சேடபட்டி முத்தையா: ஒரு நினைவு அலை

 

இப்போது சேடபட்டி என்றொரு தொகுதி இல்லை. 2008 இல் உருவாக்கப்பட்ட தொகுதி மறுவரையில் அதன் ஒரு பகுதி திருமங்கலம் தொகுதிக்குள்ளும் இன்னொரு பகுதி உசிலம்பட்டித் தொகுதிக்குள்ளும் கரைந்து போய்விட்டது. என்றாலும் பெரியகுளம் நாடாளுமன்றத் தொகுதிக்குள் தான் இருந்தது. இப்போது அதுவும் தேனி நாடாளு மன்றத் தொகுதியாக மாறி விட்டது. அதன் பிறகும் அந்தப் பெயர் அவரது பெயருக்கு முன்னால் அடைமொழியாகவே இருந்தது. இந்த மாற்றங்களுக்கு முன்பே எனது வாக்குரிமையை அத்தொகுதியிலிருந்து மாற்றிக் கொண்டேன்.
1989 இல் புதுச்சேரிக்குப் போன பின்பு சேடபட்டித் தொகுதிக்கும் பெரியகுளம் நாடாளுமன்றத் தொகுதிக்கும் வாக்களிக்கப் போனதில்லை. இன்று தனது 77 வயதில் இறப்பைச் சந்தித்துள்ள இரா.முத்தையா சேடபட்டித் தொகுதியின் அடையாளமாக இருந்தவர். பெரியகுளம் நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றிபெற்று மத்திய இணையமைச்சராகவும் ஆனவர். இப்போது யோசித்துப் பார்த்தால் அதிகம் தடவை வாக்களித்த தனியொரு அரசியல்வாதி சேடபட்டி முத்தையா என்பது நினைவுக்கு வருகிறது.

1977 சட்டமன்றத்தேர்தலில் அவருக்கு முதல் தடவை வாக்களித்தபோது எனக்கு வயது 18. ஆனால் அப்போது வாக்களிக்கும் வயது 21. என்றாலும் வாக்குச்சீட்டில் ஊரில் அழைக்கும் இன்னொரு பெயரில் வாக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. அந்தப் பெயரிலே வாக்களித்தேன். அதற்குப் பிறகு 1980 இலும் 84 இலும் அவருக்கே வாக்களித்தேன். அப்படி வாக்களித்ததிற்குக் கட்சியைத் தாண்டி ஒரு காரணம் இருந்தது. என்னுடைய அண்ணன் அவரது உதவியாளராக இருந்தார். அதனாலேயே மிகச்சிறிய எண்ணிக்கை கொண்ட -70 வீடுகளே உள்ள எங்கள் கிராமத்திற்கு முத்தையா அடிக்கடி வருவார். அதன் அடிப்படைத் தேவைகளான குடிநீர், மின்சாரம், ஆரம்பப்பள்ளி, கூட்டுறவுப்பால் பண்ணை என ஒவ்வொன்றையும் செய்து கொடுப்பார்.
எனது படிப்பின் திசைவழியிலும் அவருக்கொரு பங்குண்டு. நான் முதுகலை முடித்துவிட்டு எம்பில் படிக்க விண்ணப்பித்தபோது எனக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. பல்கலைக்கழக அளவில் 10 இடங்களுக்குள் இருந்த எனக்கு இடம் மறுக்கப்பட்டதில் அப்போதைய துறைத்தலைவரோடு எனக்கு உண்டான கருத்து வேறுபாடு ஒரு காரணம். எனக்கு மட்டுமல்ல எனது வகுப்பில் இருந்த நண்பர்களுக்கும் அந்தக் கருத்து வேறுபாடு இருந்தது. கருத்து வேறுபாடு மற்றும் அரசியல் சார்பு காரணமாக மாணவர்கள் ஒருவருக்கும் பல்கலைக்கழகத்துறையில் படிப்பைத் தொடரும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. எங்கள் வகுப்பிலிருந்த அனைத்து மாணவிகளுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. மாணவர்களைத் தொலைதூரத்தில் இருந்த கல்லூரி ஒன்றுக்கு அனுப்பிவிடப் பரிந்துரைத்தார் துறைத்தலைவர். நான் அங்கு போகவில்லை. எங்கள் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும் பல்கலைக் கழக ஆட்சிமன்றக் குழு உறுப்பினராகவும் இருந்த இரா.முத்தையா அவர்களிடம் போனேன். எல்லாவற்றையும் சொன்னேன். எனது புகாரைக் கடிதமாக எழுதி வாங்கித் துணைவேந்தரிடம் கொடுத்து நேரடியாக ஆய்வு மாணவராகச் சேர்த்துவிட்டார். அதனால் எனக்கு நேர்மறை அனுபவங்களும் எதிர்மறை விளைவுகளும் ஏற்பட்டன என்பது தனிக்கதை.

******
திரு இரா. முத்தையா என்பது அவர் பெயர். அவரின் தகப்பனார் பெயர் இராமசாமி என்பதால் என்னைப் பெயர் சொல்லி அழைக்கமாட்டார். ‘வாங்க’ என்று மரியாதையோடு அழைப்பார். மதுரைப்பல்கலைக்கழக விருந்தினர் விடுதியில் தங்கியிருக்கும்போது அவரது அறைக்குச் சென்று பலவற்றையும் பேசிக்கொண்டிருப்பேன். எனக்குத் தெரிந்த அரசியலை அறிந்துகொள்வதில் அவருக்கு எப்போதும் ஆர்வமுண்டு. அப்படியான உரையாடல் ஒன்றைப் பல மணி நேரங்கள் நீட்டிக்க வேண்டியதாகிவிட்டது. திருமதி இந்திரா காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் அவரால் எங்கும் போகமுடியவில்லை. காரை எடுத்துக்கொண்டு போக முடியாது என்ற நிலையில் நானும் அவரும் பல்கலைக்கழக வளாகத்தில் பேசியபடியே நடந்துகொண்டிருந்தோம்.

திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்தபோது அவரது மாணவப்பருவ அரசியலைச் சொன்னார். எஸ்.டி.சோமசுந்தரம் அவர்களால் வழிநடத்தப்பட்டதையும் விளக்கினார். நான் எனது கல்லூரி மாணவப் பருவத்தின் தொடக்கத்தில் இந்திராவின் அவசர நிலையை எதிர்த்த பின்னணிகளையெல்லாம் சொல்லிக்கொண்டிருந்தேன். அதற்குப் பிறகு எனக்கும் அவருக்குமான நெருக்கம் கூடியது.
முதுகலை படித்துக்கொண்டிருந்தபோது தமிழ்நாடு அரசின் உயர்நிலைப் பதவிகளுக்கான போட்டித் தேர்வொன்றை -தமிழ்நாடு தேர்வாணையம் / இரண்டாவது நிலை - எழுதி நேர்காணலுக்கு அழைக்கப்பட்டேன். அப்போது அந்தப் பதவியைப் பிடிக்கமுடியாமல் போனது. அவர் சொன்னபடி செய்திருந்தால் அதைப் பிடித்திருக்கலாம். ஆம். பிடித்திருக்கலாம். ஆனால் செய்யும் ஆர்வமும் விருப்பமும் இருக்கவில்லை. அதனால் தொடர்ந்து ஆய்வுப்படிப்பைத் தேர்வுசெய்யும் வாய்ப்பை உருவாக்கித்தந்தார்.
***************
எம் ஜி ஆர் தொடங்கிய அ திமுகவில் அவருக்கு நம்பிக்கையான இளம் தலைவர்களில் ஒருவராக அவர் இருந்தார். அவரது அரசியலில் வழிகாட்டியாக இருந்த எஸ்.டி.சோமசுந்தரத்தோடு சேர்ந்து தனிக்கட்சிக்குப் போகாமல் அ இ அதிமுகவிலேயே தங்கியதே அவர் மீது எம்.ஜி. ஆருக்கு நம்பிக்கை உண்டாகப் பெரும் காரணம். அந்த நம்பிக்கையில் தான் கொள்கைபரப்புச் செயலாளராகச் செல்வி ஜெயலலிதாவை நியமித்த எம் ஜி ஆர், அவரை மக்களுக்கு அறிமுகம் செய்து தலைவராக்கும் பொறுப்பைச் சேடபட்டி முத்தையாவுக்கே வழங்கினார். பிரிக்கப்படாத மதுரை மாவட்டத்தின் செயலாளராக இருந்த முத்தையா தான் செல்வி ஜெயலலிதாவை எல்லா நகரங்களுக்கும் அழைத்துச் சென்று பேச வைத்தார். மதுரையில் நீண்ட செங்கோல் ஒன்றை வழங்கும் ஏற்பாட்டைச் செய்தார். அதே போல் ஜெ அணி, ஜா.அணி எனப் பிரிந்தபோது முதலில் தயங்கினாலும் பின்னர் ஜெயலலிதாவின் தீவிர ஆதரவாளராக இருந்ததால் தான் சட்டப்பேரவையின் தலைவர் ஆக்கப்பட்டார். அந்தப் பிரிவின் போது அவருக்கு நெருக்கமாக இருந்த எனது அண்ணன் ஜானகி அணியில் சேர்ந்ததால் அவரோடு இருந்த உறவு எங்கள் ஊருக்கு இல்லாமல் போய்விட்டது. அப்போது நான் புதுவையில் இருந்ததால் எனக்கும் தொடர்புகள் விட்டுப் போனது.
வாஜ்பாயி தலைமையிலான அரசில் அமைச்சராக இருந்தபோது கட்சித் தலைமையின் ஆணையை ஏற்காமல் வாக்களிப்பில் குளறுபடி செய்துவிட்டார் என்று கூறிக் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். சில காலம் கட்சியிலிருந்து ஒதுங்கிய முத்தையா பின்னர் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார். ஆனால் தீவிர அரசியலில் ஈடுபாடு காட்டாமல் தனது மகனை அதில் இறக்கிவிட்டார்.

நீண்ட இடைவெளிக்குப் பின் - 10 ஆண்டுகளுக்கு முன் ஒருமுறை தொலைபேசியில் அழைத்து அவருக்குத் தெரிந்த ஒருவரின் மகளுக்கு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் ஒரு வாய்ப்புக்காக என்னிடம் கேட்டார். மறுக்காமல் செய்து கொடுத்தேன். திரும்பவும் ஒரு முறை தொலைபேசியில் தான் தொடர்பு கொண்டேன். நான் திருமங்கலத்திற்கு குடிவந்த பின் நேரில் சந்திக்க நினைத்திருந்தேன். ஆனால் அவர் நிலக்கோட்டைக்கருகில் இருந்த விவசாய வீட்டில் இருந்தார். அந்தச் சந்திப்பு நடக்காமலேயே போய்விட்டது. ஏழ்மையான குடும்பப் பின்னணியிலிருந்து இந்திய அரசியலில் ஒன்றிய அமைச்சர், பேரவைத்தலைவர் எனப் பெரிய பதவிகளை எட்டிப்பிடித்த அரசியல்வாதிகளில் அவர் முக்கியமானவர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தமிழில் நடப்பியல் இலக்கியப் போக்குகள்