திறன்மிக்க இரண்டு நடிகைகள்

இந்த ஆண்டின் புத்தகக்கண்காட்சியை ஒட்டி வழங்கப்படும் கலைஞர் பொற்கிழி விருதுகள் வழக்கம்போல ஆறுபேருக்கு வழங்கப்பட உள்ளன. அவர்கள் வருமாறு:உரைநடை/அருணன், நாவல்/சுரேஷ்குமார் இந்திரஜித், சிறுகதை/என்.ஶ்ரீராம், மொழிபெயர்ப்பு/நிர்மால்யா. கவிதை/ஜெயந்தா, நாடகம்/ கலைராணி. இவர்களில் நெல்லை ஜெயந்தாவின் கவிதைகளை வாசித்ததில்லை; அறிமுகமும் இல்லை. அதனால் அவருக்கு வாழ்த்தும் சொல்ல வேண்டியதில்லை. ஆறுபேரில் சுரேஷ்குமார் இந்திரஜித் குறித்தும் என்.ஶ்ரீராம் குறித்தும் எழுதியுள்ளேன். ( விருப்பமானவர்கள் இணைப்புகளில் சென்று வாசிக்கலாம்). மலையாளத்திலிருந்து நிர்மால்யா மொழிபெயர்த்த கவிதைகளையும் உரைநடைகளையும் வாசித்துள்ளேன். அவர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்தையும் பாராட்டையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
நாடகக்கலைஞர் கலைராணி அவர்களுக்குக் கூடுதல் அன்பையும் பாராட்டையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்க வேண்டும். நீண்ட இடைவெளிக்குப் பின் கடந்த ஜனவரியில் திருச்சூரில் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தோம். நாடகப்பள்ளியின் மூன்று நாட்கள் (ஜனவரி, 27-29) நாடகவிழா& கருத்தரங்க நிகழ்வில் நான் உரையாற்றுவதற்காகச் சென்றிருந்தேன். அவர் ஓராள் நாடகம் ஒன்றை நிகழ்த்த வந்திருந்தார். நாடகத்தின் தலைப்பு: Song of Lovino நாடகப்பள்ளியின் ஒரு ஓரத்தில் பெருமரங்கள் நிரம்பிய வெளியில் ஒருமணி நேரம் பார்வையாளர்களைத் தன்பக்கம் திருப்பிக் கட்டிப்போட்டார். நிகழ்வின் முடிவில் அவருக்கு நினைவுப்பரிசை வழங்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அப்போதிருந்த மகிழ்ச்சி இப்போதும் இருக்கிறது.

கூத்துப்பட்டறையின் நடிகையாக அவரைப் பார்த்தது 1980 களின் பிற்பாதியில் இருக்கலாம். ஆனால் சந்தித்தது 1990 இல் என்றே நினைக்கிறேன். கூத்துப்பட்டறையின் பயிற்சிக் குழுவில் அவரும் அவரது தம்பி கலையரசனும் சேர்ந்து பயிற்சி பெற்றார்கள். தீவுத்திடலின் சிற்றரங்கில் நடந்த நிகழ்வுக்குப் பின் அறிமுகப்படுத்திக்கொண்டு பேசிக் கொண்டிருந்தோம். அறிமுகம் செய்து வைத்தவர்கள் அண்ணாமலையும் பசுபதியும். அதன் பிறகு அவரது நடிப்பால் சிறப்புப்பெற்ற கூத்துப்பட்டறை நாடகங்கள் பலவற்றைப் பார்த்திருக்கிறேன். பெரும்பெரும் நாடக இயக்குநர்களின்நாடகங்களில் நடித்து, இந்திய அளவில் அறியப்பட்ட நாடக நடிகை. ந.முத்துசாமியின் நாற்காலிக்காரர், நற்றுணையப்பன், காண்டவவனம், போன்றவற்றிலும் பேரா.சே. ராமானுஜம், அன்மோல் வெலானி போன்றவர்களின் இயக்கத்திலும் நடித்தவர். கூத்துப் பட்டறையில் தரப்பட்ட பயிற்சிகளை, ஆண்களை விடவும் கூடுதலான அக்கறையோடு பெற்றுச் செரித்துக்கொண்டவர். எனது புதுச்சேரி நாடகப்பள்ளி காலத்தில் மேடையிலும் பயிற்சியிலும் அடிக்கடி சந்தித்துக் கொண்டதுண்டு. அவர் வழங்கும் குரல் பயிற்சியே ஒரு அரங்க நிகழ்வுபோல இருக்கும்.

வணிகரீதியான சினிமாவில் - ஷங்கரின் முதல்வன் படத்தில் நடிப்பதற்கு முன்பு அருண்மொழியின் காணிநிலம், பூமணியின் கருவேலம் பூக்கள் போன்ற சினிமாக்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார். நாசரின் தேவதையில் நவீன நாடக நடிகர்கள் பலரும் சிறுசிறு வேடங்களில் நடித்தோம். அவரும் கிராமத்துப் பெண்ணாக நடித்தார். ஆனால் ஷங்கரின் முதல்வனில் அர்ஜுனின் அம்மாவாக நடித்தபிறகு சுமார் 20 சினிமாக்களில் - தமிழ், தெலுங்கு சினிமாக்களில் - அம்மா பாத்திரத்தில் நடிப்பவராக உள்வாங்கப்பட்டுள்ளார். நடிகையாகவும் பயிற்சி வழங்குபவராகவும் ஓராள் நாடகத்தோடும் உலகநாடுகள் பலவற்றில் பயணம் செய்த அனுபவங்கள் கொண்டவர். அவரைக் கலைஞர் பொற்கிழி விருதுக்காகத் தெரிவுசெய்த குழுவுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

கலைராணிக்கு அன்பான வாழ்த்து. 
தொடரட்டும் உங்கள் நடிப்பும் அரங்கச் செயல்பாடுகளும்

ரோகிணி -50


அந்திமழை மாத இதழில் தான் எழுதும் பெருவழிப்பாதை என்ற தொடரில் கவிதா பாரதியின் " தோழர் ரோகிணியின் ஐம்பதாம் ஆண்டு" கட்டுரையை வாசித்தவுடன் 15 ஆண்டுகளுக்கு முன்பு அவரைச் சந்தித்த நாள் நினைவுக்கு வந்துவிட்டது. சென்னைக்கு வந்துள்ளதைத் தெரிந்துகொண்ட பிரசன்னா ராமசுவாமி, தனது நாடக ஒத்திகை ஒன்றைப் பார்க்க வரமுடியுமா? என்று கேட்டார்.

அப்போதெல்லாம் சென்னைக்குப் போய்த் தொடர்ச்சியாக ஒருவாரம்கூடத் தங்குவேன். மகளும் மகனும் சென்னையில் இருந்த காலம். அதனால் சென்னைக்குப் போகும்போது ரயில் டிக்கெட்டை முன்பதிவுசெய்வேன். திரும்பி வருவதற்கு முன்பதிவு செய்யமாட்டேன். சினிமா,நாடகம், இலக்கியம் என ஏதாவது நிகழ்வுகள் இருந்தால் அதற்கேற்பத் தங்கியிருந்து பார்த்துவிட்டுத் தட்கலில் டிக்கெட் போடுவது வழக்கம். ஒத்திகையைப் பார்க்க வருகிறேன் என்று ஒத்துக்கொண்டு போனேன். நடனக்கலைஞர் அனிதா ரத்னத்தின் வீட்டின் ஒரு பகுதியில் இருந்த அந்த முற்ற மேடையில் ஒத்திகை நடந்து கொண்டிருந்தது. நான் போனபோது இளம் நாட்டியக்கலைஞர் ஒருவர் காற்றில் அசையும் கோடுகளாகத் தனது உடலைப் பாவித்துக்கொண்டிருந்தார்.
அரைமணி நேரம் தாண்டியதும் நடிகை ரோகிணி வந்தார். அதுவரை திரையில் நடித்துப்பார்த்த நடிகை, அரங்க ஒத்திகையின்போது எப்படிச் செயல்படுவார் என்ற நினைப்பு எனக்குள் ஓடத்தொடங்கியது. சிறிய அறிமுகத்திற்குப்பின் ஒத்திகை அரங்கில் நுழைந்தார். எனக்குள் மனதில் ஓடிய எண்ணம் அனைத்தும் காணாமல் போய்விட்டது. தீவிரமான நாடக ஒத்திகைக்களமாக மாறியது.

ஒத்திகைக்குப் பின் இந்த நாடகத்தைப் பார்க்கக் கட்டாயம் வருவேன் என்று சொல்லிவிட்டு வந்தேன். நாடகத்தைப் பார்த்து விரிவான கட்டுரையொன்றை எழுதினேன். தனியொரு 'நடி'யாக முழுநாடகத்தையும் தாங்கிப் பார்வையாளர்களுக்குக் கடத்தினார் ரோகிணி.

 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தேடிப்படித்த நூல்கள் அல்லது பழைய புத்தகக் கடையில் கிடைத்த நூல்கள்

நாயக்கர் கால இலக்கியங்கள் சமுதாய வரலாற்றுச் சான்றுகளாகக் கொள்வதற்கான முன் தேவைகள்

சென்னைப் புத்தகக்கண்காட்சிப் பரிந்துரைகள்