ஊர்கள் - பயணங்கள் -நினைவுகள் -அனுபவங்கள்
பிறந்த ஊரில் வாழ்ந்த காலம் குறைவுதான். அது ஒரு மிகச் சிறிய ஓர் மலையடிவாரக் கிராமம். 100 வீடுகள்கூடக் கிடையாது. அதிகபட்சக் கொண்டாட்டம் வைகாசியில் நடக்கும் மாரியம்மன் திருவிழாவும் தைத்திங்களில் நடக்கும் மாடு விரட்டும்தான், இதுவரையான வாழ்நாளில் நான்கில் ஒரு பகுதிகூட அங்கிருந்ததில்லை. படிக்க என்றும் வேலைக்கென்றும் பார்க்கவென்றும் பழகவென்றும் திரியவென்றும் திளைக்கவென்றும் சென்று திரும்பிய வெளிகள்.ஆண்டுக்கணக்கில் தங்கியிருந்த - திண்டுக்கல், மதுரை, பாண்டிச்சேரி, நெல்லை, வார்சா.. அங்கிருந்தபடியே சென்று திரும்பிய வெளிகள் ஒவ்வொன்றும் வந்துபோகின்றன.
விலகிப்போன கொண்டாட்டங்கள்
15 ஆண்டுகளுக்கு முன் பார்த்த மாரியம்மன் திருவிழா. சொந்தக் கிராமத்தில் பள்ளிப்பருவம் எட்டாம் வகுப்போடு முடிந்துபோனது. ஒன்பது முதல் படிப்புக்காகாத் திண்டுக்கல், மதுரை என நகர்ந்தபோதும் வைகாசியில் நடக்கும் மாரியம்மன் பொங்கல் விழாவில் தவறாமல் கலந்து கொள்வதுண்டு. பணி நிமித்தம் புதுச்சேரி, திருநெல்வேலி,வார்சா, கோயம்புத்தூர் எனத்தாவிக் கொண்டிருந்ததால் எப்போதாவது வந்து போவதாக மாறியது.
ஓரிரவும் ஒரு பகலும் நடக்கும் கொண்டாட்டத்தில் மாரியம்மன் கரகமாகக் கோவிலில் இருப்பது 12 மணிநேரம்தான். நள்ளிரவுக்குப் பின் கிணற்றோரம் உருவாக்கம் பெற்று அடுத்தநாள் அதே கிணற்றில் இறங்கி விடும் அம்மனைக் கொண்டாடச் சென்னை, பாண்டிச்சேரி எனப் பெருநகரங்களில் வேலையில் இருப்பவர்களும் திருப்பூர், கோவை போன்ற நகரங்களில் தொழில் செய்பவர்களும் வந்திருக்கிறர்கள். பலரையும் அடையாளம் சொல்ல முடியவில்லை.
ஊருக்கு வந்துள்ள எல்லோருக்கும் கோயில் சார்பில் இரண்டு வேளை சாப்பாடு உண்டு. கிடா வெட்டுக்குப்பின் அவரவர் வீட்டில் கறிச்சோறு.தீச்சட்டி, முளைப்பாரி,மாவிளக்கு என ஒவ்வொன்றையும் இந்தமுறை இருந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன். வைதீகச்சடங்குகள் இல்லாத கொண்டாட்டத்திற்குள் 'விளக்கு பூசை' என ஒன்றின் வழியாக ஊருக்குத் தொடர்பில்லாத ஒருவர் 2 மணிநேரம் இருந்துவிட்டுப் போகிறார்.
கிராமத்திற்குச் சென்று திரும்புதல்
ஒவ்வொரு கோடை விடுமுறையிலும் எமது கிராமங்களுக்குச் சென்று திரும்புவதை இன்னும் நிறுத்தியதில்லை.திரும்பவும் கிராமங்களுக்குச் செல்லவேண்டிய தேவையிருக்காது என்ற முடிவு எடுத்த பின்னும்கூடப் போய் வருகிறேன்.மதுரைமாவட்டத்தின் மேற்குப்பகுதிக் கிராமங்கள் எமது கிராமங்கள். உசிலம்பட்டி, பேரையூர், திருமங்கலம் வட்டத்தில் இருக்கின்றன அந்தக் கிராமங்கள்.போய் வரும்போதெல்லாம் இந்தியாவின் பெரும்பான்மை வெளியின் மனிதர்களோடு உரையாடல் நடத்தியதாக ஓருணர்வு ஏற்படுகின்றது. அதற்காகவே போய்க் கொண்டிருக்கிறேன். இந்தமுறை போய்த் திரும்பிய போது பளிச்சென்று தெரிந்தவைகள் சிலவற்றைச் சொல்லவேண்டும். தானிய விவசாயம் ஏறத்தாழ முடிவுக்கு வந்துகொண்டிருக்கின்றது. நன்செய், புன்செய்த்தானியங்களை உற்பத்தி செய்த விவசாயிகள் மட்டுமே கொண்ட அந்தக் கிராமங்கள், காய்கறிகள், பூக்கள், பழங்கள் சார்ந்தவைகளையும் பால் உற்பத்தியையும் மையமாக்கிய நகர்வை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கின்றன.
வீடுகள் ஒவ்வொன்றின் முன்னாலும் கூடுதல் குதிரைச் சக்திகள் கொண்ட இருசக்கர வாகனங்கள் நிற்கின்றன. நகரத்து வாகனங்களான ஆட்டோக்கள், கார்கள், பள்ளி மாணாக்கர்களை ஏற்றிச் செல்லும் சிற்றுந்துகள் ஒவ்வொரு கிராமங்களின் தெருக்களில் நுழைந்து வீட்டுவாசல்வரை வந்துபோகின்றன. அதற்கேற்பப் பெரும்பாலான கிராமச் சாலைகள் உறுதியானதாக மாறியிருக்கின்றன.
குடிதண்ணீர் வசதி போதுமானதாக இருக்கின்றது. குடிமைப் பொருட்கள் கிடைக்கின்றன. அரசின் சலுகைகள் பெறுவதற்காகப் பட்டியல்களில் நடக்கும் பொய்கள், குளறுபடிகள் குறித்துப் பேசுகின்றார்கள். தெருக்களுக்கும் வீடுகளுக்கும் மின்சாரவசதியைக் கொண்டுவந்து சேர்க்கும் மின்சாரத் துறையில் நடக்கும் தாமதங்கள் லஞ்சம், ஊழல்கள் கோபமாகப் பேசப்படுகின்றன.
கும்பாபிசேகம் நடக்கும் கோயில்கள் அதிகமாகிக் கொண்டே இருக்கின்றன. காதுகுத்து, மொட்டையடிப்பு, கல்யாணம் போன்றவற்றில் இடம்பெறும் பெயர்களுக்காக அழைப்பிதழ்களின் பக்கங்கள் அதிகமாகிக் கொண்டிருக்கின்றன. விருந்துச் சாப்பாட்டு வகைகளும்கூட. மொய்கள் வாங்கிக் கடன் அடைக்க முயல்கிறவர்களின் போக்குகளை நகைச்சுவையாகப் பேசிக்கொள்கிறார்கள்.
முதல் அமைச்சர் பற்றியோ அரசின் செயல்பாடு பற்றியோ, கட்சிகளின் மோதல்கள் பற்றியோ பேச்சுகளே இல்லை. வீட்டுத் தொலைக்காட்சிகளில் தொடர்களும் நகைச்சுவைக் காட்சிகளும் பாடல்காட்சிகளுமே தேடப்படுபவைகளாக இருக்கின்றன. செய்தி அலைவரிசைகளின் சத்தத்தையே காணோம்.தென்மேற்குப் பருவக்காற்று சாரலோடு சேர்ந்து முகம் நனைக்கிறது.
******************
ஒருவாரமாக வீட்டில் அடைந்து கிடக்கிறேன். ஒவ்வொரு நாளும் ஒரு பாதையில் நடக்கும் காலை மாலை நடை வீட்டு மாடியின் செவ்வகத்திற்குள் வட்டமடிக்கின்றன. அரியகுளம் கண்மாயில் குளிக்கச் சென்ற வெள்ளைக் கொக்குகள் திரும்பிப் போகின்றன.. கூந்தங்குளத்திற்கும் வேய்ந்தான் குளத்திற்கும் நயினார்குளத்திற்கும் கோடைக்ளியலுக்கு வரும் ஆப்பிரிக்கக் கருங்கழுத்துக் கழுகுகளும் ருஷ்யாவின் செம்பழுப்பு நாரைகளும் மாலைச் சூரியனை நோக்கிப் பறக்கின்றன. மார்த்தாண்டம் வரை போய்வர நினைத்த அந்தச் சின்னப்பயணமும் தட்டிப் போய்விட்டது.
பள்ளிக்காலத்துத் திண்டுக்கல் நடந்தே பார்த்த நகரம். பேருந்து நிலையத்திற்குப் பக்கத்திலிருந்த பள்ளியின் விடுதியிலிருந்து மலைக் கோட்டைக்கும் பக்கத்துக் கிராமங்களுக்கும் நடந்தேதான் போவோம். நகரத்தில் இருந்த நான்கு திரையரங்குகளுக்கு மட்டுமல்ல சுற்றியிருக்கும் ஓலைக் கொட்டகைகளுக்கும் நடைதான் பயணவழி. கல்லூரிக்காலத்துப் பயணங்களில் பெரும்பாலானவை நகரப் பேருந்துகள். மதுரை மாநகரம் தூங்கா நகரம். கோரிப்பாளையத்தில் ஏறி எல்லா இடங்களுக்கும் போய்வரலாம். வெள்ளிக்கிழமைகளில் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு நடை தான் வழி. அப்படியே திண்டுக்கல் ரோட்டில் பழையபுத்தகக் கடைகளைப் பார்த்துக்கொண்டே செண்டரல் அல்லது நியுசினிமா தியேட்டரில் நுழையலாம். டவுன்ஹால் ரோட்டின் தொடக்கத்தில் ரீகல் தியேட்டர். முதல் திருப்பத்தில் ஆசியாவிலேயே பெரிய தங்கம். வைகையாற்றைத் தாண்டினால் சிந்தாமணி.
பயணங்களற்ற நாட்களை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. இரண்டாம் ஆட்டம் சினிமாவிற்கு இரண்டு மணிநேரம் முந்தியே கிளம்பிப் பாண்டிச்சேரியின் சந்துபொந்துகளில் சைக்கிள் பயணம் செய்த நாட்கள் இனி இல்லைதான். இரண்டு நாட்கள் சும்மா இருந்தால் கையில் ஒரு புத்தகத்தோடு பேருந்து நிலையத்தில் ஓரத்து இருக்கையில் இடம்பிடித்துக் கொண்டு கிளம்பிய இலக்கற்ற பயணங்கள் இப்போது இல்லாமல் போய்விட்டது. புதுச்சேரியில் இருந்தபோது அச்சிறு மாநிலத்தின் சாலைகள் எல்லாம் அப்படித்தான் அறிமுகமாகின. பாண்டிச்சேரிக் காலத்து வாகனங்கள் மிதிவண்டியும் பேருந்துகளும் தான். கடைசி ஆறுமாதம் மட்டும் வெள்ளைநிற ஸ்கூட்டி வந்துவிட்டது.
நெல்லையில் ஸ்கூட்டி மகளுக்கு என்ற ஆனபோது இரண்டாவது வாகனமாக டிவிஎஸ் எக்ஸெல். நால்வரும் செல்ல இரண்டு வாகனங்கள். பாளையங்கோட்டையின் தெருக்களையும் நெல்லையின் முக்குகளையும் சந்துகளையும் கண்மாய்க் கரைகளையும் தாமிரபரணியின் நகர்வையும் காட்டித்தந்தன ...
திருநெல்வேலியிலிருந்து தென்காசிக்கு
திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து பிரிந்து இன்னொரு மாவட்டம் உருவாகியிருக்கிறது. திருநெல்வேலியின் மேற்குப் பகுதியின் பெருநகரமாக இருந்த தென்காசி அதன் தலைநகரம். திருநெல்வேலியில் இருக்கும் இந்த 22 ஆண்டுகளில் அதிகம் பயணம் செய்த சாலை இந்தத் தென்காசி -நெல்லை சாலை தான். வீட்டிலிருந்து பல்கலைக்கழகத்திற்கு 15 கிலோ மீட்டர்கள். அரைமணி நேரத்திலிருந்து 45 நிமிடங்கள் ஆகும்.
பல்கலைக்கழகம் போகும் வரை பல்கலைக்கழகம் ஞாபகத்தில் இருக்கும். அதைத் தாண்டிவிட்டாலே கண்ணில் படுவது மேற்குத் தொடர்ச்சிமலையின் அறுபடாத தொடர்ச்சிதான். இந்த ஆண்டு பெரிய ஏமாற்றம். தொடர்ச்சியாக ஒருவாரம்கூடச் சாரல் இல்லை. சாரலைக் கொண்டுவரும் காலை வெண்மேகங்களும் மாலை நேரத்துக் கருமேகங்களும் அலைந்து திரியவில்லை. ஆலங்குளம் தாண்டினாலே முகடுகளில் தவழும் மேகத் திரட்சியைக் கலைக்கும் காற்றின் போக்கில் காற்றாடிகள் சுழல்கின்றன. ஜூன் தொடங்கி வீசும் சாரலும் சாரலில் நனையும் மனிதர்களும் ஆற்றிலும் ஆற்றின் துறைகளிலும் பிரிந்து ஓடும் ஓடைகளிலும் குளித்து மேடேறும் கூட்டமும் மாறப்போவதில்லை. கடையநல்லூர் தொடங்கி இலஞ்சி, செங்கோட்டை,, அம்பை,பாபநாசம், களக்காடு வரையிலான மலையோரத்து ஊர்கள் இன்னும் மலைக்கு இந்தப் பக்கம் தான் இருக்கின்றன. சஞ்சீவி பர்வதத்தைத் தூக்கிச் சாடி எல்லை பிரித்துப் பார்வை மறைக்கும் வித்தையல்லவே மாவட்டப்பிரிப்பு. கண்ணுக்குத் தெரியாத அந்தக் கோடு என்ன செய்துவிடப்போகிறது?
நெல்லை மாவட்டத்தின் பெருமைகள் பலவற்றைத் தென்காசி கடத்திக் கொண்டு போகப்போகிறது. ஆண்டுக்கு ஒன்றிரண்டு தடவை போய்க் குளித்த குற்றால அருவிகள் இனி அடுத்த மாவட்டத்தில்.மலைகள், அருவிகள், அணைகள்,ஆறுகள், குளங்கள் வயல்கள் என இயற்கையின் கொடையெல்லாம் கைமாறப்போகிறது. காதல் பாட்டுப்பாட, மணிரத்னத்தின்- ஷங்கரின் சினிமா நாயகிகளும் நாயகர்களும் தென்காசிக்குப் போய்விடுவார்கள். என்றாலும் தென்காசிக்காரர்கள் பாவம்தான். இந்த டிஜிட்டல் உலகத்திற்கு- எண்வழி உலகத்திற்கு மாறியாகவேண்டும்.
ஆதார் தொடங்கி எல்லா அடையாள அட்டைகளிலும் மாற்றம் செய்தாக வேண்டும்.ரேசன் வாங்க ஸ்மார்ட் கார்டு, மானியம் வாங்கவும் கடன் வாங்கவும் வங்கி அட்டைகள், பொதுப்போக்குவரத்துகளுக்குரிய மானிய விலை அட்டைகள், விவசாயக்கூலி அட்டை, பீடித்தொழிலாளி அட்டை, அரசுப்பணியாளர் அட்டை, தனியார் தொழிலாளர் அட்டை, கல்வி வளாகங்களுக்கான அட்டைகள், வருகைப்பதிவைக் கீறிச்செல்லும் நுழைவு அட்டைகளென எத்தனை அட்டைகள். ஒவ்வொரு அட்டையிலும் மாவட்டத்தைக் குறிக்கும் எண்ணிற்கு வழங்கப்படும் குறியீட்டுக்கு மாறவேண்டும். நெல்லைப் பதிவு எண் 72 எனப் பதிவுசெய்த வாகனங்களின் முன்னும் பின்னும் புதிய எண்களோடு நகரவேண்டும். மாவட்ட எல்லை தாண்டியெல்லாம் கல்லூரிக்கு அனுப்பமுடியாது எனச் சொல்ல முற்படும் பெற்றோர்களைப் பெண் பிள்ளைகள் எப்படிச் சமாளித்துப் பல்கலைக்கழகத்திற்குப் படிக்க வரப்போகிறார்களோ தெரியவில்லை.
திருநெல்வேலி -தென்காசி 50 கிலோமீட்டர். என்றாலும் ஒவ்வொரு நாளும் பத்துக்கும் குறையாமல் விபத்துக் காப்பு வாகனங்களின் பேரொலிக்கு வழிவிட வேண்டியதிருக்கும். 108 எண்ணிட்ட அரசு வாகனங்கள் மட்டுமல்ல. தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் தனியார் மருத்துவ மனைகளுமென அவசரப்பணி வாகனங்களால் இந்தச் சாலையின் ஒலிவேகத்தைக் கூட்டியிருந்தன. திருநெல்வேலி மாவட்டத்தலைமை இடமான மேட்டுநில மருத்துவ மனைக்கு வரும் வாகனங்கள் காதில் கிறுக்கிக் கொண்டே செல்லும். தான் எழுதிய கதையொன்றிற்கு இரைதேடும் பறவைகள் என்று குறியீட்டுத் தலைப்பொன்றைத் தோப்பில் முகம்மது மீரான் வைத்திருப்பார். ஓலமிடும் வாகனங்கள்; உயிர் சுமந்து உடல் சுமந்துஓடும் வேகமும் நிறுத்தும் சடக்கொலியும் இந்தச் சாலையைச் சங்கொலிச்சாலையாகவே ஆக்கியிருந்தன. அந்தச் சத்தங்கள் இனிக் குறையக் கூடும்.
மாவட்டம் பிரிக்கப்பட்டுவிட்டது.மாவட்ட ஆட்சியரும் காவல்துறைக் கண்காணிப்பாளரும் உடனடியாகப் பொறுப்பேற்றுக்கொள்ளக்கூடும். அதே வேகத்தில் தென்காசிக்கென மாவட்டத் தலைமை மருத்துவமனை வரவேண்டும். அம்மருத்துவ மனைக்கான மருத்துவக்கல்லூரி ஒன்றும் வரவேண்டும். வந்துவிட்டால் சங்கொலி எழுப்பும் அந்த வாகனங்கள் நெல்லைக்குள் அலறியடித்துக் கொண்டு நுழையப்போவதில்லை. மாவட்டத் தலைமை மருத்துவமனை மட்டுமல்ல; மாவட்ட மையநூலகம், நீதிமன்றங்கள், மாவட்ட அடையாளத்தோடு கலைஞர்கள், எழுத்தாளர்கள் திரளவேண்டும். பொற்கிழிகள், பரிசுகள் பெற வேண்டும். அகத்தியன் வந்தமர்ந்த பொதிகை மலையும் அம்மலையைச் சுற்றித்திரியும் சித்தர்களும் கொண்டாடப்பட வேண்டும்.
மாறும் கிராமம்.
இப்போது எங்கள் கிராமத்தில் திரும்பவும் மழை பெய்து பசுமை திரும்பியிருக்கிறது. அதிகம் நீர் தேவைப்படாத மக்காச்சோளமே முதன்மைப்பயிராக விளைவிக்கப்படுகின்றது. அது தானியம் தான் என்றாலும் நேரடியாகச் சமையலுக்காக வைத்துக் கொள்வதில்லை. மக்காச்சோளத்தை விற்று அரிசி வாங்கிக் கொள்கிறார்கள். இன்னொரு பணப்பயிராக மல்லிகைத் தோட்டங்கள் பெருகியிருக்கின்றன.
பசுமைப்புரட்சி காலத்தில் கமலை விவசாயத்திலிருந்து மின்சாரமோட்டாருக்கு மாறிய காலத்தில் ஒருபோகம் நெல்லும் பருத்தியும் விளைவிக்கப்பட்டன. வானம் பார்த்த காடுகளில் துவரை, பாசிப்பயறு, உளுந்து கம்பு, சோளம் என விளைந்தன. கிணறுகளின் நீரூற்று முடிந்துபோன ஆண்டுகளில் கிராமம் சென்னை, திருப்பூர், கோவை எனத் தொழில் நகரங்களுக்கு இடம்பெயர்ந்தது. ஆனாலும் பிடிவாதமாக மாரியம்மனைக் கொண்டாடுவதைக் கைவிட்டதில்லை.
இந்த முறை தலைக்கட்டுக்கு ரூ 1500/- வரி போட்டுக் கொண்டாடினார்கள். மனதில் தங்கியிருக்கும் நினைவுகளைத் திரும்பக் கொண்டுவர அந்தக் கொண்டாட்டம் தேவைப்படுகிறது. ஊர்ப்பற்றைச் சில பத்தாண்டுகளுக்கு முன்பே தொலைத்துவிட்ட என்னைப் போன்றவர்கள் எப்போதாவது மாரியம்மன் திருவிழாவுக்குப் போய்வருகிறோம். ஊர்க்காரர்களின் 130 தலைக்கட்டுக் கணக்கில் நான் இல்லை என்பதில் இந்த முறை வருத்தம் தான். மிதிவண்டிகள் மட்டுமே ஊரில் இருந்த வாகனமாக இருந்த காலத்தில் வெளியேறிய நான் காரில் சென்றேன். என்னைப்போல 25 பேர் காரில் வந்திருந்தார்கள் அரசு வேலையிலும் தனியார் கம்பெனிகளிலும் மாதச்சம்பளக்காரர்களாக இருப்பவர்களும் ஊரின் பொருளாதாரத்தை மாற்றியிருக்கிறார்கள். திருப்பூரிலும் கோவையிலும் பக்கத்து ஊர்களான எழுமலை, உசிலம்பட்டி எனப் பல ஊர்களிலும் சொந்தத்தொழில் செய்பவர்களும் இதுபோன்ற நாளொன்றுக்காகக் காத்திருக்கிறார்கள்.
**********************
போன வருடத்தை விட இந்த வருட வெயில் கூடுதல் - ஒவ்வொரு வருடக் கத்திரி வெயிலின் போதும் இந்த வாக்கியத்தை யாராவது சொல்லக் கேட்டிருப்போம்.. இந்த வருடம் அந்தப் பேச்சையும் தூக்கிச் சாப்பிட்டுவிட்டு, நேற்று பாதிக்கப்பட்டவர்கள் இவ்வளவு. இறந்தவர்கள் இவ்வளவு என்ற புள்ளிவிவரக் கணக்காக மாற்றி விட்டது கரோனோ. கோடையும் போய் விட்டது. ஆடிக்காத்து பறபறவென்று அடித்து முடியப்போகுது. இளவேனிலில் வந்த கரோனா முதுவேனில் தாண்டி கார்காலத்தையும் கடந்துவிட்டது. அடுத்த கோடை வரை நீளும் என்றே சொல்கிறார்கள்.
குளிர்காலத்தைவிடக் கோடைகாலம் தான் அச்சமூட்டும் ஒன்று. மாணவனாக இருந்த காலத்தில் கோடை விடுமுறை விடுவதை ஏற்றுக் கொள்ளாத மனது என்னுடையது. பள்ளிக்காலத்திலிருந்தே விடுதி வாழ்க்கையிலிருந்த எனக்கு விடுதி வாழ்க்கையைவிட வீட்டு வாழ்க்கை மகிழ்ச்சியானதாக இருந்ததில்லை அதிலும் கோடைகாலத்து வெயிலில் பெரும்பாலும் எங்களூரிலிருந்த ஆலமரத்து நிழல்களே ஓரளவு ஆறுதல் தரும். இரவுப் படுக்கைக்கு வெப்பம் இல்லாத இடங்களைத் தேடிக் கண்டுபிடிப்பதே பெரும்பாடாக இருக்கும். ஊர்ச்சாவடி மொட்டைமாடியில் படுக்கலாம். ஆனால் பகலின் வெப்பம் அனைத்தையும் திருப்பிவிடும் சுண்ணாம்புத்தளம் காளவாய் போலக் கொதிக்கும்.
கோடைகால வியாதிகள் என்று ஒரு பட்டியலே இருந்தது. அம்மை, வயித்துப்போக்கு, காலரா போன்ற தொற்றுவியாதிகள் வெயில்காலத்தைத் தேர்வுசெய்தே வந்துசேரும். அதிகப்படியான வேர்வையில் நெற்றியெல்லாம் வேர்க்குரு கொப்பளங்களாகிவிடும். உடலெங்கும் சொரிந்து காயமான காலங்கள் உண்டு. நொங்குப் பட்டைகளைத் தடவி குளிர்ச்சியை உண்டுபண்ணித் தப்பிப்போம். அதேபோன்று இன்னொரு நோய் சிரங்கு. அதுவும் வெயிலின் விளைவுதான். இந்த நோய்கள் எல்லாம் இப்போது இல்லை. அறிவியல் கண்டுபிடிப்புகளும் அதனை ஏற்று மக்களுக்குத் தடுப்பு மருத்துகளத் தந்த தமிழக அரசின் தொடர் முயற்சிகளும் நலவாழ்வை உறுதி செய்திருக்கின்றன. இந்தக் கரோனாவுக்கும் அறிவியல் ஒரு தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்துவிட்டால் அரசு வேகமாகச் செயல்பட்டுத் தடுத்துவிடும் என்றே நினைக்கிறேன்.
********************
கோடைகாலம்
கத்திரி வெயில் என்று அழைக்கப்படும் அக்கினி நட்சத்திரக் காலத்தில் முக்கியமான வேலைகளைச் செய்யாமல் தள்ளிப் போடுவது தமிழர்களின் வழக்கம். பதினெட்டாம் பெருக்கு என அழைக்கப்படும் ஆடி பதினெட்டில் முதல் ஏர் வைத்து முதல் விதை பாவும் பழக்கம் உள்ள நமது முன்னோர்கள் முதல் கூடலை- புதுமணத் தம்பதிகளின் முதல் புணர்ச்சியை- ஆடி மாதத்தில் வைத்துக் கொள்வதில்லை என்பதற்குக் கூட இந்த அக்கினி நட்சத்திரம் தான் காரணம். ஆடியில் புணர்ந்தால் சித்திரையில் பிள்ளை பிறக்கும். சித்திரை வெயிலில் - அதிலும் கத்திரி வெயில் பிள்ளை பெறும் வலியை மற்றவர்கள் சொல்ல முடியாது. பெறுபவருக்குத் தான் தெரியும்.
அக்கினி நட்சத்திரத்தின் கால அளவு மொத்தம் பதினான்கு நாட்கள். பின்னேழு முன்னேழு என ஒரு வழக்குச் சொல்லால் குறிக்கப்படும் கத்திரி வெயில் காலம் என்பது சித்திரை மாதத்தின் கடைசி ஏழு நாட்களும், வைகாசி மாதத்தின் முதல் ஏழு நாட்களும். அந்தப் பதினாலு நாட்களுக்குப் பின் குறையத் தொடங்கும் வெயில் வைகாசி கடைசியில் கார்காலமாக மாறி ஆடியில் பரபரக்கும். இந்தப் பதினான்கு நாட்கள் என்பது இப்போதெல்லாம் நீண்டுகொண்டே இருக்கிறது.
சில ஆண்டுகளாகக் கால மாற்றத்தை அவ்வளவு சுலபமாக ஊகித்துவிட முடியவில்லை. திடுதிப்பென்று ஒரே நாளில் வெப்ப நிலை அடியோடு மாறிப் போகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் தான் கால நிலை மாற்றம் இப்படித் தாறுமாறாக இருக்கிறது என்று நினைத்துக் கொண்டிருந்தேன். பாண்டிச்சேரிக்குப் போன போது அங்கேயும் அப்படித் தான் இருக்கிறது. தமிழகத்தின் பல பகுதிகளிலும் கால நிலை மாற்றம் மனிதர்களின் முன் அறிவுக்கு மாறாகவே இருக்கின்றது. எல்லாவற்றையும் முந்திரிக் கொட்டை மாதிரி அவசரமாகச் செய்து பார்க்கும் மனித ஆசை இயற்கைக்கும் வந்து விட்டது என்றே தோன்றுகிறது. ஆனால் விஞ்ஞானிகள் வேறு விதமாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். காரணம் தெரியவில்லை.?
நகரத்தின் விரிவாக்கப் பகுதி என்ற பெயரில் மனைகள் விற்ற போது ஒரு மனையை வாங்கிச் சொந்த வீடு கட்டிக் குடி போனேன். ஒவ்வொரு மாதமும் கட்ட வேண்டிய வங்கித் தவணையை ஓரளவு மறக்கச் செய்வது காலை நடையின் போது கிடைத்த அந்த இதமான காற்றும் விதம் விதமான ஒலிகளும் தான். ஏப்ரல் மாத இறுதியில் நள்ளிரவில் தகிக்கும் வெக்கை கூட அந்தக் காலை நேரம் கிளம்பும் மெல்லிய காற்றில் மறந்து போகும். நான் வீடு கட்டிக் கொண்டு போன போது பக்கத்தில் தொடர்ச்சியாக வீடுகள் இருந்ததில்லை. இரவில் பார்த்தால் கொஞ்சம் பயமாகத்தான் இருக்கும். தூரத்தில் கண்மாய்க் கரையில் இருந்த பெரிய ஆலமரம் அதிகம் சப்தம் எழுப்பாது ; ஆனால் அதன் முன்பாக இருந்த தென்னந்தோப்பு அசையும் சப்தம் விநோத ஒலிகளோடு இருக்கும்.
மரம் உரசும் ஒலியா? பறவைகளின் பிரசவ வேதனையா? என்று தெரியாது. அந்த சப்தங்களின் தொடர்ச்சி சொல்லும் கதைகள் சுவாரசியமானவை. இந்த ஒலிகளையெல்லாம் இளமைப் பருவத்தில் எனது கிராமத்தில் கேட்டிருக்கிறேன். எங்கள் ஊருக்கு வடக்கே இருந்த மலைக் குன்றிலிருந்து ஓர் அருவி கிளம்பிப் பாறைகளில் மோதித் தரையிறங்கும். தாழம்பூக்கள் அடர்ந்த ஒரு காட்டுப் பகுதிதான் அதன் மூலம் என்பதால் அந்த அருவிக்குப் பெயர் தாழையூத்து எனச் சொன்னார்கள். தாழையூத்துக்கும் மேலே போனால் குறிஞ்சிக் காடு ஒன்று பரந்து விரியும்.
குறிஞ்சி மலர் அபூர்வமாகப் பூக்கும் பூவகை என்பதெல்லாம் அந்தச் சின்ன வயதில் எனக்குத் தெரியாது. எனது கிராமத்து மனிதர்களுக்குமே அது தெரிந்திருக்கவில்லை. இன்றே அடுப்பெரிக்க வேண்டும் என்றால் அந்தக் குறிஞ்சிக் காட்டுப் பகுதிக்குச் சென்று காய்ந்து நிற்கும் குறிஞ்சிமார்களை வெட்டி எடுத்துக் கொண்டு வருவார்கள். படபடவெனப் பற்றியெரியும் குறிஞ்சிச் செடியிலிருந்து வரும் நாற்றம் பலருக்கும் பிடிக்காது என்பதால் அதை அடிக்கடி எரிக்கும் விறகாகக் கூட பயன்படுத்தியதில்லை.
எழுபதுகளில் வந்த பசுமைப் புரட்சியும் வெண்மைப் புரட்சியும் நாட்டில் மின்சாரத்தின் பயன்பாட்டை அதிகப் படுத்தியதின் விளைவுகளைப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பே எங்கள் கிராமம் அனுபவித்து முடித்து விட்டது. அறுபதுகளின் இறுதியில் ஐந்து மோட்டார் தோட்டத்துடன் இருந்த அந்தச் சின்ன கிராமம் எழுபதுகளின் இறுதியில் நூறு மோட்டார் தோட்டங்கள் கொண்ட கிராமமாக மாறியது. கிராமத்தை விட்டு வெளியேறி தோட்டங்களை நோக்கிப் போனால் தாழையூத்தின் அருவி ஓசை கேட்பதற்குப் பதிலாக மின்சார மோட்டார்களின் உறுமும் ஓசைகளும் கொட்டும் நீரின் சப்தமும் மட்டுமே கேட்டன.
கிணறுகளில் இருந்த கமலைக் கால்கள் கழற்றப்பட்டு விட்ட நிலையில் கொட்டங்களில் கட்டிய மாடுகளின் எண்ணிக்கை குறைந்து போய்விட்டன. மாடுகள் போட்ட சாணி உரத்துக்குப் பதிலாக யூரியா, பாஸ்பேட், சல்பேட், எனச் செயற்கை உரங்கள் வாங்கவும், பூச்சி மருந்துகள் வாங்கவும் உரக் கடைகளில் வரிசையில் நின்றார்கள் எங்கள் ஊர் விவசாயிகள். இவற்றுக்கெல்லாம் அரசுகள் வழங்கிய பயிர்க்கடன்களும் உரக்கடன்களும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து கொண்டே இருந்தன. மின்சார மோட்டார்கள் வந்த இரண்டு மூன்று ஆண்டுகளில் எங்கள் ஊர் மாறித்தான் போனது.
அதுவரை பயிரிட்டுக் கொண்டிருந்த உணவுப் பயிர்களான சோளம், கம்பு, கேழ்வரகு, சாமை போன்றன அரிதாகிப் போய்விட்டன. எல்லாரும் பருத்தியும் மிளகாயும் பயிரிட்டுப் பணம் பார்ப்பது என்று மாறினார்கள். சிலர் கரும்பு போடத் தொடங்கினர். உணவுப் பயிர்களைப் பயிரிடாத நிலையில் கையில் காசும் புரண்டது. ஆனால் கிணறுகளில் நீரின் அளவு குறைந்து கொண்டே போனது. கமலையிலிருந்து குதித்து நீச்சல் அடித்து மகிழ்ந்த சிறுவர்கள் இப்போது குதித்தால் தரை தட்டி விடும் நிலை தோன்றியது.
மின்சார மோட்டாரின் தேவையைப் பூர்த்தி செய்ய கிணறுகள் ஆழப் படுத்தத் தொடங்கிய போது விவசாயிகளின் துயரம் தொடங்கியது. கிணற்றடி நீர் இறங்க இறங்க தாழையூத்து அருவியும் வறண்டு போய்விட்டது. மலையின் வளம் குறைந்ததின் சாட்சியாக இருந்த குறிஞ்சிக் காடு கூட இப்போது இல்லை. தாழையூத்து அருவி தொடங்கிய இடத்தில் இருந்த தாழம்பூப் புதர்களும் இப்போது இல்லை. ஒன்றிரண்டு செடிகள் மட்டுமே இப்போது நிற்கின்றன.
வீட்டிலிருந்து சூரியன் வரும் முன்பே ‘வாக்கிங்’ செல்லும் பழக்கத்தை ஆரம்பித்தேன்.காலையில் எழுந்து தேநீரைக் குடித்துவிட்டு நடக்கத் தொடங்கினால் அந்த ஆலமரம் வரை நடந்து விட்டு வருவதற்குள் கேட்கும் பறவைகளின் ஒலிகள் மெல்ல மெல்லக் குறைந்து விடும். சூரியன் வரும் போது பறவைகள் இரைதேடத் தொடங்கி விடும். ஆனால் சில் வண்டுகளின் ரீங்காரம் இடைவிடாது கேட்டுக் கொண்டே இருக்கும்.
வைகறையிருளில் நடக்கத்தொடங்கி வெளிச்சம் வரும்போது கண்மாய்க் கரைக்குப் போய்விடுவேன். அப்போது தூரத்தில் மயில்கள் நின்று வேடிக்கை பார்த்தபடி கால்களை அசைத்து வைத்துக் கொண்டு மெல்ல நடக்கத் தொடங்கும். என்னோடு பழக வேண்டும் என்று சில மயில்கள் விரும்புவது போல என்னருகில் வந்து விட்டுச் சிறு தாவலுடன் பறந்து போய் விடும். எனது வீட்டிற்கு வரும் பெரியவர்களுக்குத் தர எதுவும் இருப்பதில்லை. ஆனால் நண்பர்களின் குழந்தைகள் அந்த மயிலிறகுகளை வாங்கிக் கொண்டு போகும்போது அடையும் சந்தோசம் சொல்லிப் புரிய வைக்க முடியாத ஒன்று. மயிலிறகு தரும் சந்தோசம் எங்கிருந்து கிளம்புகிறது. அந்த மென்மையிலிருந்தா? நீண்டு வளைந்து நிற்கும் சாயலில் இருந்தா? பிரித்துக் காட்ட முடியாத வண்ணங்களிலிருந்தா? விளக்கிச் சொல்ல முடியாததுதான் அழகும் அதுதரும் சந்தோசமும் போலும்.
மயில்கள் உதிர்த்து விட்டுச் செல்லும் இறக்கைகளை மட்டும் நான் எடுத்து வந்து பத்திரமாகப் பாதுகாத்தேன். வீட்டிற்கு வரும் குழந்தைகளுக்கு மட்டும் அல்ல வளர்ந்த பெண்களுக்கும் கூட மயிலிறகு பிடித்தமான ஒன்றுதான். ஆனால் ஆண்கள் இதுபோன்ற மென்மைகளை விரும்பாதவர்களாக ஆகி விட்டார்களா? அல்லது அப்படியான பாவனைக்குள் இருக்கிறார்களா? என்று தெரியவில்லை. ஒரு நண்பரின் மனைவி இரண்டு மூன்று தடவை எங்கள் வீட்டிலிருந்து மயில் தோகைளை வாங்கிச் சென்று அவர்கள் வீட்டின் கண்ணாடிக்குள் அழகுப் பொம்மைகளுடன் வைத்திருந்தார்.இந்த முறை வந்த போது திரும்பவும் மயில் தோகைகள் கேட்ட போது தான் காலை நடையின் போது மயில்கள் காணப்படாத சோகம் பெரியதாக மாறிவிட்டது.
விரிவாக்கப் பகுதியாக இருந்த கட்டபொம்மன் நகர், தனிநகராக ஆகிவிட்டது. தொடர்ச்சியாக வீடுகள் வரிசையாக வந்து விட்டன. மனிதர்களும் ஏராளமாக வந்து விட்டனர். முருகன் கோயில் பூசாரி ஐந்து மணிக்கே மணியை ஒலிக்கத் தொடங்கி விடுகிறார்.மாதா கோயில் மணி ஓசையும் மசூதியின் சங்கொலியும் அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் மனிதர்களை எழுப்பிக் கடவுளிடம் அழைக்கின்றன. இந்த ஓசைகளுக்கிடையில் பறவைகளின் ஓசை எங்கே கேட்கப் போகிறது என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.
ஆனால் இப்போதெல்லாம் நள்ளிரவிலேயே பறவைகள் கூட்டம் கூட்டமாக எங்கோ போய்க் கொண்டே இருக்கின்றன. காலையில் என்னிடம் சிநேகம் காட்டிய அந்த மயில்கள் எங்கே போயிருக்கும்?
=============================================
சுகுமாரனின் கவிதை
---------------------------------------
ஒரு பிரம்மாண்ட சிலந்தி போல
கான்கிரீட் காடுகளுக்கு மேல் அசைகிறது சூரியன்
வெயில்
எலும்புகளுக்குள்ளும் நுழைந்து கருணையைக் கொல்கிறது
என் நம்பிக்கைகள் வற்றிக் கொண்டிருக்கின்றன
பறவைகள் உலர்ந்த குரலில் புலம்புகின்றன
காலிக் குடங்கள் அலறுகின்றன
கோபத்துடன் நிமிரும் கைகளில் விலங்குகள்
பளபளக்கின்றன
வயிற்றிலடிக்கப்பட்டவர்களின் ஊர்வலங்கள் நகர்கின்றன
தார்ச்சாலை உருகி
பாரவண்டிக்காரனின் கால்கள் புதைகின்றன
காற்றைக் கடந்தன யாருடையதோ சொற்கள்:
'கொடுமையானது
இந்த கோடைக் காலம்'
இல்லை
எப்போதும் நாம் வாழ்வது கோடை காலத்தில்..."
கோடைகாலத்துப் பறவைகளின் பயணங்கள் பற்றிப் பலரும் எழுதியிருக்கின்றனர். கவி. சுயம்புலிங்கம் எழுதியுள்ள இந்தக் கவிதையை மட்டும் இங்கே வாசிக்கலாம்:
நூறு நூறு புதிய பறவைகள்
இலைக்கூட்டங்களில் விசிலடிக்கும்
எங்கள் கரிசல் சீமையில்
ஐப்பசி கார்த்திகைகளில்
வானம் கூடிக்கருக்கும்
வாடையும் தென்றலும்
மேகத்தை வருடிவிடும்
மின்னல்கள்
இருட்டுக்கு உதை கொடுக்கும்
இடி இறங்கிவந்து
பூமியைக் கிச்சங்காட்டும்
நூறுநூறு புதிய பறவைகள்
இலைக்கூட்டங்களில் விசிலடிக்கும்.
குளிச்ச மண்ணின் சுகமான வாசம்
துடுக்காய் வளரும் பச்சை முகங்கள்
கரிசல் முகம் களைகட்டும்
விவசாயிகள் நெஞ்சம் குளிரும்
காலம் இப்போ பெரண்டு போச்சு
வானம் சாம்பல் பூத்துத் தகிக்கிறது
கரிசல் பூமி பாளம் பாளமாக வெடிக்கிறது
கரிசல் மனிதன் கூசிப்போகிறான்
சுடுகிற கரிசலில் நின்று
பெருமூச்சு விடுகிறான்
இந்தப் பாழாய்ப்போன வானம்
நான் கட்டோடு அதை
வெறுக்கிறேன்.
எங்கள் சீமைக்கு
ஆரோக்கியமான வானம் வேணும்
வாழ்வு வேணும்
நாங்கள் அதைச் செய்தாகணும்
===================== மு.சுயம்புலிங்கம்
தோழமையின் அன்பு
திருநெல்வேலியிலிருந்து கிராமத்திற்குப் போய், உறவினர்களோடு கார்ப்பயணம் மேற்கொண்டு திருப்பூர் போனபோது அடுத்தடுத்து வந்த அபூர்வா.சங்கிலித் தொடர் உணவுவிடுதி ஒன்றில் காலை உணவுக்காகத் நுழைந்தேன். தாராபுரம் தாண்டியிருக்கும் அந்த விடுதியில் நுழைந்தவுடன் வந்து நீங்கள் ’பேரா.அ.ராமசாமி தானே’ என்று விசாரித்தார். அவரும் சாப்பிட வந்தவர் என்று நினைத்துப் பேசியபின் கைகழுவிவிட்டு அமர்ந்தபோது அவரே, “என்ன சாப்பிடுகிறீர்கள்” என்று கேட்டார். விசாரித்தபோது இந்த விடுதியின் தள மேலாளர்களில் ஒருவர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார்.
நாங்கள் சொன்னவைகளைக் குறித்துக் கொண்டு சேவைப்பணியாளரிடம் சொன்னார். உணவுப் பண்டங்களை அவர்கள் சிரித்த முகத்துடன் வழங்கினார்கள்.அவர் எங்கள் மேசையருகே இருந்து வீட்டிற்கு வந்த விருந்தாளிகளைக் கவனித்துக் கொள்வதுபோலக் கவனித்துக் கொண்டார். சாப்பிட்டு முடித்தபின் ’சட்னி, சாம்பார், கவனிப்பு என எல்லாமே நன்றாக இருந்தது’ என்றேன். “ உணவு விடுதியின் சொந்தக்காரர் யாரென்று தெரியாது; தெரிந்தால் அதைச் சொல்லலாம். இருந்தாலும் உங்கள் கருத்தைச் சொல்கிறேன்” என்று சொன்னார். பணியாளரிடம் கட்டவேண்டிய தொகைக்கான’ பில்’ லை எதிர்பார்த்து நின்றபோது. ‘பணம் செலுத்தப்பட்டுவிட்டது’ என்றார். செலுத்தியவர் பெயர் சிலம்புச் செல்வன்.
முகநூலில் இருக்கும் அவரின் படம் பார்த்து நினைவில் வைத்திருக்கவில்லை; பெயருக்காகவே நினைவில் இருந்தது. அரசியல் பார்வை சார்ந்த முகநூல் பதிவுகள் பலவற்றிற்கு விருப்பக்குறி இடுபவராகவும், அவ்வப்போது பின் குறிப்புகள் எழுதுபவராகவும் இருந்தார். அதற்கு மேல் எந்தப் பழக்கம் இல்லை. வாசிப்புக்காகவும் விவாதிப்பதற்காகவும் கருத்துகளைத் தரும் ஒரு நபருக்கு/ தோழமைக்கு உணவு வாங்கித்தர நினைத்திருந்தால் நான் மறுத்திருக்க மாட்டேன். அவர் தந்ததோ 6 பேருக்கான காலை உணவுத் தொகை. நான் மறுத்தேன். பில் தொகை தரப்பட்டுவிட்டது என்று சொல்லிவிட்டார்.
தோழரே இது அதிகம். அதிகமான அன்புக்காக நன்றி சிலம்புச் செல்வன்.
சென்னை ஆட்டோக்காரர்கள்
கடந்த 5 ஆண்டுகளாக மாதம் ஒருமுறையாவது சென்னை சென்று வருபவனாக மாறிவிட்டேன். பாண்டிச்சேரிக்குப் போனால்கூட அதன் தொடர்ச்சியாகச் சென்னைக்கு ஒரு எட்டு போய்வந்து விடுகிறேன். இந்த 5 ஆண்டுகளாக “ அழைத்தவுடன் வரும் கார்களுக்கான செயலிகள்” பயன்பாடும் இணைந்து கொண்டன. அதனால் சென்னைப் பயணங்களின் போது ஆட்டோக்காரர்களை அழைப்பதைத் தவிர்த்து விட்டேன். குறுகிய தூரங்களுக்குப் பேருந்துகளையும் நீண்ட தூரங்களுக்குக் கார்களையும் பயன்படுத்திக்கொண்டிருந்தேன்.
செயலிகளின் வழியாக வாகனங்களை அழைக்கும் முறைக்கு முன்பு ஒவ்வொரு தடவையும் ஆட்டோக்காரர்களோடு சண்டை போட்டுத்தான் பயணிக்க வேண்டியிருந்தது. பயணத்தைத் தொடங்கும்போது எவ்வளவு கட்டணம் என்று முடிவு செய்யும்போது ஆரம்பிக்கும் வருத்தமும் கோபமும் அந்தப் பயணம் முழுவதும் தங்கி இருக்கும். ஒரு எதிரியின் வாகனத்தில் செல்லும் உணர்வுடன் அமர்ந்துபோகவேண்டிய வேதனை. ஏறி அமர்ந்தபின் அவரோடு பேசவேண்டும் என்ற எண்ணமே உண்டாகாது. அவர்களும் பேசமாட்டார்கள். இறக்கிவிடும்போது எப்படிச் சண்டை போட்டுக் கூடுதல் பணத்தை வாங்கலாம் என்ற எண்ணத்தில் தான் வண்டியை ஓட்டிப்போவார்கள்.
ஓலா, ஊபர் போன்ற செயலிகள் வழியாக வரும் வண்டியோட்டிகள் சொல்லிய கதைகள் பல உண்டு.அவர்களோடு பணம் தொடர்பான / வாடகை தொடர்பான பேச்சு நடந்திருக்காத நிலையில் நம்மோடு அவர்களுக்கும், அவர்களோடு நமக்கும் விரோதம் உண்டாக நிலையில் பலவற்றையும் பேசுவார்கள்; பேசலாம். சென்னையின் அரசியல், பெண்களின் மாற்றங்கள், நடிகர்களின்/ ரசிகர்கள் அலப்பறைகள், மழைநாட்களின் சாலைகள், அவர்களின் சோகக்கதைகள், ஊர்க்கதைகள், சென்னையில் வந்து குடும்பத்தை நடத்த முடியாமல் தவிக்கும் தவிப்பு எனப் பலவற்றைப் பேசுவார்கள்.
இந்தமுறை - கடந்த இரண்டு நாட்களாகச் சென்னையில் இருந்தபோது கார்களுக்குப் பதிலாக ஆட்டோக்களை மட்டுமே பயன்படுத்துவது என முடிவு செய்தேன். காரணம் செல்லவேண்டிய இடங்கள் எல்லாமே 5 கிமீ. அளவுக்குள் தான். எழும்பூரிலிருந்த ஒரு விடுதியில் தங்கிக்கொண்டு நுங்கம்பாக்கம், தேனாம்பேட்டை, கடற்கரை, தி.நகர் என உள்ளுக்குள்ளேயே சுற்றிக்கொண்டிருப்பதான வேலை. என்றாலும் செயலிகளில் கார்களுக்கான கட்டணத்தைப் பார்த்துவிட்டே ஆட்டோக்காரர்களை அழைத்தேன். 6 பயணங்களில் 4 பேர் காருக்கான பணத்தைவிடக் குறைவாகவே கேட்டார்கள். 2 பேர்தான் கூடுதலாகக் கேட்டார்கள். கூடுதலாகக் கேட்டதுகூட மிக அதிகம் அல்ல. 20 ரூபாய் அதிகம் என்பதாகவே இருந்தது. கேட்ட தொகை நியாயமாக இருந்ததால் பேரம் பேசும் வாய்ப்பும் எழவில்லை. ஏறி அமர்ந்ததும் பேசத் தொடங்கினால் பேசவும் செய்தார்கள்.
காருக்கான தொகையைவிடக் குறைவாகக் கேட்ட ஆட்டோக்காரர்களுக்கு நானாகவே 10 ரூபாய் அதிகம் கொடுத்தேன். மகிழ்ச்சியோடு நன்றி சொன்னார்கள். ”நியாயமாகக் கேட்டீர்கள். அதற்காகவே 10 ரூபாய் அதிகம் தருகிறேன்” என்று சொன்னபோது அவர்களது மனம் அதனைப் புரிந்துகொண்ட பாவனையை முகத்தில் காட்டியது. நான் போகவேண்டிய இடத்தில் இறக்கிவிட்ட ஒருவரிடம் ”வாங்க ஒரு காபி குடிச்சிட்டு போங்க” என்று சொல்லி வாங்கித்தந்தபோது அவரால் மகிழ்ச்சியை அடக்கமுடியவில்லை. காபியைக் குடித்துக்கொண்ட இன்னும் பல ஆட்டோக்காரர்கள் மாற மறுக்கிறார்கள் என்று வருத்தப்பட்டார்.
மாற்றம் தானாக வருவதில்லை. நெருக்கடிதான் மாற்றத்தைக் கொண்டுவரும் என்றேன். ஆமாம்;ஆட்டோ ஓட்டுநர்கள் மாறிக்கொண்டிருக்கிறார்கள். கார்களின் போட்டி உருவாக்கிய நெருக்கடி அதனைச் செய்திருக்கிறது.

போன வருடத்தை விட இந்த வருட வெயில் கூடுதல் - ஒவ்வொரு வருடக் கத்திரி வெயிலின் போதும் இந்த வாக்கியத்தை யாராவது சொல்லக் கேட்டிருக்கிறேன்.
கடந்த இரண்டு கோடையிலும் விருப்பமான பயணம் என ஒன்றையும் மேற்கொள்ளவில்லை. பணி ஓய்வுக்குப் பின் போட்டிருந்த பயணத்திட்டங்கள் எல்லாம் கரோனாவின் நெருக்கடியால் இல்லாமல் ஆகிவிட்டன. கோடை காலம் தொடங்கும் இந்த நேரத்தில் நினைத்துப் பார்த்தால் எனது நீண்ட பயணங்கள் எல்லாம் கோடை விடுமுறையில் நிகழ்ந்தனவாகவே இருக்கின்றன
ஒருவிதத்தில் எனக்கு ஆசிரியர் பணி விருப்பமான பணியாகவே இருந்தது. தொடக்கம் முதலே அதன் மீதான காதல் குறைந்ததே இல்லை. காரணங்கள் பல உண்டு என்றாலும் முதன்மையான காரணம் மொத்தமாகக் கிடைக்கும் கோடை விடுமுறை தான். அதுவும் பல்கலைக்கழக ஆசிரியராக இருப்பவர்கள் இன்னும் கொடுத்து வைத்திருப்பவர்கள். மே முதல் தேதி முதல் ஜுன் 30 வரை அறிவிக்கப்படாத விடுமுறை நாட்கள். மொத்தமாக 60 நாட்கள் விடுமுறை கிடைக்கின்ற பணி வேறு எதுவும் இல்லை தானே?
எனது நீண்ட பயணங்கள் எல்லாம் கோடை விடுமுறையில் இருக்கும். பாண்டிச்சேரியில் இருக்கும் போதும் சரி திருநெல்வேலிக்கு வந்து பிறகும் சரி எல்லாக்கோடை விடுமுறையிலும் சில ஆயிரம் கிலோமீட்டர் தூரமாவது பயணம் செய்திருப்பேன். அதிலும் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு வந்த பிறகு எடுத்துக் கொண்ட பல்வேறு பொறுப்புகள் காரணமாகப் பயணங்களின் தூரம் அதிகமாகியிருந்தது. பலரும் விரும்பி ஏற்காத வேலைகளை நான் எடுத்து கொண்டது பயணங்களின் மீதான விருப்பத்தின் காரணமாகத்தான். பல்கலைக் கழகத்தின் தொலைதூரக் கல்வித்திட்டத்தின் தேர்வுகள் நடைபெறும் தேர்வு மையங்கள் பல்வேறு மாநிலங்களில் இருக்கின்றன என்றாலும் எப்போதும் நான் கேரளத்தின் வழியாகப் போகும் வாய்ப்பையே தேர்வு செய்வேன்.
மலையாள எழுத்துக்களை நிறுத்தி வாசிக்கவும் மலையாளிகளோடு வேகம் குறைவாகப் பேசவும் முடியும் என்பது காரணமாக அல்லாமலேயே கேரளத்தின் வனப்பு என்னை ஈர்ப்பதாகவே இருக்கிறது. நீல நிறமாக இல்லாமல் பச்சை வண்ணத்தில் அலைஅலையாய் நகரும் நதிகளும் குளங்களும் திரும்பிய பக்கமெல்லாம் இருக்கும் கேரள பூமியை ஒரு முறை பார்த்தவர்கள் திரும்பவும் பார்க்கவே விரும்புவார்கள்.
கேரளத்தின் திருச்சூருக்குப் பத்துக்கும் மேற்பட்ட முறை பயணம் செய்துவிட்டேன் என்றாலும் முதல் பயணம் இப்போதும் பசுமையாக நினைவில் இருக்கிறது. 1988 ஆம் ஆண்டு திருச்சூரில் நடந்த மார்க்சீய லெனினிய சம்மேளம் ஒன்றில் நாடகம் போடுவதற்காக மதுரையிலிருந்து நண்பர்கள் எட்டுப் பேர் பயணம் போனோம். போடப்போகும் நாடகம் பல்லக்குத்தூக்கிகள். சுந்தரராமசாமியின் கதையை நான் தான் நாடகமாக ஆக்கி இருந்தேன். அந்தப் பயணம் ஒருவிதப் பயத்துடன் கூடிய பயணம். மார்க்சிய லெனிய இயக்கங்கள் ஆபத்தானவை என்ற கருத்தியல் வலுப்பட்டுக் கொண்டிருந்த காலகட்டத்தில் அந்த மாநாடு நடந்தது. அத்தோடு அம்மாநாட்டில் கேரளத்தின் வயநாட்டுப் பழங்குடிகளும் அவர்களை வழி நடத்தும் இயக்கமும், அதன் தலைவர்களும் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்பது கூடுதல் அச்ச உணர்வை உருவாக்கி இருந்தன. ஆனால் அந்த மாநாட்டின் பின்விளைவுகளாக அப்படி எதுவும் நடக்கவில்லை.
அந்தப் பயணம் எனக்கு கேரளத்தின் மீது காதலை ஏற்படுத்தி விட்டது. அதிகாலை நேரத்தில் ஒலிக்கும் கோயில் மணிகளும், ஆறுகளில் குளிக்கும் மனிதர்களும், மெல்ல நகர்ந்து செல்லும் படகுகளும் இப்போதும் ஈர்ப்பனவாக இருக்கின்றன என்றாலும் இப்போது கேரளத்திற்குச் செல்வதை விடவும் தமிழ் நாட்டின் கிராமங்களுக்குச் செல்ல வேண்டும் என்ற ஆசையே அதிகமாகிக் கொண்டிருக்கிறது. ஏனென்றால் தமிழ்நாட்டின் கிராமங்கள் சுத்தமாகத் தங்கள் அடையாளங்களை இழந்து வருகின்றன. இருபத்து ஐந்து வருடங்களுக்கு முன்பு கிராமத்திலிருந்து வந்து நகரவாசியான நான் திரும்பவும் சென்று ஏதாவது ஒரு கிராமத்தில் ஒரு வாரம் தங்கி இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். இருந்தனவும் இல்லாமல் போய்விட்டனவும் எவை என்று எழுதப் பட வேண்டும்.

கருத்துகள்