அன்பின் அலைகளால் நிரப்புபவர் எஸ்.எல்.எம்.ஹனீபா :

இலங்கைக்கான முதல் பயணத்தில் (2016 செப்டம்பர்,16-29) சந்தித்த அனைவரையும் இரண்டாவது பயணத்திலும் சந்திக்க வாய்ப்பில்லை என்பது எனக்குத் தெரியும்.  ஆனால் திரு எஸ்.எல். எம். ஹனீபா அவர்களை எனது இரண்டாவது பயணத்திலும்    பார்த்தே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தை நான் உருவாக்கிக் கொண்டேன்.அதற்குக் காரணம் எனது முதல் பயணத்தில் அவர்காட்டிய நெருக்கமும் இயல்பான பேச்சும் என்றுதான் சொல்லவேண்டும்.

முதல் பயணத்திற்கு முன்பு அவரது சிறுகதைத்தொகுப்பான அவளும் ஒரு பாற்கடல் தொகுப்பை வாசித்திருந்தேன். அத்தொகுப்பு எனது நினைவில் இருந்ததற்குச் சிறப்பான காரணம் ஒன்று உண்டு. பொதுவாக ஒருவரின் கவிதைகள் அல்லது கதைகள் தொகுப்பு செய்யப்படும்போது இரண்டு விதமான முறைகள் பின்பற்றப்படும். காலவரிசைப்படி அடுக்கப்பட்டு அதற்குள் அதிகம் கவனிக்கப்பட்டு விமரிசிக்கப்பட்ட கதையைத் தலைப்பாக்குவார்கள். தமிழ்நாட்டில் முன்பெல்லாம் இலக்கியச் சிந்தனை விருதுபெற்ற கதையைத் தொகுப்பின் தலைப்பாக வைத்து வந்த கதைத் தொகுதிகளை வாசித்திருக்கிறேன். அதனை முதல் கதையாக வைத்துக் கொண்டு மற்ற கதைகளில் ஆசிரியர் முக்கியமான கதைகள் என்று நினைக்கும் கதைகள் முன்வரிசையில் இடம் பிடிக்கும். அவளும் ஒரு பாற்கடல் தொகுப்பில் அந்தத் தலைப்பிலான கதை தொகுப்பின் கடைசிக் கதையாக இருந்தது.

நான் அந்தத் தொகுப்பைத் தலைப்புக் கதையைப் படித்துவிட்டுப் பின்னாலிருந்துதான் வாசித்தேன் என்பது நினைவில் இருக்கிறது. இலக்கிய வாசகியாகவும் எழுதும் ஆர்வம் கொண்டவளாகவும் இருந்த ஒரு பெண்ணின் -கிருஷாந்தி- திடீர் மரணம் ஏற்படுத்திய துயரத்தைப் பேசிய அந்தக் கதை, தமிழ்ப்புனைகதைகளை வாசிக்க நினைக்கும் புதிய வாசகர் ஒருவருக்கு வழிகாட்டும் ஒரு கட்டுரையாகவும் தோன்றியது. கதைசொல்லியின் நினைவுக்குள் இருந்த அந்தப் பெண்ணைப்பற்றிய புனைவுப்பகுதியைத் தாண்டி, அலையும் மனம் நல்ல இலக்கியப்பிரதிக்குள் நல்லனவும் அல்லனவும் இருப்பதுபோல அந்தப் பெண்ணின் அருகிருப்பும் நினைவுகளும் அமிர்தமாகவும் நஞ்சாகவும் தோன்றித்தோன்றி மறைவதை விவரித்திருப்பார். அவளும் ஒரு பாற்கடலில் தவிப்பை உண்டுபண்ணிய பெண்ணின் நினைவுகளைப் போல எஸ்.எல்.எம்.மின் கதைகள் பலவற்றிலும் அழகான பெண்கள் வந்து போவதை வாசித்திருக்கிறேன். இந்தத் தொகுப்பை வாசிப்பதற்கு முன்பு காலச்சுவடில் வந்திருந்த மச்சி கதையிலும் கூட மரித்துப்போன பெண்ணின் உடலும் அருகிருப்பும் தந்த நினைவுகளைக் கதாசிரியராகத் தந்திருந்தது நினைவில் இருந்தது. அந்தத் தொகுப்பை இப்போது வாசித்தாலும் அவருக்குள் – அவரது நினைவுக்குள் நிறைய பெண்கள் இருந்து அவர்களின் கதைகளை எழுதிச்சொல்லியிருக்கிறார்கள் என்பதை உணரமுடியும். இதற்கிணையாகவே இசுலாமியச் சமூகம் கடும் உழைப்புச் சமூகம் என்பதையும்,    உடைமையாளர்களின் மனப்போக்கையும் உழைப்பவர்களின் இயலாமையையும் சுட்டும் கதைகளையும் (ஆடுகள் நனைவதைப்பார்த்து ) அவரிடம் வாசிக்கமுடியும். முழுமையும் வட்டாரச் சொற்களாலும் பேச்சுமொழியின் லாவகத்தாலும் நகரும் அந்தக் கதைகளைச் சடசடவென்று வேகமாக வாசித்துவிட முடியாது.

அந்தத் தொகுப்பில் ஏற்கெனவே வந்த மக்கத்துச் சால்வைத் தொகுப்பின் கதைகளும் இடம்பெற்றுள்ளன என்ற குறிப்பைப் பேராசிரியர் கா.சிவத்தம்பியின் முன்னுரைக்குறிப்பு தந்திருந்தது.   பெண் உடலின் உபாசகனாக மாறிய எஸ்.எல்.எல்., தொடக்க நிலையில் கவனிக்கத் தக்க மனிதர்களைப் பாத்திரங்களாக்கிக் கதையெழுதியவர் என்பதை மக்கத்துச் சால்வை கதையே எடுத்துக்காட்டும். போட்டியிடுவதும் போட்டியில் வெல்வதும் ஒவ்வொருவரின் லட்சியமாகவும் வெறியாகவும் இருக்கிறது. தனிமனிதர்களின் இந்த வெறியும் லட்சியங்களும் அவன் சார்ந்த குழுவின் தேவையாக மாறும்போது போட்டிவிதிகளை மீறுவது பற்றிக் கவலைப்படாமல் எப்படியும் அடையவேண்டியது வெற்றி என மனம் நம்புகிறது என்பதைப் பேசும் கதை, வயதும் அனுபவமும் வாழ்க்கையும் அந்த விதிமீறலைக் குற்றவுணர்வாகத் தேக்கிவைத்துக் கொண்டே இருக்கிறது. களைவதற்கொரு வாய்ப்புக்கிடைத்தால் தூக்கித் தூரப்போட்டுவிட்டு, தனக்குள் இருக்கும் மனித த்தை மேலெழுப்பிக் கொண்டுவந்துவிடும் என்பதைக் கச்சிதமாக எழுதியிருப்பார். இலங்கையின் பள்ளித்தமிழ்ப் பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுப் பல ஆண்டுகளாகப்  பல்லாயிரக்கணக்கான மாணாக்கர்கள் வாசித்த அந்தக் கதை அவரது  சிறந்த கதை என்பதை இப்போதும் ஒவ்வொருவரும் சொல்லக் கேட்டிருக்கிறேன். 1970 கள் தொடங்கி எழுதிக்கொண்டிருக்கும் ஹனிபா, போர்க்காலத்தில் சரிநிகர் குழுவோடு நெருங்கிய தொடர்பில் இருந்தவர் என்பதையும் அறிவேன். அவரது பல கதைகள் சரிநிகரில் அச்சாகியிருக்கின்றன. எனது கட்டுரைகள் சில அவ்விதழில் வந்துள்ளன என்பதால் அதன் நிலைபாடுகளையும் அரசியல் பார்வைகளையும் நான் அறிவேன்.


அவரிடம் ஒரு கோரிக்கையாக இதனை வைக்க நினைத்த துண்டு.  அவரது கதைகளிலும் பேச்சிலும் இருக்கும் வட்டாரச்சொற்களைத் தொகுத்து ஓர் சொல்லகராதி தயாரிக்கவேண்டும். அவரே கூட அதைச் செய்யலாம். அவரது முயற்சியில் பலரும் இணைந்துகொள்ள வாய்ப்புகளுண்டு. கி.ராஜநாராயணனின் கரிசல் வட்டார வழக்குச் சொல்லகராதி போல முக்கியமானதொரு சொல்லகராதியாக இருக்கும். அந்த அகராதி வட்டார வழக்குச்சொல்லகராதியாக மட்டும் இல்லாமல் இசுலாமிய இனவரைவு அடையாளச் சொற்களைக் கொண்ட அகராதியாகவும் இருக்கும். அவரது செயல்பாடுகள், இலக்கியரசனை, அரசியல் ஈடுபாடு ஆகியவற்றின் மீது ஆர்வமும் விருப்பங்களும் காட்டும் ஒரு கூட்டத்தை உருவாக்கி வைத்திருக்கிறார். அந்தக்கூட்டத்தில் இரண்டு மூன்று தலைமுறை மனிதர்கள் இருக்கிறார்கள். அவரை வாசித்து வளர்ந்த நடுத்தர வயதுக்கார ர்களும், அவரது அரசியல் பார்வையை உள்வாங்கிய இளைஞர் கூட்டமும் இப்போதும் அவர் பின்னால் இருப்பதை எனது இரண்டு பயணங்கள் வழியாக உணர்ந்திருக்கிறேன். 

தமிழர்களுக்கான தனிநாடு கோரிக்கைப் போராட்டம் போராக மாறியபோது மனக்கசப்பான அனுபவங்களைக் கிழக்கிலிருந்த இசுலாமியர்கள் சந்தித்தனர். அந்த நேரத்தில் எஸ்.எல்.எம்.மின் அணுகுமுறை மீது ஆதரவும் எதிர்ப்புமென இருநிலைப்பட்ட பார்வைகளைக் கொண்டவர்களையும் எனது பயணங்களின் போது சந்தித்திருக்கிறேன். தங்களின் போர் நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்புத் தராதவர்களையெல்லாம் எதிரிகளாகவும் தமிழ் ஈழத்தில் இடம் மறுக்கப்பட வேண்டியவர்களாகவும் கருதிய விடுதலைப்புலிகள் நடத்திய சுத்திகரிப்பு நடவடிக்கைகளால் யாழ்ப்பாணப்பகுதியிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட முஸ்லீம்களும், மட்டக்களப்புப் பகுதியிலிருந்த இசுலாமியர்களும் இப்போதும் அந்தக் கோபத்தையும் வன்முறைகளையும் நினைவில் வைத்திருக்கிறார்கள்.  காத்தான்குடி கலவரம் என்ற சொல்லாட்சி அழியாத நினைவாக – வடுக்களாக இருக்கின்றன.  மொழியால் தமிழர்கள், சமய நம்பிக்கையால் இசுலாமியர்கள், தேச அடையாளத்தால் இலங்கையர்கள் என நினைக்கும் அவர்களுக்குள் தமிழ் அடையாளத்தை மேலெழுப்பித் தக்கவைக்காமல் இசுலாமிய அடையாளத்தால் ஒதுக்கப்படுவதின் ஆபத்தை புலிகளின் காலத்தில் உரத்துச் சொல்லித் தன்னைத் தமிழ் இசுலாமியன் என்னும் அடையாளத்தால் அறியப்பட வேண்டும் என நினைத்தவர் எஸ் எல் எம். போர்க்கால அரசியலில் அரசோடும் புலிகளோடும் ஒரே நேரத்தில் பேசும் அரசியல் தளத்தைக் கொண்டிருந்தவர் என்பதெல்லாம் முதல் பயணத்திற்குப் பின்னரே நான் அறிந்த கொண்ட தகவல்கள்.

முதல் பயணத்தில்  மட்டக்களப்பு விபுலானந்தா அழகியல் கற்கை நிறுவகத்தின் மூன்று நாள் கருத்தரங்கில் கலந்துகொள்வதற்காகச் சென்றவன் நான்.  என்னுடன் வந்திருந்தவர்கள் எழுத்தாளர்   இமையமும் காந்திகிராமப் பல்கலைக்கழத்து சுந்தர் காளியும். நாங்கள் கொழும்புக்கு 16 ஆம் தேதி போய்ச்சேர்ந்துவிட்டோம். அன்றிரவு முழுவதும் பயணம் செய்து அதிகாலை மட்டக்களப்பு போய்ச் சேர்ந்தோம். 17 ஆம் தேதி தொடக்கவிழாவின் போதே எஸ்.எல்.எம். வந்துவிட்டார். தேநீர் இடைவேளையின்போது வெளியில் வந்து அவரது ஊரான ஒட்டமாவடிக்கு எப்போது போகலாம் என்று கேட்டார். அத்தோடு கவி அனார் அவர்களின் வீட்டிற்கும்  போயே ஆகவேண்டும். அவள் வீட்டில் செய்யும் கோழிக்கறி விருந்துக்கு அழைத்து வருவதாகச் சொல்லிவிட்டேன் என்று அன்புக் கட்டளையைப் போட்டுவிட்டார். நான் 15 நாட்கள் இருக்கும்படியாகவே வந்துள்ளேன்.கருத்தரங்கம் நடக்கும் மூன்று நாளில் எங்கும் போகமுடியாது. அதன்பிறகு எங்கெங்கு போகலாம் என்பதைத் திட்டமிட்டுக் கொள்ளலாம் என்பதைத் தொலைபேசி வழியாக உறுதிசெய்துகொள்வோம் என்று அனுப்பிவைத்தேன்.

எங்களின் திட்டமிடலின் அனார் வீட்டிற்குச் செல்ல முடிந்தது. அவரே நான் தங்கியிருந்த இடத்திற்கு வந்து அழைத்துச் சென்றார். விருந்தின்போது அவரைப் பார்க்க இளைஞர்கள் வந்து அவரோடு உரையாடிக்கொண்டிருந்த தைப் பார்த்தேன். அவரது அனுபவத்தைக் கேட்க ஒவ்வொருவரும் தயாராக இருந்தனர்.  வயது வித்தியாசம் பாராட்டாமல் பழகும் பழக்கம் இருப்பதை அவரோடு செய்த அந்தப் பயணம் உணர்த்தியது. வயல்களும் நீர்நிலைகளும் நிரம்பிய கிழக்கிலங்கைப் பகுதிக் கிராமங்களின் ஊடாகப்பயணம் செய்து அனாரின் வீட்டிற்குப் போய்விட்டு, அருகில் இருந்த ஓர் ஊரில் நடந்த கவிதை நூல் வெளியீட்டு விழாவிலும் கலந்துகொண்டுவிட்டு அன்றிரவே திரும்பிவிட்டேன்.  போகும்போதும் வரும்போதும் அந்தப் பகுதியின் நிலவெளிகள் பற்றியும் புலிகள் காலத்து அரசியல் நிகழ்வுகள் பற்றியும், அவரது சமாதான முயற்சிகள் ஒவ்வொன்றும் தோல்வியின் முடிந்த து பற்றியும் சொல்லிக் கொண்டே வந்தார். என்னுடையே நேரத்தை விபுலானந்தா நிறுவகத்தின் நாட கத்துறை மாணவர்களுக்குச் செலவிடும்விதமாகப் பயிலரங்குகள் திட்டமிடப்பட்டதால் அவரது ஊரான ஒட்டமாவடிக்கும் அவரது தோட்டத்திற்கும் போகமுடியாமல் போய்விட்ட து.

முதல் பயணத்திற்குப் பின் அவரது முகநூல் பக்கத்தில் அவரது தோட்ட த்து மரங்களோடும் செடிகளோடும் கொண்ட உறவினை வெளிப்படுத்தும் படங்களைப் பகிர்ந்துகொண்டே இருந்தார். அதனால் இன்னொரு பயணத்தில்  ஒருநாள் உங்களோடும் உங்கள் தோட்ட த்து மரங்களோடு இருக்கவேண்டும் என்று அவருக்கு ஒரு முறை செய்தி அனுப்பியிருந்தேன். அது இரண்டாவது பயணத்திலும் நிறைவேறாமல் போய்விட்டது. ஆனால் அவரது ஒட்டமாவடி வீட்டிற்குச் சென்று இரண்டுமணி நேரத்தைச் செலவழித்ததோடு இந்த முறை இரண்டு மூன்று சந்திப்புகளைச் செய்து சுவாரசியமான உரையாடல்களையும் நடத்தினோம் என்பது கூடுதல் மகிழ்ச்சியாக இருந்தது.  

நண்பர் பாலசுகுமாரின் மகள் அனாமிகா நிகழ்வுகள் மூன்று நாட்களாகத் திட்டமிடப்பட்டிருந்த து. இரண்டாவது பயணத்தின் முதன்மை நோக்கம் அனாமிகா அஞ்சலி நிகழ்வுகளே. திரிகோணமலையில் ஒருநாளும் சுகுமாரின் சொந்த ஊரான கட்டைமறிச்சானில் இன்னொருநாளும் மூன்றாவது நிகழ்வு அவர் பணியாற்றிய மட்டக்களப்பிலும் எனத் திட்டமிடப்பட்டிருந்தது.  திரிகோணமலை நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு மட்டக்களப்புக்குப் போகும் வழியில் தான் ஒட்டமாவடி இருப்பதால் அங்கு வாகனத்தை நிறுத்தச் சொல்லி வீட்டிற்கு அழைத்துப் போனார்.  அன்று மாலை அனாமிகா நிகழ்ச்சிக்கு வந்தபின் இரவில் விருந்துண்டு பேசிக்களித்த நினைவுகள் சுவாரசியமானவை. வாவிக்கரையோரம் இருக்கும் இருக்கும் மோகனதாசன்,( ஸ்ரீ விபுலானந்தா அழகியல் கற்கை நிறுவன சிரேஷ்ட விரிவுரையாளர்) அவர்களின் வீட்டில் தங்கியிருந்தேன். நிகழ்ச்சிகள் முடிந்து இரவு உணவுக்கு முன்னால் செவிக்கு உணவு. நான் மதிக்கும் ஆளுமைகளான - பெண்ணிய ஆளுமை சித்திரலேகா, அவரது கணவரான நாடகாளுமை மௌனகுரு, பேராசிரியர், யோகராஜா, பெரும்வாசிப்பாளர் சிவலிங்கம் எனச் சேர்ந்து விவசாயம். அரங்கியல், இலக்கியம், கல்வி, இந்திய அரசியலும் இலங்கையின் சிக்கல்களும் என ஒன்றைத்தொட்டு ஒன்றாக விரிந்த பேச்சாக மாறியது. ஒவ்வொருவரையும் கவரும் விதமான இடையீடுகளைச் செய்து எஸ்.எல்.எம். தரும் அனுபவச்சரடுகள் கேட்டுக்கொண்டே இருக்கலாம் எனத் தோன்றுபவை. பேச்சு நடந்து கொண்டிருக்கும்போதே மோகனதாசனும் அவரது மனைவி தர்மினியும் சேர்ந்து புட்டும் சாம்பாரும் சொதியுமாக நல்லதொரு உணவைத் தயாரித்து விட்டார்கள்.  பயணங்களில் இப்படியான சந்திப்புகளும் உரையாடல்களுமே பெரும் அறிதலாக மாறிவிடும். பேராசிரியர் அ.ராமசாமி சாருடன் உடன் இனிமையாகக் கழிந்தன இரண்டு நாட்கள்."ஒரு மாலைப்பொழுதில் பேராசிரியர்களின் புலமைத்துவ உரையாடல்களாலும் ஹனிபா ஐயாவின் கலகலப்பான பேச்சாலும் எமது வீடே நிறைந்திருந்தது " என்று நண்பர் மோகனதாசன் அவரது முகநூல் பதிவில் எழுதியிருந்தார்.

திரும்பவும் மட்டக்களப்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிய பயணத்தில் இடையீடு செய்து ஏறாவூரில் ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யச் சொல்லிவிட்டார் பெரியவர் ஹனீபா. அவரது ஏற்பாட்டை மறுக்காமல் நேரடியாக ஏறாவூர் போய்விட்டு அங்கிருந்து யாழ்ப்பாணம் போகலாம் என்று ஏற்பாடு. ஏறாவூர் வாசிப்பு வட்டத்தின் 34வது அமர்வுக்கூட்டமாக 27/12/2019 வெள்ளி மாலை 6.30 க்கு ஏறாவூர் கலாசார மத்திய நிலையத்தில் இடம்பெற்றது. முகம்மது சப்ரியின் பொறுப்பில் இயங்கும் அவ்வாசிப்பு வட்ட த்தின் பின்னணியில் இருந்து ஆலோசனைகள் சொல்லி வழிநட த்தும் அவரே எனது  "விளிம்புநிலை மக்கள் ; ஒரு பார்வை" எனும் தலைப்பிலான   உரை நிகழ்வுக்கும்   தலைமை வகித்தார். அண்டனியோ கிராம்சி, விளிம்புநிலைப் பார்வை என்ற சொல்லாடலை முன்வைத்த பின்னணியையும், அதற்கு முந்தைய சொல்லாடல்களில் வெளிப்பட்ட ஐரோப்பிய மையவாதங்களையும் முன் வைத்து விட்டு பின் காலனிய நாடுகளில் ஆதிக்கம் செலுத்தும் மைய நீரோட்டப் பெரும்போக்குகளைச் சுட்டிக் காட்டுவதாக உரை நிகழ்ந்தது. சமகாலத்தில் மையநீரோட்ட அரசியல் பெரும்பான்மை அரசியலாக மாறிவருவதை அடையாளம் காட்டி விவாதம் தொடரத் தூண்டப்பட்டது. 45 நிமிட உரைக்குப் பின் அதே அளவு நேரம் விவாதம். நல்லதொரு விருந்துக்குப்பின் யாழ்ப்பாணம் செல்லும் வோல்வோ பேருந்தில் ஓட்டுநருக்கும் நடத்துநரும் என்னை அறிமுகப்படுத்திப் பொறுப்பாகக்கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும் என்று ஆணையிட்டார்.

இந்தப் பயணத்தில் கொழும்பு, கண்டி, மலையகத்தில் நுவரெலியா, சப்ரஹமுவ, திரிகோணமலை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவனியா எனப்பல இடங்களுக்கும் போய்வந்தேன். நான் போன இடங்களில் சந்தித்த அனைவருக்குமே எஸ். எல். எம். ஹனீபா என்ற அற்புதமான மனிதரைத் தெரிந்திருக்கிறது. அவரைப் பலரும் இசுலாமிய அடையாளத்தைத் தாண்டிய தமிழர்களின் பேருருவாகவே நினைக்கின்றனர். இலங்கை போன்ற இன, மொழி, சமயப் பிணக்குகள் கொண்ட பல்லினச் சமூகத்தில் இப்படியான மனிதர்களின் தேவை அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. அப்படியான ஒரு மனிதர் எனக்கு நண்பராக இருக்கிறார் என்பது மகிழ்ச்சியாகவே இருக்கிறது. அடுத்ததொரு இலங்கைப் பயணம் மேற்கொள்ள வேண்டும். நேராக ஒட்டமாவடியில் இறங்கி அவர் தோட்டத்தில் இரண்டு மூன்று நாட்கள் தங்கி ஆற்றில் குளித்து மீன் சுட்டுச் சாப்பிட்டு வரவேண்டும். அவரது மனதில் இருந்த அழகுப்பெண்களைப் பற்றிய கதைகளையும் கேட்கவேண்டும்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

தணிக்கைத்துறை அரசியல்

நவீனத்துவமும் பாரதியும்