நான் என்னும் தன்னிலை: சங்க அகக் கவிதைகளிலும் பக்தி கவிதைகளிலும்

முன்னுரை

எடுத்துரைப்பு (Narrative) என்பது நவீனத் திறனாய்வாளர்கள் அடிக்கடி உச்சரிக்கும் ஒரு கலைச் சொல். அக்கலைச்சொல் மூலம் மேற்கத்தியத் திறனாய்வு கலை இலக்கிய வடிவங்கள் அனைத்திற்கும் பொருந்தக்கூடிய எடுத்துரைப்பியல் கோட்பாட்டை (Narratogy) உருவாக்கித் தந்துள்ளது. உருவவியல் தொடங்கி அமைப்பியல் வழியாக வளர்ந்துள்ள எடுத்துரைப்பியல் கோட்பாடு தொல்காப்பியர் சொல்லும் கூற்று என்பதோடு நெருங்கிய உறவுடைய ஒன்று என்று கருதுகிறது இக்கட்டுரை.கட்டுரை சங்க அகக் கவிதைகளிலும் பக்திக் கவிதைகளிலும் செயல்படும் கூற்று முறையை நவீன எடுத்துரைப்பியல் பின்னணியில் விளக்க முயற்சி செய்கிறது. அம்முயற்சிக்காக அகக்கவிதைகள் அனைத்தையும் தரவுகளாக எடுத்துக் கொள்ளவில்லை. அதேபோல் பக்திக்கவிதைகள் அனைத்தையும் தரவுகளாக எடுத்துக் கொள்ளவில்லை. அதனால் கிடைக்கும் முடிவும் முடிந்த முடிவும் இல்லை. முதல் கட்ட நிலையில் இவ்வாறு வாசிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன என்று காட்டுகிறது. இந்த முன்னாய்வைத் தொடர்ந்து ஒருவர் முழுமையையும் தரவுகளாக்கி இந்நோக்கில் ஆய்வு செய்யலாம். அப்போது இந்த முடிவு உறுதி செய்யப்படலாம். அல்லாமல் மாறுபட்ட முடிவும் கூடக் கிடைக்கலாம்.
கூற்று- விளக்கம்

மொழி சார்ந்த தொடர்பியல் கட்டமைப்பில் சொல்பவர் (Sender ) என்ற கூறும், கேட்பவர் ( Receiver) என்ற கூறும் பிரிக்க முடியாதவை. இவ்விரண்டிற்கும் இடையில் சொல்லப்படுவது ( Message) என்ற கூறு உள்ளடக்கி நிற்கும் போது தொடர்பியல் வினை முழுமை அடைகிறது. எழுத்து மொழி சார்ந்த வரிவடிவத் தொடர்பியலிலும் சரி, ஒலிவடிவத் தொடர்பியலிலும் இந்த மூன்று கூறுகளும் அவசியம். எழுத்து மொழி சாராது குறியீடுகளின் வழி செயல்படும் தொடர்பியலிலும் இந்த மூன்று கூறுகளும் இருக்கின்றன.

தமிழ் இலக்கணங்கள் கற்று, அதன் வழியாகக் கூற்று பற்றிச் சிந்திக்கும் போது தொடர்பியல் கட்டமைப்பின் நிலையைக் கூற்றுநிலை என்ற சொல்லால் குறிப்பிடலாம் . கூற்றுநிலை என்பதை விளக்கும் போது இரண்டு இடங்களை மையப்படுத்திப் பேச வேண்டியுள்ளது. முதல் புள்ளி பெயரியலில் வரும் ‘இடம்’ என்ற கலைச்சொல்லைப் புரிந்து கொள்ள வேண்டியது. இரண்டாவது பாவியலின் ஒரு கூறான கூற்று என்பதன் விரிவாக அமைவது. பெயரியலில் திணை, பால், பற்றிப் பேசும் தொல்காப்பியர் அடுத்து இடம் என்பதைக் குறிப்பிடுகின்றார். பெயர்களின் அடையாளமாக உயர்திணை, அஃறிணை என்ற இரண்டு திணைகள், ஆண், பெண், பலர், ஒன்றன், பலவின் என ஐந்து பால்கள், பற்றிக் கூறிவிட்டு இடத்தைக் குறிப்பிடும் போது தன்மை, முன்னிலை, படர்க்கை என்ற மூன்றையும் கூறுகின்றார். இவற்றிற்கு உதாரணங்களையும் சுட்டியுள்ளனர் தமிழ் இலக்கணிகள். அவற்றைப் பின்னர் விளக்கலாம்.

இரண்டாவதாக, கூற்று பற்றிய விரிவான பகுதிகள் பொருளதிகாரத்தில் இடம் பெறுவன. செய்யுள் உறுப்புகளுள் ஒன்றாகக் கூற்றைக் குறிப்பிடும் தொல்காப்பியர், களவியலிலும் கற்பியலிலும் கூற்று நிகழிடங்களையும் நிகழ் முறைகளையும் விரிவாகப் பேசுகின்றார். சங்கக் கவிதைகளைத் தொகுத்தவர்களும் ஓர் உறுப்பு என்ற அளவிலேயே கூற்றைக் கருதினார்கள் என்று சொல்வதற்கில்லை. பாவியலின் ஆதாரமான கூறுகளுள் ஒன்றாகக் கூற்று கருதப்பட்டது என்பதைப் பிந்திய வளர்ச்சியும் உறுதி செய்கிறது.

சங்கக்கவிதை என அழைக்கப்படும் செவ்வியல் கவிதைகளின் பொருள் அறிவதில் கூற்று பெரும் பங்காற்றுகிறது. இக்கூற்றுக்களை கவிதையை எழுதிய கவிகளே எழுதினார்களா? தொகுத்த தொகுப்பாளர்கள் எழுதினார்களா?உரை எழுதிப் பதிப்பித்தோர் எழுதினார்களா? என்னும் விவாதம் முன்பு நடந்துள்ளது. தொடர்ந்தும் நடைபெறும் இவ்விவாதத்திற்குள் நுழைய வேண்டியதில்லை. பொதுநிலையில் அகம், புறம் எனப் பேசுபொருள் அடிப்படையில் பிரிக்கப்படும் கவிதைகளின் அர்த்தத்தேடலுக்கு இன்று ஆதாரமாக இருப்பவை அவை ஒவ்வொன்றுக்கும் எழுதப்பட்ட கூற்றுக்களும், திணை, துறைக்கூறுகளும் என்பதை ஒத்துக் கொள்ளுதலில் சிக்கல் எதுவும் இல்லை. இவ்விரண்டு வகைக் கவிதைகளிலும் புறப்பொருள் பேசும் கவிதைகளை விடவும் அகப்பொருள் பேசும் கவிதைகளுக்குக் கூற்றின் தேவை முக்கியமாக இருக்கிறது.

பெரும்பாலும் படர்க்கைக் கூற்றில் அமையும்படி எழுதப்பட்டுள்ள புறக் கவிதைகளின் பொருளை அறிய அப்பாடல்களின் திணை, துறைகளுக்குப் பங்கு இருக்கும் அதே அளவுக்குக் கூற்றிற்கும் பங்கு உண்டு. ஒருவர் சொல்லப் பலர் கேட்கும் தன்மை அவைகளின் பொது இயல்பு. புறக்கவிதைகளின் கூற்றுநிலையில் சொல்கிறவன் பாத்திரமாக இல்லாமல் கவிதையை எழுதும் கவிக்கூற்றாகவே கொள்ள அதிக வாய்ப்புக்கள் உண்டு. ஆனால் அகக் கவிதைகளின் பொதுத் தன்மை அதற்கு மாறானது. ஒருவர் சொல்லுவதை இன்னொருவர் கேட்கும் விதமாக அமைந்துள்ள கூற்றுநிலையே அகக் கவிதைகளின் பொது இயல்பு. ஆசிரியர் கூற்றுத் தன்மையை மறைத்து தலைவன், தலைவி, தோழி, செவிலித்தாய், நற்றாய், பாங்கர், தமர், கண்டோர், பரத்தை, வாயில் என்பதான அகத்திணை மாந்தர்களின் கூற்றாக அமையும் இயல்புடையன அகக் கவிதைகள். இவ்வியல்பு காரணமாகவே அகக் கவிதைகளின் பொருள் அறிதலுக்கு அப்பாடலின் திணைக் குறிப்பும் கூற்றும் முக்கியமான தேவையாகின்றன. திணை சார்ந்த முதல் பொருள், கருப்பொருள், உரிப்பொருள் ஆகியனவற்றைக் கொண்டு பொருள் கூற முடியும் என்றாலும் கூற்றின் பங்கைக் குறைத்துச் சொல்ல முடியாது.

கவிதை இலக்கியம் மட்டும் அல்லாமல் எல்லா வகையான இலக்கிய வடிவங்களும் கூற்றுநிலை என்ற தொடர்பியல் கட்டமைப்பின் வழியே தான் அதன் உள் கட்டமைப்பை உருவாக்குகின்றன. எல்லா இலக்கிய வடிவங்களும் எழுத்தாளர் என்ற ஒருவரின் கூற்றுதான் என்றாலும், அவன் நேரடியாகப் பேசும் கூற்றுநிலையைத் தவிர்த்து விட்டுப் பாத்திரங்களின் வழியாகப் பேசும் கூற்று நிலையை உருவாக்குவதன் மூலம் தான் இலக்கியவியலின் நுட்பங்கள் உருவாக்கப்படுகின்றன என்று கூடச் சொல்லலாம். உலகியல் நடப்புகள், அறங்களைப் பேசுதல், நிகழ்வுகளைச் சித்திரித்தல், வழிகாட்டு முறைகளைத் தொகுத்துக் கூறுதல் போன்றவற்றிற்கு அதிகம் பயன்படும் ஆசிரியர் கூற்று முறைகள் இலக்கியவியலில் மதிப்புக் குறைவான இடத்தையே வகிக்கின்றன. தமிழில் இருக்கும் நீதி நூல்களுக்கு இலக்கியவியல் தரும் இடத்தை நினைத்துக் கொள்ளுங்கள். இதன் காரணமாகவே அக்கூற்று நிலைத் தவிர்க்கப்பட்டு படர்க்கைக் கூற்றை எழுத்தாளர்கள் கைக்கொள்கின்றனர் என்று கூடச் சொல்லலாம். தற்கால இலக்கிய வடிவங்களான சிறுகதை, நாவல் வடிவங்கள் கண்ணுக்குப் புலப்படாப் பாத்திரமாக ஆசிரியனை நிறுத்திக் கொண்டு அவர் வழியாக எல்லாவற்றையும் நிகழ்த்திக் காட்டுகின்றன. அத்தகைய மறைநிலைக் கூற்றுநிலையே (Omniscient Narration) இவ்வடிவங்களில் பெரிதும் விரும்பப்படுகின்றன.

நான் - இலக்கண வரையறைகளிலிருந்து உளவியல் விளக்கத்திற்கு.


பெயரியலில் சொல்லப்படும் மூவிடங்களில் ஒன்றான தன்மை இடத்தின் உயர்திணை ஒருமை ‘நான் ‘ என்பது. நான், யான், தான் என்பனவும் தன்மை ஒருமைகளே. நாங்கள் என்பது தன்மைப் பன்மை. அகக்கவிதைகள் சுட்டி ஒருவர் பெயர் கூறாது, ஒரு நான் வழியாக அதன் எதிரே இருக்கும் முன்னிலைக்குக் கூறும் கூற்றாகவே வடிவம் கொண்டுள்ளன. அகத்திணைப் பாத்திரங்களில் ஒன்று தன்மை இடத்தில் நின்று சொல்ல, இன்னொரு பாத்திரம் முன்னிலை இடத்தில் நின்று கேட்கின்றன. இப்பொதுக் கட்டமைப்பைக் கொண்ட அகக் கவிதைகள் இவ்விரு பாத்திரங்களின் இயல்புகளையும் நமக்குத் தருகின்றன என்றாலும், சொல்லும் பாத்திரத்தின் தன்னிலையைக் கூடுதலாகத் தருகின்றன என்பதைக் கவிதைகளை வாசிக்கும் போது நாம் உணர முடியும்.

இந்த இடத்தில் தொல்காப்பிய இலக்கியக் கோட்பாடுகள் பற்றிப் பேசும் ஒருவரின் கூற்று ஒன்றை மேற்கோளாகக் காணலாம். ‘’ தொல்காப்பியம் தரும் அக இலக்கணம் பெரும்பாலும் பாத்திரங்களின் கூற்றுகளினாலேயே அமைகின்றது. இந்தக் கூற்றுக்களின் பொது அமைப்பை நோக்கும் போது அவை கூற்றாளர், கேட்போர், சூழல், பொருள், (Content) செய்தி,(Message) நோக்கம், பயன், வெளியீட்டுத் தொடர், கூற்றுடன் நிற்கும் உணர்வுச்சூழல், கூற்றாளன் உளப்பாங்கு, கேட்போன் உளப்பாங்கு, கூற்றின் தொனி, கூற்றுக் காரணமாகும் பிறிதொரு கூற்று, கூற்றின் பின்னமையும் மரபு, கூற்றில் பயன்படும் உத்தி, கூற்றில் வெளியீட்டு முறை என்ற பல கூறுகளை உள்ளடக்கியுள்ளது. [ப.53, இந்திரா மனுவேல் -1998, தொல்காப்பிய இலக்கியக் கோட்பாடுகள். உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், தொ-ர். செ.ஜீன் லாரன்ஸ், கு.பகவதி,]

தன்மைக்கும் முன்னிலைக்கும் இடையே நிகழும் தொடர்பியல் செயல்பாட்டில் கவிதை வடிவம் முழுமை அடைகிறது. அவ்வடிவம் கூற்றாளரை முன்னிலைப் பாத்திரத்தின் முன்னால் நிறுத்தி அதன் தன்னிலையை அல்லது அகநிலையைக் கட்டமைத்து உருவாக்கிக் காட்டுகிறது. அப்படி உருவாக்கப்படும் தன்னிலையின் தேவையை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கை அவ்வடிவத்தில் மறைமுக வேண்டுகோளாக இருக்கின்றன. அகக்கவிதைகளில் இம்மறைமுக வேண்டுகோள், காதல் அல்லது காமம் சார்ந்த ஒன்றாக இருக்கிறது. பக்திக் கவிதைகளில் ஈடேற்றம் அல்லது ஏற்புநிலை என்பதாக மாறுகின்றது. காமம் அல்லது காதலை ஏற்றல் என்பதைப் பேசும் அகக்கவிதைகளையும் மனிதர்களது உலக வாழ்வுக்குள் ஈடேற்றம் பற்றிப் பேசும் பக்திக்கவிதைகளையும் கவனித்துப் பார்க்கவேண்டும். அக்கவிதைக்குள் நிற்கும் கூற்றாளராகிய தான் அல்லது நான் தன்னுடைய தன்னிலையைக் கட்டமைத்துக் காட்ட மொழியையே கருவியாகப் பயன்படுத்துகிறது புலப்படும். மொழியின் வழியாகக் கட்டமைக்கப்படும் தன்னிலையைப் பற்றி நவீன உளப் பகுப்பாய்வு விரிவாகப் பேசுகிறது என்பதையும் இந்த இடத்தில் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
சில அடிப்படைகளை இங்கே நிறுத்துகிறேன்.

பனுவல் பகுப்பாய்வு அணுகுமுறையை மையமாகக் கொண்ட பின்னை அமைப்பியல்- மொழிக்கும் அதிலும் குறிப்பாகக் குறியியலுக்கும் முக்கியத்துவம் தருகிறது. இத்தகு அணுகுமுறையில் தேர்ந்த லக்கான், தெரிதா, ரோலந் பர்த், முதலியோர் பின்னை நவீனத்துவத்தோடும் தொடர்புடையவர்களாகக் கருதப்படுகின்றனர். பனுவல் அணுகுமுறைப்படி மொழியே மனிதனைத் தீர்மானிக்கிறது. மனிதப் படைப்புகளுக்கும் அகநிலைக்கும் பனுவல் விளக்கம் தருவதே இதன் நோக்கமாகும். ஃபிராய்டிடம் இத்தகு அணுகுமுறை இருந்ததைக் கண்டு, அதை வளர்க்க லக்கான் மொழியியலையும் அமைப்பியலையும் துணைக்குக் கொள்கிறார். அதாவது ஃபிராய்டியத்தில் குறியியலைக் கலந்து புதிய பரிமாணத்தை ஏற்படுத்துகிறார். இத்தகு போக்குக்கு சசூர், லெவிஸ்றாஸ் கருத்தாக்கங்கள், லக்கானின் ஆய்வுக்கருவிகள் ஆயின. குறிகளால் ஆனதே மொழி என்பது சசூர்வாதம். குறிகளால் ஆனதே சமூக உறவுகள் என்பது லெவிஸ்றாஸ் வாதம். இவ்விரண்டையும் கலந்து ‘ குறிகளால் ஆனதே அகநிலை’ என்பதை நிறுவுகிறார் லக்கான்.

அகநிலையை உருவாக்குவது எது? இந்தப்புதிருக்குத் தான் எத்தனை விடைகள்! தத்துவ வரிசையில் தெக்கார்த்தே தொடங்கி காண்ட், மார்க்ஸ் வழியாக, இன்று வரை அகநிலை பற்றிச் சிந்திக்காத தத்துவவாதிகளே இல்லை. அகநிலையை உருவாக்குவது ‘சிந்தனையே’ என்று தெக்கார்த்தேயும், புறக் கோரல்களே என்று காண்ட்டும், சமூகமே என்று மார்க்ஸும், உள்ளுணர்ச்சிகளே என்று டார்வினும், புரிதலே என்று ஹைடெக்கரும் பாலுணர்ச்சியே என்று ப்ராய்டும் முன் வைக்கின்றனர். இம்மரபு வழியில் ‘மொழியே அகநிலையைத் தீர்மானிக்கிறது’ என்கிறார் லக்கான். ‘சிந்தையே நான்’ என்பது கார்ட்டீசிய அகநிலை ஆகும். அதாவது தெக்கார்தே கூற்றுப்படி நான் என்பது அகநிலையின் மையமாகும். இதைச் சற்று மாற்றி ‘ சிந்தையின்மையே நான்’ என்று வெறுமையை முன்னிலைப் படுத்துகிறார் லக்கான். ‘நான் எங்கு இல்லையோ அங்கிருந்து சிந்திக்கிறேன், அதனால் சிந்திக்காத இடத்தில் நான் இருக்கிறேன் என்பார் லக்கான். [ஃபிராய்ட் யூங் லக்கான்-அறிமுகமும் நெறிமுகமும் பக்.158-159 ]

எந்த மனிதனும் இடிபஸ் கட்டத்தைக் கடக்காமல் வர முடியாது என்று கூறும் ஃபிராய்ட், இக்கட்டத்தோடு உளக்கட்டமைப்பு ஒரு முடிவுக்கு (வடிவத்திற்கு) வந்து விடுகிறது என்கிறார். உள அமைப்புக் குறித்து அவர் கூறும்போது இடிபஸ் சிக்கலை ஆதாரமாகக் கொள்கிறார். இது கட்டடத்திற்கு அடித்தளம் போன்றதாகும். அடித்தளத்தின் அமைப்பு (வடிவம்) முறையில் தான் கட்டடம் வளரும். இத்தகு கட்டுமானமே அகநிலை உருவாக்கத்தில் நடக்கிறது. எனவே இடிபஸ் சிக்கலைப் புரிந்து கொள்ளாமல் தனியரையோ சமூகத்தையோ புரிந்து கொள்ள முடியாது.[ஃபிராய்ட் யூங் லக்கான் - அறிமுகமும் நெறிமுகமும் ப. 35]

உளப்பகுப்பாய்வுப்படி பாலுணர்ச்சி போல் சாவுணர்ச்சியும் குழந்தைப் பருவத்திலிருந்தே செயல்பாட்டுக்கு வந்து விடுகிறது. இந்த உணர்ச்சி மட்டும் அகநிலையில் செயல்படவில்லை என்றால், உள இறுக்கங்கள் வளர்ந்து கொண்டே இருக்கும். இதனால் மனிதர்கள் எளிதில் பித்தர்களாக ஏதுவாகிவிடும். உண்மையான ‘சாவு’ என்பது, இறுக்கமற்ற உள்ளத்தைக் குறிக்கும். அதாவது உள்ளமின்மையே ‘சாவுநிலை’ என்றாகிறது. உள்ளமில்லாத உடல் தான் பிணமாகும். [ஃபிராய்ட் யூங் லக்கான் - அறிமுகமும் நெறிமுகமும் ப. 73]

தன்னிலை உருவாக்கமும் அழிப்பும்

காதல் ஏற்பு என்னும் மையத்தைப் பாடுபொருளாக்கும் அகக்கவிதைகளில் கூற்றாளத் தன்னிலையை அல்லது அகநிலையைத் மொழியால் கட்டமைத்து உருவாக்கிக் காட்டுவதன் மூலம் தான் அதை நிறைவேற்ற முடியும் என்பதால் நானின் இருப்பு முக்கியத்துவம் பெறுகிறது. கூற்றாளத்தன்னிலையின் கோரிக்கை நிறைவேற்றத்திற்குக் கேட்குமிடத்தில் இருக்கும் முன்னிலையும் முக்கியம் என்பதால் அதன் இருப்பும் அகக்கவிதையில் அதன் அளவில் இடம் பிடிக்கிறது. சில அகக் கவிதைகளை வாசித்துப் பார்க்கலாம்.

முட்டு வேன்கொல் தாக்கு வேன்கொல்
ஒரேன் யானுமோர் பெற்றி மேலிட்டு
ஆஅ வொல்லெனக் கூவு வேன்கொல்
அலமர லசைவளி யலைப்பவென்
உயவுநோ யறியாது துஞ்சு மூர்க்கே. 

[ஔவையாரின் குறுந்தொகை:28./ பாலை / வரைவிடை ஆற்றாளாய்க் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.]

ஔவையாரின் இக்கவிதையில் கூற்றை நிகழ்த்தும் தன்னிலையின் இருப்பே உருவாக்கிக் காட்டப்படுகிறது. அத்தந்தத் தன்னிலை காதலும் காமமும் நிரம்பிய உடலோடு தவிக்கும் தன்னிலையாக இருக்கிறது. இந்த ஊர் எனதிருப்பின் தன்மையை அறியாமல் நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருக்கிறது. (இங்கே ஊர் என்பது ஊருள்ளோருக்கு ஆகிவந்துள்ளது). ஆனால் எனது உடலோ எங்காவது முட்டிக்கொல்லவேண்டும்; யாரையாவது தாக்கவேண்டும்; எனக்குள் உருவாகித்திளைக்கும் காமத்தைக் கூவி வெளிப்படுத்தவேண்டும் என்று நினைக்கிறது. ஆனால் அடுத்து வரும் அள்ளூர் நன்முல்லையின் கவிதையில் முன்னிலையின் இருப்பும் உருவாக்கப் பட்டுள்ளதைக் காணலாம்.

ஒருநாளின் பொழுதுகளை காலை, பகல், மாலை, யாமம் விடியல் எனப் பிரித்துக் கொண்டு குறிப்பிட்ட நேரத்தில் வருவது உண்மையான காதலாக/ காமமாக இருக்காது. உண்மையான காமம் இப்படி நேரம், காலமெல்லாம் பார்க்காது. அதனால் எனக்குள் ஊறும் காமத்தை வெளிப்படுத்த மடலேறுவது என்று உறுதியெடுத்துவிட்டது. அதனால் ஏற்படும் பழிச்சொல்லையும் ஏற்றுக்கொள்ளப்போகிறேன். என் காதல் ஏற்றுக் கொள்ளப்படாத நிலையில் வாழ்தலும் தேவையில்லை என்பதை உணர்த்தப்போகிறேன் என்று பேசுகிறது. அந்தப் பேச்சுக்குரிய பாத்திரமாக இருப்பது ஓர் ஆண் , இனிக்கவிதையை வாசிக்கலாம்:

காலையும் பகலும் கையறு மாலையும்
ஊர்துஞ் சியாமமும் விடியலு மென்றிப்
பொழுதிடை தெரியிற் பொய்யே காமம்
மாவென மடலோடு மறுகில் தோன்றித்
தெற்றெனத் தூற்றலும் பழியே
வாழ்தலும் பழியே பிரிவுதலை வரினே.

 [குறுந். (32) காமமிக்க களிபடர் கிளவியாய்த் தலைவன் கூறியது ]

குறுந்தொகை தொடங்கி ஐங்குறுநூறு, நற்றிணை, அகநானூறு, கலித்தொகை, என எட்டுத்தொகையில் இடம் பெறும் அகக் கவிதைகளின் தொகுப்பிலும் பத்துப் பாட்டில் இடம் பெற்றுள்ள குறிஞ்சிப் பாட்டு, முல்லைப் பாட்டு, நெடுநல்வாடை போன்ற நெடும்பாடல்களிலும் தன்னிலை உருவாக்கமும், இருப்பும், முன்னிலையின் இருப்பும், ஏற்க வேண்டிய நியாயமும் என்பதான கட்டமைப்பைக் காணலாம்.*

அம்ம வாழி, தோழி கொண்கன்
தா ன்அது துணிகுவன் அல்லன்; யான்என்
பேதை மையால் பெருந்தகை கெழுமி,
நோதகச் செய்தது ஒன்று உடையேன் கொல்லோ?
வயச்சுறா வழங்குநீர் அத்தம்
தவச்சில் நாளினன் வரவுஅறி யானே.

[அறிவுடைநம்பியின் குறுந்தொகை/ 230- நெய்தல் /வலிதாகக் கூறிக் குறை நயப்பித்தது.]

உடலினென் அல்லேன்; பொய்யாது உரைமோ;
யாரவள், மகிழ்ந! தானே தேரொடு,
தளர்நடைப் புதல்வனை உள்ளிநின்
வளமனை வருதலும், வௌவி யோளே?

[ஓரம்போகியார்/ ஐங்குறுநூறு. 66 /- புதல்வனைப் பிரியாதவன் பிரிந்து புறத்துத் தங்கி வந்தானாக, அவனோடு புலந்து தலைமகள் சொல்லியது]

கன்னி விடியல், கணைக்கால் ஆம்பல்
தாமரை போல மலரும் ஊர!
பேணா ளோநின் பெண்டே
யான்தன் அடக்கவும், தான்அடங் கலளே!
[ஐங்குறுநூறு.68- 4/ பரத்தை தான் தலைமகளைப் புறங்கூறி வைத்துத் தன்னைத் தலைமகள் புறங்கூறினாளாகப் பிறர்க்குக் கூறினமை கேட்ட தலைவி, தலைமகற்குச் சொல்லியது.]

யாயே, கண்ணினும் கடுங்காத தலளே
எந்தையும், நிலனுறப் பொறாஅன், ‘சீறடிசிவப்ப,
எவன்!இல! குறுமகள்! இயங்குதி?’ என்னும்
யாமே; பிரிவுஇன்று இயைந்த துவராநட்பின்
இருதலைப் புள்ளின் ஓருயிர் அம்மே;
ஏனலம் காவலர் ஆகாது ஆர்த்தொறும்,
கிளிவிளி பயிற்றும் வெளில்ஆடு பெருஞ்சினை
விழுக்கோள் பலவின் பழுப்பயம் கொண்மார்,
குறவர் ஊன்றிய குரம்பை புதைய
வேங்கை தாஅய தேம்பாய் தோற்றம்
புலிசெத்து, வெரீஇய புகர்முக வேழம்,
மழைபடு சிலம்பில் கழைபட, பெயரும்
நல்வரை நாட! நீ வரின்,
மெல்லியல் ஓரும் தான்வா ழலளே.

கபிலர்/ அகநானூறு 12 / குறிஞ்சி -- பகற்குறி வாராநின்ற தலைமகன் இரவுக்குறி வாரா வரைவல் என்றாற்கு, அதுவும் மறுத்து வரைவு கடாயது]

குடுமிக் கொக்கின் பைங்காற் பேடை
இருஞ்சேற் றள்ளல் நாட்புலம் போகிய
கொழுமீன் வல்சிப் புன்றலைச் சிறாஅர்
நுண்ஞா ணவ்வலைச் சேவல் பட்டென
அல்குறு பொழுதின் மெல்கிரை மிசையாது
பைதற் பிள்ளை தழீஇ யொய்யென
அங்கட் பெண்ணை யன்புற நரலுஞ்
சிறுபல் தொல்குடிப் பெருநீர்ச் சேர்ப்பன்
கழிசேர் புன்னை யழிபூங் கானற்
றணவா நெஞ்சமொடு தமியன் வந்துநம்
மணவா முன்னு மெவனோ தோழி
வெண்கோட்டு யானை விறற்போர்க் குட்டுவன்
தெண்டிரைப் பரப்பிற் றொண்டி முன்றுறைச்
சுரும்புண மலர்ந்த பெருந்த ணெய்தல்
மணியேர் மாணல மொரீஇப்
பொன்னேர் வண்ணங் கொண்டவென் கண்ணே.

நக்கீரரின் அகநானூறு : 290 /நெய்தல்/ இரவுக்குறிக்கண் தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழிக்குச் சொல்லுவாளாய்த் தலைமகள் சொல்லியது.
            வரியணி பந்தும் வாடிய வயலையும்
            மயிலடி யன்ன மாக்குரல் நொச்சியும்
            கடியுடை வியனகர் காண்வரத் தோன்றத்
தமியே கண்டதண் டலையுந் தெறுவர
நோயா கின்றே மகளைநின் தோழி
எரிசினந் தணிந்த இலையி லஞ்சினை
வரிப்புறப் புறவின் புலம்புகொள் தெள்விளி
உருப்பவி ரமையத் தமர்ப்பனள் நோக்கி
இலங்கிலை வெள்வேல் விடலையை
விலங்குமலை யாரிடை நல்யுங்கொ லெனவே.

{நற்றிணை,305 /கயமனார்.திணை : முல்லைலை. துறை : (1) நற்றாய் தோழிக்குச் சொல்லியது; (2) மனை மருட்சியும் ஆம்.

சுடர்த்தொடீஇ! கேளாய்! தெருவில் நாம் ஆடும்
மணற் சிற்றில் காலின் சிதையா, அடைச்சிய
கோதை பரிந்து, வரி பந்து கொண்டு ஓடி,
நோ தக்க செய்யும் சிறு, பட்டி, மேல் ஓர் நாள்,
அன்னையும் யானும் இருந்தேமா, ‘இல்லிரே! 5
உண்ணு நீர் வேட்டேன்' என வந்தாற்கு, அன்னை,
அடர் பொற் சிரகத்தால் வாக்கி, சுடரிழாய்!
உண்ணு நீர் ஊட்டி வா’ என்றாள்: என, யானும்
தன்னை அறியாது சென்றேன்; மற்று என்னை
வளை முன்கை பற்றி நலிய, தெருமந்திட்டு, 10
அன்னாய்! இவனொருவன் செய்தது காண்’ என்றேனா,
அன்னை அலறிப் படர்தர, தன்னை யான்,
உண்ணு நீர் விக்கினான்’ என்றேனா, அன்னையும்
தன்னைப் புறம்பு அழித்து நீவ, மற்று என்னைக்
கடைக்கண்ணால் கொல்வான் போல் நோக்கி, நகைக் கூட்டம் 15
செய்தான், அக் கள்வன் மகன்

குறிஞ்சி /51,கலித்தொகை/ கபிலர்/‘புகாஅக் காலைப் புக்கு எதிர்ப்பட்டுழி, பகாஅ விருந்தின் பகுதிக்கண்’ தலைவி, தோழிக்குக் கூறியது


நின்ற வேனில் உலந்த காந்தள்
அழலவிர் நீள்இடை, நிழலிடம் பெறாஅது,
ஈன்றுகான் மடிந்த பிணவுப்பசி கூர்ந்தென,
மான்ற மாலை, வழங்குநர்ச் செகீஇய,
புலிபார்த்து உறையும் புல்அதர்ச் சிறுநெறி
யாங்குவல் லுநள்கொல் தானே யான்,தன்
வனைந்துஏந்து இளமுலை நோவ கொல்என
நினைந்துகைந் நெகிழ்ந்த அனைத்தற்குத் தான்தன்
பேர்அமர் மழைக்கண் நீரிய கழல,
வெய்ய உயர்க்கும் சாயல்,
மைஈர் ஓதிப் பெருமடத்தகையே?
[ பூதனாரின் நற்றிணை 29/ மகட்போக்கிய தாய் சொல்லியது.]

இக்கட்டமைப்புக்குள் செயல் படுவது முன்னர் சொன்னது போல காதல் அல்லது காம ஏற்பு என்பது தான். ஆனால் பக்திக் கவிதைகள் இந்நிலையிலிருந்து மாறுபட்டவை.இவ்வுலகவாழ்விற்குப் பதிலாக அடுத்த பிறவி அல்லது வேறோர் உலக வாழ்வை நோக்கிய நகர்வை மையப்படுத்தும் நிலைப்பாடு கொண்ட தன்னிலைகளே அக்கவிதைகளில் வெளிப்படும் நான்கள். அந்நான்கள் மரணத்தையும் மரணத்திற்குப் பிந்திய இருப்பையும் வாழ்வையும் மையப்படுத்துவன. அதனால் பக்திக் கவிதையில் நானின் இருப்பு முக்கியத்துவம் பெறாமல் அதன் அழிப்பை முக்கியப் படுத்துவதோடு, முன்னிலையில் நிற்பதாகக் கருதும் இறைவனின் தன்னிலை உருவாக்கம் அதைவிடக் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. காட்டாகச் சில கவிதைகளை வாசித்துப் பார்க்கலாம்:

பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து
மின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை யணிந்தவனே
மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே
அன்னே யுன்னையல்லா லினியாரை நினைக்கேனே.

கிளார் கோவணமும் திருநீறுமெய் பூசியுன்றன்
தாளே வந்தடைந்தேன் தலைவாவெனை ஏன்றுகொள்நீ
வாளார் கண்ணிபங்கா மழபாடியுள் மாணிக்கமே
            கேளா நின்னையல்லா லினியாரை நினைக்கேனே.

சுந்தரர் தேவாரம் / ஏழாம் திருமுறை/ திருமழபாடி


தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்
திருநீல கண்டத்துக் குயவனார்க் கடியேன்
இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்
இளையான்றன் குடிமாறன் அடியார்க்கும் அடியேன்
வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக் கடியேன்
விரிபொழில்சூழ் குன்றையார் விறல்மிண்டர்க் கடியேன்
அல்லிமென் முல்லையந்தார் அமர்நீதிக் கடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.

சுந்தரர் தேவாரம் / ஏழாம் திருமுறை/ திருத்தொண்டத்தொகை

நானாரென் நுள்ளமார் ஞானங்களார் என்னையாரறிவார்
வானோர் பிரானென்னை யாண்டிலேன் மதிமயங்கி
ஊனா ருடைதலையில் உண்பலிதேர் அம்பலவன்
தேனார் கமலமே சென்றூதாய் கோத்தும்பீ

கண்ணப்ப னொப்பதோர் அன்பின்மை கண்டபின்
என்னப்பன் என்னொப்பில் என்னையுமாட் கொண்டருளி
வண்ணப் பணிந்தென்னை வாவென்ற வான்கருணைக்
சுண்ணப் பொன்னீற்கே சென்றூதாய் கோத்தும்பீ

நாயேனைத் தன்னடிகள் பாடுவித்த நாயகனைப்
பேயேன துள்ளப் பிழைபொறுக்கும் பெருமையனைச்
சீயேது மில்லாதென் செய்பணிகள் கொண்டருளுந்
தாயான ஈசற்கே சென்றூதாய் கோத்தும்பீ

நான்றனக் கன்பின்மை நானுந்தா னும்மறிவோம்
தானென்னை யாட்கொண்ட நெல்லாருந் தாமறிவார்
ஆன கருணையும் அங்குற்றே தானவனே
கோனென்னைக் கூடக் குளிர்ந்தூதாய் கோத்தும்பீ
மாணிக்கவாசகர் தேவாரம் / எட்டாம் திருமுறை 
/ திருக்கோத்தும்பி

அன்பே தகளியா ஆர்வமே நெய்யா
இன்புருகு சிந்தை இடுதிரியா- நன்புருகி
ஞானச் சுடர்விளக்கேற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ்புரிந்த நான்

அவரிவர்என் றில்லை அரவணையான் பாதம்
எவர்வணங்கி யேந்தார் எண்ணில் - பலரும்
செழுங்கதிரோன் ஒண்மலரோன் கண்ணுதலோன் அன்றே
தொழுந்தகையார் நாளும் தொடர்ந்து.

பூதத்தாழ்வார் / இரண்டாம் திருவந்தாதி /1

பச்சைமா மலைபோல் மேனிப் பவளவாய்க் கமலச் செங்கண்
அச்சுதா அமர ரேறே ஆயர்தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான்போய் இந்திர லோகம் மாளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகரு ளானே.

[தொண்டரடிப் பொடியாழ்வார்/ திருமாலை.1]

சென்றால் குடையாம் இருந்தால்சிங் காசனமாம்
நின்றால் மரவடியாம் நீள்கடலுள் - என்றும்
புணையாம் மணிவிளக்காம் பூம்பட்டாம் புல்கும்
அணையாம் திருமாற் கரவு. 
[ பொய்கையாழ்வார்/ முதல் திருவந்தாதி / 8
நாயன்மார்களின் பாசுரத்திலும் ஆழ்வார்களின் பிரபந்தங்களிலும் சாராம்சமாக வெளிப்படும் இந்த மரணத்திற்குப் பிந்திய வாழ்வுக்கான ஈடேற்றம் ஆண்டாளின் கவிதைகளில் காணப்படவில்லை. அவள் இறைவனை இவ்வுலகத்திற்கு வந்து இணைந்து களிப்பூட்டும் முன்னிலைப் பொருளாக- தலைவனாகக் கருதியதால், அகப்பாடல் மரபே காணப்படுகிறது. கூற்றுத்தன்னிலைக்கும் கேட்பு முன்னிலைக்கும் சம இடம் தரும் நிலையை நாச்சியார் திருமொழியிலும் காண முடிகிறது. திருப்பாவையிலும் வாசிக்க முடிகிறது. எடுத்துக்காட்டாக நாச்சியார் திருமொழியிலிருந்து

வாரணம் ஆயிரம்.
வாரணமா யிரம் சூழ வலம்செய்து
நாரண நம்பி நடக்கின்றா னென்றெதிர்
பூரண பொற்குடம் வைத்துப் புரமெங்கும்
தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீநான்

நாளை வதுவை மணமென்று நாளிட்டு
பாளை கமுகு பரிசுடைப் பந்தற்கீழ்
கோளரி மாதவன் கோவிந்த னென்பான் ஓர்
காளை புகுதக் கனாக்கண்டேன் தோழீநான்.

திருப்பாவை

ஆழி மழைக்கண்ணா ஒன்றுநீ கைகரவெல்
ஆழியுள் புக்கு முகந்துகொ டார்த்தேறி
ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து
பாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில்
ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றுதிர்ந்து
தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்
வாழ வுலகினிற் பெய்திடாய் நாங்களும்
மார்கழிநீ ராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்

எல்லே! இளங்கிளியே ! இன்னம் உறங்குதியோ
சில்லென் றழையேன்மின் நங்கைமீர் போதர்கின்றேன்
வல்லையுன் கட்டுரைகள் பண்டேயுன் வாயறிதும்
வல்ல¦ர்கள் நீங்களே நானேதா னாயிடுக
ஒல்லைநீ போதாய் உனக்கென்ன வேறுடையை
எல்லாரும் போதாய் உனக்கென்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரோ போந்தார் போந்தெண்ணிக் கொள்
வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடேலோ ரெம்பாவாய்.



பயன்பட்ட நூல்கள்

1. சங்க இலக்கியம் பாட்டும் தொகையும் - தொகுதி 1, (தொ-ர்) எஸ்.வையாபுரிப் பிள்ளை, பாரி நிலையம், 1946, 1960

2. தமிழ்ப் பக்தி இலக்கியம் - (தொ-ர்) அ.அ.மணவாளன், சாகித்திய அகாடெமி, புதுதில்லி, 2004

3. ஃப்ராய்ட் யுங் லக்கான் - அறிமுகமும் நெறிமுகமும், தி.கு. இரவிச்சந்திரன், அடையாளம், புத்தாநத்தம், திருச்சி

4. The Myth of Omniscient Narrator, The Journal Aesthetics and Art Criticism, 52:4. Fall,1994.


------------------------------------------------------------------------

மயிலம், ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் தமிழ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியும் மைசூர் செம்மொழித் தமிழ் உயராய்வு நிறுவனமும் இணைந்து 2008, பிப்ரவரி 16,17 தேதிகளில் நிகழ்த்திய பக்தி இலக்கியங்களில் சங்க இலக்கியச் செல்வாக்கு என்னும் தேசியக் கருத்தரங்கில் வாசிக்க எழுதிய கட்டுரை.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தேடிப்படித்த நூல்கள் அல்லது பழைய புத்தகக் கடையில் கிடைத்த நூல்கள்

நாயக்கர் கால இலக்கியங்கள் சமுதாய வரலாற்றுச் சான்றுகளாகக் கொள்வதற்கான முன் தேவைகள்

சென்னைப் புத்தகக்கண்காட்சிப் பரிந்துரைகள்