அரங்கியல் அறிவோம். 4
நாடகப்பனுவல் .
முன் குறிப்பு: நான் புதுவைப் பல்கலைக்கழக நாடகத்துறையை விட்டு வந்து 23 ஆண்டுகள் முடிந்துவிட்டன. ஆனாலும் விட்டகுறை, தொட்டகுறையா மாணவர்களின் விசாரிப்புகளும் வினாக்களும் தொடர்கின்றன. அதைவிடவும் இலங்கையில் அரங்கியல் பயிலும் பலரும் சந்தேகங்கள் கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். அவ்வப்போது தனித்தனியாகக் கேட்கப்படும் கேள்விகளுக்காகச் சிலவற்றை எழுதுகிறேன். அரங்கியலில் விருப்பம் உள்ளவர்களுக்கும் பயன்படலாம் என்ற நம்பிக்கையும் பின்னணியில் இருக்கிறது. மற்றவர்கள் விலகிச் செல்லலாம்.
முன்பு நாடகம் என்ற சொல்லை எதுகுறித்துப் பயன்படுத்தினார்களோ,அதையே நவீன விமரிசகர்கள் இந்தப் பெயர்களால் சுட்டுகிறார்கள்.
1. உரையாடல்
2. காட்சி
3. அங்கம்
என்பதான பகுதிகளைக் கொண்ட எழுத்துப் பிரதியை நாடகப்பிரதிஅல்லது பனுவல் எனச் சொல்லலாம்.
இதனையே,
1. பின்னல்
2. பாத்திரங்கள்
3. சிந்தனை
4. மொழிநடை
5. இசைக் கூறு
6. காட்சி ரூபம்
என்பனவற்றைக் கொண்டது நாடகப்பிரதி அல்லது நாடகப்பனுவல்என இன்னொருவர் சொல்லலாம்.இவ்விரு வகையான தொகுதிகளில் இரண்டாவது வகையைப் படைப்பாக்கக்கூறுகள் (Creative Parts) எனவும் முதல் வகையை இயந்திரவியல் கூறுகள் எனவும் கூறுவர். ஒரு நாடகப்பிரதியின் இயந்திரவியல் கூறுகளைக் கண்டறிய நாடகப் பிரதியை முழுமையாக வாசிக்கக் கூடத் தேவையில்லை. நாடகாசிரியன் எழுதிக் காட்டியுள்ள அல்லது அச்சிட்டுத் தந்துள்ள பக்கங்களைத் திறந்து பார்த்தாலே போதும். அதனால் தான் இக்கூறுகள் இயந்திரவியல் கூறுகள் (Mechanical Parts) எனச் சொல்லப்படுகிறது.
உரையாடல் (Dialogue) என்பது நாடகப் பிரதியின் மிகச் சிறிய அலகு.
ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருக்க நேரிடும் ஒன்றுக்கு மேற்பட்ட மனிதர்கள்அல்லது பாத்திரங்களுக்கிடையே நடைபெறும் பேச்சே உரையாடல். அந்தக் குறிப்பிட்ட இடத்தில் தொடரும் உரையாடல் பொருள் தொடர்ச்சி கொண்டதாக அமையும் நிலை காட்சி (Scene)ஆகும்.பாத்திரங்களில் மாற்றமின்மை, வெளியில் மாற்றமின்மை, பேச்சுப்பொருளில் மாற்றமின்மை காலத் தொடர்ச்சி என்ற நான்கும் இணைந்து தொடரும் நிலையில் ஒருமுழுமையான காட்சி உருவாகுகிறது.
பேச்சுப்பொருள் தொடர்ச்சியில் இடையீடு ஏற்படும் விதமாகப் பாத்திரங்களின் நுழைவு அல்லது வெளியேற்றம் நிகழும் போது அக்காட்சி இன்னொரு காட்சியாக மாறுகிறது. என்றாலும் அவ்விரு காட்சிகளும் தொடர் காட்சிகளே. ஆனால் வெளிசார்ந்து ஏற்படும் மாற்றம் தொடர்பற்ற காட்சிகளாகவே மாறும் வாய்ப்புண்டு. வெளிசார்ந்து ஏற்பட்ட மாற்றம் பேச்சுப் பொருளில் மாற்றத்தை ஏற்படுத்தாத நிலையில் அதுவும் காட்சி மாற்றமே. இப்படி உருவாகும் காட்சிகளின் தொகுதியே அங்கம் என்பதாகும்.
ஐரோப்பிய நாடகங்களுக்கு இலக்கணம் வகுத்த அரிஸ்டாடிலின் கவிதை இயல் நாடகத்தின் கூறுகளான அங்கம் (Act), காட்சி (Scene) உரையாடல்(Dialogue) ஆகியன பற்றிய விளக்கங்களையும் தந்துள்ளது. இவற்றோடு தொடர்புடைய தனிமொழி (Monologue) யைப் பற்றியும் கூட அரிஸ்டாடில் பேசியுள்ளார். கண்ணுக்குப்புலப்படாது இன்னொரு பாத்திரம் இருப்பதாக நினைத்துக் கொண்டு பேசும் ஒரு பாத்திரத்தின் நீண்ட சொற்பொழிவுப் பாணி உரையே தனிமொழி. இவையே நாடகப் பிரதியின் இயந்திரவியல்கூறுகள். இக்கூறுகள் அனைத்தும் ஒரு நாடகப்பிரதியில் வெளிப்படுதல் சிறப்பெனக் கருதப்படுகிறது. இவற்றில் ஒன்று குறைவது அதனை நாடகப்பிரதி அல்ல என்று ஆக்கி விடாது.
நாடகப் பிரதியின் படைப்பாக்கக் கூறுகளான கதைப்பின்னல், பாத்திரங்கள், சிந்தனை, மொழிநடை, இசைக்கூறு, காட்சி ரூபம் ஆகியனவற்றைப் பற்றிப் பேசும் போதே அவற்றோடு தொடர்புடைய படைப்பு நுட்பம் சார்ந்த பிரதியின் கட்டமைப்பு வடிவத்தை உருவாக்கும் கலைச்சொற்களையும் விளங்கிக் கொள்ள வேண்டும் என்பது நாடகவியலின் அரிச்சுவடி .
ஆரம்பம் (Introduction ),
முரண்(Contradiction),
சிக்கல்கள்(Crisis) ,
உச்சம் (Climax),
தொடர்நிலை அல்லது வீழ்ச்சி (denouement ),
முடிவு(End )
என்பதான வடிவம் ஒரு நாடகப் பிரதிக்குள் இருக்க வேண்டும் எனவும், அவ்வாறு இருக்கும் நாடகமே நல்திறக் கட்டமைப்பு நாடகம் (Well made Play) என அழைக்கப்படுகிறது.இவையெல்லாம் நாடக இலக்கணத்தை வரையறை செய்யும்நாடகவியலாளர்களின் கருத்து.
நாடகவியல் பற்றி விரிவாகப் பேசும் பழைய நூலான அரிஸ்டாடிலின் கவிதையியல் கூறும் இந்தச்சொற்களின் பொருளில் பரதரின் நாட்டிய சாஸ்திரமும் நாடக வடிவத்தை விளக்கவே செய்துள்ளது. ஒரு விதை மண்ணில் விழுந்து கருவாகி, வளர்ந்து கிளைகளாகப் பிரிந்து காய்த்துக் கனியாகப் பலன் தருவது போல ஒரு செய்தி அல்லது பொருள்பாத்திரங்கள் சார்ந்து முரண் தோன்ற சிக்கல்களால் வளர்ச்சி பெற்று உச்சநிலையை அடைந்து ,கிளைக்கதைகளாகவும் நிகழ்வுகளாகவும் விரிந்து முடிவை நோக்கி நகரும் தன்மையே நாடக வடிவம் என்பதில் பரதரும் அரிஸ்டாடிலும் ஒன்று பட்டே உள்ளனர்.
அர்த்தப்ரக்ரிதீஸ், (ஆரம்பம்,) பிஜம்,(விதை அல்லது கரு) பிந்து,(உந்துசக்தியின் சிந்தனை அல்லது வளர்நிலை) பாடகம்,(கிளை அல்லது கதை) ப்ரகரி, (நிகழ்வுகள் விரிப்பு) கார்யம் ( கனி அல்லதுமுடிவு) என்பன பரதர் தரும் கலைச்சொற்கள். உரையாடலின் தொகுதி காட்சியாக மாறுவதும், காட்சிகளின்தொகுதி அங்கமாக மாறுவதும், அங்கங்களின் தொகுதி நாடகவடிவமாக உருக்கொள்வதும் தான் பரத முனியும் அரிஸ்டாடிலும் சொல்லும் நாடக வடிவம்.
நாடகப்பொருள் அறிமுகமாகி முரண் தோன்றுவதோடு முதல் அங்கம்நிறைவு பெற, இரண்டாவது அங்கத்தில் அம்முரண், சிக்கல்கள் சிலவற்றைச்சந்தித்து உச்சநிலையை அடைவது நிகழும். இம்முரணுக்கான முடிவு மூன்றாவது அங்கத்தின் முடிவில் கிடைக்கும் வகையில் எழுதப்பட்ட நாடகங்கள் நல்திறக் கட்டமைப்பு நாடகங்களாக அறியப்படுகின்றன. நல்திறக் கட்டமைப்புக்கு மூன்றங்க நாடக வடிவம் சிறந்தன என்றாலும் அவற்றினும் சிறந்தன ஐந்தங்க நாடகங்கள் என்பது பலரது கருத்து. நாடக முரண் முதல் அங்க முடிவில் வெளிப்பட அதனைத் தொடரும் சிக்கலின் பயணம் கிளைபிரியும் நிகழ்வுகளாக இரண்டாவது அங்கத்தில் நீளும்போதும், அதன் பயணம் மூன்றாவது அங்கத்தில் உச்சநிலையை அடையும் போதும் பார்வையாளர்களின் ஆர்வம் முனைப்புடையதாக ஆக்கப்படும். அதனைத் தொடர்ந்து விரியும் நிகழ்வுகளை நான்காவது அங்கமாக விரித்து, நாடகத்தின் முடிவை ஐந்தாவது அங்கத்தில் விடுவிக்கும்போது ஆர்வநிலையின் முனைப்பு முடிவை நோக்கி நகர்த்தப்படும் வாய்ப்பு கூடுதலாக ஆகிறது என்பது ஐந்தங்க நாடகங்களை ஆதிரிப்போரின் கருத்து.
உலக அளவிலும் இந்திய அளவிலும் தேர்ந்த நாடகாசிரியர்களாகஅறியப்பட்டுள்ள பலரும் -சேக்ஸ்பியர் தொடங்கி இப்சன்,செகாவ் வரை, காளிதாசன்தொடங்கி கிரிஷ் கர்னாடு வரை மூவங்க, ஐந்தங்க நாடகங்களை எழுதிப் புகழ் பெற்றவர்கள். நாடகப்பிரதி குறித்த இவ்வகையான புரிதல் தமிழில் நாடகம் எழுதியுள்ள பலருக்கும் உள்ளதா என்று கேள்வியைக் கேட்டு ஆய்வு செய்தால், தமிழில் நாடகாசிரியராக அறியப்பட்டுள்ள பலர் காணாமல் போய்விடுவர்.
படைப்பாக்க அரங்கியல்
===================================================================
படைப்பாக்க இசை, நடனம் பற்றிய தெளிவு தேவையாக உள்ளது sir -
அர்ச்சு அர்ஜுன் Archsu Arjun, மட்டக்களப்பு நிகழ்த்துக்கலை மாணவர்
--------------------------------------------------------------------------------------
புதியன செய்தல் என்னும் பொருளில் புழக்கத்தில் இருக்கும் சொல் படைப்பாக்கம். கலையியல் துறை சார்ந்த சொல்லாக அதிகம் புழக்கத்தில் இருக்கிறது. என்றாலும், அச்சொல் எல்லாத்துறைகளிலும் பயன்படுத்தப்படும் சொல்தான். அறிவியல் மற்றும் சமூக அறிவியல் துறைகளில் ஈடுபாட்டுடன் செயல்படும் ஒவ்வொருவருக்கும் படைப்பாக்க மனநிலை என்பது எரிந்துகொண்டிருக்கும் கனல். அக்கனல்தான் ஒருவரின் இருப்பை - தனி அடையாளத்தை உருவாக்கும் முனைப்பு கொண்டதாக மாற்றுகிறது. தனது படைப்புப்பொருளை, வியாபாரப்பண்டமாக நினைக்கும் ஒருவருக்கு இந்தக் கனலின் தகிப்பு இருக்குமெனச் சொல்லமுடியாது.அவரிடம் வெளிப்படுவது ஒன்றை உருவாக்கி, அதன் நகல்களைப் பெருக்கி விற்றுவிடவேண்டும் என்பதுமட்டுமே. ஆனால் புத்தாக்க விரும்பியோ, ஒவ்வொரு உருவாக்கத்திலும் வேறுபாடுகளும் வித்தியாசங்களும் நிகழவேண்டுமென நினைக்கிறார் என்பதை முதலில் மறந்துவிடக்கூடாது.
ஒருவர் தனது விருப்பத்துறையில் புதியன உருவாக்கவேண்டும் என்ற விருப்பத்தைச் செயல்படுத்த முதலில் கற்கவேண்டியன சில உண்டு.மரபுக்கல்வி அதனை இலக்கணங்கள் எனச் சொல்கின்றது. ஒரு துறையின் அடிப்படைக்கூறுகளையும், அவற்றின் இணைவால் உருவாகும் பரப்பையும், அதன் உள்முக வினைகளையும் அறிவதே அத்துறையின் இலக்கணக்கல்வியாகும்.
முதலில் உங்கள் வினாவில் இருக்கும் இசையை எடுத்துக்கொள்வோம். இசையின் அடிப்படைக் கூறு அல்லது மொழி ஒலியும் ஒலியின்மையும். இதனையே சம்ஸ்க்ருதச் சொற்களான சப்தமும் மௌனமும் எனச் சொல்லிப் புரிந்து வைத்திருக்கிறோம். ஒலியின்மை நிலவும் ஒருவெளியை அல்லது பரப்பைக் குறிப்பிட்ட அளவுகளோடு கூடிய ஒலியால் நிரப்பும்போது இசை உருவாகிறது.
நிரப்புவதற்கான அளவு அல்லது வேறுபாடுகளின் எண்ணிக்கையை ஏழு எனவும், அவற்றின் பெயர்கள் ஸ்வரங்கள் எனவும் அறியப்பட்ட ஓரிலக்கணம் கூறுகிறது. அவ்விலக்கணம் எவ்வெவற்றை எப்படி அடுக்கவேண்டும்; எங்கெங்கே கூட்டிக் குறைக்கவேண்டுமென சூத்திரங்களையும் எழுதித் தந்திருக்கிறது. அவற்றை அப்படியே ஏற்று உருவாக்கப்படும் இசை மரபிசை. மரபிசையிலிருந்து மாறுபட்டு உருவாக்கப்படும் இசை புத்தாக்க இசையாக அமைகிறது. மாறுபாட்டை ஓர் இசைக்கலைவாணர், ஸ்வரங்களின் வேதிவினையைக் கலக்குவதின் வழியாகவும் விதிக்கப்பட்ட சூத்திரங்களை மறுப்பதின் வழியாகவும் உருவாக்கக்கூடும்.
விதிகளை மறுக்கவும், புத்தாக்கம் செய்யவும் விரும்பும் இசைக்கலைஞர்கள் எப்போதும் நாடுவது இரண்டு தளங்களாக இருக்கின்றன. இசையின் இலக்கணங்களை அறியாமலேயே இசையோடு இணைந்து வாழும் மக்கள்திரள் எவ்வாறு இசைக்கோர்வைகளை உருவாக்கிக்கொள்கிறது; பயன்படுத்துகிறது; பங்கெடுக்கிறது எனத் தேடுகிறார்கள்.அவ்வாறு கற்றுக்கொண்ட்தைத் தங்களின் படைப்பாக்கத்தில் இணைப்பதின் மூலம் புதியனவற்றின் சாயலை உருவாக்குகிறார்கள். இன்னொரு தளத்தினர் இயற்கையிலேயே ஒலியை எழுப்பும் உயிர்ப்பொருட்களையும் உயிரில்லாப் பொருட்களையும் கவனிக்கிறார்கள்; அவற்றிலிருந்து வெட்டியெடுக்கப்பட்ட ஒலிக்கோர்வைகளை அடுக்கிப் புதிய இசையை கட்டித் தருகிறார்கள். மொத்தத்தில் இருவகையான புதுமைக்குமே அடிப்படைகளை அறிந்து, அதனைக் கைவிடும் எண்ணங்களும், அதனை மாற்றுவதின் மூலமே புத்தாக்கம் சாத்தியம் என நம்பும் மனப்பாங்கும் தேவைப்படுகிறது. அத்தோடு புத்தாக்கம் ஒவ்வொன்றும் தனது காலத்தின் தேவை அல்லது பொருத்தப்பாடு பற்றிய கவனத்தையும் கொண்டதாக இருக்கிறது. தனிநபர் கலையா இசைக்கலையில் புத்தாக்கம் எவ்வாறு நடக்கிறது எனச் சொன்ன இந்த நடைமுறையை ஒவ்வொரு கலைச் செயல்பாட்டிற்கும் அப்படியே பொருத்திக்கொள்ள முடியும்.
இப்போது நடனத்திற்கு வரலாம். நடனத்தின் அடிப்படைக்கூறு இசையின் அடிப்படைக்கூறோடு இணைந்து போகும் உடலின் வினையாக இருக்கிறது. அமைதி நிலவும் ஒரு வெளியில் அசைவற்ற உடல், எழுப்பப்படும் ஒலியின் தூண்டலுக்கேற்ப சித்திரங்களை வரைகிறது; சிற்பங்களாக மாறுகிறது. சித்திரங்களும் சிற்பங்களும் அப்படியே நிலையானதாக இல்லாமல் அசையும் ஓவியங்களாகும், கலையும் சிற்பங்களாகவும் ஆகும் நிலையில் நடனக்கலை வடிவம் கொள்கிறது. அசைதலும் சேர்தலும் கலைதலுமான வினையில் ஈடுபடும் உடல்களின் இயக்கத்திற்குக் காரணமாக இருப்பவை இசை. அந்த இசை புத்தாக்க இசையாக அமையும்போது அதனைத் தொடரும் நடனமும் புத்தாக்க நடனமாக ஆகிவிடுதல் இயங்கியல்தானே.
நாடகச் செயல்பாடு எனவும் அரங்கியல் செயல்பாடு எனவும் நாம் பயன்படுத்தும் சொல்லாடல் இசைக்கோர்வை, நடனக்கோர்வை ஆகிய இரண்டையும் அடித்தளமாக்கிக்கொண்டு, எழுதப்பெற்ற பிரதிக்கு அர்த்தம் தரும் கூட்டுவினை. அதில் புத்தாக்கம் நடைபெறவேண்டுமென்றால், இசைக்கலையில் அல்லது நடனக்கலையில் நடப்பதுபோல தனிக்கலைஞர்களின் முயற்சியால் மட்டுமே நடந்துவிடுவதில்லை. நாடகக்கலையின் முதன்மைப் படைப்பாளி நாடகாசிரியர். அவன் புத்தாக்கம் செய்கிறேன் என்பதை உள்வாங்கிப் பிரதியைத் தரவேண்டும். அப்படியான பிரதி ஒரு மொழியின் புத்தாக்க மொழியாக அமையும். ஆசிரியர் அப்படித்தராத நிலையில் / அந்த இடத்தில் நாடகாசிரியர் இல்லாத நிலையில் நாடகத்தை மேடைக்குரியதாக மாற்றும் நெறியாளர் தனது மறுவிளக்கத்திறனால் புத்தாக்கம் செய்யலாம். அதற்கு அவரோடு வினையாற்றும் மேடைக்கலைஞர்களான நடிக, நடிகையர்கள் உடன்பட்டு வினையாற்றவேண்டும். அதனை உள்வாங்கிப் பின்னரங்கக் கலைஞர்களும் பணியாற்றவேண்டும்.
மொத்த்த்தில் படைப்பாக்கச் செயல்பாடு என்பது ஒரு மனநிலைப்பாங்கு என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும். அந்த புத்தாக்க மனநிலையைத் தான் உணர்ந்ததோடு பார்வையாளர்களுக்குக் கடத்தும் புத்தாக்க வினையை மேற்கொள்கிறோம் என்பதை நம்பவேண்டும். அப்போதுதான் படைப்பாக அரங்கியல் கிடைக்கும்.
கருத்துகள்