பாஞ்சாலி சபதம் - நாடகப்பனுவலாக்கம்


தமிழின் மறுமலர்ச்சிக் கிளைகள் ஒவ்வொன்றிலும் தனது திறனால் புதுத்துளிர்களை உருவாக்கியவர் கவி பாரதி. கவிதை கட்டுரை, புனைகதை, தன்வரலாறு எனப் பல தளங்களில் அவரது பங்களிப்புகள் பின்வந்தவர்களுக்கு முன்னோடியாக இருக்கின்றன. பழைய இலக்கியப்பனுவல்களின் வாசிப்பையும் ஆக்கத்தையும்கூட, தான் வாழுங்காலத்தைப் பதிவு செய்தல் என்பதற்கு எடுத்துக்காட்டாக மாற்றிப்புதுமை செய்தவர் அவர். இந்தப் போக்கிற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்வது பாஞ்சாலி சபதம் என்னும் குறுங்காப்பியம். மகாபாரதமென்னும் இதிகாசத்திலிருந்து ஒரு பகுதியைத் தன் காலத்திற்கேற்ற விவாதப்பொருளாக்கிய பாரதியின் பாஞ்சாலி சபதம், அவருக்குப் பின் பல்வேறு பதிப்புகளையும் பனுவலாக்கங்களைக் கண்டு வருகிறது. அப்பனுவலாக்கங்களின் வழித் தமிழர்களின் கலை வெளிப்பாட்டுப் பார்வையில் பாஞ்சாலி சபதத்திற்கு ஓர் உயர்வான இடம் இருப்பதை உறுதி செய்கின்றனர். இக்கட்டுரை குறுங்காப்பியமென்னும் இலக்கிய வகைப்பாட்டிற்குள் வைத்துப் பாரதி எழுதிய பாஞ்சாலி சபதத்தை நாடகப்பனுவலாக்கம் செய்யும் விதத்தை விவரிக்கிறது.


குறுங்காப்பியங்களும் நாடகமும்

இந்தியச் செவ்வியல் மொழிகளான சம்ஸ்கிருதமும் தமிழும் பன்னெடுங் காலமாகவே கொண்டும் கொடுத்தும் வளர்ந்த மொழிகள் என்பதற்கு ஆதாரமாக இருப்பவை ராமாயணமும் மகாபாரதமும். அதே போல் இலக்கிய வடிவங்கள் பலவும் இருமொழிகளுக்கும் இடம் பெயர்ந்துள்ளன. கதாமாந்தரின் முழுவாழ்க்கையைச் சொல்லும் தொடர்நிலைச் செய்யுள் வடிவத்தைத் தடுத்து நிறுத்திக் காப்பிய வடிவத்தைத் தமிழுக்கு அறிமுகம் செய்த இலக்கியவியல் பனுவல் காவ்யதர்சம். தண்டி என்பவரால் தழுவி எழுதப்பெற்றுத் தண்டியலங்காரம் என அழைக்கப்பட்ட காவ்யதர்சமே தமிழில் எழுதப்பெற்ற பெருங்காப்பியங்களுக்கும் சிறுகாப்பியங்களுக்கும் அடிப்படைகளை உருவாக்கித் தந்ததாக இலக்கியவரலாற்றாசிரியர்கள். காப்பிய இலக்கியங்கள் குறித்துக் குறிப்பான ஆய்வுகளைத் தந்துள்ள எஸ்.வையாபுரிப்பிள்ளை, இரா.காசிராஜன், து.சீனிச்சாமி போன்றவர்களின் நூல்கள் இதனை விரிவாகப் பேசியுள்ளன. ஐம்பெருங்காப்பியங்களாகக் குறிப்பிடப்படும் சிலப்பதிகாரமும் மணிமேகலையும் தண்டியின் பெருங்காப்பியநிலையைப் பின்பற்றியன அல்ல; அவை தொடர்நிலைச்செய்யுள்கள்.

அறம், பொருள், இன்பம், வீடென்னும் நாற்பொருளைச் சொல்லாமல் விலக்கும் தன்மை கொண்டனவற்றைச் சிறுகாப்பியங்களாக வகைப்படுத்திய மரபுக்கும் மாறானது குறுங்காப்பியங்கள். குறிப்பாக மறுமலர்ச்சி இலக்கிய காலத்தில் பெருங்காப்பிய, சிறுகாப்பிய மரபுகள் பின்னுக்குத் தள்ளப்பட்டுக் குறுங்காப்பிய வடிவங்கள் மேலெழுந்தன. ஓரளவு சமகால நோக்கும் விவாதங்களும் என்பதை முன்னெடுத்த குறுங்காப்பிய வடிவங்கள் 19 ஆம் நூற்றாண்டுக்குப் பின்னரே அதிகம் தோன்றின.குறுங்காப்பியங்களை எழுதியவர்களில் குறிப்பிடத்தக்கவர்களாக பாரதிதாசன், கவிமணி தேசிகவிநாயகம்பிள்ளை, சுத்தானந்த பாரதி, சுரதா, நாமக்கல் ராமலிங்கம்பிள்ளை, பேரா.பெ.சுந்தரம்பிள்ளை போன்றவர்களைப் பட்டியலிடலாம். இவர்களில் பலரும் செய்யுளை வெளிப்பாட்டு முறையாகக் கொண்டு நாடகங்களையும் எழுதியவர்கள் என்பது கவனிக்க வேண்டிய ஒன்று. மரபுக் கவிதை வடிவங்களில் குறுங்காப்பியங்கள் எழுதியவர்களுக்குப் பின்னால் புதுக்கவிதை வடிவத்தில் இயங்கியவர்களும் குறுங்காப்பிய முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்கள். ஞானி, சி.சு.செல்லப்பா, சிற்பி, கலாப்பிரியா, நு.மேத்தா, வைரமுத்து முதலானவர்களின் குறுங்காப்பியங்கள் வாசிக்கக் கிடைக்கின்றன. சமகாலத்தமிழ் இலக்கியக்கல்வியில் இவற்றையெல்லாம் அறிமுகம் செய்யும் பாடத்திட்டங்கள் இல்லை. அந்த நோக்கில் இலக்கியவரலாறும் திறனாய்வும் செயல்படவில்லை என்பதும் வருத்தப்பட வேண்டிய செய்திகளே. கவிதை, நெடுங்கவிதை, குறுங்காப்பியம், சிறுகதைகளையொத்த உருவகக்கதைகள், சந்திரிகையின் கதையென்னும் நெடுங்கதை என நகர்ந்த பாரதி நாடகம் எதனையும் எழுதவில்லை. ஆனால் அவரது பாரதியின் பாஞ்சாலியின் சபதம் ஒரு நிகழ்த்துப் பனுவலின் கூறுகளோடு உள்ளது என்பதை மறுக்கமுடியாது.

அரச குடும்பங்களுக்குள் நடக்கும் பங்காளிப் பகைப்புலம் என்ற உரிப்பொருளை வளர்த்தெடுத்துள்ள மகாபாரதம் ஒற்றைக் கதையாக இல்லாமல், கிளைக்கதைகளும் தொடர்புக் கதைகளும் பிணைக்கப்பட்ட தொகுதிப் பனுவல். அதேவேளை பாத்திரமாக்கல், பாத்திரங்களின் எதிர்வு நிலை,வளர்ச்சி, திருப்பங்கள் முடிவை நோக்கிய நகர்வு போன்றன அதனைக் காப்பியப்பனுவலாகவும் வாசிக்கத் தூண்டக்கூடியன. அதில் சூதாட்ட நிகழ்வு முதன்மையான திருப்பத்தை உருவாக்கும் நிகழ்வு. அதனை மட்டும் தனது குறுங்காப்பியத்திற்கான நிகழ்வாக எடுத்துக்கொண்டு தனது காலத்திற்கேற்ற விவாதங்களை முன்வைக்கும் நவீனத்துவப் பனுவலாகப் பாஞ்சாலி சபதத்தை எழுதினார் பாரதியார். சூழ்ச்சிச்சருக்கம், சூதாட்டச் சருக்கம், அடிமைச்சருக்கம், துகிலுரிதல் சருக்கம், சபதச் சருக்கம் என ஐந்து சருக்கங்களை இரண்டு பாகங்களாக்கி எழுதப்பெற்றுள்ள பாஞ்சாலி சபதத்தில் குறுங்காப்பியத்தன்மை புறக்கட்டமைப்பாக இருந்தபோதிலும் தொடக்கம், முரண் வெளிப்பாடு, உச்சநிலை, முடிவு என்ற நல்திறக் கட்டமைப்பை உள்கட்டமைப்பாக்கியுள்ளார் என்பதை முதலில் விளங்கிக் கொள்ளலாம்.

நாடகமுத்திறம்

நாடகப்பனுவலின் கட்டமைப்புகளைப் பற்றி விவாதிக்கும் நாடகவியல் நூல்கள் புறக்கட்டமைப்புகள் மாறாதவை எனவும், உள்கட்டமைப்புகளே மாற்றம் கொண்டனவாகவும் ஒவ்வொரு நாடகப்பனுவலையும் இன்னொன்றிலிருந்து வேறுபட்டனவாகவும் ஆக்குக்கின்றன என்பர். புறக்கட்டமைப்புக்கூறுகள் மூன்று. 1.உரையாடல் 2.காட்சி, 3.அங்கம். புறக்கட்டமைப்புக் கூறுகளுள் உரையாடலே மிகச்சிறிய வடிவம். ஒன்றுக்கு மேற்பட்ட மாந்தர்களின் சந்திப்பையும் விவாத த்தையும் நாடக உரையாடல் என வரையறை செய்கிறார்கள். இந்நாடக உரையாடல் ஒரே இடத்தில் , மாந்தர்களின் நுழைவோ, வெளியேற்றமோ இல்லாத நிலை தொடரும் வரை நடக்கும் நிகழ்வு என வரையறுக்கப்படுகிறது. நடக்கும் வெளியில் அதிக மாற்றமில்லாமல் இக்காட்சிகள் இணைக்கப்படும் நிலையில் அங்கம் உருவாகிறது. அங்கங்கள் இணைந்து நாடகம் உருவாகின்றது. ஓரங்கத்திற்குள்ளேயே தொடக்கம், உச்சம், முடிவு என்ற நிலைகொண்ட அமைப்பு ஓரங்க நாடகமாக அமையும். இதுவரை எழுதப்பெற்ற நாடகப்பனுவல்களில் அதிக அளவாக ஐந்தங்கங்கள் வரை அமைந்துள்ளன. ஒரு நாடகத்திலிருந்து மற்றொரு நாடகத்தை வேறுபடுத்திக் காட்டும் உள்கட்டமைப்புக்கூறுகளாக இருப்பவை நாடகத்தொடக்கம், மோதல் வளர்ச்சி , உச்சநிலை, வீழ்ச்சி, முடிவு என்பன நல்திறக்கட்டமைப்பு வடிவமாகச் சொல்லப்படுகிறது.

பாஞ்சாலி சபதத்தில் நாடகக்கூறுகள்

நாடகத்தில் உரையாடல் உருவாக்கத்திற்கு அதனுள் இடம் பெறும் பாத்திரங்களுக்கிடையேயான முரண்பாடுகள் முக்கியமானவை. எதிரெதிர் நோக்கங்கள், குணங்கள், கருத்தியல்கள், வெளிப்பாட்டுமுறைகள் போன்றன முரண்பாடுகளைத் தோற்றுவிக்கக் கூடியன. இக்கூறுகள் பலவற்றைக் கொண்ட பாத்திர முரண்களைப் பாஞ்சாலி சபதம் கொண்டுள்ளது. பாஞ்சாலி சபதத்தின் கதாமாந்தர்களை அவர்களின் அணிச்சேர்க்கை கொண்டு பின்வரும் நிலையில் வைக்கலாம். பனுவலின் பெயரில் இருக்கும் பாஞ்சாலியின் அணியினராகப் பாண்டவர்கள் ஐவரையும் சொல்லலாம். அவர்களில் பாஞ்சாலியே முதன்மைப் பாத்திரம். அவளது உணர்வோடு நெருங்கிய நிலையை வெளிப்படுத்தும் மாந்தர்களாக வீமன், அர்ஜுன், தர்மன், நகுலன், சகாதேவன் என்ற வரிசையில் சொல்லலாம்.

எதிரெதிர் அணியில் முதன்மையானவர்- தலைமை தாங்குபவர் துரியோதன். அவரது அணியில் சகுனி,துச்சாதனன், கர்ணன் ஆகிய நால்வரும் முதன்மையான துணைக்கதாமாந்தர்கள். துரியோதனோடு பிறந்த போதும் அவனது செயல்பாடுகளுக்கு எதிர்நிலையெடுத்துப் பேசும் சகோதரனாக விகர்ணன் இருக்கிறான். அதேபோல் துரியனுக்கு ஆலோசனை சொல்லும் இட த்தில் வீஷ்டுமரும் துரோணாச்சாரியாரும் உள்ளனர். துரியோதனனின் சூதாட்ட முன்னெடுப்பைத் தடுக்க முடியாமலும் ஏற்கமுடியாமலும் இருப்பவர்களாகவே அவனது பெற்றோர்களான திருதராஷ்டிரனும் அவரது மனைவியும் இருக்கிறார்கள். இப்பாத்திர முரண்கள் அதனையொரு நாடகப்பனுவலாக ஆக்கும் பணியை எழுதாக்கும் கூறுகள்.

பாஞ்சாலி சபத்தில் இடம்பெற்றுள்ள வெளிகளை – இடங்களைக் கொண்டு மூன்று அங்க நாடகப்பனுவலாக ஆக்கமுடியும். முதல் அங்க நிகழ்வுகள் துரியோதனின் அஸ்தினாபுர அரங்கில் தொடங்கி, விதுரனின் தூது நிகழ்வோடு முடியும் தொடர்ச்சி கொண்டவை. அவ்வங்கத்தின் காட்சி வரிசைகள் வருமாறு:

=====================================


அங்கம் 1 களம் -அஸ்தினாபுரம்.


1.1துரியோதனின் சபைக்கூட்டம் - மனநிலை

1.2.துரியோதனன் - சகுனி ஆலோசனை

1.3.சகுனியின் ஆலோசனை

1.4. திரிதராட்டினன் அறிவுரை

1.5 .விதுரன் தூது.

1.6.பாண்டவர் பயணம்- மாலை வருணனை

முதல் அங்கத்தில் மொத்தம் ஆறு காட்சிகள் இடம் பெற்றுள்ளன.




அங்கம் II

இடம் - துரியோதனன் சபை

இவ்வங்கம் தொடர்ச்சியான ஓரங்க நிகழ்வாக அமைந்துள்ளது சூதுக்கழைத்தல்- தருமன் மறுத்தல்- சகுனியின் ஏச்சு- தருமன் பதில்- சகுனி வல்லுக்கு அழைத்தல்- தருமன் இணங்குதல்-சூதாடல்

அங்கம் III

நிகழிடம் = அரசவை

3.1அரசவை விவாதம்

விதுரன் - துரியோதனன் விவாதம்

சூது மீண்டும் தொடங்குதல்- சகுனி தூண்டல்-

சகாதேவன், நகுலன், பார்த்தன், வீமன் என ஒவ்வொருவராக ஈடாக வைத்திழத்தல்.

3.2சகுனி மீண்டும் தூண்டுதல்

திரௌபதி இழப்பு- கௌரவர் மகிழ்ச்சி- துரியோதனன் மகிழ்ச்சி

திரௌபதியை மன்றத்துக்கு அழைத்துவர ஏற்பாடு

3.3. விதுரனின் அறிவுரை- திரௌபதி பாகனிடம் வாதம்

துரியோதனின் ஆணைக்கேற்ப பாகன் சென்று அழைத்தல் - துரியோதனன் , துச்சாசனை அனுப்பித்தல்

3.4 . துச்சாசனின் உற்சாகம் - திரௌபதியை அணுகு அழைத்தல்- அவளது வாதம்

சபைக்கு அழைத்து வரல்- சபையில் நீதி கேட்டு அழுதல்

வீட்டுமன் கூற்று -திரௌபதி கூற்று-அர்ஜுனன் கூற்று

3.5 விகர்ணன் சொன்னது-கர்ணன் பதில்

3.6 திரௌபதி கண்ணனிடம் வேண்டுதல்

3.7 சபதங்கள் - வீமன் சபதம் - அர்ஜுனன் சபதம் - பஞ்சாலி சபதம்.


இந்தக் கட்டமைப்பில் பாரதியாரின் பாடல் வரிகளோடு தெருக்கூத்துக் கலையில் செயல்படும் தன்னுணர்வோடு நடிகர்கள் பயன்படுத்தும் உரையாடல்களைக் கொண்டு உருவாக்கும் நாடகப்பனுவல் நமது காலத்தின் நிகழ்த்துப் பனுவலாக அமையும்.

-------------------------------------------------------- -----------------------------------------------








பின்னிணைப்பு

பாரதியின் பாஞ்சாலி சபதம் இக்கட்டமைப்பில் உருவாக்கும்போது பாரதியின் பின் வரும் பாடல் பகுதிகளே ஆட்டப்பனுவலாக அமையப்போதுமானவை:

கால அளவு: 3 நாட்கள் மட்டுமே


அங்கம் 1 களம் -அஸ்தினாபுரம்.

1.1துரியோதனின் சபைக்கூட்டம் - மனநிலை

பாண்டவர் முடியுயர்த் தே- இந்தப் பார்மிசை யுலவிடு நாள்வரை, நான்

ஆண்டதொர் அரசா மோ? - எனது ஆண்மையும் புகழுமோர் பொருளாமோ?

1.2.துரியோதனன் - சகுனி ஆலோசனை

மாமனே ! அவன் நம்மில் உயர்ந்த வகை சொல்வாய்!

சந்திரன் குலத்தே பிறந்தோர்தந் தலைவன் யான் - என்று

சகமெலாஞ் சொல்லு வார்த்தைமெய் யோவெறுஞ் சாலமோ?

தரணி மன்னருள் முற்பட வைத்திடல் சாலுமோ?

1.3.சகுனியின் ஆலோசனை

வெஞ்சமர் செய்திடு வோமெனில் - அதில் வெற்றியும் தோல்வியும் யார்கண்டார்- அந்தப்

பஞ்சவர் வீரம் பெரிதுகாண் - ஒரு பார்த்தன்கை வில்லுக் கெதிருண்டோ?- உன்றன்

நெஞ்சத்திற் சூதை யிகழ்ச்சியாக் கொள்ள நீதமில்லை முன்னைப் பார்த்திவர்- தொகை

கொஞ்ச மிலைப் பெருஞ் சூதினால் வெற்றி கொண்டு பகையை அழித்துளோர்.

1.4. திரிதராட்டினன் அறிவுரை

சோதர்தம்முட் பகையுண்டோ? ஒரு சுற்றத்திலே பெருஞ் செற்றமோ?- நம்மில்

ஆதரங்கொண்டவ ரல்லரோ? முன்னர் ஆயிரஞ் சூழ்ச்சி இவன் செய்தும்

சீதரன் தண்ணருளாலுமோர் - பெருஞ் சீலத்தினாலும் புயவலி- கொண்டும்

யாதொரு தீங்கும் இலாமலே- பிழைத் தெண்ணருங் கீர்த்தி பெற்றாரன்றோ?

துரியோதனன் சினம்- திரிதராட்டிரன் பதில்- துரியனின் மறுமொழி -திரிதராட்டிரன் சம்மதம்.

களம் ; பொற்சபை நிர்மானம்

1.5 .விதுரன் தூது.

போச்சுது போச்சுது பாரதநாடு! போச்சுது நல்லறம்! போச்சுது வேதம்

ஆச்சரியங் கொடுங்கோலங்கள் காண்போம்; ஐய இதனைத் தடுத்தல் அரிதோ?

என்று விதுரன் பெருந்துயர் கொண்ட ஏங்கிப் பலசொல் இயம்பிய பின்னர்

‘சென்று வருகுதி தம்பி’ இனிமேல் சிந்தனை ஏதும் இதிற் செயமாட்டேன்.

1.6 . தருமனின் அரண்மனை- விதுரன் தூது.

‘வந்து விருந்து களித்திட நும்மை வாழ்த்தி அழைத்தனன் என்னரு மக்காள்!

சந்து கண்டே அச்சகுனி சொற்கேட்டுத் தன்மை இழந்த சுயோதனன் மூடன்

விந்தை பொருந்திய மண்டபத் தும்மை வெய்யபுன் சூது களித்திடச் செய்யும்

மந்திரமொன்றும் மனத்திடைக் கொண்டான்; வன்மிதுவும் நமக்கறிவித்தேன்.’

தருமன் பதில்

மருமங்கள் எவைசெயினும் - மதி மருண்டவர் விருந்தறஞ் சிதைத்திடினும்

கருமமொன்றேஉளதாம் - நங்கள் கடன் ; நெறிப்படி புரிந்திடுவோம்.

தந்தையும் வரப்பணித் தான்; -சிறு தந்தையும் தூதுவந்ததை உரைத்தான்;

சிந்தை யொன்றினி இல்லை; -எது சேரினும் நலமெனத்தெளிந்து விட்டேன்;



வீமனின் வீரப்பேச்சு- தருமனின் முடிவு- நால்வரின் சம்மதம் -

பாண்டவர் பயணம்- மாலை வருணனை




அங்கம் II

களம் - துரியோதனன் சபை


வீட்டுமன் தானிருந்தான்; - அற விதுரனும், பார்ப்பனக் குரவர்களும்,

நாட்டுமந்திரிமாரும் - பிற நாட்டினர் பலபல மன்னர்களும்.

கேட்டினுக் கிரையாவான் - மதி கெடுந்துரியோதனன் கிளையினரும்

மாட்டுறு நண்பர்களும் - அந்த வான்பெருஞ் சபையிடை வணங்கி நின்றார்

சூதுக்கழைத்தல்- தருமன் மறுத்தல்- சகுனியின் ஏச்சு- தருமன் பதில்- சகுனி¢ வல்லுக்கு அழைத்தல்-

தருமன் இணங்குதல்

சூதாடல்

மாயச்சூதினுக்கே - ஐயன், மனமிணங்கி விட்டான்;

தாயமுருட்டலானார்; - அங்கே சகுனி ஆர்ப்பரித்தான்!

நேயமுற்ற விதுரன் -போலே, நெறியுளோர்களெல்லாம்

வாயை மூடிவிட்டார்; -தங்கள், மதிமயங்கி விட்டார்.

மாடிழந்து விட்டான் -தருமன், மந்தை மந்தையாக;

ஆடிழந்து விட்டான் - தருமன் ஆளிழந்து விட்டான்;

பீடிழந்த சகுனி - அங்கு பின்னுஞ் சொல்லுகின்றான்

‘நாடிழக்க வில்லை; -தருமா! நாட்டை வைத்தி’ டென்றான்.

ஐயகோஇதை யாதெனச் சொல்லுவோம்? அரசானவர் செய்குவதொன்றோ?

மெய்யதாகவோர் மண்டலத்தாட்சி வென்று சூதினிலாளுங் கருத்தோ?

வையமிஃது பொறுத்திடுமோ, மேல் வான் பொறுத்திடுமோ, பழி மக்காள்

துய்யசீர்த்தி மதிகுலமோ நாம்? தூவென்றௌ¢ளி விதுரனும் சொல்¢லுவான்.

அங்கம் III பராசக்தி வணக்கம்- சரஸ்வதி வணக்கம்




3.1அரசவை விவாதம்

விதுரன் - துரியோதனன் விவாதம்


சூது மீண்டும் தொடங்குதல்- சகுனி தூண்டல்-

சகாதேவன், நகுலன், பார்த்தன், வீமன் என ஒவ்வொருவராக ஈடாக வைத்திழத்தல்.

3.2. சகுனி மீண்டும் தூண்டுதல்

‘ இன்னும் பணயம் வைத்தாடுவோம்; - வெற்றி இன்னும் இவர்பெற லாகுங்காண்

பொன்னுங் குடிகளுந் தேசமும்- பெற்றுப் பொற்பொடு போதற் கிடமுண்டாம்?- ஒளி

மின்னும் அமுதமும் போன்றவள்- இவர் மேவிடுதேவியை வைத்திட்டால்,- (அவள்)

துன்னும் அதிட்ட முடையவள்- இவர் தோற்றதனைத்தையும் மீட்டலாம்.

திரௌபதி இழப்பு- கௌரவர் மகிழ்ச்சி- துரியோதனன் மகிழ்ச்சி

ஆசை தணித்தாயடா !- உயிர் மாமனே! ஆவியைக் காத்தா யடா

பூசை புரிவோமடா! - உயிர் மாமனே! பொங்கலுனக்கிடுவோமடா

நாச மடைந்ததடா!- நெடுநாட் பகை நாமினி வாழ்ந்தோ மடா!

பேசவுந் தோன்று தில்லை; - உயிர் மாமனே- பேரின்பங் கூட்டி விட்டாய்.

திரௌபதியை மன்றத்துக்கு அழைத்துவர ஏற்பாடு


3.3. விதுரனின் அறிவுரை- திரௌபதி பாகனிடம் வாதம்

நல்லது நீசென்று நடந்தது கேட்டுவா வல்ல சகுனிக்கு மாண்பிழந்த நாயகர்தாம்

என்னை முன்னே கூறி இழந்தாரா? தம்மையே முன்னமிழந்து முடித்தென்னைத் தோற்றாரா?

சென்று சபையில் இச்செய்தி தெரிந்துவா..

வேண்டிய கேள்விகள் கேட்கலாம்;- சொல்ல வேண்டிய வார்த்தைகள் சொல்லலாம்- மன்னர்

நீண்ட பெருஞ்சபை தன்னிலே- அவள் நேரிடவே வந்தபின்பு தான், - சிறு

கூண்டிற் பறவையு மல்லளே!- ஐவர் கூட்டு மனைவிக்கு நாணமோ!- சின

முண்டு கடுஞ்செயல் செய்யுமுன் ; அந்த மொய்குழலாளை இங்கிட்டு வா

மன்னன் அழைத்தனன் என்று நீ- சொல்ல மாறியவளொன்று சொல்வதோ?- உன்னைச்

சின்னமுறச் செய்குவேனடா!- கணஞ் சென்றவளைக் கொணர்வாய்’ என்றான்.

துரியோதனின் ஆணைக்கேற்ப பாகன் சென்று அழைத்தல் - துரியோதனன் , துச்சாசனை அனுப்பித்தல்



3.4துச்சாசனின் உற்சாகம் - திரௌபதியை அணுகு அழைத்தல்- அவளது வாதம்

சபைக்கு அழைத்து வரல்- சபையில் நீதி கேட்டு அழுதல்

வீட்டுமன் கூற்று

சூதாடி நின்னை யுதிட்டிரனே தோற்றுவிட்டான்

வாதாடி நீயவன்றன் செய்கை மறுக்கின்றாய்

சூதிலே வல்லான் சகுனி தொழில்வலியால்

மாதரசே, நின்னுடைய மன்னவனை வீழ்த்திவிட்டான்.

திரௌபதி கூற்று

‘‘ தக்கது நீர் செய்தீர்; தருமத்துக்கு கிச்செய்கை ஒக்கும் ’’ என்று, கூறி உகந்தனராம் சாத்திரிமார்

பேயரசு செய்தால் பிணந்தின்னும் சாத்திரங்கள்!மாயமுணராத மன்னவனைச் சூதாட

வற்புறுத்திக் கேட்டதுதான் வஞ்சனையோ ? நேர்மையோ?

ஆடை குலைவுற்று நிற்கிறாள்;- அவள் ஆவென்றழுது துடிக்கிறாள்- வெறும்

மாடு நிகர்த்த துச்சாசனன் - அவள் மைக்குழல் பற்றி இழுக்கிறான் - இந்தப்

பீடையை நோக்கினன் வீமனும் - கரை மீறி எழுந்தது வெஞ்சினம் - துயர்

கூடித் தருமனை நோக்கியே - அவன் கூறிய வார்த்தைகள் கேட்டீரோ

வீமன் கூற்று

சூதர் மனைகளிலே - அண்ணே ! தொண்டு மகளிருண்டு

சூதிற் பணயமென்றே - அங்கோர் தொண்டச்சி போவதில்லை

‘ஏது கருதி வைத்தாய்?-அண்ணே யாரைப் பணயம் வைத்தாய்?

மாதர் குலவிளக்கை-அன்பே வாய்ந்த வடிவழகை

பூமி யரச ரெல்லாம் - கண்டே போற்ற விளங்குகின்றாள்.

சாமி , புகழினுக்கே -வெம்போர்ச் சண்டனப் பாஞ்சாலன்

அவன் சுடர் மகளை -அண்ணே! ஆடியிழந்து விட்டாய்

தவறு செய்துவிட்டாய் - அண்ணே! தருமங் கொன்று விட்டாய்

சோரத்திற் கொண்டதில்லை; - அண்ணே! சூதிற் படைத்ததில்லை

வீரத்தினாற் படைத்தோம் - வெம்போர் வெற்றியினாற் படைத்தோம்;

சக்கரவர்த்தி யென்றே - மேலாந் தன்மை படைத்திருந்தோம்;

பொக்கென ஒர்கணத்தே - எல்லாம் போகத் தொலைத்து விட்டாய்



அர்ஜுனன் கூற்று

‘’தருமத்தின் வாழ்வுதன்னைச் சூது கவ்வும்; - தருமம் மறுபடி வெல்லும்’’ எனுமியற்கை

மருமத்தை நம்மாலே உலகங் கற்கும் வழிதேடி விதி இந்தச் செய்கை செய்தான்

கருமத்தை மேன்மேலும் காண்போம் இன்று கட்டுண்டோம், பொறுத்திருப்போம்; காலம் மாறும்

தருமத்தை அப்போது வெல்லக் காண்போம், தனு உண்டு காண்டீவம் அதன்பேர் என்றான்.

3.5 விகர்ணன் சொன்னது

எந்தையர் தம் மனைவியரை விற்பதுண்டோ? இதுகாறும் அரசியரைச் சூதிர் தோற்ற

விந்தையைநீர் கேட்டதுண்டோ விலைமா தர்க்கு விதித்ததையே பிற்கால நீதிக்காரர்

சொந்தமெனச் சாத்திரத்தில் புகுத்தி விட்டார்! சொல்லளவே தானாலும் வழக்கந் தன்னில்

இந்தவிதஞ் செய்வதில்லை; சூதர் வீட்டில் ஏவற்பெண் பணயமில்லை என்றுங் கேட்டோம்

தன்னையிவன் இழந்தடிமை யான பின்னர்த் தாரமெது? வீடேது? தாதனான

பின்னையுமோர் உடைமை உண்டோ‘ என்று நம்மைப் பெண்ணரசு கேட்கின்றார் பெண்மை வாயால்

மன்னர்களே! களிப்பதுதான் சூதென்றாலும் மனுநீதி துறந்திங்கே வலிய பாவந்

தன்னைஇரு விழிபார்க்க வாய் பே சீரோ? தாத்தனே, நீதி இது தகுமோ? என்றான்

கர்ணன் பதில்

‘தகுமடா, சிறியாய், நின்சொல், தாரணிவேந்தர் யாரும்

புகுவது நன்றன் றெண்ணி வாய்புதைத் திருந்தார், நீதான்

மிகுமுறை சொல்லி விட்டாய் விரகிலாய் புலனுமில்லாய்

பெண்ணிவள் தூண்ட லெண்ணிப் பசுமையால் பிதற்றுகின்றாய்

எண்ணிலா துரைக்க லுற்றாய்; இவளைநம் நாம் வென்றதாலே

நண்ணிடும் பாவமென்றாய் நாணிலாய் பொறையு மில்லாய்!



3.6.திரௌபதி கண்ணனிடம் வேண்டுதல்

துச்சாதனன் எழுந்தே- அன்னை துகிலினை மன்றிடை யுரிதலுற்றான்

அச்சோ, தேவர்களே! - என்று அலறிஅவ் விதுரனுந் தரைசாய்ந் தான்

பிச்சோ றியவனைப் போல் - அந்தப் பேயனுந் துகிலினை உரிகையிலே

உட்சோதியிற் கலந்தாள்; - அன்னை உலகத்தை மறந்தாள், ஒருமையுற்றாள்

‘ஹரி,ஹரி, ஹரிஎன்றாள்- கண்ணா! அபய மபயமுனக் கபயமென்றாள்

‘வையகம் காத்திடுவாய் !-கண்ணா! மணிவண்ணா, என்றன் மனச் சுடரே!

ஐய நின் பதமலரே -சரண், ஹரி, ஹரி, ஹரி, ஹரி, ஹரி,ஹரி!’ - என்றாள்.

பொய்யர்தம் துயரினைப் போல், - நல்ல புண்ணிய வாணர்தம் புகழினைப் போல்

தையலர் கருணையைப் போல் - கடல் சலசலத் தெறிந்திடும் அலைகளைப் போல்

பெண்ணொளி வாழ்த்திடுவார் - அந்தப் பெருமக்கள் செல்வத்திற் பெருகுதல் போல்

கண்ணபிரான ருளால், -தம்பி கழற்றிடக் கழற்றிடத் துணிபுதிதாய்

வண்ணப் பொற் சேலைகளாம் - அவை வளர்ந்தன வளர்ந்தன வளர்ந்தனவே

எண்ணத் திலடங்காவே; - அவை எத்தனை எத்தனை நிறத்தனவோ!

பொன்னிழை பட்டிழையும் - பல புதுப் புதுப்புதுப் புதுமைகளாய்

சென்னியிற் கைகுவித்தாள்- அவள் செவ்விய மேனியைச் சார்ந்துநின்றே

முன்னிய ஹரிநாமம் -தன்னில் மூளுக நற் பயனுல கறிந்திடவே

துன்னிய துகிற் கூட்டம் -கண்டு தொழும்பத் துச்சாதனன் வீழ்ந்துவிட்டான்.



3.7. சபதங்கள்

வீமன் சபதம்

வீமனெழுந்துரை செய்வான்; -இங்கு விண்ணவராணை பராசக்தியாணை

தாமரைப் பூவினில் வந்தான் - மறை சாற்றிய தேவன் திருக்கழலாணை;

மாமகளைக் கொண்ட தேவன் - எங்கள் மரபுக்குத் தேவன் கண்ணன் பதத்தாணை

காமனைக் கண்ணழலாளே - சுட்டுக் காலனை வென்றவன் பொன்னடிமீதில்

ஆணையிட் டிஃதுரை செய்வேன்; -இந்த ஆண்மையிலாத் துரி யோதனன் றன்னை

பேணும் பெருங்கன லொத்தாள் - எங்கள் பெண்டு திரௌபதியைத் தொடைமீதில்

நாணின்றி ‘வந்திரு’ என்றான் -இந்த நாய்மகனாந்துரி யோதனன் றன்னை

மாணற்ற மன்னர்கண் முன்னே - என்றன் வன்மையினால் யுத்த ரங்கத்தின் கண்ணே

தொடையைப் பிளந்துயர் மாய்ப்பேன்; -தம்பி சூரத் துச்சாதனன் தன்னையுமாங்கே

கடைபட்ட தோள்களைப் பிய்ப்பேன்; -அங்கு கள்ளென ஊறு மிரத்தங் குடிப்பேன்,

நடைபெறுங் காண்பிருலகீர்! - இது நான்சொல்லும் வார்த்தைஎன் றெண்ணிடல்வேண்டா?

தடையற்ற தெய்வத்தின் வார்த்தை -இது சாதனை செய்க பராசக்தி! என்றான்.



அர்ஜுனன் சபதம்

பார்த்த னெழுந்துரை செய்வான்; - ‘இந்தப் பாதகக் கர்ணனைப் போரில் மடிப்பேன்.

தீர்த்தன் பெரும்புகழ் விஷ்ணு - எங்கள் சீரிய நண்பன் கண்ணன் கழலாணை?

கார்த்தடங் கண்ணி எந்தேவி - அவள் கண்ணிலுங் காண்டிப வில்லினும் ஆணை;

போர்த்தொழில் விந்தைகள் காண்பாய், -ஹே! பூதலமே! அந்தப் போதினில்’ என்றான்.

பாஞ்சாலி சபதம்.

தேவி திரௌபதி சொல்வாள்; - ஓம் தேவி பராசக்தி ஆணையுரைத்தேன்;

பாவி துச்சாதனன் செந்நீர்,- அந்தப் பாழ்த்துரியோதனன் ஆக்கை ரத்தம்

மேவி இரண்டுங் கலந்து- குழல் மீதினிற் பூசி நறுநெய் குளித்தே

சீவிக் குழல்முடிப் பேன்யான் - இதுசெய்யுமுன்னே முடியேனென் றுரைத்தாள்

============================================================

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்