அரங்கியல் அறிவோம் 5 நடிப்புப்பயிற்சிகள்


நடிப்பவர்களுக்கான குறிப்புகள் -ஸ்டானிஸ்லாவ்ஸ்கி

நடிகர் உண்மையான கலைஞனாக

உண்மையான ஒரு கலைஞர், ஆச்சரியமான வாழ்வின் பல்வேறு நிலைகளிலும் ஆர்வம் கொண்டவராக விளங்கவேண்டும். அவர் தனது வாழிடத்தில் என்ன நடக்கிறது என்று தெரிந்துகொண்டால் மட்டும் போதாது. அவர் வாழிடம் பெருநகரமாக இருக்கும் நிலையில் சிறுநகரங்கள், கிராமங்கள், தொழிற்சாலைகள், வயல்கள், பண்பாட்டு மையங்கள் என அவனது எல்லைக்குள் வரும் இடங்களில் நடப்பனவற்றையும் அறிந்து கொள்ளவேண்டும். தன்னைச் சுற்றி வாழும் மனிதர்களின் உளவியல் பிரச்சினைகளை – தன் வீட்டிலும் நாட்டிலும் பிறநாடுகளிலும் எனப் படிக்கவேண்டும்.
நமது காலத்தின் பல்வேறு மனிதர்களையும் நடிப்பதற்கு, பரந்த நிலையிலான நோக்குநிலையும் பார்வைப் பரப்பும் அவசியம். சமகால மனிதர்களின் உளவியலையும், பொருளியல் வாழ்வையும், ஆத்மநிலைகளையும் அறிந்தவனாக இருப்பது அவசியம்.

தனது கலையில் நிபுணனாக..

ஒரு நடிகர் உலகு தழுவிய நம்பிக்கைகளையும் மனிதம்சார்ந்த வெளிப்பாடுகளையும் உள்வாங்கி வெளிப்படுத்துபவராக இருக்கவேண்டும். இதுவே ஒரு நடிகரின் /நடிகையின் சிறந்த சக்தியும் உத்தியும் ஆகும். அற்புதமான உணர்வுகளைத் தீவிரமான உணர்ச்சிகளோடு ஒரு கலைஞர் வெளிப்படுத்துவது அவசியம்.

குறைவான கல்வியும், புரிதலற்ற நிலையும் நமது கலையை ஒரு பொழுது போக்குத்தன்மை கொண்டதாக காட்டிவிடும்.

ஒரு நடிகன், பார்வையாளர்களிடம் ஒரு உரிப்பொருளை அல்லது கருத்தை அல்லது வாழ்வை ஒரு நாடகம் மூலம் கொண்டு செல்ல முயலுமுன் அக்கலையில் அவன் நிபுணனாக ஆகிவிட வேண்டும்.

ஒரு வருடம் நடிப்புப்பயிற்சி முடித்தால் எதையெல்லாம் செய்யலாம் என்கிற வழி தெரியுமேயொழிய, தொடர்ந்து அதில் மேற்கொள்ளும் பயிற்சிகளும், சோதனைகளுமே, அவனை நிபுணனாக , கலைஞனாக ஆக்கும்.

தன்னைக் கதாபாத்திரத்திலும், கதாபாத்திரத்தில் தன்னையும் உருவாக்குவதான நிலையை நடிகன் மேற்கொள்ளவேண்டும். அவன் முழுநாடகத்திலும் நடிக்கவேண்டுமென்றால், அதற்கான நடிப்பையும், அப்பாத்திரத்திற்குள் தன்னைப் பொருத்திக்கொள்வதையும் தேர்வுசெய்ய வேண்டும். அவ்வினை முதலிலிருந்து முடிவுவரை மாறாது இருக்கவேண்டும். நடிப்பு வெளிப்பாடு என்பதை மறந்துவிடக்கூடாது. நடிகனின் அகத்தில் இடைவெளிகளற்ற உணர்வு ஓட்டமே வெளிப்புற நடிப்பாக வெளிப்படுகிறது. அத்தோடு, நம் பக்கத்தில் நாம் தான் நிற்கப்போகிறோம்; பேசப்போகிறோம். அந்தப்பாத்திரத்தில் நீங்கள் இருந்தால் எப்படிப்பேசுவீர்கள் என்பதைக் கண்டுபிடித்து அதைக் கொண்டுவரவேண்டும். அதை உணர்ந்துவிட்டால், அந்தப்பாத்திரத்தோடு உங்களுக்கு ஒருவித ரத்த சம்பந்தமே உண்டாகிவிடும். அப்புறம் உங்கள் ஆன்மாவையும் உங்கள் சதையையும் கொண்டு உருவாக்கிய புதிய உயிரியாக மாறிவிடுகிறீர்கள்.

நான் எப்பொழுதும் புதிய ஒன்றைத் தேடிக்கொண்டே இருப்பேன். –

‘ஒரு நடிகன், மேடையில் நடிக்கத் தொடங்கும் முன் ஒருவித ஆன்மபலத்தை உருவாக்கிக் கொள்ளவேண்டும். அவனது உடலுக்குப் புதிய உடையாக அது திகழும். ஒவ்வொரு பாத்திரத்திலும் நடிக்குமுன் ஆன்மநிலையில் நுழைவது எப்படியென்று உணரவேண்டும். அதுவே அவனது கலைப்படைப்பாக்கத்தின் புனிதச்சடங்கு. அதனால் எல்லாம் இயலும்.

முதல் கண்டுபிடிப்பு
-----------------------------------------
எண்ணிக்கையில் அதிகமான பார்வையாளர்களின் முன்னால் நிற்கும் நடிகனின் மனநிலை என்பது இயல்பான நிலையல்ல என்பது மட்டுமல்ல, உண்மையான நடிப்பைத் தருவதற்குத் தடையான கட்டமைப்பைக் கொண்டதும் கூட. அந்நிலையில் அவர் போலச்செய்வதுகூட முழுமையாக இருக்காது

தடைகளின்போது உடல்
1. கண்களை உருட்டல்
2. இதயப்பகுதியை அழுத்துதல்
3. ஆகாயத்தை நோக்கும் கண்கள்
4. புனிதனின் புருவங்கள் போலப் புருவங்களை உயர்த்துதல்
5. கத்துதல்
6. கைகளை வீசுதல்
இவையெல்லாம் பார்வையாளர்களை அலுப்பூட்டுவதிலிருந்து விலக்க உதவும்.

நான் என்ன செய்ய வேண்டும்?
நான் நல்ல மனநிலையில் இருக்கிறேன்
நான் மிகவும் துடிப்பான நிலையில் இருக்கிறேன்
எனக்குத் தரப்பட்ட பாத்திரத்தைக் கச்சிதமாகச் செய்துவிடும் நிலையில் மேடையில் நுழையப்போகிறேன்
ஒரு படைப்பாக்க மனநிலையில் வரும் வார்த்தைகள் இவை

ஒரு நடிகனுக்குப் படைப்பாக்க மனநிலை என்பது, உடலின் முழுமையான விடுதலையும், தசைகளின் ஒட்டுமொத்த தளர்ச்சியின்போதுதான் உருவாகும்.

ஒரு நடிகனின் ஆன்ம மற்றும் உடல் பலம் என்பது, அவன் மேடையில் என்னவாகப் பிரதிநிதித்துவப் படுத்துகின்றானோ அதிலிருந்துதான் அது உருவாகிறது. அவனைச் சுற்றியே அது உருவாகிறது

ஒரு நடிகர், பார்வையாளர்களின் கவனத்தை அடுத்த நடிகரின் உதவியில்லாமல், உச்சபட்சமாக ஏழுநிமிடங்களாகத் தன்வசப்படுத்த முடியும். அமைதியான நிலையில் ஒரு நிமிடம்தான். – ஸ்டானிஷ்லாவ்ஸ்கி.

மோசமான அரங்கியல் மரபுகளின் மூலம் திருப்தியடையும் நபர்களுக்கு அரங்கியலில் இடமில்லை. இங்கு அரங்கியல் என்பது பெரிய எழுத்து அ ஆகும்


எனது முறை இரண்டு பிரிவுகள் கொண்டது.
1. நடிகர் அவனளவில் அகத்திலும் புறத்திலும் செய்துகொள்ளும் வேலைகள்.
2.நடிகர், அவரது பாத்திரத்தின் அகத்திலும் புறத்திலும் செய்துகொள்ளும் வேலைகள்


மூன்று வகையான நடிகர்கள்
1. படைப்பாக்கத்திறன் கொண்ட நடிகர்கள்
2. நகல் செய்யும் நடிகர்கள்
3. மேடை -மட்டக்குதிரைகள்

படைப்பாக்கத் திறன்கொண்ட நடிகனாதலே ஒவ்வொருவனின் விருப்பமும், அதற்கு தன்னுணர்வுபூர்வமாக அம்மனநிலையை அடைய வேண்டும்.
சரியான நடிப்பு என்பதன் அர்த்தம் என்ன?

மேடையிலிருக்கும்போது நடிகனின் சிந்தனையும் செயலும் சரியாக, தர்க்கபூர்வமான தொடர்ச்சியாக, மனித இயல்புவிதிகளின்படி, அந்த நேரத்தில் அப்பாத்திரம் எதை வேண்டுமோ அதன்படியான முழுமையான ஒப்பந்த நிலையில் இருப்பதுதான்.


நகல் நடிப்பு- படைப்பாக்க நடிப்பு

· அழகானது ஆழமானது

· அழுத்தமானது வீர்யமானது

· ஆர்வத்தூண்டும் உள்ளடக்கத்தன்மைகொண்டது

· பார்வையாளரிடம் பதிவுகளை உண்டாக்கும்


நடிப்பில் இரண்டு போக்குகள்

1.நேரடி அனுபவம்

2. நகலெடுக்கும் கலை

புறநிலை வினைகளும் அகநிலைவினைகளும் உண்டாகக் கேள்விகள் அவசியம்

1.நான் என்ன செய்யவேண்டும்?

2. இந்தச் சூழல் உண்மையானால்?

3.இருந்தால் என்னும் மாயம்

ஒரு நடிகனிடத்து ‘ இருந்தால் என்னும் மாயமும்’, ‘தரப்படும் சூழலில்’ – உம் ஒரே இடத்திலேயே தொடங்குகின்றன. – ஆல் என்பது ஊகம்; மற்றொன்று – இல் அதற்குக் கூடுதல் பலம். ‘ஆல்’ என்பதே நடிகனின் படைப்பாக்க நிலையைத் தொடங்குகிறது. இல் அதை வளர்க்கிறது. இவற்றின் செயல்பாடுகள் சிறிதளவு வேறுபடுபவனே ‘ ஆல்’ கற்பனைக்கானத் தூண்டுதல் என்றால் ‘இல்’ கற்பனையின் நிரூபணம்.

சரியான நடிப்பு மற்றும் பொதுவான தன்மை என்பன ஒன்றோடொன்று முரணியத்தன்மைகொண்டன. ஒன்று மற்றொன்றை அழிக்கக்ககூடியது. ‘கலை’ ஒழுங்கையும் ஒத்திசைவையும் விரும்பும் ‘பொதுவான நிலை’ குழப்பத்தையும் ஒழுங்கின்மையையும் உருவாக்கும்.

பொதுவான நிலையில் மேடையில் வினைகள் செய்யப்படுவதைக் கடுமையாக நான் எதிர்ப்பேன். ஏனென்றால் பலபத்து ஆயிரக்கணக்கான எண்ணிக்கையில் பொதுவான நிலையிலான நிகழ்ச்சிகள் தினமும் உலகில் நடக்கின்றன; ஆனால் உண்மையில் படைப்பாக்க நிலை நிகழ்வுகள் ஒருடஜன் எண்ணிக்கையில்கூட இல்லை. நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான நடிகர்கள் ‘பொதுவான நிலை’யில் மேடையில் தங்களை ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள்; ஏதோ சிலர் தங்களை அதற்கு ஒப்படைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

நடிகனுக்கு ‘ஆல்’ மற்றும் ‘இல்’லோடு மிகவும் சிறந்த நண்பன் ‘கற்பனை’தான். நடிகனுக்குக் கற்பனை இல்லையென்றால் அதனை வளர்த்தெடுக்கவேண்டும்; இல்லையென்றால் கலையைவிட்டு வெளியேறிவிட வேண்டும்.

நடிகனின் கற்பனை, வினையாற்றும் கற்பனையாக இருக்கவேண்டும்; வினையற்றதாக இருக்கக்கூடாது.

பேச்சென்னும் லாவகம்

பல நேரங்களில் இதை நான் அனுபவத்திருக்கிறேன். கல்லூரிகள் நாடகப்பட்டறை அல்லது நடிப்புப்பட்டறைகள் நடத்துவதற்காக மாணவிகளை அல்லது மாணவர்களைத் தேர்வு செய்வதற்காகச் சந்திக்கும்போது பெரும்பாலும் இதுதான் நடக்கும். இதைத் தான் தங்களின் நடிப்புத் திறமை என்று நம்பும் இளைஞர்களே பெரும்பாலும் இருக்கிறார்கள். பெரும்பாலும் ஆண்களிடம் எங்கே கொஞ்சம் நடித்துக் காட்டுங்கள் என்று சொன்னவுடன் அவர்கள் செய்யும் முதல் காரியும் கைகளை எங்காவது இருக்கிப் பிடித்துக் கொண்டு பேசத்தொடங்கிவிடுவார்கள். பேசுவதற்காக அவர்கள் மனப்பாடம் செய்து வைத்திருக்கும் வசனம்:

நீதிமன்றம் விசித்திரம் நிறைந்த பல வழக்குகளை சந்தித்திருகின்றது.
புதுமையான பல மனிதர்களை கண்டிருகின்றது.
ஆனால் இந்த வழக்கு விசித்திரமும் அல்ல.
வழக்காடும் நானும் புதுமையான மனிதன் அல்ல.
வாழ்க்கை பாதையிலே சர்வ சாதாரணமாக தென்படும் ஜீவன்தான் நான்.
கோவிலிலே குழப்பம் விழைவித்தேன்.பூசாரியை தாக்கினேன்.
குற்றம் சாட்ட பட்டிருக்கிறேன் இப்படியெல்லாம்.
நீங்கள் எதிர்பார்பீர்கள் நான் இதை எல்லாம் மறுக்க போகிறேன் என்று.
இல்லை. நிச்சயமாக இல்லை.
கோவிலிலே குழப்பம் விழைவித்தேன்.கோவில் கூடாதென்பதற்காக அல்ல.
கோவில் கொடியவரின் கூடாரமாக இருக்க கூடாதென்பதற்காக.
பூசாரியை தாக்கினேன்.அவன் பக்தன் என்பதற்காக அல்ல.
பக்தி பகல்வேஷமாய் ஆகி விட்டதை கண்டிப்பதற்காக.
உனக்கேன் இவ்வளவு அக்கறை.
உலகத்தில் யாருக்கு இல்லாத அக்கறை என்று கேட்பீர்கள்.
நானே பாதிக்க பட்டேன்.நேரடியாக பாதிக்க பட்டேன்.
சுயநலம் என்பீர்கள்.என் சுயநலத்திலே பொதுநலமும் கலந்த்திருகின்றது.
ஆகரத்துக்காக அழுக்கை சாப்பிட்டு தடாகத்தை சுத்தப்படுத்துகிறதே மீன் அதைப்போல. என்னை குற்றவாளி என்கிறார்களே.

இந்த குற்றவாளியின் வாழ்க்கை பாதையிலே கொஞ்ச தூரம் பின்னோக்கி நடந்து பார்த்தால் அவன் கடந்து வந்துள்ள காட்டாறுகள் எவ்வளவு என்று தெரியும்.
பாட்டொலிக்கும் குயில்கள் இல்லை என் பாதையில்.
படமெடுக்கும் பாம்புகள் நெளிந்திருகின்றன.
தென்றலை தீண்டியதில்லை நான்.தீயை தாண்டியிருக்கிறேன்.
கேளுங்கள் என் கதையை.
தீர்ப்பு எழுதுவதற்க்கு முன் தயவு செய்து கேளுங்கள்.
தமிழ்நாட்டிலே இந்த திருவிடத்திலே பிறந்தவன் நான்.
பிறக்க ஒரு நாடு.பிழைக்க ஒரு நாடு.
தமிழ்நாட்டின் தலையெழுத்துக்கு நான் விதிவிலக்கா?
ரங்கூன் என் உயிரை வளர்த்தது. உயந்தவன் ஆக்கியது.
திருமண கோலத்திலே இருக்கும் என் தங்கையை காண வந்தேன்.
மோசடி வழக்கிலே ஈடுபட்டு குற்றவாளி கூண்டிலே உங்கள் முன்னால் நிற்கிறாளே இதோ இந்த ஜாலக்காரி ஜாலி.
இவள் வலையிலே விழுந்தவர்களில் நானும் ஒருவன்.
பணப்பெட்டியை பறி கொடுத்தேன்.பசியால் திரிந்தேன்.மெலிந்தேன்.
கடைசியில் பைத்தியமாக மாறினேன்.
காண வந்த தங்கையை கண்டேன் கண்ணற்ற ஓவியமாக.
ஆம். கைம்பெண்ணாக.தங்கையின் பெயரோ கல்யாணி.
மங்களமான பெயர். ஆனால் கழுத்திலோ மாங்கல்யம் இல்லை.
செழித்து வாழ்ந்த குடும்பம் சீரழிந்து விட்டது.
கையிலே பிள்ளை.கண்ணிலே நீர்.கல்யாணி அலைந்தாள்.
கல்யாணிக்காக நான் அலைந்தேன்.
கல்யாணிக்கு கருணை காட்டினார்கள் பலர்.
அவர்களிலே காளையர் சிலர் கைமாறாக அவள் காதலை கேட்டனர்.
கொலை வழக்கிலே சம்பந்த பட்டு கைதியாக நிற்கிறானே இதோ இந்த கொடியவன் வேலு.
இவன் பகட்டால் மயக்க முயன்றான் என் தங்கையை.
நான் தடுத்திறாவிட்டால் என் தங்கை அப்போதே தற்கொலை செய்து கொண்டிருப்பாள்.


கடவுள் பக்தர்களும் கல்யாணியை காப்பாற்ற வந்தார்கள்.
ப்ரதி உபகாரமாக அவள் கடைகண் பார்வையை கேட்டு.
அவளில் தலைமையானவன் இதோ இந்த பூசாரி.
கல்யாணியின் கற்பை காணிக்கையாக கேட்டிருக்கிறான்.
பராசக்தியின் பெயரால்.உலக மாதாவின் பெயரால்.
கல்யாணி உலகத்தில் புழுவாக துடித்தப்படியாவது உயிரோடு இருந்திருப்பாள்.
அவளை தற்கொலை செய்து கொள்ள தூண்டியது இதோ இந்த பூசாரிதான்.
தன் குழந்தையை இந்த இரக்கமற்ற உலகத்திலே விட்டுச் செல்ல அவள் விரும்பவில்லை.
ஆதரவற்று தன் குழந்தை துடித்துச் சாவதை அவள் விரும்பவில்லை.
அவளே கொன்றுவிட்டாள்.விருப்பமானவர்களை கொல்வது விந்தையல்ல.
உலக உத்தமர் காந்தி.அஹிம்சா மூர்த்தி.
ஜீவகாருண்ய சீலர்.அவரே நோயால் துடித்துக்கொண்டிருந்த கன்றுகுட்டியை கொன்றுவிட சொல்லியிருக்கிறார்.அது கஷ்ட்டமுறுவதை காண சகிக்காமல்.
அதே முறையைத்தான் கையாண்டிருக்கிறாள் கல்யாணி.
இது எப்படி குற்றமாகும்.

வெளிநாட்டில் இருந்து திரும்பிய ஒரு தமிழனுக்கு வாழ்வதற்க்கு வழி இல்லை.
தமிழ்நாட்டிலே பிறந்த ஒரு பெண்ணுக்கு வாழ்வதற்க்கு பாதுகாப்பில்லை.
என் தங்கை மட்டும் கொஞ்சம் விட்டு கொடுத்திருந்தால்..
கோடீஸ்வரனின் வீட்டு பள்ளியறையிலே ஒருநாள்.
மானத்தை விலை கூறியிருந்தால் மாளிகைவாசியின் மடியில்லே ஒருநாள்.
இப்படி ஓட்டியிருக்கலாம் நாட்களை.
இதைத்தானா இந்த நீதிமன்றம் விரும்புகிறது.
பகட்டு என் தங்கையை விரட்டியது.
பயந்து ஓடினாள்.பணம் என் தங்கையை துரத்தியது.மீண்டும் ஓடினாள்.
பக்தி என் தங்கையை பயமுறுத்தியது.
ஓடினாள்.ஓடினாள்.வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினாள்.
அந்த ஓட்டத்தை தடுத்திருக்க வேண்டும்.
வாட்டத்தை போக்கியிருக்க வேண்டும் இன்று சட்டத்தை நீட்டுவோர்.
செய்தார்களா.வாழ விட்டார்களா என் கல்யாணியை.

வக்கீல்: குற்றவாளி யார் வழக்கிற்கோ வக்கீலாக மாறுகிறார்.

இல்லை யார் வழக்கிற்கும் இல்லை.
அதுவும் என் வழக்குதான்.என் தங்கையின் வழக்கு.
தங்கையின் மானத்தை அழிக்க எண்ணிய மாபாவிக்கு புத்தி புகட்ட அண்ணன் ஓடுவதில் என்ன தவறு.
கல்யாணி தற்கொலை செய்துகொள்ள முயன்றது ஒரு குற்றம்.
குழந்தையை கொன்றது ஒரு குற்றம்.நான் பூசாரியை தாக்கியது ஒரு குற்றம்.
இத்தனை குற்றங்களுக்கும் காரணம் யார்?யார்? யார் காரணம்?
கல்யாணியை கஞ்சிக்கு வழி இல்லாதவளாக அலையவிட்டது யார் குற்றம்.
விதியின் குற்றமா? அல்லது விதியை சொல்லி வயிர் வளர்க்கும் வீணர்கள் குற்றமா?

பணம் பறிக்கும் கொள்ளைக்கூட்டத்தை வளர விட்டது யார் குற்றம்?
பஞ்சத்தின் குற்றமா? அல்லது பஞ்சத்தை மஞ்சத்திற்க்கு வரவழைத்த வஞ்சகர்களின் குற்றமா?
கடவுள் பெயரால் காமலீலை நடத்தும் போலி பூசாரிகளை நாட்டிலே நடமாட விட்டது யார் குற்றம்?
கடவுளின் குற்றமா? அல்லது கடவுள் பெயரை சொல்லி காலஷேபம் நடத்தும் கயவர்கள் குற்றமா?
இந்த குற்றங்கள் களையப்படும் வரை குணசேகரன்களும், கல்யாணிகளும் குறைய போவதில்லை.
இதுதான் எங்கள் வாழ்கை ஏட்டில் எந்தப்பக்கம் புரட்டினாலும் காணப்படும் பாடம், பகுத்தறிவு, பயனுள்ள அரசியல் தத்துவம்.

மு.கருணாநிதியின் பராசக்தியில் இடம்பெற்ற நீண்ட நீதிமன்றத்தனிமொழிகள் https://www.youtube.com/watch?v=SdnOlP94x2g

இதற்குப் பதிலாகக் கட்டபொம்மனும் ஜாக்ஸன் துரையும் பேசும் உரையாடல் காட்சிகளை ஒருவரே மாறிமாறிப் பேசி நடித்துக் காட்டுவார்கள் .https://www.youtube.com/watch?v=VwYTCFO3Gak.

பெண்களாக இருந்தால் பேசும் காட்சி மாறிவிடும்.பேசப்படும் வசனம் பூம்புகாரின் காட்சியாக இருக்கும்.: https://www.youtube.com/watch?v=svvgz4Bt3Vo

எனக்கோபம் கொப்பளிக்க வசனம் பேசுவார்கள். நடிகர்களாக ஆகவிரும்பும் ஒருவர் பேசிப்பழகி நடித்துக்காட்ட நிறைய சினிமாக்காட்சிகள் இருக்கின்றன. அவை பலவும் முன்னர் மேடை நாடகங்களாக இருந்தவை என்பதை நாம் மறந்துவிட வேண்டாம்.

வசனம் பேசுவது அதுவும் நீண்ட வசனம் பேசுவது - கோபமும் ஆத்திரமும் வெளிப்பட வசனம் பேசுவது நடிப்பின் ஒரு பகுதி தான். அதனைக் கைக்கொள்ளவும் சில வழிகள் இருக்கின்றன.

பேசுவது நடிப்பின் மூன்று முக்கியமான கூறுகளுள் ஒன்று. எல்லாக்கலைகளுமே வெளிப்பாடுதான். ஒவ்வொன்றும் அதன் அடிப்படைக் கருவிகளின் வழியாக வெளிப்படுகின்றன. நடிப்பும் ஒரு கலை என்ற வகையில் அதுவும் வெளிப்படுகிறது. அதன் அடிப்படைக்கருவி வழியாக. நடிப்பிற்கான அடிப்படைக்கருவி உடல். மனித உடல் பிற மனித உடல்களோடும், உறவுகொள்வதற்காக உருவாக்கப்படும் பொருட்களொடும் கொள்ளும் உறவில் - வெளிப்பாட்டு உறவில் நடிப்புக்கலை வடிவம் கொள்கிறது. உடல் குரல் மனம் என்ற மூன்றுமே நடிப்புக்கலையின் அடிப்படைக்கூறுகள். இம்மூன்றையும் நாம் பிரித்துப்பேசினாலும் உடலே அதன் இருப்பிடம்; வசிப்பிடம். ஆனால் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியான பயிற்சிகள் இருக்கின்றன.

நடிகன் தனது உடலைக் கட்டுப்படுத்தும் பயிற்சிகளில் சிறப்புக்கவனம் செலுத்தும்போது மனவளப்பயிற்சியாகவும் குரல்வளப்பயிற்சியாகவும் ஆகிவிடுகின்றது. குரல்வளப்பயிற்சியைப் பெற நடிகர்கள் செய்யவேண்டிய சிலவற்றை இப்போது பார்க்கலாம்.

உடல் தளர்ச்சி

உடல் சார்ந்த எந்தப் பயிற்சியையும் உடம்பு தளர்ச்சியாகவும் அமைதியாகவும் இருக்கும்போது தொடங்குவது நல்லது. எனவே முதலில் நாம் நம்மை உணரவேண்டும். நம்மை உணர்தல் என்பது நம் உடம்பு எப்படி இருக்கிறது என்பதை உணர்வதே ஆகும். அதன் பிறகு நமது மனம் எப்படி இருக்கிறது என்பதை உணர்வதாகும்.

மூச்சுப்பயிற்சி செய்யவிரும்பும் ஒருவர் முதல் உடலைத் தளர்வாக வைக்கப்பழக வேண்டும். கைகள், கால்கள், கழுத்து, இடுப்பு என மடங்கி நிமிரக்கூடிய இடங்களைத் தளர்வாக்க வேண்டும். தளர்வாக இருக்கிறது எனச் சொல்லிக்கொண்டே உணர வேண்டும். தேவையானால் பற்றிக்கொள்ளும்படியாக நாற்காலிக்கருகே நின்றுகொண்டு கைகளை மெல்லமெல்ல மேலே உயர்த்திச் செல்லவேண்டும். முடிந்தவரை உயர்த்தலாம். குதிகாலில் நின்று எட்டாத உயரத்தைத் தொட முயல்வதுபோல் உயரவேண்டும். கத்தவேண்டும் என்றால் கத்தலாம். மெதுவாகத் தலையையுயர்த்தி கடல்காற்றை - ஆற்றோர ஈரக்காற்றை சுவாசிப்பதாக நினைத்து உணரவேண்டும். புல்வெளியில் படுத்து அதன் மணத்தை உணரவேண்டும். பிறகு மெதுவாகக் கைகளை இறக்கித் தளரவிடலாம் குனிந்து அனைத்து சக்தியையும் வெளியே விடுவதுபோலக் காற்றை வெளியே தள்ள வேண்டும். நுரையீரல் முழுவதும் காற்றை நிரப்பி வெளியேற்றும் பயிற்சியைப் பல தடவை செய்யவேண்டும். கழுத்துப்பகுதியில் பிடிப்பு தோன்றும். அதை இடமும் வலமும் திருப்பிப் பலதடவை இயக்கவேண்டும்.

இப்போது நாற்காலியில் உட்கார்ந்துகொள்ளலாம்.வசதியாக உட்கார்ந்துள்ளதாக உணரவேண்டும். இருபுறமும் கைகள் தளர்வாகத் தொங்கட்டும். குதிகாலைத் தரையில் ஊன்றி முன்புறமும் பின்புறமும் அசைக்கவேண்டும். மெலிதான சூரியவெப்பத்தில் கடற்கரையில் அல்லது கப்பல் தளத்தில் அமர்ந்திருப்பதாக நினைத்துக்கொள்ளுங்கள். மெதுவாக அசையலாம். பிறகு தலையைப் பாதத்தில் படும்படி கொண்டுசெல்லவும். இப்போது ரத்தம் உடலின் பலபாகங்களுக்கும் செல்லும்.

இப்போது மெதுவாக எழுந்து நீண்டதாக மூச்சை இழுத்து வெளியே விடவேண்டும். கைகளை மடக்கி நீட்ட வேண்டும். தொங்கவிட வேண்டும். உதறவேண்டும். கை மணிக்கட்டு, விரல்கள் வெளியே கழன்று விழும்விதமாக உதறவேண்டும். நாற்காலியைப் பிடித்துக்கொண்டு குதிகாலை உயர்த்தித் தளர்த்திட வேண்டும். இடது கால் வலதுகால் என மாற்றிமாற்றிச் செய்ய வேண்டும்.


மூச்சுப் பயிற்சிகள்

ஸ்டானிஸ்லாவ்ஸ்கி தனது ‘ பாத்திரத்தை உருவாக்குதல் ( Creating a Role)' என்னும் நூலில் உடல் செயல்பாடுகளின் முக்கியத்துவம் பற்றிச் சொல்லும்போது இப்படிச் சொல்கிறார்: ஒரு மனிதன் முழுமையாகத் தனது சுவாச உறுப்புகளை ஒன்றுபடுத்திக் கட்டுப்படுத்தினால், அதன் பலன் மிக உயரியதாக அமையும். உடலுக்குத் தேவையான ஆக்ஸிஜன் நுழையும்; இதயம் துடிக்கும்; ரத்தம் சுத்தமடைந்து சுற்றும்போது வாழ்வதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் செயல்படும்; அனைத்தும் புதிதாகிவிடும். நடிகன் என்னும் மனிதனின் வெளிப்பாட்டுக் கருவியே அவனது உடல் என்பதை நினைவில் கொண்டால் அவரது இந்தக் கூற்றின் முக்கியத்துவம் புரியும்.

நடிப்புக்கு கட்டுப்பாடுள்ள சுவாசம் அவசியம். அது மேடை அல்லது காமிராவின் பயத்தைப் போக்கும் சாதாரண சுவாசம் தடுமாற்றத்தை உண்டாக்கும். சுவாசக்கட்டுப்பாட்டிற்கான பயிற்சிகள் சிலவற்றைச் செய்யலாம். ஒவ்வொரு நாள் பயிற்சியின் போதும் ஏதாவது சில நாடகங்களின் வசனங்களை மனனம் செய்து வைத்துக் கொள்வது நல்லது. சில வசனங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

i. இதனால் பொதுமக்களுக்கு அறிவிப்பது என்னவென்றால், அரசன் எழுப்பிய அற்புதக்கோயிலின், சிலைப்பிரதிஷ்டை விழா நாளை தொடங்குகிறது

ii. ஆம் இன்னொரு மஹல். இந்துஸ்தான் முழுவதும் மஹல்கள். பூந்தோட்டங்கள்.சாவை ஏன் வெறுக்க வேண்டும். இந்தமாதிரி சமாதிகள் கட்ட முடிந்தால்..! இயற்கை மனிதனைப் பார்த்து, ‘ என்னைக்கவிதையாக்கு’ என்று கேட்டுக்கொண்டே இருக்கிறது. அதோ பார்..! கல்லில் எழுதிய வெண்பா.. தாஜ்மஹல்.! இன்னொரு கவிதை.. இன்னொரு கவிதை [இந்திரா பார்த்தசாரதியின் ஔரங்கசீப்பில் ஷாஜகான்]

iii. (கோபாவேசத்துடன்) சின்ன விஷயமா..? நான் என் தந்தையைக் கொன்றது சின்ன விஷயமா..?.தொழுகை சமயத்தைக் களங்கப்படுத்தியது சின்ன விஷயமா? எனக்கு ஜனங்களின் வார்த்தையைப் பற்றிக் கவலையில்லை பரணி. ஆனால் அவர்களுடைய கோணலான மனங்களைப் பற்றித்தான். என் தாய். என்னைப் பெற்றெடுத்த பெண்! அவளுக்கு என் தந்தையைப் பிடிக்காது. ஆனால், அவளுக்கும் என் மேல் கோபம். ஏன் தெரியுமா? அவரோடு என் தம்பியும் இறந்தான். (கிரிஷ் கர்னாடின் துக்ளக்கில் முகம்மது துக்ளக்)


iv. ஆசை தணித்தாயடா !- உயிர் மாமனே! ஆவியைக் காத்தா யடா

பூசை புரிவோமடா! - உயிர் மாமனே! பொங்கலுனக்கிடுவோமடா
நாச மடைந்ததடா!- நெடுநாட் பகை நாமினி வாழ்ந்தோ மடா!
பேசவுந் தோன்று தில்லை; - உயிர் மாமனே- பேரின்பங் கூட்டி விட்டாய்.
( பாஞ்சாலி சபதத்தில் துரியோதனன்)
குரல்வளப்பயிற்சிகள்

தளர்வாக நின்று மூச்சை உள்ளிழுக்க வேண்டும். மூச்சை உள்ளே நிறுத்திக் கொண்டே கைகளையும் தோள்பட்டைகளையும் உயர்த்தவேண்டும். எவ்வளவு நேரம் காற்று உள்ளே இருக்க முடியுமோ அவ்வளவு நேரம் உள்ளே இருக்கலாம். பின்னர் காற்றை வெளியே அனுப்பலாம். இதைத் திரும்பத்திரும்பச் செய்ய வேண்டும். அதன் பின்பே பேசத்தொடங்க வேண்டும். இந்தப் பயிற்சிக்கு கழுத்துப்பட்டை சுவாசப்பயிற்சி என்று பெயர்

தளர்வாக நின்று, திறந்த கையை மார்பின்மீது வைத்து மூச்சை உள்ளிழுக்க வேண்டும். அப்போது மார்பு உயரும். மூச்சைவெளியிட வேண்டும். பலமுறை இதைச் செய்ய வேண்டும். திரும்பவும் அந்த வாக்கியங்களைப்பேச வேண்டும். இந்தப் பயிற்சி மார்புக்கூடு சுவாசப்பயிற்சியென அழைக்கப்படுகிறது.

3. தளர்வாக நின்று, மூச்சை உள்ளிழுத்து கையால் கீழ்விலா எலும்புப்பகுதியை அழுத்த வேண்டும். அவ்விலாவெலும்புகளை முன்புறமாகத் தள்ளி மேலேயுயர்த்திவிட வேண்டும். திரும்பவும் சிலமுறை செய்ய வேண்டும். அந்த வாக்கியங்களைப் பேச வேண்டும்.பேசும்போது சுவாசத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். இப்பயிற்சி இடைசார் மூச்சுப்பயிற்சி எனப்படுகிறது

4. தளர்வாக நின்று, மூச்சை உள்ளிழுக்க வேண்டும். வலது உள்ளங்கையை அடிவயிற்றில் - விலா எலும்புகளின் அருகில் இடது உள்ளங்கை இருக்கட்டும். மூச்சை இழுத்துவெளிவிடவும். இப்போது அதே வாக்கியங்களை முயற்சிக்கவும். இது உதரவிதான - அடிவயிற்றுச் சுவாசமாகும். நெஞ்சில் சுவாசிப்பதை நடிகர்கள் பெரும்பாலும் தவிர்க்க வேண்டும். அது சாதாரண சுவாசமே. நடிகர்களுக்குத் தேவையானது மார்புக்கூட்டில் சுவாசிப்பதும், இடையிலிருந்து சுவாசிப்பதுமாகும்.

5. தளர்வாக நின்று, முழுமையாகக் காற்று இழுத்து நுரையீரலை நிரப்ப வேண்டும். வாயைச் சிறிதாகத் திறந்து வெளியே அனுப்பவும். திரும்பவும் இதைச் சில தடவை செய்ய வேண்டும். இப்படிச்செய்வது ஆழமான சுவாசம் எனப்படுகிறது.

6. தளர்வாக நின்று ஆழமாக மூச்சுக்காற்றை இழுத்து நிரப்பிய பின் மனத்திற்குள் 1,2,3,4,5 என எண்ணிக்கொண்டே இருக்க வேண்டும். இப்போது காற்றை வெளியே விட வேண்டும். அப்போது 6,7,8,9,10 என எண்ணிக்கை செய்ய வேண்டும். 10 முறை இப்படிச் செய்யலாம். இந்தச் சுவாசமுறை கட்டுப்பாட்டுச் சுவாசமாக அமையும் .

குரல் வீச்சு

1. இரண்டுபேர் 10 அடி தூரத்தில் நின்று குறிப்பிட்ட சொற்களை , வாக்கியங்களைச் சொல்லவேண்டும். ஒவ்வொரு சொல்லும் தெளிவாகக் கேட்க வேண்டும். ஒருவர் சொன்னதை மற்றொருவர் திரும்பச் சொல்ல வேண்டும். கொஞ்சம் கொஞ்சமாக இடைவெளியைக் கூட்ட வேண்டும்.

2. உச்ச ஸ்தாயியில் ஒலிக்கும் நாதஸ்வர மேளக்கச்சேரி அல்லது மேற்கத்திய இசைக்கிடையே ஒவ்வொரு வார்த்தைகளையும் தெளிவாகக் கேட்கும்படி பேச வேண்டும்

கால அளவு

ஒரு நடிகர் ஒரு நிமிடத்தில் குறைந்தது 160 வார்த்தைகளைப் படிக்க வேண்டும். படிப்பது புரியவேண்டும். சாதாரண - அன்றாட நடப்பு - செய்தித்தாள் கட்டுரை போன்றனவாக இருந்தால் ஒரு நிமிடத்தில் 190 வார்த்தைகள் படிக்க வேண்டும்.

உச்சரிப்பு

ஒலியளவும் உச்சரிப்பில் ஒருபோல் இருக்கும் சொற்களை உச்சரிப்புக்காகப் பயன்படுத்த வேண்டும். ஒவ்வொரு மொழியிலும் நா திரிப்புச் சொற்களும் வாக்கியங்களும் இருக்கின்றன. அவற்றைத் தொகுத்துப்பயன்படுத்தலாம்.

1. ஆசை தோசை பூஜை

2. காக்கை கச்சை இச்சை

3. காகம் பாசம் தாகம்

4. வேகம் பாசம் கஜம்

5. பல்லக்கு சில்லறை வல்லமை

6. பலப்பல சிலச்சில கொழகொழ

7. பள்ளம் கள்ளம் வள்ளம்

8. பழம் பலம் கிழம்

9. தாத்பரியம் சந்தோஸம் வியாக்யானம்

10. மகிழ்ச்சி இகழ்ச்சி புகழ்ச்சி

11. புறப்படுகின்றது நடந்துபோனான் சென்றுநின்றாள்

12. அற்றைத் திங்கள் இற்றைத் திங்கள் எற்றைத் திங்கள்

13. திங்கள்மாலை வெள்ளிக்காலை எங்கள் வேளை
14. வந்தேமாதரம் சொந்த பந்தம் நொந்த மனசு
15. கண்டேன் சீதையை தந்தேன் நீதியை கொன்றேன் தேவியை

பின்வரும் வசனத்தொடர்ச்சியை வேதபாராயணம் செய்வது போலவும், வேள்விக்கு முன் அமர்ந்து முனிவர்கள் சொல்வதுபோலவும் சொல்லிப்பார்க்கலாம்


1. லோகநாதரே, என்னிடத்தினின்று இவ்வுலகத் தோற்றத்தையறியுங்கள். முன்னே அங்கு எல்லாம் ஜயரூபமாகவே யிருந்தது. அதில் பூமி சிருஷ்டிக்கப்பட்டது.
2. குஷிக்கு விகுஷியென்ற ஒரு வீரர் பிள்ளையாய்ப் பிறந்தார்.
3. நஹீஷர் குமாரர்.தருமத்தை கைவிடாதவரான நாபாகர்.

4. ராமரென்று புகழ்பெற்ற தாங்கள் அவருடைய மூத்த குமாரராகின்றீர்கள். ஆகையால் தாங்கள் தங்களுடைய ராச்சியத்தைக் கைப்பற்றுங்கள்.

5. அதன்பிறகு, சுயம்புவான பிரமா, தேவதைகளுடன் தோன்றினார்.

6. விகுஷியின் குமாரர் வெகு காந்தியுடன் விளங்கிய பிரதாபமுள்ள பாணர்.

7. நாபாகருக்கு, அஜரென்றும் ஸீவரதர் என்றும் இரண்டு குமாரர்கள்.

8. ராமரென்று புகழ்பெற்ற தாங்கள் அவருடைய மூத்த குமாரராகின்றீர்கள். ஆகையால் தாங்கள் தங்களுடைய ராச்சியத்தைக் கைப்பற்றுங்கள்.

9. இஷ்வாகுவை அயோத்தியில் பூர்வ அரசராகவெண்ணுங்கள்

10. பின்பு பிரசித்தரான நாராயணமூர்த்தி வராஹரூங்கொண்டு பூமியை ஜலத்திலிருந்து எடுத்தார்.

11. பாணருக்கு மகாபாகுவான அநரண்யரென்ற கீர்த்திபெற்ற மகனாற்பிறந்தார்.ஸத்துக்களு ளுத்தமமான அவர் மகாராஜாராயிருந்த காலத்தில் , மாதம் மும்மாரி பெய்தது. ஒரு திருடனுமில்லை.

12. அஜருடைய குமாரர் வெகு தருமாத்மாவாகிய தசரதர்.

13. ராமரென்று புகழ்பெற்ற தாங்கள் அவருடைய மூத்த குமாரராகின்றீர்கள். ஆகையால் தாங்கள் தங்களுடைய ராச்சியத்தைக் கைப்பற்றுங்கள்.

14. இஷ்வாகுவை அயோத்தியில் பூர்வ அரசராகவெண்ணுங்கள்

15. அவரிடமிருந்து மரீசி யுண்டானார்.

16.அஸமஞ்சனுக்கு வீரியவானான அம்சுவான் என்ற பிள்ளையுண்டானான்.

17. ராமரென்று புகழ்பெற்ற தாங்கள் அவருடைய மூத்த குமாரராகின்றீர்கள். ஆகையால் தாங்கள் தங்களுடைய ராச்சியத்தைக் கைப்பற்றுங்கள்.

18. மரீசியினிடமிருந்து காசியபர் பிள்ளையாகப் பிறந்தார்.

19. அம்சுவான் குமாரர் திலீபர்.

20. ராமரென்று புகழ்பெற்ற தாங்கள் அவருடைய மூத்த குமாரராகின்றீர்கள். ஆகையால் தாங்கள் தங்களுடைய ராச்சியத்தைக் கைப்பற்றுங்கள்.

21. காசியபரிடமிருந்து சூரியபகவான் உண்டானான்.திலீபருக்கு பிள்ளை பகீரதர்.

22. ராமரென்று புகழ்பெற்ற தாங்கள் அவருடைய மூத்த குமாரராகின்றீர்கள். ஆகையால் தாங்கள் தங்களுடைய ராச்சியத்தைக் கைப்பற்றுங்கள்.

23. அவனுடைய பிள்ளை மநு. அவர் ஒரு பிரஜாபதி.

24. பகீரதரிடமிருந்து ககுஸ்தர் பிறந்தார். அவரால் இவ்வம்சம்த்தவர்கள் காகுஸ்தரென்று பெயர் பெற்றார்கள்.

25. ராமரென்று புகழ்பெற்ற தாங்கள் அவருடைய மூத்த குமாரராகின்றீர்கள். ஆகையால் தாங்கள் தங்களுடைய ராச்சியத்தைக் கைப்பற்றுங்கள்.

26. மநுவின் குமாரர் இஷ்வாகு.அந்த இஷ்வாகுவை அயோத்தியில் பூர்வ அரசராக எண்ணுங்கள்.

27. ககுர்கள்.

28. ராமரென்று புகழ்பெற்ற தாங்கள் அவருடைய மூத்த குமாரராகின்றீர்கள். ஆகையால் தாங்கள் தங்களுடைய ராச்சியத்தைக் கைப்பற்றுங்கள்

[நூற்றுப்பத்தாம் சருக்க்கம்.வசிஷ்டர் ராமரைப் பட்டாபிஷேகம் பண்ணிக்கொள்ளவேண்டல்.]

நடிக்கவிரும்பும் நீங்கள் நடிங்க. அதற்குமுன் பயிற்சிகளைத் தொடங்குங்கள்.


மொழி: வல்லாண் கை ஆயுதம்

பேச்சு இயல்பான நிலையில் தகவல் பரிமாற்றமாக இருக்கிறது. அதற்கான மொழியை மட்டுமே பயன்படுத்தும். தகவல் சொல்லும் மொழி, அடை, உரி, போன்ற முன்னொட்டுகளைக் குறைவாகவே பயன்படுத்தும். அடைமொழிகள் இல்லாத, உரிச்சொற்கள் பயன்படுத்தாத மொழியின் வழியாகத் தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் மனிதர்கள், அதிலிருந்து தங்களுக்குப் பயன்படுவனவற்றை மட்டும் எடுத்துக்கொள்வார்கள். மற்றவைகளை விட்டுவிட்டு விலகிப்போவார்கள்.

பேச்சு, கலையாக மாறும்போது மொழி பலவிதமான அணிகலன்களைப் பூட்டிக்கொண்டுப் பகட்டுக்காட்டும். அந்தப் பகட்டு நேரடிப்பகட்டாகவும் கவிதைமொழி போன்ற மறைமுகப் பகட்டாகவும் இருப்பதுண்டு. ஆனால் அந்தப் பகட்டை உருவாக்கும் நபர் தனது உடலுக்குள் நிரப்பிக்கொள்ளும் போது பலவிதமான உணர்வுகளை உருவாக்கும் திறனைப் பெற்றவர் களாக இருந்தால், அவரின் முன்னால் இருக்கும் நபர்களின் பாடு திண்டாட்டம்தான். எழுப்பப்படும் இசையோடு சேரும் மந்திரமொழிகள் கேட்கும் தனிநபரின் தன்னிலையைக் கரைத்துச் சொல்பவரிடம் மண்டியிடச் செய்துவிடும். சொல்பவர் ஆணாக இருக்கும்போது கேட்கும் பெண் அந்த ஆணின் இச்சைக்குப் பணிந்துவிடும் வாய்ப்புகள் ஏற்படும். பெண்ணின் சொற்களாக வரும் மந்திரச்சொற்களுக்கு ஆண்கள் அடிபணிவதும் நடக்கும். சாமியார்கள்/ சாமியாரிணிகளிடம் ஏமாறும் கதைகளில் மொழியின் பங்கை ஆய்வுசெய்து விளக்கவேண்டும். சாமியார்கள் பெண்களிடம் வேண்டுவது அவர்களது உடலாக இருக்கிறது. சாமியாரிணிகள் ஆணின் உடலை வேண்டுவதைவிடப் பொருளை- பணத்தை- வேண்டுகிறார்கள்.

பேச்சை, கலையாக ஆக்கும் வல்லமை உள்ளவர் அரசியல்வாதியாக ஆகும்போது மொழியைக் கொலை மற்றும் தற்கொலையின் கருவியாக ஆக்கமுடியும். உணர்ச்சிகளைத் திரட்டி மெய்ப்பாடுகளாக்கித் தனது உடலில் நிரப்பி அதன் கணத்தைத் தன்முன்னே இருக்கும் மனிதர் களிடத்தில் கடத்தும் கலையைப் பற்றி விரிவாக நடிப்புக்கலைக் கோட்பாடுகள் பேசுகின்றன. பரதரின் நாட்ய சாஸ்திரத்தில் சஹிருதயர் என்றொரு சொல் உண்டு. நடிப்பவர்களின் இதயமும் பார்க்கிறவர்களின் இதயமும் ஒன்றாவதைப் பற்றிய புரிதலை உண்டாக்கும் சொல் அது. இதயம் ஒன்றாதல் வழி உடலும் ஒன்றாகும். செயலும் ஒன்றாகும். கூடுவிட்டுக் கூடுபாயும் வித்தை அது.

இந்த வித்தையைக் கற்ற இரு ஜெர்மானியர்கள் தங்கள் மொழியைக் கொலைக்கருவிகளாக ஆக்கிவிட்டார்கள் என்றார் இன்னொரு ஜெர்மானியர். தத்துவத்தையும் இறையியலையும் முன்னெடுக்கப் பயன்பட்ட ஜெர்மானிய மொழி கோயபல்ஸிடமும் ஹிட்லரிடமும் கொலைக்கருவியாகவும் தற்கொலையின் ஆயுதமாகவும் ஆனதைக் கண்ட பெர்ட்டோல்ட் ப்ரெக்ட் என்னும் அரங்கக் கலையியல் வல்லுநர் அப்படியான மொழியையும் நடிப்புக்கோட்பாட்டையும் நிராகரிக்க வேண்டும் என்றார். தன்னுடைய அரங்கியல் கோட்பாட்டை தூரப்படுத்து நிலைக் கோட்பாடு என்றார் ப்ரெக்ட். வெர்ப்ரம்டங்க்எபக்ட் (Verfremdungseffekt) என்ற உச்சரிப்புக்கொண்ட ஜெர்மானியச் சொல்லுக்கு அந்நியமாக்கல் விளைவு என மொழிபெயர்ப்பு தரலாம். ஆங்கிலத்தில் அதன் மொழிபெயர்ப்புச் சொல் -

ஜெர்மானிய மொழிக்குச் சற்றும் குறைந்ததல்ல சம்ஸ்க்ருதமும் தமிழும். தமிழக வரலாற்றில் பக்திமார்க்கம் பரவிய பிற்காலச் சோழர்கள் காலத்திலும் பிற்காலப் பாண்டியர்கள் காலத்திலும் தமிழும் சம்ஸ்க்ருதமும் இணைந்து நடத்திய கூட்டுக் கொலைகளும் கூட்டக் கொலைகளும் ஏராளம். நாயன்மார்களின்/ ஆழ்வார்களின் பாடல்களாகவும் தசாவதாரக் கதைகளாகவும், திருவிளையாடல் புராணங்களாகவும் கிடைக்கின்றன. கோயில்களின் கல்வெட்டுகளும் பதிவுசெய்து வைத்திருக்கின்றன. மெய்க்கீர்த்திகள் பொய்சொல்லவில்லை.

நிகழ்கால அரசியல்வாதிகளில் உணர்ச்சி மயமான பேச்சாளர்களால் வழிநடத்தப்படும் கட்சிகளின் தொண்டர்களே மாற்றுக் கருத்துகளை ஏற்காதவர்களாகவும் மாற்றுக் கருத்தாளர்கள் மீது வன்முறையைச் செலுத்துபவர்களாகவும் இருக்கிறார்கள். திடீர்த்தாக்குதல்கள் நடத்தும் துணைக் குழுக்களை நேரடியாக வழிநடத்தாமல், உணர்ச்சிமிக்கப் பேச்சாளர்களின் வசம் ஒப்படைத்து விடுகின்றன. அழுகை, அச்சம், பெருமிதம் முதலான மெய்ப்பாடுகளின் கலவையாகத் தங்கள் உடலையும் உடலின் மொழியையும் மாற்றிக்கொண்டு அவர்கள் ஆற்றும் சொற்பொழிவுகள் கடத்துவன சொற்களின் அர்த்தங்களை அல்ல; உணர்ச்சிகளின் திரட்சியை.

தேசிய அளவில் சமயநம்பிக்கைகளைப் புனிதமாக்கி உணர்ச்சி வசப்படுத்துதல் நடக்கிறது என்றால், மாநில அளவில் இனம் மற்றும் மொழியின் மீதான புனிதம் அதே வேலையைச் செய்கின்றன. புனிதங்களுக்குத் துணையாக மொழி பயன்படும்போது அதன் முதன்மை வினையான தகவல் தொடர்பென்னும் அடிப்படையை இழக்கிறது. வல்லான் கை ஆயுதமாகிக் கொலைகளைச் செய்கிறது; தற்கொலைகளைத் தூண்டுகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தி.சு.நடராசனின் திறனாய்வுப் பார்வைகள் :தமிழ் அழகியல், தமிழகத்தில் வைதீக சமயம்

உடல் மறுப்பு என்னும் பெரும்போக்கு

கற்றல் - கற்பித்தல்: மாணவ ஆசிரிய உறவுகள்