தன்மைக்கூற்றின் பலவீனம்: நோயல் நடேசனின் கதையொன்றை முன்வைத்து ஒரு விசாரணை
ஐயரெல்லாம் பிடித்துக்
காசு கொடுக்காமல் துணியில் கட்டியிருந்த சாம்பலை இராமேஸ்வரம் கடலில் கலக்கிவிட்டு வெளியேறும் சிலோன்
தமிழனிடம் – தற்போது கனடாவில் அகதியாக வசிக்கும் ஒருவனிடம் இந்தியச் சாமியார் சொல்லும்
இந்தக்கூற்றுதான் இப்போது வந்துள்ள நடுவில் (இதழ்
32/ ஆடி2020) நோயல் நடேசன் எழுதியுள்ள அலைந்து திரியும் ஆவிகள் என்ற சிறுகதை விவாதிக்கும் மையப்பொருள்.
இலங்கைத்தீவை சிலோன் என்று
மட்டும் தெரிந்து வைத்திருக்கும் சாமியார், அங்கு இனவிடுதலைக்காகப் போராட்டங்களும் போர்களும்
நடந்தன என்ற விவரங்கள் அறியாதவர். அதில் இந்தியப் படைகளுக்கும் இலங்கை அரசப்படைகளுக்கும்
பெரும்பங்குண்டு; அவர்களே முன்னின்று கொலைகளைச் செய்தவர்கள் என்பது பற்றியெல்லாம் தெரிந்துகொள்ளாதவர்.
ஆனால் அங்கே ஆயிரக்கணக்கான மனிதர்கள் பிணங்களான பின்பு, பிதிர்க்கடன் செய்யப்படாததால்
ஆவிகளாக அலைந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிந்தவர். அந்த ஆவிகளில் நல்ல ஆவிகளும்
உண்டு; கெட்ட ஆவிகளும் உண்டு. ஆனால் இரண்டு வகை ஆவிகளுக்கும் மரணத்திற்குப் பின் செய்யப்பட
வேண்டிய ‘காரியங்கள்’ செய்யவேண்டும். செய்த பின்புதான் அங்கு அமைதி நிலவும்; சாதாரண
வாழ்வு மலரும் என்பதை மட்டும் அறிந்தவர்.
ஒருவிதத்தில் இவ்வுலக வாழ்க்கை,
கர்மம், மறுபிறப்பு பற்றிய இந்து ஞானத்தின் சாராம்சமாகவே இதைச் சொல்லலாம். இப்படிச்சொன்ன
இந்துச் சாமியாரின் ஆலோசனையைக் கேட்டுவிட்டு விவாதமெல்லாம் செய்யாமல் அப்படியே ஏற்றுக்
கொண்டுத் தன் குடும்பத்து மரணங்களுக்கும் தமிழ்ச் சமூகத்து மனிதர்களுக்கும் மரணத்துக்குப்
பிந்திய காரியங்களைச் செய்துவிட்டுத் திரும்பியவன் முன்னாள் இடதுசாரி சோசலிச மார்க்சியவாதி.
தனக்கு நம்பிக்கை இல்லையென்ற போதிலும் அவனுடைய அம்மாவின் நம்பிக்கையையும் கடைசிக்கால
விருப்பத்தையும் நிறைவேற்றும்பொருட்டுத் தனது தம்பி ஆவியாக அலைவதை நிறுத்தும்பொருட்டு
இராமேஸ்வரம் சென்று திரும்பியிருக்கிறான். அவனது இந்தப் பயணத்தை – புனிதப் பயணத்தைப்
பற்றியதாகவே நோயல் நடேசனின் கதை அமைந்துள்ளது.
கதையில் இடம்பெறும் பாத்திரங்கள்
இரண்டு தான். ஒன்று புனிதப்பயணம் மேற்கொண்ட முன்னாள் இடதுசாரி. இன்னொன்று கதைசொல்லியாக
இருக்கும் நோயல் நடேசன். கதைக்குள் முன்னாள் இடதுசாரியின் விடுதலை அரசியல் ஈடுபாடும்
பழைய வாழ்க்கையும் நம்பிக்கைகளும் மட்டுமல்லாமல்,
இப்போதைய புலம்பெயர் வாழ்வும் இருப்புமென எல்லாம் விரிவாகத் தரப்பட்டுள்ளன. ஆனால் கதைசொல்லியின்
எந்த விவரங்களும் கதைக்குள் இல்லை. ஆஸ்திரேலியாவில் வசிக்கும் தமிழ் எழுத்தாளர்; ஆண்டுதோறும்
இந்தியாவிற்கு/சென்னைக்கு வந்து செல்லும் விருப்பம் கொண்டவர் என்ற தகவல் மட்டுமே தரப்பட்டுள்ளது.
தன்னை எழுத்தாளராக அறிவித்துக்கொண்டு,
ஒரு எழுத்தாளனாக இருப்பவன்
தன்னைச் சுற்றி நடப்பதைக் கூர்ந்து கவனிக்கவும்
மற்றவர்கள் கதைகளைக் கேட்கவும் வேண்டும். ஒரு விதத்தில் பூக்களை வாங்கி
மாலையாக்கும் பூக்காரியின் தொழில் போன்றதுதான் கதையாக்கமும்.
அப்படியான ஒரு கதையை உங்களிடம் சொல்லப் போகிறேன்.
என்று ஆரம்பித்து அவர்
சொல்லும் கதைதான் அவரது நண்பரின் புனிதப்பயணக் கதை. கதை மொத்தமும் தன்மைக்கூற்றில்
முன்னிலைப்பாத்திரத்தை விமரிசிக்கும் சொல்முறை. அவரது சிறுகதைகள் பலவற்றையும் பயணக்கட்டுரைகளையும்
இணையப்பக்கங்களில் வாசித்துள்ளேன். காலச்சுவடு வெளியீடுகளான வாழும்
சுவடுகள்- அனுபவக் கதைகள் (2015) மலேசியன் ஏர்லைன்ஸ் ( ) கானல் தேசம்-நாவல் (2018) என்ற இரண்டையும்
அச்சிட்ட நூல்களாகவும் வாசித்துள்ளேன். பெரும்பாலான அவரது எழுத்துகளில் தன்மைக்கூற்றுத்தன்மையே
முதன்மையாக இருக்கின்றது
எழுத்தாளரே கதைசொல்லியாக வருவதன் மூலம்
கதையின் நிகழ்வுகளும் விவாதங்களும் உண்மையானவை; நம்பகத்தன்மை
கொண்டவை என நிறுவும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. அதன் மூலம் தனது கதைகளைப்
புனைவின் பக்கமிருந்து வரலாற்றின் பக்கமாக நகர்த்தும் வேலையை எழுத்தாளர்
செய்கிறார். இந்த நகர்வின் மூலம் ஒருவரது புனைகதைக்குத் தரும் இலக்கியவியல் அல்லது
அழகியல் மதிப்பு குறைவு என்பதை அந்த எழுத்தாளர்கள் பல
நேரங்களில் அறிந்தே செய்கிறார்கள். ஏனென்றால் அவர்களுக்குக் கதையின் நுட்பங்களைவிடவும்
அதனால் விளையும் தாக்கமே முதன்மையாக இருக்கிறது. தன்மைக்கூற்றுமுறை புனைகதையின்
தொடக்கக் காலக் கூற்று முறையாக இருந்து படிப்படியாக மாறிப்
படர்க்கைக்கூற்றுமுறைக்கு மாறியிருக்கிறது. அதே நேரத்தில் சிலவகை
இலக்கையக்கொள்கைகளுக்கு அல்லது இலக்கிய நோக்கத்திற்கு இப்போதும் தன்மைக்
கூற்றுமுறையின் தேவையை மறுப்பதற்கில்லை. அனுபவங்களை எழுதுவதை வலியுறுத்தும்
தலித்திய எழுத்தின் - பெண்ணிய எழுத்தின் வலிமையான கூற்றுமுறையாக
இப்போதும் தன்மைக் கூற்றைக் கருதும் - முன்வைக்கும் திறனாய்வாளர்கள் உண்டு. அதே தன்மையில் ஈழப் போராட்டங்களையும் நினைக்கும்
போக்கும் இருக்கிறது. போராட்டத்தையும் போர்க்காலத்தையும் உண்மை நிகழ்வுகளால் நிரல்படுத்துவதாக
முன்வைக்கும் சிறுகதைகளையும் நாவல்களையும் கடந்த பத்தாண்டுகளாக எழுதிக்கொண்டே இருக்கிறார்கள்.
ஆண்டு, தேதி, கிழமை உள்படக் காலக்குறிப்புகளையும், ஊர்ப்பெயர்களையும் அப்படியே தந்து
எழுதப்பெற்ற புனைகதைகளை வாசித்திருக்கிறேன். போராட்டத்தையும் போர்க்காலத்தையும் ஆதரிக்கும்
எழுத்தாளர்களின் நிலைபாட்டையே அதனை எதிர்நிலைப்பாட்டோடு விமரிசிக்கும் நோயல் நடேசனும்
கைக்கொள்வது சரியா? என்று கேள்வி எனக்குள் நீண்ட காலமாக இருந்து வருகிறது.
அவரது எழுத்துகளின் வழியாக
நீண்ட காலமாகப் புலம்பெயர் தேசத்தில் – ஆஸ்திரேலியாவில் வாழ்வதாக அறியமுடிகின்றது.
மொழியாலும் சமயத்தாலும் பிளவுபட்டு நிற்கும் சிங்களர், தமிழர் என இருபெரும் பிளவுகளைக்
கொண்ட இலங்கைத் தீவுக்குள் சிறுபான்மை இனமான தமிழர்கள், உரிமைகளைக் கோரும் அரசியலை முன்னெடுக்கலாமே தவிர,
தனிநாடு கேட்டுப் போராடுவதும், அதற்காக ஆயுதம் ஏந்திப் போராடுவதும் தவறான பாதை என ஒருவர்
விவாதிக்கலாம்; விமரிசனம் செய்யலாம். தமிழ் அடையாளத்துக்குள்ளும் யாழ்ப்பாணத் தமிழர்,
கிழக்குத் தமிழர் மலையகத் தமிழர் எனவும், தமிழ் இசுலாமியர் எனவும் பிளவுகள் கொண்ட உண்மையை உணராமல் ஆயுதம் தாங்கியவர்கள்
மனிதாபிமானவற்றவர்களாய், பாசிசத் தன்மையோடு போரிட்டதே ஈழப்போரின் பெரும் பின்னடைவுக்குக்காரணம்
என விமரிசனம் செய்யவும் உரிமையுண்டு. அப்படியான விமரிசனப்பார்வையை வெளிப்படுத்தும்
கட்டுரைகளை எழுதும் ஒருவர் தன்மைக்கூற்றில்தான் முன்வைத்து விவாதிக்க இயலும். ஆனால்
அந்த விமரிசனத்தைப் புனைவாக்கும்போது அதே தன்மைக்கூற்றில் எழுதும்போது விமரிசனத்தின்
மீது நம்பகத்தன்மை குறைந்துவிடும். ஏனென்றால் கதைசொல்லியின் தன்னிலை உண்மையானது என
நம்புவதற்கான தரவுகளைப் பிரதிக்குள் தரமுடியும். ஆனால் அவரால் உருவாக்கப்படும் எல்லாச்
சித்திரிப்புகளும் சித்திரிப்புகளில் இடம் பெறும் மனிதப் பாத்திரங்களும் உண்மையானவை என்பதை நம்பவைக்கமுடியாது.
புனைவின் நுட்பங்களும்
அதனால் புனைவுக்குக் கிடைக்கும் நம்பகத் தன்மையும் கட்டுரை முன்வைக்கும் விவாதங்களைப்
போன்றவை அல்ல. ஒருவிதத்தில் வாசகர்களின் கற்பனைக்கும் கருத்தியல் நிலைப்பாடுகளுக்கும்
இடமளிக்கும் தன்மை கொண்டது புனைவு. அதன் மீது ஏற்புக்கொண்டு நம்பவும், மறுப்புக்கொண்டு
நிராகரிக்கவும் புனைவு சுதந்திரம் தருகிறது. ஆனால் கட்டுரையும் கட்டுரைத் தன்மை கொண்ட
தன்மைக்கூற்றுச் சொல்முறையும் அப்படியான சுதந்திரத்தை வழங்குவதில்லை. இலங்கை/ஈழ நிலப்பரப்பிற்கு
வெளியே இருந்து வாசிக்கும் என்னைப் போன்ற வாசகர்கள் அவரது பிரதிகளின் வழியாக வெளிப்படும்
நிலைபாட்டைப் புரிந்துகொள்ளமுடியும். ஆனால்
அவரது சார்புநிலையோடு இணைந்து கொள்ளத்தூண்டாது.
நடுவில் வந்துள்ள இந்தக்கதையின்
தொடக்க விவரிப்புகளிலிருந்தே அதனைச் சொல்ல முடியும். ஒவ்வொரு முறையும் அதிகம் செலவு
செய்து விடுதியில் தங்குவதற்குப் பதிலாக, அதிகம் செலவு செய்யாமல் ஒரு அபார்ட்மெண்டை
வாடகைப்பிடித்துத் தங்கிக்கொள்ளத் தயாராகும் அவரது முடிவின் வழியாக அவரது பாத்திர உருவாக்கத்தின்
மீதான நம்பகத்தன்மை உருவாகிறது. ஆனால் அவரது சொற்களின் வழியாக வரப்போகும் அவரது நண்பரைப்
பற்றிய சொற்களும் சொற்றொடர்களும் தரும் எள்ளலும் அங்கதமுமான முறைமை அவரது பாத்திர உருவாக்கத்தை
உருவாக்காமல் அவரது அரசியல் நிலைபாட்டை விமரிசனப்பார்வையாகவே வெளிப்படுகிறது. ஆனால்
அந்த நண்பர் இலங்கைக்குச் சென்று தம்பியின் எலும்புகளைத் தேடித் தவித்த தவிப்பும் அதனை விவரிக்கும் பகுதிகளும்
போர்க்காலத்தின் துயரக்காட்சிகளாக விரிகின்றன. அவையெல்லாம் கதைசொல்லியின் கூற்றாக இல்லாமல்,
அவரால் உருவாக்கப்பெற்ற புனைவுப்பாத்திரத்தின் – நண்பரின் கூற்றாக வருகின்றன.
அதிகாலையாகிவிட்டது.
தேநீருடன் வந்த சித்தப்பாவிடம் இந்தக் கனவைச் சொல்லவும், “ அவன் இயக்கத்தில் இருந்தான். இயக்கத்தின்
கட்டளையை செய்திருப்பான். நீ அவன் இறந்த பின்பு நல்லவனா கெட்டவனா என்று பார்ப்பது
தவறு. அவன் உனது தம்பி உனது அம்மாவின் விருப்பத்தை நிறைவேற்றுகிறாய். “ என்றார்.
அடுத்து கக்கூஸ் அருகே கிண்டினேன்.
அங்கும் எதுவும் கிடைக்கவில்லை. என்ன
செய்வதெனத் தெரியவில்லை. எதற்கும் ஒருக்கா பார்ப்போம் எனக் கக்கூசின் பின்
குழியில் உள்ள சிமெந்து மூடியை உடைத்தேன். அங்கு ஒரு
சிதைந்த எலும்புக்கூடு இருந்தது. பாவிக்காத மணல்ப்
பிரதேசத்தில் உள்ள கக்கூசானதால் குழி சுத்தமாக இருந்தது. வெறும் கையால் எலும்புகளை
விறகு மாதிரி பொறுக்கி சாக்கில் போட்டு வெளியே எடுத்து
பார்த்தபோது எந்த அடையாளமுமில்லை. எனக்குச் சந்தேகமாக இருந்தது.
சித்தப்பாவின் முகத்தைப்பார்ததேன்.
சித்தப்பா சொன்னார் : “ நிச்சயமாக
ஜீவனாகத்தான் இருக்க வேண்டும். எனக்கு சந்தேகமே இல்லை. ஆமிக்காரன் கொன்று போட்டு
அவசரத்தில் புதைக்காது கக்கூசுக்குழியில்
போட்டிருக்கிறான். போர்க்காலத்தில் இரண்டு பகுதியும் கிடங்குகள் கிண்டி
மினக்கிட விரும்பாத நேரத்தில் இது நடக்கும். வன்னியில் பல
கக்கூசுகள் இதற்குப் பயன் பட்டிருக்கு. “ என்றார்.
******
மீண்டும் முல்லைத்தீவுக்குச்
சென்று ஆக்களுக்கோ ஆமிக்கோ தெரியக்கூடாது என்பதால், அந்த எலும்புகளை தென்னமட்டை , பனை ஓலை ,
மற்றும் கிடைத்த விறகுகள் போட்டு இரவில் எரித்தேன். அன்றைக்குப்
பார்த்து பெரிய மழை. நீ சொன்னா நம்பமாட்டாய். காம்
ஃபயர் எரித்துக் குளிர் காய்வதுபோல் நெருப்பை பக்கத்தில் இருந்து எரித்தேன்.
அதன் சாம்பலை எடுத்துக்கொண்டு வரும்போது வாகனம் வவுனியாவில்
பழுதாகிவிட்டது. மேக்கானிக்கை கூப்பிட்டு அதைத் திருத்திக் கொண்டிருக்கும்போது, எனக்கு நெஞ்சில் நோ. உடனே வவனியா
வைத்தியசாலை சென்று அங்கு டொக்டரிடம் செக் பண்ணிவிட்டே கொழும்புக்கு வந்தேன். ‘
‘உந்த எலும்பில் ஏதோ இருக்கிறது ? உனது தம்பியினது
தானா என்பது ஒரு கேள்வி? அவன் எப்படியிருந்தான்?
அவனில் ஏதாவது குறையிருக்கலாமா?’
‘இதெல்லாம் நான் யோசிக்காமலில்லை. நான் அதை
நம்பிறன். அவன் எனது தம்பியானாலும் ஏதோ கெடுதியான
விடயங்களில் ஈடுபட்டிருக்கலாம் . எனது பக்கத்தில் குறையில்லையா? வீட்டை விட்டுப் படிக்காது வெளியேறினேன்.
இக்கூற்றுகளும் உரையாடல்களும்
வாசிப்பவர்களை நிகழ்வின் மீதும் இடம்பெறும் பாத்திரங்களின் மீது ஒன்றிப்பை (Empathy)
உண்டாக்கும் விதமாக எழுதப்பெற்றுள்ளது. இந்த ஒன்றிணைப்பு அப்பாத்திரங்களின் மீது பரிவை
-ஈர்ப்பை (Sympathy) உண்டாக்கி நம்பச்செய்துவிடும். புனைவின் முதன்மையான அழகியல் அதுவாகவே
இருக்கும்.
இவ்விதமான ஒன்றிப்பை ஏற்படுத்தாமல்
விலக்கிவைக்கும் தன்மை கொண்ட எழுத்து முறையால், நோயல் நடேசனின் எழுத்துகளும் வரலாற்றிலிருந்து
விலகி விடும் வாய்ப்பைப் பெற்றுவிடுகின்றன. தொடர்ச்சியாக ஈழப் போராட்ட நிகழ்வுகளின் மீது தனது
கருத்தையும் அணுகுமுறைகளையும் எதிர்நிலைப் பாட்டையும் வைக்கும்விதமாக எழுதும் அவரது
சொல்முறை காரணமாகவே அவரது பிரதிகள் கவனிக்கப்படும் பிரதிகள் என்ற நிலையிலிருந்து விலகிவிடுகின்றன.
கடந்த காலத்தின் மீதான விமரிசனத்திற்கு ஏற்ற புனைவுச் சொல்முறை எப்போதும் படர்க்கைக்கூற்று
நிலையே என்பதைத் தீவிரமான இலக்கியப்பனுவல்கள் உறுதி செய்துள்ளன. தன்மைக் கூற்றைத் தவிர்த்துப்
புதியபுதிய வடிவத்தோடும் சொல் முறையோடும் எழுதப்பெற்றிருந்தால் நோயல் நடேசனின் புனைவுகளும் ஈழப் போர்க்காலம் பற்றிய
புனைவுகள் வரிசையில் இடம்பெற்றிருக்கும். இனி
எழுதும் புனைவுகளில் அதனை முயன்று பார்க்கலாம்.
கருத்துகள்