தேர்தல் கால அலைகள்: உருவாதலும் உருவாக்கப்படுதலும்


திசை திருப்பல்கள்

கொரோனாவும் அது உண்டாக்கியுள்ள நகர்வற்ற வாழ்க்கையும் நம் கண்முன் உள்ள சிக்கல்கள். இந்த நேரத்தில் மத்திய அரசும் மாநில அரசும் செய்யவேண்டிய பணிகளும் உதவுகளும் இவைதான் என்று சொல்லமுடியாத அளவுக்குப் பெருகிக்கொண்டே இருக்கின்றன. அதற்கு மாநில அரசு ஓரளவு முகம் கொடுக்கிறது. ஆனால் மத்திய அரசோ வழிகாட்டுதல்கள் வழங்குவதாகச் சொல்லிப் போதனைகளை வழங்கிக் கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் தனிமனித உரிமைகளையும் மாநில உரிமைகளையும் சீர்குலைக்கும் அவசரச் சட்டங்களை அறிமுகம் செய்வதைத் தவிர்க்கவில்லை. இந்தக் கொரோனா காலத்திலும் மக்களைப் பாதிக்கும் விலையேற்றம், வரியேற்றம் என்பதை அனுமதித்துக்கொண்டே இருக்கிறது.

இதற்கு முன்பு மையப்படுத்தப் பெற்ற நீட் தேர்வு, தனியாருக்குப் பெருநிறுவனங்களை வழங்குதல், பொதுத்துறைக்குள் தனியார்களை அனுமதித்தல் போன்ற பொருளியல் நடவடிக்கைகளால் தனிமனிதர்களின் சுமைகளும் சின்னச்சின்ன தொழில் வாய்ப்புகள் கொண்ட அமைப்புகளின் சுமைகள் கூடிக்கொண்டே போகின்றன. இவற்றையெல்லாம் பேசும் சொல்லாடல்கள் நிகழ்காலச்சொல்லாடல்கள். ஆம் எப்போதும் அரசியல், பொருளாதாரப் பேச்சுகளும் விவாதங்களும் நிகழ்காலத்தைக் குறித்த கவலையுடன் எழும் சொல்லாடல்களாகவே இருந்தன; இருக்கின்றன. ஒருவிதத்தில் இந்திய அளவிலான பெருங்கதையாடல்கள்.


இதற்கு மாறானவை பண்பாட்டுவெளி சார்ந்த சொல்லாடல்கள் குறுங்கதையாடல்கள். மொழி, சமயம், கடவுள்கள், உணவு, ஊர்ப்பெயர் என முகிழ்த்துக் கிளப்பிவிடப்படும்/ எழுப்பிவிடப்படும் இவையெல்லாம் நீண்டகாலமாக நிகழ்காலத்தின் சிக்கல்கள் அல்ல. கடந்தகாலத்திலிருந்து எதிர்காலத்திற்கும் நகர்ந்துகொண்டிருக்கக் கூடிய வண்ணவண்ணக் கோலங்கள். இந்த வண்ணக்கோலங்களை - குமிழிகளை ஒவ்வொன்றாக உடைத்துக்காட்டும் நடவடிக்கைகள் நிகழ்காலத்தை - அரசியல், பொருளியல் சிக்கல்களிலிருந்து திசை திருப்புபவை.

மத நம்பிக்கைகள் புண்படுத்தப்படுகின்றன என்ற பெயரில் கந்தசஷ்டிக்கவசத்தின் மீதான ஆய்வும் அதன் எதிர்ப்பும், கோயில்வாசலில் இறைச்சியை வீசிவிட்டுக் கிளம்பும் பரபரப்பை ஊதிப்பெருக்குதல், நபிகள் நாயகம், தேவாலயங்கள் என ஒவ்வொன்றின் பக்கமும் கவனம் திருப்புதல், நாத்திகத்தை முழுமூச்சாக நம்பிய பெரியார் மீது காவிச்சாயம் பூசுதல் என ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதமான குறுங்கதைச் சொல்லாடல்கள். எந்தத்திட்டமிடலும் இல்லாமல் ஊர்ப்பெயர்களை மாற்றிவிட்டு ஒருவாரம் கழித்துத் திரும்பவும் பழைய நிலைக்குத் திரும்பியதின் பயன் என்ன?

குறிப்பிட்ட காலத்திற்குப் பெருங்கதையின் சுமையைக் கண்டு கொள்ளாமல் இருக்க உதவுபவை. இவற்றைக் கிளப்புவதில் அதிகாரம் நேரடியாக இறங்குவதில்லை. அதன் துணை அமைப்புகள், அதற்கு உதவும் தனிநபர்கள் எனத் திடீர்தீடீரென்று கிளம்பிக் கொண்டே இருக்கக்கூடும். வண்ணவண்ணப்பலூன்களை வாங்கிவிளையாடும் சின்னக்குழந்தைகள் ஒவ்வொன்றின் உடைபடுதலின் போதும் சிறிய அதிர்ச்சியை அடைவதுபோல தேசத்தின் ஒவ்வொரு பரப்பிலும் சின்னச் சின்ன அதிர்வலைகள் எழுப்பப்படும் இவையெல்லாம் அடித்துப் புரட்டிப்போட்டுக் கொண்டு ஓடும் பொருளியல் பெருவெள்ளத்தைக் கண்டும் காணாமல் இருக்க வைக்கும் முயற்சிகள். அடித்துப்புரட்டும் அலைகள்

இந்தியத் தேர்தல்காலப் பேச்சுகளில் அலையை உருவாக்குதல் பற்றி எப்போதும் பேசப்படுகிறது. ஓர் ஆட்சிக்காலத்தின் முழுமையைக் கணக்கில் எடுத்துக் கொண்டு அலை உருவாவதில்லை; ஆட்சிக் காலத்தின் கடைசிக் கட்டத்தில் தானாக நடக்கும் பெருநிகழ்வுகளாலோ, திட்டமிட்டுக் கட்டமைக்கப்படும் கருத்தியல் போக்காலோ அலை உருவாக்கம் நடைபெறுவதாக அச்சொல்லாடல்கள் முன்வைக்கப் படுகின்றது. இந்தியாவின் முதன்மை அமைச்சராக இருந்த திரு ராஜீவ்காந்தியின் கொலை தன்னியல்பாக நடந்த அலை உருவாக்க நிகழ்வுக்கு எடுத்துக்காட்டு என்றால், 2G பற்றிய பரப்புரைகளைத் திட்டமிட்ட அலை உருவாக்கக் காரணியாகச் சொல்லலாம். இந்திய அளவில் பெரும் அலையாக உருவாக்கப்பட்ட ஒன்றாக அவசரநிலைச் சட்ட அறிமுகமும் அக்கால கட்டத்தில் நடத்த அத்துமீறல்களும் முதன்மையாக எடுத்துக்காட்டு.
தமிழக அரசியல் பலவற்றில் வெவ்வேறு விதமான அலைகள் உருவாகித் தேர்தல் முடிவுகளைத் தீர்மானித்திருக்கின்றன; .. இந்தி எதிர்ப்பு திராவிட முன்னேற்றத்திற்குக் கைகொடுத்த அலை. அடுக்கடுக்காகச் சொல்லப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் அக்கட்சியை ஆட்சியிலிருந்து இறக்கிய அலை. ஆடம்பரத்திருமணம் அ இ அதிமுகவிற்குப் பெரும் தோல்வியைக் கொண்டுவந்த ஒன்று. கட்சியின் வட்டாரத்தலைவர்களின் சொத்துக்குவிப்பும் அதிகாரத்துவப் போக்கும் ஒரு தேர்தலில் திமுகவைத் தோற்கடித்தது. அலையே உருவாக்க முடியாத தேர்தல்களும் கூடத் தமிழக அளவிலும் இந்திய அளவிலும் நடந்து முடிந்துள்ளன. 2016 இல் நடந்த சட்டமன்றத்தேர்தல் அப்படியான ஒன்று.

.இந்தியத்தேர்தல் அரசியலில் தீர்மானகரமான சக்தியாக வாக்கு வங்கிகள் இருக்கின்றன. ஒரு கட்சியின் தொண்டர்கள் என்பது திரட்டப்பட்ட உறுதியான வாக்குவங்கி. தமிழகத்தைப் பொறுத்த வரையில் அ இ அதிமுக, திமுக என்ற இருபெரும் கட்சிகளிடம் அப்படித்திரட்டப்பட்ட பெருந்திரள் வாக்குவங்கி இருக்கிறது. இவ்விரு கட்சிகளில் எந்தக் கட்சி முதலிடத்தில் இருக்கிறது. என்று கேட்டால் கடந்த தேர்தல் வரை அ இ அதிமுகவே முதலிடக் கட்சி என்று சொல்லிவிடலாம். ஆனால் இரண்டு கட்சியிலும் வெகுமக்களைத் திரட்டும் வல்லமைகொண்டவர்களாக விளங்கிய செல்வி ஜெ.ஜெயலலிதாவும் திரு மு.கருணாநிதியும் இப்போது இல்லை. அத்தோடு ஒற்றைக்கட்சியாக இருந்த அ இ அதிமுகவிற்குள் பிளவுகளும் கீறல்களும் ஏற்பட்டுள்ளன. அக்கட்சித்தொண்டர்களை ஒன்றிணைக்கும் ஆளுமைகொண்ட தலைமை இப்போது இல்லை. அதற்கு மாறாகத் திமுகவின் தலைவராக மாறியுள்ள திரு ஸ்டாலின் அக்கட்சியின் முழுமையான தலைவராக மாறியுள்ளார். எப்படி இருந்தாலும் இரட்டை இலை, உதயசூரியன் என்ற இரண்டு சின்னங்களுக்கு வாக்களித்த கட்சிக்காரர்கள் என்னும் திரளினர் எதிரிக் கட்சியின் சின்னத்திற்கு வாக்களிக்கப் போவதில்லை.

இவ்விரு கட்சியோடும் கூட்டணி அமைக்கும் கட்சிகளின் வாக்குவங்கிகள் என அலையும் கூட்டம் ஒன்றிருக்கிறது. அவை அந்தந்தக் கட்சித்தலைமையின் கட்டளைகளை ஏற்றுக் கூட்டணிச் சின்னங்களுக்கு வாக்களிக்கவே செய்யும். கடந்தகாலப் பொதுத் தேர்தல்களிலும் இடைத்தேர்தல்களிலும் கூட்டணிகளால் வெற்றி- தோல்விகள் தீர்மானமாகியுள்ளன. இவற்றைத் தாண்டி கட்சி சார்பற்ற பொதுத்திரள் ஒன்று இருக்கிறது. அது ஒவ்வொரு தேர்தல்களிலும் உருவாகும்/உருவாக்கப்படும் அலைகளுக்கேற்பத் திசைமாறும் என நம்பப்படுகிறது. இந்த நம்பிக்கையின் அடிப்படைக்குப் பின்னால் பொதுக் கருத்துருவாக்கம் என்ற வினை முன்னெடுக்கப்படுகிறது. பொதுக் கருத்துருவாக்கத்தின் தொடர்ச்சியாக இந்தக் கட்சி அல்லது இந்த அணி வெற்றிபெறும் எனவும் கருத்துருவாக்கம் நடைபெறுகிறது. இந்தக் கருத்துருவாக்கத்தில் ஊடகங்களின் பங்கு இருப்பதாகத் தோற்றமளிக்கிறது.

இந்தத் தோற்றத்தை முற்றிலும் மாயத்தோற்றம் என்று சொல்லிவிட முடியாது. கட்சி சார்ந்த ஊடகங்களைத் தாண்டி நடுநிலை ஊடகங்களாகத் தோற்றம் தரும் அச்சு, தொலைக்காட்சி ஊடகங்களில் எழுதும்/ கருத்துரைக்கும் ஆளுமைகள் அலைகளை எழுப்பும்விதமாகத் தேர்தல்காலங்களில் வினையாற்றுகின்றனர். வல்லுநர்கள், சமூக ஆர்வலர், பத்திரிகையாளர், தன்னார்வலர் போன்ற அடையாளங்களோடு தோன்றும் நபர்கள் வசம் இருக்கும் புள்ளி விவரங்கள், வரலாற்றுக்குறிப்புகள், சித்திரிப்பு மொழிகள், அடுக்கியுரைக்கும் சொல்முறைமை போன்ற திறன்களைக் கொண்டு - மொழியைப் பலநிலைகளைப் பயன்படுத்தும் லாவகங்களைக் கொண்டு கருத்துருவாக்கத்தில் ஈடுபட்ட வரலாறு உண்டு. அதே பாணியை இப்போது வரும் தேர்தலிலும் பயன்படுத்துவார்கள். அத்தகையவர்களின் திறன்களும் நிபுணத்துவமும் கட்சி அரசியலில் ஈடுபாடுகொண்ட தொண்டர்களை - தொண்டர்களின் குடும்ப வாக்குகளைத் திசை திருப்பிவிட வாய்ப்புகள் குறைவு. ஆனால் ஆனால் ஒவ்வொரு தேர்தலிலும் அலையும் வாக்குகளாக இருக்கும் பொது வாக்குகள் மீது வினையாற்ற முடியும்.

பொதுவாக்குகள் மீது வினையாற்றக் கருத்தியல் உருவாக்கம் மூலம் சிலவகையான அலையை உருவாக்கத் திட்டங்கள் இப்போதே தென்படத் தொடங்கி விட்டன. அதன் ஒருபகுதியாகவே தமிழகச் செய்தி அலைவரிசைகளின் முதன்மை ஒருங்கிணைப்பாளர்கள் குறி வைக்கப்படுகிறார்கள். ஓரளவு நடுநிலையோடு வாதங்களை நடத்தும் அவர்களின் இடத்தில் மத்தியிலும் மாநிலத்திலும் ஆளும் கட்சிகளின் பால் நேசம் கொண்ட - அதே நேரத்தில் நடுநிலையில் வாதம் செய்பவர்களாகப் பாவனை செய்யக்கூடியவர்களை அந்த இடத்தில் பொருத்தி வைத்துவிட்டால் எதிர்நிலைச் சொல்லாடல்கள் உருவாவது குறையும் என்பதின் உள்ளோட்டங்கள் குமிழிகளாக மேற்பரப்பில் வந்து வெடிக்கின்றன.

இந்த வெடிப்புகள் மிகமிகத் தற்காலிகத்தன்மைகள் கொண்டவை. இவற்றையெல்லாம் தாண்டி அலையை எழுப்பித் தக்கவைக்கும் கருத்துருவாக்கங்கள் அடுத்தடுத்து வண்ணவண்ணப் பலூன்களாக மிதக்கவிடப்படலாம். மிதந்துவரும் வண்ணப்பலூன்களைக் குண்டூசியில் குத்திப் புஸ்வானம் ஆக்கும் வேடிக்கை விளையாட்டுகள் எதிர்த்தரப்பில் நடக்கலாம். அலையெழுப்பி வண்ணக்குமிழிகளைப் பரப்பும் விளையாட்டுகள் தொடங்கியுள்ளன. களிப்பூட்டும் விளையாட்டுகளாக இருக்கும் வரை பார்வையாள வாக்காளர்கள் கண்டுகளிப்பார்கள். கண்ணைப் பறிக்கும் வண்ணத்திரட்டுகளாக திகட்டிப்போனால் கண்களைத் திருப்பிக்கொள்ளவும் செய்வார்கள். என்ன நடக்கப்போகிறது என்பது காட்சி ஊடகங்களின் வரவுகளாக இருக்கப்போகின்றன.

ஆடி அடங்கும் ஆட்டங்கள்
நான்கு அழைப்பாளர்கள், ஓர் ஒருங்கிணைப்பாளர் என்ற வடிவமைப்பில் பெரும்பாலும் அரசியல் சமநிலைகளைப் பேணிக்கொண்டே தமிழ்ச் செய்தி அலைவரிசைகள் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்கின்றன. கட்சி அரசியல் சமநிலையைப் பேணுவதற்கு ஒவ்வொரு கட்சியும் ஆட்களைத் தயாராக வைத்திருக்கின்றன. ஆளும் அ இ அதிமுகவின் சார்பில் பங்கேற்க ஆட்கள் குறைவாக இருந்த காலம் ஒன்று இருந்தது. இப்போதெல்லாம் கண்ணை மூடிக்கொண்டு தகவல்களையும் பட்டியல்களையும் ஒப்பிக்கும் ஆண் ஆளுமைகளும் பெண் ஆளுமைகளுமெனத் தேர்ச்சிபெற்றுவிட்டது ஆளும் கட்சி. அந்த அளவுக்கு திராவிட முன்னேற்றக்கழகம் புதியவர்களைத் தயார் செய்யவில்லை என்றுதான் சொல்லவேண்டும். அந்தக் கட்சியைவிடக் குறைவான எத்தணிப்பு கொண்டது காங்கிரஸ்.

ஆளுங்கட்சி X எதிர்க்கட்சி என்ற எதிரிணைக்கு மாறாகச் சில நேரங்களில் கருத்தியல் முரண்களைப் பேசும் விவாதங்கள் முன்னெடுக்கப்படுவதும் நடப்பதுண்டு. அவ்வகை விவாதங்களைப் பெரும்பாலும் முதலில் எழுப்புபவராக இருந்தவர் திரு குணா.குணசேகரன். அவ்வகையான விவாத அரங்கில் வலதுசாரிக்கருத்தியலை முன்னெடுக்க கட்சி சார்ந்த ஒருவரும் கருத்தியல் சார்ந்த ஒருவரும் என இரண்டுபேர் வலதின் பார்க்க அமர்ந்துவிடுவார்கள். அதேபோல் இடதுநிலைக்காக இடதுசாரிகள், விடுதலைச் சிறுத்தைகள் என இருவர் இருப்பார்கள். ஆக சமநிலை பேணப்பட்டது போல இருக்கும். ஆனால் திரு. குணா.குணசேகரனின் ஒருங்கிணைப்பின் காரணமாக வலதுநிலையாளர்கள் தங்கள் பக்கம் எடை குறைந்திருப்பதாக நினைத்துக்கொள்வார்கள். அவர் இருதரப்பு வாதங்களையும் முன்னெடுக்கும் விதமாக வாய்ப்புகளை வழங்கிய நிலையிலும் அவரைத் தங்களின் எதிர்த்தரப்பாகவே கணித்தார்கள்; கலங்கினார்கள்; கோபப்பட்டார்கள்: விவாதத்தின் போதே காட்டவும் செய்தார்கள்.

நியூஸ் 18 தமிழ் செய்தி அலைவரிசையின் விவாத ஒருங்கிணைப்பில் திரு.குணா.குணசேகரனின் பாணி பலவகைகளில் அந்த அலைவரிசையின் பரவலுக்குக் காரணமாக இருந்திருக்கிறது. அறிவார்ந்த தளத்திலும் களநிலைச் செயல்பாட்டிலும் அந்த அலைவரிசையின்மீது மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியது. தங்களின் விற்பனைப்பொருள்மீது ஏற்படும் நம்பிக்கையே விற்பனையைப் பெருக்கும். இதனை அறியாதவர்கள் அல்ல ஊடகமுதலாளிகள். ஆனாலும் அவர்களுக்கு வரும் அழுத்தத்தைத் தவிர்த்துவிட முடியாத சூழல் உருவாக்கப்படுகிறது. அதற்கு வளைந்துகொடுத்துத் தக்கவைத்துக் கொள்ளலாம். அப்படியில்லாமல் உடைத்து விட்டார்கள் என்றால் குணசேகரன் என்ற தனிநபருக்கு ஏற்படும் இழப்பைவிட அந்த அலைவரிசைக்கு ஏற்படப்போகும் இழப்புக் கணக்கிட முடியாத இழப்பு.

இதனைத் தாண்டி இந்தியப் பொதுவெளியில் ஏற்படும் அச்சமும் பீதியும் ஆட்சியாளர்கள் மீது திரும்பாது என்றும் சொல்லமுடியாது. மக்களின் குரலாக இருக்கும் ஆளுமைகளைச் சிதைப்பதை வேடிக்கை பார்ப்பதாக நினைத்துக்கொண்டு ஆடும் ஆட்டம் களைத்துச் சோர்ந்துவிழும் காலம் ஒன்று வரவே செய்யும். அதுவரை ஆளுமைகளின் பக்கம் நிற்கலாம்; ஆறுதல் சொல்லலாம். குணா.குணசேகரன் சோர்ந்துவிட மாட்டார்.





கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்