திறனாய்வாளர் ராஜ்கௌதமனின் நினைவின் ஊடாக....


எழுத்தாளர் ராஜ்கெளதமன் மறைந்தார்.

சிலுவை ராஜின் சரித்திரம் தன் கடைசிப் பக்கத்தை எழுதிக் கொண்டது.

2024 நவம்பர் 13 அன்று காலை 5.46 எனக்காட்டிய புதியமாதவியின் இந்தப் பதிவுக்கு விருப்பக்குறியிடத் தயங்கியது கை.

தனது பார்வை அல்லது விமரிசனம் அல்லது கேள்வியை முன்வைத்துத் தனது முகநூல் பதிவுகளை எழுதும் புதிய மாதவியின் பதிவுகளுக்குப் பெரும்பாலும் விருப்பக்குறி இடுவது வழக்கம். சில நேரங்களில் பின்னூட்டமிட்டு விவாதிப்பதுமுண்டு. புதிய மாதவி மும்பையில் இருக்கிறார். அவருக்குத் தகவல்தெரிந்து எழுதியிருக்கிறார். கௌதமன் உடல்நிலை சரியாக இல்லை என்பது தெரியும். என்றாலும் இந்தச் செய்தி உண்மையாக இருக்குமா? என்ற ஐயம் எழுந்தது. ஐயத்தை புலனம் வழியாகக் கேட்டபோது அலைபேசியில் வந்தார். வந்தவர் “இரவு 4 மணிக்கே இறந்துவிட்டார். அப்போதே எனக்குச் செய்தி வந்துவிட்டது. அவரது மனைவி எனக்கு ஒருவழியில் உறவினர் என்பதால், உறவினர்கள் வழியாகச் செய்தி வந்தது” என்றார். தகவலை ஏற்றுக் கொண்டேன்.

****

நினைவுகள் கடைசியாகச் சந்தித்த புள்ளியிலிருந்து பின்நோக்கி நகரத்தொடங்கின.

ராஜ்கௌதமனைக் கடைசியாகச் சந்தித்த நாட்கள். 2022 ஏப்ரல் 29,30 என்பது நினைவில் இருந்தது. 18 மாதங்களுக்கு முன்னால் அந்த இரண்டு நாளும் ஒன்றாக இருந்தோம். அது, இயக்குநர் பா.ரஞ்சித்தின் முன்னெடுப்பில் நடக்கும் நீலம் அமைப்பின் வானம் கலைவிழா நிகழ்வுகள். மதுரை உலகத்தமிழ்ச்சங்க அரங்கில் நடந்த விழாவின் நிறைவு நிகழ்வாக ராஜ்கௌதமனுக்கு வேர்ச்சொல் விருது வழங்கப்பட்டது. விருதளிப்புதான் முத்தாய்ப்பான கடைசி நிகழ்வு. விருது வழங்குவதற்கு முன்பு அவரது பங்களிப்புகளையும் திறனாய்வுப் பார்வைகளையும் அங்கிருந்த பார்வையாளர்களுக்குச் சொல்லும் விதமான ஓர் உரையை நிகழ்த்தினேன். அந்த வாய்ப்பைக் கொடுத்து அழைக்காவிட்டாலும் மதுரையில் நடந்த நிகழ்வு என்பதால் போயிருப்பேன்.

நிகழ்ச்சி முடிந்து வீட்டுக்குத் திரும்பியபோது முதன்முதலில் கௌதமனை எப்போது சந்தித்தோம் என்ற நினைவிற்குள் மூழ்கியபடி வாகனத்தை ஓட்டினேன். பின்னோக்கிப் பின்னோக்கிப் போய் அவரைப் பார்த்த நாட்கள், நிகழ்வுகள், பேசிக்கொண்ட பேச்சுகள் என மூழ்கியபோது கண்கள் சாலையில் இருந்தன. அந்த நான்கு ரோடு சந்திப்பில் காத்திருந்து நேராகப் போகாமல், தடையில்லாமல் கிடைத்த வலது பக்கம் திரும்பி விட்டது வாகனம். முக்கால்மணி நேரப் பயணத்திற்குப் பின்னால் சிறுநீர் கழிக்கவெண்டும் என்று தோன்றியது. நிறுத்திச் சிறுநீர் கழித்தபோது அவரைச் சந்தித்த முதல் நிகழ்வு நினைவுக்கு வந்துவிட்டது.

சந்தித்த ஆண்டு 1982 மே மாதம்; கோவையில். படிகள் இதழ் முன்னெடுத்த இலக்குக் கூட்டத்திற்கு அவர் வந்திருந்தார். அந்தக் கூட்டத்தில் சுந்தரராமசாமியின் ஜெ.ஜெ. சில குறிப்புகள் பற்றிய உரையாடல் நிகழ்வொன்று இருந்தது. அந்த உரையாடல் தான் அந்த நாவல் மீது முதல் விவாத விமர்சன நிகழ்வு. நாவல் வந்த ஆண்டு 1981. அந்த நிகழ்வில், தமிழவனோடு கௌதமனும் இருந்தார். அப்போது நான் முதுகலை மாணவன்; மதுரை நிஜநாடக இயக்கத்தின் நடிகன்.குட்டிக்குட்டியான நாடகங்களை நிகழ்த்துவதற்காக நாங்கள் போயிருந்தோம்.

மு.ராமசுவாமியும் ராஜ்கௌதமனும் பாளையங்கோட்டையில் முதுகலைத் தமிழ் ஒன்றாய்ப் படித்தவர்கள். தமிழவன் அப்போது அங்கு ஆசிரியராய் இருந்திருக்கிறார். இளங்கலையில் தமிழ் இலக்கியம் படிக்காமல் முதுகலையில் தமிழ் படிக்கச் சேர்ந்த அவர்கள் இருவருக்கும் தமிழவன் என்ற கார்லோஸ் ஒருவித வழிகாட்டி. தமிழ் நவீன இலக்கியத்தின் பக்கம் திசை திருப்பிச் சிறுபத்திரிகைகளை அறிமுகப்படுத்தி தனித்த அடையாளம் கொண்டவர்களாக மாற்றியவர். இதையெல்லாம் கோவையில் அவர்களைச் சந்திப்பதற்கு முன்பே மு.ரா. சொல்லியிருக்கிறார்.

அவரிடமிருந்து படிகள், இலக்கிய வெளிவட்டம் போன்ற இதழ்களை வாங்கி கௌதமன் எழுதிய கட்டுரைகளை முன்பே வாசித்திருக்கிறேன். அவையெல்லாம் பின்னர் தொகுக்கப்பட்டுக் காவ்யா பதிப்பக வெளியீடாக எண்பதுகளில் தமிழ்க்கலாசாரம் என்ற நூலாக வந்தது. அதுதான் அவரது முதல் நூல். ராஜ்கௌதமனைப் பார்த்த அன்றுதான் கோவை ஞானியையும் பார்த்தேன். பின்னர் கருத்து மற்றும் படைப்புத் தளத்தில் இயங்கிய பலரையும் பார்த்தேன். ஜெ.ஜெ.சில குறிப்புகள் நாவலோடு சுந்தரராமசாமி அங்கு வந்திருந்தார். அதனைக் கடும் விமரிசனம் செய்து எழுதிய கட்டுரையின் நகல்களோடு சாரு நிவேதிதா வந்திருந்தார். எண்பதுகளில் இலக்கு அமைப்பு நடத்திய நிகழ்வுகள் தமிழ் அறிவுப்பரப்பில் பெரும் தாக்கங்களை உண்டாக்கிய நிகழ்வுகள்.

கடைசிச் சந்திப்பும் முதல் சந்திப்பும் உறுதியான நினைப்பு முடிந்தபோது வீட்டுக்கு வந்து சேர்ந்திருந்தேன். வேர்ச்சொல் விருது வழங்கியதற்கு அடுத்த நாள் - 2022 மே, 1. அன்று கணினியில் நான் எழுதிக் கொண்டிருக்கும் நாட்குறிப்பில் இப்படி எழுதியிருக்கிறேன். அது முதல் நாள் பேசிய பேச்சின் எழுத்துவடிவம்:

நீலம் அமைப்பு நடத்திய தலித் வரலாற்று மாதத்தின் முந்திய நிகழ்வுகள் சென்னையிலும் புதுவையிலும் நடந்துள்ளன. அவற்றை நான் பார்க்கவில்லை. ஆனால் மதுரையில் நடந்த இரண்டு நாள் நிகழ்வுகளையும் முழுமையாக இருந்து பார்த்தேன். அம்பேத்கர் நூற்றாண்டுத் தொடக்கத்தை ஒட்டித் தொடங்கப்பட்ட தலித் பண்பாட்டுப் பேரவையின் தலித் கலைவிழாக்கள் நடந்த காலங்கள் நினைவுக்கு வந்தன. தற்காலிக மேடைகளிலும் மைதானங்களிலும் நடந்த அந்த விழாக்களின் நீட்சி என்று இந்த விழாவைச் சொல்ல முடியாது. எவையெல்லாம் விவாதிக்கப்பட வேண்டியவை, யாரையெல்லாம் உள்ளடக்க வேண்டும் என்பதையும் தீர்மானித்துக்கொண்டு செயல்பட்ட பாங்கு வெளிப்பட்டது. இந்தத் திட்டமிடலிலும் தீர்மானிப்புகளிலும் தலித் அரசியல் இந்த 30 ஆண்டுகளில் கடந்து வந்துள்ள இணைவுகளும் விலகல்களும் இருந்தன என்பதும் புரிந்தன. நவீனத்துவ மனிதர்களாக மாறவேண்டிய - விடுதலையை நோக்கிய தலித்துகளாகத் திரளுதல் என்ற நோக்கம் இந்தக் காலகட்டத்தில் பின்னடைவுகள் சிலவற்றைச் சந்தித்துள்ளது. தலித் அரசியல் தொடர்ந்து அடையாள அரசியலின் பகுதியாகவே நீண்டுகொண்டிருக்கிறது என்பதை இரண்டு நாட்களும் நடந்த உரையாடல்களும் தனி உரைகளும் காட்டின. இப்படி இருப்பதற்கான காரணங்கள் தலித்தியப் போக்கிற்குள்ளே மட்டும் இருப்பதாக நினைக்கவேண்டியதில்லை. வேறுபாடுகளை நிலைப்படுத்திக் கொண்டே சமத்துவம் பேசும் இந்திய சமூகத்தில் பரவிக்கிடக்கும் கூறு அது. உள்வாங்குவதாகப் பாவனை செய்துகொண்டே வெளித்தள்ளும் இயங்கியல் இந்தியச் சாதியத்தின் தத்துவம்.

நீலம் பண்பாட்டு அமைப்பு நடத்தும் தலித் வரலாற்று மாதக் கொண்டாட்டத்தின் முத்தாய்ப்பாக அவருக்கு விருது வழங்கும் நிகழ்வு அமைக்கப்பட்டிருக்கிறது. திறனாய்வுக்காக ராஜ்கௌதமன் பெரும் இந்த விருது நான்காவது விருது. இதற்கு முன்பு விஷ்ணுபுரம் விருதும், விளக்கு விருதும், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் தி.சு.நடராசன் அறக்கட்டளையின் திறனாய்வாளர் செம்மல் விருதும் பெற்றுள்ளார். இந்த நிகழ்வில் அவரை மதிப்பிட்டுப் பேசும் வாய்ப்பை வழங்கியதற்காக நன்றி சொல்லிக் கொள்கிறேன். அவருக்கு அரசின் - அரசு நிறுவனங்களின் விருதுகள் வழங்கப்பட வேண்டும் என விரும்புகிறேன்.

திறனாய்வு/ விமரிசனம், இலக்கியத்தின் பகுதியாக இங்கே அங்கீகரிக்கப்படுவதில்லை. கட்டுரை இலக்கியத்திற்குக் அளிக்கப்படும் அங்கீகாரத்தைக் கூடத் திறனாய்வுக்கு வழங்குவதில்லை. கவிகளும் எழுத்தாளர்களும் திறனாய்வை இலக்கியப்பரப்புக்கு வெளியே இருக்கும் நபரின் வினையாகவும் – எதிர்வினையாகவும் நினைக்கின்றார்கள். விருதுகள் வழங்கி அங்கீகரிக்கும் அமைப்புகள் திறனாய்வுக்குத் தனி விருதைத் தரவேண்டுமென நினைப்பதுமில்லை. இந்தச்சூழலிலும் தனது திறனாய்வின் வழியாகத் தனது இருப்பையும் திறனாய்வின் இருப்பையும் உறுதிபடுத்திய ஒருவராக ராஜ்கௌதமன் திகழ்ந்தார் என்பது குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று.

சிறுபத்திரிகை சார்ந்து இயங்கிய பலரையும் போலவே தனது நம்பிக்கை சார்ந்த இலக்கியப் பார்வையோடு உடன்படும் இலக்கியக்குழு, இதழ்கள், நண்பர்களின் தேவைக்காகத் திறனாய்வுக் கட்டுரைகளை எழுதியவராக 1990 வரை பயணித்தவர்தான் ராஜ் கௌதமன். அவரது திறனாய்வுப் பயணைத்தில் முதல் தடையாகவும் திசைமாற்றமாகவும் அமைந்தது 1993 ஆம் ஆண்டு. அந்த ஆண்டில் தான் தமிழ் இலக்கியப்பார்வையில் புதிய தடம் ஒன்றை உருவாக்கிய இலக்கியப்பார்வையாக தலித்தியப் பார்வையை உள்வாங்கி முன்வைத்த தலித் பண்பாடு நூல் அச்சில் வந்தது. அந்த நூல் திடீர்க்காய்ச்சல் ஒன்றில் இறந்தபோது இரண்டாவது மகள் கௌரி பெயரில் தொடங்கப்பட்ட பதிப்பகம் வழியாக அச்சில் வந்தது. மகளின் மரணத்தில் நிலைகுலைந்து போன ராஜ்கௌதமனை வாசிப்பின் பக்கம் திருப்பி, எழுதத்தூண்டிக்கொண்டே இருந்தவர் ரவிக்குமார். அடுத்த ஆண்டில் தலித் பார்வையில் தமிழ்ப்பண்பாடு, பொய் +அபத்தம் =உண்மை என்ற நூல்கள் அச்சில் வந்தன. இம்மூன்று நூல்களும் அச்சான அதே காலகட்டத்திலேயே கல்விப்புலம் சார்ந்த திறனாய்வுப் பார்வையிலும் கல்விப்புலம் சாராத விமரிசனப் போக்கிலும் அந்நூல்கள் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தின என்பதைப் பல்வேறு கல்வி நிறுவனங்களின் ஆய்வாளர்களைச் சந்தித்த நான் அறிந்துகொண்டேன்.

அமைப்பியல்வாதம் பேசிய தமிழவனின் தாக்கம் கொண்ட திறனாய்வாளராகச் செயல்பட்டுக் கொண்டிருந்த ராஜ்கௌதமன், அதுவரை உதிரிஉதிரியாகவும் கருத்தரங்கத் தேவை, பத்திரிகையின் தேவைக்கென எழுதிக்கொண்டிருந்தார். தலித்தியப் பார்வையும் இயக்கங்களும் திரண்டெழுந்த போது தனது ஆய்வுப் பயணத்தை மாற்றிக் கொண்டு தமிழின் குறிப்பிட்ட வகைமைகளை/ காலப்பகுதியை மொத்தமாக வாசித்து நூல் வடிவில் வெளியிடும் நோக்கத்தோடு இயங்கத் தொடங்கினார். ஒரு நாவலாசிரியர் நாவல் எழுதும்போது அதற்குள்ளேயே இயங்கிக் கொண்டிருப்பதுபோல தான் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நூலை முடிப்பதுவரை வெளி உலகத் தொடர்புகளைக் குறைத்துக் கொண்டு அதற்குள்ளேயே இயங்கினார் கௌதமன். தனது பணி சார்ந்த தேவைக்காக ஆய்வுக்கட்டுரைகளையும் நூல்களையும் எழுதுகிறவர்களைப் போலல்லாமல் தான் இயங்கும் இலக்கியப்புலம் சார்ந்தும், சமூகம் சார்ந்தும், தான் இருப்பதை நிறுவிக்கொண்டே இருப்பதைப் பழக்கமாக்கிக் கொள்ளும் திறனாய்வாளர்களால் வாசிக்காமலும் எழுதாமலும் இருத்தல் இயலாது. அந்தக் காலகட்டத்தில் நானும் புதுச்சேரியில் இருந்தேன் என்பதால் நேரடியாகக் கவனித்திருக்கிறேன். அவரைப் பின்பற்றவும் செய்துள்ளேன்.

தலித் பண்பாட்டுப்பேரவை சார்ந்து கூட்டங்கள், கருத்தரங்குகள், விழாக்கள் நடந்த போதும் வந்து தலையைக் காட்டி விட்டு உடனே வீட்டுக்குச் சென்று விடுவார். வாசித்துக் கொண்டும் எழுதிக்கொண்டும் இருந்தார் என்பது தெரியும். அதன் விளைவுகளே தொல்காப்பியம் பற்றிய, நீதிநூல்கள் பற்றிய, சங்க இலக்கியங்கள் பற்றிய, பெரியபுராணம் பற்றிய, புதுமைப்பித்தன் பற்றிய, அயோத்திதாசர் பற்றிய,சுந்தரராமசாமி பற்றிய திறனாய்வு நூல்களாக வெளிவந்தன. மார்க்சிய இலக்கியப்பார்வையின் அடிப்படைகளான இயங்கியல் பொருள்முதல்வாதத்தையும் வரலாற்றுப்பொருள் முதல்வாதத்தையும் உள்வாங்கிய வாசிப்பு அவருடையது. அதனோடு தொடக்ககாலச் சமூக அமைப்புகள் குறித்த மானுடவியல் விளக்கங்களையும் அறிந்ததின் தொடர்ச்சியான கண்டுபிடிப்புகளைப் பழந்தமிழ் இலக்கியங்களை நிகழ்த்தியவர். அந்தக் கண்டுபிடிப்புகளும் விளக்கங்களும் புதுத்திறனாய்வு(New Criticism) போக்கிலானது. பனுவலுக்குள் நின்று அர்த்தங்களை- பொருள்கோடலைச் செய்யும் புதுத்திறனாய்வோடு, மாற்று அர்த்தங்களை உருவாக்கி விளக்கம் சொல்லும் பார்வைக்கு பெரியார், அம்பேத்கர், அயோத்திதாசர் ஆகியோரின் முறையியலைத் தனது முறையியலாக ஆக்கிக் கொண்டார். புதுத்திறனாய்வு முறையை அவரது ஆய்வு நூல்கள் எல்லாவற்றிலும் வாசிக்கமுடியும்.

தமிழ் இலக்கியப்பரப்புக்குள் கிடைக்கும் தரவுகளைத் திரட்டும்போது தலித்தியப் பார்வையில் திரட்டிக்கொண்டு, எழுதும்போது மார்க்சிய இலக்கியக் கோட்பாட்டுப் பார்வையில் எழுதியதையே அவரது ஆய்வு முறைமையிலாகச் சொல்லலாம் என நினைக்கிறேன். நவீனத்துவ அறிவு, நவீனத்துவ மனிதர்கள், நவீனத்துப் பார்வையே விடுதலையின் அடையாளம் என்பதைச் சரியாகப் புரிந்துகொண்டு தான் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பிரதிகளுக்குள் நவீனத்துவம் செயல்படும் அளவுகளை, எல்லைகளை அடையாளப்படுத்தினார். நவீனத்துவத்தை நம்பும் இலக்கியத்திறனாய்வாளர்கள் அதனை முன்வைக்கும் நோக்கத்தில் பாரம்பரியத்தை/ மரபை விவாதிக்கும் விதமாகவே அவர் விவாதித்தார். சங்க இலக்கியம், தொல்காப்பியம், அறநூல்கள் போன்றவற்றைக் குறித்துப் பொதுப்புத்தியின் கருத்தை உருவாக்கிய கல்வியாளர்களின் பார்வையில் செல்லாமல் பிரதிகளுக்குள் செயல்பட்ட இயங்கியலை முன்வைத்து கருத்துகளைக் கண்டறிந்து கூறினார். அக்கண்டுபிடிப்புகள் தமிழ் அறிவுத்தோற்றவியலுக்கும் சமூக வரலாற்றுக்கும் பங்களிப்புச் செய்யக்கூடிய கண்டுபிடிப்புகள். அத்தகைய கண்டுபிடிப்புகளின் நீட்சியாகவே அ.மாதவய்யாவைப்பற்றி, வள்ளலார் சி.ராமலிங்கம் பற்றிய கண்டுபிடிப்புகளையும் சேர்த்துக் கொள்ளவேண்டும்.

ஆய்வுநூல்களை எழுதும் பணியோடு -இணையாகவே மொழிபெயர்ப்புகளையும் செய்துவந்தார். அறிவியல்பார்வையையும் பெண்ணிய வாசிப்புகளையும் முதன்மைப்படுத்தி அவரது மொழிபெயர்ப்புகள் இருந்தன.

1. Charles Darwin,M.A., “The Origin of Species by means of Natural Selection “ – இயற்கையின் தேர்வின் வழியாக உயிரினங்களின் தோற்றம்

2. Germaine Greer – “ The Female Eunuch”-பாலற்ற பெண்பால் (பெண்பால் நபும்சகம்)

3. 3. C.H.Tharni, M.A. “Katha Koca”- கதைக்கருவூலம்(சமணக்கதைகளின் தமிழாக்கம்)

4. Sarah Gammble -Toril Moi – “Feminism -History of theories’ –பெண்ணியம்: வரலாறும் கோட்பாடுகளும்

5. கிளி எழுபது (புராதன வட இந்தியக் கதைகள்)

6. Erich Fromm, “The Sane Society” மனவளமான சமுதாயம்

7. ளிம்புநிலை மக்களின் போராட்டங்கள்

8. Erich Fromm, “Art of Love”–அன்பு என்னும் கலை


*********

கோவை இலக்குக் கூட்டத்திற்கும் புதுச்சேரி வாழ்க்கைக்கும் இடையில் அவரோடு கழித்த அந்த மூன்று நாட்கள் நினைவில் இருக்கும் நாட்கள். மாதம் நினைவில் இல்லை. 1984 என ஆண்டு நினைவில் உள்ளது. அப்போது நான் மதுரைப்பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வாளர். புதிதாகத் தொடங்கப்பட்ட அன்னை தெரேசா மகளிர் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையின் கருத்தரங்கம் ஒன்று மதுரைப் பல்கலைக்கழக வளாகத்தில் புலத்துறை விருந்தில்லத்தில் நடந்தது. தலைப்பு: பெண்கள் படைப்பில் பெண்கள் . பேரா.தேவதத்தா நடத்திய அக்கருத்தரங்கில் கலந்துகொள்ள தமிழவன்,ஞானி போன்றோர் வந்திருந்தனர். அவரோடு ராஜ்கௌதமனும் வந்திருந்தார். எனது ஆசிரியர்கள் தி.சு.நடராசனும் சி.கனகசபாபதியும் வல்லுநர்களாகக் கலந்து கொண்டார்கள். நான் அவர்களோடு சேர்ந்து போனேன். பார்வையாளர்களில் ஒருவனாக இருந்து உரைகளையும் உரையாடல்களையும் மூன்று நாட்களும் கவனித்துக் கொண்டிருந்தேன். அதல்லாமல் மாலையில் அவரை அழைத்துக் கொண்டு பல்கலைக்கழக வளாகத்திற்கு எதிரில் இருக்கும் வடபழஞ்சி கிராமத்துத் தேநீர்க் கடைகளுக்குப் போய் அமர்ந்து பலவற்றையும் பேசிக் கொண்டிருந்தோம். ஆசிரியர் – மாணவர் வேறுபாடில்லாமல் பழகும் பழக்கம் மதுரைப் பல்கலைக்கழகத்தில் இருந்த நிலையில் புய்கைத்துக்கொண்டே பேசிக்கொண்டிருந்தோம். அந்த வழியாகப் போன எங்கள் துறை ஆய்வாளர்கள் பலரும் அவரை அறியாதவர்களாக விலகிப் போய்க்கொண்டிருந்தார்கள். அதன் பிறகு புதுச்சேரியில் தான் சந்திப்புகள்.

எனக்கும் அவருக்குமான பழக்கம் சரியாக 40 ஆண்டுப் பழக்கம். பழக்கம் தான்; நண்பர்கள் அல்ல. ஒருவித இணைநிலையான பயணிகள் நாங்கள். பலவிதமான சந்திப்புகள். பலவிதமான உரையாடல்கள். எப்போதாவது சந்தித்து ஒன்றிரண்டு நாட்கள் பேசிக்கொண்ட நிகழ்வுகள் பல உள்ளன. பல்வேறு கல்வி நிறுவனங்கள் ஏற்பாடு செய்த கருத்தரங்குகளில் சந்தித்திருக்கிறோம். நானே ஏற்பாடு செய்த கருத்தரங்குகளும் அவற்றில் இருந்தன. ஒரே வகுப்பில் புத்தொளிப்பயிற்சிபெறும் ஆசிரியர்களாக மூன்று வாரம் இருந்துள்ளோம். வாரத்தில் இரண்டு, மூன்று தடவை சந்தித்துக் கொண்ட பாண்டிச்சேரியின் எட்டாண்டு வாழ்க்கைக்காலமும் உண்டு. அவரது ஓய்வுக்குப் பின் பாளையங்கோட்டைக்கு வந்து உழவர் சந்தையில் சந்தித்த சந்திப்புகளும் உண்டு.

அந்தச் சந்திப்புகளின்போது அவரிடம் வெளிப்பட்ட மனநிலை ஒன்றை அவரது நினைவுகளைப் பகிர்ந்துகொள்ளும்போது சொல்லத் தோன்றுகிறது. அவருக்கு நீண்ட காலம் உயிர் வாழ்தலில் பெருவிருப்பம் இருந்ததில்லை. எந்த நேரமும் மரணத்தை எதிர்கொள்ளத் தயாராக இருக்கும் ஒரு இருத்தலிய மனிதனாகவே இருந்தார். அதைத் தனிச்சந்திப்பின் போது சொல்லியிருக்கிறார், அப்படிச் சொன்ன இரண்டு சந்திப்புகள் இப்போது நினைவுக்கு வருகிறது. ஒன்று பாண்டிச்சேரியில் பாண்டி கடைக்குப் பக்கத்தில். இன்னொன்று பாளையங்கோட்டை உழவர் சந்தை வாசலில்.

புதுச்சேரியில் அவரது வீடும் எனது வீடும் 10 நிமிடத்திற்கும் குறைவான தூர நடையில் தான் இருந்தன. ஆனால் பாண்டி புத்தகக் கடைக்கருகில் தான் அவரை அதிகம் சந்தித்திருப்பேன். இப்போது அந்த அஜந்தா திரையரங்கம் இல்லை. நகரின் மையத்தில் வடக்கு -தெற்காக நீளும் மகாத்மா காந்தி சாலை, ஒரு வட்டப்பாதையாக வரும் படேல் சாலையில் சந்தித்துக்கொள்ளும் முனையில் இருந்தது பாண்டி புத்தகக்கடை. நான் புதுச்சேரி போனது ஜூன் 1989. அப்போது அந்தக் கடை ஒரு பழைய புத்தகக்கடை போலத்தான் இருந்தது. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான வழிகாட்டிப் புத்தகங்களே அதிகம் தொங்கும். காலையில் தினசரிகளும் வார இதழ்களும் தொங்கும். சிற்றிதழ்கள் எல்லாம் தொங்கப்போடுவதில்லை. சிற்றிதழ் சார்ந்த சில பதிப்பகங்களின் நூல்களும் கிடைக்கும். ஆனால் வெளியில் தெரியாது. உள்ளே வைத்திருப்பார். கேட்டால் இருப்பிருந்தால் எடுத்துக்காட்டுவார். இல்லையென்றால் கிடைக்காது என்று சொல்லிவிடுவார். அந்தப் பாண்டி ராஜ்கௌதமனுக்குத் தான் நெருங்கிய நண்பர். தினசரி சந்தித்துக் கொள்வார்கள். இருவரும் புதுச்சேரியின் நீண்டநாள் இருப்பாளர்கள்.

பாண்டி கடையில் அவரும் நானும் தனியாக நின்றிருந்த ஒருநாள் ‘தேநீர் குடிக்கலாமா?’ என்று கேட்டேன். “இன்னும் அரைமணி நேரத்தில் வீட்டுக்குப் போய் விஸ்கி குடிக்கவேண்டும். அதனால் தேநீர் வேண்டாம்” என்று சொல்லிவிட்டார். பாண்டி புத்தகக் கடைக்குப் பக்கத்தில் இருக்கும் மதுபானக் கடையில் குடிபானங்கள் வாங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அன்றாடம் வாங்கி அன்றாடம் குடிப்பது அவரது வழக்கம். அவரது மனைவி ஒவ்வொரு நாளும் இவ்வளவு மட்டுமே குடிக்க வேண்டும் என அனுமதித்திருப்பதாகச் சொல்வார்.வாங்கிக் கொண்டு வீட்டுக்குப் போய்த்தான் அருந்துவார்.

தனியாக இருந்ததைப் பயன்படுத்திக்கொண்டு “தொடர்ச்சியாகக் குடிக்கத்தான் வேண்டுமா? இடைவெளி விட்டுக் குடிப்பது; நிறுத்துவது பற்றிச் சிந்த்தித்ததில்லையா?” என்று கேட்டேன். “ஏன் நிறுத்தவேண்டும்?” என்று பதிலுக்குக் கேட்டார். குடிப்பதால் உடல்நலம் கெடும் என்பதில் நம்பிக்கை இல்லை என்றார். அப்படிச் சொல்லிவிட்டு, ‘முடிந்தவரை விரும்பியதைச் செய்யலாம்; அதில் குற்றவுணர்வு தேவையில்லை’ என்றும் சொன்னார். தொடர்ந்து குடிப்பதால் மரணம் வந்துவிடும் என்று சொல்லமுடியாது; குடிப்பழக்கம் இல்லாத பலர் 50 வயதிற்குள் இறந்துவிடுகிறார்களே? என்று சொல்லிவிட்டு, “நீண்ட ஆயுளோடு வாழவேண்டும் என்ற விருப்பமெல்லாம் இல்லை; படிக்கவும் எழுதவும் முடியும்வரை இருந்தால் போதும். கல்லூரி வேலையிலிருந்து ஓய்வு கிடைத்தபின் ஒன்றிரண்டு ஆண்டுகள் இருந்தாலே அதிகமான வாழ்க்கை தான். அப்போது மரணம் வந்தால் மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்வேன் என்றார். அந்தப் பேச்சு எனக்குள் ஒரு திறப்பு என்று கூடச் சொல்லலாம். குடிப்பவர்கள் பற்றி எனக்குள் இருந்த எண்ணங்களின் மீது மாற்றுக் கருத்தை உண்டாக்கியது.

அவரது ஓய்வுக்குப் பின் அவரது மனைவி பரிமளத்தின் ஓய்வு வரை புதுச்சேரியில் இருந்து விட்டுப் பாளையங்கோட்டைக்கு குடிபெயர்ந்தார் என்று நினைக்கிறேன். பாளையங்கோட்டை அவரது மனைவியின் ஊர். தியாகராயநகரில் அவரது மைத்துனர்கள் -மனைவியின் சகோதரர்கள் இருந்தார்கள். அவர்களின் வீடு பாளையங்கோட்டை உழவர் சந்தைக்கு எதிரேயிருந்த சாலையில் இருந்தது. ஒரு ஞாயிற்றுக்கிழமை உழவர் சந்தைக்கு மனைவியோடு போனபோது அவரும் அவரது மனைவி பரிமளத்தோடு வந்தார். வாகன நிறுத்தத்தில் நாங்கள் இருவரும் நின்று பேசத்தொடங்க, மனைவிமார்கள் உழவர் சந்தைக்குள் நுழைந்துவிட்டார்கள். பிள்ளைகள் குறித்து விசாரித்தார். என் மகள் சிநேகலதாவை அவருக்குத் தெரியும். மகள் சென்னையில் இருக்கிறார் என்றேன். அவரது மகளும் மருமகனும் லண்டன் வாசிகளாகிவிட்ட நிலையில் முதுமைக் காலத்தை உறவினர்கள் இருக்கும் ஊரில் கழிக்கலாம் என்று பாளையங்கோட்டையைத் தேர்வு செய்தீர்களா? என்று கேட்டேன். அதற்கு அவர் சொன்ன பதில் கொஞ்சமும் எதிர்பாராத ஒன்றாக இருந்தது.

35 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்தபோதும் புதுச்சேரியைத் தனது ஊராக நினைக்கவில்லை என்று சொன்னார். அங்கிருந்த காலத்தில் ஏதொரு மாதாகோயிலோடும் தன்னை இணைத்துக் கொள்ளவில்லை என்றார். அதனால் தனது மரணத்திற்குப் பின் தன்னைப் புதைக்க அங்கே இருக்கும் கல்லறைத் தோட்டங்களில் இடமளிக்க மாட்டார்கள் என்று கருதினார். அதனால் இப்போது பாளையங்கோட்டையில் உறவினர்களுக்கு உரிமையுடைய கல்லறைத்தோட்டத்தில் ‘தனக்கான இடத்தை உறுதிசெய்துவிட்டேன்; பணம் கட்டிவிட்டேன்’ என்றார். அந்தப் பேச்சு மரணத்தைக் கொண்டாட்டத்தோடு ஏற்றுக்கொள்ளத் தயாராக இருந்ததைக் காட்டியது.

தமிழ்நாட்டிலிருந்து புதுச்சேரிக்கு வேலைநிமித்தம் வந்தவர்களைப் புதுச்சேரிக்காரர்கள் ‘அந்நியர்கள்’ என்று நினைக்கிறார்கள் என்பதை அவரது மகள் கௌரி இறந்தபோது உணர்ந்ததாகச் சொல்லியிருக்கிறார். அப்போது எனக்கு அப்படித் தோன்றவில்லை என்றாலும் பின்னர் நானும் உணர்ந்துள்ளேன். பல்கலைக்கழக வளாகத்திலும் புதுவையின் பொது வெளியிலும் நீங்கள் பாண்டியின், “மண்ணின் மைந்தர்கள் அல்ல” என்று சொல்வதைக் கேட்டிருக்கிறேன். புதுச்சேரிக்காரர்களின் வேலை வாய்ப்புகளை எடுத்துக்கொண்டு அங்கு குடியேறியவர்களுக்குக் கல்வி, வேலை வாய்ப்பு போன்றவற்றில் இடஒதுக்கீடு போன்ற சலுகைகளைத் தருவதில் மாற்றம் உண்டாகத் தொடங்கியிருந்தது. எனது பிள்ளைகளுக்குப் பிற்பட்டோர் பட்டியலில் சாதிச்சான்றிதழ் பெறுவது இயலாது என்பது புரிந்தது. நான் புதுச்சேரியிலிருந்து கிளம்பியதற்கு அதுவுமொரு காரணம்.

எட்டு ஆண்டுப் புதுவை வாழ்க்கையின் நினைவுகள் எனது வாழ்க்கையின் மதிப்புமிக்க நினைவு அலைகளால் ஆனது. கலை, பண்பாட்டு நிகழ்வுகளோடு, ஆளுமைகளோடானான சந்திப்புகளின் நினைவுகள் எனப் பலதளங்களில் விரியக்கூடியன. கி.ராஜநாராயணனுடான நினைவுகளைத் தனியாக- கி.ரா. நினைவுகள் என்று சிறுநூலாகவே எழுதியுள்ளேன். ராஜ்கௌதமனுடான சந்திப்புகளும் சுவாரசியமானவையே.

புதுச்சேரியில் எனக்கு இருவகை நட்பு வட்டம் இருந்தது. பல்கலைக்கழகத்தின் பல்வேறு துறையின் ஆசிரியர்களும் ஆய்வாளர்களும் கொண்ட நட்பு வட்டம் பெரியது. ஆனால் நெருங்கிய வட்டம் அல்ல. அதற்கு வெளியே ரவிக்குமார் (இப்போது விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பவர்) வழியாக உருவான நட்பு வட்டமே நெருங்கிய வட்டம். இந்த இரண்டு வட்டத்திலும் இருப்பவராக ராஜ்கௌதமன் இருந்தார். அத்தோடு ராஜ்கௌதமனின் ஊரான வ.புதுப்பட்டியும் எனது சொந்த ஊரான தச்சபட்டியும் சதுரகிரி மலையால் பிரிக்கப்பட்ட ஊர்கள். சதுரகிரி மகாலிங்கம் கோயிலுக்கு எங்கள் ஊர் இருக்கும் வடக்குப் பக்கம் ஏறி, தெற்குப் பக்கம் இறங்கி வத்றாப் வழியாகப் பேருந்தில் வந்த நினைவுகளையெல்லாம் அவரிடம் சொல்லியிருக்கிறேன். ஆனால் அவர் அவரது ஊர் நினைவுகளை அப்போது அதிகம் பேசிக் கொண்டதில்லை. பிறகு சிலுவைராஜ் சரித்திரத்தில் எழுதுவதற்காகப் பத்திரப்படுத்தியிருக்கிறார் என்பது அந்த நாவலை வாசித்தபோது புரிந்தது. அந்த ஊருக்கு இரண்டு அடையாளங்கள் உண்டு. கிறித்தவப்பாதிரிமார்களின் வருகையால் தலித்துகள் கல்வி அறிவு பெற்ற ஊர். இந்தியா விடுதலை அடைந்தபோது இந்தியக் கம்யூனிஸ்டு தடைசெய்யப்பட்டது. பல தலைவர்கள் தலைமறைவு வாழ்க்கைக்காக அந்த ஊரையொட்டி இருக்கும் மேற்குத் தொடர்ச்சி மலையில் தலைமறைவு வாழ்க்கைக்காக வந்த ஊர். தமிழ்ச் சிறுபத்திரிகை வரலாற்றில் ஓரிடம் பிடித்த இலக்கிய வெளிவட்டம் அங்கிருந்துதான் வந்தது என்பதும் இன்னொரு தகவல். அதன் ஆசிரியர் நடராஜனும் கௌதமனும் நீண்ட கால நண்பர்கள் என்பது கூடுதல் தகவல். சிலுவைராஜ் சரித்திரத்தின் இரண்டாம் பாகமான காலச்சுமையில் இந்தத் தகவல்கள் எல்லாம் புனைவுகளாக ஆக்கப்பட்டுள்ளன.

புதுச்சேரியில் இருவரின் வீடும் லாசுபேட்டையில் சில தெருக்கள் இடைவெளியில் இருந்தன. ரவிக்குமார், பஞ்சாங்கம், வெங்கடசுப்பா நாயகர், கி.ராஜநாராயணன் என ஒரு பட்டாளம் அங்கே இருந்தது. ஆனாலும் பாண்டிச்சேரியின் நகரப்பகுதியில் தான் சந்திப்போம். சனி, ஞாயிறு என்றால் ஏதாவது கூட்டம் நடக்கும். வணிகப்பேரவை, கல்வே கல்லூரி, புதுச்சேரி அறிவியல் மையம், கம்பன் கலை அரங்கம் என எங்காவது நடக்கும் கூட்டத்தில் சந்திப்போம். பல கூட்டங்களை ரவிக்குமார் ஒருங்கிணைப்பார். சிறிய சந்திப்புகள் என்றால் ரவிக்குமார் வீட்டிலேயே நடக்கும். நிறப்பிரிகையின் கூட்டுவிவாதங்கள் முதலில் சிறிய வட்டமாக இருந்து, பின்னர் பெரிய வட்டமாக மாறியது. நான் ஒருங்கிணைத்த பெண்ணியம் -கூட்டுவிவாதத்தில் 50 பேருக்கும் அதிகமாகப் பேசினார்கள். பேசாதவர்களாக 50 பேர் இருந்தார்கள்.

நிறப்பிரிகையின் கூட்டுவிவாதங்கள் மட்டுமல்லாமல், தமிழ்நாட்டு நிகழ்வுகளுக்கு எதிர்வினைகளைப் புதுச்சேரி உடனுக்குடன் தரும். இலக்கியம், நாடகம், சினிமா, ஓவியக்காட்சிகள் எனக் கலை சார்ந்த நிகழ்வுகள் அல்லயன்ஸ் பிரான்சேவில் நடக்கும். இதற்கெல்லாம் ராஜ்கௌதமன் பெரிய ஈடுபாட்டோடு வரமாட்டார். அவரது பெயர் இருக்கும் கூட்டங்களுக்கு வருவார்; பேசுவார்; கட்டுரை வாசிப்பார். வீட்டுக்குப் போய்விடுவார். இந்தியா டுடே எதிர்ப்புக் கூட்டம், கி.ராஜநாராயணன் எழுத்துகளை மறு வாசிப்புச் செய்த கூட்டம், பாமாவின் கருக்கு விமரிசனக் கூட்டம் போன்றன முக்கியமான நிகழ்வுகள். அவற்றுள் கி.ரா. எழுத்துகள் நிகழ்வில் உண்மையான மறுவாசிப்புக் கட்டுரையை வாசித்தார். அதனை வாசிப்பு என்று சொல்லக்கூடாது. ஒருவித நிகழ்த்துதல் அது.

நாங்களெல்லாம் மிதிவண்டியில் ஊர் சுற்றுவோம். கௌதமனின் வாகனம் வெஸ்பா ஸ்கூட்டர். பல்கலைக்கழகத்திலிருந்து நாலரை மணிக்கு வந்து வீட்டில் ஒரு தேநீர் குடித்துவிட்டுக் கிளம்பினால் முதல் சந்திப்பு சிண்டிகேட் வங்கியில் ரவிக்குமார். பிறகு தந்தி அலுவலகத்தின் முன்னால் மதியழகன், அங்கிருந்து பிரெஞ்சிந்திய நிறுவனம் கண்ணன்.எம். அவர் வாங்கித் தரும் தேநீரோடு அவரைப் பின்னால் ஏற்றிக்கொண்டு நேருவீதிக்கு வரும்போது அருணன், இலக்கியன், பிரதிபா ஜெயச்சந்திரன் எனச் சேர்ந்துவிடும். சில வேலைகளில் எனது கூட்டுக்குரல் நாடகக்குழுவில் இருந்த வேலாயுதம், விஷ்ணுதாசன், பாலசரவணன் போன்றவர்களும் உடன் இருப்பார்கள். அங்கிருந்து பாண்டி கடைக்கு வந்தால் ராஜ் கௌதமன் நிற்பார். எல்லா நாளும் வருவார்; காத்திருக்கமாட்டார். ஆனால் வாரத்தில் ஒன்றிரண்டு நாள் சந்திப்பு உண்டு. பாண்டி கடை வரை சேரும் கூட்டம் அங்கிருந்து கலைந்துவிடும். நானும் ரவிக்குமாரும் லாஸ்பேட்டை நோக்கிப் போவோம்.

ஆசிரியப்பணி காரணமாக மூன்றுவாரப் புத்தொளிப்பயிற்சி வகுப்பு ஒன்றில் நானும் அவரும் ஒன்றாக இருந்தோம். அவர் பணியாற்றிய தாகூர் கலைக்கல்லூரி வளாகத்தில் இருந்த புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் கல்வியியல் இயக்குநரகத்தில் அந்த வகுப்பு. தமிழ் இலக்கியம் கற்பித்தலில் புத்தொளிப்பார்வைகளைக் கற்பிக்கும் பயிற்சிகள் வழங்கப்பட்டன. நாடகம் கற்பிக்கும் முறைகள் குறித்துத் தனியான வகுப்புகள் இல்லை என்பதால் நானும் இலக்கியக்கல்விப் பயிற்சி வகுப்புகளில் சேர்ந்துகொண்டேன். பணியிடைப் பயிற்சியைப் பெற்றால் தான் பதவி உயர்வு என்ற நிலையில் இருபத்தோரு நாட்கள் அங்கிருந்தோம். பயிற்சி வகுப்புகளைத் தாண்டி ஒவ்வொரு நாளும் நானும் கௌதமனும் உரையாடிப் பெற்றுக்கொண்ட புத்தொளிகள் விதம்விதமானவை.

***** *****

பாண்டிச்சேரி பல்கலைக்கழக நாடகத்துறை வேலையில் அலுப்பும் சலிப்பும் உண்டான, அங்கிருந்து வெளியேறுவது என முடிவு செய்தேன். தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்கத் தொடங்கினேன். அப்படித்தான் புதிதாகத் தொடங்கப்பட்ட நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் தமிழியல் துறைக்கு விண்ணப்பித்தேன். எனது நெறியாளர் தி.சு.நடராசன் அங்கு ஓராண்டு வருகைதரு பேராசிரியராக இருந்ததால் அங்கு இணைப்பேராசிரியராக வேலை கிடைத்தது; வந்தேன். 1997 பிப்ரவரி பணியில் சேர்ந்தவுடனேயே முதல் கருத்தரங்காகத் தமிழ்க் கல்வியுலகம் கவனிக்கத்தக்க ஒன்றை நடத்த வேண்டும் எனத் திட்டமிட்டோம். அப்படியான திட்டமிடலின் விளைவே, பின்னை நவீனத்துவம்: கோட்பாடும் தமிழ்ச்சூழலும் என்ற பொருண்மையில் நடந்த கருத்தரங்கம்.
 
1997- மார்ச் 30, 31 ஏப்ரல் 1 ஆகிய நாட்களில் நடந்த அக்கருத்தரங்கம் வழக்கமான கருத்தரங்காக இல்லாமல் மூன்று அடுக்கு நிலையில் நடந்தது. பாளையங்கோட்டை சேவியர் கல்லூரி வளாகத்தில் நடந்த நிகழ்வில் கட்டுரை படிக்க 12 பேர் அழைக்கப்பட்டனர். தமிழ்நாட்டில் நவீனத் திறனாய்வை – குறிப்பாக அமைப்பியல், பின்னமைப்பியல், பின் நவீனத்துவம் பற்றியெல்லாம் பேசிக்கொண்டிருந்தவர்களைத் தொடர்பு கொண்டு அழைத்தோம். பாண்டிச்சேரியிலிருந்து ரவிக்குமார், கண்ணன்.எம். ராஜ்கௌதமன், திருச்சியிலிருந்து க.பூரணச்சந்திரன், நோயல் இருதயராஜ், கிராமியன் மதுரையிலிருந்து முத்துமோகன், சாமுவேல் சுதானந்தா, ஆகியோர் தவிர பெங்களூரிலிருந்து தமிழவன், சென்னையிலிருந்து அ.மார்க்ஸ், அழகரசன் ஆகியோர் அழைக்கப்பட்டனர். பாளையங்கோட்டையில் இருந்த கவிஞர் பாலாவும் செல்லப்பெருமாளும் கட்டுரை வாசித்தார்கள். அழகரசன் மட்டும் வரவில்லை.கட்டுரையை அனுப்பினார். இவர்களோடு, 24 பேர் விவாதங்களை முன்னெடுத்துப் பேச அழைக்கப்பட்டனர். அவர்கள் அல்லாமல் அக்கல்லூரியின் ஆய்வு மாணவர்களும் இருந்தார்கள். அந்தக் கருத்தரங்கம் தமிழ்க் கல்விப்புலத்திற்கும் வெளியே இருக்கும் சிந்தனைப்புலத்திற்கும் பாலமாக நடந்த ஒரு கருத்தரங்கம். இந்தியப் பல்கலைக்கழகம் ஒன்றில் பின் நவீனத்துவம் குறித்து நடந்த முதல் கருத்தரங்கம். கட்டுரைகள் திரும்பவும் எழுதப்பெற்று விடியல் பதிப்பக வெளியீடாக வந்தது. அதில் வந்த கௌதமனின் கட்டுரை :

பின்னாட்களில் நான் பொறுப்பேற்று நடத்திய அம்பேத்கர் ஆய்வு மையத்தில் சிறப்பு சொற்பொழுவுகளுக்காகவும் துறையின் அறக்கட்டளைகளில் சொற்பொழிவு ஆற்றவும் அழைக்கப்பட்டபோது தனியாகப் பயணம் செய்து வர இயலாது என்று மறுத்துவிட்டார். பொதுவாக அவர் பயண விரும்பி கிடையாது. அவரை ஓரிடத்திலிருந்து கிளப்ப வேண்டுமென்றால் உடனிருந்து ஒருவர் அழைத்து வரவேண்டும். அதனாலேயே அவரை -அவரது கருத்தைக் கேட்க விரும்பும் பலரும் அழைக்காமல் விட்டுவிடுவார்கள்.

நெல்லைப் பல்கலைக்கழகத்தமிழியல் துறையைத் தொடங்கிய துணைவேந்தர் வசந்திதேவி, பேரா.தி.சு.நடராசனை ஓராண்டு வருகைதரு பேராசிரியராக அழைத்துத் திட்டமிட்டுத் தொடங்கினார். அதன் முதல் நிரந்தர ஆசிரியர் நான். அவர் பெயரில் ஓர் அறக்கட்டளையைத் தொடங்கித் திறனாய்வாளர்களுக்கு விருது வழங்குவது என முடிவு செய்தோம். பேரா. தி.சு.நடராசன் திறனாய்வாளர் செம்மல் விருது என்பது அதன் பெயர். அந்த விருதை முதல் ஆண்டிலேயே ராஜ்கௌதமனுக்கு வழங்க நினைத்தோம். ஆனால் அவரது ஆசிரியரும் அமைப்பியல்வாதத்தைத் தமிழுக்கு அறிமுகம் செய்து தமிழின் வாசிப்புப்போக்கை மாற்றிய தமிழவனின் தொடங்கலாம் என்று மாறியது. அடுத்தடுத்த ஆண்டுகளில் க.பூரணச்சந்திரன், ரவிக்குமார், ராஜ்கௌதமன் என நான்காவது ஆண்டு வழங்கப்பட்டது. அந்த ஆண்டு நான் ஓய்வு பெற்றேன். அப்போது அவரது தலித்தியப்பங்களிப்புகள் குறித்து விரிவான கட்டுரை ஒன்றை எழுதினேன்.

பாண்டிச்சேரி வாழ்க்கையில் அரங்கியல் சார்ந்த வாசிப்புகள், செயல்பாடுகள் என இருந்த என்னைத் தலித் இலக்கியங்களின் வாசகனாக மாற்றியது சூழல். நிறப்பிரிகையின் இலக்கிய இணைப்புகளில் ஒன்றாக தலித் இலக்கியச்சிறப்பிதழ் வெளியிடப்பெற்றது. அதில் பாமாவின் சங்கதி குறித்து எழுதிய கட்டுரையே எனது முதல் கட்டுரை. அவரது கருக்கிலிருந்து சங்கதியின் சொல்முறை மாற்றமும் மொழிநடையும் குறித்த அக்கறையோடு எழுதப்பெற்ற கட்டுரை அது. பின்னர் தமிழின் -2000 எனும் பன்னாட்டுக் கருத்தரங்கில் தமிழகத்தில் தலித் இலக்கியம் என்னும் பெருங்கட்டுரையை – முதல் மதிப்பீட்டுக் கட்டுரையை எழுதுபவனாக மாற்றியது. அதுவும் கூட ராஜ்கௌதமனால் தான் நிகழ்ந்தது. ஒரு வருடகாலத் திட்டமிடலில் நடந்த ‘தமிழினி’ யில் தலித் இலக்கியம் குறித்த இரண்டு கட்டுரைகள் இடம் பெறுவதாக இருந்தது. ஒன்று தமிழகத்தில் தலித் இலக்கியம். இன்னொன்று இலங்கையில் தலித் இலக்கியம். தமிழினியின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக நிறப்பிரிகையின் ரவிக்குமாரும் இருந்தார். அப்போது நிறப்பிரிகையின் ஆசிரியர் குழு பிளவுபட்ட நேரம்.,

தமிழகத்தில் தலித் இலக்கியம் கட்டுரையை ராஜ்கௌதமன் வாசிப்பதாகவே முதலில் திட்டம். ஆனால் பாதியில் அவர் பின்வாங்கி விட்டார். நான் அவற்றையெல்லாம் வாசித்து மதிப்பீடு செய்வது சரியாக இருக்காது; கறாராக எழுதி நிராகரிப்புச் செய்துவிடும் வாய்ப்புகள் இருக்கிறது என்றொரு காரணம் சொன்னார். அதற்கு வாய்ப்புகளும் இருந்தன. இமையத்தின் கோவேறு கழுதைகள், ஆறுமுகம் போன்ற நாவல்கள் மீது எதிர்மறை விமரிசனங்களையே அவர் முன்வைத்தார். அப்போது எழுதப்பெற்ற தலித் கவிதைகளையெல்லாம் தேறாது என்றே உரையாடல்களின் போது சொல்லிக்கொண்டிருந்தார். அதனால் கூடுதல் கரிசனத்தோடு இன்னொருவர் வாசித்து மதிப்பீடு செய்து விமரிசிக்கலாம் என்று சொல்லிவிட்டார். இதையெல்லாம் என்னிடம் சொல்லி, நீங்கள் தான் அந்தக் கட்டுரையை எழுதவேண்டும் என்று நண்பர் ரவிக்குமார் அந்தப் பெரிய பந்தை என்னிடம் திருப்பிவிட்டார். அவர் சொல்லி எதையும் மறுப்பதில்லை. ஏற்றுக்கொண்டேன்.

தமிழகத்தில் தலித் இலக்கியம் என்ற பெரிய பந்து வருவதற்கு முன்னால், ‘தமிழின் நவீன நாடகப்போக்குகள்’ என்ற சிறிய பந்து- ஏற்கெனவே நான் உருட்டி விளையாடிக்கொண்டிருந்த பந்து என்னிடம் இருந்தது. அதற்கான தரவுகளை எல்லாம் திரட்டிக் கட்டுரையை எழுதவும் செய்துவிட்டேன். ஆனால் அந்தப் பந்து பறிக்கப்பட்டு இன்னொருவரிடம் தரப்பட்டது. ராஜ்கௌதமன் தாட்டிவிட்ட அந்தப் பந்தை விளையாடத்தொடங்கியதின் விளைவாகவே தமிழின் தலித் எழுத்துகளின் வாசகனானேன்; திறனாய்வாளனாகவும் மாறினேன்.

இன்னும் இன்னுமாக இப்படியான நினைவுகளைக் கிளறிவிட்டுவிட்டு ராஜ்கௌதமனின் உடல் அவருக்கான கல்லறைக்குள் மௌனித்துக் கொண்டது. ஆனால் அவர் உருவாக்கிய ஆய்வு முறையியலும் கருத்தாக்கப்பார்வைகளும் மறுவாசிப்புகளும் அடுத்த தலைமுறையினரிடம் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

















கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சம்ஸ்க்ருதம் : செவ்வியல் மொழியாகவும் ஆதிக்கமொழியாகவும்

தங்கலான்: விடுதலை அரசியலின் கருவி

எஸ். ஜே. சூா்யா :தீராத விளையாட்டுப்பிள்ளை