உங்கள நீங்க எப்படி பாக்க விரும்புறீங்க... ஓராள் நாடகத்தின் சாத்தியங்கள்



நமது நிகழ்காலம் கண்காணிப்பின் காலம். குறிப்பாக முதலாளியின் அதன் அடுத்த கட்டப் பாய்ச்சலாகப் பன்னாட்டு வணிக வலைப்பின்னலுக்குள் நகர்ந்தபோது அனைவரையும் கட்டுக்குள் வைப்பதற்குக் கண்டுப்பிடித்த பேராயுதம் ”அட்டைகள்( ID CARDS)” குடிமைப்பொருட்கள் வாங்குவதற்கு ஒரு குடும்பத்தின் உறுப்பினராக ஆகவேண்டும் என்ற வலியுறுத்தலின் வழியாக உருவான “அடையாள அட்டை”ப் பண்பாட்டை தேசத்தின் உறுப்பினர் என்ற பேரடையாளமாக மாற்றியிருக்கிறது. அவ்வகையான அட்டைகள் இல்லாதவர்கள் நாடற்றவர்களாகக் கருதப்பட்டுத் தனியான முகாம்களில் அடைக்கப்படும் காலத்தில் வாழ்கிறோம். ஒரு நாட்டிற்குள் இருப்பவர்களையே சிலவகையான தகவல்களைத் தரமுடியவில்லை என்றால் அட்டை வழங்காமல் சிறப்பு முகாம்களுக்குள் தள்ளிவிடும் வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்கின்றன நவீன அரசுகள்.

தனது கதையைத் தானே நிரல்படுத்திச் சொல்லும் (Self Narrative ) பாணியில் தொடங்கிய நாடகம் முதலில் ஒரு சீனப் பன்னாட்டுத் தொழிற்சாலையில் பணியாற்றிய தொழிலாளியின் அனுபவங்கள் சிலவற்றைக் காட்சிப் படுத்தியது. தனி அடையாளங்கள் அழிக்கப்பட்டுப் பொது அடையாளத்திற்குள் வாழப்பழக்கப்படுத்தப்படும் வாழ்க்கையில் நிலவும் பாரதூரமான வாழ்க்கைத் தர வேறுபாடுகளையும் பொருளியல் சுரண்டலையும் காட்சிப் படுத்தியதின் பின்னணியில் கண்காணிப்பு என்பது ‘நெருப்பை உமிழும் ட்ராகனின்’ கண்காணிப்பாக எப்போதும் சுட்டெரித்துக்கொண்டிருப்பதை எந்திரமாக மாறும் உடல் மொழியாலும் குரல் வெளிப்பாட்டாலும் பார்வையாளர்களுக்குக் கடத்தினார்.

பின்னரங்கில் ஒரு நாற்காலி, ஒரு துணிப்பை, தண்ணீர்க்குடுவை, ஒரு பல்பயன்பாடு அலைபேசி என்ற அரங்கப்பொருட்களைக் காட்சிப்படுத்தித் தொடங்கிய நாடகம், அப்பொருட்களுக்குள் இருந்த ஆடை, செருப்பு போன்றவற்றை மாற்றிக் கொள்வதின் வழியாகக் காட்சி மாற்றங்களையும் பாத்திர மாற்றங்களையும் உருவாக்கிக் கொண்டது. கிராமத்தையும் தனது தாயையும் பிரிந்துப் பல்லாயிரம் மைல்கள் தாண்டிப் பெருநகரங்களின் கட்டட வேலைகளுக்குள் தள்ளப்படும் இன்னொரு மனிதனின் வாழ்க்கை விரித்த அடுத்த கதையாடல், சொந்த நாட்டிலேயே அகதி முகாம் வாழ்க்கையை வாழ நேரும் அவலத்திற்குள் பார்வையாளர்களைக் கடத்திச் சென்றது. இறந்த ஒருவனின் அட்டையைத் தனது அட்டையாக மாற்றிக் கொண்டு தன்னைத் தொலைந்துபோக -இறந்துபோக நெருக்கித் தள்ளும் சூழலைத் தனது உடல் மொழியாலும் குரலாலும் பார்வையாளர்களை உணர வைத்தார் ஆனந்த்சாமி.

புகைப்படம் எடுக்கும் ஸ்டூடியோ, அதன் ஒரு பக்கம் பூக்களும் மாலைகளும் விற்கும் பூக்கடை, இன்னொரு பக்கம் குளிர்சாதன வசதிகொண்ட பிணவறைப் பெட்டிகளை வாடகைக்குவிடும் கடை மூன்றையும் அருகருகே காட்சிப்படுத்தி மனிதர்களின் இருப்புக்கும் இல்லாமல் போவதற்குமான தூரத்தையும் மகிழ்ச்சிக்கும் துயரங்களுக்கும் இடைவெளிகள் உருவாக்க முடியாத அவலத்தையும் நாடகக்கட்டமைப்பில் விவரித்துக் காட்டியது. ஆடை, செருப்பு மாற்றம், அலைபேசியில் பதிவுசெய்யப்பட்ட இசைக் கோலங்களை இயக்குவதன் வழியாக உருவாக்கப்பட்ட இடைவெளிகள் போன்றன நாடகத்தின் வடிவத்தில் திட்டமிட்டு உருவாக்கப்படும் இடைவெளிகளாக இருந்தன. பிரெக்டின் காவியபாணி அரங்கில்(Epic theatre) உருவாக்கப்படும் தூரப்படுத்துதல் என்னும் உத்தியை நினைவூட்டிய இவ்விடைவெளிகள், பார்வையாளர்களை நடப்பு வாழ்க்கையில் அவர்கள் சந்தித்துக் கொண்டிருக்கும் நிகழ்வுகளை நினைத்துக்கொள்ளத் தூண்டின. இதனை நாடகத்திற்குப் பின் நடந்த உரையாடல்களின் போது சிலர் குறிப்பிட்டுப் பேசினர்.

இந்திய அரசாங்கம் உருவாக்கிக் கொண்டிருக்கும் அட்டையில்லாதவர்களுக்கு உருவாக்கிக் கொண்டிருக்கும் முகாம், ஏற்கெனவே இந்தியாவில் ஈழ அகதிகளுக்காக இயங்கும் அகதி முகாம்களின் இருப்பு போன்றவற்றை ஞாபகப்படுத்தியதை உணரமுடிந்தது. எனக்குப் புலம்பெயர் எழுத்தாளர்களின் புனைவுகளில் அந்நாட்டு அகதியாக மாறுவதற்கு அட்டை பெறும் வழிமுறைகளின் விவரிப்பு நினைவுக்குள் வந்துகொண்டே இருந்தன.

தனியாள் அல்லது ஓராள் நாடகம் தொடங்கும்போது கதைசொல்லும் பாணியாகவே பெரும்பாலும் தொடங்கும். ஆனால் அவ்வோராள் பாத்திரமாக மாறிவிடுவதும், கதைசொல்லியாக ஆகிவிடும் என்னும் கூடுவிட்டுக் கூடுபோயும் நடிப்புக்கலையின் திறனைக் கைப்பிடித்துவிட்டால் பார்வையாளர்கள் தங்களை மறக்கத் தொடங்கி நாடகம் முன்வைக்கும் காட்சிகளோடும், கருத்துகளோடும் உரையாடலைத் தங்கள் மனதுக்குள்ளே நட த்த ஆரம்பித்துவிடுவார்கள். ஒவ்வொருவரும் தங்களைப் படமாக எடுத்துப் பார்க்கும் ஆர்வம் எப்போதும் குறையப்போவதில்லை. அதுவும் அவரவர் கைகளில் இருக்கும் அலைபேசிக் காமிராவில் தற்படங்கள்(Selfie) எடுத்துப் பார்த்துக் கொள்ளும் இந்தக் காலத்தில் ‘நாம் நம்மை எப்படிப் பார்க்க விரும்புகிறோம்? என்ற கேள்வியைக் கேட்டு விசாரணையாக நகரும் பின் பாதி நாடகம் பார்வையாளர்களோடு – அவர்களின் அகத்தோடு உரையாடலை நடத்துகிறது. நடிப்புக்கான அரங்க வெளியிலிருந்து, பார்வையாளர்களின் இருப்பிட வெளியை நடிப்பு வெளியாக மாற்றிவிடும் நடிகர், பார்வையாளர்கள் ஒவ்வொருவரையும் படம் எடுத்துக்கொள்ள வந்தவர்களாக மாற்றி, அவர்களோடு சேர்ந்து ஒரு குழுப்படம் எடுத்துக்கொள்வதோடு முடிக்கிறார். இத்தகைய வாய்ப்பு, தனியாள் நாடகம் தரும் சிறப்பான வாய்ப்பு. நடிகர் -பார்வையாளர் உறவில் நெருக்கத்தை (Intimacy) உருவாக்கும் இந்த அம்சத்தை இந்த மேடை நிகழ்வு கச்சிதமாக உருவாக்கித் தந்தது. நடித்த ஆனந்த்சாமியும் நாடகத்தை வடிவமைத்து இயக்கிய ராஜீவ்கிருஷ்ணாவும் பாராட்டப்பட வேண்டியவர்கள்.

நீண்டகாலமாக அரங்கியல் செயல்பாடுகளிலும் ஈடுபட்டுவரும் ஆனந்த்சாமியின் நடிப்பில் ராஜீவ்கிருஷ்ணன் இயக்கிய இந்நாடகத்தின் மூல வடிவம் ஒரு தென்னாப்பிரிக்க நாடகம் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் எனக்கு இந்நாடகத்தின் மூலம் அதற்கு முந்திய ஒன்று என்று தோன்றியது. இரண்டாம் உலகப்போரின் பின்னணியில் சாமுவேல் பெக்கட் எழுதிய ஒரு நாடகம் இதே கட்டமைப்பு கொண்டது. தனது ”ஒலிநாடாப் பதிவுகளைத் தொலைத்த கிராப்” (Krap’s lost Tape) அந்நாடகத்தை வாசித்து அதே கட்டமைப்பில் எழுதப்பெற்றதே எனது ‘ஒரு நூற்றாண்டுக்கிழவனின் நினைவுக்குறிப்புகள்’ அதுவும் ஓராள் நடிப்புக்குரிய ஒன்றே.


செப்டம்பர் 25, பீளமேடு, ஜி.18. பொதுமக்களுக்கான அறக்கட்டளை வளாகத்தில் நான் கண்ட மேடையேற்றம் கோவை நகரில் நான்காவது மேடையேற்றம் என்று தெரிவிக்கப்பட்டது. ஏற்கெனவே சென்னை தொடங்கி வெவ்வேறு நகரங்களில் இதுவரை 45 தடவை மேடையேற்றம் கண்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது. கோவை நகரில் நவீன நாடகச் செயல்பாடுகளில் நீண்டகாலமாக ஈடுபட்டுவரும் பூசாகோ கலைக்கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர் ராமராஜின் முன்னெடுப்பில் தான் இந்நாடகம் இங்கே வந்தது. தனியாள் நாடகங்களைத் தானே தரும் வல்லமை கொண்டவர் ராமராஜ். பிறரது நாடகங்களைத் தனது மாணாக்கர்களுக்கும் தான் வாழும் நகரத்துப் பார்வையாளர்களுக்கும் வழங்கும் ஆர்வம் கொண்டவர். ஆங்காங்கே இருக்கும் தனிநபர்களின் அரங்கியல் ஆர்வங்களுக்குக் கிடைக்கும் ஆதரவு அக்கலையையும் அக்கலையில் ஈடுபடும் மனிதர்களின் ஈடுபாட்டையும் தொடரச் செய்யும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தி.சு.நடராசனின் திறனாய்வுப் பார்வைகள் :தமிழ் அழகியல், தமிழகத்தில் வைதீக சமயம்

உடல் மறுப்பு என்னும் பெரும்போக்கு

கற்றல் - கற்பித்தல்: மாணவ ஆசிரிய உறவுகள்