திருமங்கலம் தொகுதி வாக்களிப்பும் சேடபட்டி இரா.முத்தையாவும்.
திருமங்கலம் தொகுதி : வாக்களிப்பு 2026 சட்டமன்றத் தேர்தலின்போது இந்தியாவில் இல்லை. அதனால் எனது தொகுதியான திருமங்கலத்தில் வாக்களிக்கவில்லை. இருந்திருந்தால் திராவிட முன்னேற்றக்கழகத்தின் சார்பில் வெற்றி பெற்றுள்ள மு.மணிமாறனுக்கே வாக்களித்திருப்பேன். இதை தேர்தல் நாளன்றே பதிவாக எழுதியிருந்தேன். அதற்குக் காரணம் தி.மு.க.வை ஆதரிப்பவன் என்பதைத் தாண்டி மு.மணிமாறனை ஆதரிக்கக் கூடுதல் காரணம் உண்டு. மு.மணிமாறனின் தந்தை சேடபட்டி முத்தையாவோடு எனக்கு நெருங்கிய பழக்கம் இருந்தது. (அவர் மரணத்தின் போது எழுதிய நினைவுக்குறிப்பு பின்னூட்டத்தில் உள்ளது) அவரோடு விரிவான அரசியல் உரையாடல்கள் செய்துள்ளேன். மாணவப்பருவத்திலிருந்து அரசியல் கற்றுத் திராவிட இயக்கத்தின் அடிப்படையான கொள்கைகளோடு நம்பிக்கை கொண்டிருந்தவர். எனது கிராமம் இருந்த சேடபட்டித் தொகுதியின் நீண்டகால உறுப்பினராக இருந்தவர். எனது வாழ்க்கையில் சில திருப்பங்களை ஏற்படுத்தியவர் அவர். அவருக்காக இரட்டை இலையில் மூன்று தடவை வாக்களித்துள்ளேன்.