கொண்டாடப்படவேண்டியவர் சாரு



சாரு நிவேதிதாவின் எழுத்துகள் மீது காட்டப்படும் வன்மம் என்பது அவரது ஆளுமை மீது காட்டப்படும் வன்மம் அல்லாமல் வேறில்லை. மரபான அமைப்புகள் மீது நம்பிக்கையும் வழிபாட்டு மனோபாவமும் கொண்ட தமிழ் எழுத்தாளர்களில் பலர் நவீனத்துவத்தின் மீது நம்பிக்கைகொண்டவர்களாகப் பாவனை செய்பவர்கள். சரியாகச் சொல்வதானால் இப்பாவனை யாளர்களுக்கு நவீனத்துவத்தின் சாராம்சவாதம் மட்டுமே உவப்பானது. ஆனால் மரபின் மீது மூர்க்கமான எதிர்ப்பைக் காட்டுவதோடு சாராம்சத்தைக் கடந்தவர் சாரு நிவேதிதா. உரிப்பொருளில் மட்டுமல்லாது வெளிப்பாட்டு முறையிலும் அதனைக் கைக்கொண்ட ஒரு முன்மாதிரி அவர்.

விருப்பமும் விலகலும்
------------------------------
சாருவின் எழுத்துகள் - அதன் தொடக்க நிலையிலிருந்தே படிகள், மீட்சி, இங்கே இன்று - என எண்பதுகளின் இதழ்களிலிருந்தே வாசிப்பிற்குரியனவாக இருந்தன. எக்ஸிஸ்டென்சியலிசமும் பேன்ஸி பனியனும் வந்த போது உடனடியாக வாசிக்கப்பட்ட புத்தகம். அப்போது அது குறித்து எழுதியதுண்டு. அதற்கு முன்பே 'முனியாண்டி' கதைகளும்கூட. புதுச்சேரி நாடகப்பள்ளிப் பணிக்காலத்தின் தொடக்க ஆண்டுகளில் அடிக்கடி சந்திக்கும் நபர்களில் ஒருவராகவே சாருவும் இருந்தார். அவரை வாசித்த அளவுக்கு எழுத நினைத்ததில்லை

மதுரையில் நடந்த நிஜநாடக இயக்க நாடகவிழாவில் அவரது “இரண்டாம் ஆட்டம்” நாடகப்பிரதி நிகழ்த்தப் பெற்ற பிறகு கொஞ்சம் விரிசல் ஏற்பட்டது. ஆனால் விலகல் இல்லை. நெல்லைக்குப் போனபின்பு சந்திப்புகள் குறைந்தன. உயிர்மை இதழ் தொடங்கப்பட்டு தொடர்ந்து எழுதும் எழுத்தாளராக அவரும் இருந்தார்; நானும் இருந்தேன். உயிர்மைப் பதிப்பகம் வெளியிடும் ஆசிரியர்களில் அவரும் நானும் இருந்தோம். அதன் வெளியீட்டு விழாக்கள் கோலகலமாக நடந்தபோது சந்தித்துக் கைகுலுக்கிக் கொள்வோம். அவரது புனைவுக்குள் அவர் இருக்கிறார் என்பது வெளிப்படை; அவரது பார்வையில் இந்திய/ தமிழ்க்குடும்ப அமைப்புகள் விவாதப்படுகின்றன; விமரிசிக்கப் படுகின்றன என்பதும் அவற்றின் அடையாளம். காலத்தை அறுத்துத் தொடர்ச்சியற்ற தன்மையை - நான் லீனியாரிட்டியை - உருவாக்குவதோடு வெவ்வேறு வெளிகளில் நடக்கச் சாத்தியம் கொண்ட நிகழ்வுகள் வழியாகவும் தொடர்ச்சியற்ற தன்மையை உருவாக்குவார். அவரது புனைவுகளைத் தொடர்ச்சியாக வாசிக்காமல் தாண்டித்தாண்டி வாசிக்கலாம். ஆனால் புனைவல்லாத கட்டுரைகளையும் பத்தி எழுத்துகளையும் அப்படி வாசித்துவிட முடியாது. உலக இலக்கியம், உலக சினிமா, உலக இசை என விரியும் அவரது கட்டுரைகள் வாசிப்பவர்களுக்குத் தரும் தகவல்களும் விவரிப்பும் வாசிப்பின்பத்தின் விரிவுகள்.

******
அரசுத்துறை நிறுவனங்களில் தனியொருவர் முடிவை எடுத்துவிட முடியாது. அப்படியெடுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும் முடிவுகள் கூடப் பின்னர் விவாதத்துக்கும் விமரிசனத்திற்கும் உரியதாக மாறிவிடும் வாய்ப்புகள் அங்கே உண்டு. பல்கலைக் கழகப் பணியில் துறையின் தலைவராகவும் கல்வி மையங்களின் தலைமைப்பொறுப்பிலும் இருந்த காலங்களில் சாருவைப் பல்கலைக்கழக வளாகத்திற்கு அழைக்க வேண்டும்; அவரது உரையாடலையும் உரையையும் மாணாக்கர்கள் கேட்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று நினைத்ததுண்டு. தனித்துவம் கொண்ட மொழிநடை, முன் வைக்கத் தயங்கும் கருத்தியல் போன்றவற்றைத் தயங்காமல் சொல்லும் லாவகம் என எழுதுவதோடு உரையாடலும் செய்யக் கூடியவர். அதே நேரம் முன்னுக்குப் பின் முரணாகவும் மறதியாகவும் மாற்றிச் சொல்லவும் செய்வார்.
பலதரப்பு எழுத்துகளும் உயர்கல்வியில் இருக்கும் மாணாக்கர்களுக்கு அறிமுகம் ஆகவேண்டும் என்ற நிலையில் அவரை அழைக்கவேண்டுமென முன்வைத்ததும் உண்டு. அவரது பெயரை முன்மொழிந்து பேசத்தொடங்கும்போதே மறுப்பும் வந்துவிடும். மறுப்பு விவாதமாக இருக்காது. தடையாகவே இருக்கும். அதனாலேயே அவரை அழைக்க நினைத்த எண்ணம் ஈடேறியதில்லை.

அரசு நிறுவனங்களும் தனியார் அமைப்புகளும் அங்கீகரிக்காத ஆளுமைகளையும் அங்கீகரிக்கும் வாய்ப்பு விஷ்ணுபுரம் அமைப்புக்கு உண்டு. தனியொருவராக முடிவெடுத்து அறிவிப்புச் செய்துவிடும் வாய்ப்புகொண்டது விஷ்ணுபுரம் விருது. அவ்விருதைப் பெறப்போகும் சாருநிவேதிதாவுக்கு வாழ்த்துகள். வழக்கம்போலக் கோவையில் விழா நடக்கும் என்றால் சாருவைச் சந்திக்கவும் வாய்ப்புண்டு.

https://ramasamywritings.blogspot.com/2021/06/reader.html

வாசிப்புத் தூண்டலுக்கான பனுவல்( A Reader) - ஓர் உரையாடல்


https://ramasamywritings.blogspot.com/2016/01/blog-post_19.html

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவீனத்துவமும் பாரதியும்

நாயக்கர் காலம். இயல் . 6 சாதிகளும் சமூக அசைவியக்கங்கமும்

ப்ளு ஸ்டார் : கிரிக்கெட்டும் அரசியலும்