தணிக்கைத்துறை அரசியல்


இப்படி எழுதுவதால் ஊழலை ஆதரிக்கிறேன் என்று எடுத்துக்கொள்ள வேண்டாம் என்ற முன்குறிப்போடு எழுதுகிறேன்:
அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் ஊழல்கள் குறித்து விரிவான தகவல்கள் வெளிவருகின்றன; விவாதங்கள் நடக்கின்றன; குற்றச்சாட்டுகள் - தண்டனைகள்- விடுவிப்புகள் என நீள்கின்றன. தொடர்ச்சியாக வெளிப்படும் இத்தகவல்களால் இந்தியா ஊழல் மலிந்த நாடு என்ற அடையாளத்தைப் பெற்றுக் கொண்டே இருக்கிறது.
விடுதலைபெற்ற இந்தியாவில் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே தனியார்துறைகளும் ஊக்கப்படுத்தப் பெற்றன என்பது உண்மை. தனியார் துறையில் நடக்கும் பணிவழங்கல்கள், நிதிச்செலவு முறைகள், லாபத்தை பங்கிடும் முறைகள், சமூக நலப் பங்களிப்பிற்குத் தனியார் துறைகள் அளிக்கும் உதவிகள்,அறக்கட்டளைகள் உருவாக்குதல், உறுப்பினர்களாக்குதல், பொதுக்குழு, செயற்குழு, ஆட்சிக்குழு போன்றவற்றில் பொறுப்புகள் உருவாக்கி நியமித்தல் எல்லாம் வெளிப்படையாகவா நடக்கின்றன. அங்கெல்லாம் தவறுகளே நடந்ததில்லையா என்பது கேட்கப்படாத கேள்விகளாக உள்ளன. 

தனியார் துறைகளில் - அறக்கட்டளைகளை ஆரம்பிப்பவர்கள், அனுமதி வாங்கும் முறை, நிதியுதவிபெறும் முறை, நிர்வாகக்குழு உறுப்பினர்கள் தேர்வு போன்ற தகவல்கள் ஏன் வெளிப்படையாக இருப்பதில்லை. அறக்கட்டளைகளைப் பதிவுசெய்பவர்கள் குடும்ப உறுப்பினர்களை நிர்வாகக் குழுவில் இடம்பெறச் செய்வதன்மூலம் எத்தகைய நிர்வாகத்தை விரும்புகிறார்கள்?  இப்போதைய நடைமுறைகளில் பொறுப்பைத் தட்டிக் கழிக்கும் வழியை உருவாக்குகிறார்கள் என்பது ஊடகங்கள் அறியாதனவா? இந்தியாவில் இயங்கும் எல்லாவகை ஊடகங்களும் அப்படியான அறக்கட்டளைகளால் நடத்தப்படும் குழுமங்கள் தானே? அரசுத்துறை முறைகேடுகள் பேசப்படுவதுபோல் அறக்கட்டளை முறைகேடுகளைப் பேசாமல் ஒதுங்குவதன் பின்னணி என்ன? ஏன் அவற்றை விவாதப் பொருள்களாக ஆக்குவதில்லை
தனியார் துறைகளில் அவரவர் சாதிக்குழுக்களுக்கு வாய்ப்பளித்துச் சாதியத்தைக் கட்டிக்காக்கும் அறக்கட்டளைகள் எப்போதும் செல்லப் பிள்ளைகளாக இருக்கின்றன.அவற்றின் நிதிப் பங்கீடுகளைக் கணக்கெழுதித் தணிக்கை செய்யும் தணிக்கையாளர்கள் அவர்களிடமே சம்பளமும் சலுகைகளும் பெற்றுக்கொள்கிறார்கள். அவர்கள் சான்றளித்து அளிக்கும் தணிக்கைச் சான்றிதழ்கள் அப்படியே அரசுத்துறையின் தணிக்கைப் பிரிவுகளால் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. ஆனால் அரசுத்துறை மற்றும் பொதுத்துறைத் தணிக்கைகள் அப்படியே ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை.

இத்துறைகளி்ல் முறைகேடுகள் மட்டுமே நடக்கின்றன எனக்காட்ட விரும்பும் தணிக்கையாளர்களால் ரகசியங்களாகக் கசியவிடப்பட்டுக் குற்றச்சாட்டுகளாக மாறுகின்றன. பொதுத்துறை நிர்வாகக் கட்டமைப்பின் காரணமாகத் தளர்த்தப்படும் விதிகளைக் கண்டுகொள்ளாமல் கறாரான விதிகளை முன்வைத்துக் குற்றச்சாட்டுகளாக வடிவம்பெறும் பலதகவல்கள் குறிப்பாக யாராவது ஒருவரைக் குற்றவலைக்குள் சிக்கவைக்கும் நோக்கத்தோடுதான் பின்னப்படுகின்றன. அப்படியான ரகசியங்கள் - தனியார் துறை குறித்த தகவல்கள் எதுவும் கசிவதில்லை.

எங்கும் ஊழல். எதிலும் ஊழல் என்ற வாசகங்கள் அரசு மற்றும் பொதுத்துறைகளுக்கு மட்டும் பொருந்துவதா? தனியார் துறைக்குப் பொருந்தாதா? என்ற கேள்வியைக் கேட்டு விடைகளைத் தேடுவதற்கு முன்னால் இந்தியத் தணிக்கை மற்றும் கணக்களித்தல் துறைகள் யார் கையில் இருக்கின்றன என்பதைக் கவனிக்கவேண்டும். அவர்களின் வழியாக உருவான அரசியல் இப்போது அதிகாரமையமாகி இருப்பதின் பின்னணி விளைவுகளைப் புரிந்துகொள்ள நாம் முயற்சி செய்யவேண்டும்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தி.சு.நடராசனின் திறனாய்வுப் பார்வைகள் :தமிழ் அழகியல், தமிழகத்தில் வைதீக சமயம்

உடல் மறுப்பு என்னும் பெரும்போக்கு

கற்றல் - கற்பித்தல்: மாணவ ஆசிரிய உறவுகள்