தன்னை முன்வைத்தலின் ஒரு வகைமாதிரி

 

பெண் முதலில் தன்னைக் கவனிக்கிறாள்; பிறகு மற்றவரைக் கவனிக்கிறாள்”. இதன் நீட்சியாகப் பெண்ணெழுத்து என்னும் அடையாளத்தோடு வரும் கவிதைகளில் முதலில் பெண் தன்னிலையை எழுதிக்காட்ட நினைக்கிறார்கள்; அதன் தொடர்ச்சியாகவே மற்றவர்களை முன்வைக்கிறார்கள். இந்தக் கருத்து பெண்ணெழுத்துகளைத் தொடர்ச்சியாக வாசிக்கும் ஒருவருக்கு   உருவாக வாய்ப்பிருக்கிறது.
தமிழில் எழுதப்படும் பெண்களின் கவிதைகளையும் கதைகளையும் அவ்வப்போது வாசித்துக்கொண்டே இருக்கும் எனக்கு இந்த எண்ணம் உருவாகி உறுதியாகிக் கொண்டே இருக்கிறது.அண்மையில் வாசிக்கக் கிடைத்த டிஸ்கவரி புக் பேலஸின் வெளியீடான (2019) சன்னத்தூறல் தொகுப்பை வாசித்த பிறகு அந்தக் கருத்து இன்னும் வலுவாகி இருக்கிறது. ம.கண்ணம்மாள் என்பவரின் முதல் கவிதைத் தொகுதியான சன்னத்தூறலின் கவிதைகளுக்குள்ளும் தன்னிலையை முன்வைக்கும் பெண்ணொருத்தியை -பெண்களின் வகைமாதிரிகளை வாசிக்க முடிகிறது.    

************

சில நினைவுகளை நகர்த்தி

நாட்பணிக்குள்

பொருத்த முடிவதில்லை

 

அங்கிங்கெனாது

அடர்த்திப் பிறாண்டலாய்

கீறிச் சுவைக்கிறது

மனதின் நினைவுகள்

 

அதனுள் நிறைகிறேன்

 

சில பொழுதில்

பிறாண்டலிடம்

கையேந்தி

விட்டுவிடேன் என்கிறேன்

 

நிஜப்பிடியைவிட

கையை

அழுத்திப் பிடிக்கிறது

மண்டிய நிலையில்

நான்.

**********

சதா..எனத்தலைப்பிட்டு எழுதப்பெற்றுள்ள இக்கவிதைக்குள் தவிக்கும் அந்தப் பெண் தன்னிலை இன்றைய வாழ்வின் நடுத்தரவர்க்க வாழ்க்கைக்குள் பொருந்தமுடியாமல் தவிக்கும் ஒரு பெண்ணின்- தன்னைத் தனித்த அடையாளம் கொண்டவளாக காட்டிக்கொள்ள நினைக்கும் ஏராளமான பெண்களின் வகைமாதிரியாக வெளிப்படுகிறாள்.

சதா குடும்ப வெளியில் – சமையல் கட்டு, பண்ட பாத்திரம், அழுக்குத்துணிகள், கணவனுக்கும் பிள்ளைகளுக்கும் தன்னை ஒப்புக்கொடுக்கும் தியாகத்தின் வடிவமாக மாறிப்போக நினைக்காமல் மென் உணர்வுகளோடும் திகைப்புகளோடும் ஆச்சரியங்களோடு இந்த வெளிகளையும் மனிதர்களையும் அவற்றின் சலனங்களையும் கவனிக்கும் ஆசைகளும் விதந்து பாராட்டு மனமும் எனக்கு இருக்கிறது எனச் சொல்ல நினைக்கும் அந்தப் பெண் தன்னிலையே இந்தக் கவிதைக்குள் வெவ்வேறு கவிதைகளாக வடிவம் பெற்றுள்ளன.

***********
கானக நடுவில் பெய்த மழை கண்டு

கற்பாறையில்

பீறிட்டெழுந்த பெருஞ்சுனையின்

நீர் அடர்த்தியென

அவளிருந்தாள்.

 

மரங்களினூடே

ஒளிக்கீற்றைப் பாய்ச்சி

அடர்வனப்பரப்பின்

செவ்வொளி அனலும் சேர

கடும் மழைக் குளிரும் இணைந்த

உருவெனத் தன்னைக் கண்டாள்

 

குளிரெனில்

பசுமை போர்த்திய

நிலம் பிறழ்ந்து கிடக்கும்

தாவரக்குவியலையும் கிளை செரித்து

குதூகலிக்கும் மரக்கூட்டத்தையும்

கண்களால் கடத்தி

 

மனதிற்குள்

ஆழ்நிலை மவுனமாக்கினாள்

குளிர் உள் அடங்கியது

 

அனலெனில்

ஈரக்கூந்தலின் சிறுதுளி நீர்

கொதிச்சூட்டில் சட்டென்று

சாய்வதுபோல

மலைமுகடு பனிப்படர்வில்

தன்னை மறைத்து

செந்நிறக் கனல்பட்டு

பளிச்செனத் துடைத்த முகத்தை

வெளிப்படுத்தியது கண்டு நெகிழ்ந்து

மனதிற்கு ஏற்றமிட்டாள்

அனலும் அவளுள் அடங்கியது.

 

தற்காலப்பொழுதுகளில்

உணர்ச்சியற்ற உருவாய்

அவ்வனத்தைக் கடந்து நகருகிறாள்

 

நிலம் விழும் நீர்த்துளி

எப்பொழுதும் வாராததால்

 

அங்கு

குளிருமில்லை

அனலும் தேவையில்லை

வனமும்

கவன ஈர்ப்புச் செய்யவில்லை

**********

கவன ஈர்ப்பில்லாத வனம் எனத்தலைப்பிட்டு எழுதப்பெற்றுள்ள இந்தக் கவிதை ஆர்ப்பாட்டமில்லாத சொற்களின் வழியாக வாசிப்பவர்களையும் அந்தப் பெண்ணோடு அழைத்துச் சென்று வனத்திற்குள் நிறுத்திவிட்டு, ‘குளிருமில்லை; அனலும் தேவையில்லை’ எனச் சொல்லும்போது வாசிப்பவர்களோடு மனத்தால் உரையாட நினைக்கும் நினைப்பைக் கடத்தி விடுகின்றது.  அதன் தொடர்ச்சியாக ஒரு உறுதித் தொனிக்குள் நின்று பேசும் பெண்ணாகவும் ஒரு கவிதையில் வெளிப்படும் விதத்தைச் சொல்லும் சொற்களும் கூட ஆரவாரமின்றியே அடுக்கப்பட்டுள்ளது.

********

அவளுக்கு

பெரும் இன்பப்பொழுது என ஒன்றில்லை

மன அடுக்கு அப்பிக்கொண்ட

சோகவர்ணம் எவ்வளவோ இருக்க

தன்னுள் உடைந்தவற்றை

எடுத்ததேயில்லை

அப்போதெல்லாம்

உறக்கம் தொலைத்த விழியினை

தானே ஆற்றிக் கொள்வாள்

நினைவில் இருள் கவ்வும் பொழுதும்

பாதச்சுவடு எத்திசை செல்வதென

திகைத்த வேளையிலும்

நகரும் ஒற்றை வானம்போல்

தன்னை உருப்படுத்தியிருந்தாள்

இனி எங்கும் பயணிப்பாள்

உடைவதற்கு எதுவுமின்றி

 

அந்த உறுதிப்பொருளைச் சொல்லும் கடைசி வரியே - உடைவதற்கு எதுவுமின்றி...

தலைப்பாக தரப்பட்டுள்ளது. மாயம் தகர்த்தவள்,நீரூற்றானவள்,கனவை நட்டவள், தடம் பதித்தவள்,அன்னாள், மேகத்தைப் பதுக்கிக்கொண்டவள், நிலத்துடன் நடந்தவள்,நிறமாய் விரிந்தவள், நிலத்தை அசைத்தவள், நிலத்தினாள் மொழி,  அன்பை நாடும் பெண்ணாக,பெருமகள் கூற்று, நிலத்தாயாகி எனப் பெண்ணடையாளங்களை முன்வைக்கும் சொற்களைத் தலைப்பாக்கி எழுதப்பெற்ற ஒவ்வொரு கவிதைக்குள்ளும் சின்னச்சின்னக் குரலோடு அலையும் ஒரு பூனையின் லயத்தோடும் தூறலின் சன்ன ஒலியோடும் சொற்களால் பரவப்பெற்ற கவிதை வெளிகளை உருவாக்கியுள்ளன இக்கவிதைச் சொற்கள்.  அந்தப் பெண் தன்னிலைக்குள் இந்த உலகத்தின் இயக்கத்தை – போக்கை -ஆட்டங்களைப் புரிந்துகொண்ட பெண்ணின் வகைமாதிரியையும் முன்வைக்கிறது ஒரு கவிதை.  காலச்சாவி எனத்தலைப்பிட்டு

******

அழையுங்கள் அனைவரையும்

வருபவர்கள் வரட்டும்

இங்கு எல்லாருமே

நடிக்கத் தெரிந்தவர்கள்

பிடித்தமானவர்களாக

மாற்றிக்கொள்ளலாம்

உரையாடலில்

உள்ளம் கரைந்து போகலாம்

அவர்கள்

காலத்தின் முன்னால்

ஆட த்தெரிந்தவர்கள்

காலம்

ஆட்டத்தை

திறப்பதும் மூடுவதுமாய்

சாவியைக் கையில் ஏந்தி

அலைந்து திரிகிறது.

****

என எழுதப்பெற்ற அந்தக் கவிதைக்குள் இருக்கும் பெண்ணை   அப்பாவித் தனத்திலிருந்து விடுபட்ட தன்னிலையாக வாசிக்கத் தருகிறார் கண்ணம்மாள். கண்ணம்மாளின் கவிதைகளை வாசிக்கிறவர்களுக்கு இன்னொரு அனுபவத்தையும் உருவாக்கித் தருகின்றன ஒவ்வொரு கவிதையும் .அந்த அனுபவங்கள், நிலவெளிகளின் ஊடாகப் பயணிக்கும் வாய்ப்புகளைத் தருகின்றன. இந்த வாய்ப்பைத் தமிழ்ச்செவ்வியல் கவிதை மரபு உருவாக்கித் தந்துள்ளது.  தன்னை முன்வைக்கும் தன்னிலைக் கவிதைகளுக்குப் பின்னணியாக அமையும் கருப்பொருட்களும் காலம் பற்றிய குறிப்புகளுமாகச் சேர்ந்து சில அடையாளங்களை உருவாக்கும். அந்த விதமாக ம.கண்ணம்மாளின் சன்னத்தூறல் தமிழ்ச் செவ்வியல் கவிதையின் நீட்சியைக் கொண்டிருக்கிறது எனலாம்.  

ஒருவரின் முதல் கவிதைத் தொகுப்பை வாசிக்கிறோம் என்ற உணர்வு நிலையை உருவாக்காமல் வாசிப்பவரைத் தனக்குள் அழைத்துச் செல்கின்றன  சொற்களின் திரட்சிகள். சொற்களின் திரட்சியால் உருவாக்கப்பட்டுள்ள அந்த வெளிக்குள் ஒரு பெண்ணின் பல வகைமாதிரிகளை  – அவளின் மென்மையை, ரசனையை, எண்ணங்களை, புரிதலைச் சலிப்பேற்படுத்தாமல் முன்வைத்த தின் வழியாகக் கவனிக்கத்தக்க தொகுப்பாக ஆக்கியிருக்கிறார்.    

 ------------------------------------------------------------------------------------

சன்னத்தூறல், ம.கண்ணம்மாள் , டிஸ்கவரி புக்பேலஸ்,2019

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தி.சு.நடராசனின் திறனாய்வுப் பார்வைகள் :தமிழ் அழகியல், தமிழகத்தில் வைதீக சமயம்

உடல் மறுப்பு என்னும் பெரும்போக்கு

கற்றல் - கற்பித்தல்: மாணவ ஆசிரிய உறவுகள்