தேர்வுகள்- தேர்வுகள்- எழுதும் தேர்வுகள்

நாம் நமது மாணவர்களின் அறிவை மதிப்பெண்களின் வழியாக அளவிடுகிறோம். மதிப்பெண்களை வழங்குவதற்கு நாம் பின்பற்றும் முதன்மையான முறை தேர்வுகள். அறிவின் அளவைத் தீர்மானிப்பதில் தேர்வுகளின் இடம் தவிர்க்கமுடியாதவைதான். ஆனால் தேர்வுகள் - எழுத்துத்தேர்வுகளும் மதிப்பெண்களும் மட்டுமே அறிவை அளக்கும் கருவிகள் அல்ல. நமது நாட்டில் பின்பற்றும் தேர்வுகளும் மதிப்பெண்களும் இளம்வயதினரை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்வதற்குப் பதிலாகப் தடுத்து நிறுத்த - பின்னால் தள்ளிவிட நினைக்கும் ஒருமுறையாக இருக்கிறது.  மதிப்பெண்களின் எதிர்மறைத் தன்மை கருதியே உலகநாடுகள் பலவும் மதிப்பெண்களுக்குப் பதிலாக, மதிப்பலகுகளால்  -Credits- மாணாக்கர்களின் நிலையைக் குறிக்கின்றன. நேற்று இந்திய ஒன்றிய அரசு ஏற்றுக்கொண்டுள்ளதேசியக் கல்விக்கொள்கை -2020 அடுத்தடுத்துத் தேர்வுகளைப் பரிந்துரைத்துள்ளது.
தேசியக் கல்விக் கொள்கை 2020  சில ஆண்டுகளுக்கு முன்பே வந்திருக்க வேண்டியது. அரசுக்கான எண்ணிக்கை பலம் போதாது என்பதால், நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இப்போதுள்ள மூன்றில் இரண்டுபங்கு ஆதரவுநிலையால் முறையான விவாதங்கள் இல்லாமலேயே ஏற்கப்பட்டுள்ளது. இவ்வரைவு அறிக்கைக்கான கூட்டங்கள் 2015 முதலே நடந்தன, பல்வேறு விதமாக நடந்தன. மொழிப்பாடங்களுக்காக மட்டுமல்லாமல் பல்வேறு முன்வைப்புகளோடு நடந்தன. அவற்றை விவாதிக்கும்படி மாநிலக் கல்வி வாரியங்களுக்கும் நிறுவனங்களுக்கும் கூடச் சுற்றறிக்கைகள் வந்ததுண்டு. 

புதுடெல்லியில் இருக்கும் தேசியக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன வளாகத்தில் -NCERT-2017 மே கடைசி வாரத்தில் நடந்த “ பள்ளிக் கல்வியில் மொழிப் பாடத்தின் இடம்” பற்றிய கலந்துரையாடலில் நானும் இருந்தேன். நாட்டின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து வந்த ஆசிரியப் பிரதிநிதிகள் தங்கள் நிலைப்பாட்டைச் சொன்னார்கள். பல்கலைக்கழகப் பேராசிரியர்களும் பேசினார்கள். பெரும்பாலும் இந்தியிலும் உருதிலும் பேசப்பட்ட உரைகளை என்னால் விளங்கிக் கொள்ளவே முடியவில்லை. இந்தி, உருது மொழிகளுக்கு மொழிபெயர்ப்புகள் செய்யப்படவில்லை. கூட்டத்தை ஒருங்கிணைத்த தலைவரும் நாட்டின் ஓரங்களிலிருந்து வந்தவர்களும் ஆங்கிலத்தில் உரையாற்றினார்கள். ஆங்கிலமும் இந்தியும் தெரிந்தவர்கள் அங்கிருந்த போதும் மொழிபெயர்ப்புகளைக் கேட்க ஒருவரும் தயாரில்லை. 'இந்தியா இந்தி பேசுபவர்களின் நாடு; அவர்களுக்கு எதற்கு ஆங்கிலம்' என்ற மனநிலையே அங்கு வெளிப்பட்டது. இங்கே தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் இருக்கிறார். அவர் எனது தமிழ்ப்பேச்சை இந்தி அல்லது ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பார் எனச் சொன்னபோது அனைவரும் முகஞ்சுளித்தனர். முடிந்தவரை நீங்களே ஆங்கிலத்தில் சொல்லிவிடுங்கள் என்பதாகத் தலைவர் வலியுறுத்தினார். அங்கே நான் பேசியதின் சாரம் இதுதான். 

உருவாக்கப்படும் புதிய கல்விக்கொள்கைகளில்   மொழிக்கல்வி எப்போதும் சுமையாக இருக்கக் கூடாது என்பது அனைவரும் வலியுறுத்தும் ஒன்று. மொழி என்பது தகவல் தொடர்புக்கான கருவியாக - அமைப்பாக - இருக்கிறது என்பது முதல் புரிதல். அதோடு மொழிதான் ஒருவரது எல்லாவகையான அடையாளத்தையும் உருவாக்குகிறது. தமிழர்களின் இருப்பும் அடையாளமும் அவரது மொழியில் - தமிழ்நாட்டில் தமிழ் வழியாகவே - உருவாகிறது. தமிழைத் தாய்மொழி என்பதைவிடவும் தமிழ் நாட்டின் புழங்குமொழி  . அதன் வழியாக உருவான அடையாளத்தையும் இருப்பையும் வெளிப்பாட்டையும் உலகத்திற்குச் சொல்ல ஒரு மொழி வேண்டும். அது ஆங்கிலமாக இருப்பதில் தமிழர்களுக்கு லாபம். மத்திய இந்தியாவில் இருப்பவர்களுக்குப் புழங்கு மொழியாக இருக்கும் இந்தியே இரண்டுமாக இருக்கிறது. அதன் வழியாகத் தொடர்புகொள்ளுதலே போதும் என்றால் அதை வைத்துக் கொள்ளலாம். உலகத்தோடு தொடர்புகொள்ள வாய்ப்பு வேண்டாம் என நினைத்தால் இந்தியே போதும் என நினைக்கலாம். ஆனால் இந்தியில் உலகின் அறிவு அனைத்தும் இருக்கிறது எனச் சொல்லமுடியாது. உலக அறிவுக்காக இந்தியர்கள் ஒவ்வொருவரும் ஆங்கிலம் கற்கவே வேண்டும். ஆனால் புதிய கல்விக் கொள்கையில் மும்மொழி கற்பிக்கப்படும் எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் அறிவுப்பாரம்பரியமும் பெருமையும் சம்ஸ்க்ருதம் என்ற மொழியில் இருப்பதாக ஆட்சியாளர்கள் நினைக்கிறார்கள். அதனை அனைவரும் கற்றே தீரவேண்டும் என நினைக்கிறார்கள். 

எந்த மொழியும் கட்டாயம் இல்லை என்று சொல்லப்பட்டாலும் ஆசிரியர்கள், கற்க வாய்ப்பு, கற்றால் கிடைக்கும் வாய்ப்பு போன்றவற்றால் சம்ஸ்க்ருதக் கல்வி ஒன்றே அதிக வாய்ப்புடைய மூன்றாவது மொழி என்ற நிலை காலப்போக்கில் உருவாக்கப்படும். அதேபோல் ஆங்கிலத்தின் இடத்தில் இந்தி என்ற நிலையை உருவாக்கவேண்டும் என்பதும் அரசின் நீண்ட காலத்திட்டம். இந்திபேசும் மக்களுக்குச் சாதகமான இந்நிலையையே இந்தியாவில் இணைந்திருக்கும் மற்றவர்களும் பின்பற்ற வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் முதல் ஐந்தாண்டுக்கல்வி - ஐந்தாம் வகுப்புவரை அனைவரும் அவரவர் தாய்மொழியில் - மாநிலத்தின் புழங்குமொழியில்தான் கற்க வேண்டும் எனக் கூறுகிறது இக்கொள்கை. அரசு இதனை நடைமுறைப்படுத்தவே பெரும்பாடுபடவேண்டும். வெவ்வேறு கல்விக்கொள்கையைப் பின்பற்றும் இந்தியப்பள்ளிகள் - பாடமுறைகள் கடுமையாக எதிர்க்கவே செய்யும்.

இப்போதிருக்கும் பள்ளிக் கல்வி தமிழ்நாட்டில் 10 +2 என்பதாக இருக்கிறது. சில மாநிலங்களில் 8+2+2 என்பதாக இருக்கிறது. தமிழ்நாட்டிலும் கூட இப்படி இருந்ததுண்டு. நானெல்லாம் 8+3 என்ற அமைப்பில் பள்ளிக்கல்வியை முடித்தவன். எட்டாம் வகுப்பில் ஒரு பொதுத்தேர்வு. திரும்பவும் மூன்றாண்டுகளுக்குப் பிறகு 11 - இல் ஒரு தேர்வு. பள்ளியிறுதித்தேர்வு அது. அதில் பெற்ற மதிப்பெண்களோடு கல்லூரிக்குள் நுழைய வேண்டும். அங்கே புகுமுக வகுப்பு. பல்கலைக்கழகம் நடத்தும் பொதுத்தேர்வு. அதைத் தாண்டினால் பட்டப்படிப்பு. பட்டப்படிப்பில் ஆண்டுக்கு இரண்டு பருவங்கள்.ஒவ்வொரு பருவத்திலும் பொதுத்தேர்வு. பொதுத்தேர்வுகளுக்கு முன்னால் உள்மதிப்பீட்டுத்தேர்வு ஆறு பொதுத்தேர்வுகள். எங்களுக்கு முன்னால் பருவத்தேர்வுகள் இல்லாமல் ஆண்டுத்தேர்வுகளே இருந்தன. இளங்கலையிலும் முதுகலையிலும் ஆண்டுக்கொரு தேர்வு எழுதி இளநிலை, முதுநிலைப் பட்டங்களைப் பெற்றவர்கள் பெரும்பாலும் ஓய்வுபெற்று விட்டார்கள்.
 
இப்போது ஏற்கப்பட்டுள்ள பள்ளிக்கல்வி 5+3+3+4 எனப்புதிய அமைப்பைக் கொண்டிருக்கிறது.இந்தக் கல்வித்திட்டம் அமைப்பு இந்தியா முழுக்க ஒன்றுபோல இருக்க வேண்டுமெனப் பரிந்துரைக்கின்றது. ஒற்றை இந்தியாவில் ஒரே பண்பாட்டைக் கல்வி மூலம் உருவாக்கமுடியும் என நம்புவதின் வெளிப்பாடு இது. அத்தோடு இப்போதிருக்கும் கல்வித்திட்டமும் நடைமுறைகளும் தரப்படுத்துதலைக் கைவிட்டுவிட்டுத் தாராளவாதத்தோடு அனைவரையும் உயர்கல்விக்குரியவராக மாற்றுகிறது என்ற நம்பிக்கையும் இத்திட்ட வரைவை உருவாக்கியவர்களுக்கு இருக்கிறது. இவ்விரு நம்பிக்கைகளையும் பொய்யெனவும் தவறான நம்பிக்கைகள் எனவும் சொல்லிவிட  முடியாது. 

இந்தியாவை ஒரே பண்பாடுகொண்ட நாடாக ஆக்க வேண்டுமா? எனக் கேள்வி எழுப்பலாம். தேவையில்லை; வேண்டாம் எனப் பதில் சொல்லலாம். ஆனால் தரமில்லாத கல்வியைப் பெற்றவர்கள் உயர் பட்டங்களைப் பெற்றுவிடலாமா? என்று கேள்வி எழுப்பினால் அதே போல் "தேவையில்லை; வேண்டாம்" என்று சொல்ல முடியாது. சொல்லமாட்டோம். அங்கிருந்துதான் தரப்படுத்துதல் வேண்டும் என்ற எண்ணம் உருவாகிறது. 

தரப்படுத்துதல் என்பதை இந்தியக் கல்வியாளர்கள் - திட்டமிடல் குழுக்களில் இருந்த கல்வியாளர்கள் - தேர்வுகள் நடத்தி வடிகட்டுதல் என்பதாகப் புரிந்து வைத்திருப்பதால் வெவ்வேறு நிலையில் தேர்வுகளைப் பரிந்துரைக்கிறார்கள்.தர்ப்படுத்தலுக்காக 3 வயது தொடங்கி மாணாக்கர்கள் கண்காணிக்கப்படுவார்கள் என்கிறது கொள்கைத்திட்டம். மூன்று வயதில் தொடங்கி 15 ஆண்டுகள் நீளும் பள்ளிக்கல்வியில் ஆறு கட்டங்களில் தேர்வுகளைச் சந்திக்கவேண்டும்.  தேர்வுகளில் தேர்ச்சி பெறாதவர்கள் திசைமாற்றம் பெறுவார்கள்; வலியுறுத்தப்படுவார்கள். கொள்கைத் திட்டங்களில் சொல்லப்படும் வெளிப்படையான நோக்கங்களும் விளைவுகளும் எப்போதும் ஒன்றுபோல நடப்பதில்லை. மறைக்கப்பட்ட நோக்கங்களே விளைவுகளாக ஆகிவிடும். ஒரு நூற்றாண்டுக்கு முன்புவரை கல்வி மறுக்கப்பட்ட மக்கள் திரளைக் கொண்ட இந்த நாட்டில் ‘நானும் படிக்கலாம்’ என்பதை உணர்ந்துவிட்ட நிலையிலேயே மறுக்கும் நிலையைத் தரப்படுத்துதலின் பேரால் திசைமாற்றம் செய்வது அவசியமா என்பதையும் நாம் யோசிக்கவேண்டும். 

பள்ளிக்கல்வியிலேயே பல கட்டத் தேர்வுகளை வைத்து வடிகட்டும் - அடித்தள மக்களைத் திசை திருப்பும் நோக்கம் இத்திட்ட வரைவுக்கு இருக்கிறது. எல்லோரும் உயர்கல்விக்குரியவர்கள் - புலங்கள் சார் அறிவுபெறும் உயர்கல்விக்குரியவர்கள் என்பதை மறுதளித்துப் பெரும்பான்மை மக்களைத் தொழில்சார் அறிவின் பக்கம் திசை திருப்பும் நோக்கம் இருக்கிறது.இதனைத் திசைதிருப்பல் என்ற கெட்ட வார்த்தையால் சொல்லாமல் வளர்ச்சிக்கான மனிதர்களை உருவாக்கும் நோக்கம் இருக்கிறது என்றும் சொல்லலாம். இந்த முறை பல நாடுகளில் இருக்கும் முறைதான்.ஆனால் அங்கெல்லாம் பிறப்பின் அடிப்படையிலான சாதியின் பெயரால் - மனிதர்களைப் பிரிப்பதும், வாய்ப்புகளை மறுப்பதும் நடப்பதில்லை. இந்தியாவில் அதுமட்டுமே நடந்தது. திரும்பவும் நடக்கலாம். 

இந்தியாவில் இந்தத் தேர்வுகள் பெரும்பாலும் எழுத்துத் தேர்வுகளாக இருக்கின்றன. எழுத்துத் தேர்வுகளை முடித்துவிட்டால் வாய்மொழித் தேர்வுகள் பெரிதாகத் தடையாவதில்லை. வாய்மொழித்தேர்வுகளில் மாணவர்கள் பங்கேற்பு இல்லாத நிலையில் கல்வி நிர்வாகம், ஆசிரியர்களின் விருப்பம் அதிகம் வேலை செய்யும். தேர்வுமுறைகளில் மாற்றங்களைப் பரிந்துரைக்காமல், வெளிப்படையாகத் தரப்படுத்துதல் நடக்காமல் அடுத்தடுத்து தேர்வுகளை எழுத வைப்பதின் மூலமும் தோல்வி எனச் சொல்வதின் மூலமும் ஒருவரை அறிவுக் குறைவானவர் என நம்பச் செய்துவிட முடியும். உள்ளடக்க மாற்றங்களை முன்வைக்க வேண்டும்.

புதிய கல்விக்கொள்கை விருப்பத்தேர்வாக இருந்த மழலையர் வகுப்புகளைக் கட்டாயக் கல்வியின் பகுதியாகப் பரிந்துரை செய்துள்ளது. இந்தப் பரிந்துரையின் பின்னால் உள்நோக்கங்கள் இல்லை என வாதிடுபவர்களுக்கு உள்நோக்கம் இருக்கிறது. குடும்பத்தின் மூத்த உறுப்பினர்களின் வழியாக மூன்று வயதிலேயே வேதங்களைப் பாராயணம் செய்யவும், சுலோகங்களை மனனம் செய்யவும் பழக்கப்படுத்தும் குடும்பச்சூழலை மட்டுமே அறிந்தவர்களின் முன்வைப்பு இது. இதே முறையைப் பின்பற்றித் தேவாரப் பதிகங்களையும் ஆழ்வார் பாசுரங்களையும் மனனம் செய்யும் குடும்பங்களும் உண்டு. இவ்விரண்டு போக்கிலிருந்து விலகித் தினம் 10 குறள் என மனனம் செய்யும் திணிப்பைத் திறன் வளர்க்கும் கல்வியாகச் செய்து கொண்டிருக்கும் வீட்டுக் கல்வி இந்தியாவில்/தமிழ்நாட்டில் ஏற்கெனவே இருக்கிறது. சிறப்பான வாழ்க்கைமுறை வாய்ப்புகளைக் கொண்ட குடும்பங்களின் நடைமுறை. இந்த நடைமுறையைப் பொதுக்கல்வியின் பரப்புக்குள் கொண்டுவருவதின் நோக்கம் என்னவாக இருக்கும்? குழந்தமைப் பருவத்திலேயே தனது இயலாமையை உணர்ந்து பின்வாங்கும் கூட்டத்தை உற்பத்தி செய்யும் தந்திரம் இது எனச் சொலவது குற்றச்சாட்டல்ல. நிகழப்போகும் நடைமுறை.

மரபான குடும்பக் கல்வியை - மனனம் செய்து ஒப்பிக்கும் திறனைத் தங்கள் குழந்தைகள் பெற முடியவில்லையே என்ற தவிப்பில் தத்தளித்த நடுத்தர வர்க்கத்துப் பெற்றோர்களின் ஆசையின் வடிகாலாக வந்தன கிண்டர்கார்டன் வகுப்புகள் என்னும் மழலையர் பள்ளிகள். அதன் வருகையை ஒருவரமாக நினைத்தார்கள் நடுத்தரவர்க்கத்துப் பெற்றோர்கள். குறிப்பாகப் பெண்கள் மழலையர் பள்ளிகளில் கற்றுக்கொண்டு வந்து பாடிக்காட்டிய ஆங்கிலப் பாடல்களைத் திரும்பத் திரும்பச் சொல்ல வைத்துப் புளகாங்கிதம் அடைவதை இந்திய நகரங்களின் புறநகர்ப் பகுதிகளில் காணலாம். இந்தப் புளகாங்கிதம் தமிழ்நாட்டுக் கிராமங்களின் திண்ணைகளுக்கும் இடம் பெயர்ந்துவிட்டது. நகரம், கிராமம் என எல்லா வெளிகளிலும் பரவிவிட்ட நடுத்தரவர்க்க மனோபாவத்தின் வேகம் இது. முறையான கல்வி அறிவால் வாழத்துடிக்கும் புதுவகை மனிதர்களின் கூட்டம் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்காகச் செலவழிக்கும் தொகை குடும்ப வருமானத்தில் 25 சதவீதத்திற்கும் மேலாக இருந்தாலும் கவலைப்படுவதில்லை. கடன் வாங்கியும் கேஜி வகுப்புகளில் நுழைத்துவிட்டு நிம்மதிப் பெருமூச்சு விடுகின்றன. 

மழலையர் பள்ளிகளின் உலகளாவிய தோற்றத்திற்குப் பின்னால் நேர்மறையான காரணம் ஒன்றும் உண்டு. கூட்டுக்குடும்ப அமைப்பைத் துறந்து, தனிக்குடும்ப அமைப்புக்குள் நுழைய வேண்டிய நெருக்கடியை உருவாக்கிய முதலாளித்துவப் பொருளாதாரத்தின் கண்டுபிடிப்பு அது. முதலாளித்துவப் பொருளாதாரத்தின் கருத்தியல் உருவாக்கத்தின் நல்விளைவுகளில் ஒன்று. பெண்களின் உரிமைகள் பற்றிய உணர்தல் நிலை. வீட்டு வேலைகளோடு முடங்குப் போகும்படி வலியுறுத்திய நிலமானிய அமைப்புக்கு மாற்றாக உருவான முதலாளித்துவம், பெண்களையும் சம்பளம் பெறும் பணிகளுக்குத் தயார்படுத்தியது. பெண்ணும் ஆணும் சம்பளம் பெறும் வேலைக்குச் செல்லும் சமூகக் கட்டமைப்பு உருவாக்கத்தோடு உருவானவை மழலையர் பள்ளிகள். 

அன்னையின் அன்பையும் சகமனிதர்களோடு பழக வேண்டிய கட்டாயத்தையும், ஒவ்வொருவரின் தனித்தன்மையை அங்கீகரிக்கவேண்டும் என்ற உணர்வையும் உருவாக்கவேண்டும் என்பதைக் கற்றுத் தருவதுதான் மழலையர் பள்ளிகளின் முதல் நோக்கம். இந்நோக்கத்தோடு இணைந்தது கூட்டாக விளையாடுதலும் கூட்டாகப் பணிசெய்தலும் என்பதை உணரச் செய்தல் இரண்டாவது நோக்கம். மழலையர் பள்ளிகளின் மூன்றாவது கடமைதான் எழுத்தும் எண்ணும் கற்றுத்தருதல். ஆனால் இப்போது வந்துள்ள கல்விக்கொள்கை ஆரம்பம் முதலே தேர்வுகள் வழியாகக் கண்காணிப்பை முதன்மையாக்கியுள்ளது.   

இந்தியாவில் குழந்தைகளைப் பராமரிக்கும் பணியைச் செய்கின்றன மழலையர் பள்ளிகள். மாணவர் சேர்க்கைக்குக் கட்டுப்பாடு கிடையாது. குழந்தைகளுக்குப் போதிய இடவசதி கிடையாது. பால் மணம் மாறாத சிறார்களைப் பேணும் ஆசிரியர்களுக்குப் போதிய பயிற்சிகளும் இல்லை. பெற்றோர்களின் வேலைநேரத்தில் பார்த்துக் கொள்ளும் பொறுப்பை எடுத்துக் கொண்டு அதற்குக் கூலிபெறும் நிறுவனங்களாக இருக்கின்றன .மழலையர் பள்ளிகளுக்கான அடிப்படை நோக்கத்தை உணர்ந்தவர்களாக இருப்பதில்லை. யோகா, கராத்தே, பரத நாட்யம், இசை வகுப்புகள் என அனைத்தையும் மழலையர் பள்ளிகளின் பாடத் திட்டத்தின் பகுதியாக மாற்றி ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாகப் பணம் வசூல் செய்கின்றன இந்திய மழலையர் பள்ளிகள். ஆமாம் இந்தியாவின் மழலையர் பள்ளிகள் பணம் காய்க்கும் மரங்கள். விரைந்து பலன் தரும் ஒட்டு மரங்கள். 

அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் சில மழலையர் வகுப்புகள் நடக்கும் முறையைப் பார்த்திருக்கிறேன். பள்ளிக்கு முன், மழலைக் கல்விக்கு முன், மழலைக் கல்வி என மூன்று வகுப்புகள் மட்டுமே நடத்தும் பள்ளியைப் பள்ளியென்றுகூடச் சொல்வதில்லை. கலையகம் என்று பெயரிட்டு அழைக்கிறார்கள். அங்கு எல்லா நாளும் குழந்தைகளை வரச் சொல்வதில்லை. தொடக்க நிலையில் வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே. பின்னர் மூன்றுநாட்கள். ஆனால் கலையகம் தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கிறது. ஒரே இடத்தைப் பலருக்கும் பயன்படும் விதமாக மாற்றிக் கொள்கிறார்கள். மழலையரோடு மழலையராகக் கலந்துவிடும் ஆசிரியைகள், விளையாட்டுக் கருவிகள், வண்ணந்தீட்டிகள், படங்கள் நிரம்பிய புத்தகங்கள், விளையாட்டு மைதானம் என அந்தச் சூழலில் பொருந்திப்போய்விட்டுத் திரும்புகிறது குழந்தை. 

பள்ளியொன்றின் அலுவலகப் பெண்ணோடு பேசிக்கொண்டிருந்தபோது அவள் சொன்னாள். லாபநோக்கமற்று நடக்கும் இந்தப் பள்ளிக்கட்டிடமே லாபநோக்கத்தோடு இசைவகுப்புகள், யோகா வகுப்புகள், ஓவிய வகுப்புகள் என வேறு நேரங்களில் நடக்கும் இடமாக இருக்கிறது என்றாள். ஒன்றைப் பலவாகப் பயன்படுத்தும் நோக்கத்தால், மாணவர்களின் கல்விக்காகப் பணம் வசூலிப்பது குறைவுதான் என்றார். இந்தப் புரிதலையெல்லாம் நமது புதிய கல்விக்கொள்கையின் வரைவறிக்கை பேசவில்லை. அதன் நோக்கம் 3 வயதிலேயே கற்பித்தலின் சுமையை ஏற்றிச் சுமைக்க முடியாதவர்களாக உணரச் செய்வதுதான். கற்பித்தலிலிருந்து விலகுபவர்களை ஊக்குவிக்கும் நோக்கத்திற்குப் பின்னால் குறைந்த கூலிக்கு வேலை செய்யும் மனிதக் கூலிகளை உருவாக்க முடியும் என்ற தீர்மானமான நம்பிக்கை அதற்கு இருக்கிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தி.சு.நடராசனின் திறனாய்வுப் பார்வைகள் :தமிழ் அழகியல், தமிழகத்தில் வைதீக சமயம்

உடல் மறுப்பு என்னும் பெரும்போக்கு

கற்றல் - கற்பித்தல்: மாணவ ஆசிரிய உறவுகள்