பாராட்டும் பரிசும்

 

தனது பிறந்த நாளைக் கவிஞர்கள் தினமாக அறிவித்துக் கவிஞர் ஒருவருக்கு விருது அளித்து வருகிறார் பாடலாசிரியர் வைரமுத்து என்பது இதுவரை கேள்விப்பட்ட செய்தியாக இருந்தது. இன்று நேரில் பார்க்கும் நிகழ்வாக மாறிவிட்டது. இந்த ஆண்டுக்கான கவிஞர்கள்தின விருதைப் பெறும் பெயராகக்கவி சக்திஜோதி பெயர் அறிவிக்கப்பட்டபோதே அவருக்கு வாழ்த்துத் தெரிவித்ததோடு நேரிலும் வந்து வாழ்த்துவேன் எனச் சொல்லியிருந்தேன். நிகழ்வு நான் இப்போதிருக்கும் கோவையில் நடைபெறுவதாக விளம்பரத்தில் சொல்லப்பட்டதும் ஒரு காரணம்.

கவி.சக்திஜோதி, நான் முன்பு பணியாற்றிய மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் தமிழியல் துறைக்கு இரண்டு மூன்று தடவை எனது அழைப்பின்பேரில் துறைக் கருத்தரங்குகளில் பங்கேற்றுள்ளார். ஒரு முறை மகளிர் தினச் சொற்பொழிவுக்காக அழைக்கப்பட்டுத் திரளான மாணவிகளைத் தனது உரையால் கட்டுக்குள் வைத்துப் பேசினார். அதுபோன்ற உரையெல்லாம் என்னால் வழங்க முடியாது என்பதால் அவர் பேச்சு மீது பொறாமை இருந்தது. கவிதை குறித்தும் பெண்ணியச் சொல்லாடல்கள் தமிழ்க் கவிதைக்குள் ஊடாடும் விதம் குறித்தும் விரிவான தரவுகளோடு அவர் பேசியிருக்கிறார். அந்தக் காலகட்டத்தில் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் அதே பொருண்மையில் முனைவர் பட்ட ஆய்வையும் செய்து கொண்டிருந்தார். பின்னர் அந்த ஆய்வேடு மதிப்பீட்டிற்காக என்னிடம் வந்ததும், அவரது நேரடி வாய்மொழித் தேர்வுக்குப் பல்கலைக்கழகம் என்னை அழைத்ததும் பழைய கதை.

கவிஞர் தினத்திற்கான விருதை அவர் வாங்கும்போது கோவையில் இருந்தும் விழாவுக்குச் செல்லாமல் தவிர்க்க மனசு வரவில்லை. விழா சரியான நேரத்துக்குத் தொடங்கிவிடும் என்று நினைத்து 10.00 மணிக்குப் போனபோது அரங்கில் கால்வாசி கூடக் கூட்டம் இல்லை. அங்கிருந்தவர்களில் எனக்குத் தெரிந்த முகம் ஒருவரும் இல்லை. வெளியில் போய் விட்டுத் திரும்பலாம் என்று நினைத்துக்கொண்டு வந்தபோது திருப்பத்தூர் இளம்பரிதி கண்ணில் பட்டார். திருப்பத்தூர் புத்தகக்காட்சி நினைவுகளைப் பகிர்ந்து கொண்டிருந்தபோது,’ நிகழ்ச்சி ஆரம்பிக்க இன்னும் ஒரு மணி நேரம்’ ஆகுமென்றார். அரங்கின் பின்பாதி வரிசையொன்றில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். நிகழ்வு நடக்கும் கலையரங்கிலிருந்து அரை கிலோ மீட்டர் தூரத்தில் குதிரைபூட்டிய பெருந்தேரொன்று நிற்கிறது; கட்டியங்கூறும் இசைமுழங்கத் தேர்ப்பவனி தொடங்கிக் கவிஞர் தேரேறி வருவார் என்றும் சொன்னார். உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கும்போதே டிஸ்கவரி வேடியப்பன் ஊர்வலம் தொடங்கியதை நேரலையில் அனுப்பித் தந்தார்.

அந்த நேரத்தில் கவிஞர் சக்தி ஜோதி நாங்கள் உட்கார்ந்திருந்த இடத்தைத் தாண்டி முன் வரிசைக்குப் போய்விட்டதைக் கவனிக்கவில்லை. அரங்கிருக்கும் வளாகத்திற்குள் தேரை நிறுத்தி இறங்கியபோது, ”கவிப்பேரரசு வைரமுத்து வாழ்க வாழ்க என்ற கட்டியம் கூற செண்டைகள் முழங்கின.இருபுறமும் அவரது கவித்தொண்டர்கள் -வெற்றித்தமிழர் பேரவையின் செயல்வீரர்கள் கரம்கோர்க்க அவர் நடந்து வந்த போது, அவரது நடை ஒரு பேரரசரின் நடையாகவே இருந்தது.

நேராக மேடையேறி நிகழ்வு தொடங்கியபோது மணி 11. வரவேற்பு, விருதாளர் அறிமுகம், விருதளிப்பு, ஏற்புரை, வாழ்த்துரை, பேருரை என எல்லாமும் நிகழ்ந்து முடிந்தபோது மணி 12. யாரும் அதிகம் பேசவில்லை. பேசியனவும் ஒருவர் காதிலும் விழவில்லை அரங்கின் ஒலியமைப்பும் திரண்டிருந்த கூட்டத்தின் நடமாட்டமும் உரைகளைக் கவனித்துக் கேட்கும்படி செய்யவில்லை.

எல்லாம் முடிந்துவிட்டது என்று நினைத்து அரங்கின் வாசல் பகுதிக்கு வந்தபோது கபிலன் வைரமுத்து தனியாக நின்று கொண்டிருந்தார். டிஸ்கவரி புக் பேலஸ் வெளியிட்ட அவரது சிறுகதைத் தொகுதி ஒன்றுக்கு ஒரு விமரிசனம் எழுதியிருந்ததால் எனது பெயர் அவருக்கு நினைவிலிருக்கும் எனக்கருதி அவர் முன் நின்று முகம் பார்த்து ’நான் அ.ராமசாமி’ என்று சொன்னேன். உடனே கரம்பற்றிக் கொண்டு உங்கள் விமரிசனம் ஆழமாக விவாதித்திருந்தது என்று நினைவுபடுத்திப் பேசினார். அந்த விமரிசனத்திற்குப் பிறகு உங்கள் கட்டுரைகள் பலவற்றை வாசிக்கிறேன் என்றும் சொல்லிவிட்டு, சாப்பாடு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது; சாப்பிட்டு விட்டுப் போங்கள் என்றார்.

சாப்பிடுவதற்காக இல்லையென்றாலும் மேடையிலிருந்து சக்திஜோதி இறங்கி வந்தபின் அவருக்குக் கைகொடுத்துப் பாராட்டுத் தெரிவிக்க வேண்டும் என்பதால் காத்திருந்தேன். மேடையில் வரிசையாக ஒவ்வொருவரும் பெரும் மாலைகளோடும் பரிசுப்பொருட்களோடும் சென்று அணிவித்துக் கவிப்பேரரசரோடு படம் எடுக்கத்தொடங்கினார்கள். அந்த நேரத்தில் சத்தமில்லாமல் கீழே இறங்கி வந்த சக்திஜோதிக்கு வாழ்த்துச் சொல்லி அவரோடும் அவரது குடும்பத்தினரோடும் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டேன். படங்களை எடுத்து அனுப்பினார் பொள்ளாச்சிக் கவிஞர் பூபாலன்.

பேருந்திலேறித் திரும்பலாம் என நினைத்த என்னைத் தனது வாகனத்தில் ஏற்றி வந்து கல்லூரி வாசலில் விட்டுவிட்டுப் போனார் சோலை மாயவன். முகநூலில் நான் எழுதும் ஒவ்வொன்றையும் வாசித்து ரசிப்பவர் அவர். அவரது உரையாடலுக்கும் அன்புக்கும் நன்றி சொல்லி அனுப்பிவைத்தேன். இதுவரையிலான விருதளிப்பு நிகழ்வுகளில் இன்றைய நிகழ்வு வித்தியாசமான ஒன்றுதான். பாராட்டுகளும் பரிசுகளும் படைப்பதாக நினைக்கும் ஆளுமைகளுக்குத் தேவைப்படுகிறது. வாசகர்களும் ரசிகர்களும் உருவாகித் திரள்வதும் உருவாக்கிப் பெருக்குவதும் நடக்கத்தான் செய்கிறது. திரும்பவும் மாலை 5 மணி தொடங்கிப் பெருந்திரள் பிறந்த நாள் கூட்டமொன்றிருக்கிறது. அதில் ப.சிதம்பரம், துரைமுருகன் என அரசியல் தலைவர்கள் பேச இருக்கிறார்கள் என்றும் விளம்பரம் இருந்தது.

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தி.சு.நடராசனின் திறனாய்வுப் பார்வைகள் :தமிழ் அழகியல், தமிழகத்தில் வைதீக சமயம்

உடல் மறுப்பு என்னும் பெரும்போக்கு

கற்றல் - கற்பித்தல்: மாணவ ஆசிரிய உறவுகள்