அரங்கியல் அறிவோம் -2 / ஆற்றுகை (Direction)



written text kum performance text kum vilakkam solla mudiuma si. (ரிட்டன் டெக்ஸ்ட்க்கும்,பெர்பார்மென்ஸ் டெக்ஸ்ட்க்கும் விளக்கம் சொல்ல முடியுமா சார்)

சொல்லலாமே..... written text, performance text - தமிழில் இதனை நாடகப்பிரதி, நிகழ்த்துப்பிரதி என நேரடியாக மொழி பெயர்க்கலாம். ஆனால் அப்படிச் செய்ய வேண்டியதில்லை. ஆங்கிலச் சொல்லுக்குரிய பயன்பாட்டுச் சொல் இல்லையென்றால் அப்படிமொழிபெயர்த்துப் பயன்படுத்தத் தொடங்கலாம். தமிழில் பயன்பாட்டுச் சொற்கள் இருக்கின்றன.

நாடகப்பிரதியை‘நாடகம்’ என்ற சொல்கிறோம். நிகழ்த்துப்பிரதியைக்குறிக்க ஆட்டப்பிரகாரம் என்றொரு சொல் தமிழகப் பாரம்பரிய நாடகக்குழுக்களிடம் இருந்தது; இருக்கிறது. பழைய நாட்டார் நாடகங்களின் ஆட்டப்பிரகாரங்கள் பெரும்பாலும் பாடல்களால் ஆனவை. தனியாகப் பாடவேண்டிய பகுதி, குழுவாகப்பாட வேண்டிய பகுதி என்ற குறிப்புகளையும், என்ன வகையான மெட்டில் பாட வேண்டும் என்ற இசைக்குறிப்புகளையும்கொண்டதாக இருக்கும். இடையிடையே ‘ வசனம்’ என்று மட்டும் குறிப்பிடப்பட்டிருக்கும். என்ன வசனம் என்று இருக்காது. நாடகவாத்தியார் அல்லது நடிக்கும் நடிகரின் திறனுக்கேற்ப வசனங்கள் இட்டு நிரப்பப்படும். அவ்வசனங்களை நிரந்தரமாக எழுதி வைத்துக்கொள்வதில்லை.

உங்கட நாட்டில் - இலங்கையில்- ஆற்றுகை என்ற சொல்லை உருவாக்கிப் பயன்படுத்துகிறார்கள். ஆற்றுகை,பொருத்தமான சொல். அந்தச் சொல் புதிதாக உருவாக்கிய சொல் என நினைக்கிறேன். ஆற்றுகை என்றொரு இதழ்கூட வந்தது.

evatrukuidaijilana vithiyasam (அவற்றுக்கு இடையிலான வித்யாசம்?)

நாடகப்பிரதியை உருவாக்குபவர் நாடகாசிரியர் என்பதும், நெறியாளர்(Director) உருவாக்குவது ஆற்றுகை அல்லது ஆட்டப்பிரகாரம் என்பதும் அடிப்படையான வேறுபாடு.

நாடகாசிரியர் , காலம், களம், காட்சி, அங்கம் போன்ற குறிப்புகளையும் உரையாடலையும் எழுதித்தருவார்.தமிழில் கிடைக்கக் கூடிய நாடகப்பிரதிகளில் இந்தக் குறிப்புகளோடு பாத்திரங்களின் வயதுஎவ்வளவு இருக்கும் என்ற குறிப்புகளையும் நான் பார்த்திருக்கிறேன். சில நாடகாசிரியர்கள்‘ திரை விலகும்போது, மணி அடித்தவுடன், வெளிச்சம் வருகிறது; இருள் கவிகிறது போன்ற குறிப்புகளைஅடைப்புக்குறிக்குள் தந்திருப்பார்கள். இன்னும் சிலர் - நடந்தபடி, நின்று, உரக்க, தூரத்தில்கேட்கிறது போன்ற குறிப்புகளையும் தந்துள்ளதை வாசித்திருக்கிறேன். இவையே பெரும்பாலும்நாடகப்பிரதியின் அடையாளங்கள்.

ஆற்றுகப்பிரதிமுற்றிலும் வேறானது. நெறியாளர் அல்லது இயக்குநர் தான் நிகழ்த்த இருக்கும் மேடை வடிவம்,பாத்திர நுழைவு, வெளியேறல், வசனம் பேசுவதற்காக நகரவேண்டிய திசை, அளவு, நிற்றல், அமர்தல்,உரையாடலை எதிர்கொள்ளும் பாத்திரத்தை சந்திக்கும் நிலை போன்ற குறிப்புகளைப் படமாக வரைந்துகாட்சிப்படுத்தியிருப்பார்.

ஆற்றுகைப்பிரதியில் இயக்குநர் குறிப்போடு ஒளி, ஒலி அமைப்பு, அரங்க அமைப்புக் கலைஞர்களிடம் பெறப்படும் வரைபடங்களும் ஓவியங்களும், ஒப்பனைக்குறிப்புகளும், உடைவடிவங்கள் பற்றிய குறிப்புகளும் இடம் பெற்றிருக்கும். ஒத்திகை அட்டவணைகள்,வாங்க வேண்டியபொருட்கள், பொருட்கள் கிடைக்கும் இடம் என எல்லாம் கொண்ட பிரதியே ஆற்றுகைப்பிரதி.தேர்ந்த இயக்குநர் ஆற்றுகைப்பிரதியை உருவாக்கி, உதவியாளர்களிடம் கொடுத்துவிட்டு ஓய்வுகொள்வதும் உண்டு. கடைசி கட்ட ஒத்திகையின் போது வந்து நின்று வேலை வாங்குவார்.முழுமையான ஆற்றுகைப் பிரதி கிடைத்தால் இயக்குநர் இல்லாமலேயேஅவரது உதவியாளர்கள் நாடகத்தை மேடையேற்றி விடுவார்கள்

ipo aatrukaiyai vaithu kondupirathiyai uruvakkalam thane sir 
(இப்போ ஆற்றுகையை வைத்துக்கொண்டு பிரதியை உருவாக்கலாம்தானே சார்)

உருவாக்கலாம்;சிலர் அப்படியும் உருவாக்குகிறார்கள். அப்படி உருவாக்குபவர்கள் பெரும்பாலும் நாடகாசிரியர்கள்அல்லர். அவர்கள் நெறியாள்கையை முதன்மையாகக் கருதுபவர்கள். நிகழ்வுகளை முதலில் யோசித்துக் கொண்டு அதனைப் படமாக வரைந்து கொண்டு ஒத்திகைக்குச் செல்கிறார்கள். ஒத்திகையின் போதுஉரையாடல்களை உருவாக்கிக் கொள்கிறார்கள். எனக்குத்தெரியத் தமிழ்நாட்டில் தனது கருஞ்சுழிநாடகம் மூலம் புகழ்பெற்ற வ. ஆறுமுகம் அப்படிப்பட்டவர். அவருடைய நாடகங்கள் பெரும்பாலும் நிகழ்வுகள், காட்சி ரூபங்கள், அரங்க அமைப்பு, ஒளியமைப்பு எனக் காட்சிமொழிக்கான பலவற்றையும் உருவாக்கிவிட்டு எழுத்துமொழிக் கூறுக்கு வரும் தன்மையுடையன. அப்படி உருவாக்கும் பிரதியை இன்னொருவர் மேடையேற்றம் செய்யும்போது படைப்பாக்க அனுபவத்தைத் தராமல் நகல் எடுத்ததாக அமைந்துவிடும் வாய்ப்புகளுண்டு. வேறொரு நாடகாசிரியனின் - தலைசிறந்த நாடகாசிரியர்களின்பிரதியை மேடையேற்றப் போதிய ஞானம் இல்லாதபோது தாங்களே நாடகப்பிரதியை உருவாக்குகிறார்கள் என்று கூடச் சொல்லலாம். வ. ஆறுமுகத்தைப் போலவே ஆற்றுகைப் பிரதிகளிலிருந்து நாடகப்பிரதியை உருவாக்கியவர்களின் வரிசையில் தான் வேலு சரவணன், முருகபூபதி போன்றவர்களையும் வைப்பேன்.எனக்கு இலங்கையின் நிகழ்வுகளோடு நேரடி அனுபவம் இல்லாததால் எடுத்துக்காட்டுகள் சொல்லமுடியவில்லை.


text, subtext enra erandukkumana difference?  ( டெக்ஸ்ட், சப்டெக்ஸ்ட் இரண்டுக்குமான டிபரென்ஸ்?

நாடகத்தைப் பொறுத்தவரையில் -சப் டெக்ஸ்ட்- என்பதும் இயக்குநர் உருவாக்குவதுதான். கவிதை, புனைகதைபோன்றவற்றில் எழுத்தின் உள்கருத்தை - உள் அடுக்குகளை வாசிக்கத் தெரிந்தவன் விமரிசகன் ஆகிவிடுகிறான்.
எழுதியவரின்கருத்திலிருந்து பெற்ற நிகழ்காலப்பொருத்தம், கூடுதல் விளக்கப் பகுதிக்கான அழுத்தம், ஒரு உரையாடலில் இடம் பெறும் பலதளப் பொருண்மை போன்றவற்றைக்கண்டுபிடித்து மேடையேற்றத்தில் கொண்டுவருவதை இந்தக் கலைச்சொல்லால் குறிக்கலாம். இதனைத் தான் நாடகக்காரர்கள் மறுவிளக்கம் உருவாக்கல்செய்தல் - Interpratation - என்று சொல்கிறார்கள்.

[இந்தக் குறிப்புகள் நாடகத்துக்கு மட்டும் உரியதல்ல; சினிமாவில் வேலை செய்பவர்களுக்கும் கூடப்பொருந்தக்கூடியதுதான்]


அரங்கியல் கலை என்னும் கூட்டுக்கக்கலை:

உடலின் இயக்கமே உயிரியின் அடையாளம். மனித இயக்கத்தைச் சொல்லத் தமிழில் உள்ள வார்த்தைகள் வினை, செயல், செயல்பாடு போன்றன. உடலின் இயக்கம் எதையாவது அடுத்த உயிரிக்குச் சொல்லும்போது –உணர்த்தும்போது அவ்வியக்கம் வினையாகிறது. அவ்வினையின் வேறுபாட்டிற்கேற்ப வினைச்சொற்களை ஒவ்வொரு மொழியும் உருவாக்கிக் கொள்கின்றன.
வினைகள், தன்வினை பிறவினை என நிலைப்பட்டவை. மனித உயிரியின் வினைகள் பொதுவாக அன்றாடத் தேவை கருதி, வாழ்தலின் இருப்பு கருதி நிகழ்பவை. வினைச் சொற்களின் முக்கிய நோக்கம் தகவல் தொடர்பு உருவாக்கமே.

மனித உயிரிகளின் எல்லா வினைகளும் கவனிக்கப்படுவதில்லை. ஆனால் சில வினைகள் மட்டும் கூடுதல் கவனம் பெறுகின்றன. அப்படியான கவனத்தை ஈர்ப்பன கலைசார் வினைகள் எனச் சொல்லப்படுகின்றன. ஒரு உயிரியின் ஒரு வினை இன்னொரு உயிரிக்குள் புகுந்து அவ்வினையின் தொடர்ச்சியாக மறு உற்பத்தியைச் செய்யத்தூண்ட வேண்டும். அம்மறு உற்பத்தி உடனடியாக இருக்கலாம்; இடைவெளிக்குப் பின் வெளிப்படலாம்; காலங்கடந்து புகுந்த உயிரியின் தன்னறிவின்றியே கூட நிகழலாம். அத்தகையதோரு உணர்வுத்தூண்டலைச் செய்கிற வினையே கலை எனக் கருதப்படுகிறது. கலைசார் வினைகள் உடனடியாக தகவல் தொடர்பைச் செய்வதில்லை. ஒன்றுபோலவும் செய்வதில்லை. வெவ்வேறு விதமாகத் தகவல் தொடர்பை நிகழ்த்துகின்றன. வெவ்வேறு காலத்திலும் நிகழ்த்துகின்றன. இந்த வேறுபட்ட நிலையே-பொதுநிலை வினை களிலிருந்து கலைசார் வினைகளை வேறுபட்டவையாக மாற்றுகின்றன.

நடத்தல் என்பது பொதுநிலை வினை. அதிலிருந்து உருவாகும் நடனம் கூடுதல் கவனத்துடன் கவனிக்கப்படும் கலையாகக் கருதப் படுகிறது. புள்ளிகளை இணைத்து உருவாகும் கோடு சாதாரணச் செயல்பாடு, அதே போல் கோடுகளை இணைத்துச் செய்யும் இன்னொரு வினை ஓவியக்கலையாக ஆகிறது. மௌனமும் ஒலியெழுப்புவது அனைவரும் செய்து கொண்டிருக்கும் சாதாரண வினைதான். ஆனால் குறிப்பிட்ட இடைவெளியில் மௌனமும் ஒலியும் எழுப்பப்படுவதன் மூலம் இசைக்கலை பிறக்கிறது. அதனோடு சாதாரணப்பேச்சு இணைந்து கொள்ளும்போது பாடல் கலை உருவாகிறது. சாதாரணப் பேச்சே தேடி எடுத்த சொற்களால் அடுக்கப்படும் போது தனியான கலையாக – பேச்சுக் கலையாக ஆகி விடுகிறது.
பேச்சைச் சொல்ல உடலைப் பயன்படுத்தாமல் குறியீடுகளைப் பயன்படுத்தும்போது எழுத்து உருவாகிறது. எழுத்தைப் பயன்படுத்தும் தன்மைகளிலிருந்து கவிதையும், கதையும், நாடகமுமான எழுத்துக்கலைகள் உருவாகியுள்ளன.
எழுத்துக் கலைகளுள் ஒன்றாக நாடகம் கருதப் பட்டாலும், அது அரங்கக்கலையாக வெளிப்படும்போது தனிக் கலையாக இல்லாமல் பல கலைகளின் கூட்டுக் கலையாக அல்லது சேர்மக்கலையாக வடிவம் கொள்கிறது என்பதே அதன் சிறப்புநிலை. அரங்கக்கலைக்குள் பின்வரும் விதமாகக் கலைச் செயல்பாடுகள் இணைகின்றன.

· உடலசைவும் பேச்சும் சார்ந்த உத்திகள் நடிப்புக்கலை
· பாடும் உத்திகளைப் பின்பற்றும் பாடற்கலை
· இசைக்கோலங்களை உள்வாங்கி நடனமிடும் நடனக்கலை
· இவற்றை நிகழ்த்துவதற்கான மேடைக் கட்டமைக்கும் அரங்கமைப்பு வடிவம் சார்ந்த அரங்கக்கலை.
· அரங்கில் தோன்றுவோருக்காக உடைகளை வடிவமைத்தல்,முகமூடிகளை, கூந்தல் கற்றைகளை, உருவாக்கும் ஆடை வடிவமைப்புக்கலை
· ஆடைகளின் மேல் அணியும் ஆபரணங்களையும் ஒப்பனைப் பூச்சுகளையும் உள்ளடக்கிய ஒப்பனைக்கலை
· இவற்றையெல்லாம் அணிந்த மனிதர்களையும் அவர்கள் உலாவும் வெளியையும் பார்வையாளர்களுக்கு காட்டுவதற்கேற்ற ஒளி அமைப்பு முறைகளையும், ஒளியமைப்புக் கருவிகளையும் கையாளும் ஒளியமைப்புக்கலை
· இவற்றோடு சேர்ந்ததாக எழுப்ப வேண்டிய ஒலியமைப்புக்கலை
· அதற்காக இசைக்கருவிகளை இசைக்கும் இசைக்கலை
· இசைக்கருவிகளால் உருவாக்கும் இசைக்கோலச் சித்திரங்கள்
· இசைக்கோலச் சித்திரங்களுக்கேற்ப மனித உடல்களை ஆட்டுவிக்கும் நடனக்கோர்வைக்கலை
· இவையெல்லாவற்றிற்கும் வாய்ப்பளிக்கும் விதமான நாடக எழுத்தாக்கக் கலை
எனப் பலவிதமான கலைகளின் கூட்டுக்கலவை தான் அரங்கியல் கலை. அரங்கியற் நிகழ்வித்தலில்மேற்சொன்ன கலைகளும் கலைகளின் உத்திகளும் இடம் பெறுகின்றன. அவை அனைத்தையும் இப்படித் தொகுத்துச் சொல்லலாம்;
1. நடிப்பு
2. இயக்கம்
3. காட்சி வடிவாக்கமும் அமைப்பும்
4. ஆடை வடிவாக்கமும் உருவாக்கமும்
5. மேடை ஒளியமைப்பு
6. ஒப்பனை




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்