தன்னை முன்வைக்கும் நவீனத்துவம் - கவிதா லட்சுமியின் சிகண்டி


கேட்கும் இடத்தில் இருந்து வாசிக்கும் கவிதை வாசகர்களுக்குத் தர்க்கம் சார்ந்த புரிதல்களையும் காரணகாரியங்கள் கொண்ட விளக்கங்களையும் முன் வைப்பதைத் தவிர்ப்பது கவிதையின் அழகியல் கூறுகளில் ஒன்றாக முன் வைக்கப்படுகிறது. நேரடி விளக்கங்களைத் தவிர்த்து முன்வைக்கப்படும் சொற்களின் வழி உருவாக்கப்படும் குறியீடுகள், படிமங்கள், உவமங்கள், உருவகங்கள் போன்றவற்றின் வழியாக வாசிப்புத்தளங்களைக் கவிதைகள் உருவாக்கவேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் நிலையில் தான் கவிதை எழுத்துக் கலைகளில் உச்சம் எனக் கருதப்படுகிறது. இப்படிக் கருதப்படுவதின் பின்னணிகள் முழுமையும் ஏற்கத்தக்கன அல்ல. 
இலக்கியப்பிரதி காரணகாரியங்களற்ற மனநிலையின் வெளிப்பாடாக இருக்கவேண்டும் என்பதில் தொடக்கம் கொண்ட இந்தக் கருத்துநிலை, கவியையும் கவியின் சொற்களையும் கடவுளின் இடத்திற்கு உயர்த்தும் மனோபாவத்தின் வெளிப்பாடு. எப்போதும் கவிகள், சூழலை மறந்து அல்லது மறுதலித்துத் தன்னைத் தன்னோடு பேசும் உயிரியாக நினைத்துக்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தும் கவிதை அழகியலே இதன் தொடக்கம். நவீனத்துவத்தின் ஒரு வாய்ப்பாடாக விளங்கிய இந்த மூலத்தை, அதே நவீனத்துவத்தின் வளர்ச்சியான அடையாள அரசியல் காலத்துக் கவிதைப் பார்வைகள் நிராகரித்து விட்டன. 
நவீனத்துவக் கவிதைகளுக்குள் தனி அடையாளமாக வெளிப்பட்ட அரசியல் செயல்பாட்டு நோக்கம் கொண்ட கவிதைகள் - வர்க்கமுரண், காலனியாதிக்க விடுவிப்பு, இனவிடுதலை, பெண்நிலைவாதத்தை முன்வைத்தல், தலித்திய ஒடுக்குமுறையின் வலிகளை விவரித்தல், விளிம்பு நிலையில் காணாமல் ஆக்கப்பட்டதை முன்வைத்தல் போன்ற அரசியல் செயல்பாட்டுக் கவிதைகள், கவிகளை உணர்வு மயமானவர்கள் என்ற மாயச் சிறையிலிருந்து விடுவித்து அறிவு வயப்பட்டவர்கள் எனக் காட்டியுள்ளன. தனது மொழியின் வழியாகத் தன்னிலையையும் முன்னிலையையும் உருவாக்கிக் கொண்டு, தொடர்பாடலுக்கான செய்திகளையும் நிகழ்வுகளையும் உருவாக்குவதில் பல்வேறு அணுகுமுறைகள் உள்ளன. அகவயமான சிக்கல்களைக் கவிதை யாக்க நினைப்பவர்கள் கவிச்சொல்லியான தன்னிலை அடையாளங்களை உருவாக்காமல் விட்டுவிடுவதோடு முன்னிலையையும் அடையாளப் படுத்தாமல் தவிர்க்கின்றனர். ஆனால் அவர்களின் சிக்கல்களும் புழுக்கங்களும் மன அடுக்குகளாக விரிக்கப்படுகின்றன. இம்மன அடுக்குகள் முழுமையும் தனியொருவரின் அனுபவம் சார்ந்தவை என்பதால், வாசகர்களின் நுழைவுக்கான திறப்புகள் இல்லாமல் புரியாத கவிதைகள் என ஒதுக்கப்படும் வாய்ப்புகளைப் பெற்றுவிடுகின்றன. அதேபோன்ற மனச் சிக்கல்களும் புலம்பல்களும் கொண்டவர்களால் விதந்தோதப்படுகின்றன. 

மேலே விவரித்த வகைப்பாட்டில் நான் வாசித்த கவிதா லட்சுமியின் சிகண்டி தொகுப்பில் ஒரு கவிதையும் இல்லை. அவர் தனது கவிதையின் தொடர்பாடல் வடிவத்தில் சொல்லியின் இடத்தையும் பரிமாணங்களையும் வலுவாகக் கட்டி எழுப்பும் சொற்களைக் கொண்டவராகப் பெரும்பாலான கவிதைகளில் வெளிப்படுகிறார். அந்த அளவுக்கு முன்னிலையில் இருப்பவருக்கான அடையாளத்தை உருவாக்க வேண்டிய தேவையை அவரது கவிதைகள் கொண்டிருக்கவில்லை. அந்த இடம் பெரும்பான்மைக்கான – பலவகைப்பட்ட வாசகர்களுக்காக - திறப்பாக விடப்பட்டுள்ளன. அதனாலேயே அவர் முன்வைக்கும் செய்திகளோடு, கருத்துநிலையோடு தன்னை அடையாளம் கண்டு கொள்ளும் எவரும் இணைந்துகொள்ளும் – வாசித்து விவாதிக்கும் வாய்ப்புகளைத் தருகின்றன. இவ்வகைக் கவிதைகள் இந்தத்தொகுப்பில் பாதியளவுக்கு இருக்கின்றன. நீள நீளமாக உரத்துப் பேசவும் செய்கின்றன. நான் பெண்மையின் உச்சமாகிறேன் என்னும் தலைப்பிட்டு எழுதப்பெற்றுள்ள இந்தக் கவிதையை வாசித்துப் பாருங்கள். 

வெங்காயத்தைத் தோலுரித்து 
பொடிபொடியாக வெட்டவெட்ட 
பெண்மையின் உஷ்ணம் 
கண்ணில் ஏறுகிறது 

கத்திரிக்காயையோ வெண்டைக்காயையோ 
துண்டாக்கி 
எண்ணையில் போட்டு 
அது பொன்னிறமாகையில் 
என் பெண்மையும் மெல்லக் 
கணகணப்பாகிறது 

மாமிசத்துண்டங்களை மிருதுவாகச் சீவி 
இஞ்சியும் பூண்டும் மிளகும் 
பொடிமிளகாயும் 
தூவிக்கலந்து நீரூற்ற 
அது கொதித்துக் கொப்பளங்கள் 
எழுந்துடைகையில் 
என் பெண்மை பூரித்து 

தன்னுணர்வுள் சூடேற்றுகிறது 

ஒவ்வோர் தினமும் 
நிதம்நிதம் இந்நடைமுறைக்குள் 
போதேயேற ஒரு மார்க்கமாய் 
மையல் ஊற்றெடுக்கிறது 

இனியென்ன 
உணவுமேசையில் 
பெண்மையைப் பரிமாறி 
தூசி தட்டிக் கூட்டியள்ளி 
பொருட்களைக் 
கவனமாக வைக்கும் கணங்கள் 

அப்பப்பா...! 


உடல் அணுக்களெல்லாம் 
முருக்கேறி 
பெண்ணுணர்வு பரிசுத்தமடைகிறது. 
நான் 

பெண்மையின் உச்சமாகிறேன்! 


இப்படியாகவேதான் 
சில வெங்காயங்களும் 
வெண்டைக்காய்களும் 
நம் பெண்ணுணர்வைக் 
காத்தருள் புரிகின்றன 
தோழி! 
தனது நிலைபாட்டின் மீதும் கருத்தியல்மீதும் நம்பிக்கைகளின் மீதும் உறுதித் தொனியை ஏற்றிவிடும் சொற்களைக் கொண்டு எழுதப்படும் இவ்வகைக் கவிதைகள் வாசிப்பவர்களின் அன்றாட நடவடிக்கைகளை முன்வைத்தே விரிகின்றன. அப்படி விரியும்போது வாசிப்பவர்களிடம் இருவகை உணர்வுகளை அல்லது நிலைபாடுகளை உருவாக்கும். கவிதை சொல்லியின் நிலைபாட்டில் உடன்பாடுகொண்டவர்களைக் கவிதையோடு ஏற்புநிலை கொண்டு பாராட்டுபவர்களாக மாற்றும்; தனது மன விருப்பத்தை எழுதியிருக்கிறார் என்று இணைந்து கொள்வார்கள் அவர்கள். அறிவியக்கத்தின் துணையோடு நவீனத்துவத்தின் வரவிற்குள் நுழைந்தவர்களை அதன் விளிம்பில் நின்று இங்குமங்குமாக அலைபவர்களே கீழ்த்திசைப் பண்பாட்டில் அதிகம். எனவே இவர்கள் கவிதாலட்சுமி கவிதைக்குள் இருக்கும் சொல்லியின் நிலைபாட்டோடு எதிர்நிலை எடுக்கும் வாய்ப்புகளே அதிகம். தனது கவிதை முன்மொழிவுகளால் அதிகமான எதிர்நிலைப்பாட்டாளர்களையே கவிதாலட்சுமி பெற்றிருக்கக் கூடும். அவர்கள் இவ்வகைக் கவிதைகளின் நேர்க்கூற்று நிலையைக் கவிதை நுட்பங்களற்ற பேச்சுகள் / உரைவீச்சுகள் எனச் சொல்வார்கள். அப்படிச் சொல்பவர்களின் இவ்வகைக் கவிதைகளில் இடம்பெறும் மறித்துவரல் உத்தியை முன்வைத்து நிராகரிக்கவும் செய்வார்கள். தங்களது நிலைபாட்டிலிலும் அறிதலிலும் இருக்கும் உறுதித்தன்மை காரணமாகத் திரும்பத் திரும்ப அடுக்க வேண்டும் என நினைக்கிறார்கள் இவ்வகைக் கவிகள். அந்த அடுக்கும் முறை, கவிதையை மன வாசிப்புக்குரிய நிலையிலிருந்து மேடை வாசிப்புக்குரியதாக ஆக்கிவிடும். இவ்விரண்டில் எது முக்கியம் என்பதை கவிகளே முடிவுசெய்யவேண்டும். 

இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள தன்னைக் கடந்து, என்னை வரையும் நான், நான் பெண்மையும் உச்சம் ஆகிறேன், மகனுக்குஅப்படியே விடு, ஞானம் தேடிச்சென்றவர் கதை, என் மகனின் காதலிக்கு, இதயம் எனக்குச் சொந்தமில்லை,கடவுள்தான் காப்பாற்ற வேண்டும், வேதாளம் சொல்லும் கதை, உலகினை ஒரு பந்தாக்கி அவர்கள் விளையாட த்தொடங்கினர். அவள்கள் அப்படித்தான்,பெண்கள் தினம்,ஆண் என்பது எருமையைப் போன்றது, நோர்வே நாடும் அமேசோன் காடும்! என்ற தலைப்புகளில் உள்ள கவிதைகளில் இத்தன்மையைக் காண முடிகிறது. 
கவிதைசொல்லியை யாரென்று நேரடியாகக் காட்டாமல் படர்க்கை நிலையில் வைத்துக் கொண்டு விவாதிக்கும் நிகழ்வு, சூழல், செய்தி, ஆளுமைகள், ஓர் உணர்வு, இயற்கையின் வெளிப்பாட்டு நிலை, கவனிக்கச் செய்த ஒரு காட்சி என்பனவற்றை முன்வைக்கும் கவிதைகள் இத்தொகுப்பில் எண்ணிக்கையில் அதிகமாக உள்ளன. அவ்வகைக்குரிய கவிதையில் ஒன்றாக ஊஞ்சல் என்ற தலைப்பிட்ட கவிதை இருக்கிறது. இந்தக் கவிதையின் முதல் இரண்டு பத்திகளும் ஊஞ்சலாடும் பெண்ணொருத்தியின் படிமத்தை உருவாக்கி முன் வைக்கின்றன. 
தாம்புக்கயிறு கட்டி 
துளைக்கும் வெயிலில் 
அடர்மரங்களின் இசையோடு 
கொஞ்சங்கொஞ்சமாய்க் 
கால் உந்தி கால் உந்தி 
வேகம் கூட்டிக்கூட்டி 
மேலெழுந்த ஒரு உந்தலில் 
மேலாக்கு காற்றோடு போக 
காலிரண்டும் விறைத்து 
வான் நீட்டி உன்னியெழ 
இடைச்சட்டை காற்றுத் துழாவிக் 

கலைந்தெழும்பும். 

மண்ணோக்கித் தலை சாயும் 
கட்டறுந்த மயிரனைத்தும் 

கீழே மண்ணனையும் 

சொற்களின் வழி உருவாக்கப்பட்டுள்ள இப்படிமம், வழக்கமாக நேர்க் காட்சியில் ஊஞ்சலாடும் பெண்ணின் நிலையிலிருந்து மாறுபட்டிருப்பதைக் கவிதை வரிகளை வாசிக்கும்போது உணரலாம். எப்போதும் பெண்களின் ஊஞ்சலாட்டம் இன்னொருவரின் உதவியோடு நடப்பதாகவே நமது மனம் பதிவுசெய்து வைத்திருக்கிறது. இன்னொருவரின் உதவியோடு ஊஞ்சலாடும்போதே தான் தலைகீழாக விழுந்துவிடும் சாத்தியங்கள் இருப்பதாக நினைத்துப் பதற்றமும் அச்சமும் கலந்த பெண் சித்திரமே பலருக்கும் மனக்கண்ணில் தோன்றும். ஆனால் கவிதாலட்சுமியின் கவிதைக்குள் படிமமாக்கப்படும் ஊஞ்சலில், ‘ஒரு பெண் அவளே அமர்ந்து, அவளே பெருவிரலால் உந்தி உந்தி ஆட்டிக்கொண்டு வேகம் ஊட்டுகிறாள். அந்த வேகம் சாதாரணமான ஊஞ்சலாட்டத்தின் வேகம் அல்ல. மரண பயம் தரும் வேகம். உடலின் ஆடையும் தலையின் கூந்தலும் அலைந்து திரியும் சித்திரமாக படிமம் விரிக்கப்பட்டிருக்கிறது. ஊஞ்சலாட்டத்தின் உச்ச நிலையில் ஒரு பெண்ணின் எதிர்பார்ப்பு என்னவாக இருக்கும்? என்று நினைத்துப் பாருங்கள். தன்னை நேசிக்கும் அல்லது அரவணைத்துக் கொள்ளும் ஆணொருவன் வந்து ஊஞ்சலின் கயிறுகளை இழுத்துப் பிடித்து நிலைப்படுத்திக் காப்பாற்ற மாட்டானா? என்று ஏங்கும். அந்த ஏக்கம் எப்போதும் தன்னைத் தாங்கிக் கொள்ள ஆணைச் சார்ந்திருக்கும் பெண்ணின் ஏக்கம். ஆனால் இந்தக் கவிதைக்குள் இருக்கும் பெண் அப்படிச் சார்ந்திருக்கும் மனநிலையை முற்றிலும் நிராகரிப்பவள். ஊஞ்சலின் வேகமும் பறத்தலின் கிறக்கமும் மனத்திற்குள் உண்டாக்கும் அதிர்வுகளை ரசிப்பவள். அவளுடைய இலக்கு பாதுகாப்பாக இருப்பதல்ல; பறத்தலின் உச்சநிலையை அவாவி நிற்பது. அப்படியான அவாவிதலின் விளைவாகவே பின் வரும் சொற்களை – முன் வைப்புகளைச் சொல்கிறாள். 
இனி 
விழுந்தால் என்ன? 
மாண்டால் என்ன? 
உச்சந்தலையில் 
எண்ணங்கள் 
சுர்ரென மண்டையேற 
காற்றைக் கிழித்து 
விர்ரென உச்சம் தொட்டு 
வயிறுமுழுவதும் பட்டாம் பூச்சிகளோடு 


திரும்புகையில் 
உயிரெல்லாம் 
அடுத்த பறத்தலைத் தன்னிலேற்றி 
அது ‘இன்னும் இன்னும் மேலே’ 

என அடுத்த உந்தலில்.. 

வேறென்ன..? 

வேடிக்கை பாராமல் 
என் கண்களிலிருந்து 
கிளம்பிய பறவைகளையெல்லாம் 

கூட்டிவாருங்கள் 

போங்கள்! 

நான் ஆடவேண்டும்.! 
நான் ஆடவேண்டும்; பறக்கவேண்டும்; பறவைகளோடு போட்டியிட்டுக் காற்றில் ஏகவேண்டும். இந்த மனநிலையைத் தன்னிலையாக்கும் கவிதையாக்கம் இந்தக் கவிதைக்குள் எங்கே இருக்கிறது என்று தேடினால், “நான் ஆடவேண்டும்” என்ற கடைசி வரியில் இருப்பதாகப் பலர் சொல்லக்கூடும். ஆனால் ஒரு நல்ல கவிதையின் அடையாளம் ஓர் ஒற்றைச் சொற்றொடரில் மட்டுமே தங்கியிருப்பதில்லை. முழுமையான உருவாக்கத்தைத் தாங்கி நிற்கும் நிலையில் தான் அந்தக் கவிதை நல்ல கவிதையாகும். நான் ஆடவேண்டும் என்ற விருப்பத்தைச் சொல்வதற்கு முன்னால் எப்படி ஆடவேண்டும்? என ஒரு கேள்வியைக் கேட்டுக் கொண்டு, அந்தப் பெண் உடல் தனது விருப்பத்தை வெளிப்படுத்துவதற்காக அந்த ஊஞ்சலாட்டப் படிமத்தை உருவாக்கிக்கொண்டது. 
ஊஞ்சல் கவிதையில் ஒற்றைப் படிமத்தை உருவாக்கியதின் மூலம் ஒரு பெண்ணின் தன்னிலையை வெளிப்படுத்துவதற்கு மாறாக, வீடு என்ற கவிதை பல படிமங்களை அடுக்கிச் செல்வதின் மூலம் நவீனத்துவ வாழ்வில் தனிமையைத் தான் மனிதர்கள் வாழ்ந்து கழிக்கிறார்கள் என்பதை அழுத்தமான சோக உணர்வின் திரட்சியாக முன்வைக்கிறது. எல்லாம் இருக்கிறது; ஆனால் எதுவுமில்லை என்ற ஒற்றை வரிச்சொல்லாகச் சொல்லியிருக்கக் கூடிய ஒரு செய்தியைப் படிம அடுக்குகளில் சொல்லும்போது இன்னொரு தளவிரிவை வாசகர்களுக்குத் தரவிரும்பும் கவிமனத்தை நாம் வாசிக்க முடியும். கவி மனம் அடையும் வாழ்க்கையின் பெரும் கருத்தியல் புரிதல் மட்டுமே கவிதையாவதில்லை. வாசிப்புத் திளைப்பும் கவிதையின் அழகியலின் பகுதியே. நீண்ட இந்தக் கவிதையை வாசிக்கும் ஒருவருக்குக் கிடைக்கும் திளைப்பென்பது சொற்கள் வழி விரியும் காட்சிச் சித்திரங்களே மறுக்கமுடியாது. 


பாதையோர மரங்களுக்கு 
அருகில் 
நகரும் முகிற்கூட்டங்களின் 
கீழ் 
சிறகுகளின் ஸ்பரிசங்களோடு 

இருக்கின்றது ஒரு வீடு 

வெளிச்சம் ஊடுருவும் 
கண்ணாடி ஜன்னல்களில் 
வழிகிறது 

எப்போதாவது சில முகங்கள். 

சிரிப்பதும் பார்ப்பதுமாய் 
சுவரெங்கும் நிழற்படங்கள் 

எப்போதும் 
பொழுதுகளைப் போக்கித்தள்ள 

பெரும் தொலைக்காட்சி 

மேசையில் காலத்திற்கு உணவு 

அனைவருக்கும் 

தனிப்பெரும் அறை 

ஆளுக்கொரு கைபேசி 

வெளியே குட்டித் தோட்டம் 

குழந்தைக்கு 
கணினி விளையாட்டு 

இணையத்தளச்செய்திகள் 

எப்பொழுதும் பேசிச்சிரிக்கத் 
தயாராய் முகப்புத்தக 
நண்பர் கூட்டம் 

நுழைவாயிலடியில் 
அடைத்த மனதோடு 
உணர்வுகளைச் சொல்லிமாய 

தன்னோடு சில கவிதை 

மன அலைகளைக் குட்டியமர்த்த 
அமைதியான ஒருவேளை 

இசை 

மிருகத்தை விரட்டும் 
தீப்பந்தங்களைப் போல 
தனிமை விரட்ட 

மெழுகுவர்த்திச் சுடர்கள் 

முன்பைவிட அதிகமாய் 
ஒவ்வொன்றுமெனினும் 

முன்புபோல ஏதுமில்லை 

இவை ஒவ்வொன்றோடும் 
வீட்டின் பாகங்களின் தினசரிகள் 
வீடெங்கும் 

தரமிக்க பொருட்குவியல் 

பொருட்களை 
இடமாற்றி வைப்பதில் 
அழகாய் தோன்றுகிறது 

வீடு 

அமைதியெனச்சொல்லி 
அறைக்காற்றெங்கும் 

மௌனத்தின் பிரவாகம் 

ஆங்காங்கே 
பருகிய 
தேநீர்க் கோப்பை விளிம்புகளில் 

வாழ்தலுக்கான அடையாளம்


விமோசனங்கள் 
கைகளில் கிடக்குதெனினும் 
சாபங்கள் பழகிவிட்டன 
யாவருக்கும். 


தனித்தனியாகப் பிரித்து அடுக்கப்படும் காட்சிச் சித்திரங்கள் எல்லாம் சேர்ந்து கவிதை எழுப்ப நினைத்த வரங்கள் x சாபங்கள் என்ற எதிர்நிலையில் கொண்டுவந்து நிறுத்திவிட்டு விலகிப் போய் விடுகின்றன. தங்களுக்குக் கிடைத்திருக்கும் வீடும் வீடு சார்ந்த வாழ்க்கையும் வரமா? சாபமா? எனத் தீர்மானித்துக்கொள்ள வேண்டியது வாசிப்பவர்களின் வேலையாக மாறிவிடுகிறது. இதுபோன்ற படிம அடுக்குகளைக் கொண்ட பல கவிதைகளை இந்தத் தொகுப்பில் வாசிக்கலாம். ஒரு பறவையைக் கொல்வது எப்படி, கவிதை கனவுவிரிப்பு, சூர்ப்பனகை, அப்பம்மாவின் வீடு, முத்தங்கள், மழைப்பெண், நதியானவள், காலவெளி, ஒரு கவிதை, எனது பாட்டியின் கண்கள்,பாம்புகள். காத்திருப்பு,தெளிவுகள்,கனத்த மிடுக்கு, முத்தத்தின் இறகு, என் முகம்,மழை சுமந்த மேகம், குளிர்காலத்து இரவு, உடல் மனம் நிறம் முதலானவை அவ்வகைப்பட்டவை. 


மனித உயிரி ஒன்று தான் அறிவுசார்ந்து இயங்குபவராக நினைக்கும்போது தனது அறிவின் அடுக்குகளை ஒற்றைத் தளமாக வெளிப்படுத்தாமல், தன்னைப் பற்றிய அறிதலிலிருந்து தொடங்குகிறது. அத்தொடக்கத்தின் தொடர்ச்சியில் தனது சூழலை விளக்கப் பார்க்கிறது, சூழலில் வாழும் மனிதர்களின் எண்ணவோட்டங்களை முன்வைத்துக் கேள்விக்குள்ளாக்குகிறது அல்லது ஏற்கிறது. தனது இருப்பும் தனது சூழலின் இருப்பும் இவ்வாறு இருப்பதற்கான காரணங்களை முன்வைக்க நினைத்து, அவற்றின் விளைவுகள் எவ்வாறிருக்கும் என்று முன்மொழியும் நிலைக்குச் செல்கிறது. தனது இயக்கமும், தன்னைச் சூழவுள்ள சமூகத்தின் இயக்கமும் என்னென்ன திசைகளில் செல்கின்றன என விளக்கும்போது கவிதைக்குள் உரைநடைத் தன்மை கூடிவிடும் வாய்ப்புகள் இருப்பதால், கற்பனைக்கு வாய்ப்பளித்து அறிந்த குறியீடுகளையும் அறியாத படிமங்களையும் துணைக்கழைத்துக் கொள்கிறது. இந்த உத்திப் பயன்பாட்டில் அகநிலைக் கவிதைகளைப் போல முழுமையும் புதிரான அல்லது புதிதான குறியீடுகளையும் படிமங்களையும் தேடிக்கொண்டிராமல், அடையாளச் சிக்கலைப் பேசும் கவிதைகள், வாசிப்பவர்களின் அறிவு எல்லைக்குள் அடிக்கடி வந்து போகும் குறியீடுகளையும் படிமங்களையுமே முழுமையாக நம்பிச் செயல்படுகின்றன. அதனாலேயே இவை கவிதையின் ஆழத்திற்குள் செல்லாமல் மேல் பரப்பிலேயே நிற்கின்றன என்ற விமரிசனக் குற்றச்சாட்டை எதிர்கொள்கின்றன. 
ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்து ஐரோப்பிய வாழ்க்கைக்குள் கால் நூற்றாண்டைக் கடந்த பின்னும் நினைவுகளைத் தொலைக்காத கவிகளும் புனைகதைக்காரர்களுமே வாசிக்க க்கிடைக்கிறார்கள். ஆனால் கவிதாலட்சுமி அதிலிருந்து விலகியவராக ஏறத்தாழ ஐரோப்பிய மாதிரிகளைக் கவிதைக்குள் இருக்கிறார்.கவிதா லட்சுமியின் கவிதைகளில் மரபான இந்து புராண, இதிகாச, காவியக்குறியீடுகளைவிடவும் மேற்கத்திய அறிவியக்கமும் இலக்கியங்களும் தந்த குறியீடுகளும் படிமங்களும் அதிகமாக விரவிக்கிடக்கின்றன. குறிப்பாக ஐரோப்பிய நவீனத்துவ வாழ்க்கையை எழுதிய இப்சனும் அவரது பாத்திரங்களும் நார்வீஜிய தட்ப வெட்பங்களும் கவிதைச் சொற்களாகியிருப்பதைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.அப்படியானதொரு கவிதையாகவே என்முகம் இருக்கிறது: 
பித்தகோரஸிடம் தந்திருந்தால் 
அழகிய முக்கோணச் சில்லுகளாய் 
ஓவிய அந்தஸ்துப் பெற்றிருக்கும் 

என் முகமும்.. 


இப்சனிடம் தந்திருந்தால் 
முன்மாதிரிப்பெயரொன்றைப் 

பெற்றிருக்கும் 

ஸ்டீவ் மெர்குறி கண்டிருந்தால் 
உலகப் புகழ்பெற்ற புகைப்படமாய் 

எங்கும் சட்டமிடப்பட்டிருக்கும் 



இரவிவர்மா எடுத்திருந்தால் 
கடவுளர்களோடு ஒரு கடவுளாய் 

பூஜிக்கப்பட்டும் இருக்கக்கூடும் 



பாரதியிடம் தந்திருந்தால் 
காலங்கள் கடந்ததொரு அகப்பொருளாய் 

கவிதையெனக் கலந்திருக்கும் 

எனக்கான 
உன் கலை என்றால் 

என்ன சொல்வாய்? 

அதே நேரத்தில் இந்தியப் புராணக் கதாபாத்திரமான சிகண்டியைத் தொகுப்பின் தலைப்பாக்கியிருப்பது சுவாரசியமான முரண். இத்தலைப்புக்குப் பின்னொரு துணைத் தலைப்பாக ‘தன்னைக் கடந்தவள்’ என்ற சொற்றொடரும் இருக்கிறது. இதனையும் சேர்த்துப் புரிந்து கொள்ள முயன்றால், பழைய தொன்மங்களை நினைவில் தாங்கிக் கொண்டு, அதனைத் தாண்டிச் செல்ல விரும்பும் ஒரு கீழ்த்திசைப் பெண்ணின் குரல்களே கவிதாலட்சுமியின் கவிதைகள் என்பது புரியவரலாம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நாயக்கர் கால இலக்கியங்கள் சமுதாய வரலாற்றுச் சான்றுகளாகக் கொள்வதற்கான முன் தேவைகள்

நாயக்கர் காலம். இயல்.2.பொருளாதார நிலைகளும் உறவுகளும்

மேல்நோக்கியும் கீழ்நோக்கியும்