காவல் நிலையங்கள் : அரசவன்முறைக்கூடங்கள்
பாதிக்கப்பட்ட ஒருவர் புகார் அளிப்பதற்காகக் காவல்நிலையம் சென்றால் கிடைக்கும் அவமரியாதையும் விசாரணைகளும் அவரையே குற்றவாளியாக்கும்விதமாகவே அமையும் என்பதற்குப் பலரும் சாட்சியாக இருக்கிறார்கள். நடந்த நிகழ்ச்சியை நமது மொழியில் எழுதிக்கொடுத்தால் எப்போதும் ஏற்றுக்கொள்ளவே மாட்டார்கள். அவர்கள் செய்யப்போகும் விசாரணைக்கேற்ற வடிவத்தில்தான் எழுதச் சொல்வார்கள். நாம் படித்த படிப்பும் எழுதிய கட்டுரைகளும் நம்மை முகத்தில் அறைந்து தாக்கும். அப்படியான அனுபவங்கள் ஏற்பட்டதுண்டு.
இந்தியக் காவல் நிலையங்கள் அரசவன்முறைக் கூடங்கள் என்பதற்குச் சாத்தான்குளம் நிகழ்வு இப்போது சாட்சியமாகியிருக்கிறது. இதுபோன்ற எண்ணற்ற நிகழ்வுகளைப் பெரும்பாலான காவல் நிலையங்கள் நடத்திக்கொண்டுதான் இருக்கின்றன. இதுபோன்றதொரு கொடுந்துயர்க்காட்சிகளைத் துணிச்சலாக ஒரு பெண் வெளிக்கொண்டுவந்தார். சாத்தான்குளம் காவல் நிலையமும் அதில் பணியாற்றிய காவலர்களும், அவர்களைக்காப்பாற்ற நினைத்த அரசதிகாரமும் அவமானத்தால் தலைகவிழ்ந்த நிகழ்வொன்றை நாங்கள் நாடகமாக்கினோம்.
1992 ஆம் ஆண்டு மே 30க்கும் ஜூன் 2க்கும் இடைப் பட்ட நாட்களில் சிதம்பரம், அண்ணாமலை நகர் காவல் நிலையத்தில், பத்மினி என் பவர் காவல்நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு, அவர் தம் கணவர் நந்தகோபால் முன்னாலேயே காவல்துறையினரால் கூட்டு வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்டார். பத்மினியின் கண்முன்னாலேயே நந்தகோபாலை காவல்துறையினர் குண்டாந்தடிகளாலேயே அடித்துக் கொன்றனர்.
அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், பாதிக்கப் பட்ட பத்மினிக்கு நீதி கோரியும் மார்க்சிஸ்ட் கட்சியும், மாதர், வாலிபர் சங்கங்களும் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தின. பாதிக்கப்பட்ட பத்மினிக்கு அரணாக விளங்கி வழக்கை நடத்தினார்கள். பத்மினியின் உறுதியான சாட்சியத்தின் காரணமாக குற்றம்புரிந்த காவல் துறை அதிகாரிகளுக்கு கீழமை அமர்வு நீதிமன்றம் தண்டனை வழங்கியது. இதை எதிர்த்து குற்றவாளிகள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில் அத்தண்டனைகளை உச்சநீதி மன்றமும் உறுதி செய்தது.
**********
சிதம்பரம் நகர் பத்மினியை நேரில் சந்தித்து 50 நிமிட ஒலிப்பேழைப்பதிவொன்று புதுச்சேரி மக்கள் உரிமைக்கூட்டமைப்பு சார்பில் வெளியிடப்பட்டது. அவரின் பேச்சைப் பதிவு செய்து ஒலிப்பேழைப் பேச்சைச் சிறுவெளியீடாக வெளியிட்டார் அதன் தலைவராக இருந்த ரவிக்குமார். பின்னர் அந்த ஒலிப்பேழையின் குரலை அப்படியே பயன்படுத்தும் விதமாக ஒரு நாடகம் ஒன்றை எழுதினார் ரவிக்குமார். அந்நாடகத்தை புதுவைப்பல்கலைக்கழக நாடகப்பள்ளி மாணவர்களைக் கொண்டு மேடையேற்றினோம். நான் தான் அதனை இயக்குனேன். புதுவையின் கம்பன் கலையரங்கில் மேடையேற்றிய போது காவல்துறை எங்களைத் துளைத்தெடுத்தது. என்றாலும் தொடர்ந்து செயல்பட்டோம்.கடலூரிலும் மதுரையிலும் மேடையேற்றினோம். பத்மினியின் குரலிலேயே இடம்பெற்ற ஒலிநாடாப்பேச்சின் சில பகுதிகளை இங்கே தருகிறேன். போலீஸ்காரர்களின் செயல்பாடு எப்படி இருக்குமென்பதற்கான சாட்சி அது:
=====================
• அன்னைக்கி நடந்த சம்பவத்தை அப்படியே கொஞ்சம் சுருக்கமா சொல்லுங்கம்மா. என்ன நடந்துச்சு.. எப்போ கூட்டிக்கிட்டுப் போனாங்க.. எல்லாத்தையும் சொல்லுங்க..
• வீட்டுக்காரரெ கூட்டிக்கிட்டுப் போனதையா.. இல்ல.. என்னைக்கூட்டிக்கிட்டுப் போனதையா..
• எல்லாம்.... ஆரம்பத்திலேயிருந்து சொல்லுங்க. வீட்டுக்காரரெ என்னைக்குக் கூட்டிக்கிட்டுப் போனாங்க...?
• வெள்ளிக்கிழமை ராத்திரி மூனு மணிக்கு..மூனு.. மூனரை இருக்கும்.வீட்டில படுத்திக்கிட்டு இருந்தோம். ஒரு ஆறேழு போலீஸ்காரங்க வந்து இறங்கினாங்க. இறங்கி வந்து பக்கத்துவீட்டுப் பொம்பளகிட்டெ வந்து , ' இது நந்தகோபால் வீடான்னு' கேட்டாங்க. அவங்கவந்து இந்தவீடு இல்லேன்னு சொல்ல எங்க வீட்டெக் காண்பிச்சி விட்டாங்க. தூங்கிக்கிட்டிருந்த என்வீட்டுக்காரரை அந்த’பாய்’ போலீஸ்காரர் முடியப்பிடிச்சி தூக்கி எழுப்பினாரு..
================
மத்தியானம் ஒரு மணி இருக்கும். அந்தப் பாய் போலீசும், கிழப்போலீஷும் வந்தாங்க. தூங்கிக்கிட்டு இருந்த என்னை அவங்க கையில இருந்த தடியால படார்னு சூத்தாம்பட்டையில அடிச்சாங்க..
நான் அலறி அடிச்சிக்கிட்டு எழுந்தேன். ”என்னால முடியல. என்னை அடிக்காதீங்க, அடிக்காம கேளுங்க சொல்றேன்னு” சொன்னேன். ஆனா அவரு ”என்னடி சொல்றே”ன்னு கோபமா கத்திக்கிட்டு காலைப்பிடிச்சு பரபரன்னு வாசலுக்கு இழுத்துக்கிட்டு வந்தாரு.. அப்புறம் அவங்களே கதவைச் சாத்திட்டு, என்னை அடிச்சு ஆட்டோவில ஏறச்சொன்னாங்க. அப்போ ரெண்டு ஆட்டோ வந்திருந்திச்சி.. ஒரு ஆட்டோவில நாலு போலீஸ் காரங்களும், இன்னொரு ஆட்டோவில எங்க வீட்டுக்காரரும் சுப்பிரமணியமும் இருந்தாங்க.நான் அந்த ஆட்டோவில உட்கார்ந்துக்கிட்டேன். போகும்போதே ஸ்டேஷனுக்கு வாடி உன்னைக் கவனிச்சிக்கிறேன்.. இனிமே உன்னை விட்டாத்தானேன்னு என் வீட்டுக்காரர் முன்னாலேயே திட்டிக்கிட்டே வந்தாரு..
ஸ்டேஷனுக்குப்போனதும் என் வீட்டுக்காரரையும் சுப்பிரமணியத்தையும் அடிச்சு லாக்கப்பிலே தள்ளிட்டாங்க. என்னை அடிச்சி உள்ளே இழுத்துக் கிட்டு போனாங்க. வலிதாங்க முடியாம கதறிக்கிட்டே அங்கே இருக்கிற போலீஸ்காரங்க கால்லே போய் விழுந்தேன்.. என்னை அடிக்காதீங்க' ன்னு சொன்னேன். அதுக்கு அந்தப் போலீஸ்காரரு ஒன்னுமே சொல்லல. அப்புறம் அவங்க என் ஜாக்கெட்டப் புடிச்சி அது கிழியற வரைக்கும் அடிச்சாங்க.
======
அந்தக் கிழப்பொலீஸ்காரன் ஒரு துண்டுக் கழியெ எடுத்திட்டு வந்து 'இம்மாம்பெரிசு போவுமா'ன்னு பச்சையா கேட்டான்.கேட்டிட்டு என்னை உயிர் நிலையிலேயே அடிச்சான்.எனக்கு வலிக்குது, என்னை விட்டுடுன்னு கதறினேன்.
இப்பதாண்டி ஆரம்பம்னு அந்த நாலுபேரும் ஒருத்தருத்தா....
===============
"சரிம்மா.. உன்னை வெளியில விட்டது திங்கட்கிழமை காலையிலயா..?புதன்கிழமை காலையிலயா..?"
"வெளியில வரும்போது நீ உன் புருஷனப்பார்க்கலியா..?"
"இல்ல நான் லாக்கப்பில பார்த்தேன். அங்க யாரும் இல்ல"
"யார் யாரெல்லாம் உங்களக் கெடுத்தாங்கன்னு சொல்லமுடியுமா.?.
ஒரு எஸ்.ஐ நாலு போலீஸ்காரங்களா"
"ஆமாம்."
" ஆளப்பார்த்தா அடையாளம் தெரியுமா..? "
"ம்....தெரியும் "
================
போலீஸ்காரர்கள் லத்தியை ஆண்குறியின் பிரதியாக எப்போதும் பயன்படுத்திக்கொண்டே இருக்கிறார்கள்
கருத்துகள்