சியில் பல தள வாசிப்புக்கு இட்டுச் செல்லும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். மறுவாசிப்பின் தொடர்ச்சி பலதளவாசிப்பு என்பதை விளக்குவதற்கு முன்பு, தமிழ் மொழிக்கல்வியில் இருக்கும் சில நிலைகளைச் சுட்டிக்காட்டிட வேண்டிய தேவை இருக்கிறது. அது தமிழின் பனுவல்களை உலகிற்கு அளித்தல் என்பதோடு நேரடித் தொடர்புடையது அல்ல என்றாலும், விலகிப்போகும் ஒன்றல்ல என்பதால் இங்கே விவரிக்கப்படுகிறது.

தமிழ்: தாய்மொழியாகவும் துணைமொழிகளாகவும்.

தாய்மொழியாகத் தமிழைக் கற்பிக்கும் நிறுவனங்கள் இருக்கும் நாடுகள் இந்தியாவும் இலங்கையும். இந்தியாவில் தமிழ்நாடும் இலங்கையில் சில மாநிலங்களும் இருக்கின்றன. தாய்மொழியாகத் தமிழைக் கற்கும் இவ்விரு நாட்டு மாணவர்களும் இரண்டாவது மொழியாக ஆங்கிலத்தைக் கற்கின்றார்கள். விரும்பினால் மூன்றாவது மொழியாக அந்நாட்டின் பெரும்பான்மை மொழியையும் கற்றுக்கொள்கிறார்கள். ஆனால் மற்ற நாடுகளில் தமிழ்மொழி இரண்டாவது மொழி, மூன்றாவது மொழி என்ற நிலையிலேயே கற்பிக்கப்படுகின்றன. அப்படிக் கற்பிக்கப்படும் நிலையில் கட்டாயமாகக்கற்க வேண்டிய நிலை இல்லை.

அறிவுத்தாகம் கொண்ட நாடுகளின் பல்கலைக்கழகங்கள் செவ்வியல் மொழிகளுக்கான புலங்களைத் தொடங்குவதின் பின்னணியில் இருக்கும் முதன்மைக் காரணம் உலக உலக அறிவைத் தங்கள் நாட்டு மாணவர்களுக்குத் தரவேண்டுமென நினைப்பது தான். குறிப்பாக ஐரோப்பியப் பல்கலைக்கழகங்களில் தொடங்கப்பட்ட கீழைத்தேய மொழிப்புலங்கள் அந்த நோக்கத்தில்தான் பாடத் திட்டங்களை உருவாக்கியுள்ளன. இதுவல்லாமல் வளர்ந்துவரும் அரசியல் பொருளாதார உறவுகளுக்காகப் பிறநாட்டு மொழிகளைக் கற்பிக்கும் நாடுகளும் உண்டு. அதில் வெளிப்படுவது வணிகநலன். தமிழ்மொழி இவ்விரு காரணங்களை முன்வைத்தும் உலகப்பல்கலைக்கழகங்களில் கற்கும் மொழியாகவும் கற்பிக்கப்படும் மொழியாகவும் இருக்கிறது. ஐரோப்பிய நாடுகளான ஜெர்மனி, இங்கிலாந்து,பிரான்ஸ், சோவியத் ரஷ்யா, போலந்து, செக்கோவ்ஸ்லாவோக்கியா போன்ற நாடுகளின் பல்கலைக் கழகங்களில் தமிழ்மொழிப்பிரிவுகள், பழைமையான மொழிகளுக்கான – செவ்வியல் மொழிகளுக்கான -புலங்களில் கற்பிக்கப்படுகின்றது.

அந்தந்த நாட்டு வணிக நோக்கத்திற்காகத் தமிழ் மொழியைக் கற்பிக்கும் துறைகளைக் கொண்ட பல்கலைக்கழகங்கள் அமெரிக்கா, ஜப்பான், கொரியா, சீனா போன்ற நாடுகளில் உள்ளன. இவை தமிழ்மொழி பேசும் மனிதர்கள் வாழும் நாடுகளில் வணிகச் செயல்பாடுகளை மேற்கொள்கின்றன. இவ்விரு காரணங்களுக்காகத் தமிழைக் கற்பவர்கள் அந்தந்த நாட்டைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள். அங்கே நவீன மொழிகளுக்கான துறைகளிலும், பண்பாட்டுப் புலங்களிலும் தமிழும், தமிழ்ப்பண்பாடும் கற்பிக்கப்படுகின்றன. அங்கு தமிழ்மொழியைக் கற்பிப்பதில் மொழியின் பயன்பாட்டு நோக்கம் மட்டுமே முதன்மையாக இருக்கும். இவ்விரு காரணங்களுக்காக இல்லாமல் குடிப்பெயர்வுகளாலும் புலப்பெயர்வுகளாலும் பல்வேறு நாடுகளுக்குப் போன தமிழர்களின் தேவைக்காகவும் தமிழ் மொழியைக் கற்பிக்கும் நிறுவனங்களைக் கொண்ட நாடுகளும் உண்டு. காலனிய காலத்தில் ஐரோப்பியக் காலனியவாதிகளால் குடியேற்றப்பட்ட மக்களின் தேவைக்காகவும் விருப்பத்திற்காகவும் தமிழ்மொழியைக் கற்பிக்கும் பள்ளிகள், பல்கலைக்கழகங்களைக் கொண்டிருக்கின்றன மலேசியா, சிங்கப்பூர். தாய்லாந்து, மொரீசியஸ், ரீயூனியன் போன்ற நாடுகளில் இயங்கும் தமிழ்ப்பள்ளிகள் காலனிய காலத்துக் குடிப்பெயர்வுத் தமிழர்களின் தேவைகளுக்கானவையே. காலனியக் காலத்துக் குடியேற்றங்கள் போலவே இலங்கைத்தீவுக்குள் நடந்த தனியீழக் கோரிக்கைக்கான உள்நாட்டுப் போரும் பெரும் எண்ணிக்கையில் புலப்பெயர்வுக்குக் காரணமாகியிருக்கிறது. அப்படிப்புலம்பெயர்ந்தவர்களின் முன்னெடுப்பில் இப்போது கனடாவில் இரண்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கைகள் நிறுவப்பட்டுள்ளன. நார்வே, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மன், சுவிட்சர்லாந்து முதலான ஐரோப்பிய நாடுகளில் தமிழ்க்கல்விக்கான சிறப்புப் பள்ளிகள் அரசுகளின் உதவியோடும் அங்கீகாரத்தோடும் நடக்கின்றன. ஆஸ்திரேலியாவிலும் இதே தன்மையில் பள்ளிகளும் பல்கலைக்கழகங்களும் சான்றிதழ் வகுப்புகளை நடக்கின்றன. இத்துடன் இது நிற்க.

தமிழ்: தொன்மையும் தொடர்ச்சியும்

தமிழின் இலக்கியப்பனுவல்கள் உலகின் கவனத்தைப் பெற்றுள்ளன என்பதற்காகப் பெருமைப்படுவது போலவே, உலகின் முதன்மையான பல்கலைக்கழகங்களில் அதன் தொன்மைக்காகத் தமிழ்மொழி கற்பிக்கப்படுகிறது என்பதனை முன்னிட்டும் தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட கூட்டத்திற்குப் பெருமை இருக்கிறது. அத்தகைய பெருமை இன்னொரு இந்தியச் செவ்வியல் மொழியான சம்ஸ்க்ருதத்திற்கு இல்லை என்பதை இங்கே சுட்டிக்காட்டுவது தவறில்லை. அச்சுட்டிக்காட்டல், அம்மொழியைப் பழிப்பதற்காக அல்ல. அம்மொழியைப் பயன்பாட்டில் வைத்திருந்தவர்கள் அதன் தொன்மையின் இருப்பை அப்படியே வைத்திருக்கிறார்கள்; ஆனால் தமிழர்கள் தமிழின் தொன்மையின் சிறப்புகளைக் கண்டறிந்து உலகிற்கு முன்வைத்துள்ளதோடு, நிகழ்காலத்திற்கான தேவையை உள்வாங்கும் மொழியாக மாற்றுவதற்குத் தொடர்ந்து வேலை செய்கிறார்கள் என்பதைச் சொல்வதற்காகவே அந்தச் சுட்டல்.

மூவகையான மொழிக்கல்விக்குள்ளும் தமிழின் இலக்கியப்பனுவல்களின் இருப்பு நிலையும் சிறப்புகளும் பேசப்படுகின்றன. தொன்மைக்காக கற்கின்றவர்களும், நிகழ்கால இருப்புக்காகத் தமிழைக் கற்கின்றவர்களும் தமிழின் முதன்மைப் பனுவலாகத் திருக்குறளை நினைக்கிறார்கள். அப்படி நினைப்பவர்களுக்குத் திருக்குறளை நிகழ்காலப் பொருத்தப்பாட்டோடு முன்வைக்க வேண்டியது தமிழியல் ஆய்வுகளின் பணியாகும். குறிப்பாக இதுபோன்ற பன்னாட்டு ஆய்வியல் மாநாடுகளை முன்னெடுக்கும் பல்கலைக்கழகங்களின் பணியாகும். நிகழ்காலப் பொருத்தப்பாட்டிற்காகவே திருக்குறளை மறுவாசிப்போடும் பலதளவாசிப்போடும் முன்வைக்க வேண்டும் எனத் திரும்பவும் வலியுறுத்தப்படுகிறது.

உரைகளும் மறுவாசிப்புகளும்

அறிவுத்துறைப் பனுவல்களுக்கும் இலக்கியப்பனுவல்களுக்கும் அடிப்படையான வேறுபாடு பொருள் உணர்த்தும் முறையே ஆகும். அறிவுத்துறைப் பனுவல்கள் வாசிப்பவர்களுக்குத் தருவனவற்றில் மிகுதியானவை தகவல்கள். அத்தகவல்கள் பொருள்களாகவும் கருத்துகளாகவும் இருக்கும். அவற்றைத் தொகுத்தல், பகுத்தல், விரித்தல், விளக்குதல் என்ற முறையியலைப் பின்பற்றிப் பனுவலாக்கம் செய்து வாசிப்பவர்களுக்கு வழங்குகின்றன. அப்படி வழங்குவதில் ஒரு நேரடித்தன்மையே சொல்முறையாக இருக்கும். நேரடித்தன்மை என்பது கட்டுரையின் வடிவம். கட்டுரை வடிவில் இருக்கும் அறிவுத்துறை நூல்கள் ஒற்றை வாசிப்புக்கும் விளக்குதலுக்கும் உரியனவாக இருக்கின்றன. அதனை முன்வைத்தே அதனைக் கற்பிக்கும் ஆசிரியர்கள் பாடங்களைக் கற்பிக்கிறார்கள். வாசிப்பவர்கள் கற்கின்றார்கள்.

இலக்கியப்பனுவல்கள் ஆக்க முறைமையிலேயே நேரடித்தன்மையைத் தவிர்த்து விடுகின்றன. கவிதை, நாடகம், கதை என்ற மூன்று அடிப்படை இலக்கியப் பனுவல்களுமே அதனதன் அளவில் பாத்திரங்களை உருவாக்கி, அவற்றின் வழியாகவே சொல்முறையைக் கட்டமைக்கின்றன. இச்சொல்முறை மாற்றத்தினாலும் பாத்திர உருவாக்கம் என்னும் புனைவாக்கத் தன்மையினாலும் இலக்கிய வாசிப்பு என்பதும் கற்பித்தல் என்பதும் ஒற்றை வாசிப்பாக இல்லாமல் ஒன்றுக்கு மேற்பட்ட வாசிப்பைக் கோருகின்றன. அப்படியான வாசிப்பைச் செய்து விளக்கம் செய்தவர்களே பாவடிவ இலக்கியங்களுக்கு உரையெழுதியவர்கள் என அறியப்படுகின்றனர். புனைகதைகளைப் பற்றிப் பேசும்போது திறனாய்வாளர்கள் எனச் சுட்டப்படுகின்றனர். இந்த நிலையில் உரையாசிரியர்களும் திறனாய்வாளர்களும் மறுவாசிப்புச் செய்பவர்கள் என்ற புள்ளியில் ஒன்றாகின்றனர். இந்த இடத்தில் வாசிப்பு என்பதைப் பனுவல்களின் நேரடிப் பொருளை அறிந்து விவரிப்பது என்பதாகவும், மறுவாசிப்பு என்பது காலச்சூழலிலும் கருத்தியல் பின்புலங்களோடும் வைத்து வாசித்தல் எனவும் சுருக்கமாகப் புரிந்து கொள்ளலாம்.

தருமர், மணக்குடவர், தாமத்தர், நச்சர், பரிதி, பரிமேலழகர், திருமலையர், மல்லர், பரிப்பெருமாள், காலிங்கர் எனப் பத்துப் பேர் திருக்குறளுக்கு உரையெழுதியவர்கள் ஒரு பழம்பாடல் சொல்கிறது. இவர்களில் மணக்குடவர், பரிதி, பரிப்பெருமாள், பரிமேலழகர்,காலிங்கர் ஆகிய ஐவரின் உரைகளே கிடைத்துள்ளன. இவ்வுரைகளின் காலம் கி.பி. 10 முதல் 13 ஆம் நூற்றாண்டுகள் எனக் கருதப்படுகிறது. அதன் பின்பு திருக்குறள் அச்சு நூலாக ஆக்கப்பட்ட பின்பு எழுதப்படும் உரைகள் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கின்றன. இவற்றை வாசித்தவர்களும் ஆய்வு செய்தவர்களும் உரையாசிரியர்கள் எவரும் அரும்பத உரைகள் எழுதியவர்கள் எனக் குறிப்பிடுவதில்லை. ஒவ்வொருவரும் அவரவர் உலகப் பார்வையோடும் வாழ்க்கைப்பார்வைகளோடும் இலக்கியவியல் நோக்கோடும் உரையெழுதியிருக்கிறார்கள் என்றே சொல்கின்றனர். 

மரபான உரைகளுக்குள் இருக்கும் வேறுபாடுகளுக்கும் வரிசைப்படுத்துதல்களுக்கும் பின்னணியில் இருந்தவை சமயவியல்- இறையியல் பார்வைகளாக இருந்துள்ளன. இந்தியத் துணைக்கண்டத்தில் தோன்றிய அறுவகைச் சமயங்களும் அகச்சமயங்களும் புறச்சமயங்களும் முன்வைத்த கடவுள், விதிக்கோட்பாடு, மனிதர்களுக்கும் இயற்கைக்குமான உறவு, உலகத்தோற்றம் பற்றிய கருத்துநிலைகள், கடவுளர்கள் பற்றிய பல்வேறு அறிதல் போன்றனவற்றை உள்வாங்கியும், அதனை ஏற்று வாழ்ந்த வாழ்வியல் நடவடிக்கைகளை ஏற்றும் உரையெழுதியிருக்கிறார்கள். முற்கால உரையாசிரியர்களிடம் செல்வாக்கு செலுத்திய கருத்தியல் வேறுபாடுகள் சமயவியல்- இறையியல் சார்ந்தன என்றால், இருபதாம் நூற்றாண்டுக்குப் பின்னர் எழுதப்படும் உரைகளில் சமகால அரசியல் பார்வைகளும் இருக்கின்றன. எந்தவிதக் கருத்தியலும் அற்ற உரைகளும் வருகின்றன என்பதைத் தவிர்த்துவிட்டுப் பார்க்கும் நிலையில் சமத்துவப்பார்வை, சமூகநீதிப் பார்வை போன்றன நம்கால உரையாசிரியர்களை வழிநடத்தியுள்ளன என்பதை எடுத்துக் காட்டிப் பேசமுடியும்.

இலக்கியப்பனுவல்களின் மீதான மறுவாசிப்புகள், உலகெங்கும் தோன்றிய அடையாள அரசியலின் வீச்சுகளோடும் நவீனச் சிந்தனைகளின் வளர்ச்சியோடும் தொடர்புடையன. ஐரோப்பிய மறுமலர்ச்சிக்குப் பின்பு உலகெங்கும் பரவிய சமத்துவ மனநிலையின் தாக்கத்தால் வேறுபாடுகளை முன்வைத்துப் பேசப்பட்ட- அடையாளங்காணப்பட்ட ஒவ்வொன்றும் அதனை மறுதலிக்கும் போக்கை முன்னெடுத்தன. மனிதர்களை ஏற்பதிலும் மறுப்பதிலும் நிலவும் பல்வேறு வேறுபாடுகள் வினைகளாற்றியதை அறிவோம். அவற்றின் முதன்மையானது பாலடையாள வேறுபாடு. அடுத்த நிலையில் இன அடையாளங்களும், நிறவேறுபாடுகளும் இருந்தன. இந்தியா போன்ற கீழ்த்திசை நாடுகளில் பிறப்படிப்படையிலான சாதியப் படிநிலைகளின் பங்கு முக்கியமானவையாக இருக்கின்றன. பூமியின் எல்லா இடங்களிலும், மையம் – விளிம்பு என்பதான வாழிடப் பரப்புகள் வினையாற்றுகின்றன. ஒரு நாடு எனும் நிலப்பரப்பிற்குள் மொழி, சமயம் போன்றவற்றால் உருவாகும் பெரும்பான்மை, சிறுபான்மை வேறுபாடுகள் காரணங்களாக முன்னின்று மனிதர்களை உள்வாங்கியும் விலக்கியும் வைக்கும் காரணங்களாக இருக்கின்றன. இத்தகைய வேறுபாடுகளை உணரும் வாசகர்கள் தங்களுக்குக் கிடைக்கும் இலக்கியப்பனுவல்களை முதல் வாசிப்பை நேர் வாசிப்பாகவும் அடுத்த வாசிப்பை வேறுபாடுகளின் பின்னணியில் வாசிக்கும் மறுவாசிப்பாகவும் வாசித்துப் புதிய பொருண்மைகளைச் சுட்டுகின்றனர். அப்புதிய பொருண்மைகளே மறுவாசிப்பின் விளைவுகள். மறுவாசிப்பு உருவாக்கும் புதிய பொருண்மைகள் பனுவலின் வழியாக எழுதிய ஆசிரியனைக் குறிப்பிட்ட வேறுபாட்டில் ஏதாவது ஒன்றின் ஆதரவாளராக அடையாளப்படுத்திக் காட்டுகின்றன.

பாரதி தொடங்கிப் புதுமைப்பித்தன் வழியாகப் பல நவீன எழுத்தாளர்கள் பெண்ணிய நோக்கிலும், தலித்திய நோக்கிலும் மறுவாசிப்புச் செய்யப்பட்டுப் புதிய அடையாளங்களைப் பெற்றார்கள் என்பது அண்மைக்கால நிகழ்வுகள். திருக்குறளும் அப்படியான வாசிப்புகளைச் சந்தித்துள்ளது என்பதை அறிவோம். வேதங்களை முதன்மைப் பனுவல்களாக முன்வைத்த பின்னணியில்தான் திருக்குறள் ‘உலகப்பொதுமறை’ என்ற முன்வைப்பு நிகழ்ந்தது. தனிமனிதர்களின் முன்னேற்றம் பற்றிய அறிவுக்குப் பின் திருக்குறளின் அறத்துப்பால் பெற்ற விளக்கங்கள் புதிய ஒளியோடு கூடியனவாக இருந்தன.

வேளாண்மை, வணிகம், பங்கீடுகள் பற்றிய நவீன அறிவுப்புலமை திருக்குறளை வாசிக்கப் பயன்பட்டுள்ளன. சமத்துவ நூலாக முன்வைத்த பின்னணியில் இந்தியாவிற்குள் நுழைந்த பொதுவுடைமைச் சிந்தனை இருந்துள்ளது. ராணுவ அமைப்புகளின் வளர்ச்சியோடு திருக்குறளின் பொருட்பால் விரிவாக வாசித்துப் பேசப்பட்டுள்ளது. நவீன அரசுகளின் நிர்வாகத்துறைகளின் விரிவுக்குப் பின்பே திருக்குறளின் மேலாண்மைச் சிந்தனையியல் விவாதப்பொருளாகியுள்ளது. குடிமைச் சமூகத்தின் இருப்புக்கும் அரசுத்துறைகளின் இயக்கத்திற்கும் திருக்குறளின் பங்களிப்புகளை மறுவாசிப்புகளே எடுத்துக்காட்டுகின்றன. தமிழின் அகப்பாடல் மரபில் வாசிக்கப்பட்ட காமத்துப்பாலின் குறள்கள் இன்று மனோவியல் பின்னணியிலும் உளவியல் பின்னணியில் வாசிக்கப்படுகின்றன. ஆண் – பெண் உறவின் சிக்கல்களைப் பேசும் உளவியல் அறிவு கிடைத்த நிலையில் காமத்துப் பாலுக்குப் புதிய விளக்கங்கள் கிடைத்துள்ளன. அவை நவீன உளவியலின் தாக்கம் பெற்ற மறுவாசிப்புகள் என்பதை மறுக்கமுடியாது.

அடையாள அரசியல் தாக்கத்தாலும் நவீன அறிவுப்புலப் பரவலாலும் உருவான மறுவாசிப்புகளைத் தொடர்ந்து, திருக்குறளைப் பலதளவாசிப்புக்குட்படுத்த வேண்டும் என்பதை ஆய்வுத்துறைகள் கடமையாகக் கொள்ளவேண்டும். அதற்கு முதல் பணியாக இலக்கியத் திறனாய்வு அணுகுமுறைகளைப் புரிந்துகொண்டு திருக்குறளை ஆய்வு செய்யும் பணியைத் தொடங்கவேண்டும்.

பலதளவாசிப்புக்கான நிபந்தனைகள்:

மனிதர்களின் வாழ்க்கையோடு தொடர்புடைய சமூக அறிவியல் மற்றும் அறிவியல் புலங்களைப் பயன்படுத்திக் கலை இலக்கியத் திறனாய்வுகளைச் செய்ய முடியும் என வளர்ச்சியடைந்துள்ள திறனாய்வு வழிகாட்டியுள்ளது. இலக்கியத்திற்கே உரிய விதிகளோடு பிறதுறை அறிவைப் பயன்படுத்திச் செய்யும் திறனாய்வு முறையை திறனாய்வுமுறை (Critical Method), என்பதாக விளக்காமல் திறனாய்வு அணுகுமுறை (Critical Approach) என்பதாக விளக்குகின்றனர் மேற்கத்தியத் திறனாய்வாளர்கள் (Barry Peter, Beginning Theory). சமூக அறிவியல் துறைகளான மானுடவியல், சமூகவியல், பொருளியல், மொழியியல், உளவியல், வரலாற்றியல் போன்றன இலக்கியத் திறனாய்வுக்குப் பயன்பட்டதன் தொடர்ச்சியாகவே மானுடவியல் அணுகுமுறை, சமூகவியல் அணுகுமுறை, பொருளியல் அணுகுமுறை (மார்க்சிய அணுகுமுறை), மொழியியல் அணுகுமுறை, உளவியல் அணுகுமுறை, வரலாற்றியல் அணுகுமுறை, போன்றன இலக்கியத் திறனாய்வின் பகுதிகளாக மாறியுள்ளன. இதைப்போலவே அறிவியல் துறைகளான அமைப்பியல், சூழலியல் ஆகியவற்றைப் பயன்படுத்திக்கொண்ட திறனாய்வு அமைப்பியல் அணுகுமுறை, சூழலியலில் அணுகுமுறை எனப் பெயரிட்டுக் கொண்டுள்ளன.இவை அனைத்தும் உலகப்பல்கலைக்கழகங்கள் பலவற்றிலும் இலக்கியப்பனுவல்களை வாசிக்கவும் விவாதிக்கவும் பயன்பாட்டில் இருப்பவை. இவையே ஒரு பனுவலைப் பலதள வாசிப்புக்கு உண்டாக்குவதற்கான கருவிகளாகவும் இருக்கின்றன.

உள்ளடக்கமும் அணுகுமுறைகளும்:

இலக்கிய உருவாக்கம் என்பது மனிதர்களின் ஆதாரப்பிரச்சினைகளின் வெளிப்பாடு என்பதில் வெவ்வேறு கருத்தியல் நிலைபாட்டாளர்களும் ஒன்றுபடுகின்றனர். அதனைக் கண்டறிவதற்கு இலக்கியப்பனுவல் மட்டுமே போதுமானவையல்ல; அவை உருவாகக் காரணமான கருத்தியலைக் கணக்கில் கொள்ளவேண்டும் என்ற நிலைபாடே திறனாய்வு அணுகுமுறைகளை முன்மொழிந்தன.

மரணத்தைக் கண்டு பயப்படுதலே மனிதர்களின் ஆதாரப் பிரச்சினை என்பது ஒருவகைக் கருத்தியல். இக்கருத்தியலின் தோற்றுவாய்களாகவும் காரணிகளாகவும் இருப்பன சமயங்களும், அவற்றின் பரப்புரைகளும், அவை முன்மொழியும் தீர்வுகளும் ஆகும். இமானுவேல் காண்ட் என்ற நவீன அறிஞர் இதனை விரிவாகப் பேசியுள்ளார். மனித அனுபவங்களுக்குப் பின் இருக்கும் காரணிகள் பற்றிப் பேசும்போது மரணபயம், மரணத்திற்குப் பின்னான வாழ்க்கையைத் தேடுதல் என்பதே மனிதனை இயக்குகிறது என விவரிப்பார். அதிலிருந்து தப்பிக்க நினைக்கும் மனிதர்கள் தங்களை வெவ்வேறு அழகியல் வெளிப்பாடுகளில் ஈடுபடுத்திக் கொள்வதுண்டு என்பதும் அவரது கண்டுபிடிப்பு. ஒழுங்கான வாழ்க்கை முறை, ஒழுங்கமைப்புகளிலிருந்து கலையாக்கம், வாழும் சூழ்நிலையை உருவாக்குதல் என்பன அதன் தொடர்நிகழ்வுகள். இந்நிகழ்வுகளை வாசிப்பிற்கான வரைவுத்திட்டமாக உருவாக்கிக் கொண்டு இலக்கியப்பனுவலை வாசித்து, அப்பனுவல் உருவாக்கத்தின் நோக்கத்தை ஒருவர் சுட்டிக்காட்டும்போது அவர் அவ்வகைத் திறனாய்வுப்பார்வை கொண்டவராக அறியப்படுகிறார். இதனையே அறவியல் அணுகுமுறையாக இலக்கியத்திறனாய்வு நூல்கள் சொல்கின்றன. சிலர் இதனை அழகியல் பார்வையாகவும் சொல்வதுண்டு. அப்படிச் சொல்பவர்கள் உள்ளடக்கத்திற்கான பங்கை முதன்மைப்படுத்தாமல் மொழிப்பயன்பாடு, உருவாக்கும் ஓசை ஒழுங்கு, அணிகளின் சிறப்பு, உருவகம், படிமம் போன்றனவற்றை மட்டும் பேசிவிட்டு ஒதுங்கிவிடுவர். திருக்குறள் பனுலாக்கத்தின் நோக்கம் அறங்களைத் தொகுத்துரைப்பதும் ஒழுங்கமைப்புகளின் இயல்புகளை எடுத்துரைப்பதும் விதிகளை கட்டமைத்து வலியுறுத்துவதும் என்பதால் அறவியல் அணுகுமுறை என்னும் தளத்தில் வாசித்து முன்வைப்பது வரவேற்கத்தக்கதாக அமையும்.

இலக்கிய ஆக்கத்தில் இருக்கும் இரண்டாவதான ஆதாரப்பிரச்சினை உடலின்பம் சார்ந்த ஒன்று. இக்கருத்தியல் மனிதர்களின் எதிர் பால் கவர்ச்சியும் இச்சையுமே வாழ்க்கையின் காரணிகளாக இருக்கின்றன என்கிறது. சிக்மண்ட் பிராய்டு என்பவரின் கண்டுபிடிப்புகளின் தொடர்ச்சியில் உருவான இக்கருத்தியல், எதிர்பால் மீதான இச்சையே இலக்கிய உருவாக்கத்தின் ஆதாரப்பிரச்சினை என்கிறது; அதைத்தான் இலக்கியம் எழுதிக் காட்டியிருக்கிறது என்பது ப்ராய்டியத்தை இலக்கியப்பார்வையாக முன்மொழிபவர்களின் நிலைப்பாடு. அதிலிருந்தே உளவியல் அணுகுமுறையும் அதன் கிளைகளான தொல்படிமவியல் அணுகுமுறை போன்றனவும் உருவாகி இருக்கின்றன. திருக்குறளின் மூன்றாவது பாலான காமத்துப்பாலின் கவிதைகள் தனித்தனித் துணுக்குகளாகச் சொல்லும் முறையைக் கொண்டிருந்தாலும் மனித உடல்களே அதன் வரைபடம். அவ்வுடல்களை இச்சை கொள்ளும் எதிர் பால் உடலின் விளைவுகளே வெளிப்பாடுகள். தனித்தனிப் பாடல்களாகப் பார்க்காமல், தனித்தனி அதிகாரமாகவும் ஒற்றைக் கண்ணியால் இணைக்கப்பட்ட ஓர்மை கொண்ட ஆதாரப் பிரச்சினையாகவும் காமத்துப்பாலை ஆய்வு செய்து முன்வைக்க உளவியல் திறனாய்வின் கண்டுபிடிப்புகள் அதிகம் பயன்படும்.

மூன்றாவதாகவும் முக்கியமானதாகவும் கருதப்படும் கருத்தியல் மனிதர்களின் உணவுத்தேவை அல்லது பொருட்தேவை உருவாக்கும் நெருக்கடிகளை மையப்படுத்துவது. பொருளாதார உடைமை காரணமாக மனிதர்கள் வர்க்கமாகப் பிளவுபட்டிருக்கிறார்கள் எனவும், ஆளும்வர்க்கம், ஆளப்படும் வர்க்கம் என்ற இருபெரும் பிளவுக்குள்ளான முரணே மனித வாழ்க்கையை நகர்த்திவந்துள்ளது; அவற்றையே இலக்கியங்கள் எழுதிக்காட்டின என்பது அந்தக் கருத்தியலின் அடிப்படை. கார்ல் மார்க்சின் அடிப்படை விளக்கங்களிலிருந்து உருவான இந்தக் கருத்தியலின் கொடையே சமூகவியல் அணுகுமுறையும், மார்க்சிய அணுகுமுறையும். அதன் கிளைகளே பெண்ணியம், தலித்தியம், விளிம்புநிலைப்பார்வை போன்றனவாக வளர்ந்துள்ளன என்பதை உணர்ந்து கொண்டு செய்யப்படும் வாசிப்பும் முன்வைப்பும் திருக்குறளை இன்னொரு தளத்திற்கு இட்டுச்செல்லும். இத்தளவாசிப்புக்குரியதாகப் பொருட்பாலின் குறள்களும் அதிகாரங்களும் முதன்மைத்தரவுகளாக இருக்கும் என்பதை விளங்கிக் கொண்டால் போதுமானது. வர்க்க வேறுபாட்டை மட்டுமல்லாமல், சமூக அமைப்பின் சிற்றலகுகள், பேரலகுகள், அவற்றின் இயங்கியல் பற்றியெல்லாம் பேசும் இக்கருத்தியல் திருக்குறள் முன்வைக்கும் அரசு, அமைச்சு, படை, குடி, கூழ் போன்றவற்றை விளக்கவும் விவாதிக்கவும் உதவும் திறனாய்வு அணுகுமுறையாக விளங்கும்.

இதனை அடுத்துச் செல்வாக்கோடு இருக்கும் திறனாய்வு அணுகுமுறைகள் மொழியைக் கருவியாக நினைப்பவை. மொழியைக் கண்டுபிடித்ததே மனித ஆற்றலின் முதல் சாதனை. அதுவே எல்லாவற்றையும் தீர்மானிக்கும் கருவியாக இருக்கிறது என்ற கருத்தியல் வழி உருவான அணுகுமுறைகள் சிலவாகும். முதலில் மொழியியல் அணுகுமுறையாகவும், பின்னர் அமைப்பியல், பின்-அமைப்பியல் அணுகுமுறைகளாக வளர்ந்த வளர்ச்சிக்குப் பின்னணியாக இருப்பன மொழி பற்றிய பார்வைகளே. இந்த அணுகுமுறைகளைக் கற்றுத் தேர்ந்தவர்கள், திருவள்ளுவரின் சொல்முறைமை – மொழிதல் கோட்பாடு, அதிகார வைப்புமுறை, ஓரதிகாரத்திற்குள் குறள்களை அடுக்குவதற்குப் பின்பற்றும் உத்திகள் போன்றவற்றை விரிவாகப் பேச முடியும்.

அமைப்பியல் திறனாய்வின் பல்வேறு அடுக்குகளைப் பயன்படுத்தி, அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்ற மூன்றிலும் தனித்தனிச் சொல்முறையை – மொழிதல் கோட்பாட்டைப் பின்பற்றியுள்ளார் என்பதைக் கண்டறிந்து சொல்லமுடியும். அக்கண்டுபிடிப்புகள் கருத்தைச் சொல்லும் அறத்துப்பாலின் குறட்பாக்களுக்கு வேறாகவும் நிறுவனங்கள், அமைப்புகள் போன்றவற்றின் இயல்புகளையும் உறவுகளையும் பேசும் பொருட்பாலுக்கு வேறாகவும் இருப்பதை விவாதிப்பனவாக இருக்கும். அதேபோல் மனித உடல்களின் மெய்ப்பாடுகளையும் உணர்வுத்திரட்சியையும் பேசும் மொழிக்கட்டமைப்பு எப்படியானதாக இருக்கின்றன என்பதை வேறுபடுத்திக் காட்ட முடியும். மரபான இலக்கணங்கள் பயன்படுத்திய அணிகள், கூற்றுமுறைகள் போன்றவற்றை நவீன அமைப்பியல் தளத்தில் விளக்கும்போது திருக்குறளின் பனுவலாக்கச் சிறப்புகள் ஏற்கத்தக்கதாக மாறும்

தமிழின் பெருமைகளுள் ஒன்றாக இருக்கும் திருக்குறள் என்னும் பனுவலை உலக அறிவிப்பரப்பிற்குள் தமிழர்களின் பெருங்கொடை என வைப்பதின் தேவையை வலியுறுத்தியுள்ள இக்கட்டுரை மரபான உரை எழுதுதலை நவீனத்துவப் புரிதலோடும், சமகாலப் பொருத்தப்பாட்டோடும் வாசிக்கும் மறுவாசிப்புகளை அடையாளப்படுத்தியிருக்கிறது. அதன் தொடர்ச்சியில் உலகப்புலமையாளர்கள் பின்பற்றும் பலதள வாசிப்பை நோக்கி நகர்த்துவதற்குரிய திறனாய்வு அணுகுமுறைகளைப் பரிந்துரைத்துள்ளது.

பரிந்துரையை வெறும் ஆலோசனைகளாக முன்வைக்காமல் பலதள வாசிப்பின் மாதிரிகளாக இரண்டு கட்டுரைகள் இணைக்கப்பட்டுள்ளன.முதல் கட்டுரை, திருக்குறளை முன்வைத்துத் தமிழின் அறிவுத்தோற்றவியலைக் கண்டறிய, உளவியல் அணுகுமுறையைப் பயன்படுத்திய பல தள வாசிப்புக்கட்டுரை. இரண்டாவது கட்டுரை திருக்குறளில் கடமைகளும் உரிமைகளும் என்பது. இக்கட்டுரை சமுதாயவியல் அணுகுமுறையைப் பயன்படுத்துவதோடு, மொழியைப் பயன்படுத்தும் அமைப்பியல் பார்வையையும் கருவியாக்கியிருக்கிறது. முழுமையான கட்டமைப்பை ஆய்வு செய்வதற்கு ஒரு மாதிரியாக அமைந்துள்ளது.


https://ramasamywritings.blogspot.com/2015/05/blog-post_56.html

https://ramasamywritings.blogspot.com/2010/11/blog-post_08.html

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கற்றல், கற்பித்தல், திட்டமிடுதல்

நவீனத்துவமும் பாரதியும்

தமிழில் நடப்பியல் இலக்கியப் போக்குகள்