வகைப்படுத்துதல் வெளிப்பாடுகள்

தனது கவிதைகளை வாசிக்க நினைக்கும் வாசகருக்கு ஏதாவது ஒருவிதத்தில் உதவவேண்டும் என்று பெரும்பாலான கவிகள் நினைப்பதில்லை. கால வரிசையில் அடுக்கப்படும் கவிதைகள் கூடக் கவிதையை எழுதிய கவியின் மனப்பாங்கு மாற்றத்தைப் புரிந்துகொள்ள உதவும். அதைத் தாண்டி வகைப்பாடு செய்வதற்குச் சில அடிப்படைகள் இருக்கின்றன. அவற்றில் ஏதாவதொன்றைப் பின்பற்றலாம். அதனைக் குறிப்பிட்டுச் சொல்லிவிட்டால் வாசிப்பவர்கள் அதனைப் பின்பற்றிச் செல்வார்கள்.
இம்மூன்று தொகுதிகளும் அண்மையில் வாசித்த விருப்பமான தொகுதிகள். அவற்றை வாசித்தபோது அவற்றின் பதிப்பு வரிசைக்குள் வாசிப்பவர்களுக்கு உதவும் ஓரம்சம் வெளிப்பட்டுள்ளதைக் கவனிக்க முடிந்தது. குறிப்பிட்ட கால எல்லைக்குள் தான் எழுதிய எல்லாவற்றையும் எந்தவிதமான பகுப்பு முறையையும் பின்பற்றாமல் வரிசைப்படுத்தித் தரும் பொதுப்போக்கு இவற்றில் இல்லை. கூடியவரை கவிதைக்குள் இயங்கும் உரிப்பொருள் சார்ந்தோ, வெளி சார்ந்தோ, உணர்வுவெளிப்பாடு சார்ந்தோ தனித்தொகையாக்கித் தொகுதிக்குள் பிரித்துத் தந்துள்ளனர். இந்த முயற்சியில் இளங்கோ கிருஷ்ணனின் “ வியனுலகு வதியும் பெருமலர்’ சிறந்த முன் மாதிரியாக விளங்கியுள்ளது. 
1.பசியின் கதை, 
2 மரணத்தின் பாடல்கள், 
3. பேரன்பின் வேட்டை நிலம், 
4 எனும் சொற்கள், 
5 நீர்மையின் பிரதிகள் என ஐந்து பகுப்புக்குள் கவிதைகளை
 உள் தொகுப்பாக்கித் தந்துள்ளார். இந்த உள் தொகுப்புத் தலைப்புக்கு மனதைத் தயார்ப்படுத்திக் கொண்டு நுழைபவர்கள் அவற்றை ஒரே மூச்சில் வாசித்துவிட்டு அசை போட்டுக்கொள்ளலாம். இவ்வுள் தொகுப்பு அதற்குள் இருக்கும் கவிதைகளுக்குள் செயல்பட்டுள்ள விதம் குறித்துத் தனித்தனியாக விவாதித்துக் கொள்ளலாம். அப்படி விவாதிக்க வேண்டிய தொகுப்பு இளங்கோ கிருஷ்ணனின் தொகுப்பு.

இதைப் போலவே உள் தொகுப்புக்கூறுகளோடு உள்ள மற்றொரு தொகுப்பாக இன்பாவின் “லயாங் லயாங் குருவிகளின் கீச்சொலிகள்” தொகுப்பும் உள்ளது. 1. வலசைத் திணையின் கீச்சொலிகள், 
2 யாய் திணையின் எச்சங்கள், 
3. திணையற மொழிதல், 
4. அகத்திணைச் சொற்களின் சலனங்கள் என்பன அதில் உள்ள உள் தொகுப்புகள். திணையென்னும் சொல்லை வெளியாகவும் உரிப்பொருளின் வெளிப்பாடாகவும் படிமங்களாகவும் உருவகித்துக்கொண்டு தொகுப்பாக்கியுள்ள தன்மையை இதில் பார்க்க முடிகிறது. இவ்விரு தொகுப்புகளையும் யாவரும் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

தமிழ்வெளி வெளியிட்டுள்ள எம்.டி.எம்மின் “ ஒரு படிமம் வெல்லும் ஒரு படிமம் கொல்லும்” தொகுதிக்குள் எட்டுப் பகுதிகள் தனித்தலைப்புகளோடு பிரிக்கப்பட்டுள்ளன. கண்ணிமையின் அசைவுகள், மருள்த்தோற்றங்கள், நீ நான் நிலம், பித்து பிறை பிதா, கர்மவினை, புத்துயிர்ப்பு, சிதறல்களின் குறுங்கவிதைகள், நகரம் என்ற தலைப்புகள் படிமங்களாகவும் கவியின் மனநிலையாகவும் நம்பிக்கைகளாகவும் விசாரணைகளாகவும் இருப்பதைச் சுட்டிக் காட்டுகின்றன. உள் பகுப்புத் தலைப்பில் இருக்கும் இறுக்கம், நோக்குநிலை போன்றன வாசிப்பவர்களுக்குப் பெரிதும் உதவக்கூடியன.

**************

வகைப்படுத்தும் முயற்சிகள் ஒவ்வொரு தொகுப்பின் கவிதைகளுக்குள்ளும் செயல்பட்டுள்ள விதத்தைத் தனியாக எழுதவேண்டும். அதனை விரித்து எழுதும்போது தமிழ்க் கவிதையியலின் தனித்தனிப்போக்குகள் குறித்த பார்வையாக அமையும். விரைவில் அதனைச் செய்யவேண்டும். இப்போது நடக்கும் புத்தகக் கண்காட்சிகளில் இத்தொகுப்புகள் கிடைத்தால் வாங்கி வாசித்துப் பாருங்கள் மூன்றும் கவனப்பட வேண்டிய தொகுப்புகள். பின்குறிப்பு:நிறைய எழுதுவது பற்றிப் பலருக்கும் பலவிதமான கருத்துகள் இருக்கின்றன. அதிலும் கவிதையில் செயல்படுகிறவர்கள் நிறைய எழுதிக் குவிக்கக் கூடாது என்ற மனோபாவம் இங்கே உருவாக்கிப் பரப்பப்படுகின்றது. இலக்கிய வகைமைக்குள் கவிதை உயர்வானது என நினைப்பதும், அதில் செயல்படுபவர்களின் படைப்பாற்றல் ஒருவிதமான வரம் என்று நினைப்பதும் அந்த மனோபாவத்தின் பின்னே இருப்பதாகச் சொல்லலாம். தனது தன்னிலையின் இருப்பை -மனப்போக்கைச் சூழலோடு இணைத்துப் பயணிக்க வைக்கும் ஒருவருக்குத் தான் தேர்வுசெய்து இயங்கும் இலக்கிய வகைமையின் வழியாக வெளிப்படுவதே இயல்பானது.

*****************
வகைப்படுத்துதலும் தொகைப்படுத்துதலும் -மனுஷ்யபுத்திரனின் 11 தொகுதிகள்

தனது மனதைக் கவிதையின் கட்டமைப்பான பாங்கில் வைத்திருக்கும் ஒருவரால் தொடர்ச்சியாக எல்லாவற்றையும் கவிதை வடிவத்திலேயே சொல்ல முடியும். தமிழில் அதற்குப் பல எடுத்துக்காட்டுகள் இருக்கின்றன. அந்த எடுத்துக்காட்டுகளைப் பெரும்பாலும் நவீனத் தமிழ் இலக்கியப் பரப்பிலேயே காட்ட முடியும். நம் காலத்தில் அப்படி வெளிப்பட்டுக்கொண்டே இருப்பவர் கவி. மனுஷ்யபுத்திரன்.

மரபு இலக்கியப் பரப்பில் யாப்பில் எழுதித் தன் காலத்தின் பலவற்றைப் பேசிய ஒன்றிரண்டு பெயர்களை மட்டுமே சுட்டிக்காட்ட முடியும். உ.வே.சாமிநாதய்யரின் ஆசிரியரான மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை ஒரு எடுத்துக்காட்டு. அவருக்கு முன்னால் குமரகுருபரர். இவர்கள் இருவருமே தொண்ணூற்றாறு வகைப் பிரபந்தங்களின் இலக்கணங்களை உள்வாங்கி அவற்றின் ஏதாவதொரு வடிவில் எழுதியவர்கள். அங்கிருந்து உடைத்துக் கொண்டு வெளியே வந்தவன் பாரதி. அதன் காரணமாகவே நவீனத்தமிழ் இலக்கியம் பாரதியில் தொடங்குவதாகச் சொல்கிறோம்.

யாப்பு வழியான வெளிப்பாட்டு முறையிலிருந்து விடுபட்ட காலம், தமிழ் எழுத்துப் பரப்புக்கு விடுதலை கிடைத்த காலம். அதுவரை ஒருவரை ஏதாவதொன்றின் – ஒரு இலக்கிய வகைமையின் – வழியாகவே அடையாளப்படுத்திக் கொண்டிருந்தோம். ஆனால் நவீனத்துவம் அதனை அடியோடு மாற்றியது. எமக்குத் தொழில் கவிதை எனப் பிரகடனம் செய்த பாரதிகூடக் கவிதைக்குள் மட்டுமே நின்று விடவில்லை. பத்திரிகைப் பணி காரணமாக ஏராளமான கட்டுரைகளையும் துணுக்குகளையும் எழுதிக் குவித்திருக்கிறார். அதிலிருந்தும் விலகிப் புனைகதை வடிவங்களான சிறுகதைகளையும் சந்திரிகையின் கதை போன்ற நெடுங்கதையையும் முயன்று பார்த்திருக்கிறார். உரைநடை வெளிப்பாட்டுக் கருவியாக ஆனபின்பு எழுத்தாளர்கள் பலப்பலவாய் வெளிப்படுவதையே விரும்புகிறார்கள்.

பெரும்பாலும் பதின்வயதுகளில் எழுதத்தொடங்கும்போது கவிதையில் தொடங்கிப் புனைகதை, கட்டுரை, விமரிசனம் என நகர்ந்தவர்களே தமிழ் இலக்கியத்தில் சாதித்தவர்களாக – ஆளுமைகளாக அறியப்படுகின்றார்கள். இப்போதைய தமிழ் எழுத்துப் பரப்பில் ஒருவரை ஒரேயொரு வகைமையில் மட்டுமே செயல்பட்டவர் என அடையாளப்படுத்த முடியாத அளவுக்கு ஒருவரது அடையாளங்கள் மாறிக் கொண்டிருக்கின்றன. கவிதை, கதை, நாடகம், கட்டுரை என எழுதுவதற்கான வகைமையைத் தேர்வுசெய்துகொள்வது திட்டமிட்டும் நடக்கலாம்; திட்டமிடாமலும் நடக்கலாம். தொடர்ச்சியாக ஒருவர் அவ்வகைமைக்குள் இயங்குவதன் மூலம் தன்னைக் கவியாகவோ, கதை எழுதுபவராகவோ, நாடகாசிரியராகவோ, கட்டுரையாளராகவோ ஏதாவதொரு வகைமைக்குள் தன்னை நிறுவிக்கொள்ள முடியும். ஒருவர், தேவை கருதியோ, சூழல் தரும் நெருக்கடியாலோ மேலும் முயன்று இன்னொன்றுக்குள்ளும் தன்னை நிலைநிறுத்தும் வேலைகளைச் செய்துகொள்கிறார்.

நிகழ்காலத்தில் தமிழின் பெருங்கவிஞன் மனுஷ்யபுத்திரன். எப்போதும் ஆண்டுக்குச் சில நூறு கவிதைகள் எழுதும் மனுஷ்யபுத்திரன் பெரும்பாலும் பெரும்பெரும் தொகுதிகளாகவே வெளியிட்டுக் கொண்டிருந்தார். 400 கவிதைகள், 500 கவிதைகள் கொண்ட அப்பெரும் தொகுதிகளை வாசித்து ஒரு விமரிசனக் குறிப்பு எழுத முடியாமல் தவித்ததுண்டு. அவரிடமே சொல்லியிருக்கிறேன். அவருடைய பெருந்தொகுப்புகளை மட்டுமல்ல, சில பத்துக் கவிதைகள் கொண்ட ஒருவரின் கவிதைத் தொகுதிகளை வாசிக்கும்போதும் இந்த நிலைமை ஏற்படுவதுண்டு. எப்போதும் பிரதியாக்க முறைமை, அதற்கான தூண்டுதல், அதனைத் தனது வாழ்வியல் மற்றும் அழகியல் வெளிப்பாடாக மாற்றும் திறன் பற்றிப் பேசும் கவிதை விமர்சகர் ஒருவர், தமிழில் வரும் கவிதைத் தொகுதிகளைப் பற்றிப் பேசுவதில் இந்தச் சிக்கலை எதிர்கொள்ளாமல் தப்பிக்க முடியாது.

ஓராண்டில் எழுதிய கவிதைகளின் எண்ணிக்கை நூறுகளின் பெருக்கமாக இருந்ததை இந்த ஆண்டு (2019) ஆயிரங்களின் பெருக்கமாக மாற்றியிருக்கிறார். அதனைத் தொகுத்து வெளியிடும்போது வாசகர்களுக்கு உதவும் சிறு முயற்சியையும் செய்திருக்கிறார். வரவேற்கத் தக்க முயற்சி அது. 2019 ஆம் ஆண்டில் எழுதிய 2000 -க்கும் அதிகமான கவிதைகளைச் சில பொருண்மை அடிப்படையில் வகைப்படுத்திப் பதினோரு தொகுதிகளாகப் பதிப்பித்துள்ளார்.
1.இரவுக்கு கைகள் இல்லை (கையறுநிலையின் புத்தகம்)
2.ஒரு நாளில் உனது பருவங்கள் (இருத்தலின் புத்தகம்
3.சினேகிதியின் காதலர்கள் (நம் காதல்களின் புத்தகம்)
4.தரைக்கு வராத இலைகள் (தனிமையின் புத்தகம்)
5.தீண்டி விலகிய கணம் (அன்பின் புத்தகம்)
6.தேசவிரோத மலர் (எதிர்ப்பின் புத்தகம்)
7.மனத்தில் அமரும் கிளி (காட்சிப்பிழையின் புத்தகம்)
8.மர்ம முத்தம் (விசித்திர காலத்தின் புத்தகம்)
9.மௌனப் பனி( மரணத்தின் புத்தகம்)
10வாதையின் கதை (சிகிச்சையின் புத்தகம்)
11.வைரல் யானை (காலத்தின் புத்தகம்)
பொருண்மையைச் சிறுதலைப்பாக்கித் தொகுதியின் தலைப்பைப் பெரிதாக்கிப் பதிப்பித்துள்ள 11 தொகுதிகள் ஓராண்டில் எழுதப்பட்டவை என்பது ஒரு கவியின் பெரும்சாதனை.இந்த வகைப்பாடு செய்ய வேண்டிய வேலை. வாசிப்பவர்களுக்கும் பேச நினைப்பவர்களுக்கும் பேரளவு உதவும். இத்தொகுதிகளில் பெரிதாகவும் அடைப்புக்குறிக்குள் சிறிதாகவும் அச்சிடப்பெற்றுள்ள் சொற்கள் கவிதை வாசகர்களுக்கு ஒரு திறவுகோலாக இருக்கின்றன. சில தலைப்புகளில் கொஞ்சமும் மர்மங்களும் ரகசியங்களும் பொத்தி வைக்கப்பட்டிருந்தால் பல்வேறு வகைப்பட்ட பூட்டுகளைத் திறக்கும் அனுபவத்திற்கு இட்டுச் செல்கின்றன. யானையைத் தடவிப்பார்க்கும் பார்வையற்றவர்களாக இல்லாமல், காதுகளின் அசைவு தரும் காற்றில் மிதக்கிறேன் என்றும், வாலில் வீச்சு உருவாக்கிய வலியில் துடிக்கிறேன் என்றும் உணரமுடியும்.
நேற்று நான் தோன்றிய காட்சியில்
என் சட்டை பட்டனை மாற்றிப்போட்டிருந்தத
நான் கவனிக்கவே இல்லை
இன்று காலை நான் தோன்றிய காட்சியில்
என் காதோர தலைமுடி படியாமல் இருந்திருக்கிறது
கடந்த வாரம் இரண்டு மாறுபட்ட வண்ணமுள்ள
சாக்ஸ்களை அணிந்திருந்த தை
சிலர் உற்று நோக்கினார்கள்
கைக்கடிகாரத்தை இட து கரத்திற்குப் பதில்
வலதுகரத்தில் தவறுதலாக அணிந்த நாளில்
காலத்தை அது சரியாக காட்டியபோதும்
ஏன் என்னை விசித்திரமாக
பார்த்தார்கள் எனத் தெரியவில்லை
நன்கறிந்த ஒருவரை
வேறு பெயர்சொல்லி அழைக்கும் பிழைகள்
இப்போது அடிக்கடி நிகழ்கின்றன.
நான் இன்று செவ்வாய்க்கிழமை என்பதை மறந்து
ஞாயிற்றுக்கிழமைக்கான தூக்கத்தில் ஆழ்ந்திருக்கிறேன்
நான் ஒவ்வொரு நாள் காலையிலும்
வழியெங்கும் உதிரும் மலர்
எந்த ஒழுங்கில் உதிர்வதென
எனக்குத் தெரியவில்லை
இன்னும் நிறைய குழப்பங்கள் இருக்கின்றன
என் வாழ்க்கையை
ஒழுங்குபடுத்திக்கொள்ளவே விரும்புகிறேன்
இப்போது அல்ல
அடுத்த நூற்றாண்டில்
இரவுக்குக் கைகள் இல்லை எனத் தலைப்பிட்டுள்ள கையறுநிலைப் புத்தகத்தில் (பக்.102-103) உள்ள இந்த ஒருகவிதையை வாசிக்கும்போது தமிழ்ச் செவ்வியல் கவிதை மரபில் இருக்கும் பாரி மகளிரின் அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில் என்ற கவிதை எழுப்பும் தொனியும், கணியன் பூங்குன்றனின் பெரியோரை வியத்தலும், சிறியோரை இகழ்தலும் தரக்கூடிய அர்த்தங்களும் நினைவில் வரும் வாய்ப்புண்டு. தொடர்ச்சியாகக் கவிதைகளை வாசிப்பவர்களுக்குக் ‘கையறு நிலையின் புத்தகம்’ என்ற குறிப்பு பயன்படாமல் போகலாம். ஆனால் மரபின் வழியாக வாசிப்புக்குள் நுழையும் கல்விப்புல மாணவர்களுக்கு இந்தக் குறிப்பு பெரிதும் பயன்படும் என்றே சொல்வேன். இதேபோல் ஒவ்வொரு தொகுப்பும் எந்தெந்த வகையில் கடந்த காலத்திலிருந்து நிகழ்காலத்தின் வழியாக எதிர்காலத்திற்கு நகர்கிறது என்பதைப் பேச நினைக்கும்போது கவியும் – கவிதைகளைப் பதிப்பிக்கும் பதிப்பாசிரியரும் உதவி செய்வதில் பிழையொன்றும் நேரப்போவதில்லை.

*********
தமிழ்க் கவிதைகளின் பதிப்பின் வரலாறே தொகை நூல்களின் கிளைகளால் நிரப்பியிருக்கும் தோப்புதான். எல்லா மொழியிலும் தொகைப்படுத்துதலின் பின்னணியில் பொதுநிலையிலான ஒரு காரணமும் சிறப்பு நிலையிலும் சில காரணங்களும் செயல்படுகின்றன. பொதுவான காரணமாக இருப்பது ஆவணப்படுத்துதல். குறிப்பிட்ட காலகட்டத்து எழுத்துகளைத் தொகுத்துப் பின்னர்வரும் சந்ததியினருக்குத் தரவேண்டும் என்னும் நோக்கத்தில் தொகை நூல்களைச் செய்திருக்கிறார்கள். அவற்றில் கிடைப்பனவெல்லாம் சேர்க்கப்படும் என்ற போக்கு இருக்கும். அதே நேரத்தில் அவ்வகைத் தொகைநூல்களுக்குள் சில நுட்பங்களும் செயல்பட்டிருக்கின்றன என்பதையும் தொகைநூல் வரலாறு நமக்குச் சொல்கிறது.
அகம், புறம் எனப் பாடுபொருள் அடிப்படையிலும் அதற்குள் அடையாளப்படும் உரிப்பொருள் அடிப்படையிலும் செய்யப்பட்ட தொகை நூல்களே தமிழ்ச் செவ்வியல் கவிதைகள். அடிவரையறைகளும்(ஐங்குறுநூறு, குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு) கவிதை நுட்பங்களும் (அகநானூற்றின் களிற்று யானை நிரை, மணிமிடைப்பவளம், நித்திலக்கோவை) நிலவியல் அடையாளங்களும் (குறிஞ்சிக்கலி, முல்லைக்கலி, மருதக்கலி, நெய்தல்கலி, பாலைக் கலி) உட்பிரிவுகளுக்குக் காரணங்களாக இருந்திருக்கின்றன. பெரும்பாலும் பத்து அல்லது நூறின் மடங்குகளின் (100, 150, 400, 500) அடிப்படையில் செவ்வியல் கவிதைகளும் அறநெறிக் கவிதைகளும் தொகுக்கப்பட்டுள்ளன.
பக்திக் கவிதைகளில் அவை ஆயிரங்களாகியிருக்கின்றன. பக்திக் கவிதைக்குள் சைவப் பக்தி நாயன்மார்களின் தேவாரமாகவும் வைவணவப்பக்தி ஆழ்வார்கள் திவ்யப்பிரபந்தமாகவும் ஆகியிருக்கின்றன. சித்தர்களின் பாடல்களும் தனிப்பாடல் திரட்டுகளும் பெருந்தொகை நூல்களாகக் கிடைக்கின்றன. சிற்றிலக்கியங்கள் ஒவ்வொன்றும் பரணி, உலா, பிள்ளைத்தமிழ், பள்ளு, குறவஞ்சி என வகைமைசார்ந்த பிரிவுகள்,என நீண்டுவந்து 18 ஆம் நூற்றாண்டுத் தனிப்பாடல் திரட்டு வரையிலும் பொருண்மை அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டுத் தொகைநூல்களாகவே கிடைக்கின்றன.
இந்த மரபின் தொடர்ச்சியை இக்கால இலக்கியத்தின் ஆரம்பக்காலத்திலும் பார்க்க முடிகிறது. ஆனால் முழுமையாக இல்லை. பொதுநிலைக்காரணங்கள் மட்டுமே தூக்கலாக இருக்கின்றன. சிறப்பான காரணங்கள் எதுவும் பின்பற்றப்படவில்லை. எழுத்துக் கவிதைகள் புதுக்குரல்களாகத் தொகுக்கப்பட்டதும் வானம்பாடிக் கவிதைகள் வெளிச்சங்கள் எனத் தொகுக்கப்பட்டதையும் அறிவோம். அத்தொகை நூல்களில் இருவேறு கவிதைப்போக்குகள் வாசிக்கக் கிடைக்கின்றனவே தவிர அவற்றுள் இடம்பெற்ற கவிகளின் தனித்தன்மை, உரிப்பொருள் தேர்வு, வெளிப்பாட்டுத் திறன் சார்ந்த குறிப்புகள் எதுவும் இடம் பெறவில்லை. அதனை இடம்பெறச் செய்ய வேண்டுமென்றால், பதிப்பாசிரியர் அல்லது பதிப்புக்குழுவுக்குச் சில அடிப்படைக் கருத்தாக்கங்கள் வேண்டும். அதனை உள்வாங்கிப் பதிப்பாக்கியிருக்க வேண்டும். அப்படித் தரவேண்டுமெனச் சி.சு.செல்லப்பாவும் ஞானியும் நினைக்கவில்லை.
19 ஆம் நூற்றாண்டின் இறுதிக்கட்டத்தில் தான் -பாரதி தொடங்கி ஒவ்வொருவரையும் வகைமை அடிப்படை அல்லது பொருண்மை அடிப்படை இல்லாமல் தனி ஆசிரியர் அடிப்படையில் நூலாக்கங்கள் நடந்தன. நவீனத்துவத்தின் அடிப்படையே - தனிமனிதனின் தன்னிலையை நிலைநிறுத்தல் என்னும் இயல்புதான். அதற்கேற்பவே ஆசிரியத் தொகுதிகள் அச்சாக்கம் பெற்றன. அவற்றிலும் பொருண்மைசார்ந்த வகைமைப் பிரிப்பு பதிப்பாசிரியர்களால் செய்யப்பட்டு வாசிக்கக் கிடைக்கின்றன. இந்தப் பகுதிக்குள் இந்த இந்த பொருண்மையிலான கவிதைகளை வாசிக்க நுழைகிறேன் என்ற திறப்பு கிடைப்பதால் அப்படியான தொகுப்புகளை வாசிப்பதில் பெரும் சிரமங்களை வாசகர்கள் எதிர்கொள்வதில்லை. பாரதி, பாரதிதாசன், கவிமணி, நாமக்கல் கவிஞர், கண்ணதாசன் போன்றோரின் பெருந்தொகுப்புகளுக்குள் வாசிக்க நுழையும் ஒருவருக்குச் சில திறப்புகள் கிடைக்கும்.
புதுக்கவிதைத் தொகைநூல்களும் தனி ஆசிரியத்தொகுதிகளும் வகைப்படுத்தித் தருவதை நிராகரித்துவிட்டு, வாசகர்களைத் திணறடிக்கும் வேலையைச் செய்தன. “ எனது எழுத்துகளுக்குள்/ கவிதைகளுக்குள் என்ன இருக்கிறது?” என்று கண்டுபிடிப்பதுதான் உனக்கு நான் வைக்கும் தேர்வு அல்லது சவால் என்பதுபோல எந்தக் குறிப்பும் இல்லாமல் பதிப்பிக்கப்பட்டன. சில கவிதைகளுக்குத் தலைப்புகூட இருப்பதில்லை. அந்த நிலையில் வாசிக்க நினைப்பவர்கள் தடுமாறிப் பின் தங்கிவிடுவார்கள். சி.சு. செல்லப்பாவின் எழுத்து இதழிலிருந்து தொகுக்கப்பட்ட ‘புதுக்குரல்கள்’ தொகையையும் வானம்பாடி இதழிலிருந்து தொகுக்கப்பட்ட ‘வெளிச்சங்கள்’ தொகையையும் பட்டப் படிப்பிலும் முதுகலையிலும் மாணவனாகப் படித்த போதும், பின்னர் ஆசிரியராகப் பாடம் சொல்லிய போதிலும் இதனை நானே உணர்ந்துள்ளேன். அப்போதெல்லாம் இந்தக் கவிதைகளுக்கும் செவ்வியல் கவிதைகளுக்குத் திணை, துறைக் குறிப்புகள் எழுதப்பட்டதுபோல எழுதப்பட்டிருக்கலாமே என்று தோன்றியதுண்டு. சில கவிஞர்களின் கவிதைகளுக்கு விமரிசனக் குறிப்புகள் எழுதியபோது குறிப்பிட்டதுமுண்டு. என்றாலும் புதுக்குரல்களின் வாரிசுகள் வாசிப்பவர்களுக்குச் சவால் விடுவதை நிறுத்தியதில்லை. புதுக்குரலில் இடம்பெற்றுள்ள கவிகளில் பலருக்கும் தமிழ் மரபுச் செயல்பாடுகள் மீது ஒவ்வாமையும் விலகலும் இருந்தன. தமிழின் தொன்மை, தமிழ் மரபு, தமிழ் இலக்கியவியல் போன்றவற்றை ஏற்காது, மேற்கத்திய இலக்கியவியலோடும் சம்ஸ்க்ருதக் கவிதையியலோடும் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ள விரும்பியவர்கள். வெளிச்சங்கள் தொகுதியில் தங்கள் கவிதைகளை இடம்பெறச் செய்த பலரும் தமிழ் இலக்கியக் கல்வியில் பயிற்சியுடையவர்கள் என்றபோதிலும் மரபைச் சுமையாக மட்டுமே கருதியவர்கள். அவர்களின் ஈடுபாடும் அடையாளங்களும் இடதுசாரி இலக்கியவியல் சார்ந்தே இருந்தன.
இதே நேரத்தில் ஈழத்துக் கவிதைகள் தொகைகளாக வரும்போது அந்த சிக்கல் எழவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும். முதலில் கிரியாவின் வழியாக வந்த பதினொரு ஈழத்துக்கவிஞர்கள் அறிமுக நிலையில் இருக்க, மரணத்துள் வாழ்வோம், வேற்றாகி நின்ற வெளி, சொல்லாத சேதிகள் போன்ற தொகுப்புகள் குறிப்பான பொருண்மைகளில் தொகுக்கப்பட்டு வாசிப்பவர்களுக்குத் திறப்புகளை உருவாக்கின. 35 ஆண்டுகாலப் போரின் உடன் விளைவான இடப்பெயர்வுகளும் புலம்பெயர்வுகளும் பல்வேறு வகையான தொகைநூல்களைத் தமிழ் நூல்பரப்பில் வாசிப்புவெளியிலும் விரித்து வைத்திருக்கின்றன.

இந்தப் புரிதல்களும் விருப்பங்களும் இல்லாமலேயே தமிழ்நாட்டுப் பதிப்பாளர்கள் பெருந்தொகை நூல்களை அவரவர் விருப்பபடி அச்சிட்டு வெளியிடுகின்றனர். அவை சாக்கு மூட்டையில் கட்டியனுப்பப்படும் சரக்குகளாகவோ இருக்கலாம். இல்லையென்றால் ட்ரங்குப் பெட்டியில் பூட்டி வைக்கப்பட்ட பத்திரங்கள் என்றும் சொல்லலாம்

மனுஷ்யபுத்திரனின் கிளிக்காவியம்:
==================================== 2016, அக்டோபர்

புனைகதை வாசிப்பிலிருந்து கவிதை வாசிப்பு வேறுபட்டது என்ற நம்பிக்கை எனக்குண்டு.
நீண்ட கவிதை வரலாறு கொண்ட தமிழ்க் கவிதைகளை வாசிக்கும்போது அதற்கான முன்மாதிரிகளைத் தேடுவதில்லை. என்னளவில் தமிழ்க்கவிதை தனித்தனிப்போக்கைக் கொண்டவை. வெவ்வேறு காலகட்டத்தில் தோன்றிய கவிதைகள் வடிவத்திலும், முன்வைப்புகளிலும் தொடர்பற்றவைகளாக இருக்கின்றன. மரபுக்கவிதைகளில் ஒவ்வொரு வகையினமும் சில நூறாண்டுகளைத் தனக்கானதாகக் கொண்டிருந்தன, ஆனால் வடிவமாற்றத்தோடு அறிமுகமாகிப் புதுக்கவிதைகளென அழைக்கப்பட்ட நவீனக்கவிதைகள் அவ்வளவு நீண்ட காலத்தை எடுத்துக்கொள்ளவில்லை. அதிக அளவாகப் பத்தாண்டுகள்கூட ஒருவகை முன்வைப்புக்கில்லை. திட்டமிட்ட இயக்கமாகச் செயல்பட முனைந்த வானம்பாடிகளின் வாழ்நாளும்கூடப் பத்தாண்டுகள் இல்லை. எழுத்துப்பாணிக் கவிதைகளுக்கும் அதுதான் நிலை. நவீனக் கவிதைகளின் முன்மொழிவுகள் எப்போதும் தற்செயல் தன்மை அல்லது தற்காலிகத் தன்மைகளோடு நகர்ந்துவந்துள்ளன.
ஒரு புனைகதையை வாசித்தவுடன் அந்தப் புனைகதைக்கு ஒரு முன்மாதிரியை நினைத்துக்கொள்வேன். அந்த முன்மாதிரி எழுப்பிய முன்மொழிவை இந்தப் புனைகதைத் தாண்ட நினைக்கிறதா? நீட்டிக்க விரும்புகிறதா? முன்மாதிரியை உருவாக்கும் நோக்கம்கொண்டதா? என்று யோசிப்பேன். அப்படியொரு யோசனையை மனுஷ்யபுத்திரனின் கிளிக்காவியம் எனக்குள் உருவாக்கியது. ஆனந்த விகடனில் 14 பக்கங்களில் விரவிக்கிடக்கும் கிளிக்காவியத்தின் இரண்டு பக்கங்களை வாசித்தவுடன் அதற்கொரு முன்மாதிரி தமிழில் இருப்பதாகத் தோன்றியது. நினைவுக்கு வந்த அந்தக் கவிதை ந.பிச்சமூர்த்தியின் கிளிக்கூண்டு பெயராக மட்டுமல்லாமல் சொல்முறையும்கூட நினைவில் வரக்காரணம். தேடிப் பக்கத்தில் வைத்துக்கொண்டு இரண்டையும் வாசித்தேன்.

கிளிக்காவியத்திற்கும் கிளிக்கூண்டிற்குமிடையே அடிப்படையான வேறுபாடொன்று உண்டு. மனுஷ்யபுத்திரனின் கவிதை கிளிகளை மனிதனின் புறத்தே நிறுத்துகிறது. ந.பிச்சமூர்த்தியின் கிளிக்கூண்டு, கிளியை மனிதனின் அகத்தே அலையும் ஒன்றாக நிறுத்தியுள்ளது. கிளியின் இடம் இரண்டு கவிதைகளிலும் வேறுவேறு என்றாலும் கவிதைச்செயலை நகர்த்த உதவும் சொற்கள் வழி உருவாகும் தொனியும் மெய்ப்பாடுகளும் ஒத்தனவாக இருக்கின்றன.

கிளியாக அலையும் ஆன்மாவைக் கூண்டாகிய உடலில் சுமந்தலையும் மனிதனின் விடுதலையை ஆன்மீகத் தேடலின் பரிமாணங்களோடு முன்வைக்கும் ந.பிச்சமூர்த்தியின் தொனியைப் பற்றிக்கொண்ட மனுஷ்யபுத்திரன், தனது கவிதைகளின் இயக்கநிலைக்கேற்ப வேறு தளத்திற்கு நகர்த்திவிடுவதைச் சரியாகச் செய்துள்ளார். வளர்ப்புக்கிளிகள் கிளிகளாகவும் இருக்கின்றன; மனிதச் சாயல்களோடும் இருக்கின்றன. நடப்புச் சூழலோடும், வாழ்க்கையின் சிக்கலான கேள்விகளோடும் கிளிகள் அடைபட்டுக்கிடக்கின்றன கூண்டுக்குள்.

மனிதர்கள் ஏன் பறவைகளையோ, நாய், பூனை போன்ற பிராணிகளையோ வளர்க்கவேண்டும்? அவர்களின் இரக்கத்தைக் காட்ட வேறுமார்க்கங்கள் இல்லையா? அப்படி வளர்ப்பதென்பது வளர்க்கமுடியாத மனிதர்களைக் குற்றவுணர்வுக்குள் தள்ளும் நோக்கம் கொண்டதா? அல்லது தனக்குக் கிடைக்காத பற்றுக்கோடொன்றைத் தேடும் மனநிலையா? இப்படியான கேள்விகளை எழுப்பிக்கொண்டிருக்கும் கவிதைக்குள் அடைகாக்கப்படும் மூன்று கிளிகளின் ஆறு இறகுகளின் வழி தொடர்கிறது இன்னொருவகையான ஆன்மத்தேடல்.

தன்னையே இரண்டாகப் பாவிக்கும் கவிதைச்செயலின் தொடர்ச்சியாக இல்லாமல், தனக்கும் இயற்கைக்கும், தனக்கும் பிற உயிரினங்களுக்குமிடையேயான பாவனைகளை படிமத்தொடர்ச்சியாகவும் கதைநிகழ்வாகவும் ஆக்கியிருக்கும் மனுஷ்யபுத்திரனின் கிளிக்காவியம் தரும் அனுபவம் புத்தம் புதியதல்ல. தமிழின் நீள்கவிதைகளின் தொடர்ச்சியில் கிடைக்கும் புதுவகை முன்மொழிபு.

அகத்திலிருந்து புறம்நோக்கிய நகர்வு
ஆகஸ்ட் 12, 2017


ஔவையும் கபிலனும் செவ்வியல் கவிதைகள் எழுதியவர்களுள் முக்கியமானவர்கள். அவர்கள் தொடங்கிவைத்த தமிழ்க்கவிதை மரபை இன்றும் தொடர்வது யாரெனத்தேடியது மனம்.
செவ்வியல் மரபாக நாம் நினைத்துக்கொள்ளும் - கட்டமைத்துக்கொள்ளும் - தொடக்கத்தின் முதன்மை ஆளுமைகளாக யாரையெல்லாம் சொல்லலாம் என்ற தேடலைச் செய்தது மனம். முதல் பெயராக வந்தவள் கவி
ஔவை.
அவளைத்தொடர்ந்து நின்றவன் கவி கபிலன். வெள்ளிவீதி, அள்ளூர் நன்முல்லை, காக்கைபாடினி நச்செள்ளை, மாறோக்கத்து நப்பசலை, பொன்முடி போன்ற பெண்கவிகளும்,அரிசில்கிழான், அம்மூவன்,உலோச்சன், பரணன், கடியலூர் உருத்திரங்கண்ணன், பெருங்குன்றூர் பெருங்கௌசிகன், மாங்குடி மருதன், மாமூலன், நப்பூதன்,நல்லந்துவன் போன்ற ஆண்கவிகளும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் எழுதியவர்களாக இருக்கின்றனர். என்றாலும் ஔவைக்கும் கபிலனுக்கும் தனித்துவமான அடையாளங்களைச் சொல்லக்கூடிய அளவுக்குக் கவிதைகள் கிடைக்கின்றன. தொகைநூல்கள் ஒவ்வொன்றிலும் இவ்விருவரது பங்களிப்பு இருக்கின்றன.
அகத்திலும் புறத்திலும் அதிகமான எண்ணிக்கை, மனத்தின் அலைவுகளை மட்டுமல்லாமல், உடலின் அலைவுகளையும் எழுதிக்காட்டிய கவி ஆளுமைகள். காலத்தைப் பதிவுசெய்தல், ஆதரவை உறுதியாகக் காட்டுதல் புறக்கவிதைகளின் முதன்மை அடையாளமான. நேரடிக்கூற்று, அங்கதம், எச்சரிக்கைத் தொனி என்பன ஔவை, கபிலன் -இருவரின் புறக்கவிதைகளுக்குள்ளும் ஓடும் நுட்பக் கூறுகள். ஔவையின் புறக்கவிதைகளுக்கு அதியமானை ஆதரிக்கும் அரசியல் நிலைபாடு காரணமென்றால், கபிலனுக்குப் பாரியைக் காப்பாற்ற நினைத்த அரசியல் சார்பு காரணம். இப்படியான இணைத்தன்மைகள் கொண்ட இருவரும் அகக்கவிதை எழுதியதிலும் இணைத்தன்மைகொண்டவர்களாகவே இருக்கின்றனர்.

புறக்கவிதைகளின் எந்தத் தன்மைகளும் வெளிப்படாதவை அவர்களின் அகக்கவிதைகள். அகக்கவிதைகளின் அழகியல்கூறுகள் ஒவ்வொன்றையும் புணர்ச்சிக்கான தவிப்பு, ஏக்கம், புணர்ச்சிக்குப் பின்னான களிப்புநிலை என இன்பத்தையும், பிரிவின் துயரங்களை அதன் பலதள நிறவேறுபாடுகளோடும் படிமத்தளங்களோடும் தனிக்கவிதைகளாக எழுதித்தந்தவர்கள். அதிலும் கபிலனது குறிஞ்சிப்பாட்டோ , மலையையும் அதன் வனப்பையும் பின்னணியாகக் கொண்டு எழுதப்பெற்ற ஆகச்சிறந்த நிலவியல் கவிதை. அந்த வகையில், கபிலனைப் போல் இன்னொரு கவியை - இணையாகப் பேசத்தக்க கவியைச் செவ்வியல் பரப்பில் சொல்லமுடியவில்லை.
செவ்வியல் நிலையிலிருந்து மாறியபின்னர் தமிழின் அகம், புறமென்னும் இருநிலையையும் ஒன்றிணைக்க முடியுமெனக்காட்டியவன் கவி இளங்கோ. உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுளான சிலப்பதிகாரம் தமிழ்க்கவிதை மரபை நாடகத்தன்மைக்குள் நகர்த்தியதின் முதன்மை வெளிப்பாடு.வள்ளுவன் அறம், பொருள் என புறநிலைகளின் மீதான வரையறைகளை விளக்கிய அளவுக்கு, அகநிலையின் தளங்களையும் எழுதியவனாக இல்லை என்பதாகத் தோன்றியது. அகக்கேள்விகளின் தளங்களை காமமென்ற ஒற்றைத் தளத்துக்குள் சுருக்கி நிறுத்திய முன்னோடியாகவே வள்ளுவனைப் படிக்கமுடிகிறது. அப்படிச் சுருக்காமல் ஒன்றிரண்டு தளங்களுக்கு விரித்தவள் ஆண்டாள். ஆனால் அவள் புறநிலையைக் கண்டுசொன்னவள் இல்லை. அவளைக் கடந்தால், பாரதியின் அடையாளம் முழுமையாகப் பொருந்தத்தக்கது. அவனைத்தாண்டிய தமிழ்க்கவிதை வரலாற்றில், அவரவர் காலத்து புறநிகழ்வுகளையும் அகக்கேள்விகளையும் எழுதிப்பார்த்தவர்களின் அடையாளங்களை
நினைத்துநினைத்துக் கடந்துவந்துநின்றது கவி மனுஷ்யபுத்திரனிடம்.

அகவுணர்வை மனதின் கேள்விகள் என்னும் இருத்தலிய நகர்வுகளாக்கி ஏராளமான கவிதைகளை - பலநூறு கவிதைகளைத் தந்த கவி மனுஷ்யபுத்திரன், மிக அண்மையில் புறநிலையை விசாரிப்பவராக மாறிவருகிறார். குறிப்பாகத் தன்னையொரு அரசியல் இயக்கத்தின் பகுதியாக அறிவித்துக்கொண்டபின் அவர் எழுதும் கவிதைகள் நிகழ்கால அரசியலை விசாரிக்கும் கவிதைகளாக மாறிவருகின்றன. அந்த விசாரணை முழுமையாக அவரது கட்சி ஆதரவு நிலைபாட்டிற்கு ஒத்துப்போகும் நோக்கத்தில் வெளிப்படவேண்டுமென நினைக்காமல் தவிர்த்துக்கொண்டே இருக்கிறார். அதனைக் கவனமாகத் தவிர்க்கும் தன்மை கொண்டவையாகக் கவிதையின் தொனியை மாற்றிவிடுவதின் வழியாகப் பெருந்திரளின் மனச்சாட்சியாகவும், அத்திரளின் மனச்சாட்சியைத் தூண்டும் கவியின் குரலாகவும் மாறிமாறிப் பேசுகிறார். தொடர்ச்சியாக நம்காலத்தின் பலதரப்பட்ட நிகழ்வுகளின் மீது, அதிகாரத்தின் முன்வைப்புகள் மீதும், அவற்றின் பின்னியங்கும் ரகசியச் சதிகளின்மீதும் ஒருவகையான திறப்புகளைச் செய்கின்றன அவரது கவிதைகள். 
ஒவ்வொரு மாதமும் உயிர்மை இதழில் அச்சிடப்படும் கவிதைகளில் அத்தகைய அரசியல் விமரிசன, விவாதக் கவிதைகளே அதிகம் இருக்கின்றன. நாள் தவறாமல் முன்னிரவு தொடங்கி நள்ளிரவுக்கும் பின்னால் முகநூலில் எழுதிப்போடும் கவிதைகள் முழுமையாக அந்தப் பக்கம் நகர்ந்து விடுவதில்லை. அவை அவர் வாழும் சென்னைப் பெருநகரம் தரும் நெருக்கடிகளை,ஆசுவாசத்தை, குதூகலத்தை, அச்சுறுத்தலையெல்லாம் சொல்லப்பார்க்கின்றன. இந்த வேறுபாடும் தன்னுணர்வுடன் நிகழ்கிறது என்று சொல்லமுடியவில்லை.

அகத்தைக் காதல் அல்லது காமமென்னும் தளத்திலிருந்து விரித்து தன்னிலை தன்னோடும் தனக்குச் செவிமடுக்கும் இன்னொரு பாத்திரத்தோடும் உறவாடும் கவிதை வடிவமெனப் புரிந்துகொள்ளவேண்டும். அதேபோல் புறத்தைத் தனது மேதைமையை -அறிவை- வாழ்க்கைக் கோட்பாட்டை உணர்ந்த ஒருவன் பலரோடும் கூட்டத்தோடும் பேசும் கவிதை வடிவம் என்று புரிந்துகொள்ளவேண்டும். அப்படிப்பட்ட புரிதலே தமிழ்ச்செவ்வியல் கவிதைமரபு இன்றளவும் நீள்கிறது என்பதைப் புரிந்துகொள்ளும் நிலையாகும். அந்த நிலையிலிருந்து பார்க்கும்போது, ஒருநேரத்தில் அகத்தையும் புறத்தையும் எழுதிக்காட்டும் கவி மனுஷ்யபுத்திரனை நம் காலத்தின் ஔவையாக, கபிலனாக வாசிக்க முடிகிறது.

இந்த மாத உயிர்மையில் 6 கவிதைகள் வந்துள்ளன. 1.நிற்காதே 2.நக்சலைட், 3.நீங்கள் எப்போது ஒரு ஃபிட்ஜிட் ஸ்பின்னராக மாறினீர்கள், 4.பிரபலமான குசு 5. மஞ்சள் நாட்டவருக்கு ஒரு தேசபக்தனின் திறந்த மடல் 6. மன்னரின் பெயர்கொண்ட மலர். இந்த ஆறில் நான்கு வெளிப்படையான புறநிலைக் கவிதைகள். ” நிற்காதே” முழுமையான அகநிலைவெளிப்பாடு. இந்த ஆறில் அகமாகவும் புறமாகவும் மாறிமாறி நகரும் அந்தக் கவிதையை - நீங்கள் எப்போது ஒரு ஃபிட்ஜிட் ஸ்பின்னராக மாறினீர்கள் - என்ற கவிதையை எழுதிய மனநிலையைப் பிடிப்பதற்கு ஒருவர் படும் அவஸ்தை, முற்றிலும் தனித்துவமான ஒன்று.
============================================================
நிற்காதே
==========
நடந்துகொண்டே இருந்தால்
துக்கத்தின் சுமை
குறைந்துவிடும் என்கிறார்கள்.
நான் என் சக்கரநாற்காலியில்
நகர்ந்துகொண்டே இருக்கிறேன்
என் துக்கம் கொஞ்சம் கொஞ்சமாக
எடையற்றதாகிக் கொண்டிருக்கிறது
நடப்பதோ
நகர்வதோ
நமக்கிருப்பது
அவ்வளவு சின்ன வட்டங்கள்
அவ்வளவு சின்ன சதுரங்கள்
இந்த இரவின் காலடியில்
சற்றே ஓய்ந்தமர்கையில்
துக்கத்தின் உறுமல்
எங்கோ அருகாமையில்
கேட்கத்துவங்குகிறது.
நிற்காதே.
நடந்துகொண்டே இரு.
நகர்ந்துகொண்டே இரு.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தி.சு.நடராசனின் திறனாய்வுப் பார்வைகள் :தமிழ் அழகியல், தமிழகத்தில் வைதீக சமயம்

உடல் மறுப்பு என்னும் பெரும்போக்கு

கற்றல் - கற்பித்தல்: மாணவ ஆசிரிய உறவுகள்