தேடிப்படிக்கவேண்டிய நூல்கள்

கல்விப்புல வாசிப்பிற்கும் கல்விப்புலத்திற்கு வெளியே இருப்பவர்களின் வாசிப்புக்குமிடையே முதன்மையான வேறுபாடுகள் உண்டு. மொழி, இலக்கியத்துறைகளில் இருக்கும் வேறுபாட்டை என்னால் விரிவாகச் சொல்லமுடியும். ஆனால் இந்த வேறுபாடு எல்லாத்துறைகளிலும் இருக்கிறது என்பதுதான் உண்மை.வாசிக்கவேண்டிய நூல்களின் ஒரு பட்டியல் இங்கே

15 .வடகரை ஆதிக்கத்தின் சரித்திரம்

இதனைத் தேடிப்படித்த நூல் என்று சொல்வதைவிட தேடியபோது கிடைத்த நூல் எனச் சொல்லலாம். நூறாண்டுகளுக்கு முந்திய புத்தகம். அட்டை இல்லை. நூலின் பெயர்: வடகரை ஆதிக்கத்தின் சரித்திரம். உள்ளே போனால் வரலாற்றுப்புத்தகமாக இல்லை. தொகுப்புநூல். ஒரு வட்டாரத்தைப் பற்றிய நூல்களின் தொகுப்பு. வடடகரை நாடு என்பது 17 ஆம் நூற்றாண்டில் ஒரு பாளையமாக இருந்து பின்னர் ஜமீனாக மாறிய ஒரு பகுதி. அதனை ஆண்டவர்களின் பரம்பரையில் ஒருவர் சின்னனஞ்சாத்தேவர். அவர் மீதும் அவர் ஆண்ட நாட்டின்மீதும் பாடப்பட்ட பிரபந்த இலக்கியங்களின் தொகுப்பே இந்த நூல். வடகரை, தென்கரை போன்ற பெயர்களுடன் திருநெல்வேலி மாவட்டத்தில் ஊர்கள் இருக்கின்றன. பெரிய கிராமங்கள் என்று சொல்லத்தக்கன. அவைதான் அப்போதைய ஒருநாட்டின் தலைநகரம். இப்போது தென்காசி வட்டாரத்திற்குட்பட்டதாக இருக்கலாம்.
இத்தொகுப்பில்1. சவ்வாதுவிடு தூது, 2.சந்திரகலா மஞ்சரி, 3.பட்பிரபந்தம், 4.திருமலைக்கறுப்பன்பேரில் காதல்,5.நொண்டிநாடகம்,6. பருவப்பதம்,7. பிள்ளைத்தமிழ், 8.வருக்கக்கோவை 9.கோவைச்சதகம்,10 விறலிவிடுதூது எனப் 10 பிரபந்தங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. ஒரு வட்டாரத்தைப் பற்றிய நூல்களின் தொகுப்பு என்ற வகையில் தமிழில் கிடைக்கும் வட்டார இலக்கியத்தின் முன்னோடி எனச் சொல்லலாம். அவற்றிலிருந்து ஒரு சிறிய வட்டாரத்தின் வரலாற்றை அறியமுடியும். சமூகவரலாற்றில் ஆர்வமுள்ளவர்கள் இலக்கியவாசிப்போடு அணுகினால் நுண்வரலாறொன்றை எழுதலாம்.
14 தமிழ்நாவல்களில் உடல்மொழி
இந்நூலின் ஆசிரியர் இப்போது அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருக்கிறார். இந்திய மொழிகள் பற்றிய ஆய்வுகளை உலக அளவில் கொண்டுசென்ற தமிழ் அறிஞர். அவரை இந்தியப் பல்கலைக்கழகங்கள் -குறிப்பாகத் தமிழகப் பல்கலைக்கழகங்கள் பயன்படுத்திக்கொண்டது மிகவும் குறைவு. வ. அய். சுப்பிரமணியனின் வழிகாட்டுதலில் தொடங்கப்பட்ட தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்குத் துணைவேந்தராக ஆக்கப்பட்டிருக்கவேண்டும்; நடக்காமலேயே காலம் நகர்ந்துகொண்டிருக்கிறது.

மா.சு. திருமலை அவர்கள் 1986 ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகத்தின் அறக்கட்டளைச் சொற்பொழிவை நூலாக வெளியிட்ட நிறுவனம் அவர் அப்போது பணியாற்றிய இந்திய மொழிகளுக்கான மைய நிறுவனம். அந்நிறுவனம் தமிழ் மொழிக்கல்வியோடு தொடர்புடையான முதன்மை நூல்கள் பலவற்றை வெளியிட்டிருக்கிறது. ஆனால் தமிழகப் பல்கலைக்கழகப் பாடத்திட்டங்கள் அவற்றைக் கண்டுகொள்வதில்லை. அதனைப் பேசினால் என்னையும் சேர்த்தே நான் குறை சொல்லிக்கொள்ளவேண்டும். மைசூரிலிருந்து இயங்கும் இந்திய மொழிகளுக்கான மைய நிறுவனம் வெளியிடும் நூல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதமானவை.

மனிதர்களைப் படிப்பதற்கு அவர்களின் தொடர்புக்கருவியான மொழியைப் படிக்கும் மொழியியல் வழியாக முயல்வதே அறிவுத்தேடலின் முதன்மை வழிமுறை எனக் கருதிய கருத்தோட்டம் 1960 களில் அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் முதன்மைப்படுத்தப்பெற்றன. மொழியியல் கல்வியைச் சமூக அறிவியலின் மையமாக்கிய அமெரிக்கப் பல்கலைக்கழகங்களின் தாக்கம் அல்லது கருத்தியல்போக்கு இந்திய மொழிகளுக்கான மைய நிறுவனம் வழியாகவே இந்தியப் பல்கலைக்கழகங்கள் பலவற்றுக்குள் நுழைந்தன. மொழியியலிலிருந்து மானிடவியல், சமூகவியல், சமூக உளவியல், நாட்டார் வழக்காற்றியல் எனப் பலகிளைகள் இந்தியாவுக்குள் தோன்றுவதற்கு இந்நிறுவனம் நேரடியாகவும் மறைமுகமாகவும் தூண்டுகோலாக இருந்தது.
1986- இல் ஆற்றிய உரையை 1987- இல் நூலாக வெளியிட்டது அந்நிறுவனம். அந்நிறுவனம் நடத்திய பயிலரங்கிற்குச் சென்ற எனது நண்பர் த.பரசுராமன் (புதுவை மொழியியல் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய அவர் ஓராண்டுக்கு முன்பு மரணமடைந்தார்) அங்கிருந்து எனக்காக வாங்கிவந்து அன்பளிப்பாகத் தந்தார். தமிழ் நாவலில் உடல்மொழி என்று தலைப்பில் நாவல் என்பது மையப்படுத்தப்பட்டிருந்தாலும் இந்நூலை நாவல் விமரிசனம் என்றோ, ஆய்வு என்றோ நான் சொல்லமாட்டேன். நாவலை ஆய்வுக்கான கருவிப்பொருளாகக் கொண்டு மொழி, இலக்கியம், பண்பாடு என ஒன்றோடொன்று தொடர்புடைய பல்துறை ஆய்வுநூல். மனித உடலின் சாத்தியங்களையும் அதன் வழியாக உருவாக்கப்படும் மௌனமொழி, பேச்சுமொழி ஆகிய இரண்டையும் உள்ளடக்கிய தொடர்புமொழி உருவாக்கும் அழகியலை ஆய்வுசெய்துள்ள அடிப்படை ஆய்வுநூல் இது. ஒருதுறை ஆய்விலிருந்து பல்துறை ஆய்வுகள் வளரவேண்டிய காலகட்டமாக உலகப்பல்கலைக்கழகங்கள் அறிவித்து அரைநூற்றாண்டுக்கும் மேலாகிவிட்டது.
தமிழகப்பல்கலைக்கழங்களும்கூட அத்தகைய முயற்சிகள் சிலவற்றைச் செய்திருக்கின்றன என்றாலும், அவற்றின் தாக்கம் மிகவும் குறைவு. பல்துறை ஆய்வுகள் பெருகவேண்டியதை வலியுறுத்தி ஆய்வாளர்கள் இந்நூலைத் தேடிவாசிக்கவேண்டுமெனக் கூறுவேன்.
13 ஜெர்மானிய இலக்கியம்
இப்போது அந்த நிலை இல்லை. எனது மாணவப் பருவத்தில் நேரடி நூல்களைவிட மொழிபெயர்ப்புகள் விலை குறைவாகக் கிடைத்தன.மாஸ்கோவின் முன்னேற்றப் பதிப்பக மொழிபெயர்ப்பு நூல்கள் மிகக்குறைந்த விலையில் கிடைத்துக் கொண்டிருந்தது.டவுன்ஹால் ரோட்டில் புதிய புத்தகங்கள் கிடைக்கும். என்.சி.பி.ஹெச்., மீனாட்சி புத்தக நிலையம் எல்லாம் டவுன்ஹால் சாலையில். பழைய புத்தகங்கள் அதற்கிணையான திண்டுக்கல் சாலையில்.

மதுரையிலொரு திண்டுக்கல் ரோடு உண்டு. செண்ட்ரல் சினிமா தியேட்டர் சந்துக்குள் நுழைந்து திண்டுக்கல் ரோட்டில் வந்தால் வரிசையாகப் பழைய புத்தகக் கடைகள். மீனாட்சி அம்மன் கோயில் தெற்குக் கோபுரவாசல்வரை விரித்துப் பரப்பிவைத்திருப்பார்கள். திருப்பத்தில் இருந்த மூலைக்கடை பெரியது. அங்குதான் இந்த நூலை வாங்கினேன். வெளியான ஓராண்டுக்கு முன்னதாகவே அங்கு வந்திருந்தது. 1982 இல் வாங்கி வாசித்தேன்.

1981-ல் தென்மொழிகள் புத்தக நிறுவனத்திற்காக ஜெர்மன் மொழியின் எழுத்துகளைத் தொகுத்து மொழிபெயர்ப்பு செய்து தந்தவர் கா.திரவியம். ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி, தன்னோடு தெசிணி என்னும் கவியை இணைத்துக்கொண்டு உருவாக்கிய நூல். பனைகதைகள்,கவிதைகள், கட்டுரைகள், விவாதங்கள் என வகை பிரித்து தரப்பட்ட நூல்.

ஜெர்மானிய இலக்கியம் பற்றிய முன்னுரை வழியாகவே ப்ரக்டும் சீக்பிரிட் லென்ஸ் என்னும் நாடகக்காரரும் அறிமுகம்.இப்படியான மொழிபெயர்ப்புகள் வழியாகவும்தான் நவீனத்துவம்தமிழில் வந்து சேர்ந்தது. இந்தியாவை இந்துத்துவ நாடாக ஆக்கிவிட நினைப்பவர்களும் அவர்களது பின்னோடிகளும் இவற்றையும் சந்தேகத்தோடுதான் பார்க்கிறார்கள்

12 அடியும் முடியும் 
தமிழியற்புலத்தைத் தனது வளமான அறிவுத்திறனால் வளர்த்தெடுத்த அறிஞர்களுள் ஒருவர் க.கைலாசபதி. அவர் எழுதிய ஒவ்வொரு நூலுமே தேடித்தேடிப் படிக்கவேண்டிய நூல்கள் என்பதில் மாற்றில்லை. தமிழுக்குத் திறனாய்வுத்துறையை - கோட்பாட்டுத் திறனாய்வுகளை- அதன் உள்பிரிவுகளை அறிமுகம் செய்தவர்கள் பெரும்பாலும் அறிமுகநிலையிலேயே களைத்துப் போய்த் திசைமாறிவிடுவார்கள். 
ஆனால் கைலாசபதி மட்டுமே கற்றுத்தேர்ந்த திறனாய்வு முறைகளில் கோட்பாட்டு அறிமுகதோடு, அவற்றைப் பயன்படுத்தித் திறனாய்வைச் செய்முறையாகவும் செய்துகாட்டியவர். ஒப்பியல் ஆய்வை முனைவர்பட்டத்திற்கான ஆய்வாகக் கொண்ட கைலாசபதி அம்முறையில் காத்திறமான நூல்களை எழுதியிருக்கிறார். அதேபோல் அவரது சமூகப்பார்வையை வெளிப்படுத்த உதவிய மார்க்சியத் தத்துவம் கலை, இலக்கியத்தைப் புரிந்துகொள்வதற்கான முன்வைத்த மார்க்சியத் திறனாய்வுக் கோட்பாட்டைப் பயன்படுத்தியும் முன்னோடியான நூல்களை எழுதியுள்ளார். அவற்றையெல்லாம்விட ஆகச் சிறந்த வாசிப்பனுபவத்தைத் தரக்கூடிய நூலாக நான் நினைப்பது அடியும் முடியும் என்னும் நூலைத்தான். இந்நூலில் இடம்பெற்றுள்ள 5 கட்டுரைகளையும் வாசித்துப் புரிந்துகொள்ள நினைக்கும் ஒருவர் அதன் வழியாகத் தமிழ் இலக்கியப் பரப்பு முழுவதையும் படிக்கும்படியான தூண்டுதலைப் பெறுவார் என்பது உறுதி.
மூலப்படிவவியல் அல்லது தொல்படிமவியல் என்பது உளவியல் அணுகு முறையின் ஒருபகுதி. ஒரு பிரதியின் எழுத்தை வாசிக்கும்போது எழுதியவரையே வாசிப்பதாகத் தொனிக்கும் பிரதி, முதன்மையாகக் கோருவது உளவியல் அணுகுமுறை வாசிப்பை. அவ்வணுகுமுறையைப் பின்பற்றி வாசிக்கும் வாசிப்பு, பிரதிக்குள் வெளிப்படும் பாத்திரங்கள், பேசுபொருள். பேசும் முறை என எல்லாவற்றையும் எழுதியவரின் உளவியல் சிக்கல்களோடு இணைத்துப் பேசத்தூண்டும். அதற்காக எழுதியவரின் வாழ்க்கைவரலாற்றையும் ரகசியங்களையும் தேடித் திரட்டச் சொல்லும். ஆனால் அதன் உட்பிரிவான தொல்படிவமவியல் அப்படியான கோரிக்கையை முன்வைக்காது. அதற்குமாறாக ஒருமொழியின் இலக்கியப்பரப்பில் ஒரே உரிப்பொருள் அல்லது கருத்தியல் திரும்பத்திரும்ப எழுதப்படுகிறது என்பதைக் கண்டுபிடிக்கும் நிலையில், அவ்வுரிப்பொருள் அல்லது கருத்தியலின் தோற்றக்காரணி யாது? அல்லது எத்தகையது என்ற தேடலை வலியுறுத்தும். அப்படித் தேடிச் செல்வது புதுமையிலிருந்து பழைமையை நோக்கிய பயணமாகவும் ஒவ்வொரு ஆசிரியனும் அதைக் கையாண்ட விதத்திற்கான சூழல்காரணங்களைச் சொல்லவேண்டிய நெருக்கடியையும் உருவாக்கும். அப்படியான மூலப்படிமவியல் அணுகுமுறையைக் கோட்பாடாகவும் செய்ம்முறைத் திறனாய்வாகவும் எழுதிக் காட்டிய நூல் அடியும் முடியும். அந்நூலைக் கட்டாயம் வாசிக்கவேண்டும் என்று சொல்வேன். நான் 
அதிலிருக்கும் கட்டுரைகளைத் தேவைகருதிப் பலதடவை வாசித்திருக்கிறேன். நீங்களும் தேடிப்படிக்கலாம். குமரன் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.

11உலக நாடக இலக்கியம்
உலக இலக்கியம் பற்றிய சொல்லாடல்களைத் தொடங்கினால் ஒவ்வொருவரும் அவரவர்களின் வளமான பகுதியை இலக்கியவடிவத்தை முன்வைத்தே தொடங்குவார்கள். பெரும்பாலான உலகமொழிகளில் நிகழ்கால இலக்கியவகையாகப் புனைகதைகள் மாறியிருக்கிறது. இதற்குக்காரணம் புனைகதை மரபிலிருந்து தங்கள் இலக்கியவரலாற்றைக் கட்டியெழுப்பும் அமெரிக்கர்களின் ஆதிக்கப்பரவல்தான். ஆனால் ஐரோப்பியர்கள் - குறிப்பாகக் கல்விப்புல ஐரோப்பியர்கள் நாடக இலக்கியங்களை (Dramatic literature) முன்வைத்தே பேசுவார்கள். இந்திய அளவில் இத்தகைய சொல்லாடல்களை முன்வைப்பதிலும்கூட இருவேறு போக்கைச் சுட்டிக்காட்டவேண்டும். சம்ஸ்க்ருதத்தை மூலமொழியாகக் கொண்ட வட இந்தியமொழிகளுக்கு அடிப்படையான கலையியல் அல்லது அழகியல் அரங்கியலிலிருந்து முன்வைக்கப்படும். ஆனால் தென்னிந்திய மொழிகள் - குறிப்பாகத் தமிழ்மொழியின் கலையியல் அல்லது அழகியல் கவிதையிலிருந்தே முன்வைக்கப்படும்.
பிரிட்டானிய காலத்துக் கல்விமுறை ஐரோப்பிய மையத்தைக் கொண்டிருந்தது. அதன்வழியாக உருவான புலமையாளர்கள் நாடக இலக்கியத்தில் வல்லவர்களாக இருந்துள்ளதை ஐம்பதுகள் வரை ஆசிரியர்களாகவும் பேராசிரியர்களாகவும் எழுத்தாளர்களாகவும் இருந்தவர்களின் வரலாறும் வாழ்க்கையும் சொல்கின்றன. அதன் வெளிப்பாடான ஒரு சிறுநூல் “உலக நாடக இலக்கியம்” எம்.கே. மணி சாஸ்திரி எழுதிய இந்நூலில் மறுமலர்ச்சிக்கால ஐரோப்பியர்கள் கொண்டாடிய 10 நாடக எழுத்தாளர்களின் நாடக எழுத்துகள் தமிழில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அந்த அறிமுகத்தில் கவனிக்கத்தக்க முறையியலும் பின்பற்றப்பட்டுள்ளது. அறிமுகம் செய்ய நினைக்கும் ஒருவரின் முதன்மையான நாடகத்தின் கதையை அறிமுகப்படுத்துவதற்கு முன்பு, அவரது ஒட்டுமொத்த நாடக இலக்கிய அடையாளத்தை எழுதுகிறார. கடைசியில் கதைசொல்லி அறிமுகம் செய்த நாடகத்தில் வெளிப்படும் நாடக நயங்களை விளக்கியுள்ளார். 
என்னிடமிருக்கும் இந்நூல் 1993 இல் வெளிவந்த என் சி பி எச். வெளியிட்ட இரண்டாவது பதிப்பு. முதல் பதிப்பு 1969வந்ததாகக் குறிப்பு உள்ளது. மூன்றாவது பதிப்பாகவும் என் சி பி எச். வெளியிட்டுள்ளது. நாடகத்துறை சார்ந்தவர்கள் அறிந்திருக்கவேண்டிய நூல் என்பதாகப் பார்க்காமல், இலக்கிய அறிவு, இலக்கியக் கலை, உலக இலக்கிய வரையறைப் புரிந்துகொள்வதற்கான ஒருநூலாகவே இந்நூலை வாசிக்கலாம்.

10 சாசனும் தமிழும்

தமிழ் இலக்கிய வரலாற்றை ஆளுமைகள், ஆளுமைகள், ஆட்சியதிகாரங்கள் உருவாக்கவில்லை; ஒவ்வொரு காலகட்டத்திலும் தோன்றிய கருத்துகளே உருவாக்கின என்ற கருதுகோளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பெற்ற நூல் ‘ தமிழ் இலக்கியத்தில் காலமும் கருத்தும். அந்நூலின் ஆசிரியர் பேரா. ஆ. வேலுப்பிள்ளை. அந்நூலின் வழியாக அறிமுகமான அவரது இன்னொரு முக்கியமான நூல் “ சாசனும் தமிழும்”. இலக்கண,இலக்கியங்கள் புலமையாளர்களின் கருவிகள். அவர்களுக்கிடையேயான தகவல் பரிமாற்றத்தை நேரடியாக இல்லாமல் மேம்பட்ட வடிவில் பரிமாறிக்கொள்ளும் முறைமை அது. அதன் வழியாக அறியப்படும் தமிழியல் என்பது மேம்பட்ட புலமையாளர்களைப் பற்றிய அறிதலாகவே அமையும். அதற்கு மாறாகப் பெரும்பான்மை மக்களுக்குப் பழைய காலத்தில் செய்திகளைத் தருவனவாகவும் வழிநடத்துவனவாகவும் இருந்தவை கல்வெட்டுகள், செப்பேடுகள்,பட்டயங்கள் போன்றன. (இம்மூன்றையும் குறிக்கும் சொல்லாகச் சாசனங்கள் என்னும் சம்ஸ்க்ருதச் சொல் இருக்கும் என்பது அவரது நிலை)- 
இவற்றையும் கற்கவேண்டும் என வலியுறுத்தி எழுதப்பெற்ற நூலே சாசனமும் தமிழும். 
சாசனங்களை அவற்றின் வரிவடிவம், மொழியின் அடிப்படைக்கூறுகளான சொல் மாற்றும் தொடர்ப் பயன்பாடு,அதன் வழியாக வெளிப்படும் பண்பாடு, அதனைத் தாங்கிநிற்கும் இலக்கியங்கள், அதில் வெளிப்படும் வழக்காறுகள் எனப் பிரித்துப் படித்துக்காட்டியுள்ள இந்நூல் கடைசி இயலாகச் சாசனத்தில் தமிழ் இலங்கை என்ற இயலையும் கொண்டுள்ளது.

பிரிட்டானிய ஆட்சிக்காலத்தில் பல்கலைக்கழகங்கள் உருவாக்கம், அவற்றில் மொழி, இலக்கியக் கல்வியை அறிமுகம் செய்தல் போன்றன சமகாலத்தில் நடந்தன என்றாலும் அதனை உள்வாங்கிய விதத்தில் இலங்கைக்கும் -குறிப்பாகத் தமிழ் இலங்கைக்கும் தமிழ் இந்தியாவிற்கும் வேறுபாடுகள் இருந்துள்ளன. தமிழ் இந்தியா இங்கேயே கற்றுக்கொள்ளலாம் என முடிவெடுத்து ஆங்கிலேயர்களின் கையேட்டை வாங்கிப் போலச் செய்துகொண்டபோது,தமிழ் இலங்கை பிரிட்டானிய தேசத்திற்குச் சென்று கற்கும்- ஆய்வுசெய்யும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டதைப் பார்க்கிறோம். அதனால் கிடைத்த நோக்கும் பார்வைகளும் அணுகுமுறைகளும்தான் தமிழ் இலக்கிய ஆய்வை வளப்படுத்தியுள்ளன. எனது வாசிப்பின் வழியாகப். பேரா. சு.வித்தியானந்தன், சு.கணபதிப்பிள்ளை போன்றவர்கள் அதற்கு முன்கை எடுத்தவர்களென அறிகிறேன். பின் தொடர்ந்தவர்களாக ஆ. வேலுப்பிள்ளை, க.கைலாசபதி,கா.சிவத்தம்பி போன்றவர்கள் என்று உணர்கிறோம். அவர்கள் அங்கேயே சென்று கற்றார்கள் என்றாலும் தமிழ் மரபையும் வளத்தையும் கைவிடாமல் கல்விப்புலத்திற்குள் உள்வாங்கவேண்டுமென்ற புரிதலோடு கற்றுவந்துள்ளார்கள் என்பது புரிகிறது இப்படியொரு வாய்ப்பைத் தமிழ்இந்தியா உருவாக்கிக்கொள்ளவில்லை என்பதின் விளைவுகள் பற்றியும் யோசிக்கவேண்டும். அதற்கு மாறாக தமிழ் இந்தியாவுக்கு ஆங்கிலேய/ அமெரிக்கக் கல்வியாளர்களே வந்து கற்றுத்தந்திருக்கிறார்கள் என்பதும் கவனிக்கவேண்டியதாக இருக்கிறது. நிற்க.
1971 இல் முதல் பதிப்புகண்ட இந்நூல் எனது ஆய்வுக்காலத்தில் தேடிக் கண்டடையவேண்டிய நூலாக இருந்தது. கழகப்புலவர் இரா. இளங்குமரனின் இல்லநூலகத்தில் அந்நூலைக் கண்டுபிடித்து வாசித்தேன். அவர் எந்த நூலையும் மூன்று நாட்களுக்கு மட்டுமே வாசிக்கத் தருவார். அதனைக் கொடுத்தபின் அடுத்த நூலைத் தருவார். அதில் தவறினால் அந்நூலகத்தைப் பயன்படுத்த முடியாது. இப்போது -2011 இல் குமரன் புத்தக இல்லம் / கொழும்பு- சென்னை வெளியிட்டுள்ளது. வாங்கிப் படிக்கலாம்.

9 உலகத்துச் சிறந்த நாவல்கள்
2017, ஜனவரி, சென்னை புத்தகச் சந்தையில் வாங்கிவந்த நூல்களில் ஒன்று க.நா.சு.வின் ” உலகத்துச் சிறந்த நாவல்கள்”. நான் பிறந்த 1959 ஆம் ஆண்டில் வெளியான இந்நூலை டிஸ்கவரி புக்பேலஸ் இப்போது (மே,2016)வெளியிட்டுள்ளது. டிஸ்கவரி புக்பேலஸின் முதல் பதிப்பு எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இடையில் வேறு பதிப்புகள் வந்திருக்கும் என்றே நினைக்கிறேன். இந்நூலில் 15 பிறமொழி நாவல்களைத் தமிழில் அறிமுகம் செய்துள்ளார் க.நா.சுப்பிரமண்யம்.
உலக இலக்கியமென ஒன்று தனியாக இருக்க வாய்ப்புகள் குறைவு என்னும் கருத்துகள் வலுப்பெற்றுவரும் காலமிது. அப்படியிருந்தால் எந்தமொழியில் இருக்கும் இலக்கியத்தை உலக இலக்கியமாக வரையறை செய்வது என்ற கேள்விக்கு விடைசொல்ல இயலாது. அதேநேரத்தில் உலகமொழிகள் ஒவ்வொன்றிலும் எழுதப்படும் பொதுமையான உரிப்பொருள்கள் (CONTENT) சிலவற்றை அடையாளப் படுத்த முடியும்; அவ்வுரிப்பொருள்களை மையப்படுத்தி எழுதப்படும் எழுத்துகளில் வெளிப்படும் கலையியல் நோக்கும் அழகியல் கூறுகளும் வளர்ச்சியடைந்த மொழிகளின் இலக்கியங்களில் காணப்படுகின்றன. அவற்றை உலக இலக்கியக் கூறுகள் என வரையறை செய்வதில் சிக்கல்கள் இருக்க வாய்ப்பில்லை.

தான் வாசித்த நாவல்களில் வெளிப்படும் உரிப்பொருள்களையும் அவற்றின் வெளிப்பாட்டு முறைகளையும் தமிழுக்கு அறிமுகப்படுத்தவேண்டும் என்ற நோக்கத்தோடு தமிழில் இயங்கியவர் க.நா. சு. என்பதைத் திரும்பச் சொல்ல வேண்டியதில்லை. தொடர்ச்சியாகத் தான் தொடர்புகொண்டிருந்த இதழ்களின் தேவைக்காக இந்தக் கட்டுரைகளை எழுதினார் என்றாலும், அவரது தேர்வும் அறிமுகப்படுத்திய முறையும் விவாதத்திற்கப்பாற்பட்டது எனப் பலரும் சொல்லக் கேட்டிருக்கின்றேன். அறிமுகம் செய்ய விரும்பும் நாவல்களின் பாத்திரங்களுக்கிடையேயுள்ள உறவுகளை முதலில் தருவது அவரது பாணி. தொடர்ந்து அந்நாவலை எழுதியவரின் இடம் - அவர் எழுதிய மொழியிலும் உலக அளவிலும் எத்தகையது எனச் சொல்வார். பிறகு நாவலின் கதைச் சுருக்கத்தை கதையாகச் சொல்லாமல், நாவல் முன்வைக்கும் விவாதத்தோடு இணைத்துச் சொல்வார். இம்மூன்று கூறுகளையும் தந்துவிட்டு முழுமையாகப் படிக்க வேண்டுமென்றும் வலியுறுத்துள்ளார். க.நா.சு.வேகூட இந்த நாவல்களை வேறு ஒரு ரூபத்திலும் தமிழில் அறிமுகப்படுத்தியுள்ளார். பாவை சந்திரனின் ஆசிரியத்துவத்தில் குங்குமக் குழுவின் இதழ்களில் ஒன்றான முத்தாரத்தில் 33 நாவல்களைச் சுருக்கமாகக் கதைசொல்லி அறிமுகப்படுத்தினார். அந்தக் கட்டுரைகளை 1988 இல் ஸ்டார் பிரசுரம் நூலாக வெளியிட்டது. டிஸ்கவரி புக்பேலஸின் வெளியீட்டில் விரிவாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள பெரும்பாலான நூல்கள் பற்றிய சுருக்கமான அறிமுகங்கள் அந்நூலிலும் உள்ளன. அந்நூல் இப்போது கிடைக்கவாய்ப்பில்லை. நூல்கங்களில் இருக்கக்கூடும். உலக இலக்கியத்தோடு - நாவல்களோடு அறிமுகம் வேண்டுமென நினைப்பவர்கள் டிஸ்கவரி வெளியீட்டையே வாங்கிப் படிக்கலாம்.
இந்த நூலை எனது முதுகலைப் படிப்புக்காலத்தில் ஒருமுறை வாசித்திருக்கிறேன். இந்நூலைப் படிப்பதற்கும் முன்பு அவரது மொழிபெயர்ப்பில் நான் வாசித்த குறுநாவல் தேவமலர்.தேவமலர் தனியாக இல்லாமல் வேறொரு குறுநாவலோடு இணைத்தே வந்திருந்தது. அட்டையில் அன்புவழி என்று இருந்ததாக ஞாபகம். சுவீடிஷ் பெண்ணெழுத்தாளரான ஸெல்மா லாகர்லெவ்வின் தேவமலரை வாசித்தபோது மொழிபெயர்ப்பை வாசிக்கும் உணர்வு எதுவும் தோன்றவில்லை. அதற்கு முன்பு மாஸ்கோவின் முன்னேற்றப்பதிப்பக வெளியீடுகளில் இத்தகைய உணர்வு ஏற்பட்ட மொழிபெயர்ப்பு நாவல்கள் இரண்டு: வஸிலெவ்யெவின் அதிகாலையின் அமைதியில், கார்க்கியின் தாய்.

8 கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள்
சென்னை,108. தியாகராயர் நகர் உஸ்மான் சாலையிலிருந்த பாரதி நிலையம் வெளியிட்ட ’ கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள் மூன்றாம் பதிப்பு வந்த ஆண்டு1986. அதில் இடம்பெற்றுள்ள 'என்னுரை'என்னும் பகுதியில்,' தொகுத்த தமிழ்க்கனி பதிப்பகத்தாருக்கும் வெளியிட்ட பாரதி பதிப்பகத்தாருக்கும் நன்றி' எனத் திரு மு.கருணாநிதி குறிப்பிட்டுள்ளார். அப்படிக்குறிப்பிட்டுள்ள ஆண்டு 1971. இந்தத் தொகுப்பை வெளியிட்ட காலகட்டத்தில் பாரதி பதிப்பகம் அவரது பலவகையான நூல்களையும் வெளியிட்ட பதிப்பக இருந்ததைக் கடைசிப்பக்கக் குறிப்பு தெரிவிக்கின்றது.

தமிழ் நவீனத்துவத்தின் பலவகைகளையும், அவற்றின் வகைமாதிரி எழுத்துகளையும் புனைகதைகளின் வழியாக அறிமுகம் செய்யும் ஒரு பாடத்திட்டத்தைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டபோது கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள் என்ற இந்த நூலைத் திரும்பவும் தேடியெடுத்துப் படித்தேன்.திராவிட இயக்க எழுத்தின் வகைமாதிரிக்கு இப்போதும் கலைஞரின் கதையைத்தான் தெரிவுசெய்யவேண்டியுள்ளது என்பது அவ்வியக்கம் கலை,இலக்கியங்களைக் கைவிட்டுவிட்டு முழுவதும் அரசியல் இயக்கமாக ஆகிவிட்டதின் அடையாளம்; வருத்தமான ஒன்று. அவரைப்போலத் திராவிட இயக்கக் கருத்தியலையும் இலக்கியக் கோட்பாட்டையும் உள்வாங்கி மொழியைப் புதுக்கிக் கதைகள் எழுதிய பலரும் இருக்கிறார்கள் என்றாலும், அவர்கள் தங்களை வெளிப்படையாக அதன் வாரிசுகளெனச் சொல்லிக்கொள்வதில்லையென்பதற்கும் காரணங்கள் இருக்கின்றன. இருக்கட்டும்.
280 பக்கங்களில் 37 கதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. சிறுகதையின் வடிவம், உத்தி போன்றவற்றை வரையறை செய்து முன்வைத்த மேற்கத்தியத் திறனாய்வாளர்கள் சொல்வனவற்றை மீறாமலேயே இத்தொகுப்பிலிருக்கும் பலகதைகள் இருக்கின்றன. ஆர்வமூட்டும் ஆரம்பம், உரையாடல் வழி ஆரம்பம், எச்சரிக்கையைக் குறிப்பாக முன்வைத்துக் கதையைச் சொல்லும் தன்மை, வாசகரை விளித்துத் தான் எழுதும் பாத்திரத்தைப் பற்றிய குறிப்பை முன்வைக்கும் தன்மை எனப் புதுமைப்பித்தன் கையாண்ட கதைத் தொடக்க உத்திகள் கலைஞரிடமும் உள்ளன. உருவம், உத்தி சார்ந்து தமிழின் நவீனத்துவ எழுத்தாளர்கள் செய்துள்ள அனைத்து வகையான சோதனைகளையும் செய்து பார்த்துள்ளார் கலைஞர். ஆனாலும் நவீனத்துவ விமரிசகர்களின் கவனத்தைப் பெறாமலேயே போனதின் காரணத்தைத் தேடினால், தமிழ்க்கலை இலக்கியப் பார்வைகளின் பிளவுகளும், அதன் பின்னணிகளும் புரியவரலாம்.

ஐரோப்பிய நவீனத்துவத்தைத் தமிழர்கள் உள்வாங்கியதில் ஒற்றைத்தன்மை மட்டுமே இல்லை. கதைசொல்லும் முறையில் அனைத்துத் தரப்பினரும் எல்லாவகையான சோதனைகளையும் உடன்பாட்டோடு முயற்சிசெய்தாலும் வாழ்க்கைபற்றிய பார்வையை வெளிப்படுத்தும் பாத்திரங்களைத் தெரிவுசெய்வதில் வேறுபாடுகள் இருக்கின்றன. தனிமனித வாழ்க்கையைப் பொதுவெளியின் வாழ்க்கையோடு இணைத்துப் பார்க்காமல், தனிமனிதர்களின் அகமாகப் பார்க்கவேண்டும்; உளவியல் சிக்கல்களாக அணுகவேண்டும் என வலியுறுத்தும் போக்கு ஒன்று உண்டு. அப்படிப்பார்க்கும்போது ஒவ்வொருவரின் வாழ்க்கைக்குள்ளும் இருக்கும் அறம் மீறும் கணங்களும் அதனால் உண்டாகும் குற்ற உணர்வுகளுமே மேன்மையான எழுத்திற்குரியன என்றொரு பார்வையை நவீனத்துவம் முன்வைக்கிறது. தனிமனிதர்களின் இயலாமை, கழிவிரக்கம், கடவுளின் கருணைக்கும், மற்ற மனிதர்களின் இரக்கத்திற்கும் ஏங்குதல், தற்கொலையைத் தரிசனமாகக் காணுதல் போன்ற துன்பியலின் பரிமாணங்களே உன்னதமான இலக்கியத்தின் பாடுபொருள்கள் என அது நம்பியது. இந்த நம்பிக்கையும் உள்ளார்ந்த விசாரணைகளும் இந்திய ஆன்மீகத்திற்கும் உடன்பாடானது. ஜீவாத்மா, பரமாத்மா இவற்றின் இணைவு அல்லது விலகல் பற்றிய விசாரணைகளைத் தொடர்ந்து இலக்கியத்தின் சொல்லாடலாக நடத்திவந்தவர்கள் அந்தப் போக்கை வரித்துக்கொண்டு வெளிப்படுத்தினார்கள். இந்த உள்ளடக்கத்திற்கேற்ற மொழியையும் சொல்முறைகளையும் உருவாக்கி நவீனத்துவம் என்பதே அதுதான் என நிறுவினார்கள்.
இந்திய ஆன்மீகத்தோடு இணையாத மேற்கத்திய நவீனத்துவ மரபும் உண்டு. தனிமனித வாழ்க்கையை முயற்சியின் பெருமிதமாகவும், சேர்ந்துவாழ்தலின் வழியாகத் துயரங்களை வென்றெடுத்தலாகவும் பார்க்கும் பார்வை அது. மனத்தின் விழிப்புணர்வு என்ற நவீனத்துவப்புரிதலுக்கு மாற்றானது. சமூகத்தின் விழிப்புணர்வின் பகுதியாகத் தனிமனித விழிப்புணர்வு நடக்கும் என்ற நம்பிக்கையை முன்வைக்கும் எழுத்துவகையே அதன் வெளிப்பாட்டு வடிவம். அத்தகைய பார்வையின் - இலக்கிய வெளிப்பாட்டின்- வகை மாதிரிகளைத் தமிழில் திராவிட இயக்க எழுத்துகளாகவும், இடதுசாரி எழுத்துகளாகவும் அடையாளம் காணலாம். கலைஞர் கருணாநிதியின் கதைகள் என்னும் இத்தொகுப்பில் அத்தகைய கதைகளே நிரம்பியுள்ளன. தேடிப்பிடித்துப் பாருங்கள்
7 தமிழில் வட்டாரநாவல்கள்
1991 ஆம் ஆண்டில் வெளிவந்த காவ்யாவின் வெளியீடான "தமிழில் வட்டாரநாவல்கள்" என்னும் நூலைத் திரும்பவும் வாசிக்கவேண்டிய கட்டாயத்தை இந்தக் கல்வியாண்டில் (2016-17) உருவாக்கிக்கொண்டேன். திருநெல்வேலியின் முக்கியமான நூலகங்களில் தேடிய மாணாக்கர்கள் கிடைக்கவில்லை என்றார்கள். கடைசியாக சண்முகசுந்தரமிடமே கேட்டுவிடலாமென்று தொலைபேசியில் அழைத்தபோது கைவசம் இல்லையென்றார். இருந்தால் நகல்போட்டு அனுப்புங்கள்; பணம் அனுப்புகிறேன் என்றார் . தொடர்ந்து பதிப்பக அரசியலெல்லாம் பேசிவிட்டு, அந்த நூலின் முக்கியத்துவத்தையும் திருத்திய பதிப்பாக அந்நூல் வரவேண்டிய அவசியத்தையும் சொன்னபோது கொஞ்சம் இறங்கிவந்தார். கைவசம் 3 பிரதிகள் இருக்கிறது; ஒன்றை அனுப்பிவைக்கிறேன் என்று சொல்லி அனுப்பிவைத்தார்.

தமிழில் நாவல் எழுத நினைப்பவர்களும் ஆய்வுசெய்ய நினைப்பவர்களும் படிக்கவேண்டிய பார்வை நூல்களாகப் பத்துநூல்களையாவது பட்டியலிடலாம். எழுத நினைப்பவர்கள் இதுபோன்ற நூல்களை வாசிப்பதில்லை என்பது தெரிந்த்துதான். ஆனால் ஆய்வாளர்கள் அப்படியொரு பட்டியலை உருவாக்கிக்கொள்ளவேண்டும். கட்டாயம் வாசிக்கவேண்டிய முதல் ஐந்துக்குள் இந்த வலியுறுத்துவேன். தமிழில் அதுவரை வந்துள்ள நாவல்களின் பட்டியலைப் பல்வேறு நோக்கில் பிரித்துத் தரலாம் என்றாலும் அந்தக் காலகட்டத்தில் தீவிரப்பட்ட “வட்டார எழுத்து” என்ற கருத்தியல் தளத்தில் வைத்துச் சாத்தியமான விவாதங்களோடு கூடிய முதல் இயலைத் தொடர்ந்து நிலவியல் பின்னணியில் -நாஞ்சில், நெல்லை, முகவை,மதுரை, தஞ்சை,கொங்கு, புதுவை- எனப் பிரித்துக்காட்டியிருக்கிறார் சண்முகசுந்தரம். இறுதியியலில் இந்நாவல்களை நாட்டுப்புறவியல், மொழியியல்,பண்பாட்டியல் நோக்கில் எவ்வாறெல்லாம் விவாதிக்கலாம் என்பதற்கான அடிப்படைகளையும் முன்வைத்துள்ளார்.இந்த இயல் பிரிப்பும், பின்னிணைப்பாகத் தரப்பட்டுள்ள நாவல்களின் பெயர்ப்பட்டியலும் இன்றைய வாசகர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் பயன்படக்கூடிய ஒன்று.

முடிந்த கல்வியாண்டில் நான்கு ஆய்வியல் நிறைஞர் பட்ட மாணவ மாணவிகள்”வெளியை எழுதும் பின்னணியில்”என்ற பொதுத்தலைப்பில் - இரா.முருகவேள், வேல.ராமமூர்த்தி, தஞ்சை ப்ரகாஷ், விநாயகமுருகன் ஆகியோரின் இரண்டிரண்டு நாவல்களை ஆய்வுசெய்தார்கள். இப்படிச் செய்யப்படும் ஆய்வுகள் நூறுசதவீதம் சரியாகச் செய்யப்பட்டிருக்கும் என்பதில்லை. சிலர் தேர்ச்சிபெறும் அளவுக்கு எழுதுவார்கள்; சிலர் இரண்டாம் வகுப்பும், சிலர் முதல்வகுப்பும் வாங்குவார்கள். யாராவதொருவர் சிறந்த ஆய்வொன்றை உருவாக்கிவிடுவார். ஒருநெறியாளராகவும் இக்கால இலக்கியங்களை ஆய்வுசெய்யத்தூண்டும் ஆசிரியராகவும் நான் எதிர்பார்ப்பது ஒவ்வொரு வருடத்திலும் சிலருக்கு இலக்கிய வாசிப்பு ருசியையும் ஆய்வுமனோபாவத்தையும் உண்டாக்கவேண்டும் என்பது மட்டும்தான்.கவிதை, நாவல், நாடகம், சிறுகதை வாசிப்பவராக உருவாக்கப்படுபவர், ருசிகண்ட பூனையாக நல்ல வாசகராகவும், ஆய்வின்பக்கம் திரும்பி நல்ல ஆய்வாளராகவும் ஆவார்கள் என்ற நம்பிக்கையின் வெளிப்பாடு அது. 

முதல்பதிப்பு வந்தபோது வாங்கிவாசித்த பலநூல்கள் இப்போது கைவசம் இல்லை. தருவதாகச் சொல்லி வாங்கியவர்கள் திருப்பித்தராமல் போவதுண்டு. ஆய்வுக்காக வாசித்துப் பயன்படுத்துவார்கள் என்று நம்பிக்கைதரும் மாணாக்கர்களுக்குக் கொடுத்த நூல்களைத் திரும்பவும் வாங்காமல் வைத்துக்கொள்ளவும் சொல்லிவிடுவேன். அப்படி வைத்துக்கொள்ளும்படி சொன்ன நூல்களில் இதுவுமொன்று. இப்போது திரும்பவும் என் கைக்கு வந்துள்ளது.இந்நூலின் முதன்மை நோக்கத்தோடு இயைந்து இன்றுவரையிலான தகவல்களை இணைத்து இன்னொரு நூலை உருவாக்கினால் நல்லது என்று தோன்றுகிறது. நான் செய்யவில்லையென்றாலும் யாரையாவது செய்யத்தூண்டவேண்டும்.
6 டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர்.
ஒருவரது செயல்பாடுகளும் சிந்தனைகளும் நம்மை நெருங்கிவந்துவிடும் நிலையில் அவரது வரலாற்றை அறியும் ஆசை வந்துவிடும். அறியப்பட்ட வரலாற்றின் பகுதிகள் போதாமையைத் தருகின்றபோது முழுமையான வரலாறு கிடைக்குமா? எனத் தேடத்தொடங்கும் மனம் எங்காவது ஒரு புத்தகத்தில் திருப்தி அடையக்கூடும். அம்பேத்கரின் சிந்தனைகள்,தேவைகள், செயல்பாடுகள், சாதனைகள் எனப்பலவற்றை அறிந்த நிலையில் 1990 - களின் தலித் இயக்கப்போக்கோடு இணையும் வாய்ப்புகள் நெருங்கிவந்தன. அப்போது அம்பேத்கரின் வரலாற்றை நிதானமாகவும் முழுமையாகவும் சொல்லும் ஒரு நூலைத் தேடியது மனம். தேடியதை நிறைவுசெய்யும்விதமாகக் கிடைத்தது இந்த நூல்
”தேசிய வரலாற்று வரிசை” என்னும் திட்டத்தின் பகுதியாக வசந்த் மூன் மராத்தியில் எழுதிய நூல் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர்.அந்த நூல் அம்பேத்கரின் வரலாற்றை முழுமையாகத் தருவதோடு, மாமனிதர்களின் வரலாற்றை எழுதும் முறையியலையும் முன்வைக்கும் ஒன்று எனச் சொல்வேன். வரலாற்றை எழுதுவதற்கான ஆதாரங்களைத் திரட்டுவதில் தொடங்கி, எழுதப்போகும் மனிதரின் சிந்தனை, செயல்பாடுகள், நிலைப்பாடுகள் என்பன வாழ்க்கையின் போக்கோடு இணைந்து வளர்ந்ததை முன்வைக்கும் பாங்கையும் வசந்த்மூன் விவரித்துள்ள விதம் கவனிக்கத்தக்க ஒன்று. 1991 இல் மராத்திய மொழியில் வெளியான நூலின் தமிழாக்கத்தைத் தந்தவர் டாக்டர் என். ஸ்ரீதரன். 1995 இல் நேஷனல் புக் ட்ரஸ்டின் வெளியீடாக வந்தபோது அதன் விலை ரூ 43. திரும்பவும் அந்நிறுவனம் வெளியிட்டிருக்கக்கூடும். வாங்கிப் படித்துப் பார்க்கவேண்டிய நூலும் வரலாறும் என்பதில் இரண்டாவது கருத்தே இல்லை
5 சங்ககால வாழ்வியல்
1986 இல் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட இந்நூலின் ஆங்கிலத் தலைப்பு .சங்கம் பாலிட்டி(Tamil Polity) கதை,கவிதை வாசிப்பதிலும் அரசியல் விவாதங்களை முன்வைக்கும் மொழிபெயர்ப்பு நூல்களை வாசித்து விவாதிப்பதிலும் ஆர்வத்தோடு இருந்த என்னைத் திசைதிருப்பியது எனது முனைவர் பட்ட ஆய்வு. தமிழ்நாட்டின் வரலாற்றை இலக்கியங்களின் துணை இல்லாமல் எழுதமுடியாது என்ற கருத்தில் பிடிமானம் கொண்டிருந்த எனது நெறியாளர் தி.சு. நடராசன் அத்தகையதொரு ஆய்வை நீ செய்யவேண்டும் என்றார். நாயக்கர்கால இலக்கியங்களிலிருந்து தமிழக வரலாற்றை எழுதுவதற்கான சான்றுகளைத் தேடி வரலாறெழுதியலுக்கு உதவவேண்டுமென்றார். முதலில் மறுத்தேன். மறுத்ததற்கு மறைமுகமான காரணங்களும் வெளிப்படையான காரணங்களும் இருந்தன. அத்தோடு எனது இயலாமையும் இருந்தது. “ இக்கால இலக்கியங்களை வாசித்துச் சுகம்கண்ட உங்களைப் போன்றவர்களுக்குத் தமிழ் இலக்கியப்பாரம்பரியம் புரியாது" எனக் கிண்டலடித்து உசுப்பேற்றினார். அதன் பின்னர் சவாலாக ஏற்றுக்கொண்டு ஆய்வைத் தொடங்கினேன்.

தொடங்கிய காலத்தில் அவர் சொன்னவை: பல்லவர் கால வரலாற்றை எழுதியுள்ள மா. ராசமாணிக்கனாரின் ஆய்வுக்கு மேலும் வலுச்சேர்க்க ஆதாரமான தமிழ் இலக்கியப்பரப்பு அதிகம் இல்லை. ஆனால் சோழர்காலப் பின்னணியில் ஏராளமான நூல்கள் இருக்கின்றன. பிற்காலச் சோழர்காலத்தை பற்றிய வரலாற்று நூல்களாக சதாசிவ பண்டாரத்தார், நீலகண்ட சாஸ்திரி போன்றவர்களின் நூல்கள் வந்துள்ளன. அவ்விரு நூல்களின் முன்வைப்புகளை ஏற்றும் மறுத்தும் மே.து.ராஜ்குமார், க.கைலாசபதி, போன்றவர்கள் கட்டுரைகளும் நூல்களும் எழுதுகின்றனர். அதன் தொடர்ச்சியாக நாயக்கர்கால இலக்கியங்களை ஆய்வுக்கு எடுத்துக்கொள்ள வேண்டுமென்று வலியுறுத்தினார். 

அந்த ஆய்வுக்கான முன்னோடியாக-முன்மாதிரிகளாக- சொன்ன நூல்களில் ஒன்று சங்கம் பாலிட்டி (Tamil Polity)சங்ககாலத்தின் அரசியல், பொருளியல், பண்பாட்டு முறைகளை இலக்கியம் மற்றும் வரலாற்றுச் சான்றுகளின் பின்னணியில் ஆய்வுசெய்த நூல் அது. ஆங்கிலத்தில் வாசித்த அந்த நூலின் தமிழாக்கம் எனது ஆய்வுக்கு உதவவில்லை.நான் முடித்த பின்பே வந்தது. தமிழில் வந்தபோது திரும்பவும் படித்தேன். 2010 இல் மறுபதிப்பாகவும் வந்துள்ளது. அனைவரும் தேடிப்படிக்கவேண்டிய நூல்களில் ஒன்று ந.சுப்பிரமணியனின் சங்ககால வாழ்வியல். நியூசெஞ்சுரி புத்தக நிலையம் வெளியிட்டுள்ளது.
தமிழ் இலக்கியத்தை ஆழமாகக் கற்றலை விரும்பும் ஒருவர் வாசிக்கவேண்டிய நூல்கள் சில உண்டு. அவற்றை எழுதிய/ தொகுத்தளித்த அறிஞர்களின் பணியைப் பாராட்டவேண்டும். அவர்களின் பணிமுறைமையையும் ஆய்வுநோக்கத்தையும் அடுத்த தலைமுறைக்குக் கையளிக்கவேண்டும். ஒவ்வொரு ஆசிரியருக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட தலைசிறந்த நூல்கள் இருக்கும் என்றாலும் ஏதாவது ஒருநூலையாவது வாசித்துப் பயிற்சிசெய்வது ஆய்வாளருக்குப் பயன்படும். அத்தகைய நூல்களை எழுதிய ஆசிரியர்களின் அனைத்து நூல்களும் முழுமையான ஆழத்தோடும் அகலத்தோடும் இருக்குமென்று நினைக்கவேண்டியதில்லை. சிலரின் கவனிக்கத்தக்க - தேடிப்படிக்கவேண்டிய நூல்களை இங்கே சுட்டிக்காட்டுகிறேன்.
4 தமிழ்ப் பக்தி இலக்கியங்கள்

சாகித்ய அகாதெமி தமிழுக்குச் செய்த பணிகளில் இந்தத் தொகுப்பைக் கொண்டு வந்ததை முதன்மைப் பணியெனச் சொல்வேன். தமிழ்ப் பக்தி இயக்கம்/இலக்கியம் இருபெரும் போக்குகள் கொண்டது. கடவுள், அதன் வடிவம்,மனிதனுக்குக் கடவுளின் தேவை,இதன் மறுதலையாகக் கடவுளுக்கு மனிதர்களின் தேவை, தேவையை நிறைவேற்றிக் கொள்ள இருமுனைகளில் இருக்கும் ஆத்மாக்களும் மேற்கொள்ளும் முயற்சிகளும் உத்திகளும் சொல்லாடலாக அலையும் தளம் பக்தியின் தளம்.

இத்தளத்தை வைணவமாகவும் சைவமாகவும் பிரிப்பது புரிந்து கொள்ள நினைப்பதின் எளிய வெளிப்பாடு மட்டும்தான். பொருள்தேடும் வாழ்க்கை தரும்நெருக்கடியிலிருந்து தப்பித்து விடமுடியும் ;தப்பிக்க வேண்டும் என்பதைக் கவனமாகக் கொள்ளும் மனிதர்கள் உருவாக்குவது பக்தி என்னும் அரூபம்.பொருள் நிராகரிப்பு பக்தி கவிதைகளில் வெளிப்பட்டாலும், காதலையும் காமத்தையும் கடவுளிடமிருந்து எளிதாகப் பெற நினைப்பதைத் தமிழ்ப் பக்திக்கவிதைகள் வெளிப்படுத்துகின்றன.

அகமரபின் நீட்சியாகத் தமிழ்ப் பக்திக் கவிதைகளை வாசித்து அதன் அழகியலைப் பேசும் தமிழாய்வு மரபு வளர்த்தெடுக்கப்படவேண்டிய ஒன்று. அதனை இந்நூலில் கோடிட்டுக் காட்டியுள்ளார் பேரா.அ.அ.மணவாளன்.அவர் எழுதியுள்ள முன்னுரையை ஆங்கிலத்தில் எழுதி, தொகுப்பிலுள்ள கவிதைகளில் பாதியை மொழிபெயர்த்து தந்தாலே தமிழ்க்கவிதை மரபின் குறிப்பிட்ட காலப்பகுதி உலக இலக்கியத்தின-மு பகுதியாகிவிடும். முக்கியமான காலப்பகுதி துலக்கும் பெறும். 
கல்விப்புலத்தினர்கூட அதிகம் கவனிக்காமல் கைவிட்ட பக்தி கவிதைகளை வாசிக்க இத்தொகுப்பு உதவும். தேடிப் படித்துப் பார்க்கலாம்.


3 மகடூஉ முன்னிலை

ஒவ்வொரு துறையிலும் தீவிரமான செயல்பாடுகளைப் பற்றிப் பேசும்போது பயன்படுத்தப்படும் சொற்றொடர் ஆழம் அகலம். ஆழமும் அகலமும் இணைந்து வெளிப்படுதல் வரவேற்கத்தக்கது; தேவையானது. இரண்டையும் இணைத்துத் தங்களை வெளிப்படுத்தியவர்கள் அவ்வத் துறையின் முன்னோடிகளாக - முதன்மைச் சிந்தனையாளர்களாக - முன்மாதிரிகளாக ஆகிவிடுவார்கள். தமிழ் இலக்கியப்பரப்பில் - குறிப்பாகக் கல்விப்புலப்பரப்பில்


இத்தகைய முன்னோடிகளாகப் பலரைச் சுட்டிக்காட்டலாம். சுட்டிக்காட்டுவதற்கான காரணங்களையும் முன்வைக்க முடியும். ஆனால் படைப்பிலக்கியப் பரப்பில் முக்கியமானவர்; முதன்மையானவர் எனச் சுட்டிக்காட்டும்போது காரணங்கள் சொல்லப்படுவதில்லை. காரணங்கள் சொல்லாமல் முன்வைக்கப்படும் பெயர்களை - ஏற்பதில் எப்போதும் சிக்கலுண்டு. படைப்பிலக்கியவாதிகள் முன்வைக்கும் பெயர்களைக் கல்விப்புலத்தினர் கவனிக்காமல் கடந்துபோவதற்கு இதுவுமொரு காரணம்.

ஆழமான கருத்தியல் விவாதம் செய்யாமலேயே கூடப் பலர் முக்கியமான பங்களிப்பைச் செய்துவிட முடியும். முனைவர் தாயம்மாள் அறவாணன் அப்படியொரு பங்களிப்புச் செய்தவர். அவரது,
“ மகடூஉ முன்னிலை-பெண்புலவர் களஞ்சியம் / ஆதிமந்திமுதல் ஆண்டாள்வரை”

என்ற விரிவான தலைப்பிலுள்ள நூலைப் பிரித்துப் பார்த்தாலே அவரது விரிவான/ அகலமான பணிகள் புலப்படும்.700 பக்க நூலுக்கு 9 பக்கத்தில் உள்ளடக்க விவரங்களைத் தந்துள்ளார். அந்த உள்ளடக்கவிவரங்களே வாசிப்பவர்களுக்குப் பலவிதமான தூண்டுதல்களைத் தரவல்லது. மகடூஉ முன்னிலை எனும் உருவுக்குக் கரு அமைந்த வரலாறு என்ற முன்னுரையை வாசித்துவிட்டால் போதும்; நூலை முழுமையாகப் படிக்கும் ஆர்வம் தொற்றிக்கொள்ளும். ஆமாம்; வாசிப்பு ஒரு தொற்றுநோய்தான். அதனைப் பலருக்கும் தருவதில் எனக்கு விருப்பமுண்டு. அந்த விருப்பத்தின்பேரில்தான் இதைப் பரிந்துரைக்கிறேன்.
பெண்ணெழுத்து பற்றிய விழிப்புணர்வு துலங்கலாக இருப்பதாக நம்பும் காலம் இது. இந்தக் காலம் பயன்படுத்திக்கொள்ளும் என்ற நம்பிக்கையோடு 2011 இல் புதுக்கிய மூன்றாவது பதிப்பாக வெளியிட்டார். இந்நூலை ஆய்வாளர்கள் மட்டுமல்லாமல் பெண்ணெழுத்தில் ஈடுபடும் ஆர்வமுள்ள பெண்களும் படிக்கவேண்டும். அவர்களோடு உரையாடல் செய்யவிரும்பும் ஆண்களும் தேடிப் படித்துப்பார்க்கலாம்.

2 தமிழ் இலக்கிய சரிதத்தில் காவியகாலம்
இப்போது உருவாக்கப்படும் பாடத்திட்டங்களில் இலக்கிய வரலாறுகளின்டுத்தலென சமாதானமடைவதைத தவிர வேறுவழியில்லை. அது போகட்டும்.
இடம் கேள்விக்குள்ளாகிவருகின்றது. “எளிமையிலிருந்து கடினத்திற்கு” என்றொரு கற்பித்தல் நிலையை முன்வைத்து வரலாற்றை ஆதியிலிருந்து தொடங்கி வரிசையாகப் படிக்காமல், தலைகீழாகப் படிப்பதை நியாயப்படுத்தும் ஆசிரியர்கள் நிரம்பியதாகப் பாடத்திட்டக்குழுக்கள் அமைந்துவிட்டன. பெரும்பான்மையோடு சண்டையிட்டுத் தோல்வியைத் தழுவியதுதான் மிச்சம். பெரும்பான்மையிடம் சிறுபான்மை அடைவது தோல்வியல்ல; விட்டுக்கொடுத்தல்.

மொழி, இலக்கியக்கல்வியைப் பகுதி ஒன்று அல்லது பகுதி இரண்டில் கற்பவர்களுக்கான இலக்கிய வரலாறும்,பட்டப்படிப்பிலும் முதுகலைப்படிப்பிலும் இலக்கியக்கல்வியைச் சிறப்புப்பாடங்களாகப் படிப்பவர்களுக்கான இலக்கியவரலாறும் ஒன்றுபோல் இருக்கமுடியாது; இருக்கக்கூடாது. நான் பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு படித்த காலத்தில் இந்த வேறுபாட்டை உணர்ந்தநிலையில் இலக்கியவரலாறுகள் கற்றுத்தரப்பட்டன; அறிமுகப்படுத்தப்பட்டன். எம்.ஆர். அடைக்கலசாமி வழியாக அறிமுகமான தமிழ் இலக்கியவரலாறு மு.வரதராசனின் நூல் வழியாக அதிகம் விரிவடையவில்லை. ஆனால் கா.சு.பிள்ளையின் இரண்டு பகுதிகள் வழியாகவும், மு.அருணாசலத்தின் நூற்றாண்டு அடிப்படையிலான இலக்கிய வரலாறுகள் ( 9 முதல் 14 ஆம் நூற்றாண்டுவரை பல பாகங்களில் எழுதியுள்ளார்) தமிழ் இலக்கியப்பரப்பின் விரிவைக் கூட்டின. அதே நேரத்தில் ஆ.வேலுப்பிள்ளையின் தமிழ் இலக்கியத்தில் காலமும் கருத்தும் வேறுவகையாகத் தமிழ் இலக்கியப்பரப்பை - கருத்தியல் வளர்ச்சியை அறிமுகம் செய்தது.
மொத்த வரலாற்றை அறிந்த நிலையில் தனித்தனி இலக்கிய வகைகளின் வரலாறுகளைத் தேடும்போது நீண்டகாலம் என் பையிலும் கையிலும் இருந்த நூல் எஸ்.வையாபுரிப்பிள்ளையின் தமிழ் இலக்கிய சரிதத்தில் காவிய காலம் என்பது. பிள்ளையின் விவாதமும் விளக்கங்களும் விவரிப்பு முறையும் என்னை ஈர்த்தது. அவரது முடிவுகள் பலவும் அந்த நேரத்திலும் ஏற்கத்தக்கனவாக இருந்ததில்லை; இப்போதும்கூட ஏற்கமுடியாத முடிவுகள் பல உண்டு. தமிழின் சிலப்பதிகாரத்தையும் மணிமேகலையையும் காவியம் அல்லது காப்பியம் என வரையறை செய்வதில் எனக்கு ஏற்பில்லை. தொல்காப்பியம் கூறும் தொடர்நிலைச் செய்யுள் என்பதை விரிவாகப் பேசி நிறுவாமல் காவியம் எனக் காட்டுவதில் தீவிரம் காட்டியிருக்கிறாரோ என்ற ஐயம் உண்டு. அந்த ஐயங்களை மறுத்து விவாதிக்கும் நூல்கள் எதுவும் எழுதப்படாமலேயே நிராகரிக்கப்பட்டு ஒதுக்கப்பட்டன. என்றாலும் இலக்கியக்கல்வியில் ஆழம் தேடும் ஒருவர் தேடிக் கற்கவேண்டிய நூலாக இதைத் திரும்பவும் பரிந்துரை செய்வேன்.
1 சமுதாய இலக்கியம்
ஒரு எழுத்தாளர் பல்வேறு வடிவங்களையும் முயன்றுபார்க்கப் பல சாந்தி இதழின் தேவைக்காக மட்டுமல்லாமல், தனது விருப்பம் காரணமாகவே
காரணங்கள் உண்டு. இதழொன்றைத் தொடங்கி நடத்தத்தொடங்கினால் அப்படியொரு நெருக்கடி தானாகவே உண்டாகிவிடும். நவீனத்தமிழ் இலக்கியத்திற்குப் புதிய எழுத்தாளர்களையும் புதிய எழுத்துவகைகளையும் அறிமுகம் செய்த இதழ்களில் ஒன்று தொ.மு.சி.யின் சாந்தி. 
எழுத்துவடிவங்கள் பலவற்றையும் முயன்றுபார்த்து வெற்றிபெற்றவர் தொ.மு.சிதம்பரரகுநாதன் . ஒவ்வொரு வடிவத்திலும் முன்னோடியாக விளங்கவேண்டும் என்ற ஆசை அவருக்கு இருந்திருக்கவேண்டும். அதன் காரணமாகத் தான் முயன்ற ஒவ்வொரு வேலையிலும் முக்கியமான எழுத்துகளைத் தந்திருக்கிறார் அவர். நேரடித் தமிழ்நாவலை வாசிப்பதைப்போல அவர் மொழிபெயர்த்த மார்க்சிம் கார்க்கியின் தாய் நாவலை வாசித்திருக்கிறேன். அவரது பஞ்சும் பசியும் தமிழ் நாவல் வகைகளில் சோசலிச யதார்த்தவாதத்தை முன்வைத்து எழுதப்பெற்ற புனைகதைப் போக்கின் முன்னோடி எழுத்து. நாடகம், கவிதை, சிறுகதை. வரலாறு என ஒவ்வொன்றிலும் அவரது பங்களிப்புவிட்டு இலக்கியவரலாற்றை எழுதமுடியாது
பலவிதமான இலக்கிய முகங்கள் கொண்டவர் என்றாலும் ரகுநாதனின் முதன்மையான முகம் விமரிசகர் என்பதே ஆகும். அந்த அடையாளத்திற்காகவே அவருக்குச் சாகித்திய அகாடெமி விருது வழங்கப்பட்டது. 1983 இல் அவருக்கு அந்த விருதைப் பெற்றுத்தந்த பாரதி: காலமும் கருத்தும் என்ற நூலை வாசித்தால், இலக்கிய விமரிசனத்தை ஒரு கலையாகக் கருதி ஈடுபட்டுச் செய்தவர் அவர் என்பது புரியவரும். அடுத்தவந்த இளங்கோவடிகள் யார்? என்ற ஆய்வுநூல் கல்வித்துறை ஆய்வாளர்களுக்குச் சவாலாக அமைந்த நூல். அதனையடுத்து எழுதிய புதுமைப்பித்தன் கதைகள்: சில விமர்சனங்களும் விஷமத்தனங்களும் என்பது இலக்கியத்திறனாய்வின் பின்னால் செயல்படும் உள்ளடி வேலைகளை வெளிச்சம்போட்டுக்காட்டிய நூல். அவர்தான் தமிழில் இலக்கிய விமர்சனம் என்றால் என்ன? என்பதைச் சொல்லும் அடிப்படை நூலொன்றை முதன்முதலில் எழுதித்தந்தார். இவையெல்லாம் பலராலும் கவனிக்கப்பட்டு வாசிக்கப்பட்ட நூல்கள். ஆனால் அவரால் எழுதப்பட்டு அதிகம் கவனிக்கப்படாத நூலொன்று உண்டு என்றால் அது “ சமுதாய இலக்கியம்” என்ற நூலே. 1964 இல் அச்சான நூல் பின்னர் 1980 இல் மீனாட்சிபுத்தக நிலையத்தால் திரும்பவும் பதிப்பிக்கப்பெற்றது.
ஆங்கிலேயர்களின் ஆட்சிக்காலத்தில் இலக்கியத்தில் செயல்பட்ட புலவர்களும் கவிஞர்களும் தம் காலத்தின் பெரும்போக்குகளையும் நிகழ்வுகளையும் -தந்தியின் வரவு, பணத்தின் வரவு, ஆடம்பரவாழ்க்கை மோகம், பெரும்பஞ்சம் போன்றனவற்றைக் கவனிப்பவர்களாகவும் அவற்றைக் குறித்து அக்கறையோடு எழுதிக்காட்டுபவர்களாகவும் இருந்தார்கள் என்பதை விரிவாக விளக்கும் நூல் அது. தகவல்கள், விளக்கங்கள், விமரிசனங்கள், விவாதங்கள் என ரகுநாதனின் எழுத்துமுறையைக் காட்டும் சமுதாய இலக்கியம் பலரது கவனிப்பைத் தவறவிட்ட நூல். ரகுநாதனின் மொத்த எழுத்துகளையும் தொகுத்து ரகுநாதவியம் என்னும் இருபெருந்தொகுப்பாக்கியுள்ள காவ்யா பதிப்பகத்தின் அண்மை வெளியீட்டில் இந்நூல் இடம்பெற்றுள்ளது. வாசிப்புப் பசிகொண்டவர்கள் தேடிப்படித்துப் பார்க்கலாம்.

இக்கால மொழியியல் என்ற தலைப்பில் 2011 இல் அடையாளம் பதிப்பகம் வெளியிட்டுள்ள நூலின் முந்திய வெளியீடு 1984. அவர் எனது ஆசிரியர் என்றாலும் இந்த நூலில் இருக்கும் செய்திகளை அவரிடம் நான் கற்கவில்லை. அமெரிக்கன் கல்லூரியில் நான் பட்டப்படிப்புப் படித்த காலத்தில் முதலிரண்டு ஆண்டுகளில் அவரைப் பார்த்தது இல்லை. அப்போது அமெரிக்காவில் இருந்தார்.

மூன்றாமாண்டில் அவரது சிறப்புப்பாடமான இலக்கணமும் மொழியியலும் பாடத்திட்டத்தில் இல்லை. அதனால் இந்த நூலின் விவரங்களை அவரிடம் நேரடியாகக் கற்கவில்லை. அவரிடம் பாடங்கேட்டவர்கள் ஒவ்வொருவரும் சொன்ன விதமே அவரது நூலையாவது வாசித்துவிடவேண்டும் என்ற ஆவலை உண்டாக்கியது. அந்த நூல் எனது ஆய்வுக்காலத்தில் வந்தது. இலக்கணம் சாராத ஆய்வு என்பதால் வாங்கிவைத்துப் படிக்கவில்லை. ஆய்வுமுடித்துத் திரும்பவும் ஆசிரியராக அமெரிக்கன் கல்லூரிக்குள் நுழைந்தபோது அதைப் படித்தேன்.
தமிழர்கள் தமிழ் மொழியின் அமைப்பியல் இலக்கணத்தைத் தொல்காப்பியம், நன்னூல் என்ற இரண்டு மரபுப்பிரதிகளை மட்டுமே வைத்துக் கற்றுக்கொள்ள முடியாது என்பதை உணர்த்தும் நூல் இது. கற்பிப்பவர்களுக்கும் கற்பவர்களுக்கும் பயன்படும் வகையில் ஒரு புதுத்துறையை - மரபையும் நவீனத்தையும் இணைக்கும் ஒரு நூலை எப்படி எழுதுவது என்பதற்கு முன்மாதிரியாகக் கொள்ளவேண்டிய நூல் இது. இப்போதுள்ள பல்கலைக்கழகத் தமிழ்மொழிப்பாடத்திட்டம் ஒவ்வொன்றிலும் -பட்டப்படிப்பு நிலையில் கட்டாயம் படிக்கவேண்டிய நூல் இது என உறுதியாகச் சொல்லலாம்.
பள்ளி தொடங்கிக் கல்லூரி வரையிலும் இலக்கணக்கல்வி என்பது இலக்கணக்குறிப்பு கண்டுபிடிக்கும் முறையிலேயே கற்பிக்கப்படுகிறது. சொற்றொடரில் அமையும் ஆகுபெயரை, அன்மொழித்தொகை, வினையாலணையும் பெயரை, சுட்டுச்சொல்லைக் கண்டுபிடித்துச் சொல்லி விட்டாலே முழுமதிப்பெண் வழங்கும் தேர்வுமுறையில் இலக்கணக் கல்வியை மொழியியல் அடிப்படையோடு கற்பிக்கும் முறையை வலியுறுத்தவேண்டும். மொழியியலும் மொழியியலின் பல்வேறு கோட்பாடுகளும் அம்மொழியின் அமைப்பை, அமைப்பின் கூறுகள் அவ்வாறு இருப்பதால் உண்டாகும் அர்த்தத்தளங்களை, அர்த்தத் தளங்களால் பேச்சிலும் எழுத்திலும் உண்டாகும் தகவல் தொடர்பை, தகவல் தொடர்பு இலக்கியப் பிரதியாக மாறுவதை என விரித்துக்கொண்டே செல்லும் தொடர்புச் சங்கிலிகளைக் கற்பிக்கும் ஓர் அறிவியல் முறைமைகள். தமிழ்க் கல்வியை அறிவியலாக்குவதற்கு மொழியியலின் தேவை உணரப்படும்போது கு.பரமசிவனின் இக்கால மொழியியல் அறிமுகம் என்ற நூலின் தேவை உணரப்படும். அது அறிமுகம்தான். வளர்ச்சியைக் காட்டும் பலநூல்கள் இருக்கின்றன.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

தணிக்கைத்துறை அரசியல்

நவீனத்துவமும் பாரதியும்