புதிய வருகை: புதிய நகர்வுகள்- தலித் இதழில் மூன்று சிறுகதைகள்


நிறுத்தப்படுவதும் திரும்பவும் வருவதும் இலக்கியச் சிறுபத்திரிகைகளின் அடையாளங்களில் ஒன்று. 1990 களின் இறுதியில் தொடங்கி, தான் நடத்திய தலித் - இதழைத் திரும்பவும் கொண்டுவருகிறார் பன்முகத்தன்மைகொண்ட எழுத்தாளர்   ரவிக்குமார் (விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர்). உள்ளடக்க நிலையில் முன்னர் வந்த 12 இதழ்களின் நீட்சியைக் காணமுடிகிறது. இந்த இதழின்   உள்ளடக்கம்:    

·         கவிதைகள்(எம்.எ.நுஃமான், என்.டி.ராஜ்குமார்

·         சிறுகதைகள்(ரவிக்குமார், அழகிய பெரியவன், ப்ரதீபா ஜெயச்சந்திரன்)

·         மொழிபெயர்ப்புகள்(கெவின் பி.ஆண்டர்சன்: நேர்காணல் தமிழில் சிசுபாலன்,  லீலாதர் மண்டலே கவிதைகள், தமிழில்:கிருஷாங்கினி)

·         கட்டுரைகள்(ஜெ.பாலசுப்பிரமணியம், கோ.ரகுபதி)

·         வெளிவராத நூலின் பகுதி (தேன்மொழியின் சாமி தந்தாள் கதை)  

 

தலித் புனைவுகள் தொடக்க காலத்தில் தன்மை அல்லது முன்னிலைக் கூற்றுமுறைகளையே அதிகம் பின்பற்றின. இந்திய சமூகம் தொடர்ச்சியாகச் சாதியின் பேரால் வேற்றுமைகளைப் பேசுவதோடு, ஆதிக்க சாதிக் குழுவினரின் ஒடுக்கு முறைகளை இயல்பானதாகக் காட்ட முயல்கின்றது என்ற குற்றச்சாட்டை முன்வைக்க இவ்விரு சொல்முறைகளே ஏற்றவை என நம்பின.  ‘நான் பாதிக்கப்பட்டேன்’ எனச் சொல்லத் தன்மைக் கூற்றும் “என்னைச் சுற்றியுள்ளவர்களுக்கு இவையெல்லாம் நேர்ந்து கொண்டிருக்கின்றன” எனச் சொல்வதற்கு முன்னிலைக்கூற்றுமுறையும் ஏற்ற வடிவம் என்பதை மறுக்கமுடியாது.  ஒதுக்குதலும் ஒதுங்குதலுமான நேரடி/மறைமுக வினையின் காரணமாகக் கடைப்பிடிக்கப்பட்ட தீண்டாமையின் அழுத்தங்களை இம்முறைகளின் மூலம் அழுத்தமாகவும் கோபத்துடனும் குற்றம் சாட்டும் தொனியிலும்   பேச இவ்விரண்டு சொல்முறைகளின் பொருத்தப்பாடுகள் பற்றித் திரும்பவும் சொல்ல வேண்டியதில்லை.  இம்முறைகளின் மூலம்   கதைசொல்லியின் சொந்த அனுபவங்களையும் அல்லது உடனுறை மனிதர்களின் - கதைசொல்லியின் பார்வையில் இருக்கும் மனிதர்களின் வலிசார்ந்த அனுபவங்களையும் சொல்வதே தலித் இலக்கிய அழகியலாகக் கருதப்பட்ட நிலை இப்போது மாறியிருக்கிறது. உலகம் முழுவதும் இனம், நிறம், மதம், மொழி சார்ந்த அனைத்துவகை வேறுபாடுகளின் இயங்குநிலைகளையும் அவை எழுப்பும் எல்லாவகைத் துயரங்களையும் அனைத்துவகை உணர்வுகளையும் விவாதிக்க படர்க்கைக் கூற்றுக் கதைசொல்முறை ஏற்ற வடிவம் என்பது திரும்பத்திரும்ப உறுதியாகியிருக்கிறது. கண்ணுக்குப் புலப்படாத – கடவுள் தன்மையில் கதை சொல்லியை நிறுத்திக் கொள்ளும் படர்க்கைக் கூற்றுமுறை வாசிப்பவர்களின் மனவோட்டத்திற்கு அதிக வாய்ப்புண்டாக்கும் வடிவமாகவும் இருக்கிறது.  இந்தப் புரிதலின் நகர்வாக அண்மைக்காலத் தலித் புனைவுகளின் சொல்முறைகள் தன்மை மற்றும் முன்னிலைக் கூற்றுமுறைகளைத் தவிர்த்துவிட்டுப் படர்க்கைக் கூற்றுமுறைக்கு நகர்ந்துள்ளன எனக்கொள்ளலாம்.  

இப்போது திரும்பவும் வரத்தொடங்கியுள்ள தலித் இதழில்

பெருந்தொற்று - ரவிக்குமார்

சட்டகத்துக்குள் பறந்திடும் பறவை -அழகிய பெரியவன்

மாற்றுதல் - ப்ரதீபா ஜெயச்சந்திரன்

ஆகிய கதைகள் இடம்பெற்றுள்ளன. இம்மூன்று சிறுகதைகளையும் ஒரே மூச்சில் வாசித்துவிட முடிந்தது.    அழகிய பெரியவனின் சட்டகத்துக்குள் பறக்கும் பறவை என்ற கதை படர்க்கைக்கூற்றில் அமைந்துள்ளதோடு, கதையின்வெளியை இந்தியப்பரப்பிற்கு வெளியே  அமைத்துக் கொண்டிருக்கிறது. எப்போதும் வேற்றுமைகளையும் மேல் -கீழ் அடுக்குகளையும் பாராட்டிக்கொண்டே இருக்கும் சனாதனத்தின் பிடியில் இருந்துவிட்ட  இந்திய/ இந்து மனங்கள் தேசங்கடந்து வாழ நேரும் நிலையிலும் தன்னை விடுவித்துக்கொள்வதில்லை; அதன் புறச்சூழலுக்குத் தகவமைக்க முடியாமல் தவிக்கின்றன என்பதை நுட்பமாக முன்வைத்துள்ளார்.

 இந்தியாவிலிருந்து உயராய்வுக்காகச் சென்ற கல்விப்புல நட்புகள் சகாதேவன்-ப்ரவீனா   அங்கேயே குடும்பத்தை உருவாக்குகிறார்கள்.   கல்லூரிக்காலம் தொடங்கி உயர் ஆய்வு வரை தொடர்ந்த நட்பும் புரிதலும் அவர்களைக் கணவன் -மனைவியாக மாற்றி ருஷ்யாவிலேயே தங்கச் செய்திருக்கிறது. நட்பு, காதலாக மாறிக் கணவன் மனைவியாக மாறும் இயங்குநிலை ஒருவிதத்தில் மேற்கத்திய வாழ்க்கையின் நகர்வு.  இந்திய வெளியாக  இருந்தால் அவர்களின் திருமணத்திற்கு எதிராகச் சாதி, மதம், உறவுகள் போன்ற குறுக்கீடுகள் பெருமளவு இருந்திருக்கலாம். இந்தியாவிற்கு வெளியே என்பதால் எந்தவிதக் குறுக்கீடுகளும் இல்லாமல் அவர்களது குடும்ப வாழ்க்கையை உருவாக்கிக் கொள்ள முடிகிறது. எளிதாக உருவாக்கிக் கொண்ட அந்தக் குடும்ப வாழ்க்கையை மேற்கத்திய மனத்தோடு வாழ முடியவில்லை என்பதே கதையின் விவாதம்.  தனது மனைவியாகிவிட்ட பெண்உடல் மீது ஆண் எடுத்துக்கொள்ளும் ஆதிக்கம், அடிப்பது என்ற உடல்சார் வன்முறையாக இருக்கிறது. இதன் பின்னணியில்,  ‘அந்த உடல் எனக்கு மட்டுமே சொந்தமானது என்ற உடமைப்பார்வையும்,   இன்னொரு ஆடவனோடு தனித்திருக்கும்போது உடல்ரீதியான ஆசையைத் தீர்த்துக் கொள்ளவே வாய்ப்பிருக்கிறது என நம்பும் மனம் கொள்ளும் ஐயமும் என்பதை விவாதப்பொருளாக்கும் கதை சொல்லி, அவ்விருவரும் கணவன் மனைவியாக மாறிக்கொண்டாலும் வெவ்வேறு மன அமைப்பும் அழகியல் ஈடுபாடுகளும் கொண்டவர்கள் என்பதைத் தங்களின் குடியிருப்பில் இடம்பெறுவதற்கான படங்களை (வண்ணத்துப் பூச்சி) தேர்வுசெய்வதை வைத்து முன்னுணர்த்திக் காட்டிவிடுகிறார். இந்திய சாதிப்பெருமை சார்ந்த மனம் ஒவ்வொருவருக்குள்ளும் ஓடிக்கொண்டே இருக்கிறது என்பதோடு ஒவ்வொரு ஆணின் இருப்பும், பெண்களை இரண்டாம் நிலைப்பட்ட உயிரியாகப் பார்க்கும் பார்வையிலும் தங்கியிருப்பதாகக் காட்டுகிறது கதை. இரண்டாம் நிலையில் வாழ நேர்ந்ததை உணர்ந்த நிலையிலும் அதிலிருந்து விலகிவிட இந்தியப் பெண் தன்னிலையும் தயாரில்லை என்பதையும் அழகிய பெரியவன் முன்வைக்கிறார். கதையின் தலைப்பான சட்டகத்துக்குள்  பறந்திடும் பறவை என்பதே குறிப்பாக அதை உணர்த்திவிடுகிறது.


குளிரில் நடுங்கியபடிக் கம்பளிக்குள் முடங்கிக் கிடக்கும் சகாதேவனைப் பார்த்துக் கொண்டிருக்கும்போது, பனிக்கூரில் இறந்தவர்களுக்கான இடம் ஒன்று நினைவிடமாக மாறியிருப்பது அவளுக்கு நினைவுக்கு வருகிறது. அப்போது அவளது மனம் “ மேற்கத்தியர் வரலாற்றின் வடுக்களை நினைவுகளாக்கிவிடுகிறார்கள். கிழக்கத்தியர்களோ வரலாற்றின் வடுக்களைப் பெருமிதங்களாகப் பாவித்து உயிர்ப்பிக்கிறார்கள் என நினைத்துக்கொண்ட தாக ஒரு குறிப்பைத் தருகிறார். இந்தக் குறிப்போடு பொருந்துவதாக, இந்தியா வந்து வழக்குரைஞர்களையெல்லாம் சந்தித்து விட்டுத் திரும்பும்போது, சகாதேவனிடமிருந்து வந்த ஒரு குறுஞ்செய்தியே அவளைச் சமாதானப்படுத்திக் கொள்ளப்போதுமானதாக இருக்கிறது.  ஆனால் அவனது குரூரமான மனத்தை ஒவ்வொரு நிலையிலும் நினைவூட்டிப் பலிவாங்கும் மனமும் அவளுக்குள் இருக்கிறது என்பதை, கணவனால் காயப்படுத்தப்பட்ட  தோள்பட்டை வடுவை, ‘ஒரு வண்ணத்துப்பூச்சியின் உடலாக அந்த வடுவை மாற்றிவிடுங்கள்’ எனச்சொல்வதில் இருக்கிறது. அந்த வண்ணத்துப்பூச்சி பறத்தலின் அடையாளம் மட்டுமல்ல; கொட்டும் குளவியாகவும் உருமாறும் வாய்ப்புக்கொண்ட து எனக் கதையை முடிக்கிறார் அழகிய பெரியவன். நிகழ்வெளியையும் நடப்புகளையும் பரப்பிக் கொண்டே வரும் அழகியபெரியவன் எந்த இடத்திலும் கதைசொல்லியாகத் தன்னைக் காட்டிக்கொள்ளாமல் மொழியின் அடுக்குகளைக் கச்சிதமாகப் பயன்படுத்திய கதையாக இந்தக் கதையைத் தந்துள்ளார்.


ப்ரதீபா ஜெயச்சந்திரன் மாற்றுதல் கதை, இந்தியாவில் நேரடியாக அரசுத்துறை நிறுவனங்களாகவும் பொதுத்துறை நிறுவனங்களாகவும் இருக்கும் அமைப்புகளுக்குள் பணிசார் நடைமுறைகளை அந்த நிறுவனத்தின் கார்ப்பொரேட் நிறுவன விதிகளோ, சட்டங்களோ தீர்மானிப்பதில்லை. பன்னெடுங்காலமாக இந்தியச் சமூகத்தின் உளவியலையும் அன்றாடவாழ்வியலையும் தீர்மானிக்கும் சாதியத்தின் அடுக்குகளே தீர்மானிக்கின்றன என்பதை வங்கி ஊழியரின் பதவி உயர்வு என்னும் நடைமுறையைக் கொண்டு கதையாக்கியிருக்கிறது. முன்னடுக்குகளில் சின்னச் சின்ன பதவி உயர்வுகளைத் தாண்டி, மானேஜராகப் பதவி உயர்வு கிடைக்கும்போது வங்கிப் பணியில்  இடமாற்றம் என்பது தவிர்க்கமுடியாது. இவ்விடமாற்றத்தில் சாதியடுக்கில் மேலே இருக்கும் பொதுப்பட்டியல், பிற்பட்டோர், மிகப்பிற்பட்டோர் (ஓசி, பிசி, ஓபிசி) வகைப்பாட்டில் இருப்பவர்கள் இடமாறுதலை விரும்புவதில்லை. அவர்களின்  பொருளாதாரச் சூழல் காரணமாகச் சிறிய அளவு பணப்பலன் இருந்தாலும் வேறுமாநிலத்திற்குச் சென்று பணியாற்றவேண்டும் என்பதால், பதவி உயர்வை மறுதலித்துவிட்டு இங்கேயே தங்கிவிடுகின்றனர். ஆனால் அட்டவணைச் சாதியினர்(எஸ்.சி) மட்டுமே பணி ஓய்வுக்காலத்தில் கிடைக்கும் கூடுதல் தொகைக்காகப் பணியிட மாற்றத்தையும் அதன் காரணமாகக் கிடைக்கும் துன்பியல் வலிகளையும் பொறுத்துக்கொள்கின்றனர். எனவே பதவி உயர்வு கொடுக்கும்போது எஸ்சி வகுப்பைச் சேர்ந்தவர்களை வேறு மாநிலங்களுக்கு மாற்றுதல் செய்தலே சரியானது எனக் கொள்கை முடிவை எடுத்துக்கொண்டு நிறுவனங்கள் செயல்படுகின்றன என்பதைப் பாத்திரங்களின் உரையாடல் வழியாகவும் மேலாண்மை நிர்வாக நடைமுறை, பணியாளர் சங்கங்களின் போக்கு ஆகியவற்றைச் சித்திரித்துக் காட்டுவதின் மூலம் முன்வைக்கிறார்.

கதையின் மையவிவாதம் இதுவே என்றாலும் கிராமிய வாழ்வில் பின்பற்றப்பட்ட சாதி மேலாதிக்க மனநிலை அதிகாரிகளின் அன்றாட நடைமுறையிலும் தொடர்கிறது என்பதைச் சங்கர் என்னும் மையப் பாத்திரத்தின் மனவோட்டமாக முன்வைக்கிறார். நிர்வாக அதிகாரியைச் சந்திக்கும்போதும்,  அவரது சாதியைச் சேர்ந்த -வங்கிப்பணிக்கே தொடர்பில்லாத ஒரு ஓட்டல் முதலாளியின் பரிந்துரைக்காகச் செல்லும்போதும் மனத்திற்குள் ஓடும் இளமைக்கால நினைவோட்டங்களை எழுதும் ப்ரதீபா ஜெயச்சந்திரன் கூடுதல் குறைவின்றி உரையாடல்களையும் விவரணைகளையும் எழுத்தாக்கியிருக்கிறார். அதனால் அப்பகுதிகளே இக்கதையின்  முதன்மையான வெளிப்பாடு எனச் சொல்லலாம். தன் நிறுவனத்தில் பணியாற்றும் ஒருவரைச் சந்திக்கும்போது தன் முன்னால் நிற்கவைத்தே விசாரித்து அனுப்பும் நடைமுறையும், நீ, வா, போ என அவரை ஒருமையில் அழைக்கும்போது தனது தந்தையின் வயதுக்கும் மரியாதை தராமல் சாதிப் பெருமிதத்தால் பெயர் சொல்லி அழைத்த சிறுவனின் போக்கையும் நினைவோட்டமாக இணைவைக்கிறார் கதைசொல்லி. சொல்லப்பட்ட முறையில் படர்க்கைக் கூற்றைக் கொண்டிருந்தாலும், பதவி உயர்வை ஏற்பதா? நிராகரிப்பதா? எனத் தவிக்கும் ஒருவரின் தன்மைக்கூற்றுத்தன்மையே கதையில் அதிகம் செயல்படுகிறது. அதனை உறுதிசெய்யும் விதமாக்க கதையின் தொடக்கத்தில் இடம்பெறும் வாசிக்கப்படாமல் தள்ளிவைக்கப்பட்ட நூலை – காந்தியும் காங்கிரசும் தீண்டாதாருக்குச் செய்தது என்ன? -வாசித்துவிடலாம் என்ற நினைவோட்டம் இடம் பெற்றிருப்பதைச் சொல்லலாம். இந்தக் கதையில் பாதிப்புக்குள்ளாகும் மையப் பாத்திரமாக வரும் சங்கர் ஒரு தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர் என்பதை முதலிலேயே காட்டிவிட வேண்டும் என நினைத்ததைத் தாண்டி அதற்கு வேறு மதிப்பு ஒன்றும் இல்லை. இதுபோன்ற குறிப்புகள் கதைக்குள் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்.

 

ரவிக்குமாரின் கதைத்தலைப்பு பெருந்தொற்று. சிறுகதையின் தொடக்கமும் முடிவும் தொடர்புடைய ஒன்றால் இணைக்கப்பட்ட வடிவம் அதன் செவ்வியல் வடிவமாகக் கருதப்படும். தலைப்பு காரணமாகவே உடனடி நிகழ்காலக் கதை என்ற குறிப்பைத் தருகிறது. அதன் மூலம் தனிமைப்படுத்துதல், மருத்துவமனைகளாக்கப்படும் கல்லூரி வளாகம், அங்கிருக்கும் குறைவான வசதி எனக் கட்டுரைத்தன்மையோடு தொடங்கும் கதை, கொரோனா பெருந்தொற்றால் தனித்து வைக்கப்பட்ட ஓர் இளைஞனின் கல்லூரிக்கால நினைவோட்டமாக மாறும்போது திட்டமிடாமல் தொடங்கும் காதல் கதையாக மாறுகிறது.   அதற்குக்   காரணமாக இருப்பது கல்லூரி வாழ்க்கையின் கடைசி நாட்களில் ஒவ்வொருவரும் பரிமாறிக்கொள்ளும் முகவரிகள் அடங்கிய ஆட்டோகிராப் புத்தகமாக இருக்கிறது. ஆட்டோகிராப் வழியாக க்கிடைத்த அந்தத் தோழி இருப்பது பெங்களூரில் சட்டப்படிப்பில். இவனோ சென்னையில் ஒரு புத்தகக்கடைப் பணியாளன்.


கல்லூரிப்படிப்புக்குப் பின் தனது விருப்பமான சினிமாவில் சேர்வதைத் தன்முனைப்பாகச் செய்யாத தனக்கு அந்தத் தோழி தரும் உற்சாகமூட்டலும் தூண்டுதலும் வாழ்க்கையைச் சுவாரசியமாக்குகின்றன. வேலை பார்க்கும் புத்தகக்கடைக்கு வரும் எழுத்தாளரும் ஆட்சிப்பணி அதிகாரியுமான ஒருவரின் மூலம் திரைக்கதை வசனம் எழுதும் வாய்ப்பு கிடைக்கிறது.   படத்தை இயக்கும் நேரத்திற்காக க்காத்திருக்கிறான். இந்த நிலையில் கூட திடீர்த்திருப்பமாகக் கொரோனாவால் பலரும் பாதிக்கப்படுகின்றனர். அவனுக்கு உதவிய தோழியின் தந்தையும் பாதிக்கப்படுகிறார். தன்னைத் தூண்டித்தூண்டி உற்சாகமூட்டிய தோழியின் துயரத்தில் உதவும்பொருட்டுத் தனது இருசக்கரவாகனத்திலேயே பெங்களூரிலிருந்து அவளைச் சென்னைக்கு அழைத்து வருகிறான். தொலைபேசியில் பேசும்போதும் பெங்களூரிலும் அவர்களிருவரின் சாதி அடையாளங்கள் சிக்கலாக இல்லை. உறவினர்கள் இருக்கும் வெளிக்குள் நுழைய நுழைய  சாதி மனம் அலையாக எழும்புகிறது. தூரத்திலேயே அவள் இறங்கிக் கொள்கிறாள். இவன் மனம் அதன் நினைப்பிலேயே தகிக்கிறது.

கொரோனா அடையாளம் காரணமாகத் தனித்திருக்கும் அவனைச் சிலர் தாக்குகின்றனர். தாக்கும்போது ‘ங்கோத்தா தேவடியா மவனே ஒனக்கு எங்க பொண்ணு தேடுதா?’ என்று சொல்லிக் கொண்டே அடிக்கின்றனர்.  கொரோனா நோய்க்காக நாம் பின்பற்ற வேண்டிய சமூக இடைவெளியைவிடக் கூடுதல் ஆபத்தாகச் சாதிய இடைவெளி இருக்கிறது என்பதைக் கதையாகத் தரவிரும்பிய நோக்கம் சரியாக இருந்தபோதிலும் நிகழ்வுகளுக்குப் பின்னிருக்கும்  தொடர்பின்மை செயற்கைத் தன்மையாக வெளிப்பட்டுள்ளது என்பதை மறுக்கமுடியாது.


இந்திய மனிதர்களுக்குள் சாதி என்னும் கருத்துரு நடைமுறை வாழ்க்கையாக – சமூகப்பிளவாக -அரசதிகார விதிகளை உருவாக்கும் நுட்பமாக – நாகரிகமான வாழ்க்கையை குலைக்கும் மேட்டிமைக்குணமாக இருப்பதைப் பேசும் மூன்று கதைகளில் அழகிய பெரியவனின் கதை இலக்கியவியல் நுட்பங்களோடும் வாசிப்புத்திளைப்பைக் கொண்ட தாகவும் இருக்கிறது. அதற்காகவே தலித் இதழைக் கொண்டுவரும் ரவிக்குமாரைப் பாராட்ட வேண்டும்.

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்