அக உலகத்துப் பெண் பிரதிமைகள் : பிரமிளா பிரதீபனின் இரண்டு கதைகளை முன்வைத்து


இலங்கையின் மலையகப் பின்னணியில் தனது முதல் நாவல் – கட்டுபொல்– மூலம் பரவலான அறிமுகம் பெற்ற பிரமிளா பிரதீபன் கவனமான இடைவெளியுடன் சிறுகதைகளை எழுதிவருகிறார். அவர் எழுதிய கதைகளைப் பெரும்பாலும் வாசித்திருக்கிறேன். ஒரு கதைக்கும் இன்னொரு கதைக்கும் இடையே கால இடைவெளியை உண்டாக்கிக் கொள்வதோடு பேசுபொருள், பேசும் முறை, எழுப்பும் உணர்வுகள் என எல்லா நிலையிலும் புதியனவற்றுக்குள் நுழைகிறார். தனது வாசகர்களுக்கான வாசிப்புத் திளைப்பை உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறார். இப்படியான கதைகளை மட்டுமே எழுதுபவர் என்ற அடையாளத்தை உருவாக்காமல் வேறுபட்ட கதைகளைத் தரக்கூடியவர் என்பதைக் காட்டுகின்றன அவரது சிறுகதைகள். இந்தக் கூற்றுகளை இப்போது அடுத்தடுத்து வந்துள்ள இரண்டு கதைகளும் உறுதி செய்கின்றன. இரண்டு கதைகளில் முதல் கதை, நடு இணைய இதழில் (இதழ் 21, ஆனி-2020) ‘விரும்பித்தொலையுமொரு காடு’ என்ற தலைப்பில் பதிவேற்றம் பெற்றுள்ளது. இரண்டாவது கதை, யாவரும்.காம் இணைய இதழில் ( 16-06-2020) ஜில் பிராட்லி என்ற தலைப்பில் பதிவேற்றம் கண்டுள்ளது. 

இரண்டு கதைகளுமே பெண்மையக் கதைகளே என்றாலும் பெண்களை நிறுத்திக்காட்டும் அல்லது உலவவிடும் குடும்பம் அல்லது பணியிட வெளிகளில் நிறுத்தாமல் அவர்களின் அகவெளி நினைவுகளை எழுதிக்காட்டும் கதைகளாகத் தந்துள்ளதின் மூலம் கதைகளை வாசிக்கத் தூண்டுகிறார். நடுவில் வந்துள்ள விரும்பித்தொலையுமொரு காடு என்ற கதைத் தலைப்பே, ‘ விரும்பி ஏற்குமொரு குடும்பத்தலைவி’ என்ற பாத்திரத்தை ஒதுக்கிவிட்டு, அதன் கட்டுகளையும், நெருக்கடிகளையும், சுமைகளையும் தாங்க வேண்டிய நிர்ப்பந்தம் தராத காட்டுக்குள் அலைய நினைக்கும் மனதின் நினைவுகளை முன்வைப்பதாக அமைந்துள்ளது. அந்தக் கதை, 

யாருக்கேனும் இதுவொரு சிறு சம்பவமாகவோ அல்லது அடுத்து வரப்போகும் நிகழ்வின் ஒரு பகுதியாகவோ இருந்து விட்டுப் போகுமெனில் அதற்காக என்னால் செய்யத்தக்கதான ஆகக்கூடிய செயல் மௌனமாயிருப்பது மாத்திரமேதான். முடிந்தால் நேரமொதுக்கி என்னிடம் கேளுங்கள் தயக்கமின்றிச் சொல்கிறேன். இதுவொரு வரலாற்றுத் திருப்பம் என்று… ஒட்டுமொத்த கற்பனைகளதும் நம்பமுடியா சாத்தியபாடென்று… அன்றேல் வேறொரு விதத்தில் கூறமுனையின், ஒன்றை இழந்து ஒன்றைப் பெறும் அமையச்செலவென்று… ஆம். அப்படிச் சொல்வதில் நிச்சயமாய் தவறேதும் இல்லையென்றுதான் நினைக்கின்றேன். மிகச்சிறந்த ஒன்றை பெற்றுக் கொள்வதற்காய் சிறந்த ஒன்றை இழக்க நேரிடின் அது அமையச்செலவு தானே! 

எனத்தொடங்கி, 

வேறென்ன செய்துவிட முடியும்? யாருக்கேனும் இதுவொரு சிறு சம்பவமாகவோ அல்லது அடுத்து வரப்போகும் நிகழ்வின் ஒரு பகுதியாகவோ இருந்துவிட்டு போகுமெனில் அதற்காக என்னால் செய்யத்தக்கதான ஆகக்கூடிய செயல் மௌனமாயிருப்பது மாத்திரம் தானே! 

என முடிகிறது. கதைத்தொடக்கத்தையும் முடிவையும் கேள்விகளாகவும் விசாரணைகளாகவும் வைத்துக்கொண்டிருக்கும் இந்தக் கதை, ஒரு பெண் தன்னைச் சுற்றிச் நடக்கும் ஒவ்வொன்றையும் அசைபோட்டுக் கொண்டிருப்பதையும் அதற்கிணையாக அவளது மனத்திற்குள் தொலைய விரும்பும் காட்டின் பரப்பைப் பற்றிய கனவுகளையும் அடுத்தடுத்து வைத்தபடியே நகர்கிறது. நனவும் கனவுமான எண்ண ஓட்டங்களுக்கேற்ப மொழியை – சொல்லுருக்களைக் கோர்த்து அமைக்கும் முறையின் வழியாக முழுமையும் நினைவோட்டத்தை வாசிக்கும் உணர்வை உருவாக்கியுள்ளது. 

வழமை போலான என் மௌனத்தையும் சொற்களற்ற சம்மதத்தையும் சாதகமாக்கிக் கொண்டு, அடுத்தக்கட்ட வேலைகளை அம்மா ஆரம்பித்தாள். தன் மிகப்பெரிய கடமை முடிந்ததாய் என் திருமணத்தையும் நடத்தி முடித்திருந்தாள். 

என்று நடப்பை – குடும்பத்தினர் நிறைவேற்றவேண்டிய பொறுப்புகளைப் பற்றிய குறிப்புகளைத் தரும் அதே வேளையில், அப்பொறுப்புகளின் மீதான விமரிசனப்பார்வையாகவும் அவளது எண்ணங்கள் , 

‘உன் சிறகுகளை துண்டிக்கும் சடங்குகளேதும் உன் வம்சத்தில் இல்லையா என்ன..? ஓ…! நீ பெண்தானென்று எங்ஙனம் நானறிவேன்? திக்குத்தெரியாமல் பறந்து திரியும் நீ பெண்ணாய் இருந்திட வாய்ப்பில்லைதான். போ போ எங்காவது போய்த்தொலை’ 

எனத் தூண்டுகின்றன.மனிதர்களின் அதிலும் குறிப்பாகப் பெண்களின் விருப்பத்தைத் தாண்டி அமையும் குடும்ப வாழ்க்கையும் உறவுகளும் உருவாக்கும் தளைகளும் சுமைகளும் உதற முடியாதவையாகத் தொடரும் பண்பாடு கீழ்த்திசைப் பண்பாடு. அதற்குள் குடும்ப வெளியைத் தள்ளிவைத்துவிட்டுக் காட்டுக்குள் அலையும் துறவு நிலையோ, அல்லது விடுதலைக் கனவோ நடப்பில் சாத்தியங்கள் இல்லாதவை. 

இந்த நினைவுகளெல்லாம் வெறும் பைத்தியக்காரத்தனங்களாய் இருந்து விடுவதற்கான வாய்ப்புகளும் இருந்ததென்பதை மறுப்பதற்கில்லை. ஆனாலும் கனவிற்கும் நனவிற்கும் இடைபட்டதான ஒரு திண்மத்தை ஸ்பரிசித்தலோ அல்லது அவதானித்துணர்தலோ சாத்தியமில்லையாக இருக்கும் போது அவ்வுலகம் வெறுமனே கற்பனையினாலானது என்று விலகுதலும் சுலபமாயிருக்கவில்லை. ஒரு கட்டத்தில் அதன்; உறுதி நம்பும்படியாகவும் உண்மைத்தன்மை நிறைந்ததாகவுமே இருக்கின்றது. மனித குரலோசைகள் பரிகாசங்களும், ஏவல்களும் நிரம்பியதாய் அவ்வப்போது ஒலித்து மறைகின்றன. ஏலவே காட்டுக்குள் தொலைந்து போனவர்களது பிரகாசமான பிம்பங்கள் தூரத்தில் காட்சிகளாக தெரிகின்றன. அவர்கள் மிக பூரிப்புடன் உலா வருவதை போலான வெளிப்படுத்தல்களையும் காணகிடைக்கின்றன. 

கதையின் முழுப்போக்குமே சமூகம் உருவாக்கி வைத்திருக்கும் கட்டுப்பாடுகளையும் உறவுகளையும் துறந்து விடுபடுதலை நினைத்து அலையும் மனதின் ஏக்கங்களையே பேசுகின்றது. அதற்கான சொல்முறையாக மனவோட்டச் சொல்முறையைத் தேர்வுசெய்து அதன் சாத்தியங்களை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளது. அதனாலே பிரமீளா பிரதீபனின் இந்தக் கதை கட்டாயம் வாசிக்கப்பட வேண்டிய கதையாக மாறுகிறது. சமகாலப் பெண் புனைவுகளில் இவ்வகைக் கதை அரிதான அரிதான ஒன்று 

0000000000000000000000000000000 

இக்கதைக்கு மாறாக நேர்நிலைத் தன்மைகொண்ட உரையாடலைச் சொல்முறையாகக் கொண்ட கதை ஜில் பிராட்லி. யாவரும்.காம் இணைய இதழில் வந்துள்ள இந்தக் கதை சிங்களப்பெண் x தமிழ் ஆண் என்ற எதிர்நிலைக்குள் நுழைவதன் மூலம் இலங்கையின் இனமுரண்பாட்டை விவாதப்பொருளாக்கிக் கொள்கிறது. அதிகாரத்தைத் தக்கவைக்க நினைக்கும் சிங்கள அரசதிகாரமும், புதிய அதிகாரத்தை உருவாக்க நினைக்கும் தமிழ் விடுதலைப்போராட்ட அணிகளுக்கும் இடையே இவ்விடைவெளியைக் குறைக்கும் வகையறியாது தவிக்கும் சாதாரண மனிதர்களும் இலங்கையின் மக்கள் தொகைக்குள் இருக்கிறார்கள் எனச் சொல்லும் – கருத்தோட்டம் கொண்ட கட்டுரைகளையும் கதைகளையும் வாசித்திருக்கிறேன். ஆனால், இந்தக்கதை அவை போலுமல்லாமல் நுட்பமான கலைசார்ந்த மனிதர்களின் நட்பையும் ஈர்ப்பையும் செய்வதறியாது தவிக்கும் தவிப்பையும் புனைவாக்கியிருக்கிறது. 

நவீனத் தொழில்நுட்பம் சாத்தியமாக்கியிருக்கும் சமூக ஊடகமான முகநூல் வழியாக நண்பர்களாகி, தங்களின் அந்தரங்க எண்ணங்களையும் ரகசியங்களையும் பகிர்ந்துகொள்ளும் ஜில் பிராட்லியும் அவளது புதிய நண்பன் சிவநேசனும் மட்டுமே பாத்திரங்கள். அவர்களும்கூட ஆறாம் திணையான அரூபவெளிப்பாத்திரங்களே. இணையவெளியில் வாழும் இவ்விரு பாத்திரங்களும் நடத்தும் உரையாடல்கள் வெளிப்படுத்தும் உணர்வுகளும் விவாதங்களும் தனிமனிதர்களின் விருப்பங்களைக் கவனத்திலேயே எடுத்துக் கொள்ளாத குரூரமான இனவாத மனநிலையைக் கடுமையான விமரிசனப் பொருளாக்கியிருக்கின்றன. சர்ரியலிச ஓவியங்களையும் ஓவியர்களையும் ஆராதிக்கும் – ஆதர்சமாகக் கொண்டிருக்கும் – அனோமா முணவீர என்ற சொந்தப்பெயர்கொண்ட ஜில் பிராட்லி சிவநேசனோடு அந்தரங்கமாகவும் அரசியல் ரீதியாகவும் கலை இலக்கியம் தொடர்பாகவும் நடத்தும் உரையாடல்கள் கணதியானவை. இக்கணதியான உரையாடல்கள் ஒருவிதத்தில் அவளது தற்கொலை முடிவைத் தள்ளிப்போட நினைத்து மேற்கொள்ளும் உரையாடல்களாகவே நகர்கின்றன. 

எதையும் விவாதிக்கும் வாய்ப்புகளை வழங்காத சூழலில் கலைஞன் – கலை- காதல் போன்ற சொற்கள் உருவாக்கும் அபத்தநிலைகளை முன்வைக்கும் ஜில் பிராட்லியின் சொற்களும், அவள் எடுக்கப்போகும் முடிவும் வாழ்க்கையின் குரூரக் கணங்கள். ஜில் பிராட்லி தன்னைத் தனது முன்னாள் காதலன் விபாகரனின் பிரதிபிம்பமாக நினைக்கிறாள் என்பதை உணர்ந்துகொண்ட சிவனேசன், 

விபாகரன் வந்தால் ஏன் அவனோடு வாழ முடியாது?’ என்று கேட்டான். 

‘மிக நீண்ட நாட்களாக என் ஓவியங்களுடனும் விபாகரனின் மாய பிம்பத்துடனும் வாழ்ந்து பழகி விட்டேன். அடுத்து வரபோகிறதென தோன்றும் ஒரு திடீர் மாற்றத்தை… அல்லது ஒரு நிஜத்தை என்னால் உடனடியாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை சிவநேசன். அது உனக்கு புரியாது விடு’ என்றாள். 

என்று முடிக்கிறாள். அப்படி முடித்த ஜில் பிராட்லி என்ன முடிவெடுப்பாள் என்ற பதற்றத்தோடு கதை நிறைவடைகிறது. கதையின் முடிவுப்பகுதியை இப்படி எழுதுகிறார் பிரமிளா. 

‘யாருமில்லாத ஓரிடத்தில் ஒளிந்து கொள்ளுதல் என்பதும் தன்னை தனக்கே தெரியாமல் ஒருவன் சுட்டுக் கொள்ளுதல் என்பதுவும் ஆச்சரியம் தானே தவிர அவ்வாறானதொரு அனுபவத்தை பெற்றிட என்னிடமும் துப்பாக்கி இல்லையே’ என்றாள். மேலும் ‘துப்பாக்கியால் மட்டும்தான் மரணத்தை தர முடியுமா என்ன’ எனச்சொல்லி சத்தமாய் சிரித்தாள். 

சிவநேசனுக்கு மனது படபடத்தது. இதயம் பலமடங்கு வேகமாய் துடிப்பது போலிருந்தது. பதறியெழும்பி தொலைபேசியை தேடியெடுத்தான். அவளது இலக்கத்தை வேகமாய் அழுத்தி தொடர்பு கொள்ள முயற்சித்தான். அவனது கைகள் நடுக்கம் கொள்ளத் தொடங்கியிருந்தன. 

இந்தக் கதைக்கு இப்படியொரு முடிவுதான் சரியாக இருக்கும் என்ற தேர்வே பிரமிளா பிரதீபனின் எழுத்தைக் கவனமான எழுத்தாகக் கணிக்கச் சொல்கிறது. இந்த முடிவை நோக்கி நகர்த்தும் உரையாடலில் அதிர்ச்சியான கேள்விகளையெல்லாம் கேட்டுச் சிவநேசனைத் திகைக்கச்செய்யும் ஜில் பிராட்லி பாத்திரம் இலங்கைச் சமூகத்தில் வாழும் சமகாலப்பொருத்தமில்லாத பெண்ணாக அவளை முன்வைக்கிறது. அது ஒருவித த்தில் நவீனத்துவ -சிதறுண்ட ஆளுமையின் பிரதிபிம்பம் என்றுகூடச் சொல்லலாம். அவர்களிடையே நடக்கும் இந்த உரையாடலை மட்டும் வாசித்துப் பார்க்கலாம்: 

தான் ஒரு ஓவியராக உருமாறாமல் போயிருந்தால் மனநலவிடுதியில் தீவிர நோயாளியாக சேர்க்கப்பபட்டிருப்பேன் என்று பிரைடா காலோ தன்னுடைய நாட்குறிப்பில் கூறியிருக்கிறாளாம். சொல்லப்போனால் நானும் அவளையொத்தவள்தான் என்று ஜில் ப்ராட்லி பெருமை வழிய பலதடவைகள் அந்த ஓவியருடன் தன்னை ஒப்பிட்டுக் கொள்வாள். 

‘என்னுடைய படங்களை நீ இரசித்ததே இல்லையா?’ 

அவன் சிறிது தயங்கி பின் மெதுவாக கூறினான். ‘உன் கண்களையும் உதடுகளையும் இரசித்திருக்கிறேன்’ 

அப்படி அவன் கூறும்போது அவளை பார்க்கத் துணிவற்று தலையை திருப்பிக் கொண்டான். 

அவள் இப்போது, தான் கனவிலும் நினைக்காத ஒரு அடியை எடுத்து வைப்பதில் தனக்கு திறமை உள்ளதென நம்பியவளாய் அதீத பீடிகையற்று சடாரென்று கேட்டாள். 

‘என்னை முழு நிர்வாணமாக பார்க்க விரும்புகிறாயா?’ 

நாட்டில் நிலவும் அரசியல் சூழலில் – அறிவும் சிந்தனையும் வேலைசெய்ய வாய்ப்பளிக்காத இனமோதலை வளர்க்கும் உறவினர்கள் நிரம்பிய சூழலில் சிதைவுண்ட மனுசியை – குறிப்பாகக் கலையின் சாத்தியங்களை நம்பிய மனுசியின் தோல்வியை எழுதிக்காட்டிய வகையில் பிரமிளாவின் ஜில் ப்ராட்லி மிகமிக முக்கியமான கதை என்று சொல்லத் தோன்றுகிறது. இவ்விரு கதைகளுமே இணையவெளியில் இருக்கின்றன. வாசித்துப்பார்க்கலாம். 
============================================

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எழுத்தாளர்களின் உளவியலும் தன்னிலையும் : இமையம் - தி.ஜானகிராமன்- ஜெயகாந்தன்

பிக்பாஸ் -8. ஐம்பது நாட்களுக்குப் பின் ஒரு குறிப்பு

புதிய உரையாசிரியர்கள்