பேச்சுமரபும் எழுத்துமரபும்


பேச்சும் எழுத்தும்


உலகப்புகழ்பெற்ற பேச்சுகளைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். கன்னிப் பேச்சு, கடைசிப்பேச்சு, காவியப்பேச்சு, உரைவீச்சு, தீப்பொறி, வெடிப்பேச்சு, நரிப்பேச்சு எனப் பேச்சுபற்றிய பெயர்ச்சொற்களை நினைக்கும்போது பலர் நினைவுக்கு வரலாம். பேச்சால் வாழ்ந்தவர்களும் உண்டு; வீழ்ந்தவர்களும். ஆண்டவர்களும் உண்டு ; மாண்டவர்களும் உண்டு.
இருபெரும் உரையாளர்கள்.

கோவை புத்தகக் கண்காட்சிக்கு இரண்டு நாட்கள் (2022,ஜூலை, 23,25) போயிருந்தேன். இரண்டு நாட்களும் இருபெரும் உரைகள். எழுதிக்குவிப்பதில் சலிப்பில்லாத இரு எழுத்தாளர்களும் -ஜெயமோகனும் எஸ்.ராமகிருஷ்ணனும் பேசுவதிலும் சலிப்பில்லாமல் இருக்கிறார்கள். தமிழ்ப்பேராசிரியராக இருந்தபோதிலும் இப்படியெல்லாம் ஓர் உரையை நடத்திக்காட்ட எப்போதும் முயன்றதில்லை. உரையாடல் வடிவமே எனது வெளிப்பாட்டு வடிவம். 

எல்லாத் தொடர்பாடல்களும் வெளிப்பாடுகளும் மொழியின் வழியாகவே நடக்கின்றன என்ற போதிலும் உரைத்தலை மட்டுமே கொண்ட மொழிதல் எளிய கருவியாகக் கருதப்படுகின்றது. உரைப்பவரிடம் இருப்பவை சொற்களும் சொற்களால் ஆன தொடர்களும் மட்டுமே. அசைவற்ற உடலோடு குரல் உருவாக்கத்தின் வழியாக நடக்கும் அந்த வினையின் வழியாகவே அறியப்பட்ட ஆளுமைகள் உலக வரலாற்றில் இருக்கிறார்கள். தமிழிலும் நீண்ட பட்டியல் உண்டு. நான் நேரில் கேட்ட உரையாளர்களாகப் பின்வரும் பெயர்கள் உள்ளன. அவர்களின் உரைகளைச் சாலைகளின் நாற்சந்தியிலும் முச்சந்தியிலும் உள்ளரங்குகளிலும் கேட்டிருக்கிறேன். பெரியார் ஈவெரா தொடங்கி. முதல்வர்கள் காமராஜ், மு.கருணாநிதி ஆகியோரின் உரைகளைக் கேட்டிருக்கிறேன். குன்றக்குடி அடிகளார், குமரி அனந்தன், வை. கோபால்சாமி, ஆ.ராசா, சோ.ராமசாமி, ஜார்ஜ் பெர்ணாண்டஸ், திருமாவளவன் முதலான அரசியல்வாதிகளின் பேச்சைப் பயணம் செய்து கேட்டுள்ளேன். தனி உரைகள் நிகழ்த்தும் பாரதி கிருஷ்ணகுமார், சாரதா நம்பி ஆரூரன் போன்றவர்களின் உரைகளுக்கும் முழுமையாக அமர்ந்து விடுவதுண்டு.

இலக்கியச் சொற்பொழிவுகளைக் கேட்கத் தொடங்கியதின் ஆரம்பம் எஸ்.ஆர்.கே,. அறந்தை நாராயணன், ஜெயகாந்தன் கூட்டணியில் தொடங்கியது. இப்போது எழுதிக்கொண்டிருக்கும் எழுத்தாளர்களில் ஜெயகாந்தனைப் போலவே ஜெயமோகனும் எஸ்.ராமகிருஷ்ணனும் பேச்சிலும் வல்லவர்கள் என்பதைப் பலதடவை கேட்டு உணர்ந்துள்ளேன்.

பேசுவதற்கான தலைப்பு தொடங்கி, அதனை விளக்குவது, விவரிப்பு, அதனையொட்டித் தமிழ்ச் சமூகம் காட்டும் அக்கறையின்மையைச் சுட்டிக் காட்டுவது, அதே நேரம் இதுபோன்ற வாய்ப்புகளும் இங்குதான் நடக்கின்றன என்பதைச் சொல்லிப் பாராட்டுவது எனக் கட்டமைக்கப்பட்ட உரைகளைத் தருகிறார்கள் ஜெயமோகனும் எஸ்.ராமகிருஷ்ணனும். கல்வி நிறுவனங்கள் இவர்கள் இருவரின் உரைகளை ஏற்பாடு செய்வதின் மூலம் இலக்கியவாசிப்பின் பக்கம் இளையவர்களை நகர்த்தமுடியும் என்று தோன்றுகிறது.
*****
பேச்சுமரபுக்கும் நிகழ்த்துப் பண்பாட்டுக்கும் தமிழ்நாட்டில் எப்போதும் பேராதரவு உண்டு. பேச்சு மரபு என்பது பேச்சு மொழியின் வழியாக வெளிப்படும் இலக்கியங்கள், கலைவடிவங்கள், நம்பிக்கைகள், சடங்குகள், வழிபாடுகள் போன்றனவும் அவற்றின் வழியாக உருவாக்கப்படும் பண்பாட்டு நடவடிக்கைகள் என விரியும். இக்கூறுகள் எல்லாவற்றையும் உள்வாங்கி அரங்கியல் வெளிப்பாடாகத் தகவமைத்துக் கொள்வது நிகழ்த்துப்பண்பாடு. பேச்சு மரபையும் நிகழ்த்துப்பண்பாட்டையும் ஆதாரமாகக் கொண்டு கருத்துகளை உருவாக்கி நிலைநிறுத்தும் ஆய்வாளர்கள், அதனை எழுத்து மரபின் மாற்றாகவும், பல நேரங்களில் எழுத்துமரபுக்கு எதிராகவும் நிறுத்துகிறார்கள். பேச்சுமரபே சரியானது என வாதிடும் அந்த ஆய்வாளர்களும் அறிஞர்களும் கடைப்பிடிக்கும் தர்க்கங்களும் கோட்பாடுகளும் எழுத்துமரபின் கண்டுபிடிப்புகள் என்பது சுவாரசியமான முரண்நிலை.

******

பேரா. தொ.பரமசிவன் எங்கள் துறையின் தலைவராக இருந்த காலத்தில்(1998-2008) அவரையும் என்னையும் அறிந்த நண்பர்கள் “ அவரோடு உங்கள் உறவு எப்படி ? என்று கேட்பார்கள். அவர் துறையின் தலைவர். நான் அவரது தலைமையின் கீழ் செயல்படவேண்டிய ஓர் ஆசிரியர். இந்த உறவுநிலை காப்பாற்றப்பட வேண்டும் என நினைப்பவர் அவர். பல்கலைக்கழக வளாகத்தில் அந்த உறவுநிலையைப் பேணுவதில் விலகல் தேவையில்லை என்று நினைப்பவன் நான். அதனால் எங்களுக்கிடையே எந்தச் சிக்கலும் இல்லை என்று சொல்லியிருக்கிறேன். அதையும் தாண்டிக் கேட்பவர்களிடம் அவர் பேச்சுமரபைப் போற்றுபவர்; நான் எழுத்துமரபுக்காரன். இவ்விரண்டிற்கும் இடையேயுள்ள கொடுக்கல் வாங்கலில் என்னென்ன உறவும் முரணும் உண்டாகுமோ அவையெல்லாம் எங்களுக்கிடையே உண்டு என்று சொல்வேன். புரிந்துகொண்டவர்கள் புன்சிரிப்பைப் பதிலாகத் தருவார்கள். புரியாதவர்கள் எதோ பிரச்சினை இருக்கிறது, ஏதோ சிக்கல் இருக்கிறது. சொல்லத்தயங்குகிறேன் என நினைத்துக்கொள்வார்கள்.


*********************





கருத்தியல் உருவாக்கத்தில் பேச்சுமரபுக் கலைவடிவங்கள் பலவும் பலவிதமான தன்மையில் பங்காற்றியுள்ளன. கதாகாலட்சேபம், வில்லடிப் பாட்டு, உடுக்கடிப்பாட்டு, பகல்வேசம் போன்றன பெரும்பாலும் பாட்டு, விரித்துரைத்தல் என்னும் வடிவங்களில் சமய நம்பிக்கைகளையும் கடவுள்களையும் மக்களிடம் தொடர்ச்சியாகப் பரப்புரை செய்துள்ளன. இப்பரப்புரையில் ஈடுபட்டவர்களுக்குக் கோயில் மானியங்களில் பங்குகள் தரப்பட்டுள்ளன. அதே ஆட்டங்கள், கூத்துகள் வழியாகவும் பரப்புரைகள் நடந்துள்ளன. அவற்றின் பரப்புமுறையில் கருத்துகள், செய்திகள் தாண்டி மக்களைக் கிளர்ச்சிப்படுத்தும் கூறுகள் கொண்டனவாக இருந்ததால் கோயில் சார்ந்த வடிவமாக இல்லாமல் தனித்துச் செயல்படும் குழுக்களின் நிகழ்வுகளாக இருந்துள்ளன. காலப்போக்கில் அவற்றின் இடத்தை நாடகங்கள், திரைப்படங்கள் போன்றன பிடித்தன. ஒலிபெருக்கிகளின் பயன்பாடு அறியப்பட்ட நிலையில் தனிமனிதர்களே பேச்சுமரபின் அடியாளமாக மாறினார்கள். அந்த மாற்றம் உள்ளடக்க மாற்றத்தையும் கொண்டுவந்தது. ஒலிபெருக்கியின் வரவோடு அரசியல்பேச்சும் இணைந்துகொண்டது. அரசியல் பேச்சுகளைக் கண்டனம் செய்த சமயப்பேச்சுகள் ஒலிபெருக்கியைப் பயன்படுத்திக்கொண்டு தங்களின் வடிவத்தை மாற்றிக்கொண்டன. தனிப் பேச்சுகள் மூவர் பங்கேற்ற வழக்காடு மன்றங்களாகவும் எழுவர், ஒன்பதின்மர் பங்கேற்கும் பட்டிமன்றங்களாகவும் மாறின. நகர் முற்றங்களும் கிராமத்துத் தெருக்களும் அவை நிகழ்த்தப்படும் இடங்களாக மாறின.

தொலைக்காட்சி ஊடகங்களின் வரவு இவற்றை இடம்பெயரச்செய்தன. பேச்சுக் கச்சேரிகளின் அனைத்து வடிவங்களையும் தொலைக்காட்சி தனதாக்கிக் கொண்டது. தொலைக்காட்சி ஊடகங்களோடு சமூக ஊடகங்கள் போட்டியில் இறங்கியிருக்கின்றன நமது காலத்தில். புதிதாக வரும் ஊடகங்களைச் சில நேரம் எதிர்ப்புக்காட்டிவிட்டுப் பின்னர் அதன் வழியாகவே தன்னை நிலைநிறுத்திக் கொள்வதில் கவனம் செலுத்துவது பழைய வடிவங்களின் இயல்பு. முகநூல் வழியாகத் தொலைக்காட்சியின் நேரலைகள் நடக்கின்றன. அவற்றை வாட்ஸ் அப்கள் இணைத்துக்கொள்கின்றன.

வாட்ஸ் அப்கள் மற்றெல்லா ஊடகங்களைவிட எளிமையான வடிவமாகத் தன்னைக் காட்டியிருக்கிறது. உருவாக்கம், படைப்பாக்கம், தொழில்நுட்பத் திறன் என எதுவும் தேவைப்படாத ஒருவடிவம் வாட்ஸ் அப். அத்தோடு அது தனிநபர் ஊடகமாக இருப்பதைவிடக் குழு ஊடகமாகச் செயல்படுவதில் - செயல்படுத்துவதில் கவனம் கொண்ட வடிவமாக இருக்கிறது. சீர்மிகு அலைபேசிகளை இயக்கத்தெரிந்த அனைவரும் வாட்ஸ் அப் ஊடகத்தைக் கையாளலாம். அவர்களுக்கு ஒருசொல்லையும் எழுதத் தெரிந்திருக்க வேண்டியதில்லை. பேசிப்பதிவுசெய்யவும் தெரிந்திருக்கவும் வேண்டியதில்லை. தன்னைக் குழுக்களில் இணைத்துக்கொள்வதின் மூலம் ஒவ்வொரு நிமிடமும் தகவல்களைப் பெற்றுக்கொண்டும் பரப்பிக் கொண்டும் இருக்கலாம் என்ற வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டதன் மூலம் அனைவரும் அதன் பரப்பிற்குள் வந்துவிட்டார்கள்.


தொடக்க நிலையில் முகநூல் போன்ற சமூக ஊடங்களின் பயன்பாட்டைத் தடுக்க நினைத்த கல்வி நிறுவனங்கள் வாட்ஸ் அப்பின் வரவைக் கட்டுப்படுத்த முடியாமல் ஒதுங்கிக்கொண்டன. முகநூலில் இல்லாதவர்கள் எல்லாம் வாட்ஸ் அப்பில் இருக்கிறார்கள். வகுப்புக்கு வராத மாணவிக்கு அவளது தோழன் வாட்ஸ் அப் நேரலை மூலம் வகுப்பறையைக் காட்டிக்கொண்டிருக்கிறான். சமையல் செய்யும் விதங்களை நாடுவிட்டு நாட்டிற்கும் கண்டம்விட்டுக் கண்டத்திற்கும் தாண்டிவிட்டவர்களுக்குச் சொல்லித் தருகிறார்கள் முன்னோடிகள். பதிவுசெய்து அனுப்புகிறார்கள்.
நம் காலத்தில் பேச்சுமரபின் உச்சம் வாட்ஸ் அப் என்னும் சமூக ஊடகம் தான்.

************************************
உலக அளவில் திரள் மக்களைப் பற்றி ஆய்வு செய்த ஆய்வாளர்கள் பொதுப்புத்தி என்றொரு சொல்லை அதிகம் பயன்படுத்துகின்றனர். தனக்கெனத் தனி அடையாளம் கொண்டவர்களாக ஒவ்வொருவரும் இருந்தாலும் வாழும் இடம், சீதோஷ்ணம், நடைமுறை வாழ்க்கைச் சிக்கல்கள் சார்ந்து பொதுக்குணங்கள் உருவாகி விடுவதைத் தவிர்க்க முடியாது என்பதுவும் அவர்கள் வாதம். இப்பொதுப் புத்தி வெளிப்படையாகப் புலப்படாதவை என்றாலும் அதுவே ரசனை, முடிவெடுத்தல், தெரிவு செய்தல், பின்பற்றுதல் போன்ற அகவாழ்க்கை முடிவுகளையும் அவற்றின் தொடர்ச்சியாக அரசியல், பொருளாதாரம், பண்பாடு, சமூக நடைமுறை போன்ற புறவாழ்க்கை அமைவுகளையும் தீர்மானிக்கும் சக்தி கொண்டது என்பதாகவும் ஆய்வுமுடிவுகள் சொல்கின்றன.

புலப்படா நிலையில் எல்லாவற்றையும் தீர்மானிக்கும் பொதுப்புத்தியில் உலக அளவில் இரு பெரும் வேறுபாடுகள் இருப்பதாகச் சொல்லப்படுவதுண்டு. மேற்கத்திய தேசத்து மனிதர்களின் பொதுப்புத்திக்கு எதிரான முரண்பாடுகளோடு கீழ்த்திசை நாடுகளின் மனிதர்களின் பொதுப்புத்தி அமைந்துள்ளது என்பது ஐரோப்பியச் சிந்தனையாளர்களின் வாதம். ஓரியண்டலிசம் எனச் சொல்லப்படும், கீழ்த்திசை நாடுகளின் பொதுப்புத்தி பெரும் மாற்றங்களை எப்போதும் விரும்பாது எனவும், ஏற்கெனவே இருப்பனவற்றின் தொடர்ச்சிகளின் மீது தீராத மோகத்தை வெளிப்படுத்தக் கூடியது எனவும் மானிடவியல் சார்ந்த சிந்தனையாளர்கள் குறிப்பிடுகிறார்கள். உலக அளவில் இருக்கும் பல்வேறு தேசத்து மனிதர்களின் மனநிலையைக் கருத்தில் கொண்டு ஆய்வு செய்தால் பொதுப்புத்தியை இருபெரும் முரணாக மட்டுமே கொள்ளுதல் போதாது என்று சொல்லலாம். ஆப்பிரிக்க நாடுகளின் கருப்பு மனிதர்களின் பொதுப்புத்தி மேற்கத்தியப் பொதுப்புத்திக்குள் அடங்கி நிற்கக் கூடியது அல்ல; இதே தன்மையை லத்தீன் அமெரிக்க தேசத்துப் பொதுப்புத்திக்குள் பார்க்க முடியாது என்றே தோன்றுகிறது.

இந்த வேறுபாடுகளைப் பார்த்து விட்டு தெற்காசிய- குறிப்பாகத் தென்கிழக்காசிய நாடுகளின் பொதுப்புத்தியைக் கணிக்க முயன்றால் அவற்றுக்குள் ஒரு பொதுத் தன்மை இருப்பதை உணரமுடியும் அதனால் தான் சொந்த வாழ்க்கையில் கற்பு, ஒருவனுக்கு ஒருத்தி போன்ற கோட்பாடுகளைப் பின்பற்றுவதாக நம்பும் தென்னாசிய/ தென்கிழக்காசிய மனம், பொதுவெளியில் அவற்றிற்கான அர்த்தத்தை முக்கியமாகக் கருதுவதில்லை. தங்களது பாரங்களைச் சுமக்க தீர்மானிக்கப் பட்ட தலைவர்கள் /குடும்பங்கள் இருக்கும் போது புதிய மனிதர்களைப் பரிசோதனைக்குட்படுத்துவது அனாவசியமானது எனக் கருதுகிறது. நமது பொதுப்புத்தி மாற்றமின்மையை நேசிக்கும் ஒன்று என்பதில் எந்தச் சந்தேகமும் கொள்ள வேண்டியதே இல்லை.

பேச்சுமரபைப் பயன்படுத்தியதோடு நிகழ்த்துக்கலையின் பாவனைகளை உள்வாங்கிய இரண்டு பெண்கள் பரபரப்பாக வந்து, அதே வேகத்தில் மறக்கவும் பட்டார்கள். தொலைக்காட்சியில் செய்தி அலைவரிசைகளின் பக்கமே திரும்பாத குடும்பப்பெண்கள் லதா மேடத்தின் விளக்கவுரையைப் பற்றிப் பேசினார்கள்; ஏற்றுக்கொண்டார்கள். அந்த லதா எந்த லதா? என்ற கேள்வியில் அவரவருக்குத் தெரிந்த லதாக்களைப் பொருத்திக்கொண்டார்கள். பலரும் பொருத்திக் கொண்ட லதாவாக லதா ரஜ்னிகாந்த் இருந்தார். அவரது உறவினர் மதுவந்தி அவரோடு போட்டியிட்டு பேச்சும் நிகழ்வுமாக வந்தார். மதுவந்தியின் உரை ஒருவித விரித்தி உரை. அதையும் புரிந்துகொண்டார்கள்; ஏற்றுக் கொண்டார்கள்; விளக்கேற்றினார்கள். கொரோனா என்னும் கொடிய நோயை மறந்து, கொண்டாட்டம் ஒன்றில் பங்கேற்ற மனநிலையில் குலவையிட்டு மகிழ்ந்தார்கள். அதனைத் தங்கள் தலைமையின் சாதனையாக்க நினைத்தவர்கள் வெடிபோட்டுக் கொண்டாடினார்கள். நரகாசுர வதம்போல, கரோனாசுர வதம் முடிந்துவிட்டது என நினைத்தார்கள். ஆனால் கரோனா அசுரன் என்னும் மாயலோகத்து மனிதன் அல்ல; அறிவியல் உலகத்து கிருமி எனச் சொல்லிக்கொண்டிருக்கிறது..

******
தொலைக்காட்சிகளில் பண்டிகை நாட்களுக்குச் சிறப்பு ஒளிபரப்பைத் தொடங்கிய பிறகு, சடங்குகளுள் ஒன்றாகப் பட்டிமன்றம் ஆகிவிட்டது. தனியார் தொலைக் காட்சி அலைவரிசைகளுக்குச் சுலபமாகத் தயாரிக்கப்படும் நிகழ்ச்சிகளுள் பட்டிமன்றமும் ஒன்று. விடுமுறையாகவும் இருந்து, விழா நாளாகவும் ஆகிவிட்டால் ‘பட்டிமன்றம்‘ ஒன்று நம் வீட்டிற்குள் வந்து விடுகின்றது. விழா நாட்களில் தொலைக் காட்சியைத் தொடுவதில்லையென விரதம் பூண்டிருப்பவா்களுக்கு மட்டுமே பட்டிமன்றம் என்றால் என்ன? பட்டிமன்ற நடுவர்களென பிரசித்தி பெற்றுள்ள சாலமன் பாப்பையா, திண்டுக்கல் லியோனி என்பவா்கள் யார்? எனறு சொல்ல வேண்டும்.

நேர்காணல்கள் கட்டுரைகள் பத்திகள் தன்னம்பிக்கை எழுத்துகள்

இலக்கியப்பனுவல்களின் அடிப்படையான வடிவங்கள் மூன்று எனக் கருதியே இலக்கியவியல் அடிப்படைகளைப் பேசும் நூல்களை எழுதியவர்கள் நினைத்திருக்கிறார்கள். அரிஸ்டாடில், தொல்காப்பியர், பரதர் போன்றவர்கள் அவர்களின் விருப்பமான இலக்கிய வடிவத்தை மையப்படுத்திக்கொண்டு மற்ற வடிவங்களின் அடிப்படைகளையும் பேசுகின்றனர்.

அரிஸ்டாடிலுக்கும் பரதருக்கும் முதன்மை வடிவங்கள் நாடகம். அதன் உட்பிரிவாகவோ, துணைவிளைவுகளாகவோ கருதித்தான் கவிதை, கதை போன்றவற்றைச் சொல்கின்றனர். செய்யுளை இலக்கியம் என்ற சொல்லின் இடத்தில் வைத்து அடிப்படைகளைப் பேசும் தொல்காப்பியருக்கோ முதன்மை வடிவம் கவிதைதான். பாட்டு, பா, பாடல் எனச் சிறிய வேறுபாடுகளையும் பேசுபவர் மற்ற வடிவங்களாக மற்றவற்றைப் பேசுகிறார்.

நேர்காணல் வடிவம்

தமிழின் சிறுபத்திரிகை மரபு என்பது சொல்லணிகளைக் கொண்ட பேச்சு மரபுக்கெதிரானது. அதே நேரம் உரையாடல்களை அதிகம் வலியுறுத்திய மரபும் கூட. ஒவ்வொரு மாதமும் வெளியிடும் கலை இலக்கிய ஆளுமைகளின் நேர்காணல்களுக்காகவே சில இதழ்கள் கவனம் பெற்றன. அந்தக் காரணத்தால் தான் சிறுபத்திரிகைகள் உரையாடல் வடிவிலான நேர்காணல்களை வெளியிட்டுக்கொண்டே இருக்கின்றன. நேரடியாகத் தமிழ் எழுத்தாளர்கள், கலைஞர்கள், ஆளுமைகளின் நேர்காணல்களை வெளியிட்டதோடு, பிறமொழி நேர்காணல்களையும் வெளியிடுகின்றன. 

எனது  பட்டப்படிப்பு காலத்தில் நான் வாசித்த நா.பார்த்தசாரதியின் தீபம் இதழில் தொடர்ச்சியாக மலையாள எழுத்தாளர்களின் நேர்காணல்கள் மொழிபெயர்ப்பில் வந்துகொண்டே இருந்தன. அவற்றையே வாங்கியவுடன் வாசிப்பேன். அதேபோல் கோமல் சுவாமிநாதனின் சுபமங்களாவும் ஒவ்வொரு இதழிலும் ஆளுமைகளின் விரிவான நேர்காணல்களை வெளியிட்டது. . 1990 களில் வந்த கோமலின் சுபமங்களாவைத் தொடர்ந்து வாங்கியவர்கள் அதிகம். அம்மாத இதழின் தனித்துவ அடையாளமாகவே ஆக்கினார் கோமல். முதன்மையான ஆளுமைகளை நேர்காணல் செய்வதற்காகக் கோமல் சுவாமிநாதன் அவரது துணை ஆசிரியர்களான கவி.இளையபாரதி, சி.அண்ணாமலை போன்றவர்களுடன் தேர்ந்த காமிராக்காரர்களோடு போய்ச் சில நாட்கள் தங்கியெல்லாம் நேர்காணல் செய்தார்கள் என்பதை நானறிவேன். அந்தக் கால கட்டத்தில் காலச்சுவடு, புதிய பார்வை போன்றனவும் நேர்காணல்களை வெளியிட்டன

ஆளுமைகளின் இப்போதைய இருப்பைக் காட்டும் படங்களைப் பரப்பிவிட்டு அவர்களின் தேடல் மற்றும் தெரிவுகளின் வழியாக இப்போதைய இடத்திற்கு வந்த பாதையை வாசிப்பவர்களுக்குத் தரும் விருப்பம் அந்த நேர்காணல்களின் முதன்மை நோக்கமாக இருந்தது. அத்தோடு அவர்களின் கடந்தகாலத்திற்குள் நுழையும்போது அவர்களின் சமகாலத்தவர்களோடும் சமகாலச் சமூக, அரசியல் சூழல்களோடும் எப்படிப் பயணித்தார்கள் என்பதையும் கொண்டுவர முயற்சித்தார்கள். அந்த நேர்காணல்கள் பின்னர் தனியொரு நூலாக வந்தது. பத்திரிகையாளர், திரைப்படக்காரர், பதிப்பாளர், கவி எனப் பல அடையாளங்களைக் கொண்ட இளையபாரதி “ கலைஞர் முதல் கலாப்ரியா வரை” எனப் பெயரிட்டுத் தொகுத்து வெளியிட்டார்.

சுபமங்களாவின் அத்தகைய ஈடுபாடும் எத்தணிப்புகளும் இல்லையென்றாலும் சுபமங்களாவின் தொடர்ச்சியைப் பாவை சந்திரனின் புதியபார்வையும், கண்ணனின் காலச்சுவடுவும் தொடர்ந்தன. பெங்களூரிலிருந்து வெளிவந்த இங்கே இன்று காலம் தொடங்கிச் சுபமங்களா, புதிய பார்வை, காலச்சுவடு, குமுதம் தீராநதி, தினமணி கதிர் போன்ற இதழ்களுக்காக நேர்காணல்களைச் செய்த பௌத்த அய்யனார் நேர்காணல் என்ற இதழைக் கொண்டுவந்தார். நடிகர் நாசர், ஓவியர் கிருஷ்ணமூர்த்தி, அரங்கவியலாளர் ந.முத்துசாமி, கவி. தீபச்செல்வன் போன்றவர்களின் ஆளுமைத்தளங்களை முழுமையாக வெளிக்கொண்டுவரும் நேர்காணல்களை வெளியிட்டார்.

ஆளுமைகளின் இயக்கத்தைத் தொடர்ந்து கவனித்துத் தொடரும் ஒருவர் செய்யும் நேர்காணல்கள் ஆளுமைகளை அவர்களது சொற்களாலேயே வாசிப்பவர்களுக்குக் கொண்டு சேர்க்கும் வடிவம். அதனைச் செய்பவர்களுக்கு முதன்மையாகத் தேவை அளவைப்புலம். தர்க்கம் என்ற சொல்லால் அறியப்படும் அளவைப்புலம் நேர்காணலின் அடிப்படை இயக்கத்தைத் தீர்மானிக்கக் கூடியது. இலக்குடனோ, இலக்கின்றியோ தொடங்கும் உரையாடலைத் தீவிரமான கலைவடிவமாக மாற்றுவதில் அளவைப்புல அறிவு வேலைசெய்கிறது. காட்சி, அங்கம், நாடகம் என்ற உள்கட்டுமானத்தைக் கொண்ட நல்திறக் கட்டமைப்பு வடிவத்தைத் தனதாக்கிக் கொள்ளும் நேர்காணல்கள் எப்போதும் வாசிப்புத் திளைப்பைத் தரக்கூடியன.

அண்மைக்காலத்திலும் பேசும் புதிய சக்தி போன்ற இதழ்களில் ஒவ்வொரு இதழிலும் நேர்காணல்களை வெளியிடுகின்றன. கனடாவிலிருந்து வெளிவரும் காலம் இதழும் புலம்பெயர் நாடுகளிலிருந்து வரும் இணைய இதழ்களிலிலும் நேர்காணல்கள் வாசிக்கக் கிடைக்கின்றன. திரைப்பட இதழ்கள் பல நேர்காணல்களை மொழிபெயர்த்து வெளியிடுகின்றன. அலைபேசிகளும் இணையமும் வந்த பின்பு வினாக்களை அனுப்பிப் பதில்களைப் பெற்று வெளியிடும் வடிவமாக நேர்காணல்கள் மாறிவிட்டன. அதன் காரணமாகவே, இந்த நேர்காணல்கள் தொடர்ச்சியற்ற உரையாடல்களாக இருக்கின்றன.

நேர்காணல்கள் செய்யப்படும் கலை இலக்கிய ஆளுமைகளின் ஈடுபாடுகள், வெளிப்பாடுகள் குறித்த பல தளங்களையும் வெளிக்கொண்டுவரும் நோக்கம் சிதறலாக மாறிவிட்டன. நேரடியாகப் பார்த்துப் பேசாமல் எடுக்கப்படும் வினா-விடை பாணியிலான நேர்காணல்களில் இத்தகைய குறைபாடுகள் தவிர்க்க முடியாதன. குத்து மதிப்பான கேள்விகளை அனுப்பும் பேட்டியாளருக்குத் தொடர்ச்சியற்ற விடைகளைச் சொல்லித் தப்பிக்கிறார்கள் ஆளுமைகள். ஒரு கேள்விக்குப் பின்னால் எழுப்பப்படும் துணைக்கேள்வி வழியாகவே நேர்காணலைக் காத்திரமான விவாதங்களாக ஆக்கமுடியும். ஆளுமைகளின் கலை இலக்கியப்பார்வை, சமகால இலக்கியப் போக்கில் அவரது இடம், சூழலோடும் கலை இலக்கியக் கோட்பாட்டுகளோடு அவரது நெருங்கலும் விலகலும் போன்றனவற்றை வெளிக்கொணராத நேர்காணல்கள் அந்த வடிவத்தை நீர்த்துப் போகச் செய்துவிடும். அண்மையில் வாசித்த பலரது நேர்காணல்கள் இதனை உறுதிசெய்கின்றன.

எழுத்து வடிவங்கள்

கட்டுரை என்பதை ஆங்கிலத்தில் இரண்டு பெயர்களால் சுட்டுகின்றனர். ஆர்டிகல், எஸ்ஸே -Article, Essay- என்பன அவை. இவை இரண்டுக்கும் அடிப்படையான வேறுபாடுகள் இருக்கின்றன. எஸ்ஸே என்பது ஒருபொருள் குறித்த தகவல்களைத் தொகுத்து முன்வைப்பது. ஆனால் ஆர்டிகல் அவ்வாறில்லாமல் ஆய்வுத் தன்மை கொண்டதாக அமைந்திருக்கும். ஒரு குறிப்பிட்ட துறையின் ஒரு பொருளைக் குறித்த விவாதங்களை முன்வைத்து முடிவை நோக்கிச் செல்வதாக அமைந்திருக்கும். எந்தத்துறை குறித்தும் ஆர்டிகல் -கட்டுரை - எழுதப்படலாம். இலக்கியத்துறைசார்ந்து எழுதப்படும் கட்டுரைகளிலும் சிலவகை உண்டு. ஒரு இலக்கியத்தின் நயத்தைப் பாராட்டும் விதமாகவோ, கவிதை வரியின் தத்துவச் செறிவைப் பேசுவதற்காகவோ எழுதப்படும் விளக்கவுரைகள் இங்கே இலக்கியக் கட்டுரைகள் என அழைக்கப்படுகின்றன.

இலக்கியத்தின் நோக்கம், பயன், படைப்பாளியின் பார்வை, போன்றவற்றைக் கண்டறிந்து கூறும் கட்டுரைகள் திறனாய்வுக் கட்டுரைகள் என அழைக்கப்படுகின்றன.கட்டுரைகள்.. ஒரு விவாத மையத்தைச் சுட்டிக் காட்டி, அது சார்ந்து வாசிப்பவனுக்கு வாசிப்பின் அனுபவத்தையும், விவாத நோக்கத்தையும் தரவல்லதாக இவை வடிவம் கொண்டுள்ளன. எளிமையும் ஆழமும் கொண்டதாக விவாதங்களை எழுப்பும் கட்டுரைகளைத் தமிழில் எழுதியவர்களாகச் சிலரைக் குறிப்பிடலாம். பெரியார் என்று அறியப்பட்டுள்ள ஈ.வெ.ராமசாமியின் எழுத்துக்கள் முன்னோடியான உதாரணங்கள்.

பெரியாரைத் தொடர்ந்து பாரதி, வ.ரா., ராஜாஜி, கல்கி என அக்கால கட்டத்துக் கட்டுரையாளர்கள் அவ்வகைக்குப் பலம் சேர்த்தனர். இவர்களின் தொடர்ச்சியாக விந்தன், புதுமைப்பித்தன், ஜெயகாந்தன் ஆகியோரின் கட்டுரைகள் கிளை பிரிந்து புதிய தடங்களுக்குள் சென்றன. தனது சிறுகதைகளில் ஆங்காங்கே தெரிக்கச் செய்த எள்ளல் நடையைப் புதுமைப்பித்தனின் கட்டுரைகளிலும் காண முடிகிறது. அந்த எள்ளலின் காரணமாக சொல்ல வந்ததை நழுவ விட்டவர் அல்ல புதுமைப்பித்தன். ஜெயகாந்தனின் நடையோ ஆழமான விவாதங்களுக்குள் அழைத்துச் சென்று வாசகனைத் தன் வசப்படுத்திக் கொள்ளும் ஆற்றல் கொண்டது. அவர்கள் உள்ளே இருக்கிறார்கள், இவர்கள் வெளியே இருக்கிறார்கள் என்பதான தலைப்புகளில் ஜெயகாந்தன் எழுதிய உரைநடை, தமிழின் வளமான சித்திரங்கள் என்பதை இப்போது வாசித்தும் உறுதி செய்யலாம். புதுமைப்பித்தன், ஜெயகாந்தன் அளவுக்கு இல்லையென்றாலும் உரைநடையில் தாங்கள் சொல்ல விரும்பியதை நேரடியாகச் சொல்ல வேண்டும் என்று ஆசை கொண்டவர்களாக சுந்தரராமசாமி, கி.ராஜநாராயணன் போன்ற படைப்பாளிகள் முயற்சிகள் செய்துள்ளனர்.

இங்கே கட்டுரை வடிவம், வேறு வடிவத்திற்கு மாற்றம் பெற்றதையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். வாசகனை நேரடியாக விளித்துப் பேசும் கடித முறையைத் திராவிட இயக்கம் தனது வடிவமாக ஆக்கியது. தம்பிக்கு என சி.என். அண்ணாதுரை எழுதியதைப் பின் பற்றி திராவிட இயக்கத்தலைவர்கள் ஒவ்வொருவரும் தங்களது இயக்க இதழ்களில் கடிதங்களை எழுதினார்கள். உடன் பிறப்புக்கு என மு.கருணாநிதியும், ரத்தத்தின் ரத்தமே என எம்.ஜி.ராமச்சந்திரனும் தங்கள் இயக்கப் பத்திரிகைகளில் கட்டுரை வடிவத்தைக் கடித வடிவமாக ஆக்கிச் சாதனை புரிந்தனர்.

இலக்கிய நயம் பாராட்டும் கட்டுரைகளை எழுதிய முன்னோடியாக ரசிகமணியைக் கூறலாம் இலக்கியவரலாறு, இலக்கிய மதிப்பீடு இவை குறித்த குறிப்புரைகள் போன்றவற்றை எழுதியவர்களாக எஸ்.வையாபுரிப்பிள்ளை, உ.வே.சாமிநாதய்யர், சி.வை. தாமோதரம் பிள்ளை ஆகியோரை முன்னோடிகளாகவும், தெ.பொ.மீனாட்சிசுந்தரன், ரா.பி.சேதுப் பிள்ளை, அ.ச.ஞானசம்பந்தன், மு.வரதராசன், வ.சுப.மாணிக்கம் போன்றோரைப் பின் தொடர்ந்தவர்களாகவும் குறிப்பிடலாம், நவீன இலக்கியங்களை முன்வைத்து இவ்வகைக் கட்டுரைகளை எழுதியவர்களாகக் க.நா.சுப்பிரமண்யம், சி.சு.செல்லப்பா, பிரமிள், அசோகமித்திரன், எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன், போன்றோரையும் சுட்டலாம்.

ஆங்கிலப் பத்திரிகைகளில் இடம் பெறும் பத்தி எழுத்து (Column Writing) என்னும் வகைப்பாடு கூடக் கட்டுரை வடிவத்தில் அமைவன தான். இவ்வடிவம் 1980 -களில் தமிழ்ப் புலனாய்வுப் பத்திரிகைகள் வழியாக வெகுமக்களிடம் அறிமுகம் ஆனது. பிரபஞ்சன், பா.செயப்பிரகாசம் , அப்துல் ரகுமான், இன்குலாப் போன்ற படைப்பாளிகள் தங்கள் பாணியில் அதன் வடிவத்தைச் செழுமைப் படுத்தினார்கள், இரண்டாயிரத்திற்குப் பின் இடைநிலை இதழ்கள் தொடர்ந்து பத்தி எழுத்துக்களை இடம் பெறச் செய்கின்றன.இப்போது துறை சார்ந்தும், பொது நிலைப்பட்டதாகவும் பத்தி எழுத்துகள் எல்லாவகை இதழ்களிலும் இடம் பெற்று வருகின்றன.

பத்தி எழுத்து ஆனாலும் சரி, கட்டுரை ஆனாலும் சரி அதன் முக்கிய அம்சம் நிகழ்காலத்தைப் பேசுவது என்பதுதான். ஒரு நிகழ்வு அல்லது ஓர் இயக்கம் அல்லது ஓர் ஆளுமையைப் பற்றிய எழுத்துச் சித்திரம் என்பதாக இதை வரையறை செய்யலாம். வரையறை உருவாக்குவது புரிந்து கொள்ளும் நோக்கத்திற்காக மட்டுமே ஒழிய, மீறுபவைகளை ஒதுக்கி வைப்பதற்காக அல்ல.

தினசரிப் பத்திரிகைகளும் நிகழ்காலச் சமுகப் போக்குகளை விமரிசனம் செய்து கட்டுரைகளை வெளியிட்டு வருகின்றன. தினசரிப் பத்திரிகையின் அடையாளம் தலையங்கம் எழுதுவது என முடிவு செய்து செயல் பட்ட ஏ.என். சிவராமனின் வழிகாட்டுதலை விலகாமல் காத்து வரும் தினமணி ஒவ்வொரு நாளும் நடுப் பக்கத்தில் நேரடித் தமிழ்க் கட்டுரைகளையும் மொழிபெயர்ப்புக் கட்டுரைகளையும் வெளியிட்டு வருகிறது. பிற தினசரிகள் கட்டுரை களுக்கு அத்தகைய முக்கியத்துவம் தருவதில்லை. என்றாலும் கட்டுரைகளை வெளியிடுவதே இல்லை என்று சொல்லி விட முடியாது.

தன்னம்பிக்கை எழுத்துகள்

தமிழில் அதிகம் விற்கும் நூல்கள் எவை என்ற புள்ளிவிவரங்கள் கிடைப்பதில்லை. எழுத்தின் வகைகளில் இலக்கிய வகைகளாகச் சொல்லப்படும் கவிதை, புனைகதை, நாடகம் போன்றவைகள் முதல் மூன்றிடங்களில் இருக்காது என்பதே உண்மை. தொடர்கதைகளாக எழுதியபின் நாவல் என்று வகைப்படுத்திப் பதிப்பிக்கப்படும் கதைகள் அதிகம் விற்றுள்ளன. கடந்தகாலத்திலிருந்து இன்றுவரை சாதனையாக இருப்பவர் கல்கி. பாலகுமாரன், விமலாரமணி, போன்றவர்கள் நிகழ்கால உதாரணங்களாக இருக்கிறார்கள்.

திரைப்படப் பாடலாசிரியராக இருந்ததால் - இருப்பதால் அதிகம் விற்கும் கவிதை நூல்களை எழுதியவர்களாகக் கண்ணதாசனும்,. வைரமுத்துவும் இருக்கிறார்கள். சிறுகதை ஆசிரியர்கள், நாடகாசிரியர்களெல்லாம் போட்டிக்கே வருவதில்லை. ஆனால் இவர்களோடு போட்டியிடுபவர்களாக தன்னம்பிக்கைப் பேச்சாளர்கள்/ எழுத்தாளர்கள் போட்டியில் இருக்கிறார்கள். எனது இளமைப்பருவகாலத்தில் எம்.எஸ். உதயமூர்த்தி இருந்தார். அவரது பேச்சுகளைக் கேட்டதில்லை. ஆனந்தவிகடனில் தொடராக எழுதப்பெற்ற தன்னம்பிக்கைக் கட்டுரைகளை வாசித்திருக்கிறேன். பிறகு நூல்களாகவும் வாசித்திருக்கிறேன். ஒரு நூலுக்கும் இன்னொரு நூலுக்கும் பெரிய வேறுபாடுகள் இருந்தத்தில்லை. எடுத்துக்காட்டுகள், மேற்கோள்கள் வேறுவேறாக இருக்குமோ தவிர புதியன தேடும் ஒரு வாசகனுக்கு வாசிப்புக்களிப்பை அவை தருவதில்லை.

தன்னம்பிக்கை எழுத்துகள் என்பதின் நிகழ்கால அடையாளமாகப் பலர் இருக்கிறார்கள். வெகுமக்கள் ஊடகங்களில் திரும்பத்திரும்ப அறியப்படும் பெயராக இருப்பவர் இறையன்பு ஐ.ஏ.எஸ். இவரைப்போலப் பலர் பலவிதமான இதழ்களில் எழுதிக்கொண்டே இருக்கின்றனர். இவர்களது எழுத்துகளைப் பற்றியும் கூடப் பல்கலைக்கழக ஆய்வுகள் நடக்கின்றன. அந்த ஆய்வுகள் என்னவகையான முறையியலை - ஆய்வுப்பார்வையைக் கொண்டிருக் கின்றன என்பது பெரிய கேள்வி. தமிழ் ஆய்வுகளில் வெவ்வேறு வகையான இலக்கியவகைப்பாடுகளுக்கும் தனித்தனியான வரையறைகள் இருப்பதான நம்பிக்கைகள் எதுவும் வெளிப்படவில்லை.

தமிழில் எழுதப்பெறும் எல்லாவகையான எழுத்துகளையும் ஒரே அளவுகோல்களால் தான் அளக்கிறார்கள். இதையெல்லாம் ஒழுங்குபடுத்தும் - முறைப்படுத்தும் ஆய்வு மையங்கள் எதுவும் இங்கு இல்லை. இருப்பதாக நம்பிச் செயல்படும் அதிகாரம் இருப்பதாகத் தமிழ்ப்பல்கலைக்கழகம், உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம் போன்றன நினைக்கவுமில்லை. அவைகளும் இன்னொரு பல்கலைக்கழகத்துறைகள் போலவே செயல்படுகின்றன.
இதனைச் சுட்டிக்காட்டவும் எவ்வாறு பார்க்கலாம் என்பதைக் கோடிட்டுக் காட்டவுமான ஒரு வாய்ப்பை ஓர் அறக்கட்டளைச் சொற்பொழிவைப் பயன்படுத்திக்கொண்டேன்.

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்டுள்ள கவிஞர் கவிதாசன் பெயரில் நிறுவப்பெற்றுள்ள அறக்கட்டளை அது. கவிதாசன் அவர்கள் முதன்மையாகத்தன்னை ஒரு தன்னம்பிக்கைப் பேச்சாளராக/ எழுத்தாளராக நம்புகிறார். வெளிப்பட்டிருக்கிறார். 50 நூல்களுக்கும் மேல் அவர் எழுதியதாக அச்சிடப்பெற்றுள்ளது. தொடர்ந்து மறுபதிப்புகளும் கண்டுள்ளன. விற்றுக் கொண்டிருக்கின்றன. தன்னம்பிக்கைக் கருத்துகளை உரைநடையில் சொன்னதையே கவிதை வடிவிலும் சொல்ல முயன்றுள்ளார். அவரது எழுத்துக்களில் திரும்பத்திரும்ப உச்சரிக்கப்படும் சொற்களாக முயற்சி, தன்னம்பிக்கை, வெற்றி என்பன. இந்தச் சொற்களைக் கொண்டு அவர் சொல்லாடும்போது இருப்பைக் குறித்தே பேசுகிறார். உன்னை நீ அறிந்துகொள்; உன் இருப்பை மாற்ற முயற்சி செய்; தன்னம்பிக்கையோடு முயற்சி செய்; வெற்றி உறுதியானது சொல்லும் இந்தச் சொல்லாடல்கள் வெற்றிக்கான வழிமுறைகளைச் சொல்வதில்லை.

இத்தகைய குரல்களுக்கு ஒரு பின்னோக்கிய தடங்கள் இருக்கின்றன. ஆத்திசூடி, கொன்றைவேந்தன் எனப் போய் பின்னிடைக்காலத்தில் எழுதப்பெற்ற நீதிநெறிவிளக்கம், சதகங்கள், எனச் சென்று பதினெண்கீழ்க் கணக்கு நூல்களில் வெளிப்படும் நல்லன எவை? கெட்டன எவை? என்ற தொகுப்புரைகளில் நிலைகொள்ளும். அந்தத்தொகுப்புரைகள் அவ்வக்கால இருப்பை ஏற்றுக்கொண்டு தனிமனித மனங்களுக்கான நினைவுப்பாதையை உருவாக்கித் தருவனவாக இருந்ததை உணர்த்தலாம். இந்த வகையில் - நிலைப்பாட்டில்தான் தன்னம்பிக்கை எழுத்துகளும் இலக்கியமாக அடையாளம் காட்டப்படுகின்றன. அவற்றை இலக்கியம் என்ற தனி அடையாளமாகக் கொள்வதைவிட ‘எழுத்துகள்’ என்ற பொது அடையாளத்துக்குள் நிறுத்திக்கொள்ளலாம்.

எழுத்து வடிவங்கள் படைப்பிலக்கிய வடிவங்களான கவிதை, கதை, நாடகம் என்பன விரிவாகப் பேசவேண்டியவை. தனித்தனியே பேசிக்கொண்டிருக்கிறேன்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தேடிப்படித்த நூல்கள் அல்லது பழைய புத்தகக் கடையில் கிடைத்த நூல்கள்

நாயக்கர் கால இலக்கியங்கள் சமுதாய வரலாற்றுச் சான்றுகளாகக் கொள்வதற்கான முன் தேவைகள்

நாயக்கர் காலம். இயல்.2.பொருளாதார நிலைகளும் உறவுகளும்