வெங்கடேஷ் சக்கரவர்த்தி
அவரைச் சினிமா விமர்சகர் என்று சொல்வதைவிடச் சினிமாவைக் கற்பித்துக் கொண்டே இருந்த ஆசிரியர் என்றுதான் சொல்ல வேண்டும். அவர் வகுப்பெடுத்த திரைப்பட ரசனை வகுப்புகள் பலவற்றில் இருந்திருக்கிறேன். முதன் முதலில் சந்தித்தது மதுரை மருத்துவக்கல்லூரிக்கருகில் இருந்த “ இந்திய மருத்துவக் கழகத்தின் அரங்கில்” . அங்கு யதார்த்தா நடத்திய சினிமா ரசனை வகுப்பில் ராஜனின் அழைப்பின் பேரில் வந்திருந்தார். அதற்கு முன்பே ப்ரீத்தம் சக்கரவர்த்தியைத் தெரியும். பரிக்ஷாவின் நாடகங்களில் பார்த்திருக்கிறேன்.
கல்விப்புலம் சார்ந்து சினிமாவைக் கற்றுக் கொண்டவர்களுக்குச் சிறந்த ஆசிரியராகவும் வழிகாட்டியாகவும் இருந்தவர். பலநேரங்களில் அவரது விவரிப்புகளோடும் விளக்கங்களோடும் முரண்பட்டிருக்கிறேன். நான் எழுதும் சினிமா விமரிசனங்களோடு அவருக்கும் பல நேரங்களில் உடன்பாடு இருந்ததில்லை என்பதைக் காட்டியிருக்கிறார். சினிமா குறித்த கருத்தரங்குகளில் எதிரும் புதிருமாக விவாதம் செய்திருக்கிறோம்.
கடைசியாக அவர் இயக்கித் தயாரித்த சென்னையைப் பற்றிய ஆவணப் படத்தை அமுதனின் மறுபக்கம் அமைப்பு பெரியார் மையத்தில் திரையிட்ட போது அவரையும் படத்தையும் பார்த்தேன். அப்படத்தின் பெயர்- சென்னை: பிளவுபட்ட நகரம் என்பது. அப்படம் பற்றி அப்போது எழுதிய குறிப்பு இது:
*****
சக்ரவர்த்தியின் சென்னை வளர்ச்சியடையும் சென்னை மாநகரம் ஒவ்வொரு திசையிலும் சம அளவில் விரியாமல் தெற்கிலும் மேற்கிலும் தொழில் கூடங்களால் வீங்கிப் பெருத்துக்கொண்டிருக்கிறது எனக் காட்டுகிறது. தென்சென்னையில் பெரும்பாலும் தகவல் தொழில்நுட்பப் பூங்காக்களாக விரிகின்றன. அம்பத்தூர், ஆவடி போன்ற பகுதிகளில் பழைய தொழிற்பேட்டைகளோடு, செங்கல்பட்டு, ஸ்ரீபெரும்புதூர்ச் சாலைகளில் தொடங்கப்படும் கனரகத் தொழிற் சாலைகளின் வளர்ச்சியால் பலனடையப்போகும் மனிதர்கள் சென்னையின் மனிதர்கள்தானா? என்ற கேள்வியையும் எழுப்புகிறது. அத்தோடு மாநகரத்தின் குப்பைகளைக் கொட்டுமிடமாக ஆக்கப்பட்ட வடசென்னை, விரிவாக்கத்தை/வளர்ச்சியை அடையாமல் தடுக்கப்பட்ட அரசியலையும் பேசுகிறது. மொத்தத்தில் பிளவு என்பதைப் பொருளாதார அடிப்படையில் பார்த்துள்ள இந்த ஆவணப்படம் சென்னை நகர மக்கள் மதம் சார்ந்த அடையாளங்களை வெளிப்படுத்தும் கொண்டாட்டங்களையும் அவற்றிற்கான நாட்களையும் விடாப்பிடியாகத் தக்கவைக்கப் போராடுவதையும் காட்டுகின்றது. இது ஒருவிதத்தில் வெங்கடேஷ் சக்ரவர்த்தியின் சென்னை.அரைநூற்றாண்டுக்காலச் சென்னை வாழ்க்கையால் அந்நகரின் சாலைகளிலும், பலவகையான நிகழ்வுகள் நடக்கும் வெளிகளிலும், ஓய்வெடுக்கும் பிரதேசங்களிலும் அலைந்து திரிந்த ஒருவரின் பார்வையாக அந்தப் படத்தின் காட்சித் தொகுப்புகள் இருந்தன.நான் அவரைப்போலச் சென்னைவாசி அல்ல. சென்னைக்கு எப்போதும் விருந்தாளிதான். எனது முதல் சென்னைப்பயணம் 1982. அரசுப்பணி ஒன்றிற்கான நேர்காணலுக்காக வந்தது. அப்போது தொடங்கி ஆண்டுதோறும் வந்துபோய்க் கொண்டே இருக்கிறேன். அதிக அளவில் ஒருவாரம்வரை இரவிலும் பகலிலும் இங்கே தங்கிச் சுற்றியிருக்கிறேன். அப்போதெல்லாம் சென்னை நகரம், தென் தமிழ்நாட்டுக் கிராமத்து மனிதர்கள் எங்களுக்கும் இந்த மாநகரில் பங்கிருக்கிறது எனச் சொல்லிக் கொண்டே இருக்கும் அடையாளங்களைப் பார்க்கிறேன். பண்பாட்டு அடையாளங்களை நிலையான காட்சிகளாகவும் அசையும் பிம்பங்களாகவும் விழாக்களாகவும் வெளிப்படுத்திக்கொண்டே இருக்கிறார்கள் . அந்தவகையிலும் சென்னை: பிளவுபட்ட நகரமாகவே இருக்கிறது. இதனைப் பிம்பங்களாக அடுக்கிப் பார்ப்பதைப் போல புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், ஜெயந்தன், சா.கந்தசாமி, அசோகமித்திரன், திலகவதி, சுஜாதா, திலீப்குமார், தொடங்கி அண்மையில் எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன், அரவிந்தன், விநாயகமுருகன், கரன் கார்க்கி, லக்ஷ்மிசரவணக் குமார், சரவணன் சந்திரன் என நீளும் புனைகதைப்பரப்பிலும் தேடிப்பார்க்கலாம். அப்படியான ஆய்வு சென்னையின் இன்னொரு பரிமாணத்தைக் காட்டும்.
*****
சக்கரவர்த்தியின் மறைவில் வருந்தும் ப்ரீத்தம் சக்கரவர்த்திக்கு ஆறுதல் சொல்ல இயலாது. ஆழ்ந்த இரங்கல்கள்...
கருத்துகள்