கதைசொல்லுதலின் சாகசம் - ஜெயமோகனின் பத்துலட்சம் காலடிகள் கதையை முன்வைத்து
ஜெயமோகன் சமகாலத்தமிழின் முதன்மையான கதைசொல்லி. அவரது பத்துலட்சம் காலடிகள் அண்மையில் வந்துள்ள சிறுகதைகளில் முக்கியமான கதை.
சில நாட்களாக இந்தப் பொருள் தரும் சொற்றொடர்கள் இணையப் பக்கங்களில் ஆங்காங்கே தொடர்ச்சியாக வாசிக்கக் கிடைக்கின்றன. கடந்த 30 ஆண்டுகளாகத் தொடர்ந்து சிறுகதைகளையும் நாவல்களையும் எழுதிவரும் ஜெயமோகனை முதன்மையான கதைசொல்லி என்று மதிப்பீட்டுச் சொல்லால் பாராட்டிச் சொல்வதற்கு ஒருவர் காரணங்களை அடுக்கிக் காட்டத் தேவையில்லை. ஆனால் இந்த (கொரோனா) அடங்கல் காலத்தில் நாளொன்றுக்கு ஒரு கதை என்று தவறாமல் தனது இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யும் வரிசையில் முப்பதாவது கதையாக வந்துள்ள ஒரு கதையை முக்கியமான கதை -ஆகச் சிறந்த கதை -உன்னதமான கதை – என்று சொல்வதற்குப் போதுமான காரணங்களை முன்வைக்க வேண்டும். காரணங்கள் சொல்லாமல் முன்வைக்கப்படும் சொற்றொடர் விமரிசனச் சொல்லாக இருக்காது. போகிற போக்கில் வாசிக்காமலேயே கூடச் சொல்லப்படும் மதிப்பிட்டுக் குறிப்பாகவே கருதப்படும்.
ஒரு கதையை முக்கியமான கதை அல்லது சாதாரணமான கதை என்று குறிப்பிட்டுச் சொல்லும் விமரிசனச் சொல்லாடல்கள் எதனைக் கொண்டு இந்த மதிப்பீட்டை முன்வைக்கின்றன? அதற்கான அளவுகோல்கள் ஏதேனும் பயன்படுத்தப்பட்டு இந்த மதிப்பீட்டுச் சொற்றொடர் முன்வைக்கப்பட்டுள்ளதா? என்று தேடினால் கண்ணுக்கும் காதுக்கும் எட்டியதூரம் தென்படவில்லை. நான் அப்படி நினைக்கிறேன்; எனக்கு அப்படித் தோன்றுகிறது; அதனால் சொல்கிறேன் என்பதுதான் பதிலாக இருக்கிறது. இப்படிச் சொல்லும் பதிலின் மூலம் எது? யார் பிதாமகன்? என்றெல்லாம் விரித்துக் கொண்டிருக்கவேண்டியதில்லை.
ஒருவர் வாசிக்கும் எந்தப் பனுவலையும் அதன் அடிப்படைப் பனுவலாக்கக் கூறுகள் வழியாகவே புரிந்துகொள்ள முடியும். கவிதை, நாடகம், கதை என்ற மூவகை இலக்கிய வடிவத்திற்குமுரிய பொதுப் பனுவலாக்கக் கூறுகளாக இருப்பவை காலம், இடம், பாத்திரங்கள் என்ற மூன்றும். இம்மூன்றையும் தாண்டி ஒவ்வொன்றுக்குமுரிய சிறப்புக்கூறுகளே அதனைக் கதையாகவும், கவிதையாகவும் நாடகமாகவும் ஆக்குகின்றன. பத்துலட்சம் காலடிகள் சிறுகதை என்பதால், நாடகவடிவத்தையும் கவிதை வடிவத்தையும் தள்ளி வைத்து விடலாம். கதைக்குரிய சிறப்புக்கூறுகளை முன்வைத்து அந்தக் கதையை விவாதிக்கலாம். முதலில் இந்தக் கேள்விகளைக் கேட்டுக் கொள்ளலாம்.
· பத்துலட்சம் காலடிகள் யாரைப்பற்றிய கதை? அல்லது எதனைப் பற்றிய கதை?
· இவற்றின் வழியாகக் கதை எழுப்ப நினைத்த விவாதங்களும் சமகாலப் பொருத்தங்களும் என்ன?
அந்தக் கதையை முழுவதும் வாசித்த ஒருவருக்கு இந்த வினாக்களுக்கு விடை சொல்வதில் ஒன்றும் சிக்கல் இருக்காது.
இந்திய/ கேரளக்காவல் துறையில் பணியிலிருக்கும் திறமை வாய்ந்த துப்புத்துலக்கும் ஒருவனின் திறமையைப் பற்றிய கதை இது. கொலை, கொள்ளை போன்ற குற்றச் செயல்களில் ஈடும் தனிநபர்கள் அல்லது கூட்டங்கள் விட்டுச் செல்லும் தடயங்களைத் தொடர்ந்து சென்று அதன் ஆரம்பத்தைக் கண்டுபிடித்து அறிக்கை தந்துவிட்டு ஒதுங்கிவிடும் ஒரு துப்பறிவாளனின் கதைதான் பத்துலட்சம் காலடிகள். அப்படியானால் அந்தக் கதை ஒரு குற்றம்/துப்பறியும் வகைப்பட்ட கதை. இதுவரையிலான நவீன இலக்கியமனம் ஒரு கொலைக்குற்றத்தைத் துப்பறியும் கதைகளை - ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர் போன்றவர்கள் எழுதிய கதைகளைக் கொண்டாடியதில்லையே? சங்கர்லால் என்ற பாத்திரத்தை உருவாக்கிய தமிழ்வாணனையும், கணேஷ்- வசந்த் என்ற இரட்டையர்களை உருவாக்கிய சுஜாதாவின் துப்பறியும் கதைகளையும் புறங்கையால் தானே ஒதுங்கியிருக்கிறது. பிறகு ஏன் இந்தக் கதை கொண்டாடப்படுகிறது?. அதை ஜெயமோகன் எழுதினார் என்பதால் இருக்குமோ…
ஜெயமோகன் எழுதியிருக்கிறார் என்பதற்காகக் கொண்டாடப்படுகிறது என்பது ஓரளவு உண்மைதான். ஆனால் எப்படி எழுதியிருக்கிறார் என்பதற்காகவும் கொண்டாடப்படுகிறது என்றும் சொல்லலாம். சரி எப்படி எழுதியிருக்கிறார்? என்று பார்க்கலாம். இந்தக் கேள்விக்கான விடைதேட அடுத்த கேள்விகளுக்குப் போகலாம். அந்தக் கதையின் நிகழிடமும் காலமும் எவை? அதற்குள் உருவாக்கப்பட்டுள்ள பாத்திரங்கள் யார்? யார்? அப்பாத்திரங்களின் உணர்வெழுச்சிகளின் திரட்சியை என்ன பெயரிட்டு அழைக்கலாம். இவைதான் அந்தக் கேள்விகள்.
எப்பொழுதுமே ஒரு புனைகதையில் காலம், இடம், பாத்திரங்கள் என்ற மூன்றும் ஒற்றைத் தன்மையில் மட்டுமே இருக்காது. குறைந்தது இரண்டு நிலைப்பட்டனவாக அமையும். காலத்தில் கதை நிகழும் காலம்; நினைக்கப்படும் காலம் என இரண்டுண்டு. நிகழ்காலத்தில் தொடங்கும் கதைக்குள் கடந்த காலமே பெரும்பாலும் நினைக்கப்படும் காலமாக இடம்பெறும். சில வேளைகளில் எதிர்காலம் கூட நினைக்கப்படலாம். காலத்தை உருவாக்குவதுபோலவே நிகழிடங்களும் நேரடி வெளிகளாகவும் நினைக்கப்படும் வெளிகளாகவும் கதைக்குள் வந்துபோகும். காலமும் வெளியிலும் இரண்டு நிலைப்படுதல் காரணமாக உருவாக்கப்படும் பாத்திரங்களும் நேர்நிலைப் பாத்திரங்கள்; நினைக்கப்படும் பாத்திரங்கள் என வருவது தவிர்க்க முடியாதது தானே.
இவ்வாறு உருவாக்கப்படும் நினைக்கப்படும் காலம், வெளி, பாத்திரங்களே ஒரு கதையைப் பலதளங்கள் கொண்ட கதையாக மாற்றுகின்றன. சரியாகச் சொல்வதென்றால் பத்துலட்சம் காலடிகளில் கதை நிகழும் காலம் என ஒன்றை ஜெயமோகன் உருவாக்கவே இல்லை. அதற்குப் பதிலாக நினைக்கப்படும் காலத்தின் வழியாகவே எல்லாவற்றையும் பரப்பி வைக்கிறார். வெற்றிகரமாக ஒரு கொலைக் குற்றத்தின் முடிச்சுகளை அவிழ்த்து, யார் குற்றவாளி என்பதைக் கண்டு பிடித்ததைக் கொண்டாடும் காலமும் இடமும்தான் கதையின் காலமாகவும் இடமுமாக இருக்கிறது. இதன் காரணமாக அந்தக் கொண்டாட்டத்தை நிகழ்வில் பங்குபெறும் – ஏற்பாடு செய்த துப்புத் துலக்குபவனும் அவனது நண்பர்களும்தான் கதையின் நேரடிப் பாத்திரங்கள். இந்த விவரங்களை- குறிப்புகளைக் கதையின் தொடக்கப் பத்திகள் தருகின்றன:
ஔசேப்பச்சன் சொன்னான். “இன்றைக்கு நிறைந்த வெள்ளிக்கிழமை. புனித அந்தோணியார் புண்யவாளனுக்கு உரிய நாள் இது. திரிசந்தியாநேரம் வேறு. ஆகவே என்னைப்போன்ற சத்யவிசுவாசியான மார்த்தோ மாக்காரனுக்கு இந்நேரம் மிகமிகப் புனிதமானது”
“ஆமாம்” என்று குமாரன் மாஸ்டர் சொன்னார்
“இனிமையான கடற்காற்று வீசிக்கொண்டிருக்கும் இந்த அழகான வேளையில் இதைக் கொண்டாடும் பொருட்டு நாற்றமடிப்பதும் பாவத்திலாழ்த்துவதும் அனைத்துக்கும் மேலாக வெள்ளைக்காரப் பெண்களை நினைவில் கொண்டுவருவதுமான அன்னியநாட்டு மதுவகைகளை தவிர்த்து, நம்முடைய சொந்த கொச்சியில் அழகான இயற்கைசூழ்ந்த சாண்டித்துருத்தில் நம்முடைய சொந்த அவறாச்சன் சொந்தமாக வாற்றி எடுத்த தூய்மையான நாட்டுச்சாராயத்தை அருந்தி ஆன்மிக மேன்மையை அடைவதுதான் சிறந்தது என்று நினைக்கிறேன், அல்லேலூயா!”
அவன் கண்ணாடிக்கோப்பையை தூக்கியதும் மற்றவர்கள் “ஆமேன்!” என்றபடி தாங்களும் தூக்கினார்கள்.
கண்ணாடிக்கோப்பையைத் தூக்கி சியர்ஸ் சொல்வதற்குப் பதிலாக ஆமேன் சொன்னவர்களில் ஔசேப்பச்சன், குமாரன் மாஸ்டர் ஆகியோரோடு, பாண்டித்தமிழ் எழுத்தாளன் ஒருவன் இருக்கிறான்(திருவிதாங்கூர் மூட நாயரும் கூட). எலி ரவி என்றொரு மலையாள எழுத்தாளனும் இருக்கிறான். இவர்கள் அல்லாமல் மார்க்சிஸ்டுகளைப் பிடிக்காத ஸ்ரீதரன் என்னும் பாரதிய ஜனதாவின் ஆதரவாளனும் இருக்கிறான்.
இவர்கள் அனைவருமே நண்பர்கள். கேரள இலக்கியம், பண்பாடு, வரலாறு என ஒவ்வொன்றிலும் அவரவர்களுக்கான கருத்துநிலை கொண்ட – விவாதிப்பதில் ஆர்வம் கொண்ட - சமகால அரசியல் உணர்வுகொண்ட நண்பர்கள். சேர்ந்திருக்கும் அந்த இடம் கேரளக் கடற்கரையோர நகரத்தில் மதுவருந்தும் மேசை. ஆனால் கதை நிகழ்வு எதுவும் அங்கு நடக்கவில்லை; கதையும் இவர்களைப் பற்றிய கதை அல்ல. ஆரம்பித்த இடத்திலேயே எந்தவளர்ச்சியும் அடையாத தட்டையான பாத்திரங்கள் அவர்கள். சரியாகச் சொல்வதானால் இவர்கள் யாருமே பத்துலட்சம் காலடிகள் கதையின் பாத்திரங்களே அல்ல.
மொத்தக் கதையும் நினைக்கப்படும் – சொல்லப்படும் கதையாக இருக்கிறது. நால்வரும் கதை கேட்பவர்களாக இருக்கிறார்கள். ஔசேப்பச்சன் தான் துப்புத்துலக்கிய கதையைச் சொல்பவனாக இருக்கிறான். சொல்லப்படும் கதையில் வரும் பாத்திரங்கள் ஒவ்வொன்றுக்கும் வாழ்க்கை இருக்கிறது; சமூக அடையாளங்கள் இருக்கின்றன. அவர்கள் வாழ்ந்த வெளிகளும் காலங்களும் இருக்கின்றன. அவர்களின் வாழ்க்கைக்கான அறங்களும் மதிப்பீடுகளும் கட்டுப்பாடுகளும் இருந்திருக்கின்றன. அவற்றையெல்லாம் சேர்த்தே சொல்கிறான் ஔசேப்பச்சன்.
************
மங்களூரில் நேத்ராவதி ஆற்றின் அழிமுகத்திலுள்ள மணல்மேட்டில் அழுகி, வயிறு உப்பி, கண்கள் பிதுங்கிய, வயிற்றில் ஊறும் வாயுக்களால் பலூன் ஆக மாறி மிதந்து அலைகளில் கரையொதுங்கிய உடலுக்கான முதல் தகவல் அறிக்கையில் இடம் பெற்றிருந்த ஒரு துப்பு ஒரு பட்டுநூல். அதைப் பற்றிய விவரிப்பு இது:
போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் ஒரு சின்ன விஷயத்தை பதிவு செய்யலாமா வேண்டாமா என்று டாக்டருக்கே சந்தேகம். எஸ்.ஐயிடம் அதைக் கேட்டார்.எஸ்.ஐக்கும் சந்தேகம், அவர் என் வரை கொண்டுவந்தார்
சந்தேகம் முதலில் வந்தது போஸ்ட்மார்ட்டம் உதவியாளராகிய முகமது அப்துல் காதர் என்ற மம்முக்காவுக்கு. அவர் மிகவும் மூத்தவர். போஸ்ட்மார்ட்டத்தில் உதவத்தொடங்கி நாற்பதாண்டுக்கால அனுபவம் கொண்டவர். அவர் ஒரு சின்ன விஷயத்தை கண்டுபிடித்தார். பிணத்தின் வலக்கையின் சுட்டுவிரலில் ஒரு மெல்லிய நூல் இருந்தது. ஏதோ ஆடையிலிருந்து வந்தது. சரிகைபோல மின்னும் பட்டு நூல் அது.
அந்த நூல் ஒரு துருக்கித் தொப்பியின் இழை ; அது ஒன்றுதான் அந்தச் சடலத்தோடு கிடைத்த துப்பு எனப் பிடித்துக்கொண்டு பின்னோக்கி நகரும் துப்பறிந்த கதையைச் சுவாரசியமாக அடுத்தடுத்து என நகர்த்துகிறான் ஔசேப்பச்சன்.
தேடலின் பரப்பு, நுணுக்கம் எவ்வளவு முக்கியமோ அதேபோல கால அளவும் முக்கியம். நுணுக்கம், பரப்பு, காலம் ஆகிய மூன்றும் ஒன்றோடொன்று பெருக்கிக்கொள்ளும்போது மிகவிரிவான வெளி உருவாகிறது. அதில் நாம் கண்டுபிடிப்பதற்கான வாய்ப்புகள் கூடிக்கூடி வருகின்றன. எட்டு ஆண்டுகளுக்குப் பிறகுகூட கண்டுபிடித்திருக்கிறோம்.
என்று தனது திறமையைப் பாராட்டிக்கொள்ளும் ஔசேப்பன் அந்தக் கொலையின் திருப்பங்களை ஒவ்வொன்றாக – முடிச்சுகளை ஒவ்வொன்றாக அவிழ்க்கின்றான். சடலமாக ஒதுங்கியவன், ‘வடகரையைச் சேர்ந்தவன். அங்கே ஒரு சிறு பகவதி கோயிலில் பூசை செய்திருந்த எம்பிராந்திரிப் பையன். பெயர் கிருஷ்ணன். வயது 29.
என்பதில் தொடங்கி, அவனின் வறுமையான குடும்பம், கடன், குடும்பத்தைக் காப்பாற்ற வேலை தேடி பம்பாய் போக நினைத்தவன் மங்களூரில் கொல்லப்பட்டான்:
கிருஷ்ணன் எம்பிராந்திரி தங்கிய அந்த ஓட்டலில் அதே நாட்களில் அருகில் இருந்த அறையில் தங்கியவர்களின் தகவல்களை சேகரித்தோம். அவர்களில் ஒருவன் மங்களூரின் கிரிமினல்களில் ஒருவன். அவன்தான் கிருஷ்ணன் எம்பிராந்திரியை கொன்று பணத்துடன் சென்றவன். அவனிடம் அந்த தொப்பி இருக்கவில்லை. அது அந்த கைகலப்பின்போது கடலில் விழுந்துவிட்டது. அவனை தொடர்ந்து சென்றோம். அவன் பணத்துடன் கோவா சென்றான். அங்கே குடித்து சீரழிந்தான். அவனை அடித்துப்போட்டு பணத்தை பிடுங்கிச்சென்றார்கள் வேறு திருடர்கள். நாங்கள் அவனை கைதுசெய்தபோது அவன் பிச்சைக்கார குடிகாரனாக இருந்தான்.
என்று வழக்கு முடிந்த கதை விரிவாகச் சொல்லப்படுகிறது. குற்றப் புலனாய்வுக் கதைகளில் இருக்கவேண்டிய அடுத்து, அடுத்து என முடிச்சுகளைப் போட்டு அவிழ்த்து, போட்டு அவிழ்த்து என விரியும் லாவகத்தை ஔசேப்பன் சொல்வதாக ஜெயமோகன் எழுதிக் காட்டுகிறார். இதே கதைக்குள் குல வழக்கத்தைக் கைவிட்ட பிராமண ஆணின் கதையையும், கடுமையான நெருக்கடியிலும் தனது கற்பைக் காத்துக்கொண்ட பிராமணப் பெண்ணின் கதையையும் சொல்கிறார்.
கிருஷ்ணன் எம்பிராந்திரி என்னும் பூஜ்யப் பிராமணன், தனது குல வழக்கத்திற்கு மாறாக மிரட்டிப் பணம்பறிக்க நினைத்து, அது கிடைத்த பின்பு அதனை அனுபவிக்காமல் கொலையுண்டு இறந்தபோன நீதியை உள்ளடக்கிய கதைக்குள், எவ்வளவு ஆசை காட்டியும் தனது அழகிய பிராமண உடலை மரைக்காயர் குடும்பத்து இளைஞனிடம் தரத் தயாரில்லாத பிராமணப் பெண்ணொருத்தியும் வருகிறாள். அவள் ஏற்கெனவே திருமணமானவள். அவளிடம்,
“வீடுவாங்கி தருகிறேன், எஸ்டேட் எழுதித்தருகிறேன் என்று அசீஸ் சொன்னான். வைரநகைகளை கொண்டுவந்து காட்டினான். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. பலநாட்கள் பள்ளிக்கூடம் போகாமல் வீட்டில் இருந்தேன். அசீஸ் என் வீட்டுக்கே வந்தான். கணவனை விட்டுவிட்டு வந்தால் ராணிமாதிரி இருக்கலாம் என்றன். மங்களூரிலோ மும்பையிலோ பெரிய வீடும் காரும் தருவதாகச்”
சொன்ன பிறகும் அசீஸை நிராகரித்த ராதாமணி என்னும் பள்ளி ஆசிரியையும் கிருஷ்ணனின் ஊரான வடகரைக்காரிதான். தன்மீது மோகம் கொண்டு பலவந்தம் செய்ய வந்தவனை விரட்டியடித்தவள், தனக்கு நேர்ந்த துயரத்தைக் கிருஷ்ணனோடு பகிர்ந்து கொண்டவள் அவள். அந்தக் கடைசி நாளில் அவன் விட்டுச் சென்ற தொப்பியைக் கிருஷ்ணன் கேட்டபோது கொடுத்ததுதான் மொத்தக் கதைக்கான முடிச்சு.
அந்த முடிச்சை அவிழ்க்கும்போது மாப்பிள்ளை முஸ்லீம்களின் நெறிபிறழாத நிலையிலிருந்து விலகிய நெறிமீறலின் ஆரம்பத்தைப் பற்றிய கதையும் வாழ்வியலும் வருகிறது.
அவர்கள் (மாப்பிள்ளைகள்) எந்நிலையிலும் சாமானிய மக்களின் வாழ்க்கையுடன் உரசிக்கொள்வதில்லை. அவர்களின் குழுவைச் சேர்ந்தவர்கள் சாமானியர்களுடன் எதன்பொருட்டும் மோதமாட்டார்கள். ஒரு சாமானியக் குடிமகன் சரக்கு போட்டுவிட்டு அவர்களை அடித்தால்கூட பேசாமல் ஒதுங்கி போய்விடுவார்கள். கைத்தவறுதலாக அவர்களில் ஒருவனை ஒரு சாமானியன் கொலைசெய்துவிட்டால்கூட எங்களிடம் வந்து சட்டநடவடிக்கை எடுக்கத்தான் சொல்வார்கள், அவர்களே ஒன்றும் செய்யமாட்டார்கள்
ஆகவே அந்தக் கடற்கரையில் அத்தனைபெரிய குற்றவுலகம் இருப்பது சாமானியர்களுக்கு தெரியவே தெரியாது. சொல்லப்போனால் அந்த குற்றவுலகம் சாமானியர்களுக்குப் பெரிய பாதுகாப்பு. சில்லறைத் திருடர்கள் ரவுடிகள் எல்லாம் பயந்தே இருப்பார்கள். அதோடு கடைசியாக இன்னொன்றையும் சொல்லவேண்டும். அவர்கள் பிராமணர்கள் மேல் அபாரமான பக்தியும் நம்பிக்கையும் கொண்டவர்கள்.
மாப்பிள்ளை முஸ்லீம்களின் குலவழக்கத்தை -ஒழுக்கத்தை மீறாத பழைய தலைமுறையின் பிரதிநிதியாக அப்துல்லா சாகிப் என்னும் பெருவணிக மரைக்காயரின் அறம் சார்ந்த வாழ்க்கையும் பணத்தைப் பற்றிய அவரது மதிப்பீடுகளும் முன் வைக்கப்படுகிறது.
“பணம் மாம்மன் என்ற தெய்வம், அது சாத்தானின் படைவீரர்களில் ஒன்று. வியர்வை சிந்தி அதை ஈட்டவேண்டும். அல்லது ரத்தமும் கண்ணீரும் சிந்தி ஈட்டவேண்டும். வியர்வையும் ரத்தமும் கண்ணீரும் நாம் அல்லாவுக்கு அளிக்கும் விலை, அதற்கு பதிலாக அவர் நமக்கு செல்வத்தை அளிக்கிறார்.அவ்வாறு ஈட்டப்பட்ட செல்வத்தை அல்லா காப்பாற்றுவார். அல்லாவுக்கான விலையை அளிக்காமல் வரும் செல்வம் சாத்தானுடையது. அவனிடமிருந்து நாம் தப்பமுடியாது.
இப்படிச் சொல்லும் அப்துல்லாவின் மகன் தான் ஹாசீம். தனது காமத்தைத் தணித்துக் கொள்ளப் பிராமணப்பெண்ணான ராதாமணிக்கு லட்சக்கணக்கில் தரத் தயாரானவன். இசுலாமியர் ஒருவரின் பெருங்குணங்களும், அவருக்கெதிர்நிலையில் பயணம் செய்த அடுத்த தலைமுறையின் வீழ்ச்சியுமான கதை அது. இந்த நான்கு பாத்திரங்களும் தான் ஜெயமோகன் முன்வைக்க நினைத்த கதைக்குள் இருக்கும் முப்பரிமாணம் கொண்ட பாத்திரங்கள்.
இந்தக் கதைப்பின்னலோடு இணைக்கப்படும் கதையாக ஒரு ரயில் விபத்தும் இருக்கிறது. 1988 ஜூலை 8 ஆம்தேதிதான் கேரளத்தையே உலுக்கிய பெருமண் ரயில் விபத்து. இந்த விபத்தில் ஆற்றுக்குள் விழுந்த ரயில் பெட்டியைத் தூக்க உதவிய மாப்பிள்ளைகள் நீண்ட நெடுங்காலமாகக் கப்பல்கட்டுபவர்கள்; அந்தக் கப்பல்கட்டும் முறையை விளக்கத் தெரியாதவர்கள்; அனுபவத்தின் வழியாக – கணக்கின் வழியாகத் தங்களின் பரம்பரைக்குக் கடத்திக்கொண்டிருப்பவர்கள். அந்த அனுபவ அறிவும் இப்போது இல்லாமல் ஆகிக் கொண்டிருக்கிறது; குல வழக்கங்களைத் தொலைக்கும் இந்திய சமூகம் வீழ்ச்சியை நோக்கிப் போகிறது. அதன் ஓரடையாளம் தான் கப்பல் கட்டும் அறிவைத் தொலைந்து போனது. பத்து லட்சம் காலடிகள் எனக் கதைத் தலைப்போடு பொருத்தம் காட்டுவதற்காக இந்தக் கதையும் கதைக்குள் கதையாகச் சொல்லப்படுகிறது.
வடகரைப் பிராமணர்களின் கதையையும் மாப்பிள்ளை முஸ்லீம்களின் தொழில்கள், அதிலிருந்த குற்றப்பின்னணி மட்டுமல்லாது பின்பற்றப்பட்ட கூட்டு ஒழுங்குகள், தனிமனித நியாயங்கள் ஆகியவற்றை ஒரு விபத்தின் கதையோடு இணைத்துச் சொல்லும்போது உருவாகும் அடுக்குகள் பல தளமானவை. அத்தளங்களின் அடுக்குகளைத் திறந்து திறந்து கதையைச் சொல்பவனின் திறமை மீது ஆச்சரியமும் பிரமிப்பும் கொள்ளவே செய்வார்கள். கதை சொல்லும் ஔசேப்பச்சன் கதையைக் கேட்டுக்கொண்டிருக்கும் நண்பர்களைத் திணறவைக்கின்றான்.
இந்த மூன்று கதையையும் இணைத்துச் சொல்வதற்கு ஔசேப்பச்சனைப் பயன்படுத்தாமல் படர்க்கை நிலையில் தன்னை நிறுத்திக் கொண்டு கதைசொல்லும் ஆசிரியக் கூற்றுமுறையைப் பயன்படுத்திக் கதை நிகழ்வுகளை அடுக்கியிருக்கலாம். அப்படியான கதைகள் பலவற்றை ஜெயமோகனேகூட எழுதியிருக்கிறார். ஆனால் அதைச் செய்யாமல் வேறு ஒருமுறையில் கதையைச் சொல்லியுள்ளார். இந்தக் கதை கூற்றுமுறை, நவீனத்துவக் கதையாடலை முன்வைத்த ஐரோப்பியச் சிறுகதைகளின் சொல்முறையிலிருந்து விலகிய இந்திய கதைகூறல் முறை எனச் சொல்லலாம்.
************
கிராமங்களில் கதை கேட்பதற்காகப் பலரையும் பக்கத்தில் அமர்த்திக் கொண்டு ஒவ்வொருவரையும் பங்கேற்கச் செய்யும் விதமாகச் சொல்லும் கதை கூறல் முறை. அப்படியான கதை சொல்லி ஒருவர் எனது கல்லூரிப்படிப்பு வரை எங்கள் ஊரில் இருந்தார். பத்து நிமிடத்தில் சொல்லி முடிக்கக் கூடிய கதையைப் பத்து மணி நேரம் சுவையாகச் சொல்லிக் கொண்டிருப்பார். அவர் கதை சொல்லும் முறையில் இன்று சொல்லும் நாடக உத்திகள் இருந்தன. கதை கேக்கும் நபர்களைப் பங்கேற்க வைப்பது; கேட்பவர்களின் மனதைக் கதாபாத்திரங்களின் மனதோடு இணைத்துச் சொல்லுவது; இடையில் விலகிச் சென்று ஊரில் நடக்கும் ரகசியமான செயல்களை அதில் புகுத்தி விடுவது என்றெல்லாம் விரிக்கக் கூடியவர். இரண்டு மைல் தூரம் இருக்கும் சிறுநகரத்து கிடுகுக் கொட்டகையில் இரண்டாம் ஆட்டம் சினிமாப் பார்த்துவிட்டு ஊருக்குள் நுழையும் போதும் சாவடிக்கல்லில் உட்கார்ந்து ஒரு கதையைச் சொல்லிக்கொண்டிருப்பார். அது நள்ளிரவுக்குப் பிந்திய நேரம் என்பது பலருக்கும் தெரியும். அப்படி வருபவர்களையும் இணைத்துக் கதையில் ஒரு பாத்திரமாக்கிவிட்டு அன்றைய கதையை முடித்துவிட்டுப் படுக்கப் போகச் சொல்வார். அப்படியானதொரு கதைகூறல் முறையை – பழமரபுக் கதைகூறல் முறையைப் பயன்படுத்திப் பத்து லட்சம் காலடிகள் கதையைச் சொல்லியுள்ளார் ஜெயமோகன்.
இந்தக் கதை கூற்றுமுறை பலவழிகளை -திறப்புகளைக் கொண்டது. கதைசொல்லி சொல்ல நினைப்பதையெல்லாம் பாத்திரங்களின் கூற்றான மாற்றிச் சொல்லிக் கொள்ளலாம்.தனது கூற்றாகச் சொல்லி உறுதிப்படுத்தவும் செய்யலாம். அப்படியொரு கூற்றுமுறையைத் தேர்வுசெய்து கொண்ட ஜெயமோகன்.
“ஈஸோமிஸிஹாய்க்கு ஸ்துதி!” என்று ஔசேப்பச்சன் பெருமூச்சுவிட்டான். “நல்ல சாராயம், அவறாச்சன் நல்ல விசுவாசியான மார்த்தோமா கிறிஸ்தவன். முன்பு புனித தோமாஸ்லீகா கொச்சி மரைன் டிரைவில் பைபிளுடனும் சிலுவையுடனும் வந்து இறங்கியபோது…”
ஸ்ரீதரன் “மார்க்ஸிஸ்டுகள் போய் அட்டிமறிக்கான கூலியை வாங்கியிருப்பார்களே!” என்றான்.
“சேச்சே அவர் கொண்டுவந்தது சிறிய சிலுவை. அவர் அதை தன் கழுத்தில் மாட்டியிருந்தார்”. என்றான் ஔசேப்பச்சன் “அதை இந்த அவறாச்சனின் மூதாதையான ஒருவர் பார்த்து அது என்ன என்று கேட்டிருக்கிறார். அவறாச்சனின் தந்தையின் தந்தை கழுத்தில் முருக்குமரத்தில் செதுக்கிய ஒரு குச்சி தொங்கியது. அது குளிகன் என்ற தெய்வத்திற்கு உரியது. கொந்தை என்று சொல்வார்கள். குளிகன் சாராயத்தின் தெய்வம்.உள்ளூரில் வாற்றுசாராயம் காய்ச்சுபவர்கள் சாராயம் திரியாமல் சரியாக முறுகி வரும்பொருட்டு அணிவது. அதை ஒரு கையால் பிடித்துக்கொண்டு ஆலாலோகுளிகா என்று கூவியபடி கிண்டினால்தான் ஊறல் மனம்கனிந்து சாராயத்தை வெளிவிடத்தொடங்கும். மகனே பாண்டித்தமிழ் எழுத்தாளா, இந்த சாராயம் என்பது என்ன? அது ஒரு தெய்வம்… எல்லா தெய்வங்களும் சாக்கடைபோன்ற கலீஜில் இருந்து எழுபவை…. உங்கள் விஷ்ணுகூட திரிந்த பாலில் இருந்துதானே வந்தார்?”
என ஆரம்பப்பகுதியிலேயே, கிறிஸ்த சமயம் வெளியிலிருந்து வந்த சமயம் என்றும், மார்க்சிஸ்டுகள் எல்லாவற்றிற்கும் சுமைகூலிக் கட்டணம் வசூலிப்பதில் குறியாய் இருப்பவர்கள் எனவும் விமரிசனக் கணைகளை வீசித் தொடங்குகிறார். அங்கிருக்கும் ஸ்ரீதரன் என்னும் இந்துத்துவ ஆதரவாளன் மூலம்,
“நமது புண்ணியபாரதத்தின் வரலாற்றை நம்முடைய சொந்த பாரதிய ஜனதாவின் பொன்னு தம்புரான் ஹெய்ல் ஃப்யூரர் வளர்த்துக் கொண்டிருக்கும் இந்த புண்ணியமான காலகட்டத்தில்…”
எனப் பேச வைக்கிறார். போகிற போக்கில்,
“இந்த கேரள கிறிஸ்தவம் என்றால் என்ன? அது நல்ல உள்ளூர் சரக்கு…வீரியம் மிகுந்தது. பால் சகரியா ஒருமுறை சொன்னார்…”
“நாட்டுச்சாராயம் என்பது சனாதன தர்மம்…புளிக்குந்தோறும் இனிப்பது.”
என ஒப்புமை கூறுகிறார். அதிலிருந்து விலகித் திடுதிப்பென்று மலையாள இலக்கியப் போக்கிற்குள் நுழைந்து,
“சுரியானிகளில் பால் சக்கரியா ஒரு தேவன், அதாவது லூசிஃபரைப்போல வீழ்ச்சியடைந்த தேவன்”
“அப்படியென்றால் போஞ்ஞிக்கரை ராஃபியை பற்றி பேசலாமா?” என்றான் ஔசேப்பச்சன்
“அவர் யார்?”
“அந்தக்காலத்தில் அற்புதமான கதைகளை எழுத முயன்றவர்” என்றான் ஔசேப்பச்சன் “பாவம், ஒன்றுகூட சரியாக வரவில்லை. ஆனால் அவருக்கு பொன்குந்நம் வர்க்கிமேல் கடுமையான பொறாமை இருந்தது. ஏனென்றால் அவரும் அற்புதமான கதைகளை எழுத ஆசைப்பட்டவர், நடக்கவில்லை. இரு கிறிஸ்தவர்கள் ஒருவரை ஒருவர் வசைபாடும்போது மேலே கர்த்தாவின் சபையில் ஒரு மணியோசை எழுகிறது என்பார்கள்…” ஔசேப்பச்சன் ஏப்பம் விட்டு “அங்கே நிலைக்காத இடியோசைபோல எப்போதுமே மணிச்சத்தம்தான்… தேவதைகள் எல்லாம் ரொம்பகாலம் முன்னாலேயே செவிடாகிவிட்டனர் என்று புனித ஆமோஸ் புண்ணியவாளன் சொல்லியிருக்கிறார்”
என்று இலக்கிய விமரிசனக் குறிப்புகளையும் தூவிவிடுகிறார். இதுபோன்ற பேச்சுகளால் கதையின் போக்கு திசைமாறிவிடும் என்ற உள்ளுணர்வு தோன்றும்போது,
நான் பேச்சை வேறெங்காவது கொண்டுபோக ஆசைப்பட்டேன். ஏற்கனவே நாட்டு சாராயம். இதில் கிறிஸ்தவ- இந்து விவாதம் என்றால் பாத் டப்பில் எண்ணையை ஊற்றி நிறைத்து உள்ளேபடுத்து உடலுறவு கொள்ளும் ஒரு தாய்லாந்து முறை உண்டு என ஔசேப்பச்சன் முன்பு சொன்னது போலத்தான். “நடவடிக்கைகள் நீண்டு நீண்டு செல்லும், பொன்னுமகனே, இலக்கு எட்டப்படாது”
என விளித்துக் கதையின் மையத்திற்குள் நகர்ந்தும் கொள்கிறார். திரும்பவும் இந்திய மரபு, அனுபவ அறிவு போன்றவற்றை முன்வைக்க நினைக்கும்போது
அறிவியல் என்றால் அதற்கு தியரி இருக்கும். இது வெறும் அனுபவ ஞானம். எப்படி சிலந்தி வலைபின்ன கற்றுக்கொண்டதோ, தூக்கணாங்குருவி கூடுகட்ட கற்றுக்கொண்டதோ அப்படி. பல்லாயிரம்பேரின் பலநூறாண்டுக்கால கூட்டு அறிவால் கொஞ்சம் கொஞ்சமாக உருவாகி வந்தது அந்த அறிவு. தனியொருவருக்கு அது முழுமையாகத்தெரியாது. எந்த நூல்களிலும் அது இல்லை. ஆனால் கூட்டாக மாப்பிளைப் பண்பாட்டில் அது இருந்துகொண்டும் இருக்கிறது.
***********
பிறகு “மாப்பிளைகளின் சமூக அமைப்பு” என்றான். “அது மிகமிக உறுதியான நெறிகளால் ஆனது. தலைமையும் துணைத் தலைமையும் குட்டித்தலைமைகளும் வட்டாரத்தலைமையும் எல்லாம் உள்ள பெரிய அமைப்பு அது. குறைந்தது ஆயிரம் ஆண்டுகளாக அது உறுதியாகச் செயல்பட்டிருக்கிறது. அதை ஒரு தொழில்கூட்டமைப்பு என்று சொல்லலாம். ஒரு கல்விநிறுவனம் என்றும் சொல்லலாம். இஸ்லாமுக்குள் ஒரு துணைச்சாதி அல்லது துணைச்சமூகம் என்றும் சொல்லலாம். ஆனால் அது மெல்லமெல்ல இல்லாமலாகியது. கால யவனிகைக்குள் சென்றது”. அந்த சொல்லை விரும்பிய ஔசேப்பச்சன் கையை தூக்கி “கால யவனிகை… அதாவது காலமாகிய யவனிகை!” என்றான். “காலத்தை துணியால் திரையாக ஆக்கி…” ஏப்பம் விட்டு “நல்ல தீ போன்ற சாராயம்!” என்றான்
எனத் தனது நிலைபாடுகளுக்குக் கட்டியம் கூறிவிட்டு,
பிரிட்டிஷார் அளித்த ஆங்கிலக்கல்வி அவர்களின் மரபான கல்வியை அழித்தது. ஒரு குழந்தை மாப்பிள்ளைகளின் மரபுக்கல்வியையும் பிரிட்டிஷாரின் பள்ளிக்கல்வியையும் ஒரே சமயம் கற்றுக்கொள்வது என்பது சாத்தியமே அல்ல.கடைசியாக இஸ்லாமிய சீர்திருத்த இயக்கங்கள். கிலாஃபத் இயக்கத்துடன் அவை இங்கே வந்து வலுப்பெற்றன. அவை இஸ்லாமை ஒற்றைப்படையான ஒரே மதமாக ஆக்கின.மாப்பிள்ளைகளின் தனிப்பண்பாடு தவறானது என்றும் ஆசாரவிரோதம் என்றும் கருதப்பட்டது. அவ்வளவுதான், ஒரு ஆயிரம் ஆண்டுக்காலம் மரபு அழிந்தது.
என ஐரோப்பியக் கல்விமுறை மீதும், அறிவியல் பார்வை மீதும் குற்றச்சாட்டுகளையும் வைத்துக் கொள்கிறார். “ஔசேப்பச்சன் சொன்னான்..” எனத் தொடங்கும் முதல் சொற்றொடரிலிருந்து, “ஸ்ரீதரா, நீ பேசாமல் இரு… சொல்லு ஔசேப்பச்சா” எனக் குமாரன் மாஸ்டர் சொல்வது வரை எழுதப் பெற்றுள்ள 1500 சொற்களும் இந்தக் கதையோடு நேரடியாகத் தொடர்பில்லாத பகுதிதான்.அவை மட்டுமல்ல. ராதாமணி அழகானவள் என்பதற்கு,
“ராதாமணி எப்படி இருந்தாள்? சற்றே குண்டான ஐஸ்வரியா ராய், போதுமா? வந்து அமர்ந்ததுமே நடுங்கிக்கொண்டிருந்தாள்”
என்ற குறிப்பே போதுமானதுதான்.ஆனால் அதற்கு முன்பு அழகான பெண்களின் உருவாக்கம் பற்றி விரிவான ஒரு உரையொன்று இடம்பெற்றுள்ளது:
இந்த மேற்குக் கடற்கரை என்பது இனக்கலவையின் சோதனைச் சாலை. உலகமெங்கும் வெவ்வேறு இனங்கள் கலந்த இடங்களில்தான் பேரழகிகள் உருவாகியிருக்கிறார்கள். உதாரணமாக இத்தாலி. அது ஆசிய ஐரோப்பிய இனங்களின் கலவை நிகழ்ந்த நிலம். லத்தீன் அமெரிக்கா இன்னொரு உதாரணம். அரேபியா அதற்கும் முன்பே வெள்ளை ஆரிய இனமும் காப்டிக் கறுப்பினமும் கலந்து உருவானது. காக்டெயிலே இனியது என்று பிரெஞ்சுக்காரன் சும்மாவா சொல்கிறான். அவன்கள் ரசிகன்கள்!
மேற்குக் கடற்கரையில் அரேபியர், போர்ச்சுக்கீசியர் வந்திருக்கிறார்கள். ஆகவே அற்புதமான கலவைகள் இங்கே நிகழ்ந்துள்ளன. இங்குள்ள எல்லா சாதிகளிலும் எல்லா மதங்களிலும் இனக்கலவை அடையாளங்கள் உண்டு. நீலக்கண்கள் சாதாரணம். கொங்கணி பிராமணர்கள், மாத்வ பிராமணர்கள், இஸ்லாமியர்கள், நாயர்கள், நம்பியார்கள் எல்லாருமே கலவைக்குருதி கொண்டவர்கள்தான். உண்மையில் சாதிப்படிநிலை கீழே செல்லச்செல்ல கலவை குறைந்து அழகும் குறையும்.
என நீட்டி முழக்குகிறான். இப்படி நீட்டி முழக்கும் பகுதிகளிலும், கதைக்குத் தொடர்பில்லாதது போலத் தோன்றும் பகுதிகள் வழியாகவுமே ஜெயமோகன் தனது நிலைபாடுகளை முன்வைத்துக்கொள்கிறார் என்பது கவனிக்க வேண்டிய ஒன்று. இவையல்லாமல், ஔசேப்பச்சன் சொல்லும் கதைப்போக்கில் இடம் பெறும் திருவிதாங்கூர் வரலாறு, மாப்பிள்ளைகளின் கலவரம், கப்பற்கலையில் தேர்ந்த தச்சர்கள் மற்றும் மாப்பிள்ளைகளின் கூட்டுழைப்பு, சமூக உளவியல் போன்றனவெல்லாம் கூட ஔசேப்பச்சனின் அறிவு அல்ல; ஜெயமோகன் என்னும் கதைசொல்லியின் கதையாக்க முறைமையின் நுட்பங்களே. ஔசேப்பச்சன் என்னும் தேர்ந்த துப்பறிவாளனைக் கதைசொல்லியாக உருவாக்கித் தனக்குத் தெரிந்த பலவித தரவுகளையும் அவை தரவுகள் என்று தோன்றிவிடாமல் தருகிறார் என்பதுதான் கவனித்துக்கொள்ள வேண்டிய ஒன்று.
ஒரு குற்றவியல்/ துப்பறியும் கதைக்குள் இவ்வளவு தரவுகளையும் துருத்திக் கொண்டு வெளித் தெரியாமல் கதையின் பகுதியாக ஆக்கியதோடு தனது அரசியல் நிலைபாடுகளையும் சார்புகளையும் காட்டியிருக்கும் திறமைக்காகவே ஜெயமோகனின் பத்து லட்சம் காலடிகள் கொண்டாடப்படுகிறது. கதை கொண்டாடப்படுகிறது என்பதை விடக் கதையை எழுதிய ஜெயமோகன் கொண்டாடப்படுகிறார். அவரது அரசியல் சார்பு இதுதான் எனவும், அதன் மூலம் இப்போதிருக்கும் பெருமரபுப் போக்கோடும், பெரும்பான்மை அரசியலோடும் உடன்படுபவர் என்பதையும் திரும்பச் சொல்லவேண்டியதில்லை.
கருத்துகள்