தொடக்கநிலைக்கவிதையின் நுட்பங்கள்

 


தமிழ்க் கவிதைகளின் சொல்முறைமை பற்றிய சொல்லாடல்கள் நம்மிடையே அதிகம் இல்லை. திறனாய்வாளர்கள் எப்போதும் கவிதை முன்வைக்கும் கருத்தியல், வாழ்க்கை பற்றிய புரிதல் (த்ரிசனம் என்ற சம்ஸ்க்ருதச் சொல்லால் குறிக்கும் ஒன்று) எனப் பேசுவதையே விவரித்துக் கடக்கின்றனர். கவிதை எழுதத் தொடங்கும் ஒருவர் எதனில் தொடங்கலாம்; அங்கிருந்து எப்படி நகரலாம்? எங்கே நகரமுடியாமல் தத்தளிப்பு உண்டாகும்? அத்தத்தளிப்பின் காரணிகள் எவையெவையாக இருக்கக்கூடும் போன்றன பேசப்பட வேண்டும்.

அண்மையில் நான் வாசித்த இந்தத் தொகுப்பு ஒரு ஆரம்பநிலைக்கவியின் தொகுப்பு என்பதை வயது போன்ற குறிப்புகள் வழி அறிய முடிகிறது என்பதைத் தாண்டி, அவரது சொல்முறையும் உணர்த்துகின்றன. தனது சொல்வடிவமாக மூன்று வரிகள் கொண்ட சிறுவடிவம் எனத்தீர்மானித்துக்கொண்டு எழுதியிருக்கிறார். இச்சிறுவடிவத்தை ஹைக்கூவாக ஏற்றுக்கொண்டுவிட்டது தமிழ் வாசிப்பு உலகம். ஜப்பானிய ஹைகூவில் வடிவம் மட்டுமே முக்கியம் அல்ல. அதில் எழுப்பப்படும் தத்துவக்கேள்வியும், விசாரணைகளின் விரிவும் கூட முக்கியம். அதை முழுமையாகப்பின்பற்றாமல் ஒரு விவரிப்பு அல்லது ஒரு கேள்வி அல்லது ஒரு உணர்வுத்திரட்டி என எழுப்பப்படும் ஒன்றிற்கான விடையாகக் கடைசி வரியை அமைப்பது என்பதாக ஹைகூ வடிவத்தைப் புரிந்து வைத்துள்ளோம்.
புத்தனின் தலையில் நூற்றியெட்டு நத்தைகள் என்ற தலைப்பிட்டு “பூ.தனிக்‌ஷா பாரதி” எழுதித் தொகுக்கப்பட்டுள்ள கவிதைத் தொகுப்பும் அந்தப் புரிதலில் தான் அமைந்துள்ளது. எழுதப்பட்டுள்ளன இக்கவிதைகள் பலவற்றிற்குப் பொதுத்தன்மை இருந்தபோதிலும், குறிப்பான காலப் பின்னணியில் எழுதப்பெற்றவை என்ற குறிப்பு கவனத்துடன் வாசிப்பைக் கோருகின்றன. கோவிட்19 என்னும் பெருந்தொற்றுக்காலத்தில் வீடடங்கலும் ஊரடங்கலும் சூழலாக இருந்த நிலையில் ஒரு பதின்வயதுப் பெண் - பள்ளிப்பருவத்திற்குள் இருக்கும் ஒரு தன்னைச் சுற்றி இருப்பனவற்றையும் நிகழ்வனவற்றையும் கவனித்துள்ளார். கவனித்தவற்றைக் கவித்துவச் சொல்லாக மாற்றும் உத்தி கைவரப்பெற்ற நிலையில் அவற்றைத் தனது வயதுக்கேற்ற ஆச்சரியத்துடனும், இயல்புடனும், விலகலுடன் சொல்லியிருக்கிறார். எந்தவொரு விவரிப்பும் முடிப்பும் வயதுக்கு மீறிய ஒன்றாக இல்லாமல் பதின்பருவத்திற்குரிய ஒன்றாகவே வெளிப்பட்டுள்ளது. தனது பார்வைக்குள் வந்த நிகழ்வுகளைக் கவிதையாக்கும் தீவிரம் இத்தொகுப்பு முழுவதும் வெளிப்பட்டுள்ளது.
சொற்களைக் கவிதைச் சொற்களாக்கும் லாவகம் கைவரப்பெற்ற தனிக்‌ஷா பாரதி, பருவத்தைத் தாண்டிப் புதிய வாழ்வனுபவங்களுக்குள் நுழையும் போது, புதிய கவிதை வடிவங்களைத் தேர்வு செய்யக்கூடும். அப்போது இந்தக் கவிதைகளில் திரளாத உணர்ச்சிக் குவியல்களும், சிடுக்குகளும் அவரது கவிதையின் உரிப்பொருள்களாக மாறும் வாய்ப்புகளுண்டு. அவரது விவரிப்பையும் மெய்ப்பாட்டுருவாக்கத்தையும் சில கவிதைகளை மட்டும் இங்கே வாசிக்கத் தருகிறேன்.
தூக்கமில்லா இரவு
வானெங்கும் வரையப்படும்
கோலங்கள்

 

தலைகீழ் குடையில்
நிறைகிறது
மழை

 

கிழிக்கப்படாத நாட்காட்டி
கடந்த கால நினைவுகளின்
படபடப்பு

 

எதைத் தேடுகிறது..?
தெருவின் ஒவ்வொரு வீட்டினுள்ளும்
எட்டிப்பார்க்கும் நாய்க்குட்டி

 

குப்பை மேட்டு சுவர்
மறுபுறத்தில்
பூந்தோட்ட சுவர் .

 

பலூன் வெடிப்பின் அழுகுரல்
சமாதானம் செய்யும்
கடலலைகள்

 

இலையுதிர் காலங்களில்
இலைகளாகின்றன
பூச்சிகள்

 

உறங்குவதற்கு சில நொடிகள் முன்
மனதின் கண்கள் வழியே ஒளிபரப்பாகும்
எதிர்காலச் செய்தி

 

சில்லென்ற மார்கழி காலை
கைகள் குளிர் காய்கின்றன
விளக்கு ஒளியில்

 

காய்ந்த மரத்தின்
கிளைகள் முழுக்க
பழுத்த பழங்கள்
====================================
புத்தனின் தலையில் நூற்றியெட்டு நத்தைகள்
பூ.தனிக்ஷா பாரதி
பொள்ளாச்சி இலக்கியவட்டம்,பொள்ளாச்சி
ஏப்ரல், 2022

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தி.சு.நடராசனின் திறனாய்வுப் பார்வைகள் :தமிழ் அழகியல், தமிழகத்தில் வைதீக சமயம்

உடல் மறுப்பு என்னும் பெரும்போக்கு

கற்றல் - கற்பித்தல்: மாணவ ஆசிரிய உறவுகள்