அரங்கியல் அறிவோம் :1

அரங்குகள்
மேடைத்தளங்கள்
நடிப்பு
பாத்திரம்

அரங்குகள்
நிகழ்த்துக்கலைகள் (நாடகம்,நடனம்) காட்சிக்கலைகள்(ஓவியம், சிற்பம்,சுவரொட்டிகள்)சலனக்கலைகள் ( திரைப்படம்) போன்றன நிகழும் இடத்தைக்குறிக்கும் சொல்லாக இச்சொல் வழக்கில் இருக்கிறது. அரங்கேற்றுக்காதை என இளங்கோ சிலப்பதிகாரத்தில் ஒரு காதைக்கு பெயர்வைத்துள்ளதின் மொத்தக் காரணங்களையும் பார்க்கும்போதுஆங்கிலத்தில் உள்ள தியேட்டர்(Theatre) என்ற சொல்லுக்குப்பொருத்தமான சொல்லாக இதனையே சொல்லத் தோன்றுகிறது. 

அரைவட்ட அரங்கு



செவ்வக அரங்கு

திறந்த வெளி அரங்கு

உருண்டை அரங்கு

அண்மை அரங்கு

படச்சட்டக அரங்கு

மேடைத்தள உருவாக்கம், வகைகள், கட்டமைப்பு, நிகழ்விப்பு, பிரதி, இசைக்கோர்வை, பயிற்சி, நுட்பம், தேர்ச்சி, அங்கீகாரம்என 
அரங்கில் நடக்கும் அனைத்தும் அரங்கேற்றுக் காதையில் பேசப்படுகிறது. எனவே அரங்கு என்ற சொல்லை அடிப்படைச்சொல்லாகக் கொண்டு அரங்கியல், அரங்கக் கலை, அரங்கவெளி, அரங்க நுட்பம் எனக் கலைச் சொற்களை உருவாக்கிப்பேசுவதே சரியாக இருக்கும் எனச் சொல்லத் தோன்றுகிறது
============================================

மேடைத் தளங்கள்: 


நிகழ்வுகள் நடக்கும் மேடையை பகுதிகளை ஒன்பது பகுதிகளாகப் பிரித்துப் பேசும் முறை ப்ரொசீனிய அரங்கு (PROCENIUM THEATRE) என அறியப்பட்ட படச்சட்டக மேடை யோடு நேரடித் தொடர்புடையது. என்றாலும் இவ்வாறு பகுத்துப் புரிந்து கொள்ளுதல் எல்லாவகை அரங்குகளுக்கும் பயன்படக்கூடிய ஒன்றுதான். நடிகர்கள், பார்வை யாளர்களைப் பார்த்து நிற்பதை மையமாகக் கொண்டு இப்பகுப்பு முறை அமைகிறது. பார்வையாளர்களையும் நடிப்பிடத்தையும் பிரிக்கும் கற்பனைக் கோட்டுக்கு இணையாகச் சம தூரத்தில் வரையப்படும் கோடுகளை இரண்டு குறுக்குக் கோடுகளால் பிரித்துக் கொள்வதன் மூலம் இந்த ஒன்பது பகுதிகளை உருவாக்கிக் கொள்ளலாம். ஒன்பது கட்டங்களில் எந்தத் திசையிலிருந்து வந்தாலும் நடுவில் இருக்கும் கட்டம் மையமேடை எனவும் நடிகரின் வலது கைப் பக்கம் இருக்கும் கட்டம் மையவலது எனவும் இடது கைப் பக்கம் இருக்கும் கட்டம் மைய இடது எனவும் பெயரிடப்படும். நடிகரின் முன் பக்கம் நடிவில் இருக்கும் கட்டங்கள் முன் மையம், முன் வலது, முன் இடது எனப் பிரிக்கப்படுகிறது. இதைப்போலவே அவருக்குப் பின் இருக்கும் மூன்று கட்டங்களும் பின் மையம், பின் வலது, பின் இடது எனப் பகுக்கப்படுகிறது. 

வலது மற்றும் இடது ஓரங்களில் இருக்கும் ஒவ்வொரு கட்டத்துக்கும் வருவதற்கான பாதைகள் தடுப்புகளுக்கு இடையே இருக்கும். ஆறு கட்டங்களுக்கும் ஆறு பாதைகள் ஏற்படுத்துவது பொருத்தமானது. மேடைத்தளத்தை ஒன்பது கற்பனையான கட்டங்களாகப் பிரித்துக் கொள்வதன் மூலம் நடிகர்கள் அடையும் பலனை விடப் பின்னரங்கப் பணியாளர்களான ஒளியமைப்பாளர்கள், அரங்கப் பொருள் வடிவ அமைப்பாளர்கள் அடையும் பலன்கள் அதிகம். அத்தோடு எல்லாவற்றையும் ஒருங்கிணைக்கும் இயக்குநருக்கு இந்தக் கற்பனைக் கட்டங்கள் அதிகம் பயன் படக்கூடியன. 


படச்சட்டக மேடையின் வலது மற்றும் இடது பக்கப் பாதைகளில் கற்பனைக்கோடுகள் பல உள்ளன. ஒரு நடிகரின் மேடை நுழைவு என்பது ஒரு மந்திரக் கோட்டைத் ( ) தாண்டுவதே ஆகும். பார்வையாளர்களின் கண்ணில் படும் இடம் எது என்பதைக் கணக்கிட்டு ஒவ்வொரு நடிகரும் அந்த மந்திரக் கோட்டை உருவாக்கிக் கொள்வார்கள். மேடையின் பின்னால் அரைவட்ட வடிவில் இருக்கும் திரைக்கும் படச்சட்டகக் கற்பனைக்கோட்டிற்கு முன்னே வளைந்து ஓடும் அரைவட்டக் கோட்டுக்கும் இடையே உருவாக்கப்படும் புனைவு உலகத்தை உண்மையாக்கிக் காட்ட அரங்கக் கலைஞர்கள் ஒவ்வொருவரும் இந்த மேடைத்தளங்கள் பற்றிய அடிப்படை அறிவைப் பெற்றுக் கொள்ள வேண்டும்

நடிப்பு : 

எழுதப்பட்ட பிரதிக்குரிய அர்த்தத்தைத் தனது உடல், குரல், மனம் ஆகியவற்றின் ஒருங் கிணைப்பால் உண்டாக்கும் வினை நடிப்பு(Acting) என்பது.இயல்பானதிலிருந்து உண்டாக்கப் படுவது கலையின் பொதுக்கூறு என்ற அடிப்படையில் நடிப்பும் கலையாகக் கருதப்படுகிறது. இக்கலையின் முதல் கட்டத் திறன் போலச் செய்தல் தான். நடிப்புக் கலையில் ஈடுபடும் நபர் நடிகர் என அழைக்கப்படுகிறார்.
இந்நபர் எதையும் கூர்ந்து நோக்கும் தன்மையுடனும், பார்த்ததைத் திருப்பிச் செய்யும் திறனும் கொண்டவராக இருக்க வேண்டும். முதலில் அவர் கட்டுக்குள் கொண்டு வர வேண்டியன அவரது சொந்த நடையையும் செய்கைகளையும் தான். நடிப்பு என்ற தொழில் பெயரின் அடிச்சொல் நட என்னும் வினையடி. நடத்தல் என்னும் வினையிலிருந்தே எல்லாம் செயல்பாடுகளும் தொடங்கு கின்றன. அவ்வினையடியிலிருதே நடனம், நடிகர், நடிகன், நடிகை என்ற பெயர்ச் சொற்கள் உருவாகின்றன. எனவே நடிப்பு என்னும் வினைக்கு முதலில் செய்ய வேண்டிய பயிற்சி நடப்பது.இயல்பான நடத்தலிருந்து கட்டுப்படுத்தப்பட்ட நடத்தலை உருவாக்கத் தேவையான பயிற்சிகளே நடிப்புக் கலையின் பயிற்சிகளாகும். நடப்பது என்பது காலின் வினையாக -அசைவாகக் கருதப்பட்டாலும், நடப்பவரின் முழு உடலும் அசைகிறது என்பது அறியப்பட வேண்டிய ஒன்று.




நடப்பதைப் பல விதங்களில் நடிகர் கட்டுப் படுத்த வேண்டும்.மௌனத் தால் கட்டுப் படுத்துதலில் தொடங்கி சுவாசித்தலுக்கேற்பவும், ஒலி யெழுப்புவதற்கு அசைவது வழியாகச் சொற்களுக்கும், வாக்கி யங்களுக்கும் ஏற்ப அசையச் செய்தலே நடிப்பின் பயிற்சிகள். தன் உடலிலிருந்து வெளிப்படும் மௌனம்,சுவாசம், ஒலி, மொழி எனக் கவனப்படுத்திப் பயிற்சி செய்தல் மட்டும் போதாது. தன்னைச் சுற்றி நிற்கும் பிற நடிகரின் மௌனத்திற்கும், சுவாசத்திற்கும், மொழி வெளிப்பாட்டிற்கும் ஏற்பத் தனது உடலைப் பயன்படுத்தும் பயிற்சிகளையும் நடிகர் கற்றுக் கொள்ள வேண்டும். நடிகர் நடப்பதற்கான பயிற்சியைச் செய்யும் அதே அளவுக்குப் பேசுவதற்கான பயிற்சியையும் செய்ய வேண்டும்.நடப்பதையும் பேசுவதையும் கட்டுப்படுத்தும் வேலையை நடிகரின் மனம் செய்கிறது. ஆகவே தான் நடிப்புப் பயிற்சிகள் என்பன உடல்,குரல், மனம் ஆகிய மூன்றிற்குமான பயிற்சிகளாக அமைகின்றன.
நடிப்பிடமான மேடைப் பரப்பிற் குள் நுழைவதிலிருந்து அவர் மேல் பார்வையாளர்களின் கவனம் இருக்கும் என்பதால் தன் உணர்வைத் தவற விடாமல் இருக்க வேண்டும். மேடைப் பொருட்களைக் கையாள்வது, உரிய வசனங்களை அதன் பாவங்களுடனும், தொனியுடனும், உள் அர்த்தங்களுடனும் பேசுவதன் மூலம் நடிப்பு திறமையை வெளிக்காட்ட முடியும். மேடையில் இருக்கும் நேரத்தை என்ன உணர்வுக்கு என்ன நேரம் என்பது முதல் எந்தக் காட்சிக்கு எந்த இடம் என்பது வரை திட்டமிட்ட செயலாக நடிப்புக்கலை விளங்கக் கூடியது. அத்துடன் உடன் நடிக்கும் பிற நடிகனுடன் கொள்ளும் உறவும் பாங்கும் சேர்ந்து மேடையில் நடப்பதை உண்மையாக்கும் நிலைக்குப் போகும் போதுதான் நடிப்புக்கலை உச்சத்தை அடைகிறது. தான் நடிகர் என்ற உணர்வுடன் செயல்படும் அதே நேரத்தில் தான் ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தை ஏற்றிருக்கிறேன் அல்லது மாறியிருக்கிறேன் என்ற உணர்வுடன் செயல்பட வேண்டும்.
நடிகர்களுக்கான பயிற்சிகளைப் பற்றிய நேரடியான சிந்தனை எனச் சொல்ல முடியாது என்றாலும் பரதரின் நாட்டியக் கலையில் சொல்லப்படும் பயிற்சிகள் நடிப்பிற்கும் உரியன என்பதில் சந்தேகம் இல்லை. ஒரு நடியின் பாதங்களில் தொடங்கி உடலின் உச்சந்தலை வரையான ஒவ்வொரு உறுப்புகளையும் அறிந்து கட்டுப்படுத்து வதற்கான பயிற்சிகளை முத்திரைகளாகக் குறிப்பிட்டுள்ளார் பரதர். தொல்காப்பியரின் மெய்ப்பாட்டியல் அவ்வளவு விரிவாகப் பேச வில்லையென்றாலும், குறிப்பிட்ட உணர்வினைத் தாங்கியிருக்கும் உடல் எத்தகைய வெளிப்பாட்டு முறைமையில் இருக்கும் என்பதைச் சொல்வதாகக் கொள்ளலாம். கவிதைக்குள் பாத்திரங்கள், என்ன மனநிலையோடு இருக்கும் என்பதைச் சொல்லும்போது, அதன் உடல் அடையும் மாற்றங்களையே மெய்ப்பாட்டியல் பேசுகிறது. பரதருக்கும் தொல்காப்பியருக்கும் அடிப்படையான நோக்க வேறுபாடு உண்டு. நடனத்தை அடிப்படையாகக் கொண்டு விளக்கங்களைச் சொல்பவர் பரதர். ஆனால் தொல்காப்பியர் கவிதையை அடிப்படையாகக் கொண்டு விளக்கங்களை முன் வைப்பவர். இந்த அடிப்படையைப் புரிந்து கொண்டால் தான் இருவரின் விளக்கங்களையும் சரியாகப் புரிந்து கொள்ள முடியும்.
தாள லயம் அல்லது ஒலியின் படிநிலைகள் வழியாகவே பயிற்சிகளை மேற்கொண்ட பாரம்பரிய நடிகர்களைத் தவிர்த்து விட்டு மனிதர்களின் அறிவுசார் சாத்தியங்களை முதன் படுத்திய நவீனத்துவத்தோடு நடிப்பதற்கான பயிற்சிகளை முழுமையாகப் பேசியவராக நான் நினைப்பது ஸ்டானிஸ் லாவ்ஸ்கியைத் தான். நவீன ரஷ்ய அரங்கியலின் முதன்மையானவரும் முன்னோடியுமான கான்ஸ்டண்டின் ஸ்டானிஸ்லாவ்ஸ்கி (1863-1938) உருவாக்கிய நடிப்புப் பயிற்சிகள் இன்றளவும் உலக நாடகப்பள்ளிகளில் படிக்கப் படுகின்றன. நடிப்பு முறைமைகள் என்றாலே உலகம் முழுமையும் ஸ்டானிஸ் லாவ்ஸ்கியின் நடிப்பு முறைமைகள் (System of Acting) என்றே புரிந்து கொள்ளப்படும்.நாடகக்காரர்கள் மட்டுமல்லாமல் திரைப்படக்காரர்களும் அவரது நடிப்பு முறைகளையே அடிப்படைப் பயிற்சியாகக் கொள்கின்றனர்.ஸ்டானிஸ்லாவ்ஸ்கியின் முறைமைகள் நடப்பியலோடு நெருங்கிய தொடர்புடையன. அந்த அடிப்படையின் மேல் தான் பின்னர் வந்த பிரக்டின் விலகி நிற்கும் நடிப்பு, அர்த்தோவின் அபத்த நடிப்பு போன்றன உருவாகின.





பாத்திரம்: 



பாத்திரம் (Charactor) - நாடகம் எழுதும் ஆசிரியன், ஒரு கருத்தை அல்லது சிந்தனையை விவாதிக்கவே நாடகம் எழுதுகிறான் என்றாலும் அதனை விளங்க வைக்க ஒரு நபரின் வாழ்க்கைக் கதையையே வழியாகக் கொள்கிறான். அப்படிக் கொள்ளப்படும் மனிதனே பாத்திரம் எனப் படுகிறது.



நாடகப் பாத்திரங்கள் பொதுவாக மையப் பாத்திரங்கள் அல்லது தலைமைப் பாத்திரங்கள் (Central Characters ) ,துணைமைப் பாத்திரங்கள் (Supportive Characters ), எனவும் தோன்றும் (Appeared) பாத்திரங்கள், தோன்றாப் (Referred )பாத்திரங்கள் எனவும் வகைப்படுத்தப்படும்.
சிலம்பில் கண்ணகிதலைமைப் பாத்திரங்களில் இருநிலைப் பட்ட தலைமைப் பாத்திரங்களை உருவாக்குவது மரபான நாடக எழுத்தின் அடிப்படை. ஒரு சமூகம் நல்லவை என நம்பும் ஒழுக்க நெறிகளைப் பின்பற்றுகிற அல்லது அதைக் காப்பாற்றுகிற முயற்சியில் ஈடுபடும் பாத்திரங்கள் முதல் வகைப் பட்டவை. அவ்வகைப்பட்ட நிலையின் மையமாக இருக்கும் பாத்திரமே நாயகப்பாத்திரம் (Protoganist) எனச் சுட்டப்படுகிறது. இதன் எதிர்நிலையாக நிற்கும் பாத்திரம் எதிர்நிலைப் (Antoganist)பாத்திரமாக அறியப்படுகிறது. இவ்விருநிலை மையப் பாத்திரங்களுக்கும் துணை நிற்கக் கூடிய பாத்திரங்கள் துணைமைப் பாத்திரங்கள் எனப்படும். 

சேக்ஸ்பியரின் மாக்பெத் நாடகத்தை மேடையில் நடத்தும் போது ஒரு நடிகரால் ஏற்று நடிக்க வேண்டிய பாத்திரம் தோன்றும் பாத்திரம் . ஆனால் நடிகரால் நடிக்கப்படாமல், அவர்களின் உரையாடலில் சுட்டப்பெற்று நாடக நிகழ்வின் போக்கிற்குக் காரணமான பாத்திரம் தோன்றாப்பாத்திரம் என அழைக்கப்படும். உலகத்திலுள்ள எல்லாப் பொருள்களுக்¢கும் மூன்று பரிமாணங்கள் உண்டு. நீளம் , அகலம், உள்ளீடு என்பன அவை. இதனோடு மனிதர்களுக்குக் கூடுதலாக உடல், சமூகம், உள்ளம், என்ற பரிமாணங்கள் உள்ளன. இம்மூன்று பற்றிய அறிவின்றி ஒரு மனிதப் பாத்திரத்தைப் புரிந்து கொள்ள முடியாது.ஒரு பாத்திரத்தை முழுமையாக விளங்கிக் கொள்ள நாடகப் பிரதிக்குள் நாடகாசிரியன் தரும் உடலியல், சமூகவியல், உளவியல் தகவல்களைத் தொகுத்துக் கொண்டு விவாதிக்க வேண்டும். அம்மூன்றும் பாத்திரத்தின் முதுகெலும்புகள். இவைபற்றிய அறிவு நாடகத்தை வாசிக்கிறவர்களுக்கு இருக்க வேண்டும் என்பது போல இம்மூன்றுக்குமான தகவல்களைத் தருவதாக தான் எழுதும் நாடகப்பிரதி இருக்க வேண்டும் என்பது நாடகாசிரியருக்கும் தெரிந்திருப்பது அவசியம். அதன் மேல் தான் பாத்திரத்தைக் கட்டியெழுப்ப முடியும். அதனால் தான் இம்மூன்று கூறுகளும் பாத்திரத்தின் முக்கியக் கட்டமைப்புக் கூறுகள் எனச் சொல்லப்படுகின்றன..


  1. உடலியல் கூறுகள் 
  2. சமூகவியல் கூறுகள் 
  3. உளவியல் கூறுகள்

பாலினம் 
வர்க்கம்-அடித்தட்டு,நடுத்தர, உயர் வர்க்கம் 
பாலியல் , ஒழுக்கம் சார்ந்த மதிப்பீடுகள்

வயது 
தொழில் - பணியின் தன்மை, வேலை நேரம்,வருமானம், பணிக் கட்டுப் பாடுகள், தொழிற்சங்க உறுப்பின்மை அல்லது உறுப்பின்மை, அமைப்புகள் பற்றிய பார்வைக் கோணம்,பணிக்கான பொருத்தம் 
சொந்த நோக்கம் ,இலட்சியம்

உயரமும் எடையும் 
கல்வி: செலவழித்த தொகை, படித்த கல்விக் கூடங்களின் தன்மை,பெற்ற மதிப்பெண்கள்,விருப்பப்பாடங்கள், விருப்ப மில்லாத பாடங்கள், அவை பற்றிய பார்வைக்கோணம் 
இயலாமை,தோல்விமனப்பான்மை

தலைமுடி,கண்கள்,தோலின் நிறங்கள் 
குடும்ப வாழ்க்கை: பெற்றோர் இருப்பு அல்லது இல்லாமை, பெற்றோர் சேர்ந்து அல்லது தனித்து அல்லது விவாகரத்துப் பெற்று வாழ்வு, சம்பாதிக்கும் திறன்,அனாதை. பெற்றோரின் பழக்க வழக்கங்கள்,பெற்றோரின் மூளைத் திறன், பெற்றோரின் குற்றச்செயல்கள,ஒதுக்கல்கள், பாத்திரத்தின் மண வாழ்க்கை முறை 
நிலைப்பாடுகள் - நம்பிக்கைகொண்ட அல்லது நம்பாத , சுலபமாக எடுத்துக் கொள்ளுதல் அல்லது கடுமையுடன் நடத்தல்,

உடலின் நிலை 
சமயம் 
வாழ்க்கையைப் பற்றிய பார்வை- விலகலான,தீவிரமான, தோல்வியடைந்த

தோற்றம்: பார்க்கத்தக்க தோற்றம், தடிய அல்லது ஒல்லியான தோற்றம்,சுத்தமான,பொலிவான,மகிழ்ச்சியான,கடுகடுப்பான தோற்றம்,தலையின் வடிவம்,முகத்தோற்றம்,பிற உறுப்புக்கள் 
இனம், தேசம் 
மனப்பான்மைகள்- மிகை விருப்பம், கூச்சம், அதீதத்தன்மை, ஒன்றின்மேலானக் காதல்

குறைகள்: அமைப்பற்ற,இயல்பற்ற,பிறவிக்குறைகள்,நோய்க்குறைகள் 
சமூகத்தில் இடம்,நண்பர்களுக்குள் தலைமை,சங்கம் அல்லது விளையாட்டுக் குழுவில் பொறுப்பு 
வெளிப்படையான,உள்முகமான, குழப்பமான

பரம்பரை 
அரசியல் ஈடுபாடு ஆற்றல்கள்:மொழித்திறன்கள்,நினைவாற்றல்
வேடிக்கை விருப்பங்கள்,விருப்பச்செயல்கள்,விருப்பமான புத்தகங்கள், விரும்பும் செய்தித்தாள்கள், இதழ்கள் 
குணங்கள்:கற்பனை, முடிவு எடுத்தல், சுவை, சமநிலை 
புத்திசாலித்தனம்



இப்சனின் பொம்மை வீடு



கிரிஷ் கர்னாடின் நாகமண்டலம்

நாடகப் பிரதியை வாசித்துப் பாத்திரங்களைப் புரிந்து கொள்வதோடு ஒரு நாடகத்தை இயக்குவது எனவும், அதில் இடம் பெறும் பாத்திரங்களில் ஒன்றை ஏற்று நடிப்பது எனவும் முடிவு செய்யும் ஒருவர் மேலும் சிலவற்றைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அவற்றை இவ்வாறு பட்டியலிடலாம்.


1. பாத்திர அடையாளங்கள்
2. பாத்திரத்தின் புறச் சூழல்
3. இயங்கியல் பார்வை
4. பாத்திர வளர்ச்சி
5. பாத்திரத்தின் தீர்மான நிலை
6. கதைப்பின்னல். பாத்திரம் - எது முக்கியம்?
7. பாத்திரங்கள் தனது நாடகத்தைத் தானே பின்னிக் கொள்கின்றன.
8. முதன்மைக் கதாபாத்திரம்
9. எதிர்நிலைக் கதாபாத்திரம்
10. இயைபுருவாக்கம்
11. எதிர்வுகளின் ஒத்திசைவு





கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

தணிக்கைத்துறை அரசியல்

நவீனத்துவமும் பாரதியும்