பெரும்பொறுப்புகளைச் சுமக்கவிரும்பாதவர் க.அன்பழகன்

 

பெரியாரின் அரசியல் முன்மொழிவுகளைக் குறிப்பிடும் சொல்லாடல்களாக அறியப்படுபவை பகுத்தறிவுவாதம், சுயமரியாதைச்செயல்பாடுகள், சமூகநீதிக்கான போராட்டங்கள், இவற்றை அடையும் நோக்கத்தில் தடைக் கற்களாக இருப்பனவாகப் பெரியார் அடையாளப்படுத்தியன மத நம்பிக்கைகளே. எல்லா மதத்தின் மீதான பிடிமானங்களும் நம்பிக்கைகளும் எதிர்க்கப்பட வேண்டியவை எனப் பரப்புரைகள் செய்தபோதிலும் இந்தியாவின்/ தமிழகத்தின் பெரும் சமயமாக இருக்கும் இந்துமதத்தின் மீதே கடும் விமரிசனங்களையும் எதிர்ப்பையும் காட்டினார். சமய நம்பிக்கைகளை எதிர்க்கும் வகையில் தான் அதனைக் காக்கும் நடவடிக்கையில் இருந்த பிராமணர்களையும் கடுமையாகச் சாடினார்.

சமூக மாற்றத்தை முதன்மையாகக் கருதிய பெரியார் ஈ.வெ.ராமசாமி, இந்துசமயத்தின் அடிப்படைக் கோட்பாடுகளான கர்மா, மறுபிறப்பு, ஊழ்வினை, சாதீயப்படிநிலைகள் வழியான வாழ்வியல் நடைமுறைகள் போன்றன ஒழிக்கப் படவேண்டும் என்பனவற்றை முதன்மையான பரப்புரைகளாக முன்வைத்தார். இப்பரப்புரைகளைத் திசை திருப்பும் மொழிப்பற்று, நாட்டுப்பற்று, பண்பாட்டுக்கவலை போன்றவற்றையும் இரண்டாம் மூன்றாம் நிலையில் வைத்தே பார்த்தார்.பெரியார் முன்வைத்த இச்சொல்லாடல்கள் நிதானமான யோசனைகளுக்கும் சிந்தனைகளுக்கும் பின் எடுக்கப்படும் முடிவுகளைக் கோருவன. ஆனால் தேர்தல் அரசியல்வழியாக அரசு அதிகாரத்தைக் கைப்பற்ற நினைக்கும் ஓர் அரசியல் கட்சி இப்பரப்புரைகளைத் தொடர்ச்சியாகச் செய்து கொண்டிருக்க விரும்பாது.

பெரியாரின் திராவிடர் கழகத்தினைத் திராவிட முன்னேற்றக்கழகமாக மாற்றிய அதன் தொடக்க நிலைத் தலைவர்கள் தங்களின் பரப்புரைகள் ஒவ்வொன்றிலும் வெகுமக்களை ஈர்க்கும் விதமான சொல்லாடல்களைக் கையாண்டனர். அதன் நிறுவனத்தலைவரான திரு சி.என். அண்ணாதுரையின் இருமொழித்திட்டம், தமிழ்நாடு பெயர் மாற்றம், ஒரு ரூபாய்க்கு ஒருபடி அரிசி போன்றன வெகுமக்கள் ஈர்ப்புப் பரப்புரைகளே திராவிட முன்னேற்றக்கழகத்தை அதிகாரத்தில் அமர்த்தும் சொல்லாடல்களாக இருந்தன. அவரைத் தொடர்ந்து தலைவரான கலைஞர் மு.கருணாநிதி தனது பரப்புரைத்தளங்களில் வெகுமக்கள் நோக்குகளையும் செயல்தளத்தில் சமூக மாற்றத்தையும் முன்வைத்து நகர்ந்தவர். பரவலான வரவேற்பைப் பெறும் சமூகநல அரசுக்கு வடிவம் கொடுத்தவர்.

தேர்தல் காலப் பேச்சுகளில் அண்ணாவையும் அதிகாரத்தில் இருக்கும்போது பெரியார் ஈ வெ ரா. வையும் அதிகம் நினைத்துக்கொள்பவராகவும் உச்சரிப்பவராகவும் இருந்தவர் கலைஞர் மு.கருணாநிதி. தேர்தல் வெற்றிக்கான வியூகம் அமைக்குபோது சாதிப் படிநிலைகளுக்கேற்ப அதிகாரப்பங்கீடு காட்டுதல், மத்திய மாநில அரசுகளிடையேயான உறவுநிலையைப் பேணுவதில் காட்டும் உறுதியான முடிவுகள், மத்திய அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகளே தேசத்தின்/ மாநிலத்தின் பொருளாதார உறவுகளைத் தீர்மானிக்கும் என்பதை உணர்ந்து அதற்கேற்ற முடிவுகளை எடுப்பதில் அவர் காட்டிய நிதானம் போன்றவை அவரின் தலைமைப் பண்புக்கான திறன்களாக இருந்தவை. இவ்வாறான திட்டமிடல், கொள்கை உருவாக்கம், காலத்திற்கேற்ற நகர்வுகள் போன்றவற்றில் கவனம் செலுத்தாதவர் பேரா. க. அன்பழகன். அதன் காரணமாகவே தனது இடம் இரண்டாமிடம் என்பதை உணர்ந்து ஏற்றுக் கொண்டவர்.

அவரது உரைகளைக் கட்சி மேடைகளில் பல தடவை கேட்டிருக்கிறேன். கல்வி அமைச்சராகவும் நிதித்துறை அமைச்சராகவும் இருந்த நிலையில் என்னோடு தொடர்புடைய பல்கலைக்கழக அரங்குகளிலும் கேட்டிருக்கிறேன். அவரைச் சந்தித்துவிட்டு வந்த கல்வியாளர்களும் துணைவேந்தர்களும் அவரைப் புதிய திட்டங்களை முன்வைத்த ஒருவராகச் சொன்னதில்லை. புதிய கல்விக்கொள்கை, புதிய நிதிக்கொள்கை போன்றனவற்றின் வருகையின் போது அவற்றை உள்வாங்கி முன்வைப்புகள் எதையும் செய்ததில்லை. ஒருவிதத்தில் அவர் இருப்பதைத் தொடர்வதில் விருப்பம் கொண்டவராக இருந்தார். ஏற்கெனவெ இருப்பதைச் சிக்கல் இல்லாமல் நகர்த்திவிடும் ஓர் அதிகார இயந்திரத்தின் கண்ணி என்பதாகவே அவரை அதிகாரிகளும் மதிப்பிட்டனர் என்பதை உயர்நிலையில் இருந்த நண்பர்கள் வழியாக அறிந்திருக்கிறேன்.

திரு. க. அன்பழகனின் உரைகளில் அதிகமும் வெளிப்பட்ட கருத்தியல் நிலைப்பாடாக இருந்தவை பெரியார் முன்வைத்த சுயமரியாதையும் பகுத்தறிவு வாதமும் மட்டுமே. வெகுமக்களைக் கவரும் பண்பாட்டுக் கவர்ச்சிவாதம் வெளிப்பட்டதில்லை. எப்போதும் வெகுமக்கள் அரசியல் சொல்லாடலை முன்வைத்துப் பரப்புரை செய்துகொண்டிருந்த கட்சியின் செயலாளர், அதனையே முதன்மையாகக் கருதாமல், பெரியாரின் சிந்தனைசார்ந்த - கொள்கைசார்ந்த -சொல்லாடல்களை முன்வைத்துக் கொண்டே இருந்தார் என்பது சுவையான முரணிலை..திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொடக்கநிலைத் தலைவர்களுள் ஒருவரான பேரா. க. அன்பழகனின் தனித்தன்மையே இதுதான் என்றுகூடச் சொல்லலாம்.


அவரது வாழ்க்கை முடிவு என்பது - வெகுமக்கள் அரசியலைக் கவனப்படுத்தாத - கொள்கை அரசியலை முன்னெடுக்கும் தலைமுறையின் விடைபெறுதல் என்பதாக நினைக்கப்பட வேண்டிய ஒன்று.அவரை நினைத்துக்கொள்ளலாம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நாயக்கர் கால இலக்கியங்கள் சமுதாய வரலாற்றுச் சான்றுகளாகக் கொள்வதற்கான முன் தேவைகள்

நாயக்கர் காலம். இயல்.2.பொருளாதார நிலைகளும் உறவுகளும்

மேல்நோக்கியும் கீழ்நோக்கியும்