கொரோனாவோடு வாழ்ந்தது -ஜூலை

போதும் அடங்கல்கள்

நோய்களுக்கு மருந்தே தீர்வளிக்கும். தொற்று நோய்களுக்கும் உடனடி மருந்துகளும் தடுப்பு மருந்துகளும் தீர்வளிக்கும் என்பதோடு, ஒதுங்கியிருத்தலும் ஒதுக்கி வைத்தலும் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பரவலைத் தடுக்கும் என்பது அனுபவங்கள். 

கொரோனா தொற்றுகளுக்காக உலகநாடுகள் ஒவ்வொன்றும் பின்பற்றிய அடங்கல்கள் பெருமளவு பயன் விளைவித்தனவா? என்பது இப்போது கேள்விக்குறியாக மாறியுள்ளன. எல்லாவற்றையும் தள்ளிப்போடும் மனநிலை கொண்ட திட்டமிடல்களிலேயே பழகிப்போன அரசுகள் இன்னும் ஒரு அடங்கல் எனத் தள்ளிப்போடல் என நினைக்கவேண்டியதில்லை. எல்லாவகையான அடங்கல்களையும் கைவிட்டுவிட்டுத் தனிமனிதர்களை விழிப்புணர்வு கொண்டவர்களாக மாற்றுவதற்கான பணிகளைத் தொடங்கவேண்டும் என்ற பாதையில் அரசுகளும் அமைப்புகளும் சிந்திக்கவேண்டும். 


நோய் இதுதான்; அதனைத் தடுக்கும் மருந்து இதுதான் எனச் செயல்படும் நவீன மருத்துவம், முதல் கட்ட அறிவைக் கொண்டிருக்கிறது. இரண்டாவது கட்டத்தில் கையைப் பிசைந்து கொண்டிருக்கிறது. கொரோனா நுண் உயிரிகளின் அளவு, இயக்கம், செயல்பாடு, விளைவுகள் என எல்லாவற்றையும் துல்லியமாகச் சொல்லும் மருத்துவ அறிவு, அதற்கான மருந்தைக் கண்டு பிடிக்கும் ஆராய்ச்சிகளில் முடிவுகளை எட்டவில்லை. நோயை அடையாளப்படுத்துவதில் பெரிதாக ஆர்வம் காட்டாதவை மருத்துவ முறைகள். சித்த மருத்துவம், ஆயுர்வேதம் போன்ற இந்திய மரபு முறைகள் நோய்த்தாக்கம் கொண்ட உடலின் பகுதிகளுக்கான மருந்துகளைப் பரிந்துரைக்காமல், மொத்த உடலிலும் நோயெதிர்ப்பு சக்தியைக் கூட்டுதல் என்னும் உத்திகள் வழியாக நோயிலிருந்து மீட்டெடுத்தல் என்பதைச் செய்கின்றன. 
நோயாளிகளையும்,நோயின் அறிகுறிகள் உடையவர்களையும் தனித்திருக்கச் செய்வதன் மூலம் பரவலைத் தடுத்துக் கட்டுப்படுத்திவிட முடியும் என நினைத்த ஆரம்பக்கட்ட நோக்கங்கள் இப்போது பொய்யாகிவிட்டன. முதலில் அறிந்த சீனா கடைப்பிடித்த அதே உத்தியையே மூன்று மாதங்கள் கழித்து இந்தியாவிலும் அறிமுகம் செய்தோம். அந்த மூன்று மாதங்களில் கொரோனாவை நோய்ப் பிரச்சினையாக மட்டுமே உலகம் புரிந்திருந்தது என்பதுதான் பெரிய ஆச்சரியம். பரப்பளவில் குறைவானவைகளாகவும் மக்கள் தொகையில் அடர்த்தியற்றவைகளாகவும் இருக்கும் ஐரோப்பிய நாடுகளே அவ்வாறு நினத்து அடங்கலை அறிமுகம் செய்தன. இந்தியாவும் நாட்டடங்கை அறிமுகம் செய்தது. ஆனால் இந்தியாவில் கொரோனா நோயாக மட்டும் பாதிப்பு உண்டாக்கக் கூடிய நோயல்ல; தேசத்தின் பொருளியல் நடவடிக்கைகளை - பெருந்திரளான மனிதர்களின் அன்றாட வாழ்க்கையைக் கேள்விக்குள்ளாக்கும் ஒன்று என்பதை முதல் ஊரடங்கிலேயே உணரத் தொடங்கினோம். உணர்ந்தாலும் அரசுகள் அதற்கேற்ப முடிவுகளை எடுக்கவில்லை. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் என்னும் பேரச்சம் பற்றிப்படர்ந்துவிட்டது. 
முதல் ஊரடங்கு முடிவிலேயே உணவு உற்பத்தி மற்றும் விநியோகம் சீராக நடக்கவேண்டும். வேளாண் உற்பத்தியை உறுதிசெய்யும் விதமாக ஊரடங்கு விதிகளில் தளர்வு நடைபெற்றால் மட்டும் போதாது. உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களை உண்ணும் வகையிலான வடிவங்களில் மாற்ற வேண்டும். அதனை நுகர்வோருக்குக் கொண்டு சேர்க்கவேண்டும். இவை நடக்கவில்லை என்றால் இந்தியா போன்ற நாடுகள் நோயைத் தாண்டிய பெரும்பிணியாகப் பசியை எதிர்கொள்ள நேரிடும். பசியின் வெளிப்பாடுகள் ஏற்கெனவே தொடங்கி விட்டன என்ற குரல்கள் ஒலித்தன. ஆனால். அதனைக் கவனித்துச் சொல்லும் திசையில் ஊடகங்கள் கவனம் செலுத்தவில்லை. அரசுகளும் கவனம் செலுத்தவில்லை. 

பொதுச்சமூகம் நிலைமையை அறியாமல் இருந்தது.இப்போதும் அப்படியே இருக்கிறது. 
உற்பத்தித் துறையினர் மட்டுமல்ல; சேவைத் துறைப் பணியாளர்கள் அவர்களின் பணிக்குத் திரும்ப வேண்டும். அதற்கும் முன்பாகப் பணிக்குப் போக இருக்கும் நபர்களுக்குத் தக்க பாதுகாப்பு நடவடிக்கைகளையும் பரிசோதனைகள் செய்யும் கருவிகளையும் கொண்டுவரவேண்டும். அவசியத் தேவைகள் போன்றவற்றோடு நேரடித் தொடர்பு கொண்டவர்கள் தக்க சோதனைகளுடன் பணிக்குச் சென்றாக வேண்டும். நோயைக் கட்டுப்படுத்தும் பணியில் தீவிரம் காட்டும் அரசுத் துறைகள் இணையாகவே இதனையும் கணக்கில் கொண்டு திட்டமிட்டிருக்க வேண்டும். ஆனால் திட்டமிடவில்லை . தொடர்ந்து அரசுகள் திட்டமிடல் பிழைகளைச் செய்தன என்றுதான் சொல்ல வேண்டும். 


ஊரடங்கைத் தளர்த்தி விழிப்புணர்வுப் பரப்புரையைத் தொடங்கியிருக்க வேண்டும். 
கொரோனாவைப்பற்றி தொலைக்காட்சி அலைவரிசைகள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மணித்துளியும் இதைச் சொல்லிக் கொண்டிருந்தன என்பது உண்மைதான். ஆனால் அவையெல்லாம் அச்சமூட்டும் புள்ளிவிவரஙக்ளாகவே இருந்தன. நகர எல்லைக்குள் நிற்கும் காவலர் பிடித்தால் தண்டம் கட்டவேண்டியதிருக்கும் என்பதால் வண்டியின் பின்புறம் கட்டித் தொங்கவிட்டிருக்கும் தலைக்கவசத்தை- ஹெல்மட்டை - எடுத்து மாட்டிக்கொள்ளும் மனப்பாங்கில் தான் கொரோனாவைத் தடுக்கும் ஒரு எச்சரிக்கையாகச் சொல்லப்பட்ட முகமூடிகளை நினைத்தார்கள் மக்கள்; இப்போதும் அப்படித்தான் நினைக்கிறார்கள். அங்காடிகளிலும் சந்தையிலும் சேரும் கூட்டம் தன்னைத் தனித்து வைத்துக் கொள்ள வேண்டும்; அது தனது உடல்நலத்தோடு தொடர்புடைய நடவடிக்கை என்று நினைப்பதே இல்லை. வரிசையில் சென்று நுகரும் பழக்கம் தேவைப்படும் வங்கிகள், ரயில் பயணச்சீட்டு பெறும் திட்டிவாசல்கள், திரையரங்குகள், கோயில்கள் போன்றவற்றில் வரிசையாக நிற்பதை இழுக்காக நினைக்கும் மனநிலைதான் இங்கேயும் தொடர்கின்றன. அதன் தொடர்ச்சியைத் தான் மதுக்கடை வாசல்களில் முண்டியடித்த காட்சிகளின் வழியாகப் பார்த்தோம். 

60 நாட்கள் ஏன் ஊரடங்கில் இருந்தோம் என்பதை விளக்கிச் சொல்லும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் இன்னும் தீவிரமாக நடத்தப்பட வேண்டும். இந்திய மக்களில் ஒருசாரார் எல்லாவற்றையும் கொண்டாட்டங்களாகவும் களியாட்டங்களாகவும் நினைத்துப் பொழுதுபோக்காகப் பார்க்கின்றனர். இன்னொருசாரார் எல்லாவற்றையும் சமய நடவடிக்கைகளாகவும் சடங்குகளாகவும் அவற்றிற்கான நேர்த்திக்கடன் நிறைவேற்றல்களாகவும் பார்க்கின்றனர். இரண்டு மனப்பாங்குகளும் மாற்றப்படவேண்டும். மாறாத நிலையில் பரப்புரைகளால் எந்தப் பயன்களும் ஏற்படாது. ஏனெனில் இவ்விரு மனப்பாங்குகளும் விருப்பமில்லாதவர்களை ஒதுங்கிக்கொள்ள அனுமதிக்கும் வாய்ப்புக் கொண்டவை. ஆனால் மருத்துவம், நோய்த்தடுப்பு போன்றவை விலகலை அனுமதிக்காதவை. அதிலும் கொரோனோ போன்ற தொற்றுநோய்க்கெதிரான பரப்புரைகளிலிருந்து ஒருவருக்கும் விலக்களிக்க முடியாது. 
ஊடகங்கள் தரும் புள்ளிவிவரங்கள் தரும் அரசுகளின் செயல்பாடுகளைப் பாராட்டும் நோக்கம் கொண்டனவாக இருக்கின்றன. ஏனென்றால் அவை அரசுகளின் அறிக்கைகள் மட்டுமே. அதனையும் தாண்டிச் சமூக ஊடகங்களும் தனிநபர் தகவல்கள் வழியாக உயிர் பயம் வந்திருக்கிறது. விதி வந்தால் சாவோம் என நினைக்கும் மனநிலை மாற்றப்பட வேண்டும். மனிதர்களின் மரணங்களுக்குப் பொறுப்பில்லாமல் இருப்பதும் காரணம் என்பதை உணர்த்த வேண்டும். இப்போது கடும் எச்சரிக்கைகளும் பரப்புரைகளும் ஒவ்வொரையும் சென்றடையவேண்டும். அவற்றின் வழியாகப் பழக்கப்படுத்துதல் உடனடித் தேவை. அப்பழக்கம் அவரவர்களைக் காத்துக்கொள்ளும் 
எச்சரிக்கையோடு கூடியதாக இருக்கும். 

தன்னிறைவும் தன்னடங்கலும் நமது பிரதமரும் 

நான்காவது தன்னடங்கலை நீட்டித்தும் வலியுறுத்தியும் இந்திய ஒன்றியத்தின் தலைமை அமைச்சர் திரு.நரேந்திரே மோடி நேற்றும் உரையாற்றினார். ஆன்மீக வழிகாட்டல் உரையாளர்களுடன் போட்டிபோடும் உரைகளை எப்போதும் தருகிறார். அவரது பாணியை மாற்றமுடியாது. 

இந்த உரையில் உச்சரித்த சொற்றொடர் ஒன்று - தன்னிறைவு நேற்றிலிருந்து தொல்லை தந்துகொண்டே இருக்கிறது. முன்பே அறிமுகமான ஒரு சொல்லை இன்னொருவர் வேறொரு பொருளில் பயன்படுத்தும்போது அவரைப் பற்றி உண்டாகும் கருத்துகள் எதிர்மறையாகவே தோன்றும். அந்த எதிர்மறை மனோபாவத்தை வெளிப்படுத்த , அபத்தமாகப் பேசுகிறார் என்று சொல்லிவிட்டு ஒதுங்கிவிடலாம். முட்டாள்தனமாகப் பேசுகிறார் எனக் கோபப்படலாம். 
Self Sufficent- தன்னிறைவு, Self-Help - தன் உதவி என்ற சொற்கள் இருபெரும் ஆளுமைகள் வழியாக அறிமுகமாகியிருக்கிறது. இரண்டுமே இந்திய வாழ்க்கையைப் பற்றிய சொல்லாடலாகவே அறிமுகமாகியிருக்கிறது. தன்னிறைவு பற்றி விவாதித்தவர் கார்ல் மார்க்ஸ். தன் உதவி பற்றிப் பேசியவர் மோகன் தாஸ் காந்தி. இவ்விருவரின் வழி நடக்காத - நடக்க விரும்பாத ஒருவர் அச்சொற்களைப் பயன்படுத்தும்போது வேறுவிதமாகவே பேசுவார் என்பது புரிகிறது. திரு. நரேந்திரமோடி நேற்று அப்படித்தான் பேசுகிறார். 
இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி பற்றிய தனது கட்டுரைகளில் கார்ல் மார்க்ஸ், தன்னிறைவு கொண்ட இந்தியக் கிராமங்கள் என்ற சொல்லாடலை விளக்கி விவாதிக்கிறார். அவர் விவாதித்தது கிழக்கிந்தியக் கம்பெனியின் நுழைவுக்காலம். ஐரோப்பாவிலிருந்து வணிகநோக்கத்தோடு ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளுக்குப் போன ஐரோப்பியர்கள் அங்கிருக்கும் நிலமானிய அமைப்புகளை முடிவுக்குக் கொண்டுவந்து, முதலாளியப் பொருளியல் உறவுகளைக் கொண்டுவர முயல்வார்கள். அந்த முயற்சிகள் இந்தியாவில் வெற்றியடையாமல் போகலாம். ஏனென்றால், இந்தியக் கிராமங்கள் ஒருவிதத்தன்னிறைவுத் தன்மை கொண்ட அமைப்புகளாக இருக்கின்றன. மேலிருந்து இறங்கும் முதலாளிய உறவுகள் கீழிறங்கித் தன்னிறைவு கொண்ட இந்தியக் கிராமங்களை மாற்றம் செய்வது எளிதானதல்ல என்று பேசுகிறார். இந்தியாவில் மட்டுமல்லாமல் இன்னும் சில ஆசிய நாடுகளில் அப்படியான உற்பத்திமுறைதான் இருக்கிறது என்பதை உள்வாங்கி அதற்கு, “ஆசிய உற்பத்திமுறை” எனப்பெயரிட்டு எழுதியுள்ளார். 
ஆசிய உற்பத்தி முறையில் தன்னிறைவுக் கிராமங்கள் என்பது இன்றிருக்கும் தனித்தனிக் கிராமங்கள் அல்ல. அது ஒரு சமூகத்தின் உற்பத்தி, பங்கீடு, சேவை, கைவினை, கலை, கல்வி போன்ற அடிப்படைகளுக்கு இன்னொரு சமூகத்திடம் எதிர்பார்க்காத ஓர் அலகு. 50 ஆண்டுகளுக்கு முன்பிருந்த பஞ்சாயத்துகள் அப்படிப்பட்டவை. பெரிதும் வேளாண்மைப் பொருளியல் உற்பத்தியைக் கொண்ட கிராமங்கள் கைவினைப்பணியாளர்களான தச்சர்கள், கொல்லர்கள், நாவிதர்கள், சலவைத் தொழிலாளிகள் போன்றோரை வருடக்கூலிக்கும், சேவைப் பணியாளர்களான பஞ்சமர்களை அன்றாடக் கூலிக்குமாகப் பயன்படுத்தும் அமைப்பைக் கொண்டிருந்தன. அந்த அமைப்பிற்குள் இன்னொரு அலகு நுழையாமல் கட்டுப்பாடுகளை வைத்துக் கொண்டு தனி அரசுகளாகவே செயல்பட்டன. இன்னொரு அமைப்பின் தலையீட்டை அனுமதிக்காது என்ற அளவில்தான் அவை தன்னிறைவு கொண்டவை. ஆனால் ஏற்றத்தாழ்வுகள், வேறுபாடுகள், போதாமை போன்றவற்றைக் கொண்டவையே. இந்த அமைப்பைக் கிழக்கிந்தியக் கம்பெனியின் நிர்வாகம் மாற்றும் என்பது நிகழப்போவதில்லை என்றே மார்க்ஸ் நினைத்தார் 
ஆங்கிலேயர்களின் ஆட்சிக்கு முந்திய இந்தியாவைக் கனவுகாணும் கட்சியின் தலைவராகவும் நாட்டின் நிர்வாகப் பொறுப்பாளராகவும் இருக்கும் திரு. நரேந்திரமோடி, அந்தத் தன்னிறைவுக் கிராம சமுதாயம் பற்றிப் பேசினால், அதில் என்னென்ன மாற்றங்களோடு தன்னிறைவு பெறலாம் என்று விவாதிக்கலாம். ஆனால் பன்னாட்டுக் குழுமங்களின் வருகையை ஊக்கப்படுத்தி, முதலீடுகளை ஏற்றுப் பொருளாதார வளர்ச்சியைக் கட்டமைக்க நினைக்கும் ஒரு அரசாங்கம் அதைப் பற்றிப் பேசப்போவதில்லை. பேச்சுக்காகத் தன்னிறைவு என்று பேசும் பாவனைப் பேச்சு அது. 
தன் உதவி (Self-Help) என்ற சொல்லாட்சி, அவரவர் தேவைகளை அவரவரே நிறைவேற்றிக் கொள்ளவேண்டும்; இன்னொருவரை எதிர்பார்க்கக் கூடாது என்று தனிமனித வாழ்வியல் நடைமுறையாக முன்வைத்த காந்தியின் சொல்லாட்சி. தனது கழிப்பறையைத் தானே சுத்தம் செய்வது, துணிகளைத் துவைப்பது, சமைத்து உண்பது என்பதைப் பின்பற்றிய வாழ்க்கை அது. அம்முறையைப் பின்பற்றத் தொடங்கினால் இந்தியச் சனாதன தர்மம் வலியுறுத்தும் வேலைப் பிரிவினைகள் இல்லாமல் போகும் என நினைத்ததின் வெளிப்பாடு. சனாதன நடைமுறைகளை -சாதி அடுக்குகளை- வேலைப்பிரிவுகளைத் திரும்பக் கொண்டுவர நினைக்கும் கருத்தியல் ஆளும் கருத்தியலாக இருக்கும்போது தன் உதவியைப் பற்றிப் பேசுவதும் இன்னொரு பாவனைதான். 

மிதக்கும் பாவனைகளைச் சொற்களாக்கி போதனைகளில் அலையவிடும் தலைவர்கள் பின் நவீனத்துவக் காலப் பிம்பங்கள். பின் நவீனத்துவ காலத்தில் ஒவ்வொரு நாட்டிலும் பாவனைகளைப் பேசும் தலைவர்களே வலம் வருகிறார்கள். 

தூரம் அதிகமில்லை 

மலையல்ல கரட்டுப்பாறை . அதுவும் செம்மண் பொக்கு. மண்ணுக்குள் பிசைந்துகிடக்கும் வெள்ளைக்கற்கள். மலையென்றால் கல்படிவங்கள் தொடர்ச்சியாகப் பரவிக்கிடக்கும். அப்படியான கல்படிவங்கள் அதிகம் இல்லாத சரளைக்கற்களும் குண்டுக்கற்களும் நிற்கும் அந்தப்பாறையைப் பிளந்து நீளும் இந்தப் பெரும்சாலை விரும்பி நடக்கும் இடமாக இருக்கிறது. 

வேகமாக வரும் வாகனங்கள் இயல்பாகவே வேகத்தைக் குறைத்துக் கொள்வதுண்டு. உள்ளே இருப்பவர்கள் ஆசைப்பட்டு நிறுத்திப் படங்கள் எடுத்துக்கொள்வார்கள். வீட்டிலிருந்து நடந்துபோய்த் திரும்பிய காலம் ஒன்றிருந்தது. அப்போதெல்லாம் வழக்கமான நடை என்பது எட்டிலிருந்து பத்து கிலோ மீட்டர் தூரம். இப்போது அவ்வளவு தூரம் நடக்க முடிவதில்லை. பாறையின் அடிவாரம் தொடங்கும் இடத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டுத் தெற்கு நோக்கி, இடதுபக்கமாக நடக்கத்தொடங்கினால் பாறையின் முடிவுக்குப் பின் ஒரு திருப்பமும் திறப்பும் இருக்கிறது. அதில் திரும்பி இடது ஓரமாகவே நடந்துவந்தால் வாகனம் நிற்குமிடத்திற்கு வந்துசேரும்போது முப்பது நிமிடம் ஆகியிருக்கும். ஒரு உருட்டுப் பாறையைப் பற்றிக்கொண்டு சின்னச்சின்னப் பயிற்சிகளைச் செய்துவிட்டுக் கல்லில் அமர்ந்தால் காற்றின் சிலுசிலுப்பும் இருட்டும் மெல்லக்கவியும் அந்த மாலைவேளை. 

நிமிடத்திற்கொரு வாகனம் தாண்டிப்போயிருக்கும். வாகனங்கள் என்றால் சரக்கு வாகனங்களும் கார்களும் தான். அவைகளோடு இரு சக்கர வாகனங்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டாலும் நிமிடத்திற்கொன்று என்பதாகவே இருக்கும்.அதனையெல்லாம் வாகன நெரிசல் என்று சொல்லவேண்டியதில்லை. நிமிடத்திற்கு 30 வாகனங்கள் ஓரிடத்தில் தாண்டிச்செல்லும் சாலைகளையே நெரிசல் என்று சொல்லவேண்டும். காலைக்குப் பதிலாக மாலையில் நடக்கவிரும்பிய நாட்களின் தெரிவாக இருந்த அந்த இடம் வீட்டிலிருந்து 5 கிலோமீட்டர் தூரத்தில்தான் இருக்கிறது. அங்கேபோய் நடந்துவிட்டு வர யாரிடம் விசா வாங்கவேண்டும் என்று தெரியவில்லை.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்